புதன், 17 பிப்ரவரி, 2010

பாடல் என்பது எது வரை..


சினிமாக்களில் பாடல் என்பது ஒரு கட்டாயம். இந்தியப் படங்களுக்கு பாடல் காட்சிகள் இன்றியமையாதவை. ஒரு காலத்தில் பாடல் காட்சிகளின் தொகுப்பே படங்களாகவும் இருந்தது. கண் சிமிட்டி முடிப்பதற்குள் அடுத்த பாடல் தொடங்கி விடும். பின்னர் படிப் படியாக அந்த வழக்கம் குறைந்து அளவாக பாடல்கள் வைக்கத் தொடங்கினார்கள். பாடலே இல்லாமல் கூட படங்கள் முயற்சித்ததுண்டு,...அந்த நாள். ஆனால் அது தொடராமல் கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுடன் நின்று விட்டது!

தமிழாகட்டும், தெலுங்காகட்டும், மலையாள, ஹிந்தியாகட்டும்...மொழி முக்கியமின்றி அனைத்து மொழிகளிலும் பாடல்களை ரசிக்கும் அனுபவம் நம் எல்லோருக்குமே உண்டு..இசை...அதில் வரும் ஆனந்தம்...நம் ரத்தத்தில் கலந்தது. தமிழ்ப் பாடல்கள் பற்றி எல்லோருமே எழுதி உள்ளோம். மற்ற மொழிகளிலும் ஆங்காங்கு பாடல்கள் ரசிப்போம். தெலுங்கில் சங்கராபரணம், (சுவாதி முத்தியம், சாகர சங்கமம் போன்றவை தமிழிலும் ஒரே ட்யூன் தான்) மரோ சரித்ரா போன்ற படப் பாடல்கள் பிரபலமாகி மகிழ்வித்துள்ளன. சங்கராபரணம் வந்தபோது யாரோ ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் தருவாயில் இந்தப் படப் பாடல்களை உயிர் பிரியும் தருணத்தில் கேட்க விரும்பியதாக செய்தித் தாளில் படித்த ஞாபகம்.

ஆனால் ஹிந்திப் பாடல்கள் இந்த அளவு குறைந்த ப்ராபல்யமாக இல்லாமல் வெகுஜன அபிப்ராயத்தைப் பெற்றுள்ளது என்று நினைக்கிறேன். அந்தக் காலத்திலும், இந்தக் காலத்திலும். இந்த அளவு பாடல் கேட்கும் வசதிகள் இல்லாத அந்த நாளில் ஆல் இந்தியா ரேடியோதான் கதி. பெரும்பாலும் தமிழ்ப் பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்த நாட்களில், ஒரு மாற்றமாக மட்டுமின்றி, வேறு வழி இல்லாமலும் கேட்க ஆரம்பித்த நாட்கள். காலை உங்கள் விருப்பம், மதியம் இரண்டு மணிக்கு ஏதோ பெயரில் தமிழ்ப் பாடல்கள் இரவு உங்கள் விருப்பம். இவற்றுக்கு நடுவே சிலோன் ரேடியோவும் K S ராஜாவும் ஆதரவளித்தாலும், மதிய நேரங்களில் ஒரு மணிக்கு மன் சாஹே கீத் (மனம் விரும்பும் பாடல்கள்) கேட்க ஆரம்பித்து, ஒரு சில பிரபலப் பாடல்கள் எப்போதடா காதில் விழும் என்று காத்திருக்கும் வேளையில் தவிர்க்க முடியாமல் இடையே வரும் பாடல்கள் கேட்கத் தொடங்கி, அதை திரும்ப வேறொரு நாளில் கேட்கும்போது அன்று கேட்ட பாடல் என்ற அறிமுகத்துடன் ரசிக்கத் தொடங்கி...பிறகு தேடித் தேடி காலை ரங்காவளி, மதியம் மன் சாஹே கீத் தவிர மனோ ரஞ்சன், இரவு ஜெய்மாலா, சாயா கீத், ஆப் கே ஃபர்மாயிஷ் என்று நீண்டதுண்டு.

ஆனந்த்பக்ஷி, மஜ்ரூ சுல்தான் பூரி, இண்டீவர், ஆர் டி பர்மன், எஸ் டி பர்மன், லக்ஷ்மிகாந்த் பியாரிலால், கிஷோர் குமார், முஹம்மத் ரஃபி, மன்னாடே போன்ற பெயர்கள் அறிமுகமாயின. இவற்றில் எது படம் பெயர், எது பாடலாசிரியர், எது பாடுபவர் பெயர் என்று புரிய இன்னும் சில நாட்கள் ஆயின. பிறகு இந்த, இந்தப் பெயர்கள் காம்பினேஷன் வந்தால் இந்தப் பாடல்களைக் கேட்டு பார்க்கலாம் என்று 'அறிவு' வளரத் தொடங்கியது...!

நாம் கேட்கும் பாடல் பிரபலமானது பாடலாசிரியர் காரணமாகவா, இசை அமைப்பாளர் காரணமாகவா, பாடகர் காரணமாகவா நடிக நடிகையர் காரணமாகவா அல்லது எல்லாமே காரணமாகவா என்று யோசித்தால் - இதில் ஒன்று அல்லது பல காரணங்களால் பாடல் ஹிட்டாக அமைந்துவிடும்; நம் மனதில் அமர்ந்துவிடும்.

பட்டுக் கோட்டையார், கண்ணதாசன், வாலி, வைரமுத்து, என்று வரிகளை ரசிக்க வைக்கும் பாடல்கள் உண்டு. பாடலின் ட்யூன் என்னென்று சொல்ல முடியாத இன்ப, துன்ப பரவச நிலைகளை மனதில் தோன்ற வைப்பதுண்டு...சமீபத்தில் திரு M S விஸ்வநாதன், ஒரு பேட்டியில் (உண்மையில் அவர் இந்தத் தகவலை பலமுறை, பல இடங்களில் சொல்லியுள்ளார்) யார் அந்த நிலவு பாடல் எழுதப் பட்ட, இசை அமைக்கப் பட்ட, பாடப் பட்ட விதம் குறித்துச் சொல்லி, கடைசியில் அந்தப் பாடல் காட்சியில் சிவாஜி எப்படி நடித்து பெயர் தட்டிக் கொண்டு போனார் என்று சொல்லி இருந்தார். மனதை மயக்கும் ட்யூனோடு பாடல் வரிகளும், பாடுபவர் குரலும் மனதை கொள்ளை கொள்ளும்.

இவை நிச்சயமாக இந்தக் காலக் குத்துப் பாடல்களுக்குப் பொருந்தாது...

அந்த வகையில் மனத்தைக் கவர்ந்த சில பாடல்கள் பற்றி அவ்வப்போது எழுத ஆசை.

21 கருத்துகள்:

  1. இன்று கேட்டாலும் மெய் மறக்க வைக்கும் முகமது ரபி, கிஷோர் குமார், ஆஷா போன்ஸ்லே, லதா மங்கேஷ்கர் பாடல்கள் எவ்வளவோ இருக்கின்றன. பட்டியலிடுவது அசாத்தியம். அவ்வளவு பெரிய எண்ணிக்கையில் மிகப் பிரபலமான ஹிட் பாடல்களுக்கு பஞ்சமில்லை. kuch tho log kahenge, mera jeevan kora kagaz, 1942 Love Story all songs, என்று சொல்லிக் கொண்டே போகலாம். நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னும் ஒரு சினிமாப் பாட்டு கவர்கிறது என்பது நம்ப முடியாத நிஜம்.

    பதிலளிநீக்கு
  2. ஆரம்பமே அசத்தலா இருக்கு.. எழுதுங்க எழுதுங்க சார்

    பதிலளிநீக்கு
  3. பழைய பாடல்களை இன்று
    கேட்கும்போது ஓர் ஆனந்தம் ஏற்படத்தான் செய்கிறது.

    பதிலளிநீக்கு
  4. நான் முழுசா படிக்கவே இல்லைங்க அந்த படத்துலேயே நின்னுட்டேன் :)) பாட்டு ஓடிகிட்டு இருக்கு உள்ளுக்குள் :)

    பதிலளிநீக்கு
  5. மிகவும் சந்தோஷம்! உடனே எழுதுங்க, கூடவே அந்த பாடலையும் தயவு செய்து ஒலிபரப்புங்க. ஹிந்தி பாடலில் எனக்கு விருப்பம் ஏற்பட காரணமாக இருந்த முதல் பாடல் 'gata rahe mera dhil'. தற்செயலாக இந்த பாடலை கேட்டு நான் கிஷோர் குமார் அவர்கள் குரலுக்கு அடிமையே ஆகி விட்டேன். ஹிந்தியில் ஒரு அக்ஷரம் கூட தெரியாமல், அர்த்தமும் புரியாமல், வெறும் சொற்களின் அழகையும், பாடலின் இசையையும், பாடுவோரின் குரலையும் கேட்டே, மிகவும் ரசிக்கத் தொடங்கி விட்டேன்.
    'there bina zindhagi......' இந்த பாடலை எப்பொழுது கேட்டாலும் கண்களில் கண்ணீர் வந்து விடும். 'chingari koi bhadke.....' எப்பொழுது கேட்டாலும் மயக்கம் தரும் பாடல். இதை போல் 'jaane jaan dhoondta phir raha...', 'gum hai kisi ke pyar mein....', 'kabhi kabhi......' என்று இந்த லிஸ்ட் முடியவே முடியாது. இவை எல்லாம் நான் என்றும் ரசித்து, ரசித்து கேட்டுக்கொண்டே இருக்கும் பாடல்கள்.
    இந்த பகுதியில் ரசிகர் விருப்பம் உண்டா? :)

    பதிலளிநீக்கு
  6. http://vellinila.blogspot.com/2010/02/blog-post_15.html - please click this link, and you can see tmilmanam header in top of the article, thanks to vote

    பதிலளிநீக்கு
  7. நல்ல பகிர்வு சார். நீங்கள் ரசித்த பாடல்கள் பற்றி அவசியம் எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  8. Sriram

    Catch Meenakshi for Tamil old songs. She is an ocean of knowledge.

    She frequently write in www.MSVtimes.com

    பதிலளிநீக்கு
  9. பழைய பாடல்களை பற்றி நான் தெரிந்து வைத்திருப்பது கடுகளவுதான். இதை தன்னடக்கம் என்று சொல்லாதீர்கள், உண்மை இதுதான்.

    பதிலளிநீக்கு
  10. பழைய பாடலகளை நிறையவே விரும்பிக் கேட்பேன்.
    எழுதுங்கள்.ரசிக்கலாம்.

    இன்று T.M.S க்கு சுகயீனம் ன்னு செய்தி பார்த்து மனசுக்குக் கவலையாயிருக்கு.

    பதிலளிநீக்கு
  11. //ஹேமா said...

    இன்று T.M.S க்கு சுகயீனம் ன்னு செய்தி பார்த்து மனசுக்குக் கவலையாயிருக்கு.//

    "சுகயீனம்" what a class word.

    Ever since I heard after Sriram forwarded me. I have been totally down. Since my childhood days he has been the prime mover to my joy and has been a source of energy when I am down.

    I wish him a speedy recovery.

    Most of us learned tamil pronunciation from him and KB Sundarambal !

    பதிலளிநீக்கு
  12. எனக்கும் பழைய தமிழ் ஹிந்தி மெலடிகள் பிடிக்கும் எழுதுங்கள் ராம் ஆவலோடு காத்து இருக்கிறேன் ஆமாம் டி எம் எஸ்ஸுக்கு உடல் நிலை சரியில்லை என கேள்விப்பட்டேன் வருத்தமாய் இருந்தது

    பதிலளிநீக்கு
  13. எழுதுங்க ஸ்ரீராம்.. கேட்க ஆவலாய் உள்ளேன்..

    பதிலளிநீக்கு
  14. பழைய, புதிய அருமையான பாடல்களைப் பற்றி எழுதுங்கள். படிக்க ஆவலாய் இருக்கோம்.
    "இது கதையா" நன்றாக, interesting ஆக இருக்கு.
    ஆமாம், அந்த நேயர் விருப்பம் மாதம் முடியப் போகிறதே. யாராவது ஏதாவது கேட்டார்களா? இதையே என்னோட நேயர் விருப்ப கேள்வியாக எடுத்துக்கொள்ளவும்--கீதா

    பதிலளிநீக்கு
  15. ஆனந்த் பக்ஷி அருமையான படமாச்சே. நம்ம ஊர் சிவகவி மாதிரி நிறைய்ய பாட்டு உள்ள படம் போலிருக்கு. ஒவ்வொரு நாளும் அந்தப் படத்துலேர்ந்து வித்யாசம் வித்யாசமா பாட்டு போடுவான். மஜ்ரூ சுல்தான் பூர் ங்கிற ஊர்லேர்ந்து ஒரு ஆள் எல்லாப் பாட்டையும் விரும்பிக் கேட்டு லெட்டர் எழுதிடுவான். பல பாட்டு அந்த அனவுன்சருக்கு பிடிக்காது. அக்ளா கானா, அக்ளா கானான்னு திட்டும். எல்லா நிகழ்ச்சியிலையும் முதல் பாட்டு 'சப்ஸே பெஹலே' ங்கிற படத்துலேர்ந்தும், கடைசி பாட்டு 'காரிக்ரம்க்கி அந்த் மே' ங்கிற படத்துலேர்ந்தும்தான் இருக்கும்.

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  16. //geetha santhanam said...

    யாராவது ஏதாவது கேட்டார்களா? இதையே என்னோட நேயர் விருப்ப கேள்வியாக எடுத்துக்கொள்ளவும்--கீதா//

    நான் உஜாலாவுக்கு மாறிட்டேன் மாதிரி

    "கீது" இப்போ "கீதா"வா ?

    பதிலளிநீக்கு
  17. நேயர் விருப்ப மாதம் முடிய இன்னும் முழுவதாக பத்து நாட்கள் உள்ளன.
    வாசகர்கள் எங்கள் பிளாக் ஜி மெயிலுக்கு எழுதி கேட்டுக்கொண்ட விவரங்களைத் தான் பதிவுகளாக - பெப்ரவரி மூன்றாம் தேதி முதல் அவ்வப்போது எழுதி வருகிறோம். கேட்டவர்கள் - அநேகமாகப் படித்து, பயன் அடைந்திருப்பார்கள் என்று நம்புகிறோம்.
    இங்கே பின்னூக்கம் அளித்திடுக்கும், கவிதை காதலன், தமிழ் உதயம், சைவகொத்துப்பரோட்டா, ஷங்கர், புலவன் புலிகேசி, மீனாக்ஷி, வெள்ளிநிலா ஷர்புதீன், செ சரவணக்குமார், பிரகாஷ், ஹேமா, சாய்ராம் கோபாலன், தேனம்மை, திவ்யாஹரி, கீதா சந்தானம், ஜவஹர் எல்லோருக்கும் எங்கள் நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!