Tuesday, April 20, 2010

ஜே கே 07 உண்மையின் இயல்பு


பொருள் கூறிப் புரிந்து கொள்ளும் போது உண்மைகள் காணப் படுவதில்லை.

உண்மை ஒன்றைப் பற்றி அபிப்பிராயம் கொடுக்கும் மனம் குறுகியதும், அழிவைச் செய்யும் தன்மை கொண்டதுமாகும்.  உண்மையை நீங்கள் ஒரு மாதிரியாகவும் நான் வேறு மாதிரியாகவும் பொருள் சொல்லி விளக்கலாம்.  தன் இயல்புக்கு ஏற்ப மாற்றிப் புரிந்து கொள்ளும் மனம் உண்மையைக் கண்டு அதற்கான சரியான நட்வடிக்கை எடுப்பதைத் தடுக்கிறது.  இதை ஒரு சாபக்கேடு என்றே சொல்லவேண்டும்.  உண்மையைக் குறித்து தத்தமது அபிப்பிராயங்களை நீங்களும் நானும் பரிமாறிக் கொள்ளும் போது உண்மையைக் குறித்த நடவடிக்கை ஏதும் எடுக்கப் படுவதில்லை.  என் அபிப்பிராயம், உங்கள் அபிப்பிராயம், நமது பார்வைக் கோணங்கள் இப்படியாக பலவும் நம்மால் காணப்படும் என்பது சரிதான். உண்மையின் தாக்கம், விளைவு, உங்களுக்கு அது முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், எனக்கு அது அவ்வளவு முக்கியத்துவம் அற்றதாகவும் இருப்பது இம்மாதிரி பலவும் வெளிவரும்.  ஆனால் உண்மை விளங்க வைக்கப் படக் கூடியது அல்ல.  உண்மையைப் பற்றி நான் ஒரு அபிப்பிராயம் சொல்ல முடியாது.  அது உண்மை; அவ்வளவுதான்.  இதைப் புரிந்து கொள்வது மனதுக்குக் கடினமாக இருக்கிறது.  நாம் எப்போதும் எதையும் விளக்கவே முற்படுகிறோம்.  வெவ்வேறான பொருள்களைச் சொல்ல முயல்கிறோம்.  இது நமது பழக்கவழக்க, கலாசார, நாகரிகங்களுக்கு, நம் அச்சங்களுக்கு, நம் நம்பிக்கைகளுக்கு, நம் விருப்பு வெறுப்புகளுக்கு, ஆசாபாசங்களுக்கு உட்பட்டது.  அப்படியில்லாமல், நீங்களும் நானும் உண்மையை அபிப்பிராயங்களும் கருத்துக்களும் நாம் கொடுக்கும் முக்கியத்துவங்களும் இல்லாமல் --  இருப்பதை இருக்கும்படி பார்க்க முடிந்தால் உண்மை அங்கு தனித்து இருக்கிறது. வேறு எதுவும் முக்கியமில்லை.  உண்மைக்கு சுய சக்தி இருக்கிறது. அது சரியான திசையில் நம்மைச் செலுத்தும்.    

19 comments:

அப்பாவி தங்கமணி said...

//உண்மைக்கு சுய சக்தி இருக்கிறது. அது சரியான திசையில் நம்மைச் செலுத்தும். //

எப்படிங்க ஸ்ரீராம் இப்படி எல்லாம். எனக்கு ரெண்டு இந்த மாதிரி ரெண்டு வார்த்தை கூட எழுத வராது, ஆனா படிக்க பிடிக்கும்

தமிழ் உதயம் said...

உண்மைதான். முரண்களுக்கு நடுவே, உண்மையை உண்மையாக பார்ப்பதே கடினமாக தான் உள்ளது.

Chitra said...

உண்மையின் சக்தி பற்றி நீங்கள் சொல்லி இருப்பது, உண்மை. உண்மையை சொன்னேன்.
:-)

meenakshi said...

உண்மையை பற்றிய விளக்கம் அருமையா இருக்கு. நல்ல தெளிவான மொழி பெயர்பு.
சில நேரம் உண்மையை ஜீரணிக்கறது ரொம்பவே கடினம்தான்.
வள்ளுவர் 'வாய்மை' பத்தி சொல்லி இருக்காமாதிரி யாருக்கும் தீங்கு இல்லாம, பிறர் மனசு நோகாம முடிஞ்ச வரைக்கும் நடந்துக்கறதுதான் அன்றாட வாழ்க்கைல இருக்கற உண்மை.

Anonymous said...

இந்தப் பதிவை, “உண்மை” எனும் சொல்லுக்கு பதிலாக “கடவுள்” என்ற சொல்லைப் பொருத்தி ஒரு முறை படித்துப் பாருங்கள். இன்னும் சுவாரசியமாக இருக்கும். கிருஷ்ணமூர்த்தி ‘ கடவுள் ‘ என்ற பதத்தை பயன் படுத்துவதை பெரிதும் தவிர்த்து வந்தார். காரணம் அந்த சொல்லைக் கேட்டவுடனேயே, அவரவர் கண்டிஷனிங்குக்கு ஏற்றவாறு, திரிசூலம், சங்கு சக்கரம், கதாயுதம், சிலுவை என்று கற்பனையில் ஒரு பிம்பத்தை நிலை நிறுத்திக் கொண்டு அதை புரிந்து கொள்வார்கள், அந்தப் புரிதலுக்கும் ‘ உண்மை ‘ க்கும் எந்த சம்பந்தமும் இராது என்பதுதான்.

சைவகொத்துப்பரோட்டா said...

இயல்பாய் இருக்கிறது!!

Madhavan said...

உண்மை.
எனது 'வரைதலை'(drawing skill) உங்கள் வலைப்பதிவில் ஓளிபரப்பு செய்தமைக்கு நன்றிகள்.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

ஆஹா உண்மையில் சிறப்பான பதிவுதான் . உண்மை பற்றி தெளிவான விளக்கம் அறிந்தேன் இங்கு .

அப்பாதுரை said...

>>தன் இயல்புக்கு ஏற்ப மாற்றிப் புரிந்து கொள்ளும் மனம் உண்மையைக் கண்டு அதற்கான சரியான நட்வடிக்கை எடுப்பதைத் தடுக்கிறது.

beautiful.

>>உண்மைக்கு சுய சக்தி இருக்கிறது. அது சரியான திசையில் நம்மைச் செலுத்தும்.

உதைக்கிறதே? உண்மையின் உரு நம் கண்ணோட்டத்தின் விளைவென்றால் அதற்கெப்படி சுய சக்தி இருக்க முடியும்? நாம் தான் உண்மையை வழி நடத்துகிறோம் என்பது என் அபிப்பிராயம். உண்மையின் அறிவு நம்மை வழி நடத்தலாமே தவிர உண்மை நம்மை சரியான திசையில் திருப்ப இயலுமா? பொய்மையின் அறிவும் இந்த வியாக்கியானத்துக்குப் பொருந்தும். உண்மை (அ பொய்) அறிவானாலும், அறிவு உண்மையாகாது. master leading dog: fact. dog leading master: illusion. often illusion masquerades as fact. and fact is not always truth. பல சமயம் factக்கும் truthக்கும் வேறுபாடு புரியாமல் விழிப்பதால் தான் we act the way we act.

உண்மையைக் கடவுள் என்ற படியில் வைத்துப் பார்க்கச் சொல்லும் அனானியின் கருத்தை ஏற்க முடியவில்லை. உண்மை எனும் தத்துவம், இந்தப் பதிவின் விளக்கப்படி, சரியான திசையில் நம்மை செலுத்துவதை உண்மை (:-) என்று எடுத்துக்கொண்டால் கடவுளுக்கும் அது பொருந்தும். கயவனுக்கும் கடவுள் தான் வழி காட்டுகிறான் - இது உண்மை தானே? இது உண்மையானால், உண்மை பற்றிய கருத்து விகாரமாகி விடுகிறதே?

ராமலக்ஷ்மி said...

//தன் இயல்புக்கு ஏற்ப மாற்றிப் புரிந்து கொள்ளும் மனம் உண்மையைக் கண்டு அதற்கான சரியான நட்வடிக்கை எடுப்பதைத் தடுக்கிறது.//

மிகச் சரி.

//இருப்பதை இருக்கும்படி பார்க்க முடிந்தால் உண்மை அங்கு தனித்து இருக்கிறது.//

அருமை.

எளிமையான சொற்களில் அழகாய் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி. தொடருங்கள்.

Anonymous said...

அப்பாதுரை சொல்வது:
உதைக்கிறதே? உண்மையின் உரு நம் கண்ணோட்டத்தின் விளைவென்றால். . .
உண்மை இருக்கிறது. ஆனால் உண்மையைப் பற்றிய ஒரு உரு நம் கண்ணோட்டத்தில் உருவாகிறது. உண்மைக்கும் அதற்கும் தொடர்புஇல்லை எனினும் தன் கண்ணோட்டமே உண்மை என்று மனம் எண்ணுகிறது.

அப்பாதுரை said...

நல்ல கருத்து அனானி, இருப்பினும் ஏற்க முடியவில்லை :-)

உண்மை இருக்கிறது என்று ஏற்றுக்கொண்டால் உண்மை என்பது நிரந்தர நிலை கொண்ட ஒரு தத்துவம் என்றாகிவிடுகிறது. ஏனென்றால் இருப்பது இல்லாததாகாது. (செலவுக்கு வைத்திருந்த காசைத் தவிர)

ஆனால் நடைமுறையில் உண்மை அப்படி இல்லை. உண்மை என்று எதுவும் இல்லை. உண்மை என்பது விளைவு என்பது என் கருத்து. (அந்த வகையில் பொய் என்பதும் உண்மை தான். உண்மையைப் போல் பொய்யும் இருக்கிறது என்று பதிலுக்கு சொல்லலாம். அப்படிப் பார்த்தால் பொய் என்ற இடத்தில் கடவுளை வைத்துப் பார்க்கச் சொல்வீர்களா?) i digress.... கண்ணோட்டத்தின் விளைவு தான் உண்மை பொய் இரண்டுமே என்று நினைக்கிறேன். உதாரணமாக, ஐநூறு வருடங்களுக்கு முன் சூரியன் பூமியைச் சுற்றி வந்ததும் உண்மை. இன்றைக்கு பூமி சூரியனைச் சுற்றி வருவதும் உண்மை. உண்மை என்பது கண்ணோட்டத்தின் விளைவல்லாமல் ஒரு நிரந்தர நிலையாக இருந்தால் அறிவு வளரவோ மாறவோ சாத்தியமில்லை. உண்மைக்கு நிலையில்லை. நிலையில்லாதது சுயசக்தி பெற சாத்தியமில்லை.

உண்மையென்பதே அறிவு பூர்வமாக உணர்வது தான். 'இருப்பதால் தானே உணர முடிகிறது?' என்று வாதாடலாம். உண்மையென்று எதுவும் இல்லை என்று வியாக்கியானம் செய்ய இன்னொரு உதாரணம். இருப்பதை உணர முடியாததாலும், இல்லாததை உணர முடிவதாலும் உண்மையென்பது நிலையில்லாதது என்பதற்கு இந்த உதாரணம். பார்வையுள்ளோரும் பார்வையற்றோரும் உணரும் விதமொன்றைப் பார்ப்போம். இருள். ஒளி. இவை உண்மையா? அதாவது 'இருக்கிற' உண்மையா? இல்லை 'கண்ணோட்டத்தின் உருவான' உண்மையா? பார்வையுள்ளவருக்கு இருள் ஒளி என்பன உண்மையாகப் புரிவதன் காரணம் உணர்ந்து உருக்கொடுக்க முடிவதால் தான். பார்வையற்றவருக்கு இருளையோ ஒளியையோ உண்மையாக அறிந்து கொள்ள வாய்ப்பே இல்லை.

அதே ரீதியில், தொட்டால் சுடும் தீ என்பது உண்மையென்று வைப்போம். (வேண்டாம், தலைசுற்றுகிறதென்று யாராவது அடிக்க வந்து விடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது, பிறகு எழுதுகிறேன். பதிவுக்கு ஒரு ஐடியா கிடைத்தது)

geetha santhanam said...

அப்பாதுரை, அனானி, போதும் . please, விட்டுடுங்க......---கீதா

ராமன் said...

அப்பாதுரை, அனானி விவாதம் விவாதத்துக்காக என்கிற பாணியில் செல்கிறது. தர்க்க ரீதியாக எதையும் ஸ்தாபிக்கலாம். ஒரு கால் நெருப்பிலும் ஒரு கால் ஐஸிலும் வைத்துக் கொண்டால் சராசரியாக சௌக்கியமாக இருக்கிறோம் என்று புள்ளி விவரம் சொல்வது போல. எப்பொருள் யாரார் வாய் கேட்பினும் அதன் பின் உள்ள மெய்ப்பொருளே உண்மை என்று சொல்லி முடித்துக் கொள்வோமா?

meenakshi said...

//பொருள் கூறிப் புரிந்து கொள்ளும் போது உண்மைகள் காணப் படுவதில்லை//
அருமை! அருமை! எதையும், மேலும் மேலும் நன்றாக புரிந்து கொள்ளும்போது நம் அபிப்ராயங்களும் மாறிக்கொண்டே தான் இருக்கும். பின் அங்கு உண்மை என்று எது இருக்கும்? புரிந்து கொள்வதால் நேற்றைய சில உண்மைகள் இன்று பொய்யாக தோற்றமளிக்கிறது, நாளை அது மீண்டும் உண்மையாகலாம். ஆனால் எதையும் ஆராயாமல் அதன் தன்மையுடனேயே, உள்ளது உள்ளபடி பார்த்தால், உண்மை அங்கு உண்மையாகவே தனித்துதான் நிற்கிறது.

அப்பாதுரை,அனானியின் கருத்துக்கள், அருமை! சுவாரசியம்!

அப்பாதுரை said...

விவாதம் என்று எடுத்துக்கொண்டால் விவாதம்.
கருத்துப் பரிமாற்றம் என்று எடுத்துக்கொண்டால் கப.
"என்ன சௌக்கியமா?" "சௌக்கியத்துக்கு என்ன குறை?"
- இது விவாதமா கருத்துப் பரிமாற்றமா?

சரி தவறு உயர்வு தாழ்வு என்ற பேதக் கண்ணோட்டத்தில் பார்த்தால் தான் வாதம் விவாதம் எல்லாம். சிந்தனையைத் தூண்டி விட்ட பதிவு என்று முடித்துக் கொள்வோம்.

ம்ம்ம்ம்... தர்க்க ரீதியாக எதையும் ஸ்தாபிக்கலாமா? தூண்டுதே.. தூண்டுதே... :-)

அப்பாதுரை said...

எதையும் ஆராயாமல் அதன் தன்மையுடன் பார்ப்பது சரிதான். உண்மை அப்படியில்லையே? நீரை நீராக அதன் தன்மையுடன் பார்த்தால் நீரெனத் தெரியுமா? நீர் நிலத்திலோ புலத்திலோ வைத்துப் பார்ப்பதால் தான் நீரின் தன்மை புரிகிறது. உண்மை (பொய்) அப்படித்தான்.நேற்றைய உண்மை இன்றைய பொய்யானால் உண்மை எப்படித் தனித்து நிற்க முடியும்? சற்று சிந்தித்துப் பார்த்தால் இங்கே தனித்து நிற்பது உண்மையோ பொய்யோ அல்ல என்பது புரியும். (குறைந்த பட்சம் காபி குடிக்கும் அளவுக்குத் தலைவலிக்கிறது என்பதாவது புரியும்)

அப்பாதுரை said...

அறிவினால் தான் நிலைமாறும் உண்மையை உணர முடியும் என்று நான் இப்படி வளவளவென்று இழுத்ததை 'மெய்ப்பொருள் காண்பதறிவு' என்று வள்ளுவர் சொன்னதைச் சுட்டிக்காட்டி நிறுத்திய ராமனுக்கு நன்றி. வள்ளுவர் வள்ளுவர் தான். வளவள வளவள தான்.

meenakshi said...

நீருக்கு தனி தன்மை கிடையாது. இதே நீங்கள் தனித் தன்மை வாய்ந்த சூரியனை எடுத்துக் கொண்டால், அதன் வெப்பம் கோடையில் வாட்டுகிறது, குளிர் காலத்தில் உறைப்பதில்லை. சில காலங்களில் அதன் தன்மை மாறுபட்டாலும், சூரியன் வெப்பமானது என்பது தனித்து நிற்கும் உண்மைதானே. அதுபோல் நேற்றைய உண்மை இன்று பொய்யாவதும் மீண்டும் நாளை உண்மையாவது நாம் புரிந்து கொள்ளும் தன்மையால்தான். ஆனால் அதில் உள்ள உண்மை என்ற ஒன்று அப்படியேதான் இருக்கும். அறிவினால்தான் நிலை மாறும் உண்மையை உணர முடியும் என்றாலும், அந்த உண்மையை ஒருவர் எந்த அளவு உணருகிறார் என்பதும் அவர் அறிவின் ஆழத்தை பொறுத்துதான். இதிலும் அனானி சொன்னது போல், அவர் உணர்ந்த கண்ணோட்டத்தில்தான் உண்மை இருக்கிறது என்று அவர் நம்புவார். அதனால் இங்கும் உண்மை என்ற ஒன்று முழுதாய் உணர முடியாமல் தனித்துதான் நிற்கிறது.

(ராமன் சார், மன்னிக்கவும்! :)

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!