Tuesday, April 6, 2010

நியாயங்கள்

ஃபேமிலி பென்ஷன் வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தேன். கியூ வரிசை நீளமாக இருந்தது. இரண்டு நாள் விடுமுறைக்குப் பின் பேங்க் இன்றுதான் திறந்தது காரணமாக இருக்கலாம்.

இன்னும் இரண்டு நாள் கழித்து வந்திருக்கலாம். ஆனால் கையில் பணம் இல்லை. இதை எடுத்தால்தான் சரிப்படும். 

                                 
கௌண்டரில் யார் என்று பார்த்தேன். அந்த சிடுமூஞ்சிப் பெண்தான் அமர்ந்திருந்தாள். மெல்லதான் வேலை செய்வாள். சென்ற முறை வீட்டுக்குப் போய் எண்ணிப் பார்க்கும் போது நூறு ரூபாய் குறைந்தது தெரிந்தது. மீண்டும் வேகு வேகு என்று நடந்து வந்து இவளிடம் சொன்னபோது சள் ளென விழுந்தாள்.
"எப்போ வாங்கினீங்க பாட்டிம்மா?"

"இப்போதாம்மா... ஒரு மணி நேரம் முன்னால இருக்கும்...வீட்டுக்குப் போய் ஒண்ணுக்கு மூணு வாட்டி, நாலு வாட்டி எண்ணிப் பார்த்தேன்.. குறையுதும்மா...நீ கூட கணக்கு பாரும்மா....பார்த்துட்டுக் கூட குடு...."

"ஆமாம்..'கூட'தான் குடுக்கணும்..இங்கயே எண்ணிப் பார்த்துட்டுதானே பாட்டிம்மா நீ போகணும்...அப்போதான் கிளைம் பண்ண முடியும்...இப்போ வீட்டுல வச்சிட்டு வந்து கேட்டியானா நான் எப்படித் தர முடியும்..?

"அப்படிச் சொல்லாதேம்மா...நான் நூறு ரூபாய்க்கு பொய்யா சொல்லப் போறேன்..." என் கண்களில் நீர் நிறைந்தது...நூறு ரூபாய்க்கு மட்டுமல்ல, அவள் பேச்சுக்கும்தான்.

அந்த நூறு ரூபாய்க் குறைவதற்கு என்னென்ன பதில் யார் யாருக்குச் சொல்ல வேண்டும் என்று எண்ணிய போதே அலுப்பாக இருந்தது.

"இதோ பாரு பாட்டி அம்மா.. அபபடி எல்லாம் நீ கேட்டதும் எடுத்துத் தர முடியாது. சாயங்காலம் கணக்குப் பார்க்கும்போதுதான் தெரியும். சாயங்காலம் வா...இல்லைன்னா நாளைக்கோ ரெண்டு நாள் கழிச்சோ வா..."

அவள் பேச்சிலிருந்தே மாலையோ நாளையோ என்ன பதில் கிடைக்கும் என்று தெரிந்து விட்டாலும், என்னுடைய நிலைமை காரணமாக அன்று மாலையே வந்து அவள் பதிலில் நொந்து, ஏமாந்து போனது நினைவு வந்தது.

அவள்தான் இன்றும் இருக்கிறாள். நியாயமாய் எனக்குதான் கோபம் வர வேண்டும். ஆனால் அவள்தான் என்னைக் கண்டதுமே கடு கடுவென முகம் மாறுவாள்.

வரிசை மெல்ல நகர்ந்தது. தண்ணீர் குடித்தால் தேவலாம் போல இருந்தது.

ம்..ஹூம்..பக்கத்தில் வந்தாயிற்று..இப்பொழுது நகர வேண்டாம்..

என் முறை வந்தது..பாஸ் புத்தகத்துக்குள் வித்ட்ராயல் ஸ்லிப்பைப் பொதித்து நீட்டினேன்.

நிமிர்ந்து வாங்கியவள், என்னைப் பார்த்ததும் முகபாவம் மாறி, 'சட்'டென வேலையில் மும்முரமானாள்.

கம்ப்யூட்டரில் அவள் ஏதோ தட்டத் தொடங்க, அவளாக ஏதாவது சொல்வாளா என்று நான் பார்த்துக் கொண்டிருக்கும்போது டிப் டாப்பாக உடை அணிந்த நபர் என்னருகில் தோன்றினார்.

"ஹலோ மேடம்...என்னைத் தெரியுதா? நான் காலைல வந்து பணம் டிரா பண்ணிக் கொண்டு போனேனே..."

கௌன்ட்டர் பெண்மணி அவரை லேசான எரிச்சல் கலந்த கேள்விக் குறியுடன் நிமிர்ந்து பார்த்தாள். ஒரு கணம் அவள் கண்கள் என்னையும் பார்த்து மீண்டன. 'மறுபடியும் இன்னொரு கேசா..' கேள்வி கண்களில் தெரிந்தது போலத் தோன்றியது.

நான் பணம் வாங்கும்போது குறுக்கிட்ட அந்த நபரை அலுப்புடன் பார்த்தேன்.

"வீட்டுல போய் எண்ணிப் பார்த்தா ரெண்டு ஐநூறு ரூபாய் கூட இருந்தது. ஒரு தடவைக்கு நாலு தடவை எண்ணினேன். கூட இருந்ததால எடுத்துட்டு வந்துட்டேன்..நீங்க கஷ்டப் படுவீங்களே... "

லேசான திகைப்புடன் அதை வாங்கிக் கொண்டாள் கௌன்ட்டர் பெண்மணி. "ஓ...தேங்க்யூ...தேங்க்யூ..சார்... எப்படி நன்றி சொல்றதுன்னே....." தடுமாறினாள்.

அவர் சென்று விட்டார்.

வரிசையில் ஓரிருவர் நேர்மை, உண்மை பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தனர். எனக்கு வேறு மாதிரி எண்ணம் வந்தது இப்போது என் பணம் பற்றிக் கேட்டால் என்ன..? என்ன சொல்வாள்?

கௌன்ட்டர் பெண்மணி என்னைப் பார்க்க மறுத்தாள். குனிந்தவாறே பணத்தை எண்ணி என்னிடம் கொடுத்து விட்டாள். கேட்கலாமா கூடாதா என்ற எண்ணத்துக்கு நடுவே பணத்தை வாங்கிக் கொண்டு ஒரமாக நின்று பணத்தை எண்ணத தொடங்கினேன்.

நூறு ரூபாய் கூட இருந்தது. திரும்பத் திரும்ப எண்ணினேன். ஆமாம் கூடத்தான் இருந்தது. இப்போது அதிகமாகக் கொடுத்திருக்கிறாள் என்று சொல்ல வேண்டுமா? அல்லது நம் பணம் வந்து விட்டது என்று சென்று விடலாமா?

அல்லது ஒரு வேளை என்னை சோதிக்கிறாளோ?

பணத்துடன் மீண்டும் கௌன்ட்டரை நெருங்கினேன்.

"மேடம்...இதுல நூறு..."

என்னைத் தொடர விடாமல் இடை வெட்டினாள் கௌன்ட்டர் பெண்மணி.

"சரியாய்த்தான் இருக்கு..போ பாட்டியம்மா..எண்ணிதான் கொடுத்தேன்.." அவள் கண்கள் காத்திருந்த கூட்டத்தையும் என்னையும் மாறி மாறி பார்த்தன.

"போயிட்டு வாங்க பாட்டியம்மா..."

வேறு ஒன்றும் சொல்லவில்லை அவள். 

19 comments:

Ananthi said...

ரொம்ப நல்ல சிறுகதை..
பாட்டிய நினச்சு பாவமா இருந்தது..
கௌண்டர் பெண்மணியின் செயல், செம டச்...
வாழ்த்துக்கள்

padma said...

பணம் புழங்கும் வேலையில் இருப்போர் பணத்தை பணமாக நினைக்ககூடாது .ஒரு கம்மாடிட்டி ஆகத்தான் நினைக்க வேண்டும் சிரித்த முகம் ,துரித சேவை இன்றைய தேவை

LK said...

rombba romba nalla eluthi irukeenga.,

Anonymous said...

எனக்கு ஏற்பட்ட ஒரு வித்தியாசமான அனுபவத்தைச் சொல்கிறேன். ஒரு முறை பொள்ளாச்சி ஸ்டேட் பாங்கில் வாங்கிய கட்டில் ஒரு நோட்டு அதிக மாக இருந்தது. அதைக் கொடுக்கப் போன போது காஷியர் வாங்க மறுத்து விட்டார். கட்டு என்றால் நூறு தான். அதில் கூட இருந்தால் அது எங்களது அல்ல என்று மறுத்து விட்டார். நானும் எங்கள் இலாகா டிரைவரும் காபி சாப்பிட அந்தப் பணத்தை பயன்படுத்தினோம். அதை ஏன் பிள்ளையார் உண்டியலிலோ அல்லது ஒரு பிச்சைக் காரனுக்கோ கொடுக்கக் கூடாது என நீங்கள் கேட்கலாம். அதெல்லாம் கதையில் தான் சார் நடக்கும். நடப்பில் மசால் வடை டீக்குத்தான் முதலிடம். அடே அற்ப இந்தியனே இவ்வளவுதானா உனது யோக்கியதை!

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

சிறுக சொன்னாலும் நிறைந்த கருத்து அருமை . பகிர்வுக்கு நன்றி !

தமிழ் உதயம் said...

நல்லதுக்கும் காலமுண்டு.
நல்ல சிறுகதை.

Chitra said...

A good story with a good heart. :-)

Madhavan said...

கதை டச்சிங்கா இருந்தாலும், ஒரு காஷியர் (ஏன் அவர் மட்டும், 'நாம்' கூட) பண விஷயத்தில் ரொம்ப கவனமா இருக்கணும். கதையில் வரும் காஷியரை அந்த இருக்கையிலிருந்து மாற்றுமாறு, வங்கி மேலாளருக்கு பரிந்துரை செய்கிறேன்.

ஒரு முறை ரயில் டிக்கெட் புக் செய்யும் பொது.. ரூ.2000 க்கு பதிலாக நான் ரூ.1000 தான் (தவறுதலாக) கொடுத்தேன் என்பது எனக்கு வீட்டிற்கு வந்த பின் தான் தெரிந்தது.. அது கூட, டிக்கெட் புக் செய்யும் நபர், எனக்கு ஃபோன் செய்து.. நான் சரியான அளவு பணத்தினை தந்திருந்தேனா எனக் கேட்டார். ( புக்கிங் ஃபார்மில், ஃபோன் நம்பர் எழுதியிருந்தேன்). நான் எனது பர்சில் இருந்த மிச்ச பணத்தை பார்த்தபின், நான் செய்த தவறு புரிந்தது.... உடனே திரும்பச் சென்று, அவரிடம் மிச்ச பணத்தினை கொடுத்தேன்.. அவர் முகப் பொலிவு பெற்று, 'நீங்கள் ஃபோன் நம்பர் எழுதியிருந்ததற்கும், வந்து பணத்தை தந்ததற்கும், தாங்க்ஸ்' ("ஹிந்தியில்") என்றார்... (நடந்த வருடம் 2000)
---- நாமும் கவனமாக இருக்க வேண்டும், காஷியரும் கூட. "ஆத்துல போட்டாலும் அளந்து போடு !" -- நமக்காகவே சொல்லியிருக்காங்களா ?

சைவகொத்துப்பரோட்டா said...

டச் பண்ணிட்டீங்க!!!
அருமை!!!!!

ஆமா வீடு கட்ட (வட்டி இல்லாத) லோன்
கிடைக்குமா "எங்கள் வங்கியில".
காஷியர் பொறுப்பில இதே பொண்ண போடுங்க :))

geetha santhanam said...

nice and well written story.-geetha

ப்ரியமுடன்...வசந்த் said...

பத்தாங்கிளாஸ் ஃபெயில் ஆனவங்களா இருக்குமோ அந்த சிடு மூஞ்சி..

ஹுஸைனம்மா said...

நல்ல ட்விஸ்ட்.. பலருக்கும் இந்த மாதிரி மனசாட்சியைத் தூண்டிவிடுவதற்கு யாராவது தேவைப்படுகிறார்கள்.

//ப்ரியமுடன்...வசந்த் said...
பத்தாங்கிளாஸ் ஃபெயில் ஆனவங்களா இருக்குமோ அந்த சிடு மூஞ்சி..//

பத்தாங்கிளாஸ் ஃபெயில் ஆனா சிடுமூஞ்சி ஆகிடுவாங்களா வசந்த்? அப்ப பாஸானவங்கல்லாம் கலகலன்னு இருக்காங்களா? :-))

meenakshi said...

பாவங்க அந்த பாட்டி!
தலைப்பும், கதை எழுதி இருக்கும் விதமும் ரொம்ப நல்லா இருக்கு.

Jawahar said...

கதையைப் பிரசண்ட் செய்திருக்கும் விதம் பிரமாதம். படித்து முடித்ததும் மனசில் வரும் இம்பாக்ட் நன்றாக ஒர்க் அவுட் ஆகிறது. இதற்கு மேல் எழுதக் கூடாது என்கிற இடத்தில் மிகச் சரியாக கதை நிற்கிறது.

தன்னிலையில் சொல்லப்படும் கதைகளில் நேரேஷனில் நாம் வந்து விடாமல் இருப்பது முக்கியம்.

பாராட்டுக்கள். நிறைய எழுதுங்கள்.

http://kgjawarlal.wordpress.com

எங்கள் said...

நன்றி Ananthi, Feel பண்ணியதற்கு....

நன்றி Padma, நல்ல யோசனைதான்...

நன்றி LK, உங்கள் ஊக்கத்திற்கு...

நன்றி அனானி, இந்தியன் என்று இல்லை, பொதுவான மனித பலவீனம்...

நன்றி பனித்துளி, ரொம்ப சின்னதாக இருக்குன்னு Feel பண்றீங்களோ...

நன்றி ரமேஷ், யோகியின் பாராட்டு உற்சாகமளிக்கிறது.

நன்றி chithra, பாராட்டுக்கு ..

வாங்க மாதவன், உங்கள் பரிந்துரை பரிசீலிக்கப் படும்!!. உங்கள் அனுபவம் பாராட்டப் பட வேண்டியது. பாராட்டுக்கள்.

வாங்க சைவக்கொத்துபரோட்டா, உண்மையில் அது 'engal blank'...! ப்ளாக் கட்ட லோன் கிடைக்கலாம்...!

நன்றி geetha santhanam,

வாங்க வசந்த், வருகைக்கு நன்றி...

வாங்க ஹுஸைனம்மா, உண்மை நீங்க சொல்றது...நாங்க கேட்க நினைச்ச கேள்வியை நீங்களே வசந்த் கிட்ட கேட்டுட்டீங்க...!

நன்றி meenakshi,

வாங்க jawahar, பாராட்டுக்கும், கருத்துக்கும் நன்றி

அப்பாவி தங்கமணி said...

இப்படியும் சிலர் . அதுவும் வயசனவங்ககிட்ட நெறைய பேரு இப்படி தான் நடந்துக்கறாங்க. அவங்க முதுமைல உணரும் போது தான் அதன் வலி புரியும். நல்லா இருக்குங்க ஸ்ரீராம்

சாய்ராம் கோபாலன் said...

நல்லவங்க எல்லாம் எழுதிட்டாங்க - சரி சரி - யாரு இந்த பேங்க் பாப்பா ? சோக்காகீது

எங்கள் said...

நன்றி அ. தங்கமணி.
சா ரா கோ ! ரொம்ப ஜொ விடாதீங்க. எங்கேயோ நெட்டுல சுட்ட பழைய (இந்தி) நடிகை படத்தைப் பார்த்து!

பின்னோக்கி said...

அருமையான சிறுகதை....

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!