Wednesday, April 7, 2010

சட்டம் - இவர்கள் கையிலா காலடியிலா?


எங்கள் வீடு அமைந்திருப்பது நான்கு தெருக்கள் சந்திக்கும் இடம். அதில் ஒரு பக்கம் ஒரு காலி மனை. பத்து நிமிடங்களுக்கு ஒருவராக அங்கு ஒன் பாத்ரூம் போன வண்ணம் இருப்பதை எப்போதும் பார்க்கலாம். ஒரு கல் அல்லது இன்னும் அவலமாக எதையாவது எடுத்து வீசி நறுக் என்று நாலு வார்த்தை நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி கேட்கலாமா என்று ஒரு உந்துதல் அவ்வப் போது வரும்.  பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொள்வேன்.  எழுத்தாளர் சிவ சங்கரி கூட ஒரு நிகழ்ச்சியில் ஆண்கள் மட்டும் இந்த மாதிரி பிளாடர் கண்ட்ரோல் இல்லாமல் அசிங்கப் படுத்துவதைக் குறிப்பிட்டு வருத்தப் பட்டார்.  இதுவும், போக்கு வரத்தில் ஒரு ஒழுங்கு இல்லாமல் குறுக்கே பாய்ந்து ஓடுவதும் இந்த நாட்டின் அடையாளங்களாகப் போய் விட்டன.  

இதே இந்தியர்கள் மலேசியா அல்லது அமெரிக்கா போனால் இப்படி எதுவும் செய்யாமல் மிகச் சரியாக நடந்து கொள்கிறார்களே என்று ஒரு பிரபல பேச்சாளர் ஆச்சரியப் பட்டார். அதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று உரத்த சிந்தனை செய்தார். 

அதற்குக் காரணம் எனக்குத் தெரியும்.  நம் ஊரில் பையில் காசு இருந்தால் நீங்கள் கொலை செய்துவிட்டுக் கூடத் தப்பித்து விடலாம். அதற்கு யாரைப் பார்க்க வேண்டும், ரேட் பேச யாரை அழைத்துச் செல்ல வேண்டும் என்றெல்லாம் வரை முறை படுத்தப் பட்டு இருக்கிறது. இந்த வசதி மலேசியாவிலோ அமெரிக்காவிலோ இருக்காது என்றோ, அல்லது யாரைப் பார்க்க வேண்டும் எவ்வளவு வெட்ட வேண்டும் என்று தெரியாததோ தான் நம் நாட்டவர் காட்டும் ஒழுங்கு முறைக்குக் காரணமாக இருக்க வேண்டும்! இல்லாவிட்டால் நம்மவர்கள் அங்கும் பூந்து புறப்படுவார்கள் என்று நான் திடமாக நம்புகிறேன். 

அக்கிரமமான சட்டங்களை எதிர்த்து காந்தி சாத்வீகப் போராட்டம் செய்தார். நாம் சாத்வீகத்தைக் கற்கவில்லை சட்டத்துக்கு மரியாதை தராமலிருக்கக் கற்றுக் கொ்ண்டு விட்டோம். சட்டத்தை மீறுதல் ஒரு வீரச் செயலாகப் பார்க்கப் படுகிறது.  நம் பாராளுமன்ற செல்வங்கள் துணை சபாநாயகர் மீது காரித்துப்பாத குறையாக நடந்து கொள்வதற்கு வேறு என்ன சமாதானம் சொல்ல முடியும்? 

கூட்டணி கர்மங்கள், சாரி, கூட்டணி தர்மங்கள் வேறு நடவடிக்கை எடுப்பதற்குப் பெரும் தடையாக இருக்கின்றன.  இடைத் தேர்தல்களில் கூட மதிப்பு மிக்க நம் வாக்குகள் இப்படி வக்கில்லாதவர்களுக்கு போய் விழும் கொடுமையை நினைந்தால் நெஞ்சு பொறுக்குதிலையே என்று பெருங்குரலெடுத்துப் பாடத் தோன்றுகிறது. 


ஐம்பது வருட  காலத்துக்கு முந்தைய  ஜோக் ஒன்று இதோ: 
நேருவை நேரில் சந்தித்துப் பேச கென்னெடி டெல்லி வந்திருந்தார். இருவரும் பேசியபடி, டெல்லி வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அங்கே சாலையோரத்தில் ஒரு நபர் மும்முரமாக 'மூ' போய்க் கொண்டிருந்தார். அதைப் பார்த்த கென்னெடி, "நேரு அவர்களே - அணு ஆயுத பரிசோதனைத் தடை ஒப்பந்தம் குறித்தெல்லாம் நீங்க பேச ஆரம்பிக்கு முன்பாக - உங்க நாட்டுல சாலையோர சிறுநீர் கழிப்போரை தடை செய்யும் ஒப்பந்தம் குறித்து சிந்திப்பது நல்லது" என்றார். நேருவின் முகம் சிவந்து போனது. 


ஆறு மாதங்கள் கழித்து, நேரு அமெரிக்காவுக்கு, கென்னெடியை சந்தித்து விவாதம் செய்யச் செல்கிறார்.  இருவரும் பேசியபடியே நடந்து செல்கிறார்கள். என்ன ஆச்சரியம்! இங்கேயும் ஒரு ஆள் சாலையோரத்தில் மு, மூ! விடுவாரா சந்தர்ப்பத்தை நேரு? அவர் கென்னெடியைப் பார்த்து சொன்னார், " ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை!" 


மிகவும் அவமானப் பட்டுப் போன கென்னெடி - தன உதவியாளரிடம் சொன்னார். " முதலில் அந்த ஆளை அரெஸ்ட் பண்ணி உள்ளே போடுங்க. பப்ளிக் நியூசன்ஸ் கேஸ் புக் பண்ணுங்க. "


உதவியாளர் அந்த மு மூவிடம் போய் சற்று நேரம் பேசிவிட்டு, திரும்பி வந்தார்.  கென்னெடி கேட்டார், "ஏன்? அவரை அரெஸ்ட் செய்யலையா? " உதவியாளர் கூறினார் - "அவரை முன் அனுமதி இன்றி அரெஸ்ட் செய்ய முடியாது.  அவர் இந்திய தூதரக உயர் அதிகாரி."     

17 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

//உதவியாளர் கூறினார் - "அவரை முன் அனுமதி இன்றி அரெஸ்ட் செய்ய முடியாது. அவர் இந்திய தூதரக உயர் அதிகாரி."//

இத நான் எதிர்பாக்கல!!!
ம்ம்.....அவர்களாக திருந்தினால்தான்
உண்டு.

k_rangan said...

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்று தெரியாமலா சொன்னார்கள் ? நம் குழந்தைகளுக்கு பள்ளிப் பாடங்களுடன் சமூக சிந்தனையையும் ஊட்டுவோமே !

கிருஷ்ணமூர்த்தி said...

சட்டம் என்பது ஆள் பார்த்து, கட்சி பார்த்து வளைந்துகொடுக்காமல், அமல்படுத்தும் அரசு ஊழியர்களும் நேர்மையாக நடந்து கொள்ளும் பட்சத்தில், சிங்கப்பூர் மாதிரி இங்கேயும் ஒரு ஒழுங்கு முறையைக் கொண்டு வர முடியும்.

இங்கே விதண்டாவாதம் செய்து வீணாய்ப் போவதற்கு நன்றாகக் கற்றுக் கொண்டிருக்கிறோம்!

வேறு என்ன சொல்வது?

thalaivan said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

சாய்ராம் கோபாலன் said...
This comment has been removed by the author.
சாய்ராம் கோபாலன் said...

என் வீடு சென்னை கே.கே. நகர் பத்மா சேஷாத்ரி பள்ளி அருகில் (பின்னாடி). அங்கே ஆட்டோ ஓட்டுனர் ஒரு நாள் போல் சின்ன ஆண் / பெண் குழந்தைகள் மற்றும் அந்த குழந்தைகளை கொண்டு விட வரும் பெண்கள் என்று வித்தியாசம் பார்க்காமல் லுங்கியை தூக்கி பிஸ் அடிப்பது ஆண்டாண்டு தோறும் நடக்கும் கூத்து ! டாக்டர் ராமசாமி சாலையில் பள்ளி compound wall பக்கத்தில் உள்ள மின்சார transformer பக்கம் நடக்க முடியாது.

இந்தியாவில் இரண்டு கடைக்கு ஒன்று என்று மெடிக்கல் ஷாப், பெட்டிக்கடை, ப்ரொவிஷன் ஸ்டோர், காய்கறி கடை, துணிக்கடை, சாராயக்கடை வைப்போம் ? அங்கு வைக்க முடியாத சாமான்களை பிளாட்பாரம் மேல் போட்டு விற்ப்போம்.

நூற்றுக்கணக்கான இந்த மாதிரி கடைகளில் - கடையில் வேலை பார்ப்பவர் முதல், கடைக்கு வருபவர்கள் முதல் சீறுநீர் கழிக்க சாலையோரங்களை பயன்படுத்துவோம் !! பத்து வியாபாரிகள் சேர்ந்து தங்கள் தெருவில் ஒரு கட்டணமில்ல கழிப்பிடம் கட்டினால் என்ன ?

கொள்ளை லாபம் சாம்பாதிக்கும் தி.நகர் ஷாப்பிங் முதலாளிகளும் அதே வழி. வாடிக்கையாளர்களுக்கு ஒன்றும் செய்யாமல் பணத்தை விழுங்கும் முதலைகள். அங்கே இருக்கும் ஒரு கடையில் திப்பிடித்தால் கும்பகோணம் கல்யாண மண்டபம் / பள்ளி கதை தான். மக்கள் உயிர் போனால் இவர்களுக்கு என்ன. நம் மக்களும் மாக்களே - தெருவில் பிஸ் அடிப்பது முதல் தி.நகர் என்ற ஒரே இடத்துக்கு ஷாப்பிங் போவது முதல் !

"திருப்பதி திருமலா" போன வருடம் என் பெற்றோருடன் சென்றபோது, அங்கே பேருந்து நிலையம் அருகில் - பஜ்ஜி கடை வைத்து இருப்பவர். டக்கென்று எழுந்து மறைவாக இலவச கழிப்பிடம் "பின்" சென்று பிஸ் அடித்துவிட்டு வந்து மறுபடியும் பஜ்ஜி போட்டார் ? பஜ்ஜி இன்னும் புளிப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தாரோ தெரியவில்லை !! ஒன்றும் சொல்லி புண்ணியம் இல்லை. இலவச கழிப்பிடம் இருந்தாலும் நம் புத்தி அப்படி.

சாய்ராம் கோபாலன் said...

In my previous comment -

Read as "தீப்பிடித்தால்"

ஹுஸைனம்மா said...

அட, இப்பத்தான் ‘அவிங்க’ பிளாக்ல இதே மாதிரி ஒரு பதிவுல, பின்னூ எழுதிட்டு வந்தேன்!!

http://aveenga.blogspot.com/2010/04/blog-post.html

//அவர் இந்திய தூதரக உயர் அதிகாரி.//

எதிர்பார்த்தது!!

thenammailakshmanan said...

இந்தியர்களின் சில மோசமான பழக்கங்களில் இதுவும் ஒன்றுதான் .....கட்டணக் கழிப்பறையோ இலவசமோ இருந்தாலும் எல்லாம் வெட்டவெளியில்தான்...

தமிழ் உதயம் said...

பத்து நிமிடங்களுக்கு ஒருவராக அங்கு ஒன் பாத்ரூம் போன வண்ணம் இருப்பதை எப்போதும் பார்க்கலாம். ஒரு கல் அல்லது இன்னும் அவலமாக எதையாவது எடுத்து வீசி நறுக் என்று நாலு வார்த்தை நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி கேட்கலாமா என்று ஒரு உந்துதல் அவ்வப் போது வரும்.கிலோ அரிசி 1 ரூபாய. ஆனால் 1 போக இரண்டு ரூபாய். டிவி இலவசம். ஆனால் கட்டணக் கழிப்பறை. முக்கால்வாசி ஏழை ஜனங்கள். கட்டண கழிப்பறைக்கெல்லாம் முடியுமா. தேவையான கழிப்பறை வசதியும் இல்லை. இயற்கை உந்துதலை எங்கே கொட்டுவார்கள்.

பாஸ்கரன் said...

உண்மைதான். வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிக்கு ஆகும் செலவில் ஒவ்வொரு கடைத் தெருவிலும் ஒரு கழிப்பிடம் கட்ட எவ்வளவு சதவிகிதம் செலவாகும் ? கெட் திறக்க, இன்னும் எதற்கெல்லாமோ ஆட்டோமாடிக் சாதனங்கள் இருக்கிறது. அவ்வப்பொழுது சுத்தம் செய்ய ஒன்று பொருத்தி விட்டால் அதை வேடிக்கை பார்ப்பதற்காவது நம் மக்கள் அதை உபயோகிக்கத் தொடங்குவர் இல்லையா?

அப்பாவி தங்கமணி said...

//இல்லாவிட்டால் நம்மவர்கள் அங்கும் பூந்து புறப்படுவார்கள் என்று நான் திடமாக நம்புகிறேன்//

ஒரு முறை இதை பத்தி பேசினப்போ எங்க ரங்கமணி கூட இதே தான் காரணமா சொன்னார். நல்லா பதிவு செஞ்சு இருக்கீங்க ஸ்ரீராம். வாழ்த்துக்கள்

சாய்ராம் கோபாலன் said...

நம்மூரு சுற்றுப்புற சுகாதார மந்திரியே அப்படித்தான். அப்புறம் ஏழைகளை சொல்லி என்ன புண்ணியம்.

தண்ணீர் தண்ணீர் படத்தில் குளிக்க தண்ணி இல்லே கு..... கழுவ தண்ணியா என்று கேட்ப்பார்கள். அதேபோல் ரொம்ப அவசியமாக தொலைக்காட்சி பெட்டி ? சமுதாயத்தில் இருப்பவர்களை ஒரு மயக்கத்தில் இருக்க வைக்க சரக்கு போல் இதுவும் ! சீரியல் அல்லது கிரிக்கெட் மேட்ச் பார்த்து மக்கள் உருப்படாமல் போகவேண்டுமே ?

Chitra said...

"அவரை முன் அனுமதி இன்றி அரெஸ்ட் செய்ய முடியாது. அவர் இந்திய தூதரக உயர் அதிகாரி."


.... இப்படி வேறயா? சாமி, முடியல.

padma said...

ஒரு சின்ன ஜோக் சொல்லலாமா?
கேரளாவிலிருந்து தமிழ் நாடு வந்து சென்ற ஒரு நண்பர் பேசும் போது சொன்னார் எங்கள் ஊரில் தென்னை அதிகம் விளைந்தாலும் சீப்பாக கிடைப்பது தமிழ் நாட்டில் தான் என்று .எப்படி என்று கேட்டேன் .
அவர் அரைகுறையாக தமிழ் எழுத்துகூட்டி படிப்பார் .
அவர் கூறியது பஸ் விட்டு இறங்கியதும் பார்த்தேன் .
சிறுநீர் கழிக்க 2 ரூபாய் என்று போட்டிருந்தது .அதான் சொல்றேன்னு .
மலையாளத்தில் கழிக்க என்றால் உண்ண
அவர் சிறுநீரை இளநீர் என்று எண்ணிவிட்டார்

Anonymous said...

//அவர் அரைகுறையாக தமிழ் எழுத்துகூட்டி படிப்பார் .//

உச்சிக்கு வீட்டுக்குப் போகணும் என்று கேட்ட கேரளாக்காரர் விழித்து நின்றார் தன் ஆந்திர அதிகாரி சொன்னதைக் கேட்டு : "எதுக்கு வீட்டுக்குப் போகணும் ? இங்கேதான் வரிசை வரிசையாக டாய்லேட் கட்டி வைத்திருக்கிறோமே ?"

Udukkai said...

//மிகவும் அவமானப் பட்டுப் போன கென்னெடி - தன உதவியாளரிடம் சொன்னார். " முதலில் அந்த ஆளை அரெஸ்ட் பண்ணி உள்ளே போடுங்க. பப்ளிக் நியூசன்ஸ் கேஸ் புக் பண்ணுங்க. "//

அப்படியாச்சும் கென்னடி அந்த ஆளை அர்ரெஸ்ட் பண்ண சொன்னாரு.....

ஆனா....
நம்ம நேரு கோபப்பட மட்டும்தானே முடிஞ்சது.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!