ஞாயிறு, 3 அக்டோபர், 2010

குமாரி கமலாவும் தேவி ஸ்ரீ பிரசாத்தும்..


இப்போதெல்லாம் ஞாயிற்றுக் கிழமைகளில் ஏன், சனிக் கிழமைகளில் கூட தொலைக் காட்சிகள் இப்போதோ, அல்லது எப்போதோ நடந்த திரைப் பட விருது வழங்கும் விழாக்களைக் காட்டுவது வழக்கமாகி விட்டது. லக்ஸ் விருதுகள், விஜய் விருதுகள், ஃபில்ம் ஃபேர் விருதுகள், என்று ஏகப் பட்ட விழாக்கள். எல்லாம் ஏதாவது ஒரு டிவியில் காட்டப் பட்டு விடும்.


இதில் பொதுவான அம்சம் எல்லா கலைஞர்களும் பெரும்பாலும் விதம் விதமான உடைகளில் வருவார்கள். உடைகள் போட்டிருக்கிறார்களா, அல்லது விழாவுக்கு நேரமாகி விட்டால் உள்ளே விடுவார்களோ மாட்டார்களோ என்று அவசரத்தில் கிளம்பி அரைகுறை உடையில் பாதி போட்டும் போடாமலும் வந்து விட்டார்களோ என்று சந்தேகப் படும் அளவில் சில பல நடிகைகள் வருவார்கள். சிலர் அந்த நேரத்தில் தான் எந்த ஜோடியுடன் இருக்கிறோம் என்று தெரிந்து கொள்ளுங்கள் என்பது போல அவர்களுடன் வருவார்கள்.
பரிசு வாங்கும் பிரபலத்துக்கு பரிசு கொடுக்க முதலில் இரண்டு பிரபலத்தை அழைப்பார்கள். அவர்கள் வந்து பரிசு வாங்கும் பிரபலத்தை அறிவித்து பரிசை அவர்கள் கையில் கொடுக்க வேண்டும். நால்வரும் நாலு நாலு வார்த்தைப் பேச வேண்டும். டிவி இடையில் சில க்ளிப்பிங்குகளைக் காட்ட வேண்டும். பரிசு வாங்கியவர் சில சமயம் 'அழுது' விடுவார். சமீபத்தில் நான் பார்த்து அழுதவர் தெலுங்கு ஆர்யா படப் பாடல் ரிங்கரிங்க பாடலைப் பாடிய பாடகி. ஏதோ ஹிமேஷ் என்று வரும்.
இந்தப் பாடல்களுக்கு இடையில் பொழுது போக்கு என்று சினிமாப் பாடல் காட்சிகள் 'நடன'த்துடன் இடம் பெறும். சமீபத்தில் இந்த நடன ஒத்திகையைக் கூட தனி நிகழ்ச்சியாகக் காட்டி அரை மணி நேரம் ஒப்பேற்றியது சன் டிவி. இந்த 'நடனங்கள்' பார்த்த்ததும் தோன்றியதைத்தான் இங்கு பதிவாக்கியுள்ளோம்.

பல்வேறு நடிகைகளும் (நடிகர்கள் கிடையாது) இறுக்கிப் பிடித்த உடைகளுடன் அந்தப் பாடல்கள் பின்னணியில் ஒலிக்க விளக்குகளின் வர்ணஜாலத்தில் ஆடுவார்கள்.

தேவி ஸ்ரீ பிரசாத்.

இசை அமைப்பது இவரது தொழில்.

நடிக்க முயற்சி செய்து கிடைக்கவில்லையோ என்னமோ இந்த மாதிரி மேடைகளில் தவறாது இப்போதெல்லாம் இவரது 'நடன'த்தைக் காண முடிகிறது. நடிகைகள் எல்லாம் ஆடும் ஆட்டம் போலதான் இதுவும். இவர் மேடையின் இந்த கோடியிலிருந்து அந்தக் கோடி வரை வேகமான கேட்வாக் போல நடப்பார். நடுநடுவில் வாய் அருகே கை வைத்து ஹூ என்று கர்ஜனை செய்வார். அவ்வப் போது இரண்டு கையையும் தட்டிக் கொள்ள வேண்டும். பின்னங்கழுத்தில் ஒரு கை, கீழ் இடுப்பில் ஒரு கை வைத்து அவ்வப்போது ஒரு சில வெட்டுகள் கொடுக்க வேண்டும். நடனமாம். என்ன ஆசையோ?
அக்டோபர் இரண்டாம் தேதி அன்று சில சேனல்களில் காட்டப்பட்ட குமாரி கமலாவின் 'மஹ்ஹான்...காந்தி மஹ்ஹான்..' பாடலைப் பார்க்கும்போது அவர் நடனம் நினைவு வந்தது. அந்தக் காலத்தில் அவர் நடனம் இல்லாத படம் இருக்காது என்பது போல இருக்கும். ஆடுவோமே, பள்ளு பாடுவோமே போன்ற பாடல்கள் உதாரணம்.


பின்னர் வந்த பத்மினி, வைஜயந்தி மாலா போன்றோர் நடனம். சின்னஞ்சிறு கிளியே, கண்ணும் கண்ணும் கலந்து போன்ற பாடல்களை நினைவில் கொண்டு வரவும். தில்லானா மோகனாம்பாள், பாட்டும் பரதமும், சலங்கை ஒலி போன்ற படங்கள் இது போன்ற கிளாசிக் நடனத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப் பட்டன.

பிறகு வந்தார் சுந்தரம் மாஸ்டரின் பையன் பிரபு தேவா! சுந்தரம் மாஸ்டர் நீண்ட காலமாக சினிமாவில் நடன இயக்குனராக இருப்பவர். ஓரளவு இந்த நடனங்கள் முன்பே நாகேஷினால் சர்வர் சுந்தரம், தங்கைக்காக போன்ற படங்களில் ஆடப் பட்டதுதான். நடுவில் அவர் மகன் ஆனந்த் பாபு. நடனத்துக்காகவே ஓடிய படம் பாடும் வானம்பாடி. அவர் நடித்தது. சற்றே வலிப்பு வந்தது போலவும், திடீரென ஷாக் அடித்தது உதறுவது போலவும் இருக்கும் நடனம்.

பிரபுதேவா நடனங்கள், 'உடம்பா அல்லது ரப்பரா!' என்று வியந்து போகுமளவு புது மாதிரி ரசிக்க வைத்தது. இதயம், சூரியன் போன்ற படங்களில் இவர் நடனம் தனியாகச் சேர்க்கப் பட்டிருக்கும். இது ஒரு மாதிரி ட்ரேட் மார்க்காகி லாரன்ஸ், ராஜு சுந்தரம் என்று இது போல ஆடுபவர்கள் அதிகமானார்கள். அதுவரை டான்ஸ் இளவரசனாக இருந்த கமல் கூட ஓரம் கட்டப் பட்டார்.

இப்போதெல்லாம் படங்களில் பாட்டு என்பது இரைச்சல். நடனம் என்பது ஜிம்னாஸ்டிக்... ஆர்யா படத்தில் ரிங்க ரிங்க ரிங்க ரிங்கா பாட்டு பார்த்திருக்கிறீர்களோ? படங்களில் இயற்கை அல்லது செயற்கைப் பின்னணியில் கதாநாயகன் நாயகி இப்படி ஆடும் ஆட்டங்களையே பார்க்க முடியவில்லை. இதில் தேவி ஸ்ரீ இப்படி வேக வேகமாக மேடையின் இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும் அலைவதை நடனம் என்று சேர்க்க முடியுமா?
வஞ்சிக் கோட்டை வாலிபன் படத்தில் 'சபாஷ் சரியான போட்டி' என்று ஆடும் நடனம் ஒரு வகை. தில்லானா மோகனாம்பாள், மணமகள், சலங்கை ஒலி போன்ற படங்களில் வரும் பாரத நாட்டியம் ஒரு வகை. சந்திர பாபு ஆடும் ராக் அண்ட் ரோல் ஒரு வகை. நாகேஷின் நடனங்கள் தனி வகை. (ரசிக்காமலிருக்க முடியாது) பாட்டும் பரதம் படத்தில் சிவாஜி அல்லது கோபி கிருஷ்ணா ஆடிய நடனம் ஒருவகை, கமல் நினைத்தாலே இனிக்கும், இளமை ஊஞ்சலாடுகிறது என்று மற்ற படங்களில் ஆடிக் கொண்டிருந்த நடனம்.. இப்போது தேவி ஸ்ரீ மேடையில் போடும் 'பாப்பா நொண்டி' நடனம்...!!
எங்கு தொடங்கி எங்கு வந்திருக்கிறது இந்த நடனக் காட்சிகள்? அதையும் விட முக்கியமான கேள்வி, 'எங்கே போகும்?'

9 கருத்துகள்:

  1. நடனம், கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக ஆகி கொண்டு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. இதையெல்லாம் நடனம்னு ஏன் சொல்லணும். அவ்ர்களுடைய தேகப் பயிற்சினு சொல்லலாம்
    கண்கூசும் வண்ணம் பெயர் தெரியாத ஆட்டமங்கை தன்னை விளம்பர்ப் படுத்திக் கொள்ள ஆடியது பயங்கரம்.ஒரு சபதம் எடுக்கலாம்.இனிமேல் இந்தக் காட்சிகளைப் பார்க்காமல் இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  3. கை கால்களை அசைத்தலும் நீட்டி சுருக்குதலும் நடனத்திற்கான இலக்கணம் ஆகிவிடாது. பாவம்(BHAVAM) வேண்டும். பிரபு தேவா சிக்கு புக்கு ரயிலே ஆடியபோது ஒரு தடவை பார்க்கலாம் ஓ.கே என்று நினைத்த போது அதுவே நிரந்தரம் ஆகிப்போனது தான் இம்சையின் உச்சம். இவர்கள் ஆடுவதை பார்த்தால் இடது பதம் தூக்கி ஆடும் ஆடல் வல்லான் நடராஜா கூட காலை இறக்கிவிடுவார். போட்டியில் இவர்களுக்கே வெற்றி. ஸ்ரீராம் என்னுடைய டான்சு உடான்சு (http://mannairvs.blogspot.com/2010/09/blog-post_03.html) பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். குத்தாட்டம், கும்மியாட்டம், கரடியாட்டம், பிரேக் எழுதும்போதே கால் இழுக்குது... அப்புறமா வந்து பின்னூட்டம் ஆடறேன்... ச்சீ ... போடறேன்.

    பதிலளிநீக்கு
  4. நடனம், கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக ஆகி கொண்டு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். //
    I have the same view.Sadly yes, the art is slowly disappearing amidst the artless performances.

    பதிலளிநீக்கு
  5. ரெண்டாவது போட்டோ தான் குமாரி கமலானு நெனச்சேன்... தேங்கை சீனிவாசன் ஜோக்காட்டம் செஞ்சுட்டீங்களே? (பெயர் மறந்துவிட்டது, மோகன் நடிச்ச ஸ்ரீதர் பட ஜோக்)

    எம்ஜிஆர் பத்மினி ஸ்டில் அருமை... ஆடாத மனமும் உண்டோ பாட்டா? எம்ஜிஆர் நன்றாக ஆடினார் - முறையாக ஆடினாரா தெரியாது, ஆனால் ரசித்த ஞாபகம் இருக்கிறது.

    நடனம் தேகப்பயிற்சி தானே வல்லிசிம்ஹன்? பாவத்தை விட/பாவத்துடன் நளினம் வேண்டும் என்று நினைக்கிறேன். என்ன சொல்கிறீர்கள்? சித்தானை உடம்பை வைத்துக்கொண்டு சில அமெரிக்க நடிகர்கள் ஆடுவதிலும் நளினம் இருக்கிறது. குச்சி ஐஸ் உடம்பை வைத்துக்கொண்டு பேயோட்டும் தமிழ் சினிமா க்ரூப் நடனத்தில் நளினம் காணாமல் போய்விட்டது (?).

    ஹேமமாலினி நாட்டியத்தைப் பற்றி சுப்புடு எழுதியது நினைவுக்கு வருகிறது: "இவர் க்ருஷ்ணணை அழைப்பது, மரத்திலிருந்து குரங்கை இறங்கி வரச் சொல்வது போலிருக்கிறது". ஹேமமாலினியின் அந்த நடனத்தை நான் பார்க்கவில்லை - சுப்புடுவையும் அதிகம் தெரியாது. அதெல்லாம் பெரிசுங்களுத்தான் தெரியும். சுப்புடு போன்றவர்கள் இன்றைய சினிமா நடனங்களைப் பற்றி என்ன சொல்வார்கள்?

    பரதநாட்டியம் பற்றி மகாமேதை ஜிதேந்திரா சொன்னதாக எப்போதோ படித்தது: நிர்வாணமாக ஆடினாலும் பரதநாட்டியத்தை ரசிக்க முடியாது. அடடே!

    பதிலளிநீக்கு
  6. தேவி ஸ்ரீ பிரசாத் அவர்களின் அலப்பறை தாங்க முடியவில்லை. ஒரே மாதிரியான குத்துபாடல்களை தந்துவிட்டதை தவிர என்ன சாதித்து விட்டார் என்று தெரியவில்லை. நடனக்கன்றாவியை தவிர்த்து இசை கற்று கொள்ள கவனம் செலுத்தலாம்.

    விஜய்

    பதிலளிநீக்கு
  7. இந்தக் காலத்திலும் "வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும்" .. "கத்தாழைக் கண்ணாலே" போன்ற நல்ல நடனங்கள் இருக்கத்தான் செய்கின்றன...ச்சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்!!

    பாக்கியராஜ் நகைச்சுவையில் தேர்ந்தவர் என்பதால் நடனத்தில் கூட நகைச்சுவையாக எக்சர்சைஸ் செய்வதுபோல் வைத்தார். பிரபுதேவா சிக்கு புக்கு ரயிலே பாட்டிலேயே saturate ஆகிவிட்டார். அதைவிட சிறப்பாக வேறு ஒரு நடனம் அவரால் ஆட முடியவில்லை. அவர் அண்ணன் ராஜூ-வின் நடன அமைப்பில் நாயகன் கையை அகல விரித்து கொஞ்சதூரம் நொண்டுவார். கொஞ்ச நேரம் ஒரு பக்கம் நடந்து சட்டென்று about turn செய்வார்.

    இதையெல்லாம் வைத்து இக்கால நடனத்தில் இலக்கணம் இல்லை என்று சொல்ல முடியாது. நன்றாக கவனித்துப் பாருங்கள். பெண்கள் ஆடும் நடனம் என்பது இடுப்பை "இடம்-வலம்" "வலம்-இடம்" ஆக ஆட்டுவது. ஆண்கள் ஆடும் நடனம் என்பது இடுப்பை "பின்-முன்""முன்-பின்"ஆக அசைப்பதே இந்தப் புது இலக்கணம்!

    பதிலளிநீக்கு
  8. நடனம் குறித்த ஆதங்கம் பதிவு முழுதும்.கவலைதான் !

    பதிலளிநீக்கு
  9. எழிலாக யார் ஆடினாலும், எந்த நடனமானாலும் பார்க்கலாம். பத்மினியின் 'காத்திருப்பான் கமல கண்ணன்' நடனத்தை ரசிப்பதை போல் 'மறைந்திருந்து பார்க்கும்' நடனத்தை நிச்சயம் ரசிக்க முடியாது. வைஜெயந்தி மாலாவின் நடனம் எல்லாமே எழிலாக இருக்கும். 'என்னை தெரியுமா' பாடலின் இறுதில் வரும் ஒரு சின்ன இசை மெட்டில் ஜெயலலிதா ஆடியதை என்றும் ரசிக்கலாம். 'விழியே விழியே உனக்கென்ன வேலை' பாடலில் ஜெயலலிதாவின் நடனம் கொள்ளை அழகு. இதே போல் சிம்ரன், ஐஸ்வர்யா நடனத்தையும் சில பாடல்களில் மிகவும் ரசிக்க முடியும். குறிப்பாக ஐஸ்வர்யாவின் நடனம் 'அன்பே அன்பே கொல்லாதே' பாடலில் அருமையாக இருக்கும். 'ரோமியோ ஆட்டம் போட்டால்' பாடலில் பிரபுதேவாவின் ஆட்டம் கலக்கல்! சலங்கை ஒலி படத்தில் 'பாலா கனக மைய' பாடலில் மஞ்சு பார்கவியின் நடனத்தை விட கமல் நடனம் அழகாக இருக்கும். டூயட் படத்தில் மீனாக்ஷியின் நடனம் அருமையாக இருக்கும். ஸ்வர்ண கமலம் என்ற தெலுங்கு படத்தில் பானுப்ரியா மிகவும் நளினமாக ஆடி இருப்பார். சமீப காலமாக தொலை காட்சியில் நிறைய Ballet நடனத்தை பார்க்க சந்தர்பம் கிடைத்தது. இதில்தான் எத்தனை வகை, எவ்வளவு எழிலாக ஆடுகிறார்கள். பாடுவோர் பாடினால் கேட்க தோன்றும் என்பது போல், எழிலாக ஆடுவோர் ஆடினால் பார்க்க தோன்றும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!