புதன், 27 அக்டோபர், 2010

சிறிசும் பெருசுமாய் ..!

என் மனைவி, ஏதேனும் கற்றுக் கொள்ளும் முயற்சிகளில் இறங்கும்பொழுது, நான் குறுக்கே நிற்பதில்லை. கார் ஓட்டக் கற்றுக் கொள்கிறேன் என்று மனைவி கூறியவுடன், நான் எடுத்த இந்த சாமர்த்தியமான முடிவு என்னுடைய உயிரையே பாதுகாத்துக் கொள்ள உதவியது பாருங்கள்!
             
அதே போலத்தான், என் மனைவி எனக்கு ஏதாவது கற்றுக் கொடுக்கும் முயற்சிகளில் இறங்கும் பொழுது, நான் தலையை 'பூம் பூம் மாடு' போல பலமாக ஆட்டிவிடுவேன். இது பல விதங்களில் பிற்காலங்களில் உதவும். ரொம்ப முக்கியமான பாடமாக இருந்தால், ரிவிசன் வரும்பொழுது, கொஞ்சம் மனதில் பதியும். ஒரு மாதத்திற்குள் ரிவிசன் வரவில்லை அல்லது ரிப்பீட் ஆகவில்லை என்றால், கவலையே இல்லை. திரும்ப அதே பாடம் வந்தால், 'பூம் பூம் மாடு' வழிமுறை (முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு) பின்பற்றினால், மனைவிக்கு,  இதை முதலில் சொன்னோமா இல்லையா என்று சந்தேகம் வந்துவிடும். அப்பாவி ரங்கமணிகளே - இதை நன்கு மனதில் வாங்கிக் கொள்ளுங்கள்.
                 
என் மனைவி அடிக்கடி பாடம் நடத்துவது காய்கறி வாங்கும் பொழுது, அல்லது நான் வாங்கப் போகும் பொழுது. நிறைய கட்டை விரல் விதிகள். (Thumb rules) சொல்லுவார். எல்லாவற்றையும், எல்லா நேரத்திலும் ஞாபகம் வைத்துக் கொண்டு, உருப்படியாக பின்பற்றுவது மிகவும் கடினம். கிள்ளிப் பார்த்து வாங்குவது, முறுக்கிப் பார்த்து வாங்குவது, தட்டிப் பார்த்து வாங்குவது, முகந்து பார்த்து வாங்குவது, ஒடித்துப் பார்த்து வாங்குவது, கண்களால் அளந்து வாங்குவது என்று ஐம்புலன்களுக்கும் வேலை உண்டு.
                      
நேற்று காலை பங்கு வர்த்தகம் ஆரம்பிக்கும் நேரம், விரல் நகத்தைக் கடித்த வண்ணம் கணினி திரையையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஏறுமுகமா, இறங்கு முகமா? எந்த முகம் வரும்? என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் வேளையிலே, என் கையில் ஒரு மஞ்சள் பை திணிக்கப் பட்டது. பெருங்காயமோ, வெங்காயமோ ஏதோ சொன்னது காதில் விழுந்தது. ".... ரெண்டும் வேணும்... உடனே வாங்கிகிட்டு வந்துடுங்க. யாருதான் கண்டு பிடிச்சாங்களோ இந்த கம்பியூட்டரை.... அதையே எப்பவும் பாத்துகிட்டு, .. வாங்கறேன், விற்கிறேன்  ... என்று பைத்தியம் பிடித்து அலையுறீங்க ... நான் சொன்னது எல்லாம் காதில் விழுந்ததா, இல்லையா?" கடைசி ஆறு வார்த்தைகள் மட்டும்தான் கேட்டது. ஆனாலும் கௌரவப் பிரச்னையால், 'பூம் பூம்' தலையாட்டலுடன் பையை கையில் எடுத்துக் கொண்டு வேகமாக தெருவில் நடந்து போகும் பொழுதுதான், நான் யார், எங்கே இருக்கின்றேன், எங்கே சென்று கொண்டிருக்கின்றேன் என்ற கேள்விகள் எழும்பி, பதில்கள் தேட முயன்றேன்.
                
காதிலே கேட்டவைகளை மறுமுறை நினைவில் நிறுத்திப் பார்த்தேன். பெருங்காயம்? ரெண்டும் வேணும்? பெருங்காயத்துல ஏது ரெண்டு? - ஓஹோ - பவுடர், கட்டி இரண்டுமோ? -- ச்சீச்சீ - அதுக்கு எதுக்குப் பை? -- வேறு என்ன காயம்? வெங்காயம்? ஆஹா அதுதான் ... வெங்காயம்தான். பெரிய வெங்காயம் மற்றும் சிறிய வெங்காயம்! 
     
அருகில் உள்ள குடிசைக் கடைக்குச் சென்று, இரண்டிலும் ஒவ்வொரு கிலோ வாங்கினேன். திரும்ப வரும் பொழுது, வெங்காயம் வாங்குவதற்கான தம்ப் ரூல் என்ன என்று ஞாபகம் வந்து தொலைத்தது. 'பெரிய வெங்காயம் எல்லாம் சின்ன சின்னதா இருக்கணும், சின்ன வெங்காயம் எல்லாம் பெருசு பெருசா இருக்கணும்' அடேடே - அவசரத்தில் மனைவியின் வெங்காய விதிகளை மீறி அப்படியே அள்ளிப்போட்டு வாங்கி வந்து விட்டோமே என்று நினைத்தவாறு வந்தேன்.
                      
பையை மனைவி கையில் கொடுத்துவிட்டு, ஓடிப் போய் கணினி திரையைப் பார்த்தால், எல்லாம் பச்சை வண்ணத்தில் மிளிர்ந்துகொண்டு இருந்தன. அவசரம் அவசரமாக விற்க வேண்டியவைகளுக்கு ஆன் லைன் ஆர்டர்கள் கொடுக்க ஆரம்பித்தேன்.  
   
((இப்பொழுதைய விலை - வாங்கிய விலை) X பங்கு எண்ணிக்கை) - தரகு) / (இன்றைய தேதி - வாங்கிய தேதி: நாள் கணக்கில் ) + K  (((((ஃபார்முலாவில் எங்கேயாவது அடைப்புக் குறிகள் குறைந்திருந்தால் இங்கேயிருந்து எடுத்துப் போட்டுக்குங்க )))))  என்று மனக் கணக்கு - மைக்ரோசாஃட் கால்குலேட்டர் பிளஸ் இல்லாமலேயே போட்டுக் கொண்டிருந்த நேரத்தில், பக்கம் வந்து நின்றார் பத்தினி. "நல்லா இருக்கு. நீங்க பண்றது." (அப்பாவி ரங்கமணிகளே - உஷார் - இந்த வார்த்தைகளை தங்கமணிகள் உதிர்த்தால் அகமகிழ்ந்து போய்விடாதீர்கள். அடுத்து வருவது அணுகுண்டாக இருக்கும்.) 
    
"இதற்காகத்தான், காய்கறிக்கடையில் பொறுக்கி எடுக்காமல் இப்படி அள்ளிப் போட்டுக் கொண்டு ஓடி வந்தீர்களா?"
         
"உன் புருஷன் பொறுக்கியாக இல்லையே என்று சந்தோஷப் படுவதை விட்டு, இப்படி கோபப் படுகிறாயே!"
             
"இந்த சிலேடைப் பேச்சுகளில் எல்லாம் ஒன்றும் குறைச்சல் இல்லை."
                     
"இதோ பாரு, புருஷன், நாம சொன்னவுடன் கேட்டு ஆசையாய்(!) வாங்கி வந்தாரே, அந்த வெங்காயங்களை உரித்தோமா, நறுக்கி, நம்முடைய இன்றைய கோட்டா கண்ணீரை விட்டோமா என்று இல்லாமல், ஏன் இப்படி வம்பு பண்ணுகிறாய்?"
            
"நான் ஒன்றும் வம்பு பண்ணவில்லை. இதோ இங்கே வந்து டைனிங் டேபிள் மீது பாருங்கள்"


   
"ஊம் ... பார்த்துவிட்டேன். இப்போ நான் பச்சைப் பங்குகள் விற்கப் போகலாமா?"  
     
"நீங்க பண்ணுகிற பங்கு வர்த்தக லட்சணம் எனக்குத் தெரியாதாக்கும்? சரி, வெங்காயம் எப்படி வாங்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறேனா இல்லையா?"
                       
"சொல்லியிருக்கே. (இந்தக் கட்டத்தில் பொய்யே கூடாது. பொய் சொன்னால், அதற்கும் சேர்த்து அர்ச்சனை தொடங்கிவிடும்) பெரிய வெங்காயம் எல்லாம் சின்ன சின்னதா இருக்கணும், சின்ன வெங்காயம் எல்லாம் பெருசு பெருசா இருக்கணும்."
       
"நீங்க வாங்கிகிட்டு வந்திருப்பவை எல்லாம் அப்படி இருக்கா? அதை மட்டும் பார்த்துச் சொல்லுங்க?"
   
இவ்வளவு நேரமும் 'எப்படிடா இந்த விதி மீறலை சமாளிக்கப் போகிறோம்' என்று யோசித்த வண்ணம் இருந்த எனக்கு 'செந்தில்' ஆண்டவர் கை கொடுத்தார். 'சுட்ட பழம் வேண்டுமா அல்லது சுடாத பழம் வேண்டுமா?' என்று கேட்டவர் இல்லை; 'அண்ணே, இதுதாங்க அந்த இன்னொரு பழம்' என்று சொன்னவர். 
       
உடனே சொன்னேன். "தங்கமணி, நீ சொல்வதை நான் என்றாகிலும் (உனக்குத் தெரிந்து) செய்யாமல் இருப்பேனா? எனக்கு மனைவி சொல்லே மந்திரம் என்று தெரியாதா? நீ சொன்ன மாதிரிதான் வாங்கி வந்திருக்கின்றேன்! நன்றாகப் பார்! முதலில் இருப்பது சின்ன வெங்காயம் - பாரு ஒவ்வொன்னும் எவ்ளோவ் பெருசா இருக்கு!. இரண்டாவது இருப்பது பெரிய வெங்காயம். பாரு ஒவ்வொன்னும் எவ்ளோவ் சின்னதா இருக்கு !!"
                
ஒரு வினாடி திகைத்து, யோசித்துப் பார்த்த தங்கமணி பக பகவென சிரிக்க, நான் அந்த கேப்பைப் பயன் படுத்திக் கொண்டு கணினியைப் பார்த்துப் பாய்ந்தேன்!
                 

23 கருத்துகள்:

  1. ஹஹஅஹா .. எப்படி இப்படிலாம் சமாளிக்கறீங்க. நன் டுய்சன் வரன் உங்க கிட்ட

    பதிலளிநீக்கு
  2. புத்திசாலிக்கு தப்பிக்க ஆயிரம் வழி. வாயுள்ள பிள்ள நீங்க. புழைச்சுக்குவிங்க.

    பதிலளிநீக்கு
  3. ஒண்ணுமில்லாத விஷயத்தை வெங்காயம்னு சொல்லுவாங்க. நீங்க அதை வெச்சு சூப்பரா எழுதி இருக்கீங்க.

    //'பெரிய வெங்காயம் எல்லாம் சின்ன சின்னதா இருக்கணும், சின்ன வெங்காயம் எல்லாம் பெருசு பெருசா இருக்கணும்'//

    //அடைப்புக் குறிகள் குறைந்திருந்தால் இங்கேயிருந்து எடுத்துப் போட்டுக்குங்க //

    சூப்பர்

    பதிலளிநீக்கு
  4. //'பெரிய வெங்காயம் எல்லாம் சின்ன சின்னதா இருக்கணும், சின்ன வெங்காயம் எல்லாம் பெருசு பெருசா இருக்கணும்'//

    இதைப் படித்தவுடன், நான் என்ன நினைத்தேனோ, அதை நீங்கள் கடைசியில் எழுதியுள்ளீர்கள்.
    உங்கள மனைவியையும் சிரிக்க வைத்துவிட்டீர்கள்.

    ஒரு வேளை, அவர் 'பெருங்காயம்' வாங்கிவரச் சொல்லியிருந்தால், எப்படி சமாளித்திருப்பீர்கள் (வெங்காயம் வாங்கி வந்து)?

    பதிலளிநீக்கு
  5. எல் கே - டியூஷன் எடுத்துக் கொள்ள, மே(லி)டத்திலிருந்து அனுமதி பெற்றுவிட்டீர்களா?

    தமிழ் உதயம். ஆமாம், நன்றி!

    கோபி ராமமூர்த்தி சார், பாராட்டுக்கு நன்றி.

    மாதவன், அவர் பெருங்காயம் வாங்கி வர சொல்லி நான் வெங்காயம் வாங்கி வந்திருந்தாலும், எனக்கு (அப்பளக் கட்டையால்) 'பெருங்காயம்' கிடைத்திருக்கும்!

    பதிலளிநீக்கு
  6. //மாதவன், அவர் பெருங்காயம் வாங்கி வர சொல்லி நான் வெங்காயம் வாங்கி வந்திருந்தாலும், எனக்கு (அப்பளக் கட்டையால்) 'பெருங்காயம்' கிடைத்திருக்கும்! //

    oh! Then, it's "buy 'வெங்காயம்', Get 'பெருங்காயம்' FREE" !!
    :-)

    பதிலளிநீக்கு
  7. எப்படியோ வெங்காயம் உரிக்கிறதுலேர்ந்து தப்பிச்சுட்டீங்க..!! சமாளிச்ச விதமும் அதை பதிவாக்கிய விதமும் அழகு :)

    பதிலளிநீக்கு
  8. வீட்டில் மதுரை ஆட்சி செய்வதை எவ்வளவு லாவகமாக நகைச்சுவையாக பதிவிட்டுருக்கிரீர்கள். ரொம்ப சூப்பர். ;-)

    பதிலளிநீக்கு
  9. சிறிசும் பெரிசுமா மாத்தி வாங்கி வந்துட்டு, அந்த சாமர்த்தியத்தைப் பதிவா வேற போட்டிருக்கீங்களாக்கும்! தப்பிச்சிட்டோம்னு மட்டும் நெனைச்சுடாதீங்க!தங்கமணிகளிடம் இருந்து தப்பவே முடியாது!!

    பதிலளிநீக்கு
  10. சிறிசும் பெரிசுமாய் வெங்காயக் காமெடி சூப்பர்.--கீதா

    பதிலளிநீக்கு
  11. எவ்வளவு சாமர்த்தியமா சமாளிச்சு, அவங்களை சிரிக்கவும் வெச்சுடீங்க! நல்ல நகைசுவை! :)

    கொஞ்ச நாள் பின்னூட்டமே போடாம இருந்தும் நான்தான் இன்னும் டாப். ஹஹஹஹஹா......

    பதிலளிநீக்கு
  12. Poodwaddle.com பாட்டிலை முதல்ல எடுங்க.. உங்க பதிவுல பாதிய அதுவே மறைச்சிடுது.. என்ன எழுதியிருக்கீங்கன்னே தெரியலை... இதனாலயே ரெண்டு மூனு தடவை படிக்காமயே போயிட்டேன்...

    பதிலளிநீக்கு
  13. வெடிச்சிரிப்பு வெங்காயம்
    >>>புருஷன் பொறுக்கியாக இல்லையே என்று சந்தோஷப் படுவதை விட்டு

    பதிலளிநீக்கு
  14. //'பூம் பூம் மாடு' வழிமுறை (முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு) பின்பற்றினால், மனைவிக்கு, இதை முதலில் சொன்னோமா இல்லையா என்று சந்தேகம் வந்துவிடும். அப்பாவி ரங்கமணிகளே - இதை நன்கு மனதில் வாங்கிக் கொள்ளுங்கள்//

    இது உங்களுக்கே ஞாயமா இருக்கா சொல்லுங்க? ஏமாத்தறதும் இல்லாம //அப்பாவி ரங்கமணிகளே// னு வேற சொல்லிக்கறீங்களே... இருங்க போட்டு குடுக்க வேண்டிய எடத்துல போட்டு தரோம்... ஹா ஹா ஹா

    //கட்டை விரல் விதிகள்//
    ஹா ஹா...குட் ஒன்...

    //அப்பாவி ரங்கமணிகளே - உஷார்//
    மறுபடியுமா....? என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்...

    //முதலில் இருப்பது சின்ன வெங்காயம் - பாரு ஒவ்வொன்னும் எவ்ளோவ் பெருசா இருக்கு!. இரண்டாவது இருப்பது பெரிய வெங்காயம். பாரு ஒவ்வொன்னும் எவ்ளோவ் சின்னதா இருக்கு//
    அடப்பாவமே... ரங்கமணிய தப்பி தவறி கூட உங்க ப்ளாக் பக்கம் வர விடக்கூடாது...நீங்க அப்பாவிக? முருகா காப்பாத்து... ஹா ஹா

    பதிலளிநீக்கு
  15. ஹா,ஹா,ஹா,.... நல்ல சமாளிப்பு!

    பதிலளிநீக்கு
  16. குரோம்பேட்டைக் குறும்பன்27 அக்டோபர், 2010 அன்று PM 8:35

    வெங்காய மேட்டர் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். உங்க பங்கு சந்தை ஃபார்முலாவில், K Value என்ன? அதை சொல்லுங்க. நானும் வர்த்தகம் பழகிக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. ராஸா....கலக்கீட்டீங்க போங்க....எனக்கெல்லாம் அந்த சாமர்த்தியம் வரவே மாட்டேங்குது.....அதெல்லாம் அப்படியே வரணும் இல்ல?

    பதிலளிநீக்கு
  18. அடேங்கப்பா! சரியான சமாளிப்புதிலகம்தான்!

    பதிலளிநீக்கு
  19. //எல் கே - டியூஷன் எடுத்துக் கொள்ள, மே(லி)டத்திலிருந்து அனுமதி பெற்றுவிட்டீர்களா?
    //

    avanga oorla illai. varathukulla tution mudichidalam

    பதிலளிநீக்கு
  20. எல்லாம் இருக்க அச்சு அசல் மஞ்சள் பையா உங்களுக்குக் கொடுத்தாங்க. அந்த சீனே காமெடியா இருக்கும்.
    தங்கமணிகளே, இப்படியெல்லாம் வில்லத்தனம் நடக்கறது. யோசிங்கோ.:0)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!