செவ்வாய், 23 நவம்பர், 2010

நாற்பத்து ஏழு வருடங்களுக்கு முன் ...


அது ஆண்டு ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்து மூன்று.
    
அப்போ ரேடியோவில் நான் விரும்பிக் கேட்டவை, சிலோன் தமிழ் (சினிமாப் பாடல்கள்) ஒலிபரப்புகள். 
    
காலை ஏழே கால் மணிக்கு, இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம் வர்த்தக சேவை ஒன்று - இசையமுதம்(?) நிகழ்ச்சியை ஒலிபரப்பும். அந்த நிகழ்ச்சியில், மதுரை சோமு அல்லது மதுரை மணி அய்யரின் பாடல் ஏதேனும் ஒன்று பெரும்பாலும் இடம் பெறும். அவர்கள் பாடிய பாடல்கள் என்ன இராகம் என்ற விவரங்களுடன் ஒலிபரப்புவார்கள். சிலோன் வானொலி நிலையம் ஒலிபரப்பும். அந்தப் பாடல்களைக் கேட்டுத்தான் நான் பாடல்களின் இராகங்களைத் தெரிந்து, சொல்லப் பழகிக் கொண்டேன். அவ்வப்போது அண்ணனும், பாடல்களின் இராகங்களைக் கண்டு பிடிக்க இராகத்தின் பெயரை சொல்லி, அதே இராகத்தில் அமைந்த மற்ற பாடல்கள், சினிமாப் பாடல்கள் எல்லாவற்றையும் பாடிக் காட்டி, (இன்றைய) சாருலதா மணி அவர்களைப் போன்று, என் இசைப் பயணத்தை கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
            
அது ஆண்டு அறுபத்து மூன்று.
மாதம் பதினொன்று.
தேதி இருபத்து மூன்று. 
சனிக்கிழமை. 
காலை மணி ஏழு பதின்மூன்று. 

ரேடியோவில் நீடித்த மௌனம். அந்த மாதிரி நீடித்த மௌனம் வந்தால், உள்ளூர் நிலையத்தார், டில்லி அஞ்சலுக்கு ஏற்பாடு செய்துகொண்டு இருக்கின்றார்கள், சற்று நேரத்தில் செய்தி தொடரப்போகின்றது என்று அர்த்தம். 

அந்த வயதில் எனக்குப் பிடிக்காதது, வானொலி செய்திகள். ஆனாலும், வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும், 'செய்தி வாசிக்கப் போவது யாரு?' என்று பந்தயம் கட்டுவோம். யார் சொன்னது சரியாக இருக்கின்றதோ அவர்களுக்கு, அக்கா செய்த மைசூர் பாகுக் கட்டி ஒன்று எக்ஸ்டிராவாகக் கிடைக்கும்! அன்று வீட்டில் இருந்தவர்கள், நான், என் அக்கா, என் தங்கை ஆகியோர் மட்டும்தான். (அண்ணன் நவம்பர் பதினைந்து தீபாவளிக்காக, எங்கள் அம்மா, அப்பாவைப் பார்க்க நாகை சென்றிருந்தார். இன்னும் இரண்டு நாட்கள் கழித்துதான், அவர் வேலை பார்த்துக் கொண்டிருந்த இந்த ஊருக்குத் திரும்புவார். நாங்கள் கேட்டுக் கொண்டிருந்த ரேடியோ, அண்ணன் செய்த வால்வு ரேடியோ) அரவங்காட்டிலிருந்து, இன்னொரு அண்ணன் வாங்கி வந்திருந்த (மூட்டைப் பூச்சி வாசனை வந்து கொண்டிருந்த) பாதாம் அல்வாவை, சட்டைப் பையிலிருந்து (!) கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சுவைத்துக் கொண்டு, நானும், அக்காவும், தங்கையும் அன்றும் பந்தயம் கட்டினோம். 

யார் என்ன பெயர் சொல்லி பந்தயம் கட்டினோம் என்பதும், அன்று யார் செய்தி வாசித்தார்கள் என்பதும், இப்பொழுது மறந்து போய்விட்டது. 

" ஆகாசவாணி, டெல்லியிலிருந்து ஒலிபரப்பாகி, சென்னை திருச்சி நிலையங்கள் அஞ்சல் செய்யும், அகில பாரத செய்தியறிக்கை. வாசிப்பவர்...--
தலைப்பு செய்திகள்.
அமெரிக்க அதிபர் கென்னடி, சற்று நேரத்திற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்..."

"அடப் பாவமே!..." என்றார் அக்கா. 

"கென்னடி யாரு? நம்ம வீட்டுக்கு இதுக்கு முன்னாடி வந்திருக்கிறாரா?" என்று கேட்டாள் தங்கை. 

தெரிந்து கொண்ட செய்தியை, உடனே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற பள்ளிப் பையன் ஆர்வம் உந்த, வீட்டை விட்டு, வெளியில் வந்தேன். 

முதல் விஜயம், பக்கத்து வீட்டிற்கு. பக்கத்து வீட்டு நாகராஜன், ரேடியோவில் வெங்கடேச சுப்ரபாதம் கேட்டுக் கொண்டு, கையில் ஒரு சிறு புத்தகத்தைப் பார்த்து, ரேடியோவுடன், தானும் சுப்ரபாதம் சொல்லிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும், 'என்ன ?' என்கிற பாவனையில், பார்த்துக் கொண்டே, என் கையில் கரண்டி ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தார். நான் அவர்கள் வீட்டுக்குப் போனால், ஒன்று ஏதாவது இரவல் கேட்கவோ அல்லது முன்பு வாங்கிய காபிப் பொடியை திரும்ப கொடுக்கவோதான் வந்திருப்பேன் என்று நினைப்பவர் அவர். 
    
நான் பெரிய மனுஷ தோரணையில், " கென்னடி செத்துப் போயிட்டார். தெரியுமா?" என்றேன். அவர், கேட்டுக் கொண்டிருந்த ரேடியோவை வால்யூம் குறைத்து விட்டு, "இதெல்லாம் என்ன விளையாட்டு? வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லாதே! உள்ளே லல்லி, குட்டி எல்லோரும் இருக்காங்க - போய் அவங்களோட விளையாடு." என்றார். 

'சரி, நான் சொல்வதை இவர் நம்பவில்லை, இன்னும் கொஞ்ச நேரத்தில், 'தஸ் புஸ்' - இங்கிலீஷ் செய்தி வரும்பொழுது அவரே கேட்டு தெரிஞ்சுக்கட்டும் என்று நினைத்து, நண்பன் வெங்கடாசலத்தைப் பார்க்க, மேலே (அந்த ஊரில் தெருக்கள் கிடையாது. பக்கத்து வீடுகளை விட்டால், ஒன்று 'மேலே' மலை ஏறிப் போகவேண்டும்; இல்லையேல் 'கீழே' மலை இறங்கி செல்லவேண்டும்.) சென்றேன். 

வழக்கம் போல, வெங்கடாசலம் தன்னுடைய தம்பி (ஆமாம் தம்பிதான்!) மணிக்கு பயந்து, அவனுடைய பக்கத்து வீட்டில் ஒளிந்துகொண்டு இருந்தான். அவனிடம் கென்னடி இறந்த முக்கிய செய்தியை சொன்னேன். அவன் உடனே, "அப்பிடீன்னா திங்கக் கிழமை நம்ம ஸ்கூலுக்கு லீவு விடுவாங்களா?" என்று ஆர்வமாகக் கேட்டான். எனக்கு கூட ஸ்கூல் லீவு என்று யாராவது சொல்லி, கேட்க ஆசைதான். இந்த செய்திக்கு இப்படி ஒரு கோணமும் இருக்கிறதா என்று கொஞ்சம் துள்ளலும் மனதில் எட்டிப் பார்த்தது. "ரேடியோவில் அது பற்றி சொல்கிறார்களா என்று கேட்கவேண்டும்" என்று அமர்த்தலாகக் கூறினேன். அதன் பிறகு வெங்கடாசலம், அவனுக்குப் பிடித்த 'சின்ன ஜூலி, பெரிய ஜூலி' கிசு கிசுக்களை சொல்ல ஆரம்பித்தான். அதை வளர விட வேண்டாம் என்று நினைத்து, "ரங்கன் எங்கேடா?" என்று கேட்டேன். வெங்கடாசலம் உடனே, "அவன் எமரால்ட் டாம் வரை வாக்கிங் போயிருக்கான்" என்றான். 

'எமரால்ட் டாம் வரை நானும் வாக்கிங் போகிறேன்' என்று சொல்லி இம்சை அரசன் வெங்கடாசலத்திடம் இருந்து தப்பி, நடந்தேன். தேயிலை செடிகளின் வாசத்தை சுவாசித்துக் கொண்டே நடப்பது நல்ல அனுபவமாக இருந்தது. ஐந்து நிமிடம் நடப்பதற்குள், ரங்கன் எனக்கு எதிரில் வந்துகொண்டு இருந்தான். "டேய் ரங்கா - கென்னடி செத்துப் போயிட்டாராம்டா" என்றேன். 

அவன், " ஆமாம்டா - தெரியும். ரொம்ப வருத்தமா இருக்கு. அதனாலதான் டாம் வரைக்கும் நடந்து போயிட்டு வரேன்" என்றான். 
                    

14 கருத்துகள்:

  1. கென்னடி மரணத்தின் போது யார் எங்கே என்ன செய்துகொண்டிருந்தோம் என்று நினைவு படுத்திச் சொல்வது சென்ற தலைமுறையின் மிகப் பிரபல ஐஸ்ப்ரேகர்; அதற்குப் பிறகு இந்திரா காந்தி; இன்றைய தலைமுறைக்கு செப்.11; அடுத்த தலைமுறைக்காவது வேறே சந்தோச ஐஸ்ப்ரேகர் கிடைக்குமா?

    பதிலளிநீக்கு
  2. முகம் கொள்ளா சிரிப்பும், மகிழ்ச்சியுமாக கென்னடி. வாழ்க்கை மேலும் புரிபடுகிறது.

    பதிலளிநீக்கு
  3. கென்னடி செத்துப் போன போது என் வீட்டில் ரேடியோ கிடையாது. எஞ்சிநீயர் வீட்டு (நேற்றைய) ஹிண்டுவில் பார்த்து அடுத்த நாள்தான் எங்களுக்குத் தெரியும். என் பெயரே அவர்கள் வீட்டில் ‘நேத்திக்கி பேப்பர்’!

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  4. கென்னடியையும் அவரோடு உங்கள் வாழ்வில் கலந்த நினைவலைகளையும் நகைச்சுவை ஊடுருவ அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.அப்போ பள்ளிக்கூடம் லீவு விடலயா !

    பதிலளிநீக்கு
  5. மறக்க முடியாத ஒலி பரப்பு.அப்போதெல்லாம் இந்த மாதிரி விபரீத செய்திகள் எப்பவாவது தான் வரும். நாங்கள் அப்போது திண்டுக்கல்லில் இருந்தோம். பள்ளிக்கு லீவு விட்டதாக நினைவில்லை.ஆனால் அதைத் தொடர்ந்து மணியன் எழுதிய கென்னடியின் கதை தொடராக் வந்தது நினைவிருக்கிறது. கென்னடியின் ஃப்யூனரலின் போது ஜான் ஜான் அம்மா கையைப் பிடித்துக் கொண்டு நின்ற சோகச் சித்திரமும் நினைவில் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. ஹுஸைனம்மாவின் பின்னூட்டம் ஆழம்.

    பதிலளிநீக்கு
  7. அப்பாதுரை சொன்னது போல் எனக்கு நினைவு வரும் நிகழ்வுகள் - இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி இறந்த தருணங்கள். ஹுசைனம்மா கருத்து ஆழம்.
    நல்ல பதிவு. நல்ல பின்னூட்டங்கள்.

    பதிலளிநீக்கு
  8. வானொலியின் முக்கியத்துவம் அன்று. வானொலி, தொலைக்காட்சி ஸ்டிரைக்காம் இன்று. யாருக்காவது தெரியுமா.

    பதிலளிநீக்கு
  9. // தமிழ் உதயம் said...
    வானொலியின் முக்கியத்துவம் அன்று. வானொலி, தொலைக்காட்சி ஸ்டிரைக்காம் இன்று. யாருக்காவது தெரியுமா.//

    ஆமாம். பொதிகை (23/11/10) இன்று காலை முதல் வரவில்லை. தேசிய சானல் தான் எல்லாவற்றிலும் வருகிறது. மீண்டும் ஒளிபரப்பு தொடங்கும்போழுது, வேளுக்குடி கிருஷ்ணன் நிகழ்ச்சி விட்ட இடத்திலிருந்து தொடருமா?

    பதிலளிநீக்கு
  10. இதுவரை படித்திராத வகையில் ஒரு பதிவு. 1963 நான் என்ன பண்ணிட்டு இருந்தேன்னு யோசிச்சேன்... சாரி போன ஜென்ம நினைவு எவ்ளோ முயன்றும் வரலை... அன்றைய நாள் நிகழ்வை கண் முன் கொண்டு வந்த விதம் அருமை... innovative post

    பதிலளிநீக்கு
  11. //அப்பாவி தங்கமணி said...
    ".....1963 நான் என்ன பண்ணிட்டு இருந்தேன்னு யோசிச்சேன்... சாரி போன ஜென்ம நினைவு எவ்ளோ முயன்றும் வரலை...
    //

    Me too felt the same.

    இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பொது, முதலில் இலங்கை வானொலி மூலம் தெரிந்ததது.... நம்ம வானொலிலாம் அவ்ளோ பாஸ்ட்...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!