திங்கள், 31 ஜனவரி, 2011

நேர் செய்திகளும், கோணல் கமெண்டுகளும் + புதிர்க்கதை


* பள்ளியில் முதலுதவி பயிற்சி முகாம்.  

! முதலுதவி? ஆசிரியர்களுக்கா அல்லது மாணவர்களுக்கா?
    
 
* திருப்பதியில் நேபாள அதிபர் தரிசனம்.
! திருப்பதிக்கு வந்து, யாருக்கு தரிசனம் கொடுத்தார் அவர்?


* டிரைவர் குடித்தால் காட்டிக் கொடுக்கும் புதிய கார்.
! அடுத்தது என்ன? டிரைவர் குடித்தால் பங்கு கேட்கும் புதிய கார்?

 
* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நெஸ்டர் ஜோடி சாம்பியன். 
! அதிர்ச்சி தோல்வி அடைந்தவர்கள் யார்?

 
* புதுடில்லியில் பிப்., 1ம் தேதி முதல்வர்கள் மாநாடு.  
! நிகழ்கால முதல்வர்களுடன், வருங்கால முதல்வர்களும், மாஜி முதல்வர்களும் பங்கேற்பார்களா?  (அப்போதான் அது 'மா'நாடு. இல்லையேல் வெறும் நாடு!)



* திருப்பூரில் வெளிநாட்டு வேலை மோசடி.   
! அங்கே மட்டும்தானா? எல்லா ஊரிலும் வெளிநாட்டு வேலை மோசடி இருக்குமே!

 
* ஐகோர்ட்டில் தீ விபத்து.   
! வக்கீல்கள் சூடாக வாதம் பண்ணியிருப்பார்கள் போலிருக்கு!


* வாழைப்பழத்தின் விலை 60 சதவீதம் உயர்வு.  
! விலை எவ்வளவு ஏறினாலும், வழுக்கி, கீழே விழாமல் போய்விடுமா?  என்கிறார், வா ப ரசிகர் ஒருவர்.   
              



**************************
மூதுரை:
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.    
              

அப்பாதுரை: (முன்னுரை)   
                                    ** " -- -- " பற்றி எழுதியிருந்ததைப் படித்தேன். எனக்கு அவர் எழுதிய பல சிறுகதைகள் பிடிக்கும். உங்களுக்கு மறுப்பில்லையென்றால் அவரது இரண்டு கதைகளைச் சுருக்க்க்கி எபி வாசகருடன் பகிர அனுப்புகிறேன்.  முதலில் ஒரு கதை; பிடித்தால் சொல்லுங்கள்; அடுத்தது அனுப்புகிறேன்....


எங்களுரை:
** இந்த இடத்தில் வாசகர்களுக்கு ஒரு கேள்வி: அப்பாதுரை சார் எழுதியிருப்பது, எந்த எழுத்தாளர் பற்றி? சரியாகக் கண்டுபிடிப்பவர்களுக்கு, பாயிண்டுகள் கொடுக்க, அப்பாதுரை சார் ரெடியாம். தெரிஞ்சவங்க சொல்லி, பாயிண்டு தட்டிக்குங்க.

இப்ப கதையைப் படியுங்க.

இப்படியா ஒரு சின்னப் பெண்ணை பயமுறுத்துவாய்?
                                
பார்வதி அம்மாள் வாசலில் தன் மகள் ஜெயா வந்து கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் முகம் மலர வாசல் பக்கம் வந்தாள்.
                                  
"என்னடி அதிசயமா, நீ மட்டும் தனியா வந்திருக்கே?"
            
"உள்ளே வாயேம்மா. எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்"
         
"ரமேஷ் கல்யாணத்துக்குப் புடவை வாங்கப் போகலாம்னு நினைச்சேன்"
                                    
"ஏம்மா, என் தம்பி கல்யாணத்துக்கு புடவை வாங்க என்னைக் கூப்பிட்டிருந்தா நான் வந்திருக்க மாட்டேனா?"
               
"அதுக்கில்லையடியம்மா! உனக்கோ கல்யாணம் ஆகி ஆறு மாசம் தான் ஆறது. கல்யாணத்துக்குன்னு இப்பவே கூப்பிட்டா உங்க வீட்டிலே என்ன நெனைச்சுப்பாளோன்னு பயமா இருந்தது!"
                 
"பயம் என்ன பயம்? இவர்களுக்கெல்லாம் பயந்து பயந்து தான் நாமெல்லாம் இப்படிக் குட்டிச்சுவராப் போறோம்!"
              
"அது சரி, என்ன பொட்டியெல்லாம் கொண்டு வந்துட்டே? கல்யாணத்துக்கு இன்னும் பதினஞ்சு நாள் இருக்கே?"
                
"நான் கல்யாணத்துக்கு வரலம்மா!"
           
"என்னடி இது திடீர்னு?"
      
"ஆமாம், எங்க மாமியார் எப்பப் பார்த்தாலும் தொண தொணன்னு ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கார். எது பண்ணினாலும் குத்தம். விடியக் காலம்பற எழுந்து அத்தனை வேலையும் சாப்பாட்டுக் கடையும் ஆகி ஒரு பன்னிரண்டு மணிக்குப் போய் அக்கடானு படுத்துக்கலாம்னா, பகல்ல தூங்கினா தரித்திரமாம்! தெருவில இருக்கிற அத்தனை பேர் வீட்டையும் நாக்குல நரம்பில்லாம அலசுவா, நான் தூங்கினால் மட்டும் தப்பு. இவரோட எங்கியாவது சினிமாவுக்குப் போனா, "ஏண்டா, உனக்கு சினிமாவே பிடிக்காதே? இப்ப என்ன ஆம்படையாளோட வாரா வாரம் சினிமா?'னு எல்லார் முன்னாலேயும் கேட்பா. அவரோ பயந்தாங்குளி. அம்மாவைப் பத்தி ஏதாவது சொன்னா மூக்குக்கு மேலே கோபம் வந்துடும். நாலு நாள் பேச மாட்டார். அந்த மாதிரி சண்டை வந்தது. உன் வீட்டுக்குக் கிளம்பிப் போன்னு சொன்னார். வந்துட்டேன்."
       
"ஐயையோ! இப்ப உங்க அப்பா வந்து கேள்விப்பட்டார்னா அப்படியே இடிஞ்சு போயிடுவாரே?"
          
"நான் போய் மாடி ரூம்ல இருக்கேன். நீ அப்பாகிட்ட எல்லாத்தையும் சொன்ன பிறகு என்னைக் கூப்பிடு" என்று ஜெயா மாடிக்குக் போய்விட்டாள்.
         
ராமநாதன் உள்ளே வந்து முகம் அலம்பிக் கொண்டு கூடத்தில் உட்கார்ந்தார், பார்வதி அம்மாள் காபி கொண்டு வந்து அவர் முன்னால் வைத்தாள். பெண் வந்திருக்கிற விவரத்தை சொல்லி விட்டு, ஜெயாவைக் கூப்பிட்டாள். 
          ******************* 
மறு நாள் காலை ராமநாதன் மாப்பிள்ளையைப் பார்க்கக் கிளம்பிப் போனார். மாப்பிள்ளையின் ஆபீஸில் பியூன் வந்து அவர் கூப்பிடுவதாக அழைத்துப் போனான். தனியாக ஏ.ஸி அறை. டை கட்டிக் கொண்டு இருந்தான். டெலிபோனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தவன் இவரைப் பார்த்தவுடன் ரிஸீவரைக் கையால் மறைத்துக் கொண்டு அவரை உட்காரச் சொல்லிவிட்டு தொடர்ந்தான். அறை விசாலமாக இருந்தது. சுவரில் ஒரு புரியாத ஓவியம் மாட்டியிருந்தது. உட்காரும் ஆசனம் சொகுசாக இருந்தது. டேபிளுக்குப் பக்கத்தில் அவனும் ஜெயாவும் எடுத்துக் கொண்ட ஒரு சின்ன போட்டோ. பேச்சை முடித்துக் கொண்டு டெலிபோனை வைத்தான்.
      
"சொல்லுங்கோ!" என்றான்.
      
"ஒன்றுமில்லை. உங்களைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்"
      
"பரவாயில்லை, சொல்லுங்கோ!"
             
"ஜெயா சொன்னா - உங்களுக்கும் ஜெயாவுக்கும் ஏதோ மனஸ்தாபமாம்.."
      
"ம்.."
    
"அவ சின்னக் குழந்தை. அவளுக்கு ஒண்ணும் தெரியாது. ஏதாவது தப்பு பண்ணியிருந்தா நீங்க அதைப் பொருட்படுத்தக் கூடாது"
        
"அதெல்லாம் இல்லை. அவ ரொம்ப சண்டை போடறா. நான் இவளுக்குப் பரிஞ்சு ஒரு வார்த்தை பேசினா அம்மா உடைஞ்சு போயிடுவா. அவளுக்குச் சொன்னா புரிய மாட்டேங்குது. நல்ல வேளை, நீங்க நேரா இங்கே வந்தீங்க. அவ கோவிச்சுண்டு போயிருக்கானு எங்க வீட்ல யாருக்கும் தெரியாது. கல்யாணத்துக்காக அம்மாவுக்கு ஒத்தாசையாக் காரியம் பண்ணப் போகிறாள்னு சொல்லித்தான் அம்மாகிட்டே பர்மிஷன் வாங்கினேன். நீங்க ஒண்ணும் கவலைப் படாதீங்க!"
      
"எனக்கு இப்பத்தான் நிம்மதியா இருக்கு மாப்பிள்ளை!". மன நிறைவுடன் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினார் ராமநாதன்.
       
வீட்டுக்குத் திரும்பிய போது, ஹாலில் ரமேஷும் ஜெயாவும் பேசிக் கொண்டிருப்பது கேட்டது. செருப்பைக் கழற்றி விட்டு வாசற் பக்கம் இருந்த அறையிலேயே சிறிது இளைப்பார உட்கார்ந்தார். பெண்ணும் பிள்ளையும் பேசுவது இப்போது தெளிவாகக் கேட்டது.
     
"பொண்ணு நல்லா இருக்காளோ?"
      
"ம்.. இருக்கா"
   
"என்ன கலர்?"
  
"..."
   
"சொல்லுடா, ஏண்டா வெட்கப்படறே?"
            
"எலும்பிச்சம்பழக் கலர்"
            
"ரமேஷ்! நான் ஒண்ணு சொல்வேன், கேக்கணும். அவ கல்யாணமாகி இங்கே வந்தப்புறம் நீ அவளைக் கண் கலங்காமப் பாத்துக்கணும்"
      
"சரி"
   
"சரின்னு சொன்னா மட்டும் போதாது. உறுதியா இருக்கணும்"
   
"ம்"
     
"ஏன்னா, உனக்கு இந்த வீட்டுல அம்மா அப்பா எல்லோரும் இருக்கா. ஆனா அவளுக்கு இந்த வீட்டுல எல்லாமே நீ தான். உன்னை மட்டும் தான் நம்பி அவ இங்கே வரப் போறா. ஒரு வேளை அம்மாவுக்கும் அவளுக்கும் ஏதாவது வாக்கு வாதம் வந்துதுனா கூட, நீ தான் உடனே நடுவுல புகுந்து சமரசம் பண்ணி வைக்கணும். அதுக்குன்னு நீ அவ பக்கமே பேசணும்னு அவசியம் இல்லை, புரிஞ்சுதா?"
    
"ம்"
   
"பிராமிஸ்?"
   
கல்யாண மண்டபத்தின் வாசலில் ராமநாதன் காத்திருந்தார். மாப்பிள்ளையும் அவர் உறவினர்களும் இறங்குவதைப் பார்த்த பிறகு தான் மனதுக்கு நிம்மதியாயிற்று.
    
ஜெயா அவர்களை உள்ளே அழைத்துப் போய் விழுந்து விழுந்து உபசாரம் பண்ணுவதைப் பார்த்துத் தனக்குள் சிரித்துக் கொண்டார். முகூர்த்தம் முடிந்து இலை போட்டவுடன் மாமியாரையும் கணவனையும் உட்கார வைத்து இவளே அவர்களுக்குப் பரிமாறுவதைப் பார்த்த போது, "இந்தப் பெண் ஜென்மமே இப்படித்தான்!" என்று தன்னையும் அறியாமல் சொல்லிவிட்டு, தன்னை யாரவது கவனிக்கிறார்களா என்று நாக்கைக் கடித்துக் கொண்டார்.
   
கல்யாணம் முடிந்து மறு நாள் பிள்ளையையும் மருமகளையும் வீட்டுக்கு அழைத்து வரும் வரை ஜெயாவும் மாப்பிள்ளையும் கூடவே வந்திருந்து விடை பெற்றுக் கொண்டு புறப்பட்ட போது அவருக்குக் கொஞ்சம் தொண்டையைக் கூட அடைத்து விட்டது.
   
மாலையில் மனைவியுடன் கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்து விட்டு, மாடியில் ஈஸிசேரைப் போட்டுக் கொண்டு சுந்தர காண்டத்தை விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தார். கீழே பார்வதியின் குரல் அதிகமாகக் கேட்கவே இறங்கிப் போனார். ஹாலில் பார்வதிக்கு முன்னால் மருமகள் தலையைக் குனிந்து கொண்டு நிற்பது தெரிந்தது. ரமேஷ் வீட்டில் இல்லை.
    
"சமையல் பண்றதுக்கு முன்னால என்ன பண்ணனும்னு என்னைக் கேட்டுக்க மாட்டியோ? நான் எங்கே வெளியூருக்கா போயிட்டேன்? இங்க இருக்கற கோவிலுக்குப் போய் அர்ச்ச்னை பண்ணிட்டு வந்துடறேன்னு சொல்லிட்டுத்தானே போனேன்? அதுக்குள்ள என்ன அவசரம்? இந்த வீட்டிலே வெங்காய சாம்பார் பண்ணவே மாட்டோம். எங்க மாமியார் மாமனார் காலத்துல இருந்தே நாங்க வெங்காயத்தை ஒதுக்கியாச்சு. வீட்டுக்குள்ள வெங்காய வாசனையே கூடாது" என்றாள் மாமியார்.
   
"அவர் கூடச் சாப்பிட மாட்டாராம்மா?" என்றாள் மருமகள்.
   
"அவர் கூடன்னா, அவன் என்ன ஸ்பெஷலா?"
  
"இல்லைம்மா, தெரியாமப் பண்ணிட்டேன்"
  
ராமநாதன் ஹாலுக்கு வந்தார். "பார்வதி, என்ன விஷயம்?"

"பாருங்கோ, இவள் பாட்டுக்கு வெங்காய சாம்பார் பண்ணிட்டாள். என்னைக் கேட்டு விட்டுப் பண்ண மாட்டாளோ?"
   
"சரி, இப்ப ஏன் அதுக்காகக் கத்தறே? அவளுக்கு எப்படித் தெரியும்? இன்னிக்கு உனக்கும் எனக்கும் வெறும் ரசமும் மோரும் போறும். புரியறதா? இதை இத்தோடு நிறுத்திக்க. இன்னொரு தடவை இப்படி சண்டை வந்தால் எனக்கு கோபம் வரும். நீ இலையைப் போடும்மா. இப்ப நானும் இவளும் சாப்பிடறோம். அப்புறம் ரமேஷ் வந்ததும் நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா ஒக்காந்து சாப்பிடுங்கள். எல்லோரும் சாப்பிட்டு முடிக்கிற வரையில் இவள் பட்டினியோட காத்துண்டிருக்க வேண்டாம். அதெல்லாம் போன தலை முறையோட போகட்டும்!".
**********
எங்கள் கமெண்ட்: அப்பாதுரை சார் நீங்க சொன்ன வழியை அப்படியே பின்பற்றி வெளியிட்டுவிட்டோம். பரிசு / பாராட்டு யாராவது கொடுத்தால் எங்களுக்கு. வேறு ஏதேனும் கிடைத்தால் ..... அது உங்களுக்கு!
                      

வெள்ளி, 28 ஜனவரி, 2011

பலசரக்கு


நண்பருக்கு ஃபோன் செய்து, 'பையன் கல்யாணம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?' என்று கேட்டேன்.  "பை திறக்கட்டும் என்றிருக்கிறேன் " என்றார்.  எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. வரதட்சணை அது இது என்றெல்லாம் எதிர்பாராதவர் என்பதால், " என்ன ?" என்று கேட்டேன்.
   
"அதான் சொன்னேனே, தை பிறக்கட்டும்னு ..."  என்றவுடன் தான் நான் முதல் முறை சரியாகக் கேட்டுக் கொள்ளவில்லை என்று தோன்றியது!

*****

"அக்கா என்ன பால்கனி பூரா ஒரேயடியாக அரை குறையாக துவைத்து உலர்த்தி இருக்கீங்க ?" என்று கேட்டபடியே உள்ளே நுழைந்த அங்கிதாவை சற்று வியப்புடன் பார்த்தேன்.  துணி துவைத்ததும் நிஜம் தான், அதை பால்கனியில் காயப் போட்டதும் உண்மைதான்.  ஆனால் அரை குறையாகத் துவைத்தேன் என்று சொல்ல இவளுக்கு என்ன ஆதாரம் கிடைத்தது என்று ஒரு கேள்விக்குறியுடன் அவளைப் பார்க்க "இடக்கரடக்கல் அக்கா" என்றாள்.  பால்கனி வரை போன பின்னர் தான் அவள் சொன்னது எனக்குப் புரிந்தது.
வரிசையாக உள்ளாடைகள் = அரைக்கு உறை சரிதானே .

*****
   
எனக்கு பொருந்துகிறது..........? உங்களுக்கு..............?
              
இப்படிக் கேட்டு எனக்கு ஒரு "நீங்கள் எப்படிப் பட்டவர் " எனப் பிறந்த நாள் அடிப்படையில் ஒரு 'ரைட் அப்' வந்திருந்தது. .
                   
எல்லாருக்கும் பொதுவான பல செய்திகளை பெரும்பாலும் புகழ்ச்சியாகவும் கொஞ்சம் தாளிப்பாக சற்றே நெகடிவ் ஆன செய்திகளையும் போட்டால் எல்லா பலனும் எல்லாருக்கும் பொருந்தும்.
    
என் நண்பர் அழகிரிசாமி (ஐம்பத்தி ஆறு இரண்டு பேர் மூன்று பேர் நாலு பேர் ஆட்டம் கண்டுபிடித்த மேதை!) ரேகை பார்க்கிறேன் என்று உங்கள் கையைப் பிடித்து ஆங்காங்கே கோடு போட்டு ஆகாசத்தைப் பார்த்து தீவிர யோசனை செய்த பிறகு " உங்களுடைய முப்பது வயதில் பெரிய தப்பு செஞ்சு இருக்கீங்க " என்று பலன் சொல்வார். அல்லது " ஒரு தகாத காதல் வசப்பட்டு இருந்தீங்க " என்பது போல ஒரு யூகம் வரும். இதை நீங்கள் மறுத்தால் பக்கத்தில் இருக்கும் யாரும் நம்பப் போவதில்லை.!!    
          
இதைச் சொல்லும் போது இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். மீண்டும் உங்கள் கையைப் பிடித்துக் கொண்டு கோடுகள் போட்டவாறு " பத்துக்குள் ஒரு நம்பர் ஒரு துண்டுப் பேப்பரில் எழுதுங்க " என்று சொல்வார். பிறகு அவர் ஒரு நம்பரை வேறு பேப்பரில் எழுதிக் காட்டுவார். பத்துக்கு ஒன்பது தடவைகள், இரண்டும் ஒத்திருக்கும். அபூர்வமாக அது சரியாக வராத சமயம் " நீங்கள் மைன்ட் ரெசிஸ்ட் பண்ணிட்டீங்க " என்பார். ஒருகால் அதுவும் சரிதானோ என்னவோ!
        
நீங்கள் பிரமித்த ஜோசியம், வரும் பொருள் உரைத்தல், முன்னுணர்வு போன்றவை எல்லாருக்கும் சுவாரசியமாக இருக்கும். அவற்றை பகிர்ந்து கொள்ளலாமே.   

(பல ஆசிரியர்களின் சரக்கும் சேர்ந்த கலவைப் பதிவு)  
      
                     

வியாழன், 27 ஜனவரி, 2011

உள் பெட்டியிலிருந்து ..2011 01

எதிர் எதிரே...


1) பொறுமை கடலினும் பெரிது.. (All good things come to those who wait)

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை! (Time and tide wait for none)

2) வாளின் முனையை விட பேனா முனை கூரானது. (The pen is mightier than the sword) 

பேசிக் கொண்டிருப்பதை விட செயல்படுவது நல்லது. (Action speak louder than words)

3) பல கைகள் சேர்ந்தால் வேலை எளிது. Many hands make the work lighter 
பலர் சேர்ந்து சமைக்க, பாழாகும் பண்டம். Too many cooks spoil the broth!

ஒரே வாய்ப்பு...இயற்கையாக நடி... இரண்டு வாக்கியங்களிலும் என்ன முரண்!
   
கிரிக்கெட் ஒரு ஃபிராடு கேம்தானே...!

** நோ பால் னு சொல்வாங்க... ஆனா கைல பால் வச்சிருப்பாங்க...!

**ஓவர்னு சொல்வாங்க...ஆனா திருப்பித் திருப்பிப் போட்டுகிட்டே இருப்பாங்க..

** பதினோரு பேர் விளையாடற ஆட்டத்துல ஆல் அவுட்னு சொல்வாங்க, ஆனா பத்து பேர்தான் அவுட் ஆகியிருப்பாங்க..

** ஒரு ஓவருக்கு ஆறு பாலும்பாங்க...ஆனால் ஒரே ஒரு பால்தான் வச்சிருப்பாங்க..!

** ஒரு பேட்ஸ்மேன் அவுட்டுன்னா அம்பையர் ஒரு கையைத் தூக்குவார்...சரி, ரெண்டு கையையும் தூக்கறாரே, ரெண்டு பேட்ஸ்மேனும் வெளியே போயிடுவாங்கன்னு பார்த்தா 'ஆறு ரன்னுடா'ங்கறாங்க...!  
              
 'ஷா' சொன்னது சரிதான் போல..!


மூன்று கட்டளைகள்...
(அ) சந்தோஷமா இருக்கும்போது சத்தியம் பண்ணாதீங்க...!

(ஆ) சோகமா வருத்தமா இருக்கும்போது பதில் சொல்லாதீங்க...!

(இ) கோவமா இருக்கும்போது எந்த முடிவும் எடுக்காதீங்க..!

செவ்வாய், 25 ஜனவரி, 2011

செல்லுக செல்லின் பயனிலா செல்!


கடைத் தெருவில் என் நண்பனைப் பார்த்த போது மிகுந்த ஆச்சர்யமேற்பட்டது. நண்பனைப் பார்ப்பதில் இல்லை ஆச்சர்யம். அவன் கடை! புதிதாய் ஒரு கடை வைத்திருந்தான். கடை வைத்திருந்ததில் இல்லை ஆச்சர்யம். என்ன கடை வைத்திருந்தான் என்பதில்தான்...!
        
அவன் திறந்திருந்த கடை 'செல்ஃபோன் சர்விஸ் சென்டர்'. அதுவும் இன்னொரு பெரிய சர்விஸ் கடை, இரண்டு கடைகள் தளளி இருக்கும்போது இவனும் ஒன்று இங்கே...  
    
  ரீசார்ஜ் விளம்பரங்களும் தொங்கின என்றாலும் முன்னால் கண்ணாடிப் பெட்டியில் சர்வீசுக்கு வந்திருந்த அலைபேசிகள் நிறைய கண்ணில் பட்டன.
   
உட்கார்ந்து பந்தாவாக ஈ புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். முன்னால் லென்ஸ் போல திருகாணி போல என்று கண்ணில் பட்டன.
   
என்ன தெரியும் இவனுக்கு இதில் என்று கடை திறந்து விட்டான்? இவனே இவன் செல் சரியாக இல்லை என்றால் என்னிடம் கொண்டு வருவான்... ஏதாவது ஷார்ட் டர்ம் கோர்ஸ் எங்காவது படித்து வந்து விட்டானா?

கேட்டபோது இல்லை என்றான். "அப்புறம் எப்படிடா?" என்றேன்.

"அது ஒண்ணுமில்லடா மாப்பிள்ளே.. உன்கிட்ட என் செல் ரிப்பேர்னு கொண்டு வரும்போது நீ சொல்லுவே இல்லே...அதேதான்..."

"என்னடா செய்வே.."

"வாங்கி வச்சிக்கிட்டு மறுநாள் வரச் சொல்வேன். அதற்குள் அதை சுத்தமாக் கழற்றி துடைத்து திருப்பிப் போடுவேன்...பெரும்பாலும் அதுலயே சரியாயிடும்..மேலும் காசு போட்டு செல் வாங்கினவனுக்கு அதைப் பிரித்துப் பார்க்க தயக்கம் இருக்குடா மாப்பிளே...கடைல கொடுத்து வாங்கிடுவோம் 'நாம ஏதாவது செய்து ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகிட்டா'ன்னு பயப்படறாங்க..நமக்கு என்ன பயம், தயக்கம்? அது நம்ம செல்லா என்ன?"
  
"அடப் பாவி .. .அப்புறம்..அதை நம்பி உன் கிட்ட எப்படிக் கொடுக்கறாங்க...அதுவும் ஒரு பெரிய கடையை பக்கத்துல வச்சிக்கிட்டு..."

"விஷயமே அதாண்டா மாப்பிள்ளே..அவங்க நூத்தைம்பது ரூபாய் சார்ஜ் பண்றாங்க. நான் நூறு ருபாய் சார்ஜ் பண்றேன். அதுவும் நூற்று பதினைத்து இருபதுன்னு சொல்லி நூறுக்கு குறைப்பேன்.."

"சரிடா...அதுல சரியாகலைன்னா..."

"ஒரு வாரம் கழிச்சி வாங்கன்னு சொல்லுவேன்.. அதற்குள் நானே அந்தப் பெரிய கடையில் ரிப்பேருக்குக் குடுத்து வாங்கிடுவேன்... கொஞ்சம் வேலை ஜாஸ்தி இழுத்துடிச்சின்னு சொல்லி எக்ஸ்ட்ரா பணம் வாங்கிடுவேன்.."

"அடப் பாவி பொழைச்சிடுவே போ..."

"அதை விடுறா மாப்பிளே... அபபடி அந்தப் பெரிய கடைல செல்லைத் தரும் போது அவங்க என்ன செய்யறாங்கன்னு பார்த்தேன்..."

"பரவால்லையே...கத்துக்கற ஆர்வம்...சபாஷ்...இப்போ அங்கேருந்து கொஞ்சம் கத்துகிட்டேன்னு சொல்லு.."

"போடா..அவங்களும் இதையேதான் செய்யறாங்க...முடியாத பட்சத்துல ஒண்ணு வேற பெரிய கடைல கொடுத்து வாங்கறாங்க..அல்லது உள்ளே ஏதாவது ஒண்ணைக் கெடுத்துட்டு 'இது இனி வேலைக்கு ஆவாது சார்...ரொம்ப வேலை வாங்கிடிச்சி...வேற புது செல்தான் இனிமே...நம்ம கிட்டயே இருக்கு பார்க்கறீங்களா'ங்கறாங்க."

"அட...அப்போ அவங்க கொடுக்கற அந்த இன்னொரு பெரிய கடைல..." என்று ஆரம்பித்தவன் 'வேண்டாம், இதற்கும் ஏதாவது வியாக்யானம் தயாராக இருக்கும்..அப்புறம் பார்த்திபன் கிட்ட மாட்டின வடிவேலு கதையாகி விடும்' என்று "சரி மாப்பிளே, அப்புறம் வர்றேன்.." என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினேன்.
   

திங்கள், 24 ஜனவரி, 2011

ஜே கே 12

ஜே கே 11 (தொடர்ச்சி)

விழிப்புணர்வு அடைதல் ஒரு மிக மெதுவான முறைபாடாக இருப்பது ஏன்?
 
(நாம் விழிப்புணர்வுக்கு பல தடைகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறோம். விருப்பு, வெறுப்பு, ஆசை, இலட்சியம் இப்படியாக பலப் பல...)

கேள்வி கேட்பவர்: நாம் நம்முடைய பயம் வெறுப்பு இவற்றை வெற்றி கொள்ள வாழ் நாள் போதாது என்று நினைக்கிறேன்.

ஜே கே: நீங்கள் மீண்டும் ஒத்தி வைப்பது என்ற பாணியிலேயே எண்ணமிடுகிறீர்கள்.  வெறுப்பு என்பதன் தாக்கத்தின் ஆழம், அதன் கீழ்மை மற்றும் விளைவு இவற்றைப் பற்றி ஒவ்வொருவரும் உணர்ந்திருக்கிறோமா? நீங்கள் இதை உண்மையில் ஆழமாக   உணர்ந்தால் அப்போது நீங்கள் வெறுப்பு எப்போது முடிவுக்கு வரும் என்று கவலைப் பட்டுக் கொண்டு இருக்க மாட்டீர்கள். ஏனென்றால் அப்போதே அந்தத் தெளிவு  மனிதனுக்கு  உண்மைத் தொடர்பு நிலையையும் ஒத்துழைக்கும் தன்மையையும் அளிக்கக் கூடிய ஒன்றை உருவாக்கிவிடுகிறது.  ஒருவர் உண்மையாக வன்முறையையும்  வெறுப்பையும் அவற்றின்   பலப்பல முகங்களுடன் உணர்ந்திருப்பாராகில் அந்த வன்முறையை, அந்த வெறுப்பை  முடிக்க  ஒரு கால அவகாசம் தேவைப்படுமா என்ன? 

கேள்வியாளர்: இல்லை, இல்லை.  வெறும் கால அவகாசம் மட்டும் போதாது.  அதை முடிவுக்குக் கொண்டு வர ஒரு வழி முறை  தெரிந்திருக்க வேண்டும்.  

ஜே கே: நாட்கள் கழிவதால் மட்டும் வெறுப்பு இல்லாமல் போய் விடாது.  அது சாமர்த்தியமாக மறைக்கப் பட்டு இருக்கும்.  அல்லது கட்டுப் பாட்டுக்குள் இருக்கும்.  எச்சரிக்கையுடன் கண்காணிக்கப் பட்டு வரும். எனினும் பயமோ வெறுப்போ தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கும்.  வெறுப்பை  முடிவுக்குக் கொண்டுவர ஒரு நடை முறை, ஒரு வழிமுறை, ஒரு சாதனம் சாத்தியமா?  அதை அடக்கியாள உங்களுக்கு அது கற்றுக் கொடுக்கும்.  அதைக் கட்டுப்பாட்டில் வைக்க உங்களுக்கு உதவும்.  அதை சமாளிக்க அல்லது வெற்றி கொள்ள உங்களுக்கு வேண்டியிருக்கும் பலத்தை அது அதிகரித்துக் கொடுக்கும். ஆனால் மனிதர்களுக்கு உண்மையான சுதந்திரத்தை அளிக்கக் கூடிய அன்பு என்பதை அது உருவாக்க முடியாது.  வெறுப்பு என்பது நம்மை அழிக்கும் கொடிய விஷம் என்று நாம் உள் மனம் வரை உணராது போனால் எந்த நடை முறையும் எந்த கட்டுப்பாட்டு மையமும் அதை அழிக்க இயலாது.

கேட்பவர்: வெறுப்பு விஷம் என்பதை அறிவார்ந்த நிலையில் உணரகிறோம்தான்.  ஆனால் அதையும் மீறி வெறுப்பை உமிழ்ந்துகொண்டு இருக்கிறோம்.

ஜே கே: இப்படி ஏன் நடக்கிறது? அறிவுநிலையில் அதீத வளர்ச்சியும் ஆசை என்ற விஷயத்தில் இன்னும் ஆதி மனிதனின் (அறிவற்ற) நிலையும் ஒரு சேர இருப்பதுதான் காரணமா?  அழகுக்கும் விகாரத்துக்கும் இணக்கம்  இருக்க முடியாது.  (அதாவது நல்லதும் கெட்டதும் ஒரே சமயத்தில் ஒரே மனித மனத்தில் இணைந்து வாழ முடியாது)  வெறுப்பை முடிவுக்குக் கொண்டு வருவது என்பது எந்த வழிமுறையையும் சார்ந்தது அல்ல. வெறுப்புக்கும் பிடிமானத்துக்கும் இடையில் ஊசலாடுமாறு நாம் நம்மை வளர்த்துக் கொண்ட வழியைப் பற்றிய முழுமையான அறிதல் மட்டுமே வெறுப்பை முடிவுக்குக் கொண்டு வர உதவும்.  பிடிக்கும் பிடிக்காது என்ற பிளவு ஏன் ஏற்படுகிறது?

கேள்வியாளர்: அன்பு இன்மை தான் காரணம்.

ஜே கே: எவ்வளவு விரைவாக எங்கோ கேட்டதை திருப்பிச் சொல்லி திருப்தியடைகிறோம் நாம்!  ஒருவர் சரியாக வாழ்ந்தால் பிளவு வராது,  அறிவின் விளக்கத்தால் வெறுப்பு முடிவுக்கு வரும், பழக்க வழக்கம்தான் இதற்குக் காரணம் தாக்கங்கள் இல்லாதிருந்தால் உண்மையான அன்பு விளக்கம் பெறும் இப்படியாக எங்கோ கேட்டதை, யாரோ சொன்னதை நீங்கள் மீண்டும் மீண்டும் கிளிப்பிள்ளைகளாக திருப்பிச் சொல்கிறீர்கள் என்பதை உணர்கிறீர்களா?  இதற்கு என்ன மதிப்பு இருக்கிறது?  எதுவும் இல்லை.  உங்களில் ஒவ்வொருவரும் இந்தப் பிளவைப் பற்றி தெரிந்திருக்கிறீர்களா?  தயவு செய்து விடையளிக்க அவசரப் படாதீர்கள். விடை எதுவும் தர வேண்டாம்.  உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்று சற்று நிதானமாகப் பாருங்கள்.

இதுவா அதுவா என்ற குழப்பத்தில் நாம் இருக்கிறோம்.  வெறுப்பும் இருக்கிறது அதைக் குறித்த சகிப்பின்மையும் இருக்கிறது.  இந்தப் பிளவு ஏன் ஏற்பட்டது என்பது குறித்த தெளிவும் இருக்கிறது.  பல் வேறு தாக்கங்களால் இம்மாதிரியான மன நிலை ஒன்றை நாம்  அடைந்திருக்கிறோம்.  காரணங்களை ஆராய்வதால் மட்டுமே வெறுப்பினின்று அல்லது அச்சத்தினின்று  விடுதலை வந்து விடாது.  பட்டினிக்குக் காரணம் பொருளாதார மடத்தனம், பேராசை, பங்கீட்டில் தவறு என்று தெரிந்து கொள்வதால் மட்டும் பட்டினி பிரச்சினை தீர்ந்து விடுமா? நீங்கள் உண்மையில் பசியாக இருந்தால் அதன் காரணங்களை அறிவதால் மட்டும் உங்கள் பசி மறைந்து விடுமா?  அது போலவே வெறுப்பு, அச்சம் ஆகியவற்றின் காரணங்களை அறிதல் மட்டுமே அவற்றை முடிவுக்குக் கொண்டுவர முடியாது. அவற்றை எது முடிவுக்குக் கொண்டு வரும் என்றால், தேர்ந்தெடுத்தல் ஏதும் இல்லாத விழிப்புணர்வு தான். வெறுப்பை அடக்கியாளச் செய்யப்படும் எல்லா அறிவு  சார்ந்த  முனைப்புக்களும் முடிவுக்கு வருவது தான்.  

கேட்பவர்: இந்த வெறுப்பைப் பற்றி நாங்கள் அவ்வளவு விளக்கமாக அறிந்திருக்கவில்லை.

ஜே கே; ஒன்றைப் பற்றி அறிந்திருப்பது அதை வளர்த்துக்கொள்ள அல்லது அழித்துவிட நம்மை முனையச் செய்கிறது.  அது பிரச்சினையை மேலும் பலப் படுத்துமே தவிர முடிவுக்குக் கொண்டுவராது.  இந்த நடை முறைகளைப் பற்றி நீங்கள் விருப்பு வெறுப்பின்றி அறிந்திருக்க வேண்டும்.  அமைதியாக, இயல்பாக உணர்ந்திருக்க வேண்டும். இந்த விழிப்புணர்வில் புதிதாக ஒரு சக்தி பிறக்கிறது.  இது எந்த முயற்சியையும்  எந்த விதமான போராட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. இது மட்டுமே  வதைக்கும் பல்வேறு தாக்கங்களிருந்து உங்களை விடுபடச் செய்யும்.
                                

சனி, 22 ஜனவரி, 2011

விட்டுப் போன பதிவு... புத்தகச் சந்தை விஜயம்..!


முப்பத்து நான்காவது (சென்னை) புத்தகக் காட்சி.
கூட்டம் வராத நாளில் ஒரு நாள் விஜயம்... விஜயம் செய்த ஆசிரியர் பார்வையில்:   
        

இந்த முறை வந்த 12 லட்சம் பேர் பார்வையாளர்களில் நாங்கள் மூவரும் கூட...இல்லாவிட்டால் 11,99,997 என்றுதான் கணக்கு வந்திருக்கும் இல்லையா...!

"என்ன பெரிசாக இருந்தாலும் நாங்க டெல்லி பிரகதி மைதானத்தில் பார்த்த காட்சி மாதிரி இல்லை" என்றாள் என் அக்கா பெண்!
 
புத்தகக் கண்காட்சி வரலாற்றில் உச்சத்தைத் தொட்ட விற்பனையாம்... 7.5 கோடி என்கிறது செய்தித் தாள். 
   
ஒவ்வொரு முறையும் வாசகர்கள் வருகை கூடுவதில் அவர்களுக்கு மகிழ்ச்சி. இந்த முறை பள்ளிகளிலிருந்து மாணவ மாணவியர் வருகையும் அதிகமாம்.  
 
நடுவில் வலையுலகப் பதிவர்களை தினமணி தாக்கியிருந்த நாளில்தான் எங்கள் விஜயம்...!
1.76 லட்சம் (நோ..நோ..நீங்கள் நினைப்பது இல்லைங்க...) சதுர அடி அரங்கில் 646 அரங்குகளாம்...புத்தகத் தலைப்புகள் கோடிகளில் சொன்னார்கள். கோடிகளிலா லட்சங்களிலா...25 லட்சம் புத்தகங்கள் விற்றனவாம். 
           
ஸ்பெக்ட்ரம் ஊழல், ராஜராஜன், காலப்பெட்டகம், வரலாற்றுச் சுவடுகள், பொன்னியின் செல்வன், அர்த்தமுள்ள இந்துமதம் போன்றவை அதிகம் விற்ற நூல்களாம்.  
     
நான் இந்த முறை அதிகம் நூல்கள் வாங்கவில்லை. பதிப்பகங்களில் எப்போது வேண்டுமானாலும் போய் புத்தகங்கள் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் ஒரே இடத்தில் இவ்வளவு பதிப்பகங்களையும் பார்ப்பதே ஆனந்தமாக இருக்கிறது. சுஜாதா இல்லாத குறை நன்றாகத் தெரிந்தது. ஆனாலும் அவர் புத்தகங்கள் கிட்டத் தட்ட எல்லா ஸ்டால்களிலும்... விற்றதும் அவர் புத்தகங்கள்தான் நிறைய இருக்கும்...சுஜாதாவினாலேயே புத்தகங்கள் வாங்க வந்தவர்கள் நிறைய இருக்கும். 

  
 சில படங்களைக் கிளிக்கிப் பார்த்தால், அதில் உள்ள கமெண்டுகளை படிக்க முடியும் (வயதான வாசகர்களுக்கு) - அதுக்காக கிளிக்காமலேயே படித்தேன் என்று சில வாசகர்கள் ஃபிலிம் காட்டாதீர்கள்!
 




   
படைப்பாளியும் வாசகர்களும் கலக்க இந்த மாதிரி இடங்கள்தான் நல்ல வாய்ப்பு என்றாலும் கூட அவை சரியாகச் செய்யப் படுவது இல்லை, இன்னும் பரவலாக நன்றாகச் செய்யலாமோ என்று தோன்றுகிறது. 
   
கடைசி ஸ்டாலில் முக்தா சீனிவாசன் இருந்ததாகச் சொன்னார்கள். பார்க்க வேண்டும் என்று நினைத்து மறந்து போன விஷயம்.   
முத்துச்சரம் ராமலக்ஷ்மி முதலில் சொன்ன புத்தகம் மறந்துபோன இன்னொன்று. இப்போது அவர் சொல்லியிருக்கும் நிலா ரசிகன் புத்தகம் கூட வாங்க ஆவல் பெருகுகிறது.  
      
ஒவ்வொரு பாதைக்கும் விவேகானந்தர் பாதை, பாரதியார் பாதை, ஷேக்ஸ்பியர் பாதை என்று பெயரிட்டிருந்தார்கள். சில பதிப்பகங்கள் கேட்ட உடன் முப்பது சதவிகிதம் வரை தள்ளுபடி தந்தார்கள். பதிப்பகங்களே ஸ்டால் வைத்திருக்கும்போது வெறும் பத்து சதவிகிதம் தான் தள்ளுபடி என்பது கஞ்சத் தனமாக இருக்கிறது. உள்ளே சர்க்கரை அதிகம் போட்ட காபி, ஊட்டி ஒரிஜினல் வர்க்கி, சாய் போன்றவை விற்றார்கள். ஆங்காங்கே நடுவில் உட்கார ஓரங்களில் (ஸ்டால் முடிவுகளில்) நீண்ட பெஞ்சுகள் அமைத்திருக்கலாம். நீ....ண்ட தூரம் நடக்கும் போது வரும் கால் வலிக்கு இதமாக இருக்கும். 

   
கிழக்கு பதிப்பகத்தில் நான் கேட்ட புத்தகங்கள் இல்லை. (அவர்கள் தந்த லிஸ்ட்டில் இருந்தவை) பணியாட்கள் நிறைய பேர் இருந்தும் சரியான பதில் இல்லை. ஒரு சீட்டைத் தந்து நிரப்பித் தரச் சொல்வதில் இருந்த ஆர்வம் தேடித் தருவதில் இல்லை...இல்லாதது சுப்ரமணிய ராஜு சிறுகதைகள், ஜென் கதைகள், ஆடியோ புத்தகங்கள்... பணியாளர்கள் நண்பர்களுடன் பேச கேட்லாக்கை கையில் வைத்தபடி அதில் கை வைத்து சுட்டிய படி "அம்மா நல்லாருக்காங்களா...அப்புறம் வந்து பார்க்கிறேன்.." என்று பேசியது திறமை......
    
உயிர்மையில் சுறுசுறுப்பு...ம.பு சுரேஷோடு பேசிக் கொண்டிருந்தார். நடுவில் எஸ்ராவைப் பார்த்து கை குலுக்கச் சென்ற போது, விலக்கி வேகமாக நடந்தார். அப்புறம் போய்ப் பார்த்தபோது மனுஷ்யபுத்திரன், சாருவுடன் சமோசா சாப்பிட்டுக் கொண்டிருந்தார்! 

பிரபஞ்சனைப் பார்த்தோம்; ஞானியுடன்  கை குலுக்கினோம்.

வயதானவர்கள் நடக்க முடியாது என்னும்போது ஒரு வீல் சேர் ஏற்பாடு செய்யலாமோ.. 


 

   
போன வருடம் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் காரர்கள் சாப்பாட்டரங்கம்..இந்த முறை செட்டி நாடு...பொதுவாக எனக்கு செட்டி நாடு சுவை ரொம்பப் பிடிக்கும்..இங்கு அபபடி ஏதும் ஸ்பெஷலாக இருந்ததாக தெரியவில்லை. சரி..சரி... முக்கியத்துவம் புத்தகங்களுக்குதானே...! உணவகத்தில் தனியார் செய்து கொண்டிருந்த ஸ்வீட் மற்றும் கார போளிக்கு அமோக வரவேற்பு... இருபது ரூபாய்.

கூட்டம் இருந்த நாளில் சென்ற ஆசிரியர் எழுதுகிறார்:    

    
நடக்குமிடத்தில், கம்பளத்திற்குக் கீழே, சில இடங்களில் மரப் பலகை, கொஞ்சம் உள் வாங்கியது. என்னுடைய ஓவர் வெயிட் நண்பர் (நல்லவேளையாக) என்னுடன் புத்தகக் காட்சிக்கு வரவில்லை.   
       
நுழைவு வாயிலில், நான்கைந்து கவுண்டர்கள் இருந்தபோதிலும், ஏதேனும் ஒரு கவுண்டரில்தான் அனுமதிச் சீட்டு வாங்க முடிந்தது. பெரும்பாலும் வாங்கியவர்கள், நான்கு, ஐந்து என்று வாங்கினார்கள். வாங்கிய அனுமதிச் சீட்டின் கிழி பாதியில், பெயர், விலாசம், ஃபோன், ஈமெயில் போன்ற விவரங்களை எழுதி நுழைவு வாயிலின் அருகே ஒரு பெட்டியில் போடச் சொல்லி இருந்தார்கள். யாருக்காவது, எதற்காவது அது உபயோகப் பட்டிருக்குமா, விவரங்களை யாராவது சேகரித்திருப்பார்களா என்பதெல்லாம் மனதில் தோன்றிய வினாக்கள். (என்னுடைய நம்பருக்கு குலுக்கல் முறையில் பரிசு ஏதாவது விழுந்திருந்தால் சொல்லுங்கப்பூ!)
            
சிறிய புத்தகக் கடைகளில், கார்ட் பேமெண்ட் என்று சொன்னாலே வெட்கப்பட்டு, வேண்டாம் என்றார்கள். சிலர் இருநூற்றைம்பது ரூபாய்க்கு மேல் வாங்கினால்தான் கார்ட் பேமெண்ட் ஏற்றுக்கொள்வோம் என்றனர். ஆங்காங்கே, கார்ட் தேய்க்கும் எந்திரங்களுடன் சிலர் இருந்த பொழுதும், புத்தகக் காட்சியில் பெரும்பாலான கடைகளில், அட்டை வழி பணம் செலுத்துதலுக்கு ஆதரவு காட்ட முன்வரவில்லை. அதனால், நான் வாங்க தேர்ந்தெடுத்த அதிக விலையுள்ள சில புத்தகங்களை வாங்க இயலவில்லை. எங்கள் ஆசிரியர்களில் ஒருவர், கிரெடிட் கார்ட் ஏற்றுக் கொண்டார்கள் - ஆனால் டெபிட் கார்ட் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறினார். ஆனால், நான் எல்லா கார்ட் பேமெண்ட் வசதியுள்ள கடையிலும், என்னுடைய டெபிட் கார்ட் தான் உபயோகித்தேன். கிழக்குப் பதிப்பகத்தில் வாங்கிய புத்தகங்களுக்கு அழகிய, பெரிய தூக்குப் பை கொடுத்தனர். என்னுடைய டெபிட் கார்டுகளில் ஒன்று காலாவதியாகிவிட்ட விவரம் கூட எனக்கு, கிழக்கு ஸ்டாலில், அட்டை காசாளர் சொல்லித்தான் தெரியவந்தது. எனக்கும், கே ஜி ஜவர்லால் எழுதிய ஜென் கதைகள் புத்தகம் கிடைக்கவில்லை.  

     
சாப்பிட என்று வாங்கியது, முதலில் ஒரு ஆப்பிள் ஜூஸ். அதன் பிறகு ஒரு மணி நேரம் கழித்து, செட்டிநாடு உணவகம் பக்கம் போய்ப் பார்த்தேன். பெரிய க்யூ வரிசை ஒன்றில் பொறுமையாக நின்று நுழைவிடம் வரையிலும் வந்த பிறகு, அங்கே ஒருவர் என்னிடம் கையேந்தினார். 'என்ன' என்று கேட்டேன். 'டோக்கன் எங்கே?' என்று கேட்டார். அடக் கடவுளே - இது டோக்கன் வாங்கியவர்கள் - சாப்பிடுவதற்கு நிற்கும் க்யூவா? - சரிதான், டோக்கன் வாங்க வேறு ஒரு கியூவில் போய் நின்ற பின்தான் எனக்கு ஓர் உண்மை உறைத்தது. கார்ட் பேமெண்ட் இல்லாததால், கையில் கொண்டுவந்த எண்ணூற்றுச் சொச்சம் ரூபாயையும் செலவழித்து புத்தகங்கள் வாங்கிவிட்டேன். கையில் இருபது ரூபாய்கள் மட்டுமே இருந்தது!   
   
வேகமாக வெளிவாசல் வரையிலும் வந்து, ஒரு கடையில் ஒரு வெஜிடபிள் சூப்பும், இரண்டு சமொசாக்களும் சாப்பிட்டேன்.
   
கேரளா ப்ரூட் சாலட் ஸ்டாலில், எல்லா அறிவிப்பு நோட்டீசிலும் இருந்த விலை விவரத்தை கர்ம சிரத்தையாக அழித்து / கிழித்து வைத்திருந்தனர். என்ன விலை நிர்ணயம் செய்திருந்தனர், என்ன விலைக்கு விற்றார்கள் என்று தெரியவில்லை. கடை சொந்தக்காரருக்கே / விற்பனையாளருக்கே/ வாங்கித் தின்றவர்களுக்கே வெளிச்சம்.


புத்தகக் காட்சியில், கழிப்பிடப் பகுதி, நமக்கு பழைய கற்காலத்தைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது.
                  











  
                                      (இரண்டு ஆசிரியர்கள்தான் புத்தகங்கள் வாங்கினார்களா? ஐந்தில் ஒருவர்தான் புத்தகம் வாங்காதவர். இன்னும் இருவர் வாங்கியவை, வேற்று மொழிப் புத்தகங்கள். அதனால் இந்தத் தமிழ்ப் பதிவில் நாங்க போடவில்லை. அவங்க வாங்கிய புத்தகங்களிலிருந்து ஏதேனும் மொழி பெயர்ப்பு செய்து அடுத்த புத்தகக் காட்சிக்குள் எழுதுவார்கள் என்று எதிர் பர்ர்க்கின்றோம்.)
                    

புதன், 19 ஜனவரி, 2011

ஜே கே 11 (ஜே கே மீண்டும்!)


விழிப்புணர்வு அடைதல் ஒரு மிக மெதுவான முறைபாடாக இருப்பது ஏன்?
   
(மன) வேதனை என்பது எண்ணம் / ஆசை ஆகியவற்றின் தொகுப்பின் இருப்புக்கு ஒரு அடையாளமாக இருக்கிறது.  வெவ்வேறு நடைமுறைகள், பலவாறான கற்பனைகள் வாயிலாக மறத்துப் போகச் செய்து இந்த வேதனைகளை வெற்றி கொள்ள மனம் முற்படுகிறது. தானே ஏற்படுத்திக் கொண்ட இந்த குறுகிய எல்லைகளால் மனம் மீண்டும் மீண்டும் தடுமாற்றம் அடைந்து மேலும் மேலும் வித்தியாசமான வழிமுறைகளை பரீட்சை பார்த்து விளக்கத்தை இழந்து  ஏதோ ஒரு பாதையில் அல்லது நம்பிக்கையில் தன்னை முற்றிலுமாக ஒப்படைத்துக் கொண்டு விடுகிறது. இந்த மாதிரியான ஒரு நிலையை பலரும் தம் மிகப் பெரிய சாதனையாக எண்ணிக்கொண்டு விடுகிறார்கள். பழக்க வழக்கங்களை வெற்றி கொள்கிற  உறுதியை மட்டுமே வளர்த்துக் கொண்டோமானால் அந்த உறுதி நிதானமற்றதாகவும் மீண்டும் மீண்டும் செயல்படுவதாகவும் ஆகிவிடுகிறது. பிரமைகளைத்  தாண்டிய  செயல்பாட்டை அறிவதற்கு முன்னால் பழக்கத்தின் காரணமாய் வரும் செயல்பாடு அல்லது லட்சியங்களை முன்வைத்துச் செய்யும்  செயல்பாடு  இவற்றை  நன்கு  அறிந்து கொண்டாக வேண்டும்.  ஏனென்றால் உண்மை என்பது நிதரிசனாக என்ன இருக்கிறது என்பதை அறிவதில் உறைகிறது.  விழிப்புணர்வு என்பது எந்த ஒன்றையும் குறித்து ஆழமாக எண்ணமிடுவதில் இல்லை.  ஆசையின் பல்வேறு பிளவுபடுத்தும்   சக்திகளையும் ஒருமுனைப்படுத்தி அறிவதில் மட்டுமே இருக்கிறது.

 (கூட்டத்திலிருந்து ஒரு வினா:)
விழிப்புணர்வு பெறுவதென்பது  ஒரு மெதுவான நிதானமான விஷயமா? 
ஆர்வம் தீவிரமாக இருக்கும்போது விழிப்புணர்வு முழுமையாக இருக்கிறது.  மனம் என்பது சோம்பேறியாகவும் அச்சம் காரணமாக ஊனமடைந்தும் இருந்தால் விழிப்புணர்வு முனைப்பு குறைந்து மெதுவாக வளர்ச்சி பெறுவதாக ஆகிவிடுகிறது. அப்படியான மனம் இருக்கும்போது அங்கே விழிப்புணர்வு ஏற்படுவதில்லை.  அதற்கு பதிலாக தடுப்புச் சுவர்களை கட்டிக் கொள்ளும் ஒரு மனப் பழக்கம் ஆகிவிடுகிறது.  நம்மில் பலரும் இப்படியான தடுப்புச் சுவர்களைக் கட்டி வைத்துக்  கொண்டு இருப்பதால் விழிப்புணர்வு என்பது ஒரு மெதுவான இயக்கம் ஆகவும் ஒரு படிப் படியான வளர்ச்சியாகவும் நம் சோம்பேறித் தனத்துக்கு திருப்தி அளிப்பதாகவும் இருக்கிறது.  இந்த சோம்பல் நிலையில் இருந்து கொண்டு நாம் ஒத்தி வைப்பு கொள்கைகளை வகுத்துக் கொள்கிறோம் -- இப்போது இல்லை, காலக்கிரமத்தில்./.  ஞானம் என்பது படிப் படியாகத்தான் வரும் / பல ஜன்மங்கள் எடுத்தாக வேண்டி இருக்கும் இப்படியாக பலவும்.  இப்படியெல்லாம் நாம் நமது சோம்பேறித் தனத்தை நியாயப் படுத்திக் கொண்டும் நம் வாழ்வு முறையை அதற்கொப்ப சரி செய்து கொண்டும் காலம் கழிக்கிறோம்.
                                     

செவ்வாய், 18 ஜனவரி, 2011

நடைபாதை புத்தகக் கடை (அ)நியாயங்கள்

முப்பத்து நான்காவது புத்தகக் காட்சி நடந்த அரங்கத்திற்கு வெளியே, நடைபாதை புத்தகக் காட்சி.

சமீபத்தில், (இரண்டாயிரத்துப் பத்தில்) அண்ணாசாலையில், நடைபாதை புத்தகக் கடை ஒன்றில், (எல் ஐ சி அருகே) JOE GIRARD எழுதிய HOW TO SELL YOURSELF என்ற புத்தகம், வேறு ஒரு புத்தகம் விலை விசாரிக்கும் பொழுது, கடை போட்டிருக்கும் அய்யப்பசாமி, நூறு ரூபாய்க்கு எனக்கு விற்றார். அட பரவாயில்லையே, புத்தகமும் புதியதாக உள்ளது, விலையும் குறைவாக உள்ளதே என்று சந்தோசப் பட்டு வாங்கி வந்தேன்.

அந்தப் புத்தகத்தில், பக்கம் எண் 114 க்குப் பிறகு, பக்கம் எண் 147 இருக்கின்றது. மொத்தமாக முப்பத்திரண்டு பக்கங்கள் காணோம்!

பாடம்:
* பழைய புத்தகக் கடையில், புதிய புத்தகங்களை வாங்கக் கூடாது.

* அப்படி வாங்கினாலும் எல்லா பக்கங்களையும், எச்சில் தொட்டு எண்ணிப் பார்த்து வாங்க வேண்டும்.

* நடைபாதை கடைக்காரரின் நடை, உடை, பாவனைகளை அப்படியே நம்பக் கூடாது. 
                           

சனி, 15 ஜனவரி, 2011

கிஷோர்...கிஷோர்...2

கிஷோர் பாடினால் நாம் ரசிக்கலாம்...நாம் பாடினால் யார் ரசிப்பார்...! (தத்துவம்..!)

ஆந்தி படத்தில் அத்தனை பாடலும் அற்புதமான பாடல். ஆந்தி என்றால் புயல். அரசியல்வாதி மனைவியைத் திருமணம் செய்யும் கணவனாக சஞ்சீவ் குமார்.
"எங்கிருந்து வருகிறோம்...எங்கு போகிறோம்..இந்தத் தகவல் நமக்குத் தெரிவதில்லை.."
குல்சாரின் அருமையான வரிகள்...அரைகுறையாகப் புரியும்போதே இவ்வளவு ரசிக்க முடிகிறதே...அனைத்தும் புரிந்தால்...?


இதே படத்தில் வாழ்வில் பல சங்கடங்களைச் சந்தித்து பின்னர் மனைவியாக இருந்தாலும் நெருங்க முடியாத உயரத்துக்குச் சென்றதால் பிரிந்த மனைவியை சந்திக்கும் போது பழைய நினைவுகளில் மனம் பாடும் (படும்) பாடலாக வரும் பாடல். என்ன பாடல்...என்ன சுகமான ட்யூன்..? லதாவின் குரலுக்குதான் என்ன இனிமை? கிஷோருக்கு கொஞ்சம்தான் சான்ஸ். ஆனால் அவர் பாடும் சரணத்தை நான் இப்படி அர்த்தப் 'படுத்தி' வைத்திருக்கிறேன்..."இரவை நிறுத்தி விடு...நீ என்னுடன் இருக்கும் (பேசும்) இந்த இரவின் சந்திரன் மறையவே கூடாது..இரவு முடியக் கூடாது.."


ஆப் கி கசம் பாடல்கள் அனைத்தும் மிக இனிய பாடல்கள். ஆர் டி பர்மனின் அற்புதங்கள். முதலில் ஒரு காதல் பாடல்.கிஷோர் லதாவின் மிக இனிய பாடல்களில் ஒன்று.


அழகிய மும்தாஜ்..

இதே படத்தில் மனைவியை சந்தேகப் பட்டு அவளைப் பிரிய நேரிட்டு வாழ்வைத் தொலைத்த நாயகன் "வாழ்வின் பயணங்களில் உழன்று" பாடும் பாடல்...
அழகிய ராஜேஷ் கன்னா படிப் படியாக வயதாகி பிச்சைக் காரன் தோற்றத்துக்கு வருவதைப் பாருங்கள்...


சந்தித்து விட்டுப் பிரிவது காதலில் ரொம்பக் கஷ்டமான விஷயம்..."போய் வருகிறேன் என்று மட்டும் சொல்லாதே.." என்று ஒரு பாடலே பாடி விடுகிறான் நாயகன்.."கபி அல்விதா நா கெஹ நா..." என்று உருகும் கிஷோர் குரல்...காட்சி கொஞ்சம் திராபை. பாடலைக் கேட்கத் தவறாதீர்கள்! சல்தே சல்தே படத்தில்...பப்பி லஹரி இசையில்.
"எங்கு போனாலும் எனது இந்தப் பாடலை நினைவில் வை...அழுகையிலும் சிரிப்பிலும் நீ போதும் எனக்கு காதலில்..காதலித்துக் கொண்டே நாம் எங்காவது காணாமல் போய் விடுவோம்..." என்றெல்லாம் இந்தப் பாடலை கொச்சையாக மொழி பெயர்க்கலாம். காட்சியை மறந்து குரலிலும் பாடலிலும் கவனம் வைத்து பாடல் கேளுங்கள்..






புதன், 12 ஜனவரி, 2011

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்.

                
இங்கே கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு, விடைகள் எல்லாமே மூன்றெழுத்து தான். சில விஷமக் கேள்விகளும் உள்ளன
:: எங்கள் (கொழுப்பு) ஆசிரியர். ::

1) இவர் ஒரு கிரிக்கட் ஆட்டக்காரர். இவருக்கு பெரிய தாடி உண்டு. இவர் பெயரில் ஒரு நடிகையும் இருக்கின்றார். (அவருக்கு தாடி கிடையாது)

2) கையில் ஒரு பைசா காசு இல்லை என்றாலும், இதை நீங்க வாங்கலாம்.

3) நீங்கள் இதால் ஒருவரை ஷூட்செய்தால், ஷூட் செய்யப்படுபவர், புன்னகை புரிவார்.

4) 'முஷாஃபெரி கானா, என் முத்து முத்து மைனா' என்ற இலக்கிய நயம சொட்டும் பாடல் இடம் பெற்ற படத்தின் பெயர் என்ன?

5) இதில் அடுத்த எண் என்ன?  0, 1,  01, --

6)  (three cubed + three squared) = how many dozens?

7) பல்லு இருக்கும் ஆனால் கடிக்காது.

8) பல்லு இருக்காது ஆனா கடிக்கும்.

9) --- என்றால் பல்லு இருக்காது

10)  மூன்றெழுத்து வார்த்தை. வித்தையிலே ஓரெழுத்து, தகரத்தில் ஓரெழுத்து, கப்பலிலே ஓரெழுத்து. அது, எது?

பதியுங்க - பதியுங்க - முதலில் வருகின்ற ஒவ்வொரு சரியான பதிலுக்கும் நூறு பாயிண்டுகள்.    
                

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

இசை விழா இனிதே முடிந்தது!

     

                  








  
ஒவ்வொரு வருடமும், டிசம்பர் முப்பத்து ஒன்று முடிந்தவுடனே இசைவிழா ஆர்வம் வெகுவாகக் குறைந்து விடுகிறது.  இது மீண்டும் தழைக்க திருவையாறு (தியாகராஜ ஆராதனை) விழா ஆரம்பமாக வேண்டும்.  டிசம்பர் 31 இசை கேட்கும் ஆர்வம் குறைய என்ன காரணம்?  யோசித்துப் பார்த்ததில், டிசம்பர் மாதம் முழுவதும் நிறைய கச்சேரிகள் கேட்ட களைப்பு என்பதுதான் முழு முதல் காரணம் என்று தோன்றுகிறது.

உண்மையில் திருவையாறு உத்சவம் கூட முன்பு போல் இல்லை என்ற எண்ணம் பலமாக இருக்கிறது. இதற்கு என்ன காரணம்?  நிறைய பேர் பாட வந்துவிட்டார்கள்.  அதனால் தரம் பின்னுக்குத் தள்ளப் பட்டுவிட்டது.  மேலும் தொலைக்காட்சியில் எல்லாம் பார்க்க முடிகிறது என்பதால் ஆர்வம் சற்று தளர்ச்சியடைந்து விட்டதாகத் தோன்றுகிறது.  மேலும் மூச்சுத் திணறும் அளவுக்குக் கூட்டம் கூடுவதும் சாப்பாட்டுக்கு சிரமப் படுவதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இம்முறை சென்னை இசை விழாவில் சீனியர்கள் வரிசையில் சஞ்சய் சுப்ரமணியம், மும்பை ஜெயஸ்ரீ, ரஞ்சனி காயத்ரி ஆகியோர்களை மட்டுமே கேட்க முடிந்தது.  எல்லாமே நிறைவை அளித்த நல்ல இசை நிகழ்ச்சிகள். குறிப்பாக சஞ்சய் அற்புதமான கற்பனையுடன் பாடி அனைவரையும் கவர்கிறார்.    
  
 மியுசிக் அகாடமியில் இசை நிகழ்ச்சியை விடியோ மூலமாக அருகில் இருக்கும் சிறு அரங்குக்கு அனுப்பி அதற்கு ஐம்பது ரூபாய் டிக்கெட் வைத்து விற்றனர். அதுவும் பெரிய நன்மையாகவே இருந்தது.  எனக்கு முன்னூறு, ஐநூறு என்று பணம் கொடுத்து அனுமதிச் சீட்டு வாங்க மனம் வருவதில்லை.  என் வரையில் நூறு ரூபாய்தான் லிமிட். எனினும் சில கச்சேரிகளுக்கு இரு நூறு ரூபாய் டிககட் வாங்கியது உடன் வந்த மகள் உபயம்.

பாரத் சுந்தர், பிரசன்னா வெங்கடராமன் ஆகியோர் இந்த ஆண்டு நட்சத்திர பாடகர்கள்.  மிக நன்றாகப் பாடினார்கள்.  நிஷா ராஜகோபாலன், அம்ருதா முரளி ஆகியோர் பாட்டும் நன்றாக இருந்ததன. மேலும் ஓர் இளம் தாரகையைக் குறித்து ஒரு நாளிதழில் மிகவும் சிலாகித்து எழுதியிருந்ததைப் படித்ததன் பேரில் ஆர்வமாகச் சென்றேன்.  துரதிருஷ்டவசமாக அன்று கச்சேரி எடுபடவில்லை.  அது ஒரு தனி நிகழ்வாக இருக்கலாம் என்பதால் அவரது பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை.

பெரும்பாலான இளம் பாடகர்கள் கச்சேரிகளில் பக்க வாத்தியம் ஒரே இரைச்சலாக இருந்தது ஒரு துரதிருஷ்டம்.

@ @ @ @ @ @ @ @ @ @ 
(செவிக்கு உணவு இல்லாத போது - அல்லது சரியாகக் கிடைக்காத போது - சிறிது அல்லது பெரிது வயிற்றுக்கும் ... க்கும் ! ....)   


இம்முறை காண்டீன் போட்டிகளில் வெற்றி பெற்றது (என்னைப் பொறுத்தவரை) நாரத கான சபா.  கண்டனத்துக்கு ஆளாவது அகாடமி.  ஆறுதல் பரிசு பார்த்தசாரதி சபா மற்றும் மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ். 



 மியூசிக் அகடமியின் மினி மீல்ஸ்! எல்லா நாட்களிலும் ஒரு கப் தயிர்சாதம் உண்டு. ஸ்வீட், சிப்ஸ் கூட அப்படியே. ஆனால், மற்றது மட்டும் ஒவ்வொரு நாளும் மாறும். சாம்பார் சாதம் / எலுமிச்சை சாதம் / புளியோதரை/  ரசம் சாதம் / காரக்குழம்பு (ஆக்சுவலா இந்தக் காரக் குழம்பு சாதம் காரமாகவே இல்லை - புளியோ புளி எனப் புளித்தது!) 
  
ஒரு முழுச் சாப்பாட்டின் விலை, மை ஃபைன் ஆர்ட்ஸில் எண்பது, அகடமியில் நூறு, பார்த்தசாரதி சபா காண்டீனில் நூற்றுப் பத்து. இந்த வகையில், பார்த்தசாரதி சபா மற்ற எல்லா காண்டீன்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது! மதுரை மணி அய்யர் பாட்டு போல மவுண்ட் மணி ஐயர் கேட்டரிங் போலிருக்கு! அகடமியில் மினி மீல்ஸ் ரூபாய் ஐம்பதுக்குக் கிடைத்தது. பாட்சா காண்டீனில் ஒரே சாப்பாடுதான். ஆனால் தரம் உயர்வாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. எல்லா சபா காண்டீன்களிலும், அருகில் உள்ள ஐ டி கம்பெனிகளிலிருந்து மதியச் சாப்பாட்டிற்கு பலர் படை எடுத்து வந்து இரசித்துச் சாப்பிட்டுச் சென்றார்கள். அவர்களில் யாரும் பாடகர்கள் இருந்த மேடைப் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை!