வியாழன், 6 ஜனவரி, 2011

விடியும் வரை காத்திரு




மரிஷ்காவின் பூதங்கள் படித்து விட்டு தூங்கப் போனேன். அப்போதே மணி பதினொன்றரை இருக்கும். காலை முதல் எங்கெங்கோ சுற்றி விட்டு வந்த களைப்பு ஒரு பக்கம் மரிஷ்கா மகன் கவலை ஒரு பக்கம் என்று எப்போது தூங்கினேன் என்று தெரியாது.

திடீரென கேட்ட சத்தத்தில் விழித்துக் கொண்டேன். நாராசமாய் இருந்தது சத்தம். 'சட்'டென தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டதால் அது என்ன சத்தம் என்று கண்டு பிடிக்க சில வினாடிகள் பிடித்தன.

காலிங் பெல் சத்தம். இடை விடாமல் தொடர்ந்து...வெறுப்பேற்றும் வண்ணம் வீறிட்டபடி இருந்தது.

நான் எழுவதற்குள் வீடே எழுந்து விட்டது.

மனைவி ஒரு புறம் எழுந்து அலங்க மலங்க விழிக்க, மகன்கள் வாரிச் சுருட்டி எழுந்தார்கள்... அடுத்த அறையில் படுத்திருந்த அப்பாவும் எழுந்து வந்து விட்டார்.

"என்னடா அது...யாரது"

மணியைப் பார்த்தேன். இரவு ஒரு மணி.

இந்த நேரத்தில் யார்...? கதவைத் திறக்கச் சென்றேன்.

"நில்..! அவசரப் பட்டு கதவைத் திறக்காதே..." அப்பா அலறினார்.

"ஏன்? என்ன ஆயிடும்?" பெரியவன் கேள்வி கேட்டபடி கதவைத் திறக்க விரைந்தான். காரணம் சத்தம் சகிக்க முடியாதபடி இருந்தது.

"வேணாண்டா...நில்லு...மணியைப் பாரு..இது ஒருவகை டெக்னிக்...அவசரப் பட்டு திறந்து மாட்டிக்காதே..." என்ற அப்பா,

"ஏய்...யாரது..." என்று இரைந்தார். "யாராய் இருந்தாலும் கதவைத் திறக்க மாட்டோம்...யாருன்னு மரியாதையா குரல் கொடுங்க..."


பதில் இல்லை. சத்தம் கர்ண கடூரமாய் இருந்ததால் எல்லோருமே காதைப் பொத்திக் கொண்டோம்.

பெரியவன் செல்லை எடுத்து எதிர் வீட்டு நம்பருக்கு ஃபோனைப் போட்டான்.

"அங்கிள்...தூங்ககறப்போ எழுப்பிட்டேனா... ஸாரி அங்கிள்...எங்க வீட்டு காலிங் பெல்லை யாரோ விடாம அடிக்கிறாங்க...யாருன்னு பாருங்க அங்கிள்...பயமா இருக்கு"

"................."

"என்னடா என்ன சொல்றார்.." என்றேன், பையனின் சமயோசிதத்தை மனதுள் மெச்சியபடி...

"ஆண்ட்டி அங்கிளை கதவைத் திறக்காதங்கராங்கப்பா... பயப்படறாங்க..."

"எதிர் வீடுதானே..என்ன பயமாம்..பார்த்தால் என்னவாம்.." என்றாள் மனைவி!

காலிங் பெல் சத்தம் 'சட்'டென நின்றது.

மயான அமைதி.

"யாரு"

"ஏங்க... யாருங்க வெளில...பதில் கொடுங்க..."

"போலீசைக் கூப்பிட்டிருக்கோம். பதில் சொல்லிடுங்க.." இது சின்னவன். எல்லோரும் அவன்மேல் பாய்ந்து அவன் வாயை மூடினோம்.

செல் அடித்தது. பயத்துடன் எடுத்தால், எதிர் வீட்டுக்காரர்.

"யாருமே இல்லையே சார்! யாரையும் காணோமே..பெல் சத்தம் நின்னுடுச்சி போலேருக்கே.."

"அப்படியே வெளில பாருங்க.." என்றேன்.

"ஐ...நானே கொஞ்சமா கதவைத் திறந்து 'க்ரில்'லைத் திறக்காம பார்த்தேன்...எனக்கு மட்டும் ஜாக்கிரதை இருக்காதா சார்..?"

ஜாக்கிரதையா...பயமா...

செல்லை வைத்து விட்டு வீட்டில் உள்ளவர்களிடம் சொன்னேன்.

"ஐயோ...இது நிச்சயம் ஆவியோட வேலையாதான் இருக்கும்...நான் டீவில பார்த்துருக்கேன்...ராத்திரில போடுவான்.... 'நம்பினால் நம்புங்கள்'னு போடுவான் பார்த்துருக்கேன்..." என்றான் சின்னவன்.


"அட இவன் ஒருத்தன்...ஏதாவது சொல்லி குழப்பிகிட்டு...ஏண்டா நீ வேற...!" என்று சொன்னாலும் எல்லோருக்கும் சற்று உதைப்பாகவே இருந்தது.

இப்போது மின்சாரம் வேறு 'சட்'டென நின்று போனது. இருளும் அமைதியும் ஒரு சேர தாக்கியது.

"நம்ம வீட்டுல மட்டும்தான்பா கரண்ட் போய் இருக்கு...ஜன்னல் வழியாப் பாரு..எதிர் வீட்டுல எல்லாம் இருக்கு.."

ஆமாம். ஏதோ நடக்கிறது. யாரோ ஏதோ திட்டம் போட்டு ஏதோ செய்கிறார்கள்.

"போலிசுக்கு ஃபோன் செஞ்சுடலாமா..."

"லோகல் ஸ்டேஷன் நம்பர் என்ன.."

"தெரியாதே..."

"அட..இதெல்லாம் தெரிஞ்சி வச்சிருக்க வேணாமா... நூறுக்கு போடலாமா..?"

"என்னன்னு சொல்லுவே...பேய் பெல் அடிச்சுதுன்னா..?"

"பேய்னு எப்படிச் சொல்ல முடியும்? எவனாவது அடிச்சிட்டு ஒளிஞ்சு நிப்பான்...கதவைத் திறந்த உடனே ஒரே போடு..." பெரியவன்.

செய்வதறியாமல் எல்லோரும் கூடி நின்றோம். பயமாகவும், அந்த அமைதியில் அமானுஷ்யமாகவும் உணர்ந்தோம்.

உறவினர் யாருக்காவது தொலை பேசி சொல்லலாமா என்றால் யாரையும் எழுப்ப பாவமாக இருந்தது.

தூக்கமும் வரவில்லை. எதிர் வீட்டுக் காரரை மறுபடி எழுப்ப தயக்கமாக இருந்தது. மறுபடி பெரியவன் ஒரு காரியம் செய்தான். இந்த முறை மேல் வீட்டுக் காரருக்கு செல்லில் தொடர்பு கொண்டான். ஏதோ கேட்டு விட்டு வைத்து விட்டான்.

"என்னடா.."

"எதிர் வீட்டு அங்கிள் எல்லோருக்கும் ஃபோன் செய்து விஷயம் சொல்லிட்டாராம். எல்லாரையும் கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கிட்டு உள்ளே பத்திரமா இருக்கச் சொன்னாராம்.."

மறுபடி ஏதாவது சத்தம் வருகிறதா என்று கவனமாக பார்த்துக் கொண்டிருந்தோம். கிசுகிசுப்பாகப் பேசிக் கொண்டிருந்தாலும் சிறு சலனங்களுக்கு நிறுத்தி கவனமாக ஆராய்ந்தோம்.

"என்னமோ வாடைப்பா..." சின்னவன்.

எனக்கும் முன்னாலேயே தெரிந்திருந்தது. பயமுறுத்த வேணாம்னு சொல்லாமலிருந்தேன்.

"ஏதோ பொசுங்கற வாடை.." பெரியவன்.

"கொள்ளிவாய்ப் பேயா இருக்குமோ.." அப்பா நேரம் காலம் தெரியாமல் கேட்டார். நகைச் சுவையாம்.

காலை வரை விழித்திருந்தோம். ஒரே இடத்தில் இருந்தோம்.

விடிந்து வெளிச்சம் வந்தது. எதிர் வீட்டுக் காரர் செல்லில் பேசினார்.

"சார்! யாரும் இல்லை..தைரியமா வெளில வாங்க..."

வெட்கத்துடன் வெளியில் வந்தோம்.

வெளியே...

காலிங் பெல் ஷார்ட் ஆகி புகைந்திருந்தது.

படங்கள் : நன்றி கூகிள்.

28 கருத்துகள்:

  1. //"அட..இதெல்லாம் தெரிஞ்சி வச்சிருக்க வேணாமா... நூறுக்கு போடலாமா..?"

    "என்னன்னு சொல்லுவே...பேய் பெல் அடிச்சுதுன்னா..?" //

    ஹா.. ஹா.. ஹா..

    இருந்தாலும் எலெக்ட்ரிக் காம்போனென்ட் பழுதடைந்திருக்கும் என என்னால் ஊகிக்க முடிந்தது..

    முன்னர் அண்ணன் 'கௌதமன்' வீட்டின் போர்டிகோவில் இருந்த காரின் கீழ் பார்த்தவண்ணம், ஒரு தெரு நாய் இரவில் குறைப்பது பற்றி எழுதிய பதிவு (இங்கதான்) நினைவு வந்தது..

    பதிலளிநீக்கு
  2. இப்படி பயமுறுத்திட்டீங்களே!

    பதிலளிநீக்கு
  3. விறுவிறுப்பாக இருந்தது. காலிங் பெல் ஷார்ட் ஆனால் பெல் இடைவிடாமல் அடிக்குமா? இல்ல இடைவிடாமல் (எதுவோ) அடிச்சதால் ஷார்ட் ஆச்சா?

    பதிலளிநீக்கு
  4. நகைசுவையா முடிப்பிங்கன்னு ஊகிக்க முடிந்தது.

    பதிலளிநீக்கு
  5. அப்பாஜி உங்களை ஒரு வழி பண்ணியிருக்கார்ன்னு மட்டும் தெரியுது !

    பதிலளிநீக்கு
  6. குரோம்பேட்டைக் குறும்பன்7 ஜனவரி, 2011 அன்று PM 6:19

    ஸ்ரீராம் நேற்று இரவு உங்க வீட்டுக்கு வந்து காலிங் பெல் அடிச்சுகிட்டே இருந்தேன்; ஏன் யாருமே கதவைத் திறக்கவில்லை?

    பதிலளிநீக்கு
  7. "பேய்க்கதைகளைக் கூடச் படிப்பவர் சிரிக்கச் சிரிக்க எழுத முடியுமா?"

    "ஓ! முடியுமே!"

    "எப்படி?"

    "இப்படி.. இந்த 'விடியும் வரை காத்திரு' மாதிரி.

    படித்து முடித்து முகங்கொள்ளாச் சிரிப்புடன்,"அட! ஆமாமாம்!"

    பதிலளிநீக்கு
  8. செம ட்விஸ்டுங்க
    pls visit
    http://ragariz.blogspot.com/2010/12/blog-post_06.html

    பதிலளிநீக்கு
  9. எல்லோரும் சிரித்துக் கொண்டிருக்க மரத்தின் பின்னால் நின்று 'அது'வும் சிரித்தது. :P

    பதிலளிநீக்கு
  10. இப்படி அடிக்கடி டென்ஷன் பண்ணுவேன் நானும் எல்லாரையும்... எனக்கு கொஞ்சம் பயந்த சுபாவம்... நம்பினால் நம்புங்கள்..ஹா ஹா

    பதிலளிநீக்கு
  11. பேயடித்த பெல் என்று ஆரம்பித்து ஷார்ட் பண்ணிட்டீங்களே.. நல்லா இருந்தது.. ;-)

    பதிலளிநீக்கு
  12. ஹாஹா புரியலியா.. கதை முடிஞ்சுடுச்சு ஷார்ட் தான் காரணம்னு எல்லாரும் நினைக்கவும், உண்மையான பேய்(!!) அவர்களை பார்த்து சிரித்ததுன்னு நான் முடிச்சுருப்பேன்னு சொல்ல வந்தேன்.

    பதிலளிநீக்கு
  13. மரிஷ்கா அநியாயத்துக்கு எல்லோரையும் பயமுறுத்தி வச்சிருக்கா. நல்லா இருந்துச்சு, ஆனால் க்ளைமாக்ஸ் முன்னாடியே தெரிஞ்சிடுச்சு. ( எங்க வீட்டுலயும் நடந்திருக்கு )

    பதிலளிநீக்கு
  14. கீது, இது ஏன் நடக்காது ?

    உனக்கு, எங்கள் அண்ணா நகர் அரசாங்க வீட்டுவாசதி வாரிய வீடு நினைவில் இருக்கும் ?? அங்கே துட்டை கொள்ளை அடிக்க உப்பு தண்ணியாலும், அலுமினிய வயர் (காப்பர் பதிலாக), பாடாவதி குழாய்கள் என்று கட்டி இருப்பான் எங்கள் பிளாட்டை.

    சரக்புரகேன்று சுவிட்ச் பாக்ஸ் எரியும் ? அலுமினியம் வயர் சுடு தாங்காமல் விட்டுக்கொள்ளும். இப்படி எங்கள் வீட்டில் நடந்ததுண்டு. அதுவும் என் அண்ணன் அதற்காகவே காத்து இருந்தது போல் என் அம்மாவை பயமுடுத்துவான்.

    அதைவிட கொடுமை மழைக்காலத்தில் வீட்டின் வெளியில் விட வீட்டில் தண்ணீர் அதிகம் அருவியாக ஒழுகும் ?? இந்த கூத்தில் வீட்டுக்கு வருபவர்களுக்கு எங்கள் வீடு ஒழுகுகின்றது தெரியகூடாது என்று அவர்களை அங்கும் இங்கும் இழுத்து அழைத்து பேசுவோம் (அவர்கள் நனையாம இருக்க !!)

    என் அக்காவை ஏன் வீட்டை "எப்போதும் மொளுகுகிறாய்" என்று பலர் கேட்டதுண்டு !!

    பதிலளிநீக்கு
  15. வாவ்... அருமை....

    8 வருடங்களுக்கு ஒரு இரவு நேரத்தில் அடித்த காலிங் பெல்லும், அது ஏற்படுத்திய பயமும், அடுத்த மூன்று நாட்கள் யார் காலிங்பெல் அழுத்தினார்கள் என்று துப்பறிந்த விதமும் நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
  16. சின்னப் பிள்ளையில் இப்படித்தான் கூடி உக்கார்ந்து பேய்க்கதை கேட்டு பயப்படுவோம்.. அதுபோல இருக்கு..:))

    பதிலளிநீக்கு
  17. பொசுங்கினா கொள்ளிவாயா? நல்லா இருக்குதே?

    பதிலளிநீக்கு
  18. ஹா ஹா ஹா.. கலக்கல்.. எழுத்துலயே ஒரு பயத்தை வரவைச்சிட்டீங்க..

    பதிலளிநீக்கு
  19. நன்றி எல் கே, மாதவன், வானம்பாடிகள், HVL, கீதா சந்தானம், தமிழ் உதயம்,ஹேமா, குரோம்பேட்டைக் குறும்பன், ஜீவி சார், ரஹீம் கஸாலி, பொற்கொடி, அப்பாவி தங்கமணி, RVS, சித்ரா, சிவகுமாரன், சாய், பின்னோக்கி,, தேனம்மை, அப்பாதுரை, பாபு.

    பதிலளிநீக்கு
  20. இந்த மாதிரி பெல் ஷார்ட் ஆன சம்பவம் எனக்கும் ஆகியிருக்கிறது.
    ஆனால் எனக்கு பகலில். அதுவே எங்களுக்கு பயம் பற்றிக் கொண்டது.
    இரவிலேன்றால் கேட்கவே வேண்டாம்!
    அருமையான அனுபவப் பகிர்வு.

    பதிலளிநீக்கு
  21. முன்னேயே ஒரு முறை இந்தப் பதிவைப் பத்திச் சொல்லிப் படிச்சுப் பின்னூட்டம் போட்ட நினைவும் இருக்கே! அந்தப் பின்னூட்டம் எங்கே? ஆவி வந்து முழுங்கிடுச்சா? ஹிஹிஹி!

    பதிலளிநீக்கு
  22. பேய்க்கதை, ஆவிக்கதைன்னா ரொம்பவே பிரியமாப் படிப்பேன். எங்க அம்பத்தூர் வீட்டிலே இப்படித் தான் நட்டு நடுப்பகலிலே வாசல்லே யாருமே இருக்க மாட்டாங்க! ஆனால் அழைப்பு மணி ஒலிக்கும். அப்போ அழைப்பு மணியின் ஒலியில் ஜெய் ஶ்ரீராம் தான் வரும். ஆகவே மத்தியானம் முழுக்க ஜெய் ஶ்ரீராம் கேட்டுக் கொண்டிருக்கும். இது குறிப்பா சனி, ஞாயிறுகளில் தான் இருக்கும். மற்ற நாட்களில் இருக்காது.

    நாங்களும் எட்டிப் பார்த்து, வெளியே வந்து பார்த்து, (பகல் தானே)யாரையும் காணோமேனு முழிப்போம். அப்புறமா ஒரு நாள் தற்செயலாக் கண்டு பிடிச்சேனாக்கும்! உங்களாலே முடியுதானு பார்ப்போம். கண்டு பிடிங்க! நான் மத்தியானமா வரேன் விடையைச் சொல்ல. :)

    பதிலளிநீக்கு
  23. எந்த வருஷத்து மத்யானம் வரப்போறீங்க? ஶ்ரீராம் ஒவ்வொரு நாள் மத்யானமும் வந்துபாத்துட்டுப் போறார்னு நினைக்கறேன்

    பதிலளிநீக்கு
  24. ஹா.... ஹா.... ஹா...

    நெல்லை..! அவங்க அப்படியே மறந்துபோய் விட்டுட்டாங்க! நீங்க கீதாக்காவை விளித்துவிட்டு கேள்வி கேட்டிருந்தாத்தான் புரியும். ஸோ... கீதாக்கா 'நெல்லை' யின் இந்தக் கேள்வி உங்களுக்குத்தான்!

    பதிலளிநீக்கு
  25. ஹை, சொல்லுவேனா? பேய் ரகசியத்தைச் சொல்லாதேனு சொல்லிட்டுப்போயிடுச்சு! அதான் சொல்லலை. நான் முன்னே போட்ட கருத்தைக் கூடப் பேய் தான் வெளியிடாமல் தடுத்திருக்கு! :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!