புதன், 1 ஜூன், 2011

கே யைத் தேடி 05


அத்தியாயம் ௦05: "தூண்டில் கார்!"

"ஹல்லோ "

"So - பொன்னுசாமி என்ன சொன்னார்?"
   
சோபனா காரில் ஒலித்துக் கொண்டிருந்த பாட்டை இன்னும் சற்று சத்தமாக வைத்துவிட்டு, மெல்லிய குரலில் "அது இந்தக் கேசுக்கு சம்பந்தம் இல்லாதது சார். அதையும் தவிர சம்பந்தப்பட்டவர் இப்போ எங்களுக்கு இடத்தைக் காட்ட உடன் வந்து கொண்டு உள்ளார். அவரை இந்த நேரத்தில் ஏதேனும் சொல்லி அப்செட் செய்தால் - அப்புறம் நமக்கு வேண்டிய விஷயங்களை விட்டுவிட்டு, வேண்டாதவைகளைத் துரத்தவேண்டி வரும்." என்றார். 

"சரி அப்புறம் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது பொன்னுசாமியை முட்டிக்கு முட்டி தட்டி - அது என்ன என்று தெரிந்து கொள்கிறேன்" என்றார் ரங்கன். பிறகு சொன்னார்," ஃபோரென்சிக் லாப் இண்டரிம் ரிப்போர்ட் வந்துடிச்சு. குண்டு வெடிப்பில் முழுவதும் சேதமடைந்த கார் கருப்பு நிறம் என்று பொன்னுசாமி கூறியிருந்தார். அது சமீப காலத்தில், ஸ்டீல் கிரே நிறத்திலிருந்து கருப்பு நிறத்திற்கு மேம்போக்காக நிறம் மாற்றப் பெற்ற  கார் என்று லாப் ரிப்போர்ட் சொல்லுது."  

சோபனா ஒரு வினாடி யோசித்துவிட்டு, "அப்படியா? சரி - நாளைக் காலை பத்தரை மணிக்குள், குண்டு வெடிப்பில் சேதமடைந்த காரின் சொந்தக்காரரை நீங்கள் கைது செய்து விசாரிக்கலாம்." என்றார். 
    
"எங்கே? எப்படி?"   
               
"நாளைக்குக் காலையில், போலீஸ் ஸ்டேஷனுக்கே வருவார். வந்து நகரின் பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார் தன்னுடையதுதான் என்றும், அந்தக் காரைத் தன்னிடமே ஒப்புவிக்கும்படியும் கேட்பார். அந்த நேரத்தில், உங்க வெப் காம் ஆன் செய்து வைத்திருங்கள்; நாங்களும் எங்கள் அலுவலகத்திலிருந்து பார்க்கின்றோம்; எங்களுக்குத் தோன்றுகிற சந்தேகங்களை வீடியோ சாட்டில் ஓசைப்படாமல் டைப் செய்து காட்டுகின்றோம்." 

"சரி So, அப்படியே செய்கிறேன். வேறு ஏதாவது வேண்டுமா?

"ஆமாம் சார் - லோகல் மாருதி வொர்க் ஷாப்பில் உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரும் இருக்கின்றார்களா?" 

"மாருதி வொர்க் ஷாப்பா.... ம்ம்ம் தெரியும். அதன் மேனேஜர் ரமேஷ் எந்த நேரத்திலும், எந்த உதவியும் எனக்கு செய்வார். அவருடைய செல் நம்பரைத் தருகின்றேன்; என் பெயரைச் சொன்னாலே போதும் - அவுட் ஆஃப தி வே - சென்று கூட உதவி செய்வார்" 
     
"ஓ கே. நாளைக் காலை போலீஸ் ஸ்டேஷனில் தயாராக இருங்கள். பை." 
          
"பை" 
*******************************
'கெம்பா' வில், சோபனா, எ சாமியார், சோணகிரி மூவரும், பொன்னுசாமியிடம், தீனதயாள் பற்றி, கார் நின்றிருந்த இடத்தைப் பற்றி, எந்த திசையைப் பார்த்து நின்றிருந்தது, தீனதயாளின் குரல் எப்படி இருந்தது, உருவம் எப்படி இருந்தது போன்ற எல்லா விவரங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டனர். தீனதயாளின் அடையாள அட்டை என்ன நிறம், அதில் மேலும் என்ன விவரங்கள் அவருக்கு ஞாபகம் இருந்தன போன்ற விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டனர். பொன்னுசாமியின் பீட் ஸ்டாண்ட் இருந்த இடத்திற்கு அருகே உள்ள கடையின் தொலை பேசி எண்ணையும் வாங்கி வைத்துக் கொண்டனர்.  
                       
அதன் பிறகு, எ சாமியார், பொன்னுசாமியிடம், "நீங்க எங்க கூட ஒரு வொர்க் ஷாப் வரைக்கும் வாங்க; இங்கே நின்றிருந்த கார் பார்ப்பதற்கு எந்த மாதிரி இருந்தது என்று அங்கே கொஞ்சம் அடையாளம் காட்டுங்க. உங்களை எங்கள் காரிலேயே திரும்பக் கொண்டுவந்து விட்டுவிடுகிறோம்." என்றார். 
                  
அதற்கு இசைந்த பொன்னுசாமி அவர்களுடன் மாருதி வொர்க் ஷாப் சென்று, குண்டு வெடிப்பில் சேதமடைந்த கார் மாதிரியே இருந்த சில கார்களை அடையாளம் காட்டினார். சோபனாவும், சோணகிரியும் , வொர்க் ஷாப்பின் மேனேஜரைப் பார்க்கச் சென்றனர். எலெக்ட்ரானிக் சாமியார், பொன்னுசாமியை அவருடைய டூட்டி ஸ்பாட்டில் இறக்கிவிட்டு, எ சா & கா சோ டிடெக்டிவ் ஏஜென்சிக்கு சென்றார். வழியில் சோபனாவிடமிருந்து அவருக்கு ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. 
              
"சாமி - உடனே இரண்டு ஐநூறு ரூபாய்க் கட்டுகள் தயார் செய்யுங்கள். மேலும் கீழும் மட்டும் நல்ல நோட்டுகள். மீதி எல்லாம் வெள்ளைத் தாள்கள் இருந்தால் போதும். நம்முடைய அலுவலக அலமாரியில் ஐநூறு ரூபாய் அளவிற்கு வெட்டப்பட்ட காகிதங்கள் ஏராளமாக இருக்கும். கூடவே எங்கள் பேங்க் ரப்பர் ஸ்டாம்ப் இருக்கும். எல்லாவற்றையும் தயார் செய்துகொண்டு, பொன்னுசாமி பீட் இடத்திற்கு சற்று முன்பாக நம்ப கார்ல வெயிட் பண்ணுங்க. நாங்க நம்பர் ப்ளேட் இல்லாத, ஸ்டீல் கிரே நிறக் கார் ஒன்றை அந்தப் பக்கம் ஓட்டி வருவோம். நீங்க தயார் பண்ணிய அந்த இரண்டு நோட்டுக் கட்டுகளையும் அந்தக் காரின் பின் கதவு ஜன்னல் வழியாக உள்ளே போட்டு விடுங்கள். பிறகு எங்கள் கார் சென்ற இரண்டு மூன்று நிமிடங்களுக்குள், பொன்னுசாமியையும் நம்ம காரில் அழைத்துக் கொண்டு, எங்கள் கார் சென்ற திசையில் எங்களைப் பின் தொடருங்கள். இந்த முறையாவது, சந்தேகத்திற்கு இடமாக நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும், சட்டத்திற்குப் புறம்பாக நம்பர் ப்ளேட் இல்லாமல் ஓடிய ஒரு காரை உடனடியாக பொன்னுசாமி தன்னுடைய மேலிடத்திற்கும், போலீசுக்கும் - முடிந்தால் பத்திரிக்கைகளுக்கும் தெரியப் படுத்தட்டும். சரியா?"  
     
"சரி புரிந்தது."  
             
எல்லாம் திட்டப் படி நடந்தது. மாருதி வொர்க் ஷாப் ரமேஷ், ரங்கன் சார் ஏற்கெனவே அழைத்து கா சோ வுக்கு உதவி செய்யச்சொல்லி கேட்டுக் கொண்டதால். கா சோ கேட்டுக் கொண்டபடியே, ஸ்டீல் கிரே நிறக் காரை, நம்பர் பிளேட்டுகளை கழற்றி வைத்துகொண்ட பின் சோபனா மற்றும் சோணகிரியுடன் அனுப்பினார். கார் மறுநாள் மதியம் திரும்ப வொர்க் ஷாப்புக்கு கொண்டுவந்து விடப்படும் என்று உறுதி கூறி, காரை ஓட்ட ஆரம்பித்தார் சோபனா. பின்னால் இருக்கையில் சோணகிரி அமர்ந்திருந்தார். 
                 
பொன்னுசாமி பீட் ஸ்பாட்டுக்கு முன்பாக இருட்டான ஓரிடத்தில், எ சா - நோட்டுக் கட்டுகளுடன் சாலையோரத்தில் நின்றுகொண்டு இருந்தார். சோபனா எ சா இருந்த இடம் அருகே வண்டியை சற்று நிறுத்தினார். நொடியில் தன கையிலிருந்த பணக்கட்டுகளை திறந்திருந்த ஜன்னல் வழியாக உள்ளே வீசிவிட்டு, பொன்னுசாமியை நோக்கி நடந்தார், எ சாமியார். 
                 
எ சாமியார் பொன்னுசாமி அருகே சென்ற பின், சற்று தாமதித்து, பொன்னுசாமி இருந்த இடத்தை நிதானமாக காரில் கடந்தார் சோபனா. இரவு ஆகிவிட்டதால், அந்த இடத்தில் அவ்வளவாக போக்குவரத்து இல்லை. கார் கடந்து சற்று நேரத்திற்குள், எ சாமியார் - இந்தக் காரை சுட்டிக் காட்டி ஏதோ சொல்வதும், பொன்னுசாமியும் அதற்குத் தலை ஆட்டியபடி, எ சா வுடன் சென்று காரில் ஏறுவதும் தெரிந்தது. 
                     
சோபனா காரை ஓட்டியபடியே, சோணகிரியிடம் பின் இருக்கையில், இரண்டு பணக்கட்டுகளையும் எப்படி வைக்கவேண்டும் என்பதைக் கூறி, எந்த நேரமும் காரை நிறுத்தி, இருவரும் இறங்கி சென்றுவிடவேண்டும் எனவே தயாராக இருக்கும்படி கூறியவாறு பாதையின் இரண்டு பக்கங்களையும் பார்த்தவாறு ஓட்டி வந்தார்.கார் ஊருக்குள் நுழைந்து சிறிது தொலைவு சென்றவுடனேயே மக்கள் கூட்டம் அதிகம் உள்ள சந்தை ஒன்று அவர் கண்ணில் பட்டது. காரை இடது பக்கம் திருப்பி, கொஞ்சதூரம் மெதுவாக ஓட்டி, கூட்டத்தில் யார் மீதும் மோதிவிடாமல் சர்வ ஜாக்கிரதையாக, ஒரு மரத்திற்கு அருகே நிறுத்தினார். பார்க்கிங் ப்ரேக் போட்டு, காரின் கண்ணாடி ஜன்னல்கள் எல்லாவற்றையும் ஏற்றிவிட்டு, கதவுகளை பூட்டி, காரிலிருந்து இருவரும் இறங்கியவுடன், காரின் கதவைப் பூட்டி, சாவியைக் கைப்பையில் போட்டுக் கொண்டு, சோபனா சோணகிரி இருவரும் ஒரு ஆட்டோ பிடித்தனர். ஆட்டோவில் சென்றுகொண்டு இருக்கும் பொழுது, எ சாமியாரை அலை பேசியில் அழைத்து, கார் நிற்குமிடத்தை சுருக்கமாக அடையாளம் கூறி, பொன்னுசாமி புகார் கொடுக்க எல்லா உதவியும் செய்யும்படி கூறினார். 
                  
மறுநாள் காலை தினசரியில் முதல் பக்கத்தின் கீழ்ப் பகுதியில் பெரிய எழுத்துகளில் வந்திருந்தது அந்த செய்தி: 
              
"நகரின் சந்தைக்கு அருகே அடையாளம் காணப்படாத திகில் கார். பின் இருக்கையில் ஏராளமாகப் பணம்.!   

கடத்தல்காரா? தொடரும் கார் மர்மங்கள்!!" 

(தொடரும்) 
                   

10 கருத்துகள்:

  1. சுவாரசியமானப் போக்கை கலர் எழுத்துக்கள் தடை போடுவது போல் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. தொடரும் கார் மர்மங்கள்!!" //
    Interesting.

    பதிலளிநீக்கு
  3. அப்பாதுரை சார் - உங்கள் கருத்து கவனத்தில் எடுத்துக் கொண்டோம். பதிவாசிரியரும் பார்த்திருப்பார். அவர் ஏதாவது விளக்கம் கூறுகிறாரா என்று பார்ப்போம்.

    நன்றி இராஜராஜேஸ்வரி!

    பதிலளிநீக்கு
  4. கதை முடிந்த பிறகு முழுதான கருத்துகள்.

    பதிலளிநீக்கு
  5. // தமிழ் உதயம் said...
    கதை முடிந்த பிறகு முழுதான கருத்துகள்.//

    கதை முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? எங்களுக்கு என்னவோ பதிவாசிரியர் தினத்தந்தியில் வந்துகொண்டிருக்கும் 'கன்னித்தீவு' படக்கதை ரசிகர் என்று தோன்றுகிறது. முதலில் ஒரு தீ - அப்புறம் கா - அதற்கப்புறம் 'கே' இன்னும் எவ்வளவு ஓரெழுத்து ஆட்கள் வரப்போகின்றார்களோ - எல்லோரையும் சோ - கண்டுபிடிக்கவேண்டுமே!

    பதிலளிநீக்கு
  6. எங்கள் பேங்க்??

    இன்ட்ரஸ்ட்ங்காகப் போகிறது கதை!

    பதிலளிநீக்கு
  7. கலர் எழுத்துக்குப் பின்னாலயும் மர்மமா?

    பதிலளிநீக்கு
  8. கார்
    அதுவும் திகில் கார்
    அதுக்குள்ள பணம்....தொடரும் !

    பதிலளிநீக்கு
  9. நான் போட்ட கமெண்ட்டை காண வில்லை. அதையும் கண்டுபிடிக்க சொல்லுங்க. சீக்கிரம் பெரிய பெரிய போஸ்ட்டா எழுதவும் இல்லையேல் எங்கள் ப்ளாக் ஆசிரியர்களின் வீட்டிற்கு ஆட்டோ /சுமோ அனுப்பப்படும்

    பதிலளிநீக்கு
  10. எல் கே - நீங்க போட்ட கமெண்ட் இதற்கு முந்தைய பதிவில் (கே யைத் தேடி 04 ) இது நீளமான பதிவுதான். நான்காம் அத்தியாயம்தான் சற்று சிறிய பதிவு. நீங்கள் அந்தக் கமெண்ட் தானே சொல்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!