திங்கள், 6 ஜூன், 2011

கே யைத்தேடி 07


அத்தியாயம் 07: "யார், யார், யார் அவர் யாரோ?"

சோபனா எலெக்ட்ரானிக் சாமியாரை, அலைபேசியில் அழைத்து, உடனே போலீஸ் ஸ்டேஷனுக்குக் காரை எடுத்துக் கொண்டு வரச் சொல்லிவிட்டு, தானும் ஒரு ஆட்டோ பிடித்து, போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று, வாசலில் எ சா வரும்வரைக் காத்திருந்தார்.

எ சா வந்தவுடன், "என்ன சாமீ ஏதாவது ஃபோட்டோ எடுத்தீங்களா?" என்று கேட்டார்.

"எடுத்தேன் சோபனா - வீதியை, வீட்டை, வீட்டுப் பக்கம் வந்தவர்களை, கார்த்திக்கின் வீட்டுப் பக்கம் பார்த்தபடி வீதியில் நடந்து போனவர்களை எல்லோரையும் படம் பிடித்துள்ளேன். எல்லாவற்றையும் பிரிண்ட் போட்டுக் கொடுக்கின்றேன். உள்ளே போகலாமா?"
 
**************

கார்த்திக்கின் உடல் நிலையைப் பரிசோதிக்க, மற்றும் மயக்கம் தெளிவிக்க, போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகில் இருந்த டாக்டர் வரவழைக்கப்பட்டார். டாக்டர் கார்த்திக்கின் உடல் நிலையை நன்றாகப் பரிசோதித்துவிட்டு, 'அதிர்ச்சியினால் வந்த மயக்கம்தான். வேறு பயப்படும்படி ஒன்றும் இல்லை. ஓரிரு நாட்கள் நல்ல ஓய்வு எடுத்துக் கொண்டால் சரியாகிவிடும்.' என்றார்.

கார்த்திக் மயக்கம் தெளிந்து சுய நினைவு திரும்பும் நேரத்தில் சோபனாவும், எலெக்ட்ரானிக் சாமியாரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு உள்ளே வந்தனர். அவர்களை கார்த்திக்குக்கு அறிமுகப் படுத்தினார் இன்ஸ்பெக்டர் ரங்கன். சோபனாவிடமும், சாமியாரிடமும், "இவர் பெயர் கார்த்திக். வெள்ளிக்கிழமை குண்டு வெடிப்பில் சேதமானது இவருடைய கார்தான். பாவம் - அந்த விவரம் தெரிய வந்ததும், அதிர்ச்சியில் மயக்கமாகிவிட்டார்" என்றார். சோபனாவும் சாமியாரும், தங்கள் காரிலேயே கார்த்திக்கை அவர் வீட்டுக்குக் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துவிடுவதாகக் கூறினர்.

எலெக்ட்ரானிக் சாமியார், ரங்கனைத் தனியே அழைத்துப் போய், மிகவும் ரகசியமான குரலில், "ரங்கன் சார் - கார்த்திக் ஏன் மயக்கமானார்? அவரை முட்டிக்கு முட்டி தட்டி விட்டீர்களா?" என்று கேட்டார். ரங்கன் லேசாக சிரித்து, "அட ஏன் சாமீ நீங்க வேறே! அவரு ஏற்கெனவே காரை இழந்த சோகத்தில் இருக்கிறார்" என்றார்.

அதற்கு சாமியார், "காரை இழப்பதாவது? அவர்தான் ஏற்கெனவே முள்ளங்கிப் பத்தை மாதிரி தொண்ணூறு ஆயிரம் ரூபாய் வாங்கி பைக்குள்ளே போட்டுக்கிட்டாரே!" என்றார்.

ரங்கன், "சாமீ - என்னதான் பணம் வாங்கி இருந்தாலும், தன்னுடைய கார் எங்கேயோ சௌக்கியமாக இருக்கிறது என்று தெரிந்தால் மனதுக்கு ஒரு நிறைவாக இருக்கும். ஆனால், கண்ணாடியும் கதவுமாக, பளப்பள என்று பார்த்த தன்னுடைய கார் பீஸ் பீஸாகி விட்டது என்று தெரிந்தால், அதுவும் ஒரு குண்டு வெடிப்பில், ஒருவருடைய மரணமும் அதில் புதைந்திருக்கிறது என்றால், நிச்சயம் மனது ரொம்பவும் கஷ்டப்படும்" என்றார், ரங்கன்.

"நீங்கள் சொல்வதிலும் ஓர் உண்மை இருக்கிறது" என்று சொல்லிவிட்டு, காரை நோக்கி நடந்தார், சாமியார். ஏற்கெனவே கார்த்திக்கும் சோபனாவும் காரில் ஏறியமர்ந்து சாமியாரின் வருகைக்காகக் காத்திருந்தனர். "சாமீ காரை நீங்க ஓட்டுங்க. கார்த்திக் சார் நீங்க உங்க வீட்டுக்குப் போகும் வழியைச் சொல்லுங்க. நான் கார்த்திக் சாருடன் பேசிக்கொண்டே வருகிறேன்" என்றார் சோபனா.

"சரி" என்று சொல்லி, ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து, காரைக் கிளப்பினார், எலெக்ட்ரானிக் சாமியார். அப்பொழுது கார்த்திக்கின் அலைபேசி ஒலித்தது. சோபனா உடனே, "நீங்க ரெஸ்ட் எடுங்க சார். அலைபேசியில் யார் அழைத்தாலும் நான் பதில் சொல்கிறேன்" என்றார். மறுபேச்சு கூறாமல், தன அலைபேசியை சோபனாவிடம் கொடுத்தார், கார்த்திக்.

சோபனா, அலைபேசியைத் தன காதில் வைத்துக்கொண்டு, "ஹல்லோ" என்றார். மறுமுனையில் பேசியவர் "கா .. கார்த்திக் சார் இல்லையா?" என்று கேட்டார்.

"இருக்காரு. ஓய்வு எடுத்துகிட்டு இருக்காரு. நீங்க யாரு? என்ன வேணும்?"

"அவருடைய கார் விற்பனைக்கு உள்ளது என்று போன வாரம் விளம்பரம் கொடுத்திருந்தார். அதைப் பார்க்க வரலாமா என்றுதான்..."

"ஓ எஸ் - காரைப் பார்க்க நீங்க வரலாம். கார் மாருதி வொர்க் ஷாப்பில் இருக்கிறது. காரைப் பார்க்க நீங்க எப்போ வரீங்கன்னு சொல்லுங்க. அவருடைய உதவியாளர் உங்களுக்குக் காரைக் காட்டுவார்."

கார்த்திக் அதிர்ந்து போய், ஏதோ சொல்ல முற்படுவதற்கு முன்பு அவரிடம் சைகையிலேயே, பேசாமல் இருக்கும்படி சொன்னார் சோபனா. மறுமுனையில் பேசியவர் கூறிய நேரத்தை தன்னுடைய சிறு குறிப்புகள் எழுதும் நோட்டில் குறித்துக் கொண்டு, நன்றி கூறி, அலைபேசியின் சிவப்புப் பொத்தானை அமுக்கி பேச்சைத் துண்டித்தார், சோபனா. அதன் பின் கால் லாக் பார்த்து, அது எந்த ஃபோனிலிருந்து வந்த அழைப்பு என்பதையும் குறித்துக் கொண்டார் சோபனா.

"என்னங்க இது? என்னுடைய கார்தான் பூந்தி ஆயிடுச்சே? எதுக்கு இப்போ காரைப் பார்க்க யாரையாவது வரச் சொல்லுறீங்க?"

"கார்த்திக் சார், கார் 'பூந்தி' ஆயிடுச்சுன்னு சொல்லி 'காந்தி' வழியில் சத்தியம் பேசிக் கொண்டிருந்தால், இந்த சதிக் கூட்டத்தால் உயிர் இழந்தவர்களின் ஆன்மா 'சாந்தி' பெறாது!

"ஹூம் - டி ஆர் படம் ரொம்பப் பார்க்காதே என்று நான் தலை தலையாய் அடிச்சுகிட்டேன். கேட்டால்தானே!" என்றார் எ சா.

"சாமீ - கொஞ்சம் சும்மா இருக்குறீங்களா? கார்த்திக் சார், இனிமேல் காரைப் பற்றி யார் கேட்டாலும், உங்க உதவியாளர்களைத் தொடர்பு கொள்ளும்படி சொல்லுங்க. எங்கள் இருவரின் அலைபேசி எண்களும் இதோ இந்த பேப்பரில் உள்ளது. உங்கள் கார் வெடிகுண்டினால் சேதம் அடைந்தது என்பது போலீசுக்கும், உங்களுக்கும், குண்டு வைக்க ஏற்பாடு செய்தவருக்கும்தான் தெரியும். அவர் யார் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், நீங்க இந்த உதவியை, போலீசுக்கும் எங்களுக்கும் செய்யவேண்டும். அப்பொழுதுதான் பிரச்னைகளிலிருந்து உங்களை மீட்க முடியும்" என்றார் சோபனா.

அப்பொழுது சோபனாவின் அலைபேசி, 'டுண்டுண்டுண்டுன் டும் டும் ... பேசுவது கிளியா இல்லை, பெண்ணரசி மொழியா?' என்று வினவியது.

சோணகிரியிடமிருந்து அழைப்பு. "பாஸ், காரை ரமேஷ் சாரிடம் ஒப்படைத்துவிட்டேன். நான் கிளம்பலாமா?"

"அலைபேசியை ரமேஷிடம் கொடுங்கள்"

"இதோ கொடுக்கிறேன்."

"ரமேஷ் சார் நீங்க செய்த உதவி ரொம்பப் பெரியது. உங்களுக்கு நன்றி. இன்னும் ஓர் உதவி வேண்டும்."

"சொல்லுங்க மேடம்"

"இப்போ கொண்டு வந்து கொடுத்த காரில், (கார்த்திக் உங்க கார் நம்பர் சொல்லுங்க!) இந்த நம்பர் கொண்ட நம்பர் ப்ளேட்களைப் பொருத்துங்கள். பிறகு, அதை வொர்க் ஷாப்பின் ஓர் ஓரத்தில் நிறுத்தி வையுங்கள். அந்தக் காரினுடைய சொந்தக்காரர் அமெரிக்கா சென்றிருப்பதாகக் கூறினீர்கள். சரிதானே?"

"ஆமாம்"

"எப்பொழுது திரும்பி வருவார்?"

" இன்னும் நான்கு மாதங்கள் ஆகும்."

"அவர் கேட்டிருந்த மாற்றங்கள், பழுது பார்த்தல் எல்லாம் செய்து முடிக்க எவ்வளவு நாட்கள் தேவைப்படும்?"

"ஒரு வாரம் போதும். அவர் வெளிநாடு செல்லும் சமயங்களில் எல்லாம், இந்த வொர்க் ஷாப்பில், அவருடைய காரைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டுச் சென்று விடுவார். கார் துருப்பிடிக்காமல் பார்த்துக் கொண்டு, மெயிண்டினன்ஸ் செய்து, துடைத்து வைத்து, அவர் கூறும் சிறிய ரிப்பேர் வேலைகளை நாங்க பண்ணி தயாரா வெச்சிருப்போம்."

"நல்லது. இன்னும் ஒரு உதவி தேவை. இந்தக் காரைப் போன்றே இருக்கின்ற, ஆனால் கருப்பு நிறக் கார் ஒன்று தேவை. கிடைக்குமா?"

"கொஞ்சம் லைன்ல வெயிட் பண்ணுங்க - வொர்க் ஷாப்பில் ஒரு ரவுண்ட் அடித்துப் பார்த்துவிட்டு வந்து சொல்கிறேன்."

"சரி. அதுவரை செல் ஃபோனை, சோணகிரியிடம் கொடுங்கள்."

"இதோ கொடுக்கின்றேன்."

"சோணகிரி சார், இன்னும் ஒரு வாரத்திற்கு உங்களுக்கு அந்த மாருதி வொர்க் ஷாப்பில்தான் டூட்டி. நீங்கள் ஓட்டிக் கொண்டு போன அந்தக் கார் விற்பனைக்கு என்று விளம்பரப் படுத்தப் பட்டுள்ளது. நீங்கள் செய்யவேண்டியது இப்போதைக்கு என்ன என்றால், யார் வந்து அந்தக் காரைப் பார்க்கவேண்டும் என்று கூறினாலும், நீங்கள் ரமேஷிடம் சாவி வாங்கி, அந்தக் காரைத் திறந்து, அவர் அதன் உள்ளும் புறமும் பார்க்க அனுமதி கொடுங்கள். அதே நேரத்தில், அவர்களை இரகசியமாக, உங்கள் செல் காமிராவால் படம் எடுங்கள். அவர்களுடைய தொடர்பு எண், விலாசம் போன்ற விவரங்களை உங்கள் செல்லிலோ அல்லது குறிப்புப் புத்தகத்திலோ குறித்து வைத்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் சரியாக, குழப்பமில்லாமல் செய்யவேண்டும். நீங்கள் கொடுக்கின்ற ஏ டி ஆர் (A T R = Action taken report) எவ்வளவு தூரம் உதவியாக இருக்கிறதோ அந்த அளவுக்கு உங்களுக்கு போனஸ் கொடுப்பேன்."

"சரிங்க பாஸ். ரமேஷ் சார் வந்துவிட்டார்."

"ஹலோ மேடம் நீங்க கேட்ட மாதிரி வண்டி எதுவும் இப்பொழுது வொர்க் ஷாப்பில் இல்லை. வந்தால் உடனே உங்களுக்குச் சொல்கிறேன். அப்படி ஒரு வண்டி கிடைத்தால் உங்களுக்காக அதை எவ்வளவு நேரம் நிறுத்தி வைப்பது?"

"மூன்று மணி நேரம் இருந்தால் போதும். ஆனால் காரின் சொந்தக்காரர் அப்பொழுது பக்கத்தில் இல்லாமல் இருப்பது நல்லது."

"சரி. அந்த வகையில் ஏதாவது ஒரு வண்டி கிடைத்தால், உடனே உங்களுக்குச் சொல்கிறேன்."

"நன்றி. ஆனால் வண்டி நாளைக்குள் கிடைத்தால் நன்றாக இருக்கும்."

"பார்க்கிறேன்."

"உங்க வொர்க் ஷாப்பில் சோணகிரி சாருக்கு ஒரு வாரத்திற்கு ஒரு வேலை போட்டுக் கொடுங்க. அவருக்கு நாங்க சம்பளம் கொடுக்கிறோம். உங்க வேலை போக, மீதி நேரத்தில் அவர் என்ன செய்யவேண்டும் என்று அவருக்குச் சொல்லி இருக்கின்றேன். அது என்ன என்று அவர் உங்களுக்குச் சொல்லுவார். உங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லையே?"

"ஓ கே மேடம்."
               
செல் ஃபோன் இணைப்பைத் துண்டித்தார், சோபனா.
************

அப்பொழுது கார்த்திக்கின் அலைபேசிக்கு, ஓர் அழைப்பு வந்தது. அதை எடுத்துப் பார்த்த கார்த்திக், "இப்போ நானே பேசறேன், நான் பேசுவது சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்க." என்று சொல்லி, அலைபேசியில் "ஹலோ?" என்றார்.

"............"

"ஆமாம் இருக்கு. நான் கொஞ்சம் பிசியா இருக்கேன். காரை மாருதி வொர்க் ஷாப்பில் விட்டிருக்கின்றேன். அங்கே என்னுடைய செக்ரட்டரி இருப்பார். அவருடைய செல் நம்பர் தருகின்றேன், அவரைக் காண்டாக்ட் செய்து, அவரோடு பேசி, காரைப் போய்ப் பார்க்கின்ற நேரத்தை சொல்லிவிட்டு, போய்ப் பாருங்க. பிடித்திருந்தால், விலை விவரங்களை, என்னோடு பேசுங்க, நாம முடிவு செய்துகொள்வோம். என்னுடைய செக்ரட்டரியின் செல் நம்பர் .............. என்று சோபனா கொடுத்த பேப்பரில் இருந்த எண்களில் ஒன்றைப் பார்த்துக் கூறி, "சரியா?" என்று ஃபோனில் சொன்னவாறு, சோபனாவைப் பார்த்தார்.

"ரொம்ப சரி. இதையே எல்லோருக்கும் மெயின்டைன் பண்ணுங்க." என்றார் சோபனா.

மீண்டும் கார்த்திக்கின் அலைபேசியில் ஒரு அழைப்பு. 'H.A Calling' என்று செல் ஃபோனின் சின்னத் திரையில் ஒளிர்ந்தது. அதை சோபனாவும் பார்த்தார்.
 
அவசரமாக செல் ஃபோனை எடுத்து, பேசத் தொடங்கினார் கார்த்திக்.
(தொடரும்)
              

4 கருத்துகள்:

  1. ஹ்ம்ம் கொஞ்சம் இழுக்குதோ ??

    பதிலளிநீக்கு
  2. சோபனா நல்ல மேனேஜரா டேமேஜரா? கார்த்திக் அனியாயத்துக்கு அடி படப் போகிறார்.

    பதிலளிநீக்கு
  3. இம்முறை ATRக்கெல்லாம் விளக்கம் கொடுத்தாச்சு!

    பதிலளிநீக்கு
  4. Dear Shriram Jayaram Jayajaya Ram,
    ஏன் நீங்கள் “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” பகுதி 2 & பகுதி 3 க்கு வருகை தந்து கருத்துக்கூறவில்லை. ஊரில் இல்லையா? நீங்கள் வருகை தந்த பிறகே அடுத்த கதை வெளியிடுவதாக உள்ளேன். அன்புடன் vgk

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!