திங்கள், 11 ஜூலை, 2011

அவன் இவன், அவர்.

                     
ஏகாம்பரம், பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தார். அவர், தமிழும், ஆங்கிலமும், எழுத, பேச, படிக்கத் தெரிந்தவர். அவருக்கு, காலை நேரத்தில், எல்லோரும் அரக்கப் பரக்க - அலுவலகம் செல்ல டென்ஷனாக அல்லாடிக் கொண்டிருக்கும் வேளையில், எல்லோரையும் வேடிக்கை பார்ப்பது பிடிக்கும். வாக்கிங் வந்து, பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு, அல்லது சிமிண்ட் பெஞ்சு கிடைத்தால், அங்கே அமர்ந்தோ கொஞ்ச நேரம் வேடிக்கை பார்ப்பார். கண்ணையும் காதையும் மனதையும் திறந்து வைத்துக் கொண்டு அரை மணி அல்லது ஒரு மணி நேரம் பார்த்துக் கொண்டிருப்பார். 

ஏகாம்பரம், தன்னிடம் நேரம் கேட்பவர்களுக்கு நேரத்தையும், சுற்றுப் புற இடங்களுக்கு வழி கேட்பவர்களுக்கு, வழியையும் சொல்லுவார். அவர்கள் நன்றி சொன்னால், புன்னகையுடன் ஏற்றுக் கொள்வார். 

கடந்த இரண்டு வாரங்களாக,  ஓர் இளைஞனை கவனித்துக் கொண்டிருந்தார். அந்த இளைஞன் ஒரு குறிப்பிட்ட பேருந்துக்காக காத்திருக்கின்றான் என்பதும், அவன் செல்ல வேண்டிய பேருந்து வருவதற்கு பத்து நிமிடங்கள் முன்பாக அவன் வருகிறான் என்பதையும், தெரிந்துகொண்டார். அவன் வந்தவுடன், சுற்றுப் புறம உள்ளவர்களை ஆர்வமாக நோக்குவதையும், தன்னைப் பார்த்து அடிக்கடி புன்னகை சிந்துவதையும், இவர் தெரிந்து வைத்திருந்தார். 

மேலும், அடிக்கடி நிகழும் ஒரு சம்பவம் அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 
    
இளைஞன் அந்தப் பேருந்து நிறுத்தத்திற்கு வந்த ஐந்து நிமிடங்களுக்குள், மற்றொரு இளைஞன் (பார்ப்பதற்கு வட நாட்டுப் பக்கத்தைச் சேர்ந்த இளைஞனோ என்று தோன்றும்) வருவான். அவன், இவனைப் பார்த்ததும், சின்னதாகச் சிரித்து, அருகே வந்து, "ஹலோ ஹவ் ஆர் யு?" என்று கேட்பான். இவன் உடனே, "ரா ... மு ... சா ........மி" என்பான். அவன் உடனே சிரித்த வண்ணம், சென்று, அவன் செல்ல வேண்டிய பேருந்தில் ஏறிச் சென்றுவிடுவான். 

பிறகு, இவன் செல்ல வேண்டிய பேருந்தில் இவன் ஏறிச் சென்று விடுவான். இதில் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாமல் போகின்ற நாட்களில் அல்லது இரண்டு பேரில் ஒருவர் வராத நாட்களில் இந்த நாடகம் நடக்காது! 

இன்றைக்கும், இதே சந்திப்பு, விசாரணை, பதில், சிரிப்பு, எல்லாம் நடந்தது. அவன் பேருந்து ஏறிச் செல்வது வரை, எல்லாம் வழக்கத்திற்குக் கொஞ்சம் முன்பாகவே நடந்தது. ராமுசாமி செல்லவேண்டிய பேருந்து வருவதற்கு, இன்று இன்னும் ஏழ்ட்டு நிமிடங்கள் இருந்தன. 

ஏகாம்பரம், மெல்ல ராமுசாமிக்கு அருகே சென்று, "தம்பி - நீங்க சரியாக, தினமும் இந்த நேரத்திற்கு இந்த பஸ் ஸ்டாண்டிற்கு வந்து விடுகின்றீர்கள். உங்க நண்பர் கூட இதே நேரத்திற்கு இங்கு வருகிறார். அவர் தினமும், 'ஹலோ ஹவ் ஆர் யு?' என்று கேட்கிறார். நீங்க அதற்கு 'ராமுசாமி' என்கிறீர்கள். அவர் சிரித்துக் கொண்டே செல்கிறார். நீங்க 'இங்க்லீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ்' புத்தகம் ஏதாவது வாங்கிப் படித்து, தெரிந்துகொண்டு, ஆங்கிலத்தில் பேச முயன்று வருகின்றீர்களா?" என்று கேட்டார். 
       
ராமுசாமி, மிகவும் தயக்கமாக "ஆமாம்" என்றார். 

ஏகா: "நீங்க முயன்றால் இன்னும் கொஞ்சம் சரியாக ஆங்கிலத்தில் பேசலாம். அவர் உங்களிடம், உங்கள் பெயரைக் கேட்கவில்லை. நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள் என்றுதான் தினமும் கேட்கிறார். நீங்க அதற்கு, 'நான் நன்றாக இருக்கின்றேன், தாங்கள் எப்படி இருக்கின்றீர்கள்?' என்று கேட்பதுதான் சரியாக இருக்கும். நாளையிலிருந்து அவர் வந்து, 'ஹலோ ஹவ் ஆர் யு?' என்று கேட்டால், 'அயம் வெரி வெல். தாங்க் யு! ஹவ் ஆர் யு?' என்று கேட்கவேண்டும். அதுதான் சரியான முறை." 

ராமு: "சரிங்க அப்படியே செய்கிறேன். என்ன சொல்லணும்? இன்னும் ஒருமுறை சொல்லுங்க?"

ஏகா : "அயம் வெரி வெல்! தாங்க் யு! ஹவ் ஆர் யு?"

*************************************

மறுநாள். ஏகாம்பரம் வந்தார். ராமுசாமி வந்தார். அந்த மூன்றாவது நபரும் வந்தார். 

ராமுசாமிக்கு அதற்குள், ஏகாம்பரம் சொல்லித் தந்திருந்த வாக்கியங்கள் மறந்து போய்விட்டது. சரி, எப்படியும் சமாளிக்கலாம், அவர் அருகில் வந்ததும், தான் முந்திக் கொண்டு, 'ஹலோ ஹவ் ஆர் யு?' என்று கேட்டுவிடுவோம். அப்போ தான் சொல்லவேண்டிய பதிலை, அவரே சொல்லுவார், கொஞ்சம் அதைக் கேட்டுப் பழக்கப் படுத்திக் கொண்டு, அவ்வப்போது, அவர் கேட்டால் அதே போல நாம் பதில் சொல்லலாம் என்று முடிவு செய்துகொண்டார். மூன்றாமவர் அருகே வந்து புன்னகையுடன் வாய் திறக்க முற்படுகையில், ராமுசாமி, தான் முந்திக் கொண்டு கேட்டார், "ஹலோ ஹவ் ஆர் யு?"

அதைக் கேட்ட மூன்றாமவர், புன்னகையுடன், "ரா ...மு சா ......மி" என்று பெருமிதமாகச் சொல்லி விட்டு, பேருந்தில் ஏறிச் சென்றுவிட்டார். 

ராமுசாமி, திகைத்து நின்றார்; ஏகாம்பரம் (துணியைக் கிழித்துக் கொள்ளாமல்) தெருவில் இறங்கி ஓடிவிட்டார். 
                   
(இரண்டு வருடங்களுக்கு முன்பு காலமான, 'தென்கச்சி கோ சுவாமிநாதன்' அவர்கள், ஒரு முறை ரேடியோவில், 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சியில் கூறிய நகைச்சுவைத் துணுக்கை அடிப்படையாக வைத்துப் புனையப்பட்ட கதை) 
                              

14 கருத்துகள்:

  1. ராமுசாமி, திகைத்து நின்றார்; ஏகாம்பரம் (துணியைக் கிழித்துக் கொள்ளாமல்) தெருவில் இறங்கி ஓடிவிட்டார்.//

    நல்ல நகைச்சுவைப் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. ஆர் வி எஸ் - ராமு சாமி!

    பதிலளிநீக்கு
  3. இது கதையாகவும். நல்ல நகைச்சுவையாகவும் இருந்தாலும் அந்த
    ஏகாம்பரம் மாதிரியான மனிதர்கள் அலாதியானவர்கள் சார் , அவர்களின் ரசனை வித்தியாசமாக இருக்கும் சக மனிதனை ரசிப்பதற்கும் ஒரு அற்புத ரசனை வேண்டும் சார் , நல்லப் பதிவு

    பதிலளிநீக்கு
  4. படித்து விட்டு நன்றாய் சிரித்தேன்.

    பதிலளிநீக்கு
  5. பதிவாசிரியர்12 ஜூலை, 2011 அன்று PM 6:13

    ஏ ஆர் ஆர் சொல்வது மிகவும் சரி. பஸ் ஸ்டாண்ட்களிலும், இரயில்வே ஸ்டேஷன்களிலும், இன்னும் தபாலாபீஸ் போன்ற இடங்களிலும் நான் ஏகாம்பரம் போன்ற காரக்டர்களை அன்றாடம் நிறைய பார்த்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  6. கதையைப் பாராட்டியவர்களுக்கு எங்கள் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. தென்கச்சி சுவாமிநாதன் தினமும் 'இன்று ஒரு தகவல்' என்ற வானொலி நிகழ்ச்சியில் தினமும் ஒரு தகவலையும், ஒரு நகைசுவையான விஷயத்தையும் சொல்லுவார். இதை கேட்டுவிட்டு தான் தினமும் அலுவலகம் செல்ல கிளம்புவேன். அவர் கூறும் தகவல்கள் எல்லாம் மிகவும் அருமையாக இருக்கும். அவர் குரலும், பேசும் விதமும் மிகவும் ரசிக்க வைக்கும்.

    அவர் சொன்ன துணுக்கை வைத்து எழுதி உள்ள இந்த கதையும் மிகவும் சுவாரசியம்.

    இயற்கையை ரசிப்பது போல், பேருந்தில், ரயிலில், நடந்து செல்லுபோது என்று எதிர்ப்படும் மனிதர்களை ரசிப்பதும் மிகவும் சுவாரசியமான பொழுது போக்கு. கோவிலுக்கு செல்லும்பொழுது கடைசியாக நமஸ்காரம் செய்துவிட்டு இதற்காகவே சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு கிளம்புவேன். இது ஒரு இனிமையான, சுவாரசியமான பொழுது போக்கு.

    பதிலளிநீக்கு
  8. கதை வித்தியாசமாக இருந்தது. எனக்கும் திண்ணையில் (இப்ப பால்கனியில் நின்று கொண்டு) தெருவில் போவோர் வருவோரை வேடிக்கைப் பார்க்கப் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!