புதன், 27 ஜூலை, 2011

எழுத்துப் புதிர் - எழுத்தாளர்ப் புதிர்!


       
எல்லா எழுத்தாளர்களுமே ஏதோ ஒரு வார்த்தையில், பாணியில், ஏதோ ஒன்றில் தன்னை வெளிப் படுத்தி விடுகிறார்கள். கடற்கரையில் காலார நடக்கும்போது வீசும் காற்றில் பறந்து வரும் ஒரு பேப்பரில் பெயரில்லாத ஒரு படைப்பை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதா.... அதே பீச்சில் கடலை வாங்கித் தின்று விட்டு அதைத் தூக்கி எறியுமுன் கசங்கல்களை சரி செய்து அதில் என்ன எழுதியிருக்கிறது என்று படித்த அனுபவமுண்டா? மளிகைக் கடையிலிருந்து பருப்பு கட்டி வந்த (முன் காலத்தில்! இப்போது எல்லாம் பிளாஸ்டிக் பாக்கெட்தானே..!) அப்போது படித்ததை யார் எழுதியது என்று ஒரு நிமிடம் யோசிப்போம் இல்லையா... அது போல ஒரு விளையாட்டு.... எல்லாமே சுலபமாக எடுத்திருக்கிறேன். அதாவது நான் சுலபமாக புத்தகத்தைப் பார்த்து எடுத்திருக்கிறேன்! அதைப் படிக்கும்போது யார் எழுதியிருப்பார்கள் என்று யூகிக்க முடிகிறதா..... இதில் யார் யார் எதை எதை யூகிப்பார்கள் என்று எனக்கு ஒரு கற்பனை இருக்கிறது!
                 
எல்லோரும் எல்லா புத்தகத்தையும் அல்லது எல்லா எழுத்துகளையும் படித்திருக்க முடியாது என்பது சரி. ஆனால் இவர்களின் மற்ற படைப்புகள் இவர்களின் இந்த வரிகள் அடையாளம் காட்டுகின்றனவா? கண்டு பிடிக்க முடிகிறதா என்று பார்க்கும் ஆவல்தான்.

சில சமயம் எழுத்துகள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட முடியாத நேரத்தில் கதாபாத்திரங்கள் உதவலாம்! சில புகழ்பெற்ற கதாபாத்திரங்களை மறக்க முடிவதில்லையே... அட, அது மட்டுமில்லை. இது போட்டி இல்லையே... எனவே அந்த ஒரு பகுதியைப் படிக்கும்போது மனதில் எழும் கற்பனை நம்மை பல புதிய சிந்தனைகளுக்கு இட்டுச் செல்லலாம். அந்த குறிப்பிட்ட பகுதி சொல்லும் சாரத்தை ரசிக்கலாம்! 

இனி கண்டுபிடிக்க வேண்டியவை கீழே ஒவ்வொன்றாக...!

========================================================= 
            
1) "எப்போதுமே ஊருக்குப் போகும் மகிழ்ச்சியை விடவும் வீடு திரும்பும்போது கிடைக்கும் சந்தோஷமே அளப்பரியது. வீட்டைப் புரிந்து கொள்ளவே வெளியே போகிறேனோ என்றும் தோன்றுகிறது. உலகம் எண்ணிக்கையற்ற சாலைகளால் ஆனது. அவை பாம்பின் நாக்கைப் போல சீற்றத்துடன் துடித்துக் கொண்டே இருக்கின்றன..."
                   

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>  
                           
2) "கொஞ்ச நேரம் வெளியே வெட்டத்திலே போயி, சுத்த வாயுவை சுவாசித்து விட்டு வர' அவள் விரும்பும்போது தான் குறுக்கே நிண்ணால் ஒரு வித ஆங்கார வெறியோடு குழந்தைகளின் இளம் முதுகுகளை அவள் பதம் பார்ப்பது போன்ற அன்றைய அனர்த்தங்களுக்கு அது காரணமாகி விடும் என்று பேசாமல் இருந்து விடும் நிலைமை.

தான்தான் வரவர மனசின் போராட்டங்களாலும், உடம்பின் வியாதியாலும் குறுகிக் கொண்டே இருந்தோம்! அவள் மேனியில் நாள் செல்லச் செல்ல ஒரு மதர்ப்பும் கொழுப்பும் ஏறிக் கொண்டே இருந்தன.

அதைக் காண்கையில் ஒரு பயம்..... "
                     
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
                              
3) "ராஜி உன்னை நான் நேசிக்கிறேன். என்னால வண்ணமா பேச முடியாது. பேசத் தெரியாது எனக்கு. ஆனா ஒரு பெண்ணை மதிச்சி கல்யாணம் பண்ணி குடித்தனம் பண்ணத் தெரியும். நான் ஐயர் இல்லை. ஆனா எல்லா ஐயரையும் விட நான் உசத்தி. எங்கிட்ட ஒரு கெட்ட பழக்கம் கிடையாது. இந்த வீட்ல நான் சேந்துட்ட பிறகு மறந்தும் மாமிசம் சாப்பிட்டது கிடையாது. என் மேல உனக்கு இஷ்டம் இருந்து நம்பிக்கை இருந்தா இந்த காப்பியை எனக்குக் கொடு. இல்லைன்னா தாராளமா அந்த ஐயரிடம் எடுத்துண்டு போ. நானும் பட்டை அடிச்சிகிட்டு காலைல எழுந்து படத்து முன்னாடி சுத்தலாம். எனக்கு இதுல நம்பிக்கை இல்லை. நான் மனுஷாளை நம்பறேன், மனுஷாளை மதிக்கிறேன். பிறகு உன் இஷ்டம்..." ராஜி தவித்தாள். கொல்லைக் கதவு பார்த்தாள். திரும்பி முற்றம் நோக்கினாள். வயிறு குழைந்தது. தொடை தசைகள் அசைந்தன. கால் கணுவின் வழியே நிற்கும் வலிவு கீழிறங்கியது...."
                        

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
                            
4) "நான் மண விழாக்களுக்கோ மரண வீடுகளுக்கோ செல்வதில்லை. இரண்டுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது. மண விழா, உயிர் உற்பத்திக்காக நடைபெறும் சடங்கு; மரணம், உயிரின் விடுதலை. மண விழாக்களுக்குச் செல்லாததன் காரணம், தம்பதியர் எப்போது விவாகரத்து செய்யப் போகிறார்களோ என்று மனதுக்குள் எழும் அபத்த உணர்வு. மரண வீடுகளைத் தவிர்ப்பது, அங்கே கிடக்கும் பூத உடல் ஏற்படுத்தும் அச்சத்தினால். பிறந்தோர் யாவருக்கும் மரணம் நிச்சயம் என்பது தெரிந்ததே என்றாலும், அவ்வளவு கிட்டத்தில் மரணத்தைப் பார்க்கும் போது எழும் அச்ச உணர்வு அலாதியானது......." 
                   
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>    

                 
5) "ஸில்வியாவின் பெயர் நினைவில் இருந்தது.அவளுடைய முகமும் நினைவில் இருந்தது. உண்மையில் அவள் பயன்படுத்திய பெர்ஃபியூம் கூட நினைவில் இருந்தது.இருபத்திரண்டு ஆண்டுகள் உருண்டு சென்றபோது கூட அவள் அன்று வந்த அழுகையை அடக்க மாட்டாமல் மூக்கை உறிஞ்சிய காட்சி இன்னும் பசுமையாக இருக்கிறது. 'இருக்கிறது' என்று சொல்வது தவறாகலாம். எங்கோ புதைந்து கிடந்தது, நேற்று டல்பதடோ முகத்தைப் பார்த்தவுடன், எங்கோ அதலபாதாளத்திலிருந்து கிளம்பி இப்போது மனது முழுதும் நிரம்பி இருக்கிறது. ஆனால் நான் விமான நிலையம் சென்றது இன்னொரு முகத்தை என் நினைவுக்குக் கொண்டு வருவதற்கு. இருபத்திரண்டு ஆண்டுகள் என் கண்முன் இருந்தும் என்னால் மனத்தில் உருவகப்படுத்திக் கொள்ள முடியாத என் மகளின் முகத்தை என் எண்ணங்களிடையே கொண்டு வருவதற்கு. இங்குதான் அவளை நான் கடைசியாக உயிருடன் பார்த்தது.இங்குதான் அவளுடைய பாதி கருகிய சடலத்தை நான் கடைசியாகவும் முதலாகவும் பார்த்திருக்கக் கூடியது."   

                        
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 
                    
6)  "பிச்சுமணி! உன் தாத்தாவுக்கு இருப்பதெல்லாம் நீ ஒருவன்தான்.அவரைப் போல உன் மீது அன்போ உன் எதிர்கால நன்மைகளில் அக்கறையோ வேறு யாராலும் வைக்க முடியாது. அதனால் உன் அந்தஸ்துக்கும் வயசுக்கும் உன் எதிர்காலத்துக்கும் சரியான ஒரு பெண்ணைத்தான் நீ கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், பொருத்தமில்லாத பெண்ணை நீ நாடக் கூடாது என்றும், அவர் (ராமதுரை) நினைப்பதும், அதற்காக உன்னோடு சண்டை பிடிப்பதும் இயற்கைதான். அது நியாயந்தான்! அவரைப் போலவே நானும் நினைக்கிறேன். ஆகவே என்னை முன்னிட்டு உங்களுக்குள் இப்படி ஒரு சண்டை மூன்டிருக்கவே வேண்டியதில்லை"


"சரி உமா! என் கல்யாணத்துக்கு உங்களுக்கு ஒரு இன்விடேஷன் அனுப்ப வேண்டும் என்றோ, என் தாத்தா நிச்சயித்த பெண்ணையே நான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்றோ நீங்கள் ஏன் சொல்லவில்லை?"
                    
>>>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>>>>  
                    
7) "பெரும்பாலான கதைகள் ஒரு பேசப் பட்ட வாக்கியத்தில் முடிகின்றன.
வாழ்க்கையின் அபத்தத்தை சுட்டிக்காட்டி ஒரு அபத்தத்தில் முடிகின்றன. சிறுகதை ஒரு தனிப்பட்ட சுருக்கமான அனுபவத்தைப் பேசுகிறது. அன்றாட அலுப்பு வாழ்க்கையில் உயிரின் புதிர் சட்டென்று புரியும் கணம் ஒன்றை அது சொல்லும். அந்த கணத்தை ரெவேலேஷன் அல்லது வெளிப்பாடு அல்லது epiphany என்கிறார்கள். அவதாரம், அற்புதத் தோற்றம் என்று பலதும் சொல்கிறார்கள். இது zen தத்துவத்திலும் உண்டு. Satori என்பார்கள்"
                       
>>>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>>>>  
                        
8)    "தெரியாததைப் பற்றி பயப்படுவதாக நீங்கள் கூறுகிறீர்கள். நாளைய தினத்தின் தெரியாததைப் பற்றி, அல்லது மெய்யாகவே தெரியாததைப் பற்றி உங்களுக்குத் தெரியாத ஏதோ ஒன்றைப் பற்றி நீங்கள் பயப்படுகிறீர்களா? அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒன்றின் மீது பற்று வைத்து அதைப் பற்றி நீங்கள் பயப்படுகிறீர்களா? ஆகையால் தெரிந்ததை விடுவதற்கு பயப்படுகிறீர்களா? நீங்கள் இறப்பைக் கண்டு பயப்படுகையில் தெரியாததைக் கண்டு பயப்படுகிறீர்களா? அல்லது உங்கள் இன்பங்கள், உங்கள் குடும்பம், உங்கள் சாதனைகள், உங்கள் வெற்றி, உங்கள் மேஜை, நாற்காலி போன்ற தெரிந்த விஷயங்கள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வருவதைக் கண்டு பயப்படுகிறீர்களா? தெரியாத ஒன்றைப் பற்றி ஒருவர் எப்படி பயப்பட முடியும்? தெரியாததைப் பற்றி பயப்படும் உங்கள் எண்ணம் தெரிந்த தளத்திற்கு அதை எடுத்துச் செல்ல விரும்புகிறது. அதனால் எண்ணம் கற்பனை செய்யத் தொடங்குகிறது. ஆகையால் உங்கள் தெய்வம் உங்கள் கற்பனையின் அல்லது பயத்தின் உற்பத்தி. ஆகையால் தெரியாததைப் பற்றி அனுமானிக்க வேண்டாம். தெரிந்ததைப் புரிந்து கொள்ளுங்கள். தெரிந்ததினின்றும் விடுபடுங்கள்."  

                    
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
                            
கெட் ரெடி, ஒன் ... டூ.... த்ரீ ..  ஜூட்.....!  
                           

41 கருத்துகள்:

  1. தமிழ் உதயம் - சரியான பதில்.

    பதிலளிநீக்கு
  2. முதல்...எஸ்.ரா அவர்களது..

    மீதி படித்துவிட்டு வருகிறேன்..

    பதிலளிநீக்கு
  3. 1.எஸ்.ராமகிருஷ்ணன்
    7. சுஜாதா
    மற்றதை பொறுமையாய் படித்துப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. 1.பயண அனுபவங்களை சுவை பட எழுதும் எஸ்.ராமகிருஷ்னன்
    3.இந்த மாதிரியான எழுத்து நடையாலேயே எனக்கு பிடிக்காமல் போன பாலகுமாரன்,
    வேற யாரையும் தெரியல

    பதிலளிநீக்கு
  5. ஸில்வியா.....சுஜாதா...சில்வியான்னு தானே எழுதியிருப்பாரு...

    பதிலளிநீக்கு
  6. ஒன்று, மூன்று, ஏழு இதுவரை எல்லோரும் சரியாகச் சொல்லியிருக்கின்றார்கள். வெல் டன் பத்மநாபன், ஹெச் வி எல், ஏ ஆர் ஆர்!

    பதிலளிநீக்கு
  7. எனக்கும் 3 மட்டும் வாசித்ததுமே புரிந்து விட்டிருந்தது:)!

    பதிலளிநீக்கு
  8. நான் விடை சொல்லும் ஆர்வத்தில் உங்களின் இந்த முத்தான முழு முயற்சியை, பாராட்ட மறந்து போனேன், வித்தியாசமான நடையில், மாறுபட்ட பார்வையில் , புதுமையான வடிவில் , ரசனையை சொல்லும், தூண்டும், அமர்க்களமான பதிவு நண்பரே.

    பதிலளிநீக்கு
  9. சாய்ஸ் கொடுத்தால் சுலபமாக இருக்கும்! முடிந்தால் கொடுங்களேன்!

    பதிலளிநீக்கு
  10. 6. ஜெயகாந்தன் ?
    10. ஓஷோ ?

    உங்களுடைய இந்த முயற்சி மிகவும் நன்றாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. ஒன்று, மூன்று, ஏழு தவிர வேறு எதற்கும் இதுவரையிலும் சரியான பதில் யாரும் பதியவில்லை.

    பதிலளிநீக்கு
  12. 1. எஸ். ராமகிருஷ்ணன்
    2, தி.ஜானகிராமன்,
    3,பாலகுமாரன்
    4,தெரியவில்லை
    5,ராஜேஷ்குமார்
    6,தி.ஜானகிராமன்??
    7,சுஜாதா
    8,மதன்...கேள்விபதில்கள்

    பதிலளிநீக்கு
  13. ஒன்று கூடத் தெரியவில்லையே?

    பதிலளிநீக்கு
  14. மறுபடியும் சொல்கிறோம்: ஒன்று, மூன்று, ஏழு தவிர வேறு எதற்கும் இதுவரையிலும் சரியான பதில் யாரும் பதியவில்லை.
    (வல்லிசிம்ஹன் உள்பட)

    பதிலளிநீக்கு
  15. வல்லிசிம்ஹன்!

    (4) அசோகமித்திரன்

    பதிலளிநீக்கு
  16. ஹெச் வி எல் கூறியுள்ள ஐந்தாவது விடை சரி.

    பதிலளிநீக்கு
  17. 7. ரமணி சந்திரன்?
    பாலகுமாரன், சுஜாதா ஏற்கெனவே சொல்லிவிட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  18. 6: சுஜாதா அல்லது ரா.கி.ரங்கராஜன்?

    பதிலளிநீக்கு
  19. 1: எஸ்.ராமகிருஷ்ணன். தற்செயலா நேற்றிரவு படித்து பயந்தது.

    பதிலளிநீக்கு
  20. //இதில் யார் யார் எதை எதை யூகிப்பார்கள் என்று எனக்கு ஒரு கற்பனை இருக்கிறது!

    இதைப் எழுதிப் போடுங்க முதலில். சுவாரசியமா இருக்கும் போலத் தோணுது.

    பதிலளிநீக்கு
  21. 8 ஏதோ மொழிபெயர்ப்பு போலத் தோன்றுகிறது. எழுத்தாளர் நடை என்று சொல்ல முடியாமல் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  22. 8: மொழி பெயர்ப்பு என்பது சரி. எட்டாம் கேள்விக்கு எங்கள் ப்ளாக் வாசகர்கள் சுலபமாகக் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று நினைத்தோம். ஒன்று, மூன்று, ஐந்து ஏழு ஆகியவை மட்டும்தான் இதுவரை பதியப்பட்ட பதில்களில் சரி. இரட்டைப்படைக் கேள்வி எண்கள் அனைத்துக்கும் இன்னும் சரியான விடைகள் வரவில்லை.

    பதிலளிநீக்கு
  23. மன்னிக்கவும். 6. ரமணி சந்திரன் என்று எழுதுவதற்கு பதிலாக 7. ரமணி சந்திரன் என்று எழுதி விட்டேன். ஆனாலும் சரியா என்று தெரியாது.
    இது மிகவும் கடினமான புதிர்தான். இருந்தாலும் பதிவு சுவாரசியமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  24. 6 சுப்ரமண்ய ராஜூ போலிருந்தாலும் பிச்சுமணி உதைக்கிறது.

    பதிலளிநீக்கு
  25. அப்பாதுரை நாலு மற்றும் எட்டு கரெக்ட். இரண்டும் ஆறும் மட்டும்தான் இனி சரியான விடை சொல்லப்பட வேண்டியன.

    பதிலளிநீக்கு
  26. வித்தியாசமான நடையில், மாறுபட்ட பார்வையில் , புதுமையான வடிவில் , ரசனையை சொல்லும், தூண்டும், அமர்க்களமான பதிவு //

    எல்லாம் எங்கேயோ படித்த ஞாபகம்.....

    பதிலளிநீக்கு
  27. ”இந்த எழுத்துப்புதிர் - எழுத்தாளர் புதிர்!” என்ற தங்களின் இந்தப்புதிய முயற்சிக்கு என் பாராட்டுக்கள்.

    நான் எந்தப்பிரபலங்களின் எழுத்துக்களையும் அதிகமாகப் படித்தது இல்லை. எனவே என்னால் யூகிக்க முடியவில்லை.

    வலைப்பூவில் எழுதுபவர்களின் படைப்புக்களைப்பற்றி நீங்கள் குறிப்பிட்டிருந்தால், அதிகமான பேர்கள் சுலபமாக விடை கூறி விடுவார்கள் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  28. 4. சமீபத்திய 'கல்கி'யில் வந்த இரண்டு எழுத்துக்காரரின் கட்டுரையின் ஆரம்ப வரிகள் தானே இவை?.. அதில் படித்ததாகத் தான் நினைவு.

    அசோகமித்திரன் என்று யூகித்ததிற்கும் காரணம் உண்டு.

    பதிலளிநீக்கு
  29. இந்த இரண்டு எழுத்துக்காரர் 'துக்ளக்'கில் அல்லவோ?..

    பதிலளிநீக்கு
  30. குன்றென நின்று தன்னை நோக்கிய
    ரோமியோவை, காதலுடன் பார்த்து,
    ம் ம் - சொல்லு என்று
    பேராவலுடன் கேட்ட அழகி ஜூலிய--
    ட்டிடம் ரோமியோ - "எனக்கு
    டை கட்டக் கூடத் தெரியாது.
    குறு...கிய கால அவகாசத்தில் எப்படி?
    ம் ம் ம் - முயற்சிக்கின்றேன்,
    பத்து நாட்களில் ஃபாரி
    ன் நாகரீகங்கள் கற்க!" என்றான்.
    இது யார் எழுதியது? முதலெழுத்துக்களை மட்டும் வைத்துப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  31. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  32. எடுத்துக் காட்டியிருப்பவை யாவும் வகைப்படுத்திருப்பது போல வசீகர வரிகளே. வடித்த பேனாக்கள் யாருடையவை என்பதை அறியக் காத்திருக்கிறோம். மீதி விடைகளை நீங்களே தந்து விடுங்களேன்:)!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!