Tuesday, August 9, 2011

கிருஷ்ணாவும் நிலாவும்...

                                  
கொஞ்ச நாட்களாக எங்கு போனாலும் ஒரே கேள்வி..
"தெய்வத்திருமகள் பார்த்துட்டீங்களோ?"
முதலில் எல்லாம் சாதாரணமாக இல்லை என்று சொல்ல ஆரம்பித்தேன். அப்போது நம் பக்கத்திலிருப்பவர்கள், நாம் பதில் சொல்லுமுன் முந்திக்கொண்டு,
"ம்...பார்த்துட்டேன் சார்...சே...! என்னா படம் சார்..." என்பார்கள். உடனே கேள்வி கேட்டவர் அந்த அடுத்த கேள்வியைக் கேட்பார்.
"அழுதீங்களோ ...?"                         
இது ஒவ்வொரு இடத்திலும் தொடர, 'என்னடா மக்கள் அழுவதற்கு இவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்களே' என்று தோன்றியது. டிவி சேனல்களில் பேட்டியளித்த விக்ரமும் எல்லா ரசிகர்களிடமும் 'அழுதீர்களா' என்றுதான் கேட்டார். அழவில்லை என்று சொன்ன ஒருவரை 'தர்ம அடி கொடுத்து அழ வையுங்க' என்றார்! ரசிகர்களும் 'நான் அழுதேன் சார்' என்று சொல்வதை பெருமையாகச் சொன்னார்கள்.                
அதற்கு அப்புறம் 'படம் பார்த்தீங்களோ' என்று கேட்பவர்களிடம் சற்று கூச்சத்துடன் தலையைக் குனிந்து கொண்டு தயக்கமாக 'இன்னும் இல்லைங்க..' என்று சொல்லத் தொடங்கி, அவர் நம்மை ஒரு மகா கேவலமான ஜந்துவைப் பார்ப்பது போல பார்ப்பதைக் கண்டு மனம் நொந்தேன்.  

'சீக்கிரமே நாமும் தெய்வத்திருமகள் பார்த்து அழணும்'  

என்னை விட வேகமாகக் கரைக்கப்பட்ட என் மனைவி, என்னை அழைத்துப் பார்த்து, நான் மனம் துணியாததால், தோழிகளுடன் படம் பார்த்து வந்து ஜோதியில் கலந்தாள்.
           
இந்த முறை அந்தக் கேள்வியை நான் கேட்டேன்.
"அழுதியா?"
"சே..சே...அவ்வளவா இல்லை...(அழுதியான்னு கேட்டா அவ்வளவா இல்லை என்றால் என்ன அர்த்தம்?) அதுக்கு பயந்துதான் .இன்னும் பார்க்காமல் இருக்கீங்களோ... ஆனால் தியேட்டரை விட்டு வெளியில் வந்தால் எல்லோரும் அடுத்தவங்க முகத்தையே பார்க்கறாங்க... நீங்க எப்போ பார்க்கப் போறீங்க..?"    
"இல்லை... இன்னும் சிடி யாரும் கொடுக்கவில்லை.."    
"சிடியா...? விக்ரம் என்ன சொன்னார்?"      
"என்ன சொன்னார்?"    
"தியேட்டரில் பாருங்கன்னு சொன்னார் இல்லே... அவர் என்னங்க சொல்றது... இதை எல்லாம் தியேட்டரில் பார்த்துதான் அழணும்... சே... ரசிக்கணும் "  
'சே... மனைவி கூட நம்மை மதிக்கவில்லையே...!'    
              
பார்த்து அழுவதற்கு நாள் குறித்தேன். கமலாவா, காசியா, உதயமா, ஜோதியா..(பயப்படாதீங்க..எல்லாம் தியேட்டர்ங்க...) எங்கு போய் அழுவது என்று விவாதிக்கப்பட்டது. குறைந்த செலவில் திரையிலிருந்து முடிந்தவரை தளளி அமர்ந்து அழும் வண்ணம் எந்த இடம் என்று ஆலோசித்தேன். அழுகை வரவில்லை என்றால் அடிப்பார்களோ என்றும் பயம் இருந்ததைச் சொன்னேன்.     
மனைவி, "பயப்பாடாதீங்க... அப்படியெல்லாம் நடக்காது... நான் பார்த்தவரை.." தைரியப்படுத்துகிறாளா, பயமுறுத்துகிறாளா...     
சுபயோகம் சுபதினம் எல்லாம் பார்க்காமலேயே அந்த நாள் வந்தது.
இனி சினிமா பற்றி...
============================
இது போல உறவுகளின் மேனமை சொல்லி சமீபத்தில் வந்த பு,பெ. படங்கள்... அப்பா மகளுக்கு அபியும் நானும், அப்பா மகனுக்கு எம்டன் மகனும்,சந்தோஷ் சுப்ரமணியமும்...

இது சற்று வித்தியாசம். ஆறு வயது மன நிலையைத் தாண்டாத தந்தை தன் மகளை மீட்கப் போராடும் கதை.
   
இந்த மாதிரி படங்களுக்கு எந்த விதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல் போவது நல்லது. இல்லா விட்டால் ஏற்கெனவே காதில் விழுந்துள்ள விமர்சனங்கள் காரணமாக பாதிக்கப் பட்டு படம் பார்க்கும்போது பெரும்பாலும் எதிர் மன நிலையிலும் ஓரளவு சார்பு நிலையிலும் பார்க்க நேரிடும். இந்தப் படத்துக்கு பெரிய விளம்பரம், மக்கள் தானாகவே அடுத்தவர்களை படம் பார்க்க வேண்டுகோள் விடுத்து ஆர்வத்தைத் தூண்டுவது. வழக்கம் போல இதன் பலவீனமும் அதுவேதான்.

மனவளர்ச்சிக் குன்றியவனை ஒரு பெண், அதுவும் பணக்காரப் பெண் மணம் செய்வாளா, அதுவும் காதலித்து........ இடிக்கும் லாஜிக்குக்கு விளக்கம் அவள் சமூக சேவகி. இவர்களுக்குக் குழந்தை பிறக்குமா என்ற அடுத்த சந்தேகத்துக்கு எம் எஸ் பாஸ்கரும், அவர் மனைவியும், அந்த சாக்லேட் திருடும் பையனும் அவ்வப்போது அளிக்கும் விளக்கங்கள். எனினும், டைரக்டர் அந்த மனைவியை காட்டுவதைத் தவிர்ப்பதோடு ஃபிளாஷ்பேக் என்ற பெயரில் அவர்கள் உறவைக் காட்டும் காட்சிகளைத் தவிர்த்திருக்கிறார். சொல்லாத விஷயங்களுக்கு மதிப்பு கூடத்தான்!
         
'மேல பார்த்துச் சொல்லும்' கதா நாயகனின் அப்பாவித் தனத்தையும், குருவிக் குஞ்சைக் காப்பாற்றும் நல்ல குணங்களையும் காட்சிகளில் காட்டி நகர்கிறார் இயக்குனர். கடைசிக் காட்சிக்கு அச்சாரம்!    

எங்கிருந்து பிடித்தார்களோ அந்தக் குழந்தை... சாரா! அப்புறம் டிவி பேட்டிகளில் எல்லாம் அந்த க்ளைமேக்ஸ் காட்சி அபிநயங்களைத் தனியாகவே செய்து காட்டினாள். என்ன அபிநயம், என்ன நடிப்பு... இத்தனை வருட அனுபவத்தில் நடிக்கும் விக்ரமின் உயரத்துக்கு வரும் அவள் நடிப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

'யுத்தம் செய்' படத்தில் வித்தியாசமாகத் தோன்றிய ஒய். ஜி மகேந்திரா இதிலும் சிறு பாத்திரத்தில். அதிகம் பேசா விட்டாலும் 'நல்ல அப்பா'வாக மாறுவது அழகு. 'அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்' பாணியில் அவர் சக குடித்தனக்காரர்களுக்கு கொடுக்கும் விளக்கம் அர்த்தமுள்ளது.
   
அனுஷ்காவா அமலாவா... அனுஷ்காதான். ! நாசருடன் தடாலடி விவாதங்கள் செய்வது ரசிக்கக் கூடியது. கேசுக்கு அலையும் வக்கீல் கேசை தக்க வைக்க என்றில்லாமல் கிருஷ்ணாவுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று மெனக் கெடுவதும், அவர் அசிஸ்டன்ட் ஆக லூட்டியடிக்கும் சந்தானமும்.. ஸ்வெட்டரை கழற்ற வராமல் சந்தானத்தின் திண்டாட்டமும் மாத்தி யோசிக்கும் அனுஷ்காவின் யோசனையும்...    
அமலாபால் வரும்போது வரும் பின்னணி இசைத் துணுக்கு...
       
அரசியலில் சிக்கி நிற்கும் வடிவேலுவின் ப்ரேக் சந்தானத்துக்கு சரியான வாய்ப்பு. ஏற்கெனவே சமீப காலங்களில் நன்றாகச் செய்துவரும் சந்தானம் இப்போது கொஞ்சம் உஷாராக இருந்தால் இன்னும் பெரிய லெவலில் வலம் வரலாம் என்று தோன்றுகிறது.

ஐ கியூ அதிகம் உள்ளவர்கள் என்று அறியப் படும் வக்கீலும் அவர் சமூக சேவகி மனைவியும் பிள்ளையை கவனிப்பதில்லை என்பதையும், கிருஷ்ணா தன் குழந்தைக்கு மருந்து வாங்கிக் கொடுத்த அனுபவத்தில் மருந்து வாங்குவதும், 'குழந்தையை நீ எப்படி பார்த்துக் கொள்வாய்' என்று கேட்கும் நாசர் இந்த சம்பவத்தாலும் பாதிக்கப் பட்டு மனம மாறுவது கவிதை.
    
அப்பா குழந்தை அபிநய சம்பாஷணையை ஜட்ஜ் உட்பட எல்லோரும் உணர்ச்சி பொங்க பார்த்துக் கொண்டிருப்பது... அப்பப்பப்பப்பா.... அடடடடா... வழக்கமான ஜட்ஜ் வேஷக்காரர் போல இல்லாமல் இவர் இயல்பாக இருக்கிறாரோ...     
'ஆரீரோ... ஆரீரோ... இது தந்தையின் தாலாட்டு' பாடல் மனதில் நிற்கிறது. இந்தப் பாடலைக் கேட்கும்போது எனக்குத் தோன்றிய ஒன்று. அந்தப் பாடலின் ஆரம்பம் 'ராசிதான் கை ராசிதான் உன் முகமே ராசிதான்' பாடலையும், சரணத்தில் 'இரு விழியின் வழியே நீயா வந்து போவது' பாடலின் சரணமும் தெரிவது போல பிரமை. சங்கீதம் ஏழு ஸ்வரங்களுக்குள்தானே...  
                      
கடைசிக் காட்சியில் அனுஷ்கா சொல்லாத வசனம்.... "என் உழைப்பெல்லாம் பாழாப் போச்சே..."!!  
                           
கிருஷ்ணாவுக்கு எதிராக சாட்சி சொல்ல வந்த எம் எஸ் பாஸ்கர் (வித்தியாசமான கெட் அப்!) அண்ட் கோ எதனால் மனம மாறினார்கள், நாசர் குழாமில் சேம் சைட் கோல் போடும் அந்த காதல் தியாக வக்கீலை நாசர் எப்படி சந்தேகப் பட்டு ஃபோன் பில் பார்க்கிறார், அவ்வளவு அக்கறையான சாக்லேட் ஃபாக்டரி ஓனர் அடிபட்டு இருக்கும் கிருஷ்ணாவை விட்டு விட்டு அழகு அனுஷ்கா சொன்னதும் காணாமலேயே போய் விடுகிறாரே....

வேறு உறவுகளின்றி தனியாக இருக்கும் மனவளர்ச்சி குன்றிய ஒருவனிடம் ஒரு குழந்தை வளருவதை, அவனால் குழந்தையை, என்னதான் அருகிலிருப்போர்கள் உதவி இருக்கிறது என்றாலும் கூட, வளர்க்க முடியும் என்பதை நாம் சாதாரண வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் அபபடி எதிர்பார்க்கவைப்பது டைரக்டர் கதை சொன்ன உத்தி. கிருஷ்ணா பார்வையில் நாம் படத்தை பார்க்க வைப்பது அவருடைய திறமை. அதனால்தான் கடைசிக் காட்சிக்கு மக்கள் கிருஷ்ணாவுக்காக, கிருஷ்ணாவாக கண் கலங்குகிறார்கள். இப்போது அவனால் அவ்வப்போது வந்து குழந்தையை பார்த்துச் செல்ல முடியும் என்பதையும் மறந்து!
    
எனினும்,  
வித்தியாசமான படம். மனதைத் தொட்ட படம். 
     
பலவீன மனதுக்காரர்கள் கடைசிக் காட்சியில் தொண்டை அடைக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளன. கூட பார்த்தவர்கள் பெரும்பாலும் மாணவ, மாணவியர். அதாவது இளவயதினர். மூன்றாவது முறை நான்காவது முறை என்று பேசிக் கொண்டார்கள். அப்படிப் பார்க்க ஒன்றும் இல்லை என்று தோன்றியது.
                      
தியேட்டரின் வெளியே பெரும்பாலும் எல்லோரும் அடுத்தவர்கள் முகத்தை ஆராய்வதைத் தவிர்க்கலாம்!    
                    
இது விமர்சனம் இல்லை; படத்தைப் பார்த்ததன் பாதிப்பு, பாதிப்பின் பகிர்வு!  
                     

18 comments:

HVL said...

நானும் பார்த்தேன், ஆனால் பின் பாதி படத்தை மட்டுமே! அழுவதற்கு முழுசாய் தியேட்டருக்குப் போய் பார்க்கணுமோ, என்னவோ!

நீங்க அழுதீங்களா?

Madhavan Srinivasagopalan said...

சினிமா என்பது ஒரு பொழுது போக்கு அம்சமாகவொ அல்லது வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்கள் இருந்தாலோ, அத்தகைய சினிமாக்கள்(மட்டும்மே) நல்லவை... பார்க்கத் தகுந்தது..

அதை விடுத்து.. சோகம்.. அழுகை,.. ம்ம்.. அவனெல்லாம் காசு வாங்கிட்டு அழறான்.. நாமெல்லாம் காசு கொடுத்ததுக்கு அழறோம்..
இதுக்குத்தான் 'தண்டம் அழறது'ன்னு சொல்லுறாங்களோ ?

//இது விமர்சனம் இல்லை; படத்தைப் பார்த்ததன் பாதிப்பு, பாதிப்பின் பகிர்வு! //

நல்லவேளை.. எனக்கு சினிமா பாக்குற ஆர்வமோ ஆசையோ இல்லை..
எங்க ஊருல இதை தெலுகுலதான் பாக்கணும்..
தப்பிச்சேன் அம்மாடியோவ்...

டிஸ்கி : அனுஷ்காவிற்காக இவ்ளோ த்யாகம் செய்யவேண்டியதில்லை.. :-)

அமைதிச்சாரல் said...

நீங்க அழுதீங்களா :-))))))

அழலைன்னா அடிச்சு அழவைப்பாங்கன்னு வேற பயமுறுத்தறீங்க.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

meenakshi said...

இது விமர்சனம் இல்லை, படத்தை பார்த்ததின் பாதிப்பே இந்த பதிவுன்னு நீங்க எழுதி இருந்தாலும், படத்தை பத்தி எல்லாத்தையும் அழகா எழுதிடீங்க.
படம் ஓகே. விக்ரமின் நடிப்பும் ஒகேதான். குழந்தை சாரா கொள்ளை அழகு. நடிப்பு நெஞ்சை அள்ளுகிறது. அதுக்காக ஒரு முறை படத்தை பார்க்கலாம். அமலாவின் கண்கள் கவிதை பாடுகிறது.

meenakshi said...

இது விமர்சனம் இல்லை, படத்தை பார்த்ததின் பாதிப்பே இந்த பதிவுன்னு நீங்க எழுதி இருந்தாலும், படத்தை பத்தி எல்லாத்தையும் அழகா எழுதிடீங்க.
படம் ஓகே. விக்ரமின் நடிப்பும் ஒகேதான். குழந்தை சாரா கொள்ளை அழகு. நடிப்பு நெஞ்சை அள்ளுகிறது. அதுக்காக ஒரு முறை படத்தை பார்க்கலாம். அமலாவின் கண்கள் கவிதை பாடுகிறது.

இராஜராஜேஸ்வரி said...

படத்தைப் பார்த்ததன் பாதிப்பு, பாதிப்பின் பகிர்வு!
//

பாராட்டுக்கள்.

தமிழ் உதயம் said...

நான் அழாமல் தான் பார்த்தேன். தமிழ் திரையில் இசை ஞானி இல்லாத வெற்றிடத்தை, இம்மாதிரியான படங்களை பார்க்கும் போது உணர முடிகிறது.

Chitra said...

அழுவதற்கு என்ன டிவி சீரியலா? ஹா,ஹா,ஹா,ஹா....
Anyway, If I hadn't seen I am Sam, may be this movie would have looked better.

ராமலக்ஷ்மி said...

சுவாரஸ்யமான பகிர்வு, படம் பார்க்கப் போன கதையும்:)!

ஹுஸைனம்மா said...

//வந்த பு,பெ. படங்கள்/

பு, பெ - ????

//மனவளர்ச்சிக் குன்றியவனை ஒரு பெண், அதுவும் பணக்காரப் பெண் மணம் செய்வாளா, அதுவும் காதலித்து........ இடிக்கும் லாஜிக்குக்கு விளக்கம் அவள் சமூக சேவகி//

கொஞ்ச காலம்முன்வரை, ஹீரோன்னா அக்மார்க் நல்லவனா இருக்கணும். அப்புறம், ‘நெகடிவ் கேரக்டர்’ங்கீற பேர்ல, ஹீரோவே கெட்டவனாவும் இருப்பான். அவனுக்கும் ஒரு வில்லன் (கெட்டவனுக்கும் கெட்டவன்!!) இருப்பான். அவனையும் ஒருத்தி காதலிப்பாள் (தளபதில ஆரம்பிச்சுதோ இது?)

இந்தப் பாதிப்பினாலயோ என்னவோ, இளம்பெண்கள், காதலிக்கப்படுபவனின் குணநலன் பாராமல் காதலிக்க ஆரம்பித்தார்கள். சிகரெட், குடி இருந்தாலும் பிரச்னையில்லை என்ற நிலை வந்து, இப்பல்லாம் அது நார்மல்தான் என்ற ரீதியில் போயிட்டிருக்கு.

இனி ‘கிருஷ்ணா’ பாதிப்பில், என்ன நடக்குமோ... !!!!

இன்னொண்ணு, ‘அஞ்சலி’ படம் வந்தப்ப, அஞ்சலி மாதிரி குழந்தை உள்ள ஒருத்தர் சொன்னது: “மெஸேஜ் நல்ல மெஸேஜ். ஆனா, அஞ்சலிப் பாப்பாக்கள் அஞ்சலி போல அழகாய் இருப்பதில்லை. அதுதான், சமூகத்தில் அவர்களை ஏற்க முதல் தடை” என்றார். ‘கிருஷ்ணா’வுக்கும் இதே லாஜிக்.. அவரது நண்பர்கள் எப்படியிருக்கிறார்கள், இவர் எப்படி?..

//வேறு உறவுகளின்றி தனியாக இருக்கும் மனவளர்ச்சி குன்றிய ஒருவனிடம் ஒரு குழந்தை வளருவதை, ... நாம் சாதாரண வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ள முடியாது//
நிச்சயமா..

RAMVI said...

விமர்சனம் இல்லை இல்லை!! உங்க பாதிப்பை பகிர்ந்த விதம் நன்றாக இருக்கு.

Rathnavel said...

நல்ல பதிவு.

Tamil Stories Blogspot said...

அழகான படம், அருமையான விமர்சனம்... பகிர்வுக்கு நன்றி
http://tamilpadaipugal.blogspot.com

ஹேமா said...

நான் இன்னும் பாக்கல.பாக்கணும் ரசிக்கணும் அழணும் !

பத்மநாபன் said...

பாதிப்பு விரிவான விமர்சனமாக மாறியுள்ளது.... பாதிக்க தூண்டுகிறது

சாய் said...

நானும் அழுதேன் - ஏன்னா, (என்னுடன்) கண்ணாலம் காட்சி என்று இருக்கவேண்டிய அமலா பாலிடம் குழந்தையை விட்டு அவரின் (எங்களின் !) வாழ்க்கையை கெடுத்தற்காக !!

1982 / 1981 இல் வந்த Planes, trains & automobiles என்ற ஆங்கில படத்தை காப்பி அடித்து கமல் அன்பேசிவம் எனக்கு 1982 வந்த கதைக்கரு ஆனால் தமிழ் மக்களுக்கு புரியாது என்று எடுக்கவில்லை அதனால் பின்னால் எடுத்ததாக சொல்லி பெருமை பட்டுக்கொண்டார். தமிழ் மக்கள் மற்றும் அவரின் திரையுலக சக நண்பர்கள் அவரை ஆகா, ஓஹோ என்று மெச்சினார்கள். ஒரிஜினல் படத்தை பாருங்கள், சூப்பர் ஆக இருக்கும்.

அதேபோல் What About Bob என்ற ஆங்கில படத்தை காப்பி அடித்து "தெனாலி".

இந்த தெய்வத்திருமகள் - I am Sam என்ற படத்தில் இருந்து காப்பி !!

ஆங்கிலத்தில் "Inside man" என்ற படத்தில் டைட்டில் மியூசிக் போது ஏ. ஆர். ரெஹ்மானின் "chaiya chaiya chaiyaa" என்ற பாடலை உபயோக படுத்தியதற்கு கிரெடிட் என்று அவர் பெயரை போடுவார்கள்.

படத்தின் கருவே இங்கே காப்பி - இருந்தும் "நான் ரூம் போட்டு புல்லா யோசித்தேன்" என்று என்னவொரு புருடா !!

இதையெல்லாம் பண்ணுவாங்க, நான் மூன்று கதைக்கரு வைத்து அந்தக்காலத்தில் அலைந்திருக்கிறேன் - ஒரு பய சீண்டமாட்டான் ! அடபோங்கட !

Geetha Sambasivam said...

ஹாஹா, நான் அழவில்லை. அப்படி எல்லாம் சினிமாவுக்கு அழும் வழக்கம் சின்ன வயசில் இருந்தே இல்லை. கல் மனசோ?? தெரியலை. ஆனாலும் அழும்படியா எதுவும் இல்லை, என்பதோடு கடைசிக் காட்சி நன்றாக எடுக்கப்பட்டிருந்தது என்பதும் உண்மைதான். ரசிக்கும்படியாக இருந்தது. இளகிய மனம் இருந்தால் அழுதிருக்கலாமோ?

Geetha Sambasivam said...

பொதுவாய்த் தமிழில் தமிழ் வாசனையோடு, படங்கள் வருவதே இல்லை என்பதே உண்மை. ஒரு சில படங்களைத் தவிர. இந்தப் படமும் ஆங்கிலப் படத்தின் கதைக்கரு என்பதே உண்மை. அதைத் தமிழ் நாட்டுச் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் மாற்றி இருக்கின்றனர். சுயம் என்பதே இல்லாமல் தமிழ்ப்படங்கள் வருகின்றன! :(

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!