Thursday, September 1, 2011

நினைக்கத் தெரிந்த மனமே ....

                                                         
பேங்கில் நின்று கொண்டிருந்த போது பக்கத்திலிருந்த ஒருவர் தன் கைப்பை ஜிப்பை 'சர்ர்' எனத் திறந்தார். அடுத்த நொடி என் நாசியில் போண்டா, வடை மணம், சட்னி மணம் என்று கலவையாய் உணர்ந்தது. அது அவர் பையிலிருந்து அல்ல, என் நினைவடுக்குகளிலிருந்து பற்பல வருடங்களுக்கு முன்னால் நுகர்ந்த வாசனையை இப்போதும் மனம் உணர்ந்த உணர்வு அது. 
 

என் சிறு வயதில் அப்பா ஆபீசிலிருந்து வரும் போது பஜ்ஜி போண்டா சட்னியுடன் வாங்கி வருவார். பை திறந்தவுடனேயே வாசம் வந்து விடும். பிறகு தட்டில் வைத்து அம்மாவால் பரிமாறப் படும் அந்த போண்டாவின் சுவை கூட நாக்கில் ஒரு கணம் வந்து போகும்.   
               
எப்படி?

எங்கே, எப்போது பேக் ஜிப் திறக்கும் ஓசை கேட்டாலும் இந்த நிகழ்வு சகஜம். அதுவரை நினைவிலேயே இல்லாத அந்த சமாச்சாரம் எப்படி இந்த ஓசைக்கு நினைவுக்கு வருகிறது என்பது குறையாத ஆச்சர்யம்.                     

கடைகளில் விற்கும் தாமரை இலைகளைப் பார்த்தாலும் சரி, இல்லை அதை நினைத்துக் கொண்டாலும் நாக்கில் உருளை மசாலாவின் ருசி நினைவில் இனிக்கிறது. மூலையில் எங்கோ அடியின் ஆழத்தில் புதைந்திருக்கும் நினைவு நரம்பை மீட்டி ருசியை இப்போதும் நாக்கில் உணர வைப்பது எது? மசாலா, 'புஸ்' பூரியில் பொதிந்து மொடமொடப்பும், நனைந்த பூரியுமாக அகக் கண்ணில் தெரிவது பத்து வயதுக்குட் பட்ட ஞாபகம். அப்போதெல்லாம் ஹோட்டல்களில் பூரி மசால் காய்ந்த மந்தாரை இலையில்தான் கட்டி தருவார்கள். அந்த இலை வாசனையோடு இணைந்த பூரி மசால் வாசனையும் ருசியும் இப்போதும் உணர முடிகிறது!    

அதே போல இன்னொரு விஷயமும் ஆச்சர்யம். பஸ்ஸில் உட்கார்ந்திருக்கும்போது எதிர் வரிசையில் அல்லது தாண்டிப் போகும் பஸ்ஸை கண்கள் பார்த்திருக்கும். மனதில் பதியவில்லை என்று தோன்றும். ஆனால் மனதில் திடீரென 'ஒரு காதல் தேவதை' என்று பாடல் வரிகள் ஓடும். கொஞ்ச நேரம் கழித்துதான் இது மனதில் உறைக்கும். ஏன் என்று யோசித்துப் பார்த்தால் எதிரில் மாமல்லபுரம் பஸ் சென்றது நினைவுக்கு வரும்.

என்ன தொடர்பு?

                 
'ஒரு காதல் தேவதை' பாடலில் இரண்டாவது சரணத்தில் 'மாமல்லன் தன்னைக் கொஞ்சும் சிவகாமி நீயாக...காலங்கள் தோறும் அழியாத காதல் சிற்பங்கள் உருவாக...' என்று வரிகள் வரும். அந்த வரிகள் நினைவுக்கு வந்தாலும் பரவாயில்லை. ஏன் பாடலின் ஆரம்ப வரிகள் சட்டென மனதில் ஓடுகிறது என்பதும் புரியாத புதிர்.
         
உடல்நிலை சரியில்லாது வாந்தி எடுத்துக் கொண்டிருந்த ஓர் நாளில், திரும்பத் திரும்ப, பள்ளிப் பருவத்தில் பள்ளி லீவ் விட்டு, திறந்து சாப்பிடாமல் விட்டுப் போய், கெட்டுப் போன சாப்பாட்டை, ரெண்டு நாள் கழித்துத் திறந்து 'உவ்வே'வியது நினைவுக்கு வந்து கொண்டேயிருந்து, படுத்தியது. அந்த நினைவு எங்கிருந்து, எப்படி, ஏன் வெளியில் வந்தது?

ரோடில் போகும்போது யாரோ பேசிக் கொண்டு போகும் ஏதோ ஒரு வார்த்தை திடீரென ஏதோ பழைய நினைவை, அனுபவத்தை நினைவு 'படுத்தி' விடும்! சில சமயம் அது சரியாக நினைவுக்கு வராமல் பல்லிடுக்கில் மாட்டிய உணவுத் துகளாய் உறுத்தி, நினைவுக்கு சம்பந்தப் பட்ட விஷயம் வரும் வரை ஏதோ செய்து விடும். அதுபோல சில முகங்கள், சில கண்கள், சில குரல்கள் மனதில் மோதி எதையோ எங்கோ தேடுவதை உணர்ந்திருக்கிறீர்களா...
         
மறதி வரமா சாபமா?

மறதி என்பது சவுகர்யம்தான். ஆனால் மறக்க விரும்புவதை மறக்க முடிவதில்லை. மறந்து விட்டதாய் நினைக்கும் சில விஷயங்கள் ஆழ்மனக் கடலிலிருந்து மிதந்து மேலே மேலே ஏதோ ஒரு சுண்டுதலில் வரும் அற்புதம் பல சமயம் ஆச்சர்யத்தைத் தரும்.

சில இனிமையான கணங்களை மறுபடி வாழ்ந்து பார்க்க முடிந்தால்...

அல்லது அந்த அனுபவத்தை மூன்றாவது மனிதன் போல மறுபடி காட்சியாகப் பார்த்தால்...

இப்போதைய சோகங்கள் கூடலாம்...

சில கணங்களாவது மகிழ்ச்சியாகவும் இருக்கலாம்.

அபபடி ஒரு காட்சி வரும் பாடல் ஒன்று கீழே....மனைவி ஷர்மிளா தாகூரை இழந்த வயதான சஞ்சீவ் குமார் தன் இளவயது அனுபவங்கள் உள்ள இடத்துக்கு வரும்போது அங்கு தானும் தன் மனைவியும் இளமையில் சந்தோஷமாக ஆடிப் பாடியதை நினைப்பது,

இளவயது சஞ்சீவும், ஷர்மிளாவும் இவர் கண்ணெதிரேயே ஆடிப் பாடி இவரைத் தாண்டிக் கொண்டு செல்வது போல காட்சி அமைப்பு... தற்கால சஞ்சீவின் முகத்தில் இருக்கும் சோகம்...இழந்ததைப் பார்க்கும் பரவச அனுபவம்... இந்தப் பாடலும் காட்சியும் எனக்குப் பிடிக்கும்.

(இதைத் தமிழில், 'வசந்தத்தில் ஓர் நாள்' என்று கெடுத்திருந்தார்கள்....ஸாரி, எடுத்திருந்தார்கள்.)

                                 

18 comments:

விஜய் said...

டார்டாய்ஸ் அருமை

விஜய் said...

சிறு வயதில் shoe வாங்கியபொழுது நுகர்ந்த வாசனை

அம்மாவின் கைப்பக்குவத்தில் சாம்பாரும் நெய்யும் சேர்ந்த எச்சில் ஊறவைக்கும் வாசனை

சிறுவயதில் மரதுப்பாக்கியின் வாசனை

இதுபோல் சொல்லிக்கொண்டே போகலாம்

Nostalgic moments

தமிழ் உதயம் said...

நினைவுகள் அருமை வசந்தத்தில் ஒரு நாள். இரண்டு மொழிகளிலும் பார்த்திருக்கிறேன். சிவாஜிக்கு முதுமை தட்டியதால், தமிழ் படம் எடுபடவில்லையோ?

RAMVI said...

//சில இனிமையான கணங்களை மறுபடி வாழ்ந்து பார்க்க முடிந்தால்...

அல்லது அந்த அனுபவத்தை மூன்றாவது மனிதன் போல மறுபடி காட்சியாகப் பார்த்தால்...

இப்போதைய சோகங்கள் கூடலாம்...

சில கணங்களாவது மகிழ்ச்சியாகவும் இருக்கலாம்.//
உண்மை.

சுவையான மலரும் நினைவுகள்..

Madhavan Srinivasagopalan said...

ஆரம்பத்திலேய பசியைக் கிளப்பி விட்டதால்.. நான் சாப்பிட செல்கிறேன்.

Madhavan Srinivasagopalan said...

நனைக்கத் தெரிந்த மனமே.. உனக்கு ஓலத்தத் தெரியாதா ?

இராஜராஜேஸ்வரி said...

அனுபவத்தை நினைவு 'படுத்தி' விடும்

படுத்தி விட்டது.

இனிமையான பகிர்வு. அருமையான மலரும் நினைவுகளுக்கு பாராட்டுக்கள்.

அப்பாதுரை said...

அருமையான விஷயத்துக்கு ஹிப்நாடிக் சக்கரமா? நல்லவேளை, அவசரமாகக் கீழிறங்கினேன். சரியான ட்ரிகர்ஸ் பயன்படுத்தினால் அத்தனை நினைவுகளையும் வெளிக்கொணர முடியும் என்கிறார்கள். எண்ண அலைகள் வெளியில் கலந்து வாழ்கின்றன என்று தீர்மானமாக நம்பி நிழலாய் ஆராய்ச்சி செய்யும் கூட்டத்தின் அளவு ஆச்சரியப்பட வைக்கும். இன்னும் நூறு ஆண்டுகளில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வசதி கிடைக்கலாம் - நினைவுகளைத் தேவை/தேவயற்றவை என்று பிரித்து அதற்கேற்ப சேமிக்கவும் அழிக்கவும் இயலும். தேவையற்ற நினைவுகளை அழிக்காமல் இன்னொரு நாள் தேவைப்படலாம் என்று சேமித்து வைக்க வாடகைக் கிடங்குகளும் கிடைக்கலாம். இன்னார் நினைவலைகள் என்று அடையாளம் சேர்த்து மாதம் இரண்டு லட்ச ரூபாய்க்குக் குறைந்த விலையில் நினைவலைக் கிடங்குகள் விப்ரோ போன்ற வெளிச்சேவை நிறுவனங்களால் நடத்தப்படலாம். யார் கண்டார்கள்?

அப்பாதுரை said...

eternal sunshine of spotless mind - என்று ஒரு படம்.. பெயரைப் போலவே குழப்பித்தள்ளும் போரடிக்கும் படம். சுவாரசியமான கரு. நினைவுகளை அழிக்க வேண்டுமா? பத்து ரூபாய் தள்ளுபடிக்குக் கிடைத்த வாய்ப்பில் காதலியின் நினைவுகளை அழித்துக் கொண்டவனின் கதை.

எங்கள் said...

// நினைவுகளை அழிக்க வேண்டுமா? பத்து ரூபாய் தள்ளுபடிக்குக் கிடைத்த வாய்ப்பில் காதலியின் நினைவுகளை அழித்துக் கொண்டவனின் கதை.//

ததாஸ்து களிம்பு?

Lakshmi said...

மறதி என்பது சவுகர்யம்தான். ஆனால் மறக்க விரும்புவதை மறக்க முடிவதில்லை. மறந்து விட்டதாய் நினைக்கும் சில விஷயங்கள் ஆழ்மனக் கடலிலிருந்து மிதந்து மேலே மேலே ஏதோ ஒரு சுண்டுதலில் வரும் அற்புதம் பல சமயம் ஆச்சர்யத்தைத் தரும்.உண்மை தானே?

HVL said...

எனக்கும் இது போல அவ்வப்போது தோன்றுகிறது! நல்ல பதிவு.

பத்மநாபன் said...

நினைவு வரம் ...மறதி வரப்பிரசாதம் ...நினவு மட்டும் இல்லை என்றால் கிரிடிட் கார்டுக்கு வட்டி கட்டி மாளாது ..மறதி மட்டும் இல்லையென்றால் இன்றும் வாத்தியாரின் '' ஏறக்குறைய ஜீனியஸ் '' கதை படித்து குலுங்கி குலுங்கி சிரிக்க முடியாது ..

அப்பாதுரை said...

ஆகா, பத்மநாபன்! (ஸ்ரீராமுடைய பட்டத்துக்கு ஆபத்து வருகிறதோ?)

ஹுஸைனம்மா said...

//மறதி வரமா சாபமா?//

சில சமயங்களில் சாபம்போலத் தோன்றினாலும், நிச்சயமாக வரமேதான்!!

செல்ஃபோனைத் தாயின் கையில் கொடுத்து, “அப்பாவை வரச் சொல்லும்மா” என்று
மூன்று மாதங்களுக்குமுன் இறந்துபோன தந்தையைத் தேடும் இரண்டரை வயதுச் சிறுவனுக்கும், அவன் தாய்க்கும் (என் சித்தி மகள்) இந்த மறதி சீக்கிரமே வாய்க்க வேண்டிக் கொண்டிருக்கிறோம்.

பத்மநாபன் said...

ஸ்ரீராமின் பட்டத்துக்கு ஆபத்தா .....வாய்ப்பே இல்லை

சாகம்பரி said...

இது போன்ற கேள்விகள் எனக்கும் வரும். பதில் வேண்டிமெனில் டிஸ்கவரி சேனலின் mind control என்ற நிகழ்ச்சியை இணையத்தில் பாருங்கள்.

G.M Balasubramaniam said...

சில நிகழ்வுகள் நடக்கும்போது இதே நிகழ்வு எப்போதொ நடந்திருப்பதுபோல் ஒரு எண்ணம் சிந்தையில் ஓடும். ஆனால் அடுத்து நடக்கப்போவது மட்டும் நினைவுக்கு வராது. இதை சிலரிடம் பகிர்ந்த போது அவர்களுக்கும் இப்படித் தோன்றியுள்ளதாகக் கூறுகின்றனர். என் வயதுள்ளோர் பழைய நினைவுகளையே அல்சி ஆராய்ந்து பொழுது போக்குகிறோம்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!