திங்கள், 31 அக்டோபர், 2011

மூன்றாம் விதி - சவால் சிறுகதை - 2011

இரண்டு மூன்று நாட்களாக இருந்த டென்ஷன் இன்றுதான் குறைவாய் இருந்தது அலமேலுப் பாட்டிக்கு. அவள் பெண் வள்ளியின் கணவன் எங்கேயோ செய்த மொள்ளமாரித்தனத்துக்கு தண்டம் கட்ட ஆறாயிரம் ரூபாய் தேவை, 'உடனே வாங்கி வந்தா வூட்டுக்கு வா, அல்லாகாட்டி வராதே... அப்படியே அங்கேயே இருநதுடு' என்று சொல்லி வள்ளியைத் துரத்தி விட்டிருந்தான்.

கீரை விற்று வயிற்றைக் கழுவுவதில் எங்கே, யாரிடம் ஆறாயிரம் ரூபாய் கேட்க... ஒரு வாரமாகியும் ஒன்றும் பெயராத நிலையில் இரண்டு மூன்று நாட்களாக மருமகனின் தொல்லை தாள முடியாததாக இருந்தது. குடித்து விட்டு வந்து அவன் பேசும் பேச்சு சகிப்பின் எல்லையைத் தாண்டிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில், இன்று வியாபாரத்துக்குக் கீரை வாங்கப் போன இடத்தில் அலட்சியமாக வைக்கப் பட்டிருந்த பணச் சுருட்டைக் கண்டவள், ஒரே நொடித் தீர்மானத்தில் அதை எடுத்துக் கொண்டு வந்து விட்டாள். எண்ணிப் பார்த்தபோது சுளையாய் பத்தாயிரம் இருந்தது. தன்னுடைய சுருக்குப் பையில் வைத்துக் கொண்டவள், அப்புறம் சில்லறை எடுக்கும்போதெல்லாம் அது வெளியில் தெரிய, எடுத்து வெளியே ஓரமாக வைத்தாள். அப்புறம் தான் எடுத்தது போலவே யாராவது எடுத்து விடுவார்களோ என்று தோன்ற, பணத்தைச் சுற்றி ரப்பர் பாண்டு போட்டு பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி கூடையின் அடியில் கீரைகளுக்கு அடியில் வைத்தாள்.

கீரை விற்பனை சற்று மந்தமாக இருந்தாலும் நடுவில் ஒருவன் வந்து பதினைந்து கட்டுக் கீரை மொத்தமாக் வாங்கிப் போனதில் முதலில் ஏற்பட்ட சந்தோஷம், அவன் கலைத்து கலைத்து அடியைப் புரட்டிக் கீரை எடுத்தது நினைவுக்கு வர, அவசர அவசரமாக கூடைக்குள் தேடினாள். தேள் கொட்டியது போல இருந்தது. காணோம். மயக்கமானாள்.

----------------------------

பழனிச்சாமி அன்று காலை மார்க்கெட்டுக்குக் கிளம்பும்போது மனைவி அருகில் வந்தாள்.

"வழக்கமா வாங்கி வர்றது மாதிரி வாங்கி வராதீங்க.. இன்று திதி. நுனி வாழை இலை, வாழைப் பழம், எள்ளு வெற்றிலை எல்லாம் மறக்காம வாங்கிட்டு, கீரை நிறைய வாங்குங்க... பக்கத்து வீட்டு அம்மா அவளுக்கும் அவள் பெண் வீட்டுக்கும் கீரை கேட்டாள். நீங்க வாங்கிகிட்டு வருகின்ற கீரை நல்லா இருக்குதுன்னு இந்தப் பக்கத்து வீட்டு பாட்டியும் சொன்னாங்க. உங்களிடம் சொல்லி,நிறைய வாங்கிவரச் சொல்கிறேன் என்று அவர்களிடம் சொல்லியிருந்தேன்"

பழனிச்சாமி, வாங்க வேண்டியவை எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு கடைசியாகக் கீரைப் பக்கம் வந்தார்.

கிழவியிடம் கீரையை கைகளால் புரட்டி எடுத்து வரும்போது பிளாஸ்டிக் பைக்குள் தெரிந்த பணக் கட்டைக் கண்டவர், அதை எடுத்துக் கிழவியிடமே கொடுக்கத்தான் நினைத்தார். . திட்டிக் கொண்டிருந்த கிழவியைக் கண்டதுமோ என்னமோ, அல்லது தன்னிச்சைச் செயலாகவோ கைகள், பணத்தைக் கீரையுடன் உள்ளே போட்டன.

வீடு வந்து எண்ணிப் பார்த்ததில் பத்தாயிரம் இருந்தது. மகிழ்ச்சியுடனும், லேசான குற்ற உணர்வுடனும் உள்ளே வைத்தார்.

செல் இசை பாடியது. எடுத்தார்.

மகன்தான்.

கல்லூரிக்குச் பைக்கில் சென்று கொண்டிருந்த போது ஒரு கிழவியை மோதி விட்டானாம். பைக்குடன் ஸ்டேஷனுக்குக் கொண்டு போய் விட்டார்களாம். கல்லூரி மாணவன் என்று தெரிந்ததும் எஸ் ஐ கேஸ் போடாமல் விட்டு விட சம்மதிக்கிறாராம். ஆனால் இருபதாயிரம் ரூபாய் உடனே வேண்டுமாம்.

கொண்டு வந்த பத்தாயிரத்துடன் இன்னொரு பத்தாயிரம் சேர்த்துக் கொண்டு ஸ்டேஷனுக்குக் கிளம்பினார்.

================

எஸ் ஐ முருகேசன் எதிரிலிருந்த இளைஞனைப் பார்த்தார். பதட்டமாக இருந்தான். நகத்தைக் கடித்துக் கடித்துத் துப்பினான். கைக்கடிகாரத்தைப் பார்த்தான். வாசலைப் பார்த்தான். அவன் பார்வையுடனேயே முருகேசனும் வாசலைப் பார்த்தார். அவர் பார்வை உள்ளே சென்றது.

உள்ளே இன்ஸ்பெக்டரும் எஸ் பி கோகுலும் தென்பட்டனர். இரண்டு நாட்களாகவே ஏதோ துண்டு பேப்பர்களை எடுத்து படிப்பதும், டிஸ்கஸ் செய்வதுமாக இருந்தனர். கோகுல் கோபமாக இருந்தார். வெறுப்பில் இருந்தார். அவரிடம் கொடுக்கப் பட்ட க்ளூ தவறானது என்று சொல்லும் துண்டுக் காகிதம் அவரிடமே கிடைத்து, அவரை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தது. எது உண்மை, எது பொய் என்று அலசிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கேஸ் அவர்களுக்குத் தண்ணீர் காட்டிக் கொண்டிருந்தது. அவர்கள் கேஸ் அவர்களுக்கு. ஒரு வகையில், தன்னை அந்தக் கேசில் அவர்களுடன் சேர்த்துக் கொள்ளாததும் நல்லதுக்குதான் என்று பட்டது முருகேசனுக்கு.


அவ்வப்போது இவர்களுக்குத் தகவல் சொல்லும் இன்பார்மர் விஷ்ணுவிடமிருந்தும் செல்லில் அழைப்பு வந்து கொண்டேயிருக்க, மண்டை காய்ந்து போயிருக்கும் அவர்கள் பார்க்கும் முன்பு இருபதாயிரம் வாங்கிக்கொண்டு, இவனை அனுப்பி விட வேண்டும் என்று பரபரப்பில் இருந்தார் முருகேசன்.

அதோ... படியேறி வரும் முன் வழுக்கைக்காரர்தான் பையன் சொன்ன பழனிச்சாமியாக இருக்க வேண்டும். எழுந்து அவர்களை ஓரம் கட்டினார். பணம் கை மாறியது.

========================

இரவு வீடு வந்த எஸ் ஐ முருகேசன், மனைவியிடம் பணத்தை எடுத்துக் கொடுத்து உள்ளே வைக்கச் சொன்னார். அவள் வழக்கமான உற்சாகம் இல்லாமல் சுரத்தின்றி காணப் பட்டது போலிருந்தது. என்ன என்று விசாரித்தார்.

"மத்தியானம் மார்க்கெட்டில் பர்சேஸ் செய்யும் போது கையிலிருந்த தங்க பிரேஸ்லெட் எங்கேயோ விழுந்து விட்டது..."

"அடிப்பாவி, ஒரு பவுனாசே... என்ன அலட்சியம் உனக்கு... ஏன் உடனே எனக்கு போன் செய்யவில்லை..?"

"அதைத்தானே சொல்ல வர்றேன்....ஓடி ஆடி தேடி அலைந்து உங்களுக்கு போன் செய்யலாமுன்னு செல்லைத் தேடுகிறேன்...அதையும் காணோம்...சேர்ந்தே போச்சா... அல்லது ப்ரேஸ்லெட்டைத் தேடும் போது போச்சான்னு தெரியலைங்க..."

"அட, உனக்கெல்லாம் போய் 25,000 ரூவா செல் கைல குடுத்து வச்ச என்னைச் சொல்லணும்...போடி"

---------------

ப்ரேஸ்லெட்டையும் செல்லையும் எடுத்த குருமூர்த்தி சந்தோஷமாக அவற்றைத் தன் பையில் வைத்துக் கொண்டு கிளம்பினான்..... (மூன்றாம்) விதி தன்னைப் பார்த்துச் சிரிப்பது தெரியாமல்!

13 கருத்துகள்:

  1. ஒருவரின் இழப்பு அடுத்தவருக்குச் சந்தோஷம்.இதுவும் விதி !

    பதிலளிநீக்கு
  2. இன்னும் சைக்கிள கம்ப்ளீட் ஆகலை போலிருக்கே.

    பதிலளிநீக்கு
  3. நல்ல கதை. ஆனா சவால் க்ளூவைப் பயன்படுத்தவே இல்லையே?

    பதிலளிநீக்கு
  4. க‌தை ந‌ல்லாருக்கு..வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள்

    பதிலளிநீக்கு
  5. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் .. நல்ல உதாரணம்.. சிறுகதைப் போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்..:)

    பதிலளிநீக்கு
  6. நல்ல இருக்கு கதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. தேனம்மை சொன்னது போல முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் தான். சவாலுக்கேற்ற சரியான கதை. வெற்றி பெற வாழ்த்துகள்.

    ஸ்ரீராம். கடைசியாக நீங்கள் பதிவிட்ட சில பதிவுகளை தவற விட்டிருக்கிறேன். எப்போது Dashboardல் பார்த்து தான் பதிவுகளுக்கு செல்வேன். உங்கள் புதிய பதிவுகள் அதில் தெரியாததால் நான் வரவில்லை. வராததற்கு அது தான் காரணம்.

    பதிலளிநீக்கு
  8. // உங்கள் புதிய பதிவுகள் அதில் தெரியாததால் நான் வரவில்லை. வராததற்கு அது தான் காரணம். //

    Me too.

    கிழவி, எஸ்.ஐ, கீரை வாங்கிய ஆள் இவங்கலாம் கெட்ட எண்ணம் இருந்தவங்க.. காசோ பொருளோ தொலைசுபோனது ஜாஸ்திஃபைடு, நல்ல கான்செப்ட்.. வாழ்த்துக்கள் ஸ்ரீராம். ரெடி வார்த்தையில "கெடுவான் கேடுநினைப்பான்"

    இருந்தாலும் கிழவி பொண்ணோட கதி..?

    பதிலளிநீக்கு
  9. சவாலை சரியாகப் பொருத்தியதோடு மூன்றாம் விதியை முன் வைத்த விதம் அருமை:)!

    தமிழ் உதயம் சொல்லியிருப்பது போல டேஷ்போர்டில் மட்டுமின்றி ரீடரிலும் எங்கள் ப்ளாக் பதிவுகள் அப்டேட் ஆகவில்லை. கூகுள் ப்ளாகரில் பிரச்சனையாக இருக்கலாம். மடல் அனுப்பிப் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  10. நல்லா இருக்கு. சவாலில் வெற்றிபெற வாழ்த்துகள். :-)

    பதிலளிநீக்கு
  11. இதுதான் மூன்றாம் விதி ..தொட்டால் தொடரும் ..முற்பகல் செயின் பிற்பகல் இன்ஸ்டன்ட் ஆலமரமாகவே வளர்ந்து நிக்கும் ..
    அருமையான கதை ..ஆமா ஸ்ரீராம் நீங்க இப்போ கதை ஏன் எழுதுவதில்லை ? மீண்டும் நடை மற்றும் கதை துவங்கவும் .
    நேற்றே படிச்சிட்டேன் ஸன்டேஸ்ல கம்பியூட்டர் வர இரவு ஆகிடும் அதான் பதில் தாமதம்

    பதிலளிநீக்கு
  12. இப்போ எழுதறது இல்லையோ! ஆமாம் இல்லே... மறுபடியும் எழுத முயற்சிக்கிறேன்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!