வியாழன், 13 அக்டோபர், 2011

உள்ளாட்சித் தேர்தலும் கண்டசாலாப் பாட்டும் - வெட்டி அரட்டை...

                                              
"என்ன சுவரை அபபடி வெறிச்சுப் பார்க்கறீங்க.." மனைவி சுவரின் பக்கத்தில் போய்ப் பார்த்து விட்டு என்னைக் கேட்டாள்.

".........................."

"உங்களைத்தான்... என்ன யோசனை... புத்தகத்தைப் பார்க்கறீங்க... சுவரைப் பார்க்கறீங்க... உடம்பு சரியில்லையா... மலச்சிக்கல் வந்த மாதிரி முழிக்கறீங்க..."

"இல்லை... காலைல வாக்கிங் போகும்போதிலிருந்து கொஞ்ச நேரம் முன் வரை மனசுக்குள்ள ஒரு பாட்டு போய்கிட்டுருந்தது.... கண்டசாலா பாட்டு..."
   
"மறுபடியும் வாக்கிங் அறுவையா...."

"இல்லப்பா... இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே ஆட்டோல சத்தமா ஒரு பாட்டு வச்சிகிட்டே போனாங்க இல்ல..."
  
"இது வேற பாட்டா... அதே பாட்டா..."

"அட, ஏம்பா குழப்பறே... இது வேற பாட்டு சரி... ஆனா.."

"யாரு நான் குழப்பறேனா... இப்ப என்ன பிரச்னை உங்களுக்கு..."

"குறுக்க குறுக்க பேசாம என்னைப் பேச விட்டாதானே... இப்போ பாடிகிட்டுப் போன பாட்டு சின்னக் கவுண்டர் படத்துல வர்ற, 'அந்த வானத்தைப் போல மனம் படைச்ச தென்னவனே...'"

"சரி.. சரி.. பாடாதீங்க... பாட்டு என்னன்னு சொல்லுங்க போதும்... அப்புறம்..?"

"இந்தப் பாட்டு மாதிரியே இன்னொரு பாட்டு இருக்கு...."

"ஆமாம்.... லேடி வாய்ஸ்..."

"அட, இல்லப்பா... இதே பாட்டு டியூன்லையே இளையராஜா இன்னொரு பாட்டுப் போட்டிருக்கார்... அது ஞாபகம் வந்தது..."

"அது என்ன பாட்டு...?"

"நீதான் சொல்லேன்.."

"வேற வேலை இல்லை... உள்ள ஆயிரம் வேலை இருக்க உங்களை வந்து என்ன பிரச்னைன்னு கேட்ட என்னைச் சொல்லணும்... இதுலேயே ஒரு கேள்வி... இன்னும் மூலக் கேள்வி பாக்கி இருக்கற மாதிரித் தெரியுதே..."

"வர்றேன்... அதுக்குதான் வர்றேன்... ஆட்டோ போய் அரை மணி நேரம் ஆச்சு... இப்போ மனசுக்குள்ள இந்த 'வானத்தைப் போல மனம் படச்ச ' பாட்டுதான் ஓடறது... காலைல ஒரு கண்டசாலாப் பாட்டுச் சொன்னேனே, அது மறந்து போச்சு... அது என்ன பாடல்னு மண்டையை உடைச்சிக்கறேன்... ஊ...ஹூம்..."

"அடச்சே... இதுதானா... என்னமோ பெரிய பிரச்னைன்னு நினைச்சேன்... போங்கப்பா..... ஆமாம் சின்னக் கவுண்டர் பாட்டு சாயலிலேயே இன்னொரு பாட்டுன்னு சொன்னீங்களே.... அது என்ன பாட்டு..."

"யோசிச்சுதான் பாரேன்..."

"வேற வேலை இல்லை.... இப்பவே சொல்லிடுங்க அப்புறம் அதையும் மறந்துடுவீங்க..."

"அதை மறக்க மாட்டேன்... கண்டசாலா பாட்டுத்தான்... அதை யோசிச்சா அவரோட இன்னொரு பாட்டு ஞாபகம் வருது... 'ஆஹா இன்ப நிலாவினிலே...' ஆனால் அது இல்லை நான் காலைல பாடிக்கிட்டிருந்தது...."
    
"இதுலே இன்னொரு பாட்டு வேறயா... எரிச்சல் வருது.... செல்லுல கேஸ் பதிவு பண்ணுங்க வசதின்னு சொல்லி ரெஜிஸ்டர் செய்து பதினைந்து நாளாவுது... ஒரு மெசேஜும் காணோம்... அடுத்த தெருல கேஸ் காரன் வந்திருக்கானாம்... ஒரு எட்டு போய்ப் பாத்துட்டு வந்துடுங்க..." மனைவி உள்ளே சென்று விட்டாள்.

மகன் பக்கம் திரும்பினேன். "அமிதாப்புக்கு வயது அறுபத்தொன்பதாம்" என்று செய்தி வாசித்துக் கொண்டிருந்தவன், இந்த அபாயத்தை ஏற்கெனவே எதிர்பார்த்தவன் மாதிரி வேறு வேலையாகச் செல்வது போல நழுவி விட்டான்.

யோசித்துக் கொண்டே நடந்தேன். பழனிவேல் நண்பர் புடைசூழ வந்தவர் சட்டென ஒரு ஜரிகை அங்கவஸ்திரத்தைப் போர்த்தி விட்டு 'உங்க வோட்டு.எங்களுக்கே' என்று தாண்டிச் சென்றார்.

இரண்டு நண்பர்கள் "அட, சட்டசபை எம் பி எலெக்ஷனுக்குத்தான் கட்சி பார்க்கணும்... இதுக்கு வேணாம்டா... நம்மாளு நிக்கிறார் பாரு... அவர் யாரு.... நம்ம சகலைடா..." என்றபடி தாண்டிச் சென்றார்கள்.

எனக்கு உள்ளாட்சித் தேர்தல் மேலேயே கோபம் வந்தது. அதற்குப் பிரச்சாரம் என்று ஆட்டோவில் பாட்டுப் போட்டதால்தானே எனக்கு இப்போ மண்டையிடி!
   
கேஸ் சிலிண்டர் விநியோகித்துக் கொண்டிருந்தவன் என்னை பூச்சிக்கு சமானமாக மதித்துப் பேசினான். "எப்பவும் உடனே மெசேஜ் வந்துடுமேப்பா.."
   
"எனக்குத் தெரியாது...கம்பெனிக்கு ஃபோன் பண்ணிக்கோ"

"செல்லுல புக் செய்தா ரெண்டு தரம் ஒழுங்க மெசேஜ் வருது. இப்போ தகவலே காணோமே... 'வரல்லைன்னா ரெண்டை அமுக்குங்க புகார் செய்ய' னு வருது அமுக்கினால் 'உங்களுக்கு இந்த வசதி இல்லை'ங்குது...'மூணை அமுக்குங்க தற்போதய நிலவரம் தெரியும்' என்று ரெகார்டட் குரல் சொல்லுது... மூணை அமுக்கினால் நமக்குத் தெரிந்த விவரம் சொல்லிட்டு ஆஃப் ஆயிடுது... இதுக்கு ஒரொரு தரமும் ஒரு காலுக்கு அறுபது பைசா வேற... என்னப்பா இது.."

"எனக்குத் தெரியாது... இந்தா கம்பெனி நம்பர்... போன் பண்ணிக்கோ... ஆளை விடு..."

வெறுப்புடன் திரும்பும் வழியில் எதிர்ப்பட்ட நண்பரிடம் கண்டசாலா பாட்டு பற்றிக் கேட்டேன்.

"உலகே மாயம்... வாழ்வே மாயம்... தேவதாஸ் பாட்டு எல்லாம் அவர் பாடினதுதானே..."

"அது இல்லைங்க....இது வேற..."

"உறவுமில்லை... பிரிவுமில்லை... ஒன்றுமே இல்லை..." பாடினார்

"அதுவுமில்லை.... தேவதாஸ் பாட்டு இல்லீங்க..."

"சரி.. ஞாபகம் வந்தால் எனக்கும் சொல்லுங்க...அபபடி என்ன பாட்டுன்னு பார்க்கறேன்" விலகிச் சென்றார்.

விட்டுத் தொலைக்கலாம் என்றால் முடியவும் மாட்டேன் என்கிறது...

கூகிள் பண்ணிப் பார்த்தால் வரும் லிஸ்ட்டில் வடிகட்ட முடியுமா.... பார்க்கிறேன்! 
                      

13 கருத்துகள்:

  1. உள்ளாட்சி சில நாள்ல முடிஞ்சிடும் கவலைப்படாதீங்க! நல்ல அரட்டை

    பதிலளிநீக்கு
  2. கடைசி வரைக்கும் பாட்டு நினைவே வரலியா? வந்தா இன்னொரு பதிவ போடுவீங்க இல்ல

    பதிலளிநீக்கு
  3. முத்துக்கு முத்தாக சொத்துக்குச் சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்குக் கண்ணாக. அனபாலே வளர்ந்துவந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக;; பாட்டா?/

    பதிலளிநீக்கு
  4. கண்டசாலா சிலோன் ரேடியோ பாட்டுகாலத்தில் கேட்டது... ஜிக்கியோடு சேர்ந்து தாலாட்டு பாடுவார்.. இன்று உங்களை முக்கி முக்கி தேட வைக்கிறார்....

    பதிலளிநீக்கு
  5. அந்தப் பாடல் 'ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா'வா? என் கணவரின் சஜஷன்!

    பதிலளிநீக்கு
  6. மிக மிக மிகச் சரி middleclassmadhavi.

    பதிலளிநீக்கு
  7. உள்ளாட்சித் தேர்தலும் கண்டசாலாப் பாட்டும் - வெட்டி அரட்டை..."தானா??

    பதிலளிநீக்கு
  8. சுவாரசியமான பதிவு! அழகான பாட்டை நினைவு படுத்திடீங்க. உடனே கேக்கணும்னு தோணி போய் கேட்டுட்டேன். எவ்வளவு நாள் ஆச்சு இந்த
    பாட்டை கேட்டு! ரொம்ப இதமா இருந்துது. நன்றி!

    பதிலளிநீக்கு
  9. கண்டசாலா பாட்டு என்றதும் நினைவுக்கு வருவது விளையாடிடுதே என்பதை அவர் விலையாதிதுதே என்று பாடும் அழகுதான். எனினும் அவர் பாட்டிலே ஒரு கவர்ச்சி அந்தக் குரலின் கனம காரணமாக இருந்தது உண்மைதான். ஒரு இளம் ஹீரோ பாடுவது போல் அல்லாமல் நியாயம் தீர்க்கும் ஒரு தேவன ஆகாயத்திலிருந்து பாடுவது போல ஒலிக்கும் அந்தக் குரலின் காத்திரம் பிரமிக்க வைக்கும்.

    உறவுமில்லை பகையும் இல்லை என்பதே சரியான லிரிக்.

    பதிலளிநீக்கு
  10. //அதற்குப் பிரச்சாரம் என்று ஆட்டோவில் பாட்டுப் போட்டதால்தானே எனக்கு இப்போ மண்டையிடி!//

    உள்ளாட்சித் தேர்தலால் இப்படியெல்லாமும் பிரச்சனை கிளம்புதா:)?

    நல்லபடியாகப் பாட்டு கிடைத்து விட்டதே.

    பதிலளிநீக்கு
  11. முதல்லேயே மாதவியோட கருத்த பார்த்திருந்தா நானும் கொஞ்ச நேரம் தலைய பிச்சுண்டு யோசிக்காத இருந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  12. உள்ளாட்சித் தேர்தல் முடியற வரை விதம் விதமா தொந்தரவுகள் சண்முகவேல்...நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

    இன்னொரு பதிவு போட வேண்டிய அவசியம் இல்லாமல் மாதவி பாட்டைச் சொல்லிட்டாங்க ...நன்றி suryajeeva வருகைக்கும் கருத்துக்கும்...

    கண்டசாலாவின் இன்னொரு அருமையான பாடலை நினைவு படுத்தினீங்க வல்லிசிம்ஹன் ...நன்றி.

    கண்டசாலா என்பது ஒரு பழைய பாடகரின் பெயர் மாதவன். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட அவர் ஏராளமான இனிமையான தமிழ் பாடல்களும் பாடியிருக்கிறார். நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

    மனதை விட்டு நீங்காமல் ரீங்காரமிடும் பாடல்கள் பத்மநாபன்...நன்றி.

    கிளீன் போல்ட் middleclassmadhavi.....நன்றி சரியான பாடலைச் சொன்னதற்கு.

    இராஜராஜேஸ்வரி...மாட்டி விட்டுட்டீங்களே...! ஒரு வகையில் ஆம்...நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

    நன்றி meenakshi... இனிமையான பாடல்களை உங்களை மறுபடி கேட்க வைத்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி.

    சரியான வரிகளை எடுத்துச் சொன்னதற்கும் கண்டசாலாவின் மேலும் சில சிறப்புகளைச் சொன்னதற்கும் நன்றி அனானி.

    நன்றி ராமலக்ஷ்மி.

    நன்றி RAMVI.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!