திங்கள், 21 நவம்பர், 2011

நாக்கு நாலு முழம் ..1



குறைந்த புத்தகங்களே வந்த காலத்தில் புத்தகங்களைத் தேடிப் பிடித்துப் படிக்கும் பழக்கம் இருந்தது.பிரசண்ட விகடனோ, ஆனந்த விகடனோ, குமுதமோ.... அப்புறம் குங்குமம், இதயம் பேத்துகிறது, மன்னிக்கவும்(!) இதயம் பேசுகிறது, சாவி என்று வந்த கால கட்டத்தில் கூடப் படிக்கும் பழக்கம் குறையாததற்கு தொலைக் கட்சி, கணினி என்று கவனக் கலைப்புச் சமாச்சாரங்கள் இல்லாததும், (அதனாலேயே) அப்போது அதிக அளவு நூலகங்கள் போகும் பழக்கம் இருந்ததும் காரணமாயிருந்திருக்கலாம்.
   

                   
எம் கே டி - பி யூ சின்னப்பா, அல்லது டி ஆர் எம்,- எம் கே ராதா, அப்புறம் எம் ஜி ஆர்- சிவாஜி இடையிடையே ஜெமினி, ஜெய் படங்கள் என்று மட்டும் குறைந்த படங்கள் வரும்போது அவை நீண்ட நாட்கள் ஓடுவதும், மக்களும் ஓரளவு எல்லா படங்களையும் பார்த்து விடுவதும் வேறு பொழுது போக்கு இல்லாததாலும், குறைந்த திரை அரங்குகளே ஓரொரு ஊரிலும் இருந்ததும் காரணங்களாய் இருந்திருக்கலாம் !  

                      
இப்போதெல்லாம் ஏராள புத்தகங்கள், ஏராளமான திரைப் படங்கள்,...
                
முன்பெல்லாம் ஹோட்டல்கள் கூட அப்படித்தான்...அங்கு கிடைக்கும் வெரைட்டிகளும் குறைவாகவே இருந்தன. 
                      
தஞ்சைக் காலங்களில் ரயிலடி அருகில் இருந்த ஆனந்த் பவன், மற்றும் நியூ பத்மா ஹோட்டல்களில் சாப்பிட்டது நினைவுக்கு வருகிறது. அதை விட்டால் அப்போது புகழ் பெற்ற ஹோட்டல்கள் மங்களாம்பிகாவும், மணிக் கூண்டு தாண்டி இடது பக்கம் ராஜா கலை அரங்கம் திரை அரங்கம் செல்லத் திரும்பும்போது இருக்கும் ஒரு ஹோட்டலும் (சாந்தி ஹோட்டல் என்று நினைவு) கொஞ்சம் பெரிய ஹோட்டல்கள். அப்புறம் பஸ் ஸ்டேண்ட் பின்புறம் வசந்த் பவனோ, சங்கமோ வந்ததாக நினைவு. இருபத்தைந்து காசு பெட்டியில் போட்டு விரும்பிய பாட்டு கேட்டுக் கொண்டே டீ சமோசா சாப்பிடும் கடை அப்போது புதிது, பிரபலம்!
                       
ஆனந்த் பவன், நியூ பத்மாவில்தான் அடிக்கடி சாப்பிடுவோம். அடிக்கடி என்றால் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை! யாகப்பாவில் கிழக்கே போகும் ரெயில் பார்த்து விட்டு வந்து அங்கு சாப்பிட்டது நினைவில் இருக்கிறது. 

அப்புறம் கொஞ்ச காலம் கழித்து ஆனந்த் பவன் வாசலில் சுப்பையாப் பிள்ளைப் பால்கடை என்று ஒன்று உதயமானது. ஹோட்டல்களில் சாப்பிடுவோர் உள்ளே காபியைப் புறக்கணித்து வெளியே வந்து சுப்பையாப் பிள்ளைப் பால் கடையில் நின்று அவர் நுரை பொங்க பித்தளைத் தம்ளர், டபராவில் ஆற்றித் தரும் பாலைச் சுவைப்பது பழக்கமாகி, அந்த ஏரியாவே மாலை வேளைகளில் ஸ்தம்பித்தது! அபபடி என்ன செய்தார் என்று யோசித்துப் பார்க்கும்போது தண்ணீர் அதிகம் ஊற்றாத,   கறந்த பாலில் பனங்கற்கண்டு கலந்து சற்றே (?) சுண்டக் காய்ச்சித் தந்தார் என்று நினைவு. ஆனாலும் இப்போதும் நாவின் அடியில் அந்த சுவை தெரிகிறதுதான். 
                        
ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லும் தாத்தா ஆகட்டும், மாமா ஆகட்டும் அவர்கள் பெரும்பாலும் ஆர்டர் செய்வது 'ரெண்டு இட்லி, சாப்பிட்டப்புறம் ஒரு தோசை, அப்புறம் ஒரு காஃபி'.  வேறு வித்தியாசமே இருக்காது. நாங்கள் பூரி, சப்பாத்தி என்று ஆசைப் பட்டாலும் 'மசாலா வாசனையா குருமாவா, வேண்டாம்' என்று நிர்த்தாட்சண்யமாய் மறுத்து விடுவார்கள்! அதையும் மீறி அவ்வப்போது இவையும் சாப்பிடக் கிடைத்ததுண்டு. 

        என்னுடைய பள்ளி நாட்களில் என் ஒரு பிறந்த நாளில் அப்பாவின் சாங்க்ஷனாய் ஒரு ரூபாய் எடுத்துக் கொண்டு போய் மருத்துவக் கல்லூரி போகும் சாலையில் இருந்த கேண்டீனில் இரண்டு இட்லி, ஒரு ஸ்பெஷல் தோசை சாப்பிட்டு, என் இளைய சகோதரிக்கு ஒரு பூரி பார்சல் வாங்கி வந்த நினைவு இருக்கிறது. மிச்ச காசு கூடக் கொண்டு வந்து தந்தேன். அந்தக் கேண்டீனில் ஒரு கண்ணாடி தம்ளரில் பாலாடை போட்டுத் தருவார்கள். அது எனக்கு சாப்பிட விருப்பம் இருந்தாலும் அதற்கு அன்று கையில் மிச்சமிருந்த காசு அதற்கு இடம்தரவில்லை!
                   
ஹோட்டல்களில் பரோட்டா போன்ற சமாச்சாரங்கள் அப்புறம்தான் அறிமுகமாகினவா, இல்லை எங்களுக்கு எங்கள் தஞ்சைக் காலங்களில் தெரியவில்லையா நினைவில்லை. ஆனாலும் ஹோட்டல்களில் சாப்பிடுவது ஒரு தணியாத ஆசையாகவே இருக்கும். அதுவும் குறைந்த ஐட்டங்களே சாப்பிடக் கிடைக்கும் காலத்திலும். 
                   
அப்புறம் வேலைக்கு சென்ற காலங்களில் வேறு வழியின்றி காலை ஆறே முக்காலுக்கெல்லாம் பொங்கல் தோசை என்று சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போது ஹோட்டல் மயக்கம் மறைந்தாலும் சில ஹோட்டல்களின் சில ஸ்பெஷல்கள் என்றும் மனதில் நிற்கும் வண்ணம் இருந்தன. 
                   
அதே நியூ பத்மா வில் சாம்பார், குருமா ருசி, மங்களாம்பிகாவில் காபி, (எங்கள் பள்ளி ஹாக்கி ப்ளேயர் மங்களாம்பிகா உரிமையாளர் பையன் என்பதில் எங்களுக்கு ஒரு பெருமை. ஏதோ ஹோட்டலே எங்களுடையது போல!)
                 
தஞ்சையில் ரோட்டோரக் கடைகள் பார்த்த நினைவு இல்லை. பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால் தஞ்சைப் பக்கம் காஃபி, சாம்பார் போன்றவை சுவைதான். காவிரி உபயம் என்றுதான் தோன்றும். அதே போல தஞ்சாவூரில் கிடைத்த மாதிரி கத்தரிக்காய் (கம்மாக் கத்தரிக்காய்) கீரைத் தண்டுகள் மற்ற ஊர்களில் பார்க்கவில்லை. அது தனி ருசி. கத்தரிக்காயின் அந்த நிறமும், பளபளப்பும் பார்க்கும்போதே ரெசிப்பிகள் மனதில் ஓடும்! 
              
தஞ்சையில் அப்போது அதிகம் டீக் கடைகள் பார்த்த நினைவு இல்லை. ரெயிலடியிலிருந்து மேரிஸ் கார்னர் வரும் வழியில் இருந்த (இப்போது இருக்காது என்று நம்புகிறேன்) 'மேனகா காபி பார்' எங்களுக்குப் பரிச்சயம். அங்கு வருக்கியும் டீ காபியும் சாப்பிடுவது உண்டு. அந்த டீக் கடையை மறக்க முடியாததற்கு என் நண்பன் சம்பந்தப் பட்ட ஒருமறக்க முடியாத சம்பவமும் காரணம். (நாங்கள் அங்கு உட்கார்ந்து "யாருடா மேனகா.. அவளை ஏன் கூப்பிட்டு காபியைப் பாக்கச் சொல்கிறார்கள்" என்று கிண்டலடிப்போம்)
            
என்னுடைய நாக்கு ரொம்ப நீளம் .... ஆனால் பதிவு நீளமாகி விட்ட காரணத்தினால் அடுத்த பதிவில் அது மதுரையைத் தீண்டும்!
          

21 கருத்துகள்:

  1. காலத்துக்கு தகுந்துபொழுது போக்குகளும் மாறுகின்றன.

    நேற்று சாப்பிட்டதே மறந்து விடும்போது - நீங்கள், பூர்வ ஜென்மத்தில் சாப்பிட்டதை கூட சரியாக சொல்லிவிடுவீர்கள் போலும்.

    பதிலளிநீக்கு
  2. முதலில் சொன்ன அத்தனை புத்தகங்களையும் நானும் படித்திருக்கிறேன்.அழகாக நினைவுகளை மீட்டியிருக்கிறீர்கள்.தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  3. அப்பாடி...ஒரு ரூபாய்க்கு இரண்டு இட்லி,ஒரு ஸ்பெஷல் தோசை,ஒரு பூரி பார்சல் அதோடு மிச்சக் காசும்.....இப்போ கனவிலயாச்சும் தருவாங்களா !

    பதிலளிநீக்கு
  4. // இதயம் பேசுகிறது, சாவி என்று வந்த கால கட்டத்தில் கூடப் படிக்கும் பழக்கம் குறையாததற்கு தொலைக் கட்சி, கணினி என்று கவனக் கலைப்புச் சமாச்சாரங்கள் இல்லாததும், (அதனாலேயே) அப்போது அதிக அளவு நூலகங்கள் போகும் பழக்கம் இருந்ததும் காரணமாயிருந்திருக்கலாம்.//

    உண்மைதான். நினைவுகளை மலரச் செய்யும் பதிவு.

    சின்ன வயதில் ஓட்டல்களுக்கு வீட்டில் அழைத்துச் சென்றதில்லை. நல்ல நினைவாற்றல் உங்களுக்கு. ரசனையுடன் எழுதியுள்ளீர்கள்.

    மீண்டும் டேஷ்போர்ட் மற்றும் ரீடரில் உங்கள் பதிவுகள் சரியாக அப்டேட் ஆக ஆரம்பித்து விட்டது. மகிழ்ச்சி:)!

    பதிலளிநீக்கு
  5. மிகவும் சுவாரசியமான பதிவு!
    அப்பா, அம்மாவுடன் ஹோட்டலில் சென்று சாப்பிட்டதே இல்லை. சைதாபேட்டை ஸ்டேஷன் அருகில் கௌரி நிவாஸ் ஹோட்டல் இருந்தது, இன்னும் கூட இருக்கலாம், தெரியவில்லை. வருடத்திற்கு ஒரு முறை வரும் தாத்தா, பாட்டியின் தெவச தினத்தன்று சாப்பிட மத்தியானம் ஆகும், நான் பசி தாங்கமாட்டேன் (இது என் அப்பாவே நினைத்துக் கொண்டது :) ) என்பதால் அந்த இரண்டு நாள் மட்டும் காலையில் என் அப்பா நான் தூங்கி எழுந்து கொள்வதற்கு முன் கௌரி நிவாசிலிருந்து டிபன் வாங்கி வைத்து விடுவார். இட்லி, பிளைன் தோசை, சட்னி, சாம்பார். அந்த மந்தார இலையின் வாசத்தில் இட்லி, தோசை ஆஹா, மிகவும் பிரமாதமாக இருக்கும். இந்த தெவசம் மாதம் ஒரு முறை வரக்கூடாதா என்று அப்போது நானும் என் அண்ணாவும் நினைத்துக் கொள்வோம். எங்கள் வீட்டின் அருகிலேயே மாரி ஹோட்டல் இருக்கும். ஏனோ என் அப்பா அங்கு எதுவும் வாங்க மாட்டார். என் அண்ணா பிளஸ் டூ படிக்கும்போது ஒரு முறை மாரி ஹோட்டலில் வடகறி சாப்பிட்டு விட்டு வந்தேன் என்று என்னிடம் சொன்னபோது, எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஏண்டா, அந்த ஹோட்டலுக்கு நாம போலாமாடா? அப்பாக்கு தெரிஞ்சா என்னடா பண்ணுவேன்னு நான் கேட்டதுக்கு, அவன் கண்டுக்கவேயில்லை. தெரிஞ்சா பாத்துக்கலாம்னு சொல்லிட்டு போய்டான். இதெல்லாம் இப்ப நெனச்சாலும் சிரிப்பா வரது. அப்பறம் நான் வேலைக்கு போக ஆரம்பிச்சதுலேந்து பாண்டி பஜார் கீதா கபே, எங்கள் ஆபீஸ் அருகில் இருந்த கையேந்தி பவன் இது இரண்டிலும் சரணாகதிதான். இங்கு தின்னாத நாளை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த கையேந்தி பவனை பற்றி ஒரு முறை விகடனில் ஒரு பெரிய ஆர்டிகல் வந்தது. வெங்காய பொடி தோசையும், பரோடா குருமாவும் இங்கு மிக, மிக பிரபலம். இன்றும் அந்த பொடி தோசையை நினைத்தால் ஆஹா! இப்பவே நாக்குல ஜாலம் ஊற சாப்பிட ஆசையா இருக்கே!

    மன்னிக்கவும், பின்னூட்டம் ரொம்ப பெருசா ஆயிடுத்து.

    பாகம் இரண்டை படிக்க ஆவலாக இருக்கிறது. தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
  6. இதயம் பேசுகிறது--மணியனோட பயணக்கட்டுரைக்காகவே தேடிப்பிடிச்சு படித்தது நினைவுக்கு வருகிறது.

    அந்த காலத்துல எல்லாம் கொஞ்சமா இருந்தது,அதனால ருசியா ஜாஸ்தி. இப்ப எல்லாம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு ருசி குரைச்சல்.

    அருமையான நினைவுகள்,அடுத்த மதுரை நினைவுகளுக்காக காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. நாக்கு அரைக்கால் இன்ச். ஏதோ போட்டதை/கிடைத்ததை விமரிசனம் செய்யாமல் சாப்பிடும் டைப்புங்க நான் (அப்படினீனு யாருனா சொன்னா நம்பாதீங்கனு சொல்ல வந்தேன்)
    முன்பெல்லாம் வெளியே ரெஸ்டராந்ட் சென்று சாப்பிட ஆர்வம் இருக்கும் - இப்போது என்ன வெளியே சாப்பிட்டாலும் இதைவிட ருசியாக வீட்டில் செய்யமுடியுமே என்று தோன்றுகிறது..

    பதிலளிநீக்கு
  8. சத்யம் தியேடர் அருகே பீடர்ஸ் சாலை (?) சந்திப்பில் மர நிழலில் ஒரு உணவகம் இருந்தது.. அங்கே தான் பரோட்டா சாப்ஸ் அறிமுகம். அதற்காகவே சினிமா போன நினைவுகள்.. உதிரிப்பூக்கள் போல டப்பா படங்களை பரோட்டா சாப்ஸ் குணப்படுத்திய அனுபவம் நிறைய உண்டு. சாப்ஸ் மணத்தோடு ஷோலே பார்த்த நினைவு. சைவ சாப்சில் ஒரு தடவை சந்தேகத்துக்கிடமாக மிதந்த வஸ்துவை கத்தரிக்காய் என்று நானும் ஜேம்சும் சத்தியம் செய்து நண்பன் சாம்பாவை சாப்பிட வைத்தோம்.

    ஞாயிறு காலை முடிவெட்டிக் கொண்டு நேரே பக்கத்துக் கடைக்குப் போய் இட்லி சாம்பார் - பத்து பைசாவுக்கு ரெண்டு இட்லி சாம்பார் குரோம்பேட்டையில். அந்தப் பத்துப் பைசாவில் கிடைத்த நிறைவு...

    பதிலளிநீக்கு
  9. நண்பர் பாலராஜன் நினைவுபடுத்திய பத்திரிகை: தீபம்

    பதிலளிநீக்கு
  10. எல்லாவற்றுக்கும் மேல் முத்து காமிக்ஸ் தான் விருப்பமான புத்தகம்.

    பதிலளிநீக்கு
  11. ஜெமினியின் இடப்புறம் அசப்பில் எம்ஆர் ராதா போல இருக்கும் சூட் பேர்வழி யார்? எம்கே ராதாவா? ஒரு படம் கூடப் பார்த்ததில்லை - ஏதாவது படம் பெயர் தெரிந்தால் சொல்லுங்களேன்?

    பதிலளிநீக்கு
  12. //யாருடா மேனகா.. அவளை ஏன் கூப்பிட்டு காபியைப் பாக்கச் சொல்கிறார்கள்"//

    செம.. ரசித்து சிரித்தேன்.. சிரித்து விட்டு ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  13. ஹா...ஹா... நன்றி தமிழ் உதயம். சில நினைவுகளை, சில ருசிகளை மறக்க முடியவில்லையே...அதான் நாக்கு நாலு முழம்...!

    ஊக்கத்துக்கு நன்றி சண்முகவேல்.

    நன்றி ஹேமா...இந்தப் பதிவு எழுதப் பட்ட நேரத்தில் தமிழ்நாட்டில் ஏறியிருக்கும் விலைவாசி உயர்வு இன்னும் எங்கே போய் நிற்குமோ என்ற பயம் இருக்கிறது!

    நன்றி ராமலக்ஷ்மி.டேஷ்போர்ட் மற்றும் ரீடரில் பதிவுகள் தெரிய உதவி செய்தவர் நண்பர், பதிவர் நீச்சல்காரன்.

    நன்றி மீனாக்ஷி பதிவை உணர்வு பூர்வமாக மிக ரசித்ததற்கு நன்றி. சைதையில் இன்னமும் கௌரி நிவாஸ் ஹோட்டலும் மாரி ஹோட்டலும் இருக்கின்றன. மாரியில் இன்னமும் வடகறி ஸ்பெஷல்தான்.

    ரசனைக்கு நன்றி ராம்வி...

    பின்னூட்ட மழைக்கு நன்றி அப்பாதுரை. தீபம் மட்டுமல்ல, இன்னும் சிலபல பத்திரிகைகளும் உண்டு. சும்மா எடுத்துக் காட்ட ரெண்டு மூணு சொன்னது இவை! நீங்கள் கேட்டுள்ள புகைப் படத்தில் உள்ளவர் எம் ஆர் ராதாதான். எம் கே ராதா நடித்த படம் சந்த்ரலேகா, பாசவலை போன்ற படங்கள் இருக்கின்றன. "வீட்டிலேயே செய்வது மேல்"..... பதிவின் பிற்பகுதியில் நாங்களும் அதையேதான் எழுத நினைத்திருந்தோம்!

    நன்றி சூர்யஜீவா..,.வருகைக்கும் ரசித்ததற்கும்!

    பதிலளிநீக்கு
  14. தஞ்சையில் 1991ல் ஜனவரி மாதம் ஏதோ ஒரு ஞாயிற்றுக்கிழமை National Talent Search Examination , மதியம் எழுதுவதற்காக வந்த போது நண்பர்களுடன் காலையில் அருள் தியேட்டரில் 'தர்மதுரை' படம் பார்த்துவிட்டு, பழைய பஸ்டாண்டுக்கு வடக்குப் பகுதியில் ஹோட்டல் கார்த்திக் என நினைக்கிறேன்.. அங்கு சாப்பிட்டேன். -- (எங்களுக்கும் கொஞ்சம் கொஞ்சம் ஞாபகம் வருது.. )

    பதிலளிநீக்கு
  15. ஆஹா அருள் தியேட்டர்...! இன்னும் சில நினைவுகளைக் கிளறி விட்டு விட்டீர்கள் மாதவன்...

    பதிலளிநீக்கு
  16. அய்யா ...வாரப்பத்திரிக்கை வந்தவுடன் சுடசுட படித்து விட்டு உடனே நண்பர்களுடன் பரிமாறிக்கொண்டதும் ,வானொலி பெட்டிக்கு காதினை கடன் கொடுத்து மயங்கி கிடந்ததும் ,அசொகா, பஜ்ஜி காபிக்கு நாக்கை பறிகொடுத்ததும்.....அதெல்லாம் விட இன்றைக்கும் கனா காலமாக எண்ணி எண்ணி மகிழ்வதும் ஆனந்தமான விஷயம் தான்.

    பதிலளிநீக்கு
  17. ayyayyo
    thanjavoora
    sir asoka paththi ezhudavillaiye
    (mayavaram kaliyakudi lodge pathi)
    naan vellore il irundhalum
    appappo kudanthai poi coffee sappiduvathu vazhakkam

    thanjai ninaivugal manakkindrana

    balasubramanian vellore

    பதிலளிநீக்கு
  18. நன்றி புதுகை செல்வா...வருகைக்கும் ரசனையை பகிர்ந்து கொண்டதற்கும்! அடிக்கடி வாங்க...!

    வருக தஞ்சை பாலு...ஸாரி, தஞ்சைபாலு..(உங்களுக்கும் தஞ்சைக்கும் நடுவில் இடைவெளி வேண்டாம்தான்!) உங்கள் நினைவுகளைக் கிளறி விட்டதில் எங்களுக்கு சந்தோஷம். நன்றி. மீண்டும் மீண்டும் வருக!

    பதிலளிநீக்கு
  19. நீங்க சொல்லும் புக்செல்லாம் படிச்சிருக்கேன் ஆனா ஹோட்டல் போனதில்லே இங்கே மும்பையில் அந்த தமிழ் நாட்டு ருசியெல்லாம் எதிர்பார்க்கவே முடியாது. மகன் பேரக்குழந்தைகளுடன் ஹோட்டல் போகும் சமயமும் ஏதோ பாவ் பாஜி, சோலே பட்டூரான்னு என்னமோ ஆர்டர் பண்ணிடுவாங்க.

    பதிலளிநீக்கு
  20. எனக்குத் தெரிந்து நான்கு அணாக்கு 8 இட்லியும் பாத்திரம் நிறைய பொட்டுக் கடலை தேங்காய்ச் சட்டினி சாப்பிட்ட காலம், மீனாக்ஷி சொன்ன மாதிரி வீட்டில் திவசம் வரும் நாட்கள்.:)
    சென்னையில் அறுபதுகளில் புரசைவாக்கம் தாசப்ரகாஷ் ஹோட்டலில்
    எங்கள் மாமா எங்கள் மூவருக்கும் தோசை,வடை,போண்டா வாங்கிக் கொடுத்து 10 ரூபாய்கள் பில்ல் கொடுத்த நினைவும் வருகிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!