புதன், 14 டிசம்பர், 2011

படித்ததைப் பகிர ஒரு வெட்டி அரட்டை....

              
அந்தக் காலத்தில் விரும்பிப் படித்த பல நாவல்களை புத்தக வடிவில் வாங்கும்போது 'ஆனாலும்...' என்ற ஒரு சின்ன ஏக்கம் இருக்கும்!  அதாவது அப்போது தொடர்கதையாக வந்த போது வாராவாரம் கதைகளுக்கு ஜீவன் சேர்த்த ஓவியங்கள் இல்லாமல் புத்தகம் படிப்பது ஏதோ இழந்தது போலத்தான் இருக்கும். பைண்ட் செய்து வைத்திருக்கும் புத்தகங்கள் வசதியானவை. படங்களுடன் படித்து ரசிக்கலாம். ஆனால் எங்கள் வீட்டு விசிறி வாழை, வாஷிங்டனில் திருமணம் பொன்னியின் செல்வன், யவனராணி போன்ற பல புத்தகங்கள் பூச்சி அரித்து வீணாய்ப் போனது கஷ்டமாக இருந்தது. 
      
புத்தகமாகப் போடுகிறவர்கள் வாராவாரம் வந்த அந்தப் படங்களையும் சேர்த்து போடக் கூடாதோ என்று தோன்றும். யவனராணி போன்ற கதைகளில் டைபீரியசையும் யவனராணியையும்  அட்டையில் மட்டுமே காண முடியும். உள்ளே வரிகள், வரிகள், வரிகள்.....

விகடன் முதல்முறையாக அந்தக் குறையைப் போக்க வருகிறது. அதைப் படித்த நாள் முதலே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. நிறையப் பேருக்கு ஏற்கெனவே தெரிந்தும் இருக்கும். படித்திருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள். ஆனாலும் சும்மா பகிர்ந்து கொள்கிறேன்!

2216 பக்கங்களில் 5 பாகங்களாக கெட்டி அட்டையுடன் 1,350 ரூபாய், ஆனால் 31-12-2011 க்குள் முன்பதிவு செய்தால் பொன்னியின் செல்வன் புத்தகம் 999 ரூபாய்க்குத் தருவதாக விளம்பரம். ஓவியர் மணியம் தீட்டிய ஒரிஜினல் வண்ண ஓவியங்களுடன் என்பதுதான் விசேஷம். (புத்தகத்தில் கருப்பு வெள்ளைதான் வந்தது - முதல் முறை) "இது வரை நீங்கள் பார்த்திருக்கவே முடியாத பிரமிப்பான வடிவில்" என்று ஆசை காட்டுகிறது.

ரூபாய் அதிகம் என்று தோன்றினாலும் நிச்சயம் நிறைய பேர் விரும்புவார்கள் என்றுதான் தோன்றுகிறது. (ஓவியங்கள் இல்லாத பதிப்புகள்  250 ரூபாயிலிருந்து 300 ரூபாய்க்குள் கிடைக்கிறது - ஐந்து பாகங்களும். ஐந்து பாகங்களும் ஒரே புத்தகமாய்க் கூட கிடைக்கிறது. டைரி சைஸில் என்ற விளம்பரத்துடன்)

****************************************************
பத்து நாட்களுக்குமுன் படித்த இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். கடத்தப் பட்ட 22 டைனோசர் முட்டைப் படிமங்களை சீனாவிடம் அமெரிக்கா தந்ததாகப் படித்த செய்தி.

வயது 6.5 கோடி ஆண்டுகளுக்கும் மேல் இருக்கலாம் என்றும் ஏலம் விடப் படுவதற்கு இவை கடத்தப் பட்டதாகவும் தெரிகிறது. 

சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த முட்டைகளில் 19 முட்டைகளில் உயிர் பெறக் கூடிய முதிர்வுறாக் கருவுரு உயிர் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்ற செய்திதான். 

மூன்றாவது முறை அமெரிக்கா இப்படி திருப்பி தந்திருக்கிறதாம்.

ஒவிராப்டர் வகையைச் சேர்ந்த முட்டைகளாம். சீனாவின் தெற்குப் பகுதியில் இருக்கும் குவாங்க்டன் மாகாணத்தில் கிடைக்கப் பெற்றதாம்.

***********************************************************
மறைந்த தேவ் ஆனந்த் பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்றும் படித்தேன். தேவ் ஆனந்துக்கு முஹம்மது ரஃபி பல பாடல்கள் பாடியிருக்கிறார்.
  
ஆனால்   முஹம்மது ரஃபிக்காக தேவ் ஆனந்த் ஒரு பாடல் பாடியிருக்கிறாராம். 1966 ஆம் வருடம் பியார் மொஹப்பத் என்ற படத்தில் ஒரு பாடலின் இடையே வரும் வரிகளை தேவ் ஆனந்த் பாடினாராம். 

************************************************************
கடிதங்கள் எழுதும் காலத்தில் போஸ்ட் கார்டாக இருந்தாலும் சரி, இன்லேன்ட் லெட்டராக இருந்தாலும் சரி எங்கள் குடும்பத்துக்கே ஒரு வழக்கம் உண்டு. சுருக்கமாக எழுதிப் பழக்கமே இல்லை! பொடிப் பொடியாக எழுதுவது முதல் மார்ஜினில் கோணம் மாற்றி எழுதுவது,  ஸ்கெட்ச் பேனாவில் - ஏற்கெனவே எழுதியிருக்கும் இடையே பெரிய எழுத்துகளில் ஒரு செய்தி என்றெல்லாம் எழுதி ஒட்டிய பின்னும் அனுப்புனர் முகவரியின் மேலும் கீழும்  கூட சில வரிகள் எழுதி அனுப்புவோம்!
                              
இது எதற்கு நினைவுக்கு வந்தது என்றால், பொன்னியின் செல்வன் செய்தியை மட்டுமே பகிரும் எண்ணம் இருந்தாலும் ஒரு பதிவில் நிறைய இடம் கீழே வேஸ்ட் ஆகிறதே (!!!) என்று இன்னும் இரண்டு செய்திகளை இதோடு இணைத்து விட்டேன்.
                       
கொசுறு தகவல். இன்று எவர்க்ரீன் படம் மிஸ்ஸியம்மா மறுபடி பார்க்கப் பட்டது. மிக அழகிய சாவித்திரி, மிக அழகிய ஜெமினி கணேசன் இனிமையான பாடல்கள் என்று அலுக்காத, அருமையான படம். 
                      
கொசுறு 2 : தினமணியில் மதியின் கார்ட்டூன்..."ஐயோ அடுத்த வருடம் 12-12-12 என்ற ஒரு சிறப்பான நாளில் வரும் ரஜினியின் பிறந்த நாளை - இன்ப அதிர்ச்சியை -அவர்தம் ரசிகர்கள் எப்படி தாங்கப் போகிறார்களோ..." !!!!!!!
                   

19 கருத்துகள்:

  1. வெட்டி அரட்டை அல்ல, விஷயமுள்ள அரட்டை.

    பதிலளிநீக்கு
  2. சுவாரசியமான அரட்டை.

    //எழுதி ஒட்டிய பின்னும் அனுப்புனர் முகவரியின் மேலும் கீழும் கூட சில வரிகள் எழுதி அனுப்புவோம்//
    ஹா.ஹா......

    பதிலளிநீக்கு
  3. அதாவது அப்போது தொடர்கதையாக வந்த போது வாராவாரம் கதைகளுக்கு ஜீவன் சேர்த்த ஓவியங்கள் இல்லாமல் புத்தகம் படிப்பது ஏதோ இழந்தது போலத்தான் இருக்கும். பைண்ட் செய்து வைத்திருக்கும் புத்தகங்கள் வசதியானவை.//

    அதே! அதே! அந்தக்காலத்துப் பொன்னியின் செல்வன் பைன்டிங்கும், அமரதாரா பைன்டிங்கும் படிக்கிற சுகமே தனி!

    துப்பறியும் சாம்புவும் அப்படித்தான். முதல்லே தொடரா வந்தப்போ ஓவியர் ராஜூ படங்கள் வரைஞ்சதா நினைவு. அப்புறமா சித்திரத் தொடருக்கு கோபுலு

    பதிலளிநீக்கு
  4. மிஸ்ஸியம்மா இங்கேயும் அப்படித்தான் பார்க்கிறோம்.

    இப்போவும் இன்லன்ட் கவர், போஸ்ட் கார்டுகளில் கடிதங்கள் வந்தால் அப்படித்தான் நுணுக்கி, நுணுக்கி எழுதி அனுப்புவாங்க எங்க உறவினர் ஒருத்தர். கடிதம் போடணும் என்பதற்காகவே போடுவார்.

    பதிலளிநீக்கு
  5. பயனுள்ள தகவல்களை சுவாரஸ்யமுடன்
    படிக்கத் தக்கப் பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
    த.ம 3

    பதிலளிநீக்கு
  6. பொன்னியின் செல்வன் குறித்து எனக்கும் இந்த ஆசை இருந்தது.விளம்பரம் நானும் பார்த்தேன். மணியத்தின் ஓவியங்களுக்காகவே வாங்கப் போகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. அடடா... நான் விகடன் விளம்பரத்த பாக்காம மிஸ் பண்ணிட்டேனே... ஓவியங்களுடன் படிக்கறதுக்காகவே புக் பண்ணிட‌ வேண்டியதுதான். முன்னல்லாம் லெட்டர் எழுதும்போது நான்கூட இப்படித்தான் எல்லாப் பக்கமும் கிறுக்கி எழுதிட்டிருந்தேன். இப்ப எஸ்எம்எஸ்சும், ஈமெயிலும் வந்து என்னை சோம்பேறியாக்கிடுச்சு. மிஸ்ஸியம்மாவுல வாராயோ வெண்ணிலாவே, பிருந்தாவனமும் நொந்த, ச்சே, நந்தகுமாரனும் பாட்டுகளுக்காகவே படத்தைப் பார்க்கலாம். அடிக்கடி எங்ககூட இப்படி அரட்டை அடிங்க ஸ்ரீராம் சார்...

    பதிலளிநீக்கு
  8. நல்ல பகிர்வு, நிறைய பேர் சொனாங்க செமயா இருக்குன்னு

    பதிலளிநீக்கு
  9. பொன்னியின் செல்வன் பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி!! நான் ஓவியங்களுடன் வந்த வேங்கையின் மைந்தன், கயல்விழி போன்ற நாவல்களை எல்லாம் சேமித்து வைத்திருக்கிறேன் பொன்னியின் செல்வன் உள்பட!

    மிஸ்ஸியம்மா படத்தில் 'பிருந்தாவனமும் நந்தகுமாரனும்' பாடல் எப்போது பார்த்தாலும் அழகு!

    பதிலளிநீக்கு
  10. இன்னொரு ஜூராஸிக் பார்க் நிஜமாக உருவாக வாய்ப்பு இருக்கா.. அடடா.

    இன்லேண்ட் லெட்டர் :-)))))

    பதிலளிநீக்கு
  11. அலுவலகத்தில் என் உடன் பணிபுரிந்த நண்பரொருவர் என் திருமணத்தின் போது பரிசாக அளித்த பொருள் என்ன தெரியுமா?.. 'பொன்னியின் செல்வன்' 5 பாகத்தையும் மூன்று பைண்டிங்குகளில் அடக்கிய தொகுப்பு. ஓவியர் மணியம் கதாபாத்திரங்களுக்கு உருவம் கொடுத்த ஓவியங்கள் நிறைந்தது.

    அதெல்லாம் முக்கியமில்லை; அந்த நண்பர் 'கல்கி' இதழ்களில் வெளிவந்த அந்தத் தொடர் வந்த பகுதிகளைப் பிரித்து பைண்ட் செய்திருக்கிறார். கடையில் இதழ்களை வாங்கும் பொழுது இரு இதழ்கள் அவரால் எந்த காரணத்தினாலோ வாங்கமுடியாமல் போயிருக்கிறது. அதனால், தவறவிட்ட அந்த 'கல்கி' இதழ்களைப் எங்கிருந்தோ பெற்று அந்த இரு இதழ்களில் அடங்கிய நான்கு அத்தியாயங்களையும் தன் கைப்பட மணிமணியான எழுத்துக்களில் எழுதி அப்படி எழுதிய பகுதிகளையும் சேர்த்து பைண்ட் செய்த புத்தகங்களை எனக்குப் பரிசாக அளித்திருக்கிறார்!
    எவ்வளவு ப்ரியத்துடன் தொகுத்து தான் வைத்திருந்த புத்தகத்தை அன்பின் வெளிப்பாட்டில் எனக்குத் தரத் தேர்ந்து திருமணப்பரிசாகத் தந்திருக்கிறார் என்று பிரமித்துப் போனேன்.

    நாற்பதாண்டுகளுக்கு மேலாகிறது. இடையில் பல ஊர்களுக்கு அரசுப் பணியில் மாற்றலாகி வந்திருக்கிறேன். இருந்தும் அந்த மூன்று பைண்ட் வால்யூம்களையும் எங்கேயும் தவற விட்டுவிடாமல், அதன் அருமை உணர்ந்து இன்றும் பொன்னே போல் போற்றிப் பாதுகாத்து என் புத்தக அலமாரியில் பதுக்கி வைத்திருக்கிறேன்.

    'பொன்னியின் செல்வனை' நினைக்கும் பொழுதெல்லாம் என் நினைவுக்கு வந்து மனத்தில் அழியாது பதிந்த தகவல் இது.

    பதிலளிநீக்கு
  12. பொன்னியின் செல்வன் போட்டது போல , தில்லானா மோஹனாம்பாளும், சிவகாமியின் சபதமும் போடக்கூடாதோ:)

    பதிலளிநீக்கு
  13. மிஸ்ஸியம்மா எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது. எல்லா டயலாகும் மனப்பாடம்.

    பதிலளிநீக்கு
  14. எதுவும் அரட்டையாகத் தெரியவில்லை.மிஸ்ஸியம்மா பாக்கவேணும்.
    12.12.12 அசத்தல்தான் !

    பதிலளிநீக்கு
  15. /புத்தகமாகப் போடுகிறவர்கள் வாராவாரம் வந்த அந்தப் படங்களையும் சேர்த்து போடக் கூடாதோ என்று தோன்றும்./

    ஆம் எத்தனை தொடர்கதைகளை உயிரோட்டமான அதன் ஓவியங்களுக்காகவும் தொடர்ந்து வாசித்திருப்போம். எந்தக் கதைக்கு யார் வரைந்தார்கள் என்பது கூட இன்னும் நினைவில்.

    /ஒட்டிய பின்னும் அனுப்புனர் முகவரியின் மேலும் கீழும் கூட சில வரிகள் எழுதி அனுப்புவோம்!/

    இது புதுசாக் கேள்விப்படுகிறேன். ஆனால் இரண்டாக மடித்த பின் மூன்றாவதாக மூடும் நீள முனையின் இருபக்கமும் எழுதும் வழக்கம் உண்டு:)!

    பதிலளிநீக்கு
  16. கலக்கல் சார். தொடரவும்.

    தமிழ்மணம் வாக்கு 9.

    பதிலளிநீக்கு
  17. பொன்னியின் செல்வன் கொஞ்சம் விலை அதிகம்தான்னாலும் புக் பண்ணிடலாமேன்னு ரங்கு கூட ஃபீல் பண்ணறார்... ஹும்ம்.. இன்னும் டூ வீக்ஸ் யோசிச்சுட்டு டிஸைடு பண்ணலாம்ன்னு இருக்கோம். :)))

    பதிலளிநீக்கு
  18. சுவாரசியமான அரட்டை. மிஸ்ஸியம்மா கடைசிவரை சிறிது கூட தொய்வில்லாமல் இன்றும் ரசித்து பார்க்க முடிகிற ஒரு படம். நம்பியாரின் கதாபத்திரத்தை மிகவும் ரசிப்பேன். சாரங்கபாணியின் நடிப்பு கலக்கல்!

    // எழுதி ஒட்டிய பின்னும் அனுப்புனர் முகவரியின் மேலும் கீழும் கூட சில வரிகள் எழுதி அனுப்புவோம்!//
    எங்க அப்ப ஞாபகம் வருகிறது. அப்பொழுது வீட்டில் போன் வசதி இல்லாததால் எங்கப்பா துளி கூட இடம் விடாமல் எழுதுவார்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!