திங்கள், 13 பிப்ரவரி, 2012

சென்ற வாரச் செய்திகள்...."ஆத்திரத்துக்கு உண்டோ அடைக்கும் தாழ்...."

          
என்னதான் சில செய்திகளை விட்டு விட்டு நல்ல செய்திகளை மட்டும் படிக்கலாம் என்று எண்ணினாலும், சில சமயம் இந்த மாதிரிச் செய்திகள் கண்களில் படுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் கீழே குறிப்பிட்டுள்ள செய்திகள் சென்ற வியாழன் முதல் ஞாயிறு வரை செய்தித் தாள்களில் வந்த செய்திகள். மேலும் இப்போதெல்லாம் நல்ல செய்தி என்று எங்கே கண்ணில் படுகிறது? 
               
முதல் செய்தி. ஒன்பதாம் வகுப்பு மாணவன் டீச்சரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த செய்தி. தன் பெற்றோரிடம் இந்த டீச்சர் மாணவனின் நடத்தைக் குறித்துப் புகார் செய்து அதனால் அவன் பாக்கெட் மணி, மொபைல் மற்றும் பைக் பறிக்கப் பட, ஆத்திரமடைந்த மாணவன் அந்த டீச்சரை கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தான்.
              
இரண்டாம் செய்தி. குடித்து விட்டு தண்டமாக வீட்டில் அமர்ந்து, மகனை வேலைக்கனுப்பி, அந்தப் பணத்திலும் குடித்து, சண்டை போட்டு, என்றிருந்த தந்தையைக் கத்தியால் குத்தி பதினாறு வயது மகன் கொலை செய்தான்.
               
மூன்றாம் செய்தி. பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் என்று படித்துக் கொண்டிருந்த ஐந்து ஆண் நண்பர்கள். அவர்களுடன் ஒரு பெண் சிநேகிதி. ஐந்து ஆண் நண்பர்களும் பெண் சிநேகிதியின் வீட்டுக்கெல்லாம் வந்து அவள் அம்மாவுடன் பேசி, தங்கச்சி தங்கச்சி என்று பழகுவார்களாம். அந்த அம்மாவும் இவர்களுக்கு சாதம் தன் கையாலேயே உணவு ஊட்டி விடுவது எல்லாம் வழக்கம். ஒரு நாள் இரவு அந்தக் கோஷ்டியில் ஒருவன் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருப்பதாகச் சொல்லி அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு போய் ஐந்து பேரும் இரவு முழுக்க போதையில் சீரழித்து காலை அரை மயக்க நிலையில் அரைகுறை ட்ரீட்மென்ட் கொடுத்து வீட்டில் கொண்டு வந்து சேர்த்து விட்டுப் போய்,  பின்னர் அரை மயக்கத்தில் பெண் உளறியதைக் கேட்டு அம்மா குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில், பின்னர் எழும்பூரிலும் சேர்த்து .... 
                  
அப்புறம் ஐந்து பேரில் நால்வர் கைதாக, ஒருவன் தற்கொலைக்கு முயன்று பின்னர் இந்நேரம் கைதாகியிருக்கலாம். "பெற்ற மகன் மாதிரி நினைச்சு வீட்டுக்குள்ள சேர்த்து ஊட்டிஎல்லாம் விட்டேனேடா...  மறக்கவே முடியாதபடி துரோகம் பண்ணிட்டீங்களே.." என்று அந்தத் தாய்க் கதறுகிறாராம்.
          
நான்காம் செய்தி. திருச்சி அருகே கன்னா பின்னா என்று ஓட்டி, முந்திய ஒரு காய்கறி லாரி டிரைவருடன், முந்தப் பட்ட பஸ் டிரைவர் வாக்குவாதம். சண்டையில் வாக்குவாதம் முற்ற, லாரி டிரைவர் 'மேலே ஏற்றிக் கொன்னுடுவேன்' என்று எகிற, 'எங்கே, கொல்லு பார்க்கலாம்..' என்று பஸ் டிரைவர் கோபத்தில் பதிலுக்கு எகிற,  அத்தனை பயணிகள் முன்னிலையில் லாரி டிரைவர் லாரியைக் கிளப்பி பஸ் டிரைவரை லாரி ஏற்றி தக்காளி நசுக்குவது போல நசுக்கிக் கொன்றே விட்டார்.
            
ஐந்தாம் செய்தி. கணவனைக் கொன்ற பெண்ணை விடுதலை செய்தது கோர்ட். பெற்ற மகளிடம் தவறாக நடந்து பாலியல் பலாத்காரம் செய்த கணவனைக் கொன்ற மனைவியை கோர்ட் விடுவித்தது. 
               
பஸ்ஸில் தவற விட்ட லட்சக் கணக்கான ரூபாய்ப் பணத்தைத் திரும்ப ஒப்படைத்த டிரைவர் கண்டக்டர் செய்தி, அதே போலப் பணத்தையும் நகையையும் திரும்ப ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் பற்றிய செய்திகளும் உண்டுதான். ஆனால் குறைந்த இடைவெளியில் அடுத்தடுத்துப் படித்த இந்தச் செய்திகள் மனத்தைக் கலக்கின. காரணம் ஆயிரம் இருக்கலாம், டிவி, திரைப் படங்கள் (சிறுவன் 'அக்னீபத்' ஹிந்திப் படம் பார்த்துதான் எப்படிக் கொல்வது என்ற ஐடியா கிடைத்ததாம்) வீட்டுச் சூழ்நிலை, நண்பர்கள் சேர்க்கை....
         
என்ன சொல்ல.....? என்னவோ போங்க....  
                        

15 கருத்துகள்:

  1. நடுங்க வைக்கும் நாட்டு நடப்புகள்:((!

    பதிலளிநீக்கு
  2. இதையெல்லாம் பார்த்தால் செய்தித்தாளே படிக்க வேண்டாம் என்று தோன்றுகிறது. ஆனால் நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமே!!

    பதிலளிநீக்கு
  3. நல்ல செய்திகளுக்கு நடுவே கெட்ட செய்திகள் என்பது போய் கெட்ட செய்திகளுக்கு நடுவே நல்ல செய்திகளை தேட வேண்டி உள்ளது.

    பதிலளிநீக்கு
  4. ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு... என்ற ரீதியில், அங்கே நட்ந்துதாம், இங்கே நட்ந்துதாம்னு, கடைசியில் நம்ம ஊருலயே இந்தக் கொடுமை... (மாணவன் ஆசிரியரைக் கொன்றது)

    இதுவரை இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மாணவர்கள் தற்கொலை(தான்!!) நடந்துகொண்டிருந்தது. இப்போ...!!

    ரொம்பவே பயமாருக்கு.

    மற்ற சம்பவங்களும் அப்படியே.. ஆனா, படுநிச்சயமா, இதற்கெல்லாம் மீடியாக்களும் ஒரு காரணம்தான். கொஞ்சமாவது பொறுப்பு அவஙக்ளுக்கு வரணும்; வரவைக்கணும்!! :-(((((

    பதிலளிநீக்கு
  5. பஸ் டே கொண்டாட மறுக்கப் பட்ட பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் ஊர்வலம் நடத்தி முடித்து மறைவிலிருந்து அங்கு வந்த பஸ்கள் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தியதையும் ஆண் போலீஸ், பெண் போலீஸ், கண்டக்டர், டிரைவர் ஆகியோர் பெண்கள், முக்கியமாக கைக் குழந்தைகளைக் கல்லடியிலிருந்து காப்பாற்றிய செய்தியைச் சேர்க்கவில்லையா...

    பதிலளிநீக்கு
  6. நாட்டில் உள்ள அணைத்து ஊடகங்களும் ஒன்றுகூடி இந்த போக்கை மாற்றவேண்டும். அவர்கள் நினைத்தால் செய்யாலம்.
    வெறும் sensational மற்றும் பரபரப்பு செய்திகளா இவைகளை அணுகாமல் மெல்ல மெல்ல வளரும் இவை போன்ற சீர்கேடுகளை அகற்ற நிகழ்சிகள் தரவேண்டும்.

    ஆனால் அந்த நம்பிக்கை நம் நாட்டு ஊடக துறையினர் மீது நமக்கு இருக்கிறதா?

    பதிலளிநீக்கு
  7. குடும்பத்துக்குள் அங்கமாக மாறிவிட்ட தொலைக்காட்சியில் சீரியல் பார்க்காமல் இருப்பது இளம் தலைமுறையினருக்குக் கொலை, தற்கொலை எல்லாம் சாதாரண விஷயம் என்ற எண்ணம் வளராமலிருக்க உதவும்.

    பதிலளிநீக்கு
  8. ரொம்ப ரொம்ப கொடுமை! என்ன சொல்றதுன்னே தெரியல. அதிர்ச்சியா இருக்கு.

    பதிலளிநீக்கு
  9. அப்புறம் ஐந்து பேரில் நால்வர் கைதாக, ஒருவன் தற்கொலைக்கு முயன்று பின்னர் இந்நேரம் கைதாகியிருக்கலாம். "பெற்ற மகன் மாதிரி நினைச்சு வீட்டுக்குள்ள சேர்த்து ஊட்டிஎல்லாம் விட்டேனேடா... மறக்கவே முடியாதபடி துரோகம் பண்ணிட்டீங்களே.." என்று அந்தத் தாய்க் கதறுகிறாராம்.//

    தப்பு அந்தத் தாய் மேல் தான். மகள் மேலும் அவர் நண்பர்கள் மேலும் நம்பிக்கை இருந்தது கூடத் தப்பில்லை. கண்ட நேரங்களிலும் அந்தப் பெண்ணை அவர்களோடு சுற்ற அனுமதி கொடுத்தது இமாலயத் தவறு. இன்றைய இளைஞர்களிடம் முற்போக்கானவர் என்ற பெயரை வாங்குவதற்காகப் பல பெற்றோரும் செய்யும் தவறு. பின்னர் அடிச்சுப்பாங்க. நிறையப் பார்த்தாச்சு! அப்பா, அம்மாவின் கண்காணிப்பு நல்லமுறையில், குழந்தைகளைச் சரியான பாதையில் கொண்டு செல்வதாய் அமைய வேண்டும். இரவு முழுதும் ஒரு பெண் நண்பர்களோடு என்ன தான் ஆஸ்பத்திரி என நம்பக்கூடிய பொய்யைச் சொல்லிக் கூட்டிப் போனாலும், கூடச் செல்லாதது அந்தத் தாயின் தவறு. காலையில் நானே அழைத்துவரேன், ஆஸ்பத்திரிப் பெயரும், படுக்கை எண்ணும் கொடுனு கேட்டிருக்க வேண்டும். கண் கெட்டப்புறம் சூரிய நமஸ்காரம்! :((((((

    தண்டனை பெற்றோருக்கே கொடுக்க வேண்டும். :(((( இழந்த வாழ்க்கையைத் திரும்பச் சீரமைக்க முடியுமா அந்தத் தாயால்???

    பதிலளிநீக்கு
  10. ஆசிரியரைக் கொன்ற பையனுக்கும் பெற்றோர் தான் காரணம். அதீதச் செல்லம்; கேட்டதெல்லாம் கிடைத்திருக்கிறது. மூன்று வருஷமாகத் தொடர்ந்து அந்தப் பையனோடு போராடி இருக்காங்க ஆசிரியர். அப்போவானும் சுதாரிச்சிருக்கலாமோ என்னவோ! ஆனால் பையன் கொல்லும் அளவுக்குப் போவான் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் தான். பள்ளியின் முதல்வராவது தக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
    பெரும்பணக்காரர்கள் என்பதால் நன்கொடை நின்றுவிடும் எனப் பேசாமல் இருந்துவிட்டாரோ என்னமோ.
    இழந்த உயிரை இவர்களால் கொண்டு வர முடியுமா?

    பதிலளிநீக்கு
  11. தினசரிப் பத்திரிகைகளில் நல்ல செய்திகள் என்பதையே பார்க்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  12. நான் பேப்பர் வாங்குவதையே நிறுத்துவிடலாமான்னு பார்த்துக் கொண்டிருக்கிறேன்:((

    பதிலளிநீக்கு
  13. அதிர்ச்சிக்குள்ளாக்கிய மேற்கண்ட செய்திகள் சமூகம் மோசமான நோய்க்கு ஆளாகியிருப்பதை காட்டுகிறது.மதிப்பீடுகள் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  14. நாட்டு நடப்பு எதுவுமே சரில்ல.
    எல்லாருக்குமே இதில பங்கிருக்கு !

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!