வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

டிஜிட்டல் கர்ணன், மணிரத்ன பொம்மன்.

          
பி ஆர் பந்துலு நூற்றாண்டு விழாவை ஒட்டி அவர் இயக்கிய மிகப் புகழ் பெற்ற படமான 'கர்ணன்' திரைப் படத்தை டிஜிட்டலில் வெளியிடுகிறார்கள்.
              
டிஜிட்டல் என்பதால் என்ன வசதி, என்ன மாற்றம் இருக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. 
            
நிச்சயம் சிவாஜி கொஞ்சம் ஒல்லியாகத் தெரிய மாட்டார்! 
  
மிக அருமையான, இனிமையான  பாடல்களைக் கொண்ட படம். சிவாஜி, அசோகன், என் டி ராமாராவ் முத்துராமன் என்று பெரிய ஆட்கள் எல்லாரும் நடித்த மறக்க முடியாத படம். 
    
சிவாஜி கொடுத்த காசுக்கு மேலேயே நடிப்பார் என்ற குற்றச்சாட்டு உண்டு. இந்தப் படத்தில் அப்படிச் சொல்ல முடியாது என்று நினைக்கிறேன். குந்தி கர்ணனைச் சந்திக்கும் இடம், தேவிகா சிவாஜியை, கர்ணனை சமாதானப் படுத்தும் 'கண்ணுக்குக் குலமேது' பாடல் காட்சி, சபையில் பிறப்பைக் குறித்து அவமானப்படும்போது அசோகன் உதவியதும் காட்டும் நடிப்பு என்று குறிப்பிட்டுச் சொல்ல நிறையவே காட்சிகள் உண்டு. 

                
இதை டிஜிட்டலில் புதுப்பிக்கிறார்கள் சரி, படத்தை இந்தக் கால நடிகர்களை வைத்து மறுபடி எடுத்தால் எந்தெந்த வேடத்துக்கு யார் யார் பொருத்தமாக இருப்பார்கள்? முதலில் கர்ணனாக யார் நடிப்பார்கள்? பிரகாஷ்ராஜ்? ரெண்டு மூணு ரீமிக்ஸ் குத்துப் பாட்டு நிச்சயம். உள்ளத்தில் நல்ல உள்ளம் போன்ற பாடல்களை K to the A to the R to the N to the  என்ற கூச்சல்களுக்கு நடுவே இரண்டு வரி சீர்காழியின் குரலில் தொடங்கி மெல்ல அமுங்க விட்டு உதித் நாராயணனோ வேறு யாரோ அலறுவது போல் கற்பனை செய்யவே நடுக்கமாக இருக்கிறது. அதுவும் ஏகப்பட்ட ஹிட்ஸ் வாங்கும்! இப்படி ஏன் கற்பனை செய்ய வேண்டும் என்கிறீர்களா.... ஒரு பயம்தான்!
  
வீரபாண்டிய கட்டபொம்மனில் சிவாஜி பேசும் "மஞ்சள் அரைத்தாயா நாற்று நட்டாயா" வசனம் ரொம்ப ரொம்ப பிரபலமாகி எல்லா நடிகர்களும் பேசிப் பார்த்து சின்னி ஜெயந்த் போன்றோர் மிமிக்ரி கிண்டல் எல்லாம் கூடச் செய்து விட்டார்கள். 
             
அந்தப் படத்தை இப்போது எடுத்தால், அதுவும் மணிரத்னம் ஸ்டைலில் எடுத்து இந்த வசனத்தை அவர் பாணியில் சிக்கனமாக வழங்கினால் எப்படி இருக்கும்?

கட்டபொம்மன் : "என்ன கேட்டாய்.."

ஜாக்சன் : "கிஸ்தி கிஸ்தி..." (சத்யராஜ் ஸ்டைல்!)
   
கட்டபொம்மன் சிறிது நேரம் மேலே நோக்குகிறார். அப்புறம் மெல்ல ஜாக்சன் துரை முகத்தைப் பார்க்கிறார். மெல்லத் திரும்பி நடக்கிறார். 

ஜாக்சன் : சற்று உரத்த குரலில், "கட்டபொம்மா..." 

கட்டபொம்மன் சரேலெனத் திரும்பி "ஏ....ய்" என்ற அலறலோடு கட்டை விரலை நீட்டி விரலை நடுக்கிக் காண்பித்து ஆத்திரத்தை அடக்கி உணர்ச்சி காட்டுகிறார். 

"கட்டபொம்மு.... கட்டபொம்மு என்று சொல்லு" எச்சரிக்கிறார்... சொல்லும்போதே உடைந்துவிடுவது போல 'கட்ட'வில் அப்போடி ஒரு அழுத்தம்!

தாழ்குரலில் (அதுதான் ஹஸ்கி வாய்சில்) ஜாக்ஸனிடம் கேட்கிறார்.

"ஏன், ஏன் தரணும் கிஸ்தி.... ஆங் ....  எங்க கூட வயலுக்கு வந்தியா... ஆங் ... நாற்று நாட்டியா... ஆங்... களை பறிச்சியா ஆங்... "
     
".................................................."
               
'கண்ணுக்குக் குலமேது' ராகத்தில் "கற்பனைக்கு அளவேது....!" 
                        

33 கருத்துகள்:

  1. குரோம்பேட்டைக் குறும்பன்24 பிப்ரவரி, 2012 அன்று PM 5:31

    What do we do now? I don't understand anything.
    நன்றி பப்பி அக்கா!
    நான் சொல்ல நினைத்ததை நீங்க சொல்லிட்டீங்க!

    பதிலளிநீக்கு
  2. சிவாஜி ஓவரா நடிக்காத படங்கள்ள ஒண்ணு பாமா விஜயம்.

    பதிலளிநீக்கு
  3. என்ன பாமா விஜயம் படத்தில் சிவாஜியா? அப்பாஜி எந்த உலகத்துல இருக்கீங்க!

    பதிலளிநீக்கு
  4. அப்பாதுரை செம கலக்கல்! :))))
    'எங்கள்' என்ன புரியலையா? சிவாஜி ஓவரா நடிக்காத படங்களே கிடையாது. அப்படி ஒரு படம் சொல்லனும்னா அது அவர் நடிக்காத படத்தைதான் சொல்லன்னும்ன்கறார் அப்பாதுரை.

    பதிலளிநீக்கு
  5. ஓ! அப்படியா!

    பதிலளிநீக்கு
  6. சிவாஜி கணேசன் கொடுத்த காசுக்கு மேலே கூவுகிறார் என்ற நையாண்டிக்கு முன்பு முகபாவ நடிப்பில் சி.மு-சி.பி யாரென யாராவது கூறுங்கள் பார்க்கலாம்.

    தற்போதைய படங்கள் தொழில்நுட்பம்,காமிரா,இசை என மாற்றங்களடைந்து இயக்கம் யார் என்பது போன்ற பார்வைகள் மாறுபட்டு போயிருக்கின்றன.

    நடிப்பு,இசை,பாடல்,திரைக்கதை,இயக்கம் என்ற மொத்த வடிவில் முந்திக்கொண்டது சிவாஜியின் நடிப்பு மட்டுமே.

    புதிய பறவை சிகரெட் புகையை இப்போதைய கதாநாயகர்கள் யாரையாவது விடச் சொல்லுங்க பார்க்கலாம் மிச்ச கச்சேரியை அப்புறமா வைத்துக்கொள்ளலாம்:)

    பதிலளிநீக்கு
  7. எனக்கு மிகவும் பிடித்த படம் கர்ணன்.

    பதிலளிநீக்கு
  8. சபாஷ் ராஜ நடராஜன், சரியான கேள்வி...அப்பாதுரை சார்....இப்போ என்ன சொல்றீங்க...பதில் சொல்லுங்க அவருக்கு..

    பதிலளிநீக்கு
  9. அப்பாதுரை கலக்ஸ்...மீனாக்‌ஷி ட்ரமெண்டஸ் கேச்...

    ஆனா... சிவாஜி நடிப்பு பல்கலைகழகம்...வரும் தலைமுறை நடிகர்கள் கொஞ்சமாவுது நடிச்சு பழகுங்கப்பா ன்னு சொல்லாமல் சொல்லி ஒவ்வோரு படத்திலும் நடிச்சிருப்பார்...

    அந்த காலத்திலே மேக்கப்...அளவு எல்லாம் ஓவர்தான்..அது ஓவர் விரும்பிகளின் காலம்.. இப்பொழுது சிக்..சிக் என நடிப்பு உட்பட எல்லாவற்றிலும் சிக்கனம்...

    பதிலளிநீக்கு
  10. எனக்கு சிவாஜியை ரொம்ப பிடிக்கும் என்னிக்குமே. ராஜ நடராஜன் 'பார்த்த ஞாபகம் இல்லையோ' பாடலில் சிவாஜி சிகிரெட் பிடிக்கற ஸ்டைலுக்காகவே எத்தனையோ முறை பாத்திருக்கேன். 'யார் அந்த நிலவு' பாடல். ஆஹா! Barrister ரஜினிகாந்த் இன்னா ஸ்டைலு. இன்னும் சொல்லிண்டே போகலாம்.
    அப்பாதுரை சொன்னது கலக்கல் ஜோக். இன்னும் நெனச்சு நெனச்சு சிரிச்சுண்டு இருக்கேன். :)

    பதிலளிநீக்கு
  11. ஏன் 'அன்னையின் ஆணை' ஞாபகத்திற்கு வரவில்லையா?.. சாவித்திரியை துண்டால் அடிக்கும் அந்தக் காட்சி?..

    'படிக்காத மேதை'யில் அரை டிராயருடன் நடித்த அந்த அப்பாவியை
    மறக்க முடியுமா?

    'வியட்நாம் வீடு' பத்மநாப ஐயர்?
    அந்த 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' பாடல் காட்சி?

    உத்தம புத்திரனின் 'ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு' பாடலின் அந்தக் கொண்டாட்டம்?

    வாழ்ந்து பார்த்த அந்த வ.உ.சி. வேடம்?..

    'முதல் மரியாதை'யில் குண்டாகத் தெரிவார் தான். ஆனால் அந்த குண்டை மறக்கச் செய்த நடிப்பல்லவா, அவரது?..

    பதிலளிநீக்கு
  12. சிவாஜி அவர்களை மிக மிகப் பிடிக்கும்.கர்ணன்,தில்லானா மோகனாம்பாள்,வியட்னாம் வீட்போன்ற படங்களை பாடல்களை நிறையவே தேடித் தேடிப்பார்ப்பேன்.டிஜிட்டல்ல எடுக்கிறோம்ன்னு அநியாயத்துக்கு நல்ல படத்தைச் சொதப்பாமல் இருந்தால் நல்லது !

    பதிலளிநீக்கு
  13. எவன் அவன் சிவாஜிகணேசன் நடிப்பை அப்படி பேசுவது. வேணாம் ரொம்ப மோசமானவன் ! கெட்ட கெட்ட வார்த்தையால் வசை பாடிவிடுவேன் !!

    ஏன் ஸ்ரீராம் (கூகிள் இந்திக் உங்கள் பெயரை கெடுத்து குட்டிசுவாரக்கி விட்டது ! நான் என் செய்ய !) கர்ணன் படத்தில் கடைசி காட்சியில் அம்புடன் உறுமுவதை அந்த வேதனை கலந்த முகத்துடன் எந்தபயலால் நடிக்க முடியும் !

    ஒரே மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு, ஒரு சிரமமும் இல்லாமல் (மேக்கப்) வளையவரும் இந்த காலத்து கத்துக்குட்டிகள் நடிப்பது நடிப்பே அல்ல என்பேன். எனக்கு தெரிந்து கொஞ்சம் அதற்கு மெனக்கெடுவது கமலும் / விக்ரமும் தான்

    பத்மநாபன் சொன்னது போல் அவர் ஒரு பல்கலைக்கழகம்

    ஜீவி,

    உங்கள் கருத்தை மனமார படித்து மகிழ்ந்தேன். இரண்டு வாரங்களாக விட்டு விட்டு பார்க்கும் தில்லானா மோகனம்பாள் பார்த்தே தீரவேண்டும். பத்மினியிடம் கொட்டகையில் சீறிவிட்டு போகும் காட்ட்சியுடன் நிறுத்தி இருந்தேன்.

    பதிலளிநீக்கு
  14. பதிவு நல்லா எழுதி இருக்கீங்க. கர்ணன் படத்துல ஒவ்வொரு காட்சியையும் அவ்வளவு ரசிச்சு பாத்திருக்கேன். சாவித்திரியும் சிவாஜியும் பகடை விளையாடும் காட்சியை மிகவும் ரசிப்பேன். தூது பேச கிருஷ்ணர் வரும் காட்சி மிகவும் பிரமாதமாக இருக்கும். தேவிகா தன் நாட்டின் பெயரை ஜாடையாக சொல்லியதை கண்டுபிடிக்க சிவாஜி படும் பாடும், அவரை சாவித்திரி கிண்டல் செய்வதும் அருமை.

    இப்ப இந்த படம் எடுத்தா யார் நடிப்பாங்கன்னு நான் கற்பனை செய்ய கூட விரும்பல. தயவு செய்து வேண்டாமே!

    பதிலளிநீக்கு
  15. எப்படி லேட்டா அப்டேட்டா ஆச்சுனு புரியலையே?? ம்ம்ம்ம்ம்?? மத்தியானம் கூடப் பார்த்தேன்; பதிவே வரலை; அப்புறமாப் பார்த்தா பப்ளிஷ் ஆகி எட்டு மணி நேரம்னு சொல்லுது. கூகிளார் காலை வாரிட்டாரேனு நினைச்சுட்டு வந்தேனா!

    பிழைச்சேன்! இத்தனை சிவாஜி ரசிகர்கள் முன்னாடி வாயைத் திறக்காமல் இருந்தேனே! ஓட்டமா ஓடிடறேன்.

    கர்ணன் படக்கதையைக் குறித்தும் சொல்ல நினைச்சுச் சொல்லாமல் ஓடிப் போறேன். வர்ட்ட்ட்ட்டா?????????

    பதிலளிநீக்கு
  16. சிவாஜி பிரபலமாக்கியவர்களில் கர்ணன் மட்டும் இல்லை; கட்டபாண்டிய வீரபொம்மன், சே, வீரபாண்டியக் கட்டபொம்மனும் தான். அது குறித்தும் நம்ம கருத்து தனிக் கருத்து! சொல்லலையோ பிழைச்சேன்.

    பதிலளிநீக்கு
  17. எனக்குத் தெரிஞ்சு சிவாஜி நடிச்சார்னு நான் நினைக்கிற ஒரே படம், "முதல் மரியாதை" மட்டுமே. இப்போதைக்கு இது போதும், நல்லவேளையா இங்கே ஏழு மணி ஆயிடுச்சு. ராத்திரி ரொம்ப உட்காராமல் தூங்கப் போயிடறேன். காலம்பர பார்த்துக்கலாம்.

    எப்படியும் ஆட்டோ வராது! நிம்மதி!

    பதிலளிநீக்கு
  18. நல்ல ஆராய்ச்சி.

    படம் எடுத்தா கூட பரவாயில்லை..நீங்க குறிப்பிட்டு இருக்கற மாதிரி பாடல்கள் ரீமிக்ஸ் தான் பயமா இருக்கு.

    பதிலளிநீக்கு
  19. //சிவாஜி நடிக்காத படங்கள்ள ஒண்ணு பாமா விஜயம். //

    Aayiraththil oruvan

    பதிலளிநீக்கு
  20. சிவாஜி நடிப்பை ஓவர் ஆக்ட் என்று எத்தனையோ விமர்சகர்கள் கிண்டலடித்திருக்கிறார்கள். உண்மை தான்.கிண்டலடித்த மேதைகள் எத்தனை படங்களை பார்த்து, எத்தனை நடிகர்களைப்பார்த்து ஒப்பிட்டு கூறினார்கள் என்று தெரியவில்லை.விமர்சனங்கள் செய்யும் முன்பு திரைப்பட வரலாற்றை பார்த்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும்.
    திரைப்படங்களின் முன்னோடி நாடகங்கள்...அதற்க்கு முன்னோடி தெருக்கூத்துகள்.
    இவைகளுக்கு கதைஇதிகாசங்களில் வரும் கதைகள், புராணங்கள்,இத்தியாதி இத்தியாதி.
    திரைப்படங்களின் ஆரம்ப காலமும் அப்படித்தான்.அரசியல்,சமூக வளர்ச்சிக்கேற்ப திரைப்படங்களின் கதை அமைப்பிலும் புராண கதையில் ஆரம்பித்து சமூக கதைக்கு வந்து,பின்னாளில் சினிமா வியாபாரிகளின் கைகளுக்கு வந்தபின் வெறும் பொழுது போக்கான மேற்கத்திய பதிப்புகளாக மாறிப்போனது.
    இந்த சுழலில் சினிமா முதலாளிகள் ,மற்றும் மீடியாக்களால் , உருவானது தான் "நட்சத்திர மாயை "
    இந்த நட்சத்திர மாயையை மறந்து தமிழ்ப்பட வரலாற்றைப் பாருங்கள்.அப்போது தெரியும் சிவாஜியின் மகிமை.வேலையில்லாத பைத்தியக்காரனாக பராசக்தியில்,ஊரை ஏமாற்றும் ஆளாக திரும்பிப்பாரில் ,வேலைபறிபோகும் நடுத்தர குடும்பத்தலைவனாக ,பேராசைக்கார அறிவாளியாக அந்த நாளில்,இவ்வாறு புராண கதையிலிருந்து சமூக கதையிலிருந்து பிற்கால படங்கள் வரை அவர் நடிக்காத வேடமில்லை.
    தயவு செய்து விமர்சனம் செய்யும் போது கவனம் தேவை.
    அது கிடக்கட்டும் பி.ஆர்.பந்துலு நடித்த படத்தை பார்த்திருக்கிறீர்களா? அப்படி பார்க்க நேர்ந்தால் அன்றைய சென்னையை பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  21. @புதுகை செல்வா,

    இந்த அளவுக்கு உணர்ச்சி வசப்படணுமா? :)))))))

    இப்படிக்கு உயர்ந்த மனிதன் படத்தை மட்டுமே ஒரு தண்டனைபோல

    லக்ஷம் முறை பார்க்க நேர்ந்த அப்பாவி. :)))))))))

    பதிலளிநீக்கு
  22. அப்ப எந்த டெக்னிக்கும் இல்லாத காலத்தில் தெரியாம பண்ணியதற்கே இவளவு பேசுறிங்க.....

    ஆனா!

    இன்று எல்லாம் இருக்கும் இந்த காலத்தில் நம்ம பவர் ஸ்டார் - டாக்டர் ஸ்ரீனிவாசன் நடித்திருக்கும் லத்திகா சரண் படம் பார்த்திருகிறிங்களா... அப்ப இத என்னனு சொல்லுவீங்கள்

    பதிலளிநீக்கு
  23. படம் பார்த்து பல வருடங்கள் ஆன பிறகும் மனத்திரையிலே பார்த்து ரசிக்கக் கூடிய நடிப்பு சிவாஜியின் நடிப்பு மட்டுமே. அனிமேஷனில் சுல்தான் தி வாரியர் எடுக்கலாம். சிவாஜியை அனிமேட் செய்வது சாத்தியமில்லை.

    பதிலளிநீக்கு
  24. என்னங்க மீனாச்சி.. சொன்னது வம்பாச்சி..

    பதிலளிநீக்கு
  25. @ அனானிமஸ், அது யாருங்க பவர் ஸ்டார் டாக்டர் ஶ்ரீநிவாசன்?? கொஞ்ச நாளா ஜி+க்குப் போனாலும், குழுமங்களுக்குப் போனாலும் அவரைப் பத்தியே சொல்றாங்களே?? குழப்பம்!!!!!!!!!!!!!!!!

    @ அப்பாதுரை, ஹிஹிஹி, யார் சொன்னது???? :)))))

    பதிலளிநீக்கு
  26. கீதா சாம்பசிவம்..மீனாச்சி தான், வேறே யாரு? சும்மா இருக்காம விளக்கம் வேறே கொடுத்து நல்லா கிண்டி விட்டாங்களே?
    இப்ப கமெந்டுகளைப் படிச்சு (பகல்) தூக்கம் போச்சே! அடிக்க வராப்லயே இருக்கே?

    அப்படிப் போடுங்க மாதவன். ராஜ நடராஜன், சாய், புதுகை செல்வா, எங்கள்... இதுக்கு என்ன பதில் சொல்வீங்களாம்? (யப்பாடி.. இனி மாதவன் முதுகு)

    பதிலளிநீக்கு
  27. மன்னிக்க ....எனது விமர்சனம் மனதை புண்படுத்தியிருந்தால்..
    அன்று படத்தை அழுதுகொண்டே ஐந்து முறை பார்ப்போம்.
    ஆனால் இன்று சிரித்துக்கொண்டே ஒருமுறை படம் பார்ப்பதற்குள்
    தியேட்டரிளிரிந்து ஒன்பது முறை எழுந்து விடுகிறோமே.
    வீட்டில் பார்த்தாலோ ரிமோட் கதறிவிடுகிறதே
    அது கிடக்கட்டும் யாரது பவர் ஸ்டார்.

    பதிலளிநீக்கு
  28. சிவாஜிக்கு தெரிஞ்சது ஒரே நடிப்பு ஸ்டைல். நாம அதை ஓவர் அந்டர்னு நமக்குத் தோணியபடி டிபைன் செய்து கொண்டோம். சாதாரணமா நடந்து வரதைக் கூட பில்டப் பண்ணி மிகையா பண்ணுவாரு சிவாஜி கணேசன். 'என்ன சௌக்கியமாங்கறதைக் கூட 'என்ன்னஅஅஅஅஅ'னு ஜவ்வ்வா இழுத்துப் பேசுறது அவர் ஸ்டைல். சிவாஜி மிகையா பண்ணுவாரா இல்லை அதுதான் அவரோட இயற்கையா என்பது புரியாம இருக்குறது நல்லதுனு தோணுது. இல்லேன்னா சிவாஜியை ரசிக்க முடியாது என்று நினைக்கிறேன். சிவாஜி படங்கள் பார்க்கும் பொழுது ஓவர் ஏக்டிஙா இல்லையானு பார்க்குறதில்லை; பார்த்தா அப்புறம் பாமா விஜயம் தான் :-)

    புதுகை சொல்லியிருப்பது போல தெருக்கூத்து நாடகத்துலந்து வந்தவருக்கு இயல்பாவே கத்திப்பேசுறது நடிப்புல கலந்திருந்தது. கத்திப் பேசுவது நடிப்பென்றால் கத்தி வீசுவதும் நடிப்பு தான் என்றாராம் எம்ஜிஆர். விடுங்க, க-னாவுக்கு க-னா.

    சிவாஜியிடம் எனக்குப் பிடித்தது ஒரு கேரக்டரை கண்முன்னால கொண்டு வந்து நிறுத்திடணும்னு அவர் செஞ்ச முயற்சியும் உழைப்பும். சிவாஜி மாதிரி மத்த நடிகர்கள் உழைச்சாங்கனு என்னால சொல்ல முடியல. சிவாஜி கேரக்டரை கண்முன்னால கொண்டுவந்தாரா இல்லை கேரக்டரால கண்ணைக்குத்தினாரா என்பது அவரவர் கண்ணைப் பொறுத்தது :). still ஒரு கேரக்டரை உயிர்ப்பிக்கும் முயற்சியில் he was world class. அந்த வகையில் உன்னதமான கலைஞன். எந்த பாத்திரத்தையும் தனக்கு தோணின பாணியில நடிச்சதால he was also boring more often than others, in my view.

    "நடிப்பு,இசை,பாடல்,திரைக்கதை,இயக்கம் என்ற மொத்த வடிவில் முந்திக்கொண்டது சிவாஜியின் நடிப்பு மட்டுமே" - ம்ம்ம்.. இது சிவாஜியை இடிக்கறாப்புல இல்ல இருக்கு?
    புகை விடுறது நடிப்பா? ஆச்சரியமா இருக்கே?
    குண்டா தெரியறதை எப்படி நடிப்பால மறக்கடிக்க முடியும்? ஒரு சம்பவம் நினைவுக்கு வருது. ஒரு சிவாஜி படத்துக்கு 'sivaji bounces back'னு indian express வந்த விமரிசனத்துக்கு 'he can only bounce, he is so cylindrical'னு பதில் வந்தது.. :).

    (முதல் மரியாதை படத்தை ஆஹா ஓஹோன்னாங்களேனு பாத்து வச்சேன்.. சிவாஜி படமும் இல்லாம பாரதிராஜா படமும் இல்லாம.. ஏன் பாத்தோம்னு ஆயிடுச்சு.)

    வீட்டில் எந்தக் காய்கறி செய்தாலும் ரெண்டு பேருக்குப் பிடிக்கும், ரெண்டு பேருக்குப் பிடிக்காது. என் பாட்டியின் கொள்கை: பிடிச்சவங்களுக்கு ரெண்டு கரண்டி அதிகமா போடு. இந்த மாதிரி சர்ச்சைகள் சாப்பாட்டு சமாசாரம் போலத்தான். சிவாஜியை ரசிக்கிறவங்க எக்ஸ்ட்ராவா ரசிச்சுட்டுப் போகட்டும்.

    பதிலளிநீக்கு
  29. நிறைய மேற்கத்தி நடிகர்கள் ஓவர் ஏக்ட்ங் ரகம் தான். அன்றைய rex harrison (சிவாஜி அச்), நேற்றைய robert di nero, jack nicholson, இன்றைய shia labeouf... ஓவர் ஏக்டிங் ரகம் தான்.. அதுக்காக ரசிக்காம விடமுடியுமா? ஓவராப் போகும் போது வேறே எங்கயாவது பாக்க வேண்டியது தான்..:)

    பதிலளிநீக்கு
  30. மிக அருமையான, இனிமையான பாடல்களைக் கொண்ட படம். சிவாஜி, அசோகன், என் டி ராமாராவ் முத்துராமன் என்று பெரிய ஆட்கள் எல்லாரும் நடித்த மறக்க முடியாத படம்.

    எத்தனை முறை ரசித்துப்பர்ர்த்தாலும் இன்றும் மீண்டும் பார்க்க தூண்டும் அருமையான படம்...

    பதிலளிநீக்கு
  31. சிவாஜியை ஒண்ணும் சொல்ல விடமாட்டோம். அவரை ரசிக்க ஒரு மனநிலைமை வேணும். மணப்பாறை மாடு கட்டிலேருந்து,கடைசியில் தேவர் மகன் வரை அவர் வளர்ந்துகொண்டே வந்திருக்கிறார்.
    முன்பு எல்லோரும் சொன்னது போல ஓவர் மேக்கப் தான ,.எல்லோருமே சிரமம் எடுத்து நடிப்பார்கள் நடுவில் வந்த சில படங்களை விட்டுவிஒட்டால் அவரை நடிப்புத் திலகம்னு தான் சொல்லணும். இப்போதான் ஆஸ்கார் பார்த்து முடித்தேன். இப்ப இருக்கிற ஸ்டாண்டர்ட் வச்சு சிவாஜியை எடை போட முடியாது.

    யார் காப்பியும் பண்ணமுடியாது.
    நாங்களும் எங்கள் குழந்தைகளுமே கருத்துகளில் வேறுபடும்.
    அவர்களே கப்பலோட்டிய தோழனை ரசித்தார்கள்.
    பத்மினியும் அவரும் மோதும் மோகனாம்பாள் சீன் ஒன்றே போதும்.
    மனோரமா நாதஸ்வரம் வாசிக்கும் போது, பொங்கும் சிரிப்பை அவர் அடக்கிக் கொள்ள படும் பாட்டை அநாயாசமாகக் காட்டி இருப்பார்,. எத்தனை படங்களைச் சொல்வது.
    சிவாஜி சிவாஜிதான்.

    பதிலளிநீக்கு
  32. //கற்பனை செய்யவே நடுக்கமாக இருக்கிறது.//

    எங்களையும் நடுங்க வைக்கிறீர்கள்:))!

    /இப்ப இருக்கிற ஸ்டாண்டர்ட் வச்சு சிவாஜியை எடை போட முடியாது./

    வல்லிம்மா சொல்வதை ஆமோதிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  33. ரீமேக்கை நினைச்சாலே நடுங்குது.. அது கூடவே ரீமிக்ஸுமா??.. ஒய் திஸ் கொலை வெறி :-))))

    அவரோட முதல் மரியாதை படத்துக்கு ஈடாகுமா!!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!