Friday, March 2, 2012

அலுவலக அனுபவங்கள்...05:: கொடியேற்றம்

                     
ஒவ்வொருவருக்கும் எவ்வளவோ நம்பிக்கைகள் இருக்கும். அர்த்தமுள்ள நம்பிக்கைகள், அர்த்தமில்லா நம்பிக்கைகள்...
                        
அர்த்தமுள்ள, அர்த்தமில்லா என்று எப்படி முடிவு செய்வது? அவரவர் அனுபவத்தைப் பொறுத்து என்று சொல்லலாமா.... அதுவும் மூட நம்பிக்கைகள் என்று எதிலும் நம்பிக்கை வைக்காதவர்கள் கூட சிலசமயம் பல்வேறுதரப்பட்ட மக்கள் சொல்லும், மற்றும் கடைப் பிடிக்கும் சில விஷயங்களில் ஒன்றும் சொல்ல முடியாமல் போகிறதும் நிகழ்கிறது! சொல்லவும் முடிவதில்லை, செய்யவும் முடிவதில்லை! 
             
தஞ்சைப் பெரிய கோவிலைப் பற்றி கூட அபபடி ஒரு நம்பிக்கை இருக்கிறதே...
        
அது ஓர் அரசு அலுவலகம்.
              
முப்பது பேர் வேலை பார்க்குமிடம். ஜனவரி மாதம் / ஆகஸ்ட் மாதம் வந்தால் போதும். அங்கு ஒரு பதட்டம் தொற்றிக் கொள்ளும். 
             
ஜனவரி, ஆகஸ்ட் மாதங்கள், அரசு அலுவலகங்களில் 'கொடியேற்றும்' மாதங்கள்!
                
இருப்பதில் கீழ்மட்ட ஊழியரைப் பிடித்து கொடிக்கம்பத்துக்கு  ஏற்பாடு செய்யத் தொடங்கும்போதே பிரச்னை தொடங்கி விடும். 
                 
பிரச்னை என்னவோ அல்லது ஆபத்து என்னமோ கொடியேற்றுவதில்தான். ஆனாலும் கம்பம் நடும் நபரே தகராறு செய்யத் தொடங்குவார். அப்புறம் முந்தய வரலாறுகள் அலசப்பட்டு, 'உனக்கு ஒன்றும் ஆகாது' என்று உறுதியளிக்க வேண்டும். அதன் பின்னர் அவர் அரைகுறை மனதுடன் வேலையைத் தொடங்குவார். 
                          
அப்படி என்ன ஆபத்து?
                      
கொடியேற்றுபவர் ஜனவரி என்றால் அடுத்து வரும் ஆகஸ்டுக்கோ ஆகஸ்ட் என்றால் அடுத்த ஜனவரிக்கோ கொடியேற்ற அங்கு இருக்க மாட்டார்! மாறுதல் (Transfer) தேடி வந்து விடும்! 
                 
மூட நம்பிக்கையோ முட்டாள் நம்பிக்கையோ, இந்த விஷயம் மட்டும் தப்பாது 99% சதவிகிதம் நடந்து வருவதால் வருடத்துக்கு இரண்டுமுறை அங்கு காமெடிப் பதட்டம்!
                       
"மூட நம்பிக்கை" என்று முழங்கிய உயர் அதிகாரி, உயர் அதிகாரி ஏற்றினால்தான் இது நடக்கும், எனவே கடைநிலை ஊழியரை விட்டு ஏற்றச் சொல்வோம் என்று' ஒருமுறை (பாதுகாப்பு!) முடிவெடுத்து அப்படியே செய்ததில் பல வருடங்களாக அங்கேயே இருந்த கடைநிலை ஊழியரும் மாற்றப்பட்ட போது நம்பிக்கை பலமாகியது.
                        
இன்னொரு யோசனையாக, கொடியையும் கொடிக் கம்பத்தையும் மாற்றி புதிதாக வாங்கி விடுவோம் என்ற யோசனையும் சொல்லப்பட்டு, ஏற்கப்பட்டு, அதுவும் செய்து பார்த்தாயிற்று!
                  
அந்த நாள் வரும்போது உயர் அதிகாரிகள் "முக்கிய வேலை" என்று முந்தின வாரம் முதலே லீவ் போடுவார்கள். அல்லது விடுமுறையை பயன்படுத்திக் கொண்டு அலுவலகத்துக்கே வரமாட்டார்கள்! 
   
முதலில் நம்பாதவர்கள் கூட தொடர்ந்து நடக்கும் இந்தக் கூத்தைப் பார்த்த பிறகு 'எதற்கு ரிஸ்க்' என்று கொடியேற்ற முன் வர மாட்டார்கள். சில வருடங்கள் கொடி ஏற்றாமல் இருப்பதும் அப்புறம் ஹெட் ஆபீசில் திட்டு வாங்கிய பிறகு மறுபடி தொடர்வதும் வருடாந்திர வழக்கம். இன்னமும் கூட இது அங்கு தொடர்ந்து கொண்டிருக்கலாம்..... யார் கண்டது?!
            
இதுவும் வருடா வருடம் தொடர்ந்த அனுபவம்தான்! 
                       

19 comments:

ஜீவி said...

நல்ல வேடிக்கை.

எனது நாற்பது வருட அரசுப் பணியில் நானும் ஆறு ஊர்களுக்கு மாற்றலாகிப் பணி புரிந்து விட்டேன். எல்லாமே சொந்த விருப்பத்தின் பொருட்டான மாறுதல்கள் தாம். அத்தனை அலுவலங்கள் மாறினாலும் ஒவ்வொரு கொடியேற்றத்திற்கும் தவறாது எனது தேசபக்தி உரை இருந்ததில் எந்த மாற்றமும் இருந்ததில்லை.

பத்மா said...

உங்களுக்கு ஒரு விருதை பகிர்கிறேன் ...பெற்றுக் கொள்ளவும்

கீதா சாம்பசிவம் said...

:)))))))) ippadiyum nadakkum enpathu sariye/ nadanthirukkirathu.

pudukai selva said...

அப்படி கூடவா செய்வார்கள்.நான் முப்பத்து மூன்றாண்டுகளில் ,பத்தொன்பது மாறுதலுக்கு பின்னும் அதே உற்சாகத்தோடு கலந்து கொள்கிறேன்.ஜெய் ஹிந்த்.

ஹேமா said...

எது எதுக்குத்தான் நம்பிக்கை மூடநம்பிக்கைன்னு கணக்கே இல்ல எங்களுக்கு !

வல்லிசிம்ஹன் said...

உண்மையாகவே வியப்பாக இருக்கிறது.

தமிழ் உதயம் said...

என்ன செய்வது. அவரவர்கள் பயம் அவரவர்களுக்கு.

பத்மநாபன் said...

அப்ப.. அந்த இடத்திலிருந்து மாற்றம் பெறவிரும்புபவர்களை கொடி எற்ற் விடுவது தான் சிறந்த வழி... ஜெய்ஹிந்த்...

middleclassmadhavi said...

I agree with Mr.Padmanabhan! :-))

RAMVI said...

நல்ல வேடிக்கை விஷயம் தான். திரு.பத்மநாபன் சொன்னமாதிரி செய்யலாம் அல்லது இந்த விஷயம் தெரியாத வெளி மனிதர்களை விட்டு கொடி ஏற்றலாம்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்திடுவாங்களா?

வடுவூர் குமார் said...

ஒரு மாறுதலுக்கு ஏதாவது கட்சிக்கொடி ஏற்றி முயற்சித்திருக்கலாம்,ஒருவேளை அமைச்சர் பதவிக்கு மாற்றல் கிடைத்திருக்ககூடும். :-)

அமைதிச்சாரல் said...

இப்படிக்கூடவா நம்பிக்கைகள் இருக்கும் :-)

Madhavan Srinivasagopalan said...

how abt. Inviting PM, CM... to hoist the flag ?

மோ.சி. பாலன் said...

கொடிகாத்த குமரன் பிறந்த தமிழகத்திலா இக்கொடுமை?

ராமலக்ஷ்மி said...

/ அடுத்து வரும் ஆகஸ்டுக்கோ ஆகஸ்ட் என்றால் அடுத்த ஜனவரிக்கோ கொடியேற்ற அங்கு இருக்க மாட்டார்! மாறுதல் (Transfer) தேடி வந்து விடும்!/

தற்செயல் என்று ஒதுக்கவும் முடியவில்லை. ஆச்சரியமே:)!

கணேஷ் said...

மிக வியப்பளிக்கிறது இந்த சென்டிமென்ட். என்னென்னமொ நம்பிக்கைகள் போங்கோ...

Ramani said...

வித்தியாசமான அனுபவமாக இருக்கிறதே
சுவாரஸ்யமான பதிவு
பகிர்வுக்கு நன்றி

meenakshi said...

இப்படி கூடவா நடக்கிறது! நம்ப முடியல, நீங்க எழுதி இருக்கறத படிக்கும்போது நம்பாமலும் இருக்க முடியல.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!