திங்கள், 5 மார்ச், 2012

படித்ததும் ரசித்ததும் பதைத்ததும் - வெட்டி அரட்டை


                
சுகா எழுதிய 'மூங்கில் மூச்சு'த் தொடருக்குப் பின் விகடனில் தற்சமயம் ராஜு முருகன் எழுதும் தொடர் வட்டியும் முதலும் என்ற பெயரில் வருகிறது. சுகா அளவு சுகமில்லை. எனினும் ராஜு முருகன் தஞ்சைக்காரர் என்றதும் ஒரு சுவாரஸ்யம் வந்தது. தஞ்சையைப் பற்றிச் சொல்லும்போது சுகமாகப் படிக்கத் தோன்றியது.. தஞ்சையில் பதின்மப் பருவம் கடந்ததால் இந்த ஆர்வம்! கடைசி இதழில் 'ஞானம் வொயின்ஸ் கடையில் நின்று....' என்று படித்த போது அங்கிருந்த ஞானம் தியேட்டர் என்ன ஆனது என்ற கவலை வந்து விட்டது!  எத்தனை படம் பார்த்திருக்கிறேன் அங்கு... தஞ்சையை விட்டு வந்த பின் மீண்டும் அங்கு செல்லச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பதால் இப்போது எப்படி இருக்கும் என்று சென்று பார்க்க ஆவல். யாகப்பா திரையரங்கம், மங்களாம்பிகா ஹோட்டல், சாந்தி ஸ்டோர்ஸ், ஆனந்த் பவன்.... எல்லாம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். 
                      
அதே இதழில் கீழே உள்ள வரிகளையும் எழுதி இருக்கிறார்.
    
"சிரிப்பு, அழுகை, பிறப்பு, இறப்பு எனப் பாடல்களாலேயே ஆகிவிட்டது இந்த வாழ்க்கை. அதுவும் நாலு தலைமுறைக் கண்ணீரையும் புன்னகையையும் இந்தப் படுபாவி இளையராஜா எடுத்துக் கொண்டார்"
                
எனக்கும் இளையராஜா பிடிக்கும். என்றாலும் முதல் முறை இந்த வரிகளைத் தாண்டிய உடன் தடுக்கி, மறுபடி படித்தேன். பிடிக்கிறது என்று சொல்லத்தான் அந்த வார்த்தைப் பிரயோகம் என்றாலும்.............. கொஞ்சம் நெருடுகிறது.
                       
சுகாவும் இளையராஜா பற்றி சிலாகித்து எழுதி இருக்கிறார். அவரை அவரின் இரண்டாம் வாத்தியார் என்னும் வகையில் அவரின் வயலின் ஆசான் சொல்வது போல, தூத்துக்குடி விமான நிலையத்தில் அவரைக் கண்டதும் அங்கிருந்த அதிகாரி - ஜி ராமனாதனின் உறவினர் என்று அறிமுகப் படுத்திக் கொண்டு மரியாதை செய்ததோடு காலில் விழுந்து வணங்கியதாக எழுதி இருக்கிறார். 
-------------
    
சென்ற வாரம் பெங்களூருவில் நடந்த ஒரு சம்பவம் பற்றிப் படித்த போது, செய்திச் சேனல்களில் பார்த்த போது பதைத்தது.        
                    
ஒரு தனியார் நிறுவனத்தில் தீயணைப்புத் துறை நடத்திய பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒத்திகையில் நடந்த அசம்பாவிதம். ஆபத்து நேரத்தில் நடந்து கொள்ள வேண்டிய ஒத்திகை என்று சொல்லி அந்த நிறுவனத்தின் ஒரு பெண் அதிகாரியை அவருக்கு விருப்பமில்லாத போதும் வற்புறுத்தி பலவந்தமாக மாடியிலிருந்து கயிறு வழியாக இறங்கச் சொல்லி ஒத்திகை தொடங்க, பலமில்லாத அந்தக் கயிறு அறுந்து விழுந்து தலையில் அடிபட்ட அந்த பெண் அதிகாரி அங்கேயே இறந்து போனார்.
                     
என்ன அநியாயம்.... என்ன பொறுப்பின்மை... இது பச்சைக் கொலை இல்லை...? இதை நடத்தியவர்களுக்கு தண்டனை ஏதும் உண்டா?   
-------------------      
                 
விகடன் பற்றி இன்னொரு தகவல். சென்னையில் மட்டும் வெளியாகும் விகடனின் இனிப்பான 'என் விகடன்' புத்தகத்தில் சென்னைப் பதிவர்களை (மட்டும்) அறிமுகப் படுத்தத் தொடங்கி உள்ளார்கள். கேபிள் சங்கர், ஆதிஷா, சென்ற வாரங்களில் அறிமுகப் படுத்தப் பட்டிருந்தனர். இந்த வாரம் லக்கிலுக் யுவகிருஷ்ணா.
                  
நீங்கள் சென்னைப் பதிவராக் இருக்கும்பட்சத்தில் "வாரம் ஒரு வலைப் பதிவர்" நீங்களும் உங்கள் ப்ளாக்கும் இடம்பெற உங்களைப் பற்றிய சுய குறிப்பு, உங்கள் வலைப் பதிவின் முகவரி, உங்கள் மொபைல் நம்பர் ஆகியவற்றை chennai@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மெயில் தட்டச் சொல்கிறது விகடன்.
        
ரெடி...ஜூட்...    
====================
                
அரசியலிலேயே குளிக்கும் துக்ளக் பத்திரிகையில், சமீபத்தில் இரண்டு தொடர்கள்  ஆரம்பம். ஆன்மீகப் பிரியர்களுக்கு வேளுக்குடி கிருஷ்ணனின் 'ஸ்ரீமத் பாகவதம்', வாலி எழுதும், எம் ஜி ஆருடனான தன் அனுபவங்களைச் சொல்லும் தொடர் ஒன்று. 
     
துக்ளக்கில் வந்த கேள்வி பதிலில் ஒரு சுவாரஸ்யம்.
    
பெங்களூர் மல்லேஸ்வரம் மர்கொசா சாலையில் ராஜ்போக் என்ற ஹோட்டலில் தங்கம் கலந்த தோசை 1011 ரூபாய்க்கும் வெள்ளி கலந்த தோசை 151 ரூபாஈகும் விற்கப் படுவது குறித்து ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். 
    
எம் ஜி ஆர் தங்கபஸ்பம் சாப்பிடுவார் என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறேன். தங்கத்தை அப்படியே தோசையில் போட முடியுமா, அதையும் சாப்பிடுவார்களா, இவ்வளவு விலை கொடுத்து, என்ன பயன் என்றெல்லாம் தோன்றியது.

தகவல் உண்மையா பொய்யா என்று கே ஜி கௌதமன், ராமலக்ஷ்மி, ராம்வி போன்ற பெங்களூரு வாசிகள்தான் சொல்லவேண்டும்! (R. கோபியைக் கேட்கலாம். அவரும் பெங்களுருதான். ஆனால் அவர் இதையெல்லாம் படிப்பதில்லையே...!!)     
==========================================
        
கல்கியில் ஆறு வாரங்களாக நாகூர் ரூமி எழுதும் தியானம் பற்றிய தொடர் ஆரம்பித்திருக்கிறது. சுவையாகச் செல்கிறது. நாகூர் ரூமி எழுதிய 'அடுத்த வினாடி' யும், 'செலவைக் குறைங்க சார்' புத்தகமும் படித்திருக்கிறீர்களோ...    
==========================================
     
மார்ச் இரண்டாம் வாரத்தில் வெளியிடப் பட இருக்கும் 'டிஜிடல்' கர்ணனுக்கு ட்ரெயிலர் எல்லாம் வெளியிட்டு விளம்பரப் படுத்தப் படுவதை இட்லி வடை பதிவுகளில் பகிர்ந்திருந்தார்கள். அதன் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் சிவாஜியின் நண்பர் திரு வி என் சிதம்பரம் பேசியதாக 'ஜூவி'யில் படித்ததன் பகிர்வு. 
      
புட்டபர்த்தி பாபா ஒரு முறை திரு வி என் சிதம்பரத்திடம் சிவாஜி கணேசனை தான் பார்க்க விரும்புவதாகக் கூறினாராம். இவரும் சிவாஜியிடம் அதைச் சொல்ல அவரும் சந்தோஷமாகச் சம்மதித்து, இருவரும் சந்திக்க ஏற்பாடானதாம். பாபாவைச் சந்திக்க வருபவர்கள் வர இரண்டு வழி உண்டாம்., முக்கியமானவர்களுக்கு குறுகிய நடைவழி. மற்றவர்களுக்கு நீண்ட நடை வழி.  வி என் சி யுடன் சென்ற சிவாஜியை பாபா நீண்ட நடை வழியில் வரச் சொன்னாராம். ஒரு மாதிரி உறுத்தினாலும் காட்டிக் கொள்ளாமல் அந்த வழியிலேயே நடந்து போய் பாபாவைச் சந்திக்க, அவர் சிவாஜியைத் தழுவிக் கொண்டு விட்டுச் சொன்னாராம்..."உங்கள் நடையைப் பார்த்து ரசிப்பதற்காகத்தான் நீண்ட வழியில் வரச் சொன்னேன்..!"  
=========================================
                       

24 கருத்துகள்:

  1. மிக சுவாரஸ்யம். நீங்கள் சொன்ன ராஜூ முருகன் பதிவு வாசிக்கும் போது மிக ரசித்தேன். இளைய ராஜா பற்றி ரசிகன் என்கிற உரிமையில் சொல்லியிருக்கிறார். வாசிக்கும் போது அந்த இடத்தையும் நான் ரசித்தேன்.

    விகடன் சென்னை பதிவர்களுக்கு மட்டுமல்ல, தஞ்சை, கோவை, மதுரை, கோவை இவற்றுக்கும் தனி பதிப்பாக என் விகடன் வருகிறது. அந்தந்த மாவட்டங்களில் பிறந்த பதிவர்கள் அந்தந்த என் விகடனுக்கு அனுப்பலாம். சொல்ல போனால் சென்னையில் தான் தள்ளு முள்ளு. மற்ற பதிப்புகளில் சற்று எளிதாக வரும் வாய்ப்பு அதிகம்

    பதிலளிநீக்கு
  2. பாதுகாப்பு ஒத்திகை நடத்தியவர்கள் கொடுத்த பொறுப்பற்ற பதில் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. சென்ற பிப்ரவரி கால்டன் டவர் சோகத்துக்குப் பின் இந்த ஒத்திகை எல்லா நிறுவனங்களிலும் கட்டாயமாக்கப்பட்டிருக்க, பெரும்பாலான நிறுவனங்கள் தனியார்களை அழைத்தே இதை நிகழ்த்தி வந்தது ஏன் என்பதும் புரிகிறது. இது குறித்து நானும் பகிர்ந்திட இருந்தேன். நிச்சயம் இது பச்சைக் கொலைதான்:((!

    தங்க வெள்ளித் தோசை குறித்து விசாரிக்கிறேன். உங்கள் பதிவின் மூலமாகவே அறிய வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. தனியார் நிறுவனத்தில், தீயணைப்பு துறை நடத்திய ஒத்திகையில் நிகழ்ந்த பெண்ணின் மரணம் - திடுக்கிட வைத்துவிட்டது. ஒத்திகையிலேயே மரண சம்பவங்களை நிகழத்தும் இவர்களா - அசம்பாவிதங்களின் போது சிறப்பாக செயல்படுவார்கள்.

    பதிலளிநீக்கு
  4. பெங்களூர் பெண் மரணம் திடுக்கிட வைக்கிறது. இதென்ன அநியாயம்?? தீப்பிடித்தால், மாடியிலிருந்து இறக்குவதற்கு Snorkel லிஃப்ட் அல்லவா பயன்படுத்த வேண்டும்? கயிற்றில் இறங்க இதென்ன என்.ஸி.ஸி. பயிற்சியா? கொடுமை!!

    நம்ம நாட்டு தீயணைப்புத் துறை ரொம்ப வளருணுமோன்னு தோணுது. சென்னையிலும் இப்படித்தான் அநியாயமா ஒரு வீரர் இறந்தார்; ப்ரியா படுகாயம் அடைந்தார். :-(((

    ’என் விகடன்’ நல்ல ஐடியாதான். ஆனால், நாமே(னே) நம் பதிவை சிபாரிசு செய்ய வேண்டும் என்பதுதான் நெருடுகிறது. பதமபூஷண், நல்லாசிரியர் விருதுக்கெல்லாம்கூட அப்படித்தானாமே?

    ’தங்க தோசை’ உண்மையாக இருக்க வாய்ப்புண்டு. ஏனெனில் இங்கு அமீரகத்தில் தங்கம் கலந்த டெஸர்ட் வகைகள் ஒரு 7-நட்சத்திர ஹோட்டலில் கிடைப்பதாகப் படித்து, என் பதிவிலும் சொல்லியிருந்தேன். (இதிலிருந்து என் பதிவுகளை நீங்கத் தவற விடுறீங்கன்னு தெரியுது :-))) )

    பதிலளிநீக்கு
  5. தீயணைப்புச் செய்தி எங்கள் நாடுகளின் கவலையீனத்தைக் காட்டுகிறது.கஸ்டமான செய்தி !

    பதிலளிநீக்கு
  6. ."உங்கள் நடையைப் பார்த்து ரசிப்பதற்காகத்தான் நீண்ட வழியில் வரச் சொன்னேன்..!" //ஹிஹிஹிஹிஹிஹிஹி


    தீயணைப்பு அதிகாரியைக்கொலை செய்த விதம் அதிர்ச்சி அளிக்கிறது. மனித உரிமைக்கழகக்காரங்களுக்கு இதெல்லாம் கண்களில் படாதா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்பாவம் அந்த அப்பாவிப் பெண்! எத்தனை ஆசைகளோ! எத்தனை கனவுகளோ! :((((((((

    என் விகடனில் பதிய நாமே அனுப்பணுமா?? வேண்டாம் வேண்டாம், வரவே வேண்டாம்.

    விகடன் படிச்சே பல ஆண்டுகள் ஆகின்றன.

    கல்கியும், துக்ளக்கும் கடந்த ஆறுமாதங்களாய்ப் படிக்க முடியலை. வந்ததும் தான் படிக்க ஆரம்பிக்கணும். வேளுக்குடி தொடர் குறித்துப்பல விமரிசனங்கள் கிடைத்திருக்கின்றன. பழைய துக்ளக்குகள் கிடைத்தாலும் தேடிப் பிடிச்சுப்படிக்கணும். :)))))))))

    பதிலளிநீக்கு
  7. தங்க பஸ்பம், வெள்ளி பஸ்பம் உண்மைதான் என்றாலும் தங்கத்தையோ, வெள்ளியையோ அப்படியே எல்லாம் பஸ்பம் ஆக்கிச் சாப்பிட முடியாது. இதுக்கான குறிப்புகள், கலுவம் எல்லாமே எங்க வீட்டிலே இருந்தது. அப்பாவின் அப்பா என் தாத்தாவுக்கு இந்த வைத்தியமுறை எல்லாம் தெரியும். அவர் சாப்பிட்டும் என் அம்மா பார்த்திருக்கிறார். சொல்லுவார். எங்களுக்கு விபரம் தெரியும் முன்னேயே தாத்தா போய் விட்டார். ஆனால் இப்போ அந்தச்சுவடிகள் எல்லாம் போன இடம் தெரியவில்லை. கலுவத்தை மதுரையிலேயே யார் கிட்டேயோ கொடுத்துட்டு வந்துட்டார் என் அப்பா! :((((((((((

    பதிலளிநீக்கு
  8. சிவாஜி - பாபா குறித்த துணுககு அருமை. விகடன் விஷயத்தில் கீதா மே‌டம் சொன்னதை நான் ஆமோதிக்கிறேன். நாமே பதிந்து, அவர்கள் வெளியிடுவது பெருமையா என்ன? அந்த விபத்து.... அதைக் கொலை என்றுதான் சொல்லணும். வருந்த வைத்தது!

    பதிலளிநீக்கு
  9. வெட்டி அரட்டை அல்ல!விவரமான அரட்டை.மிக ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  10. யாகப்பா திரையரங்கம், மங்களாம்பிகா ஹோட்டல், சாந்தி ஸ்டோர்ஸ், ஆனந்த் பவன்.... எல்லாமே அதே இடத்தில்தான் இருக்கிறது. ஞானம் தியேட்டர் மட்டும் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் நான்கு
    நட்சத்திர ' ஹோட்டல் ஞானம்' கட்டப்பட்டு சில வ‌ருடங்கள் ஆகின்றன.

    பதிலளிநீக்கு
  11. சிவாஜி நடை 'ராஜா நடை' இல்லையா! யார்தான் ரசிக்க மாட்டாங்க! :)

    வார இதழ்களை படிப்பதில் இப்பொழுதெல்லாம் அவ்வளவு சுவாரசியம் இல்லை. வலைப்பூக்களை வலம் வருவது மிகவும் சுவாரசியாமாகவும், பிடித்த
    விஷயமாகவும் ஆகிவிட்டது. இதுவே சில நேரங்கள் படிக்க தாமதமாகி விடுகிறது. மேலும் பதிவுகள் மூலமே பல விஷயங்கள் தெரிந்து விடுவதால் அதுவே போதும் என்றாகி விட்டது. :)

    அதிகாரி இறந்த விஷயம் மிகவும் வேதனை. ஆயிரத்து பதினொரு ரூபாய்க்கு ஒரு தோசையா! ஹா! விலையையே செரிக்க முடியவில்லையே, தோசை செரிக்குமா!

    வேளுக்குடி அவர்களின் உபன்யாசத்தை நிறைய கேட்டிருக்கிறேன். அவர் குரலும், சொல்லும் விதமும் மிகவும் ரசித்து கேட்க முடியும். ஸ்ரீமத் பாகவதம் கேட்டிருக்கறேன்.

    .

    பதிலளிநீக்கு
  12. பதிவாசிரியரே! மல்லேஸ்வரம் சென்று வர ஆட்டோ சார்ஜூம், தங்கத் தோசை (+காபி) சாப்பிட அமவுண்டும் அனுப்பி வையுங்க. இந்த வாரக் கடைசியில் சென்று, சாப்பிட்டு வந்து - தங்கமா ஒரு விமரிசனம் எழுதுகின்றேன்.

    பதிலளிநீக்கு
  13. எங்கள் ஆசிரியர்கள் நலமா ??

    ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தனியாக பதிவர்களை அறிமுகப் படுத்துகிறார்கள்..

    தங்க தோசை ??(தங்க முலாமோ??)

    துக்ளக் வேளுக்குடி கிருஷ்ணன் தொடருக்காக வாங்கி சேகரித்து வருகிறேன். தனியாக தொகுத்து மகளுக்கு பரிசாக கொடுக்கும் எண்ணம் உள்ளது

    பதிலளிநீக்கு
  14. குரோம்பேட்டைக் குறும்பன்6 மார்ச், 2012 அன்று AM 9:23

    கே ஜி கௌதமன் ஆட்டோ அனுப்பி வெக்கச் சொல்றார் - அனுப்பி வையுங்க!

    பதிலளிநீக்கு
  15. //’என் விகடன்’ நல்ல ஐடியாதான். ஆனால், நாமே(னே) நம் பதிவை சிபாரிசு செய்ய வேண்டும் என்பதுதான் நெருடுகிறது. பதமபூஷண், நல்லாசிரியர் விருதுக்கெல்லாம்கூட அப்படித்தானாமே?//

    கடைசி வரி ஹுசைனம்மா ஸ்டைல் :))

    நாம் அனுப்பியதால் மட்டுமே வந்துடாது. பதிவுகள் வாசிச்சுட்டு சுவாரஸ்யமா இருந்தா மட்டும் தான் அவங்க போடுவாங்க. அவங்கவங்களுக்கு இருக்கும் வேலையில் மத்தவங்களை எப்படி விகடனுக்கு அறிமுக படுத்த முடியும்? உங்கள் ப்ளாக் முகவரி மற்றும் போட்டோ மட்டும் தானே நீங்க தர்றீங்க? மற்ற தகவல் அவங்களே படிச்சு எது சுவாரஸ்யமோ அதை எடுத்துப்பாங்க.

    பதிலளிநீக்கு
  16. @ஹுசைனம்மா, நல்லாசிரியர் விருதுக்கும் அப்படித்தான். ஆனால் கூடவே வேலை பார்க்கும் பள்ளியும் சிபாரிசு செய்யணும். அப்படித்தான் நல்லாசிரியரைத் தேர்ந்தெடுக்கிறாங்க. இது என்னமோ சரியானதாப் பட்டதில்லை எனக்கு. :)))))

    பதிலளிநீக்கு
  17. தங்க மசால்வடை கேள்விப்பட்டேன். தோசையுமா?
    fire drill திகில்.

    பதிலளிநீக்கு
  18. @மோகன், நீங்க சொல்றதும் சரியாத்தான் இருக்கு. ஆனாலும், எனக்கு இந்த முறை சரியாத் தெரியலை. விகடனின் ‘வரவேற்பறை’ மாதிரி, ’கெட் பிளாக்ஸ்’ மாதிரி, வலைப்பூக்களை அவங்களே அறிமுகம் செய்வது ஒரு பெரிய வேலையே இல்லை. விகடனில் இல்லாத நிருபர் படைகளா? விகடன்காரர்களே நிறைய பதிவுலகிலும் இருக்கிறார்களே.. விகடன் நிருபர்களின் நண்பர்களும் இருக்கிறார்கள்..

    @கீதா மேடம், தகவலுக்கு நன்றி. மீ டூ ஸேம் ப்ளட்...

    பதிலளிநீக்கு
  19. //’கெட் பிளாக்ஸ்’//

    “குட் ப்ளாக்ஸ்” !!!!

    பதிலளிநீக்கு
  20. தங்க / வெள்ளி தோசைகள் உண்மைதான்:-)

    பதிலளிநீக்கு
  21. தொசையானது ஜீரணம் ஆகாமல்.. பல மணி நேரம் வயிற்றில் இருந்து (தங்கி அவஸ்தை தந்து) இருக்கும் நிலைய 'தங்க தோசை' எனத் சொல்லலாமோ ?

    பதிலளிநீக்கு
  22. அடே ஒரெ தகவல் களஞ்சியமா இருக்கே.!!! பெண்களுக்கு இந்த வருடம் சரியாக இல்லை.:(
    தங்கமே வேண்டாத போது தங்க தோசை எதற்கு.

    நம்மை நாமே விளம்பரப் படுத்திக்கணுமா. வேற வேலை இல்லை. இருக்குமிடம் வைகுண்டம்.:)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!