திங்கள், 2 ஏப்ரல், 2012

மணிக்கொடி காலம்

         
சமீபத்தில் படித்த புத்தகம். 'மணிக்கொடி காலம்' - பி எஸ் ராமையா எழுதியது. அதில் படித்ததிலிருந்து இங்கு கொஞ்சம் பகிர்வு.      
மணிக்கொடிக்கு அந்தப் பெயர் வரக் காரணம் பற்றி பி எஸ் ராமையா குறிப்பிட்டுள்ளதாவது ...
              
"......சென்னைக் கோட்டைக்கு எதிரில் கடற்கரை மணலில் அமர்ந்து சீனிவாசன், வ.ரா, சொக்கலிங்கம் மூவரும் ஆரம்பிக்கப் போகும் பத்திரிகைக்கு என்ன பெயர் வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது மாலை மணி ஆறு.  கோட்டை மதில் மேடை மேல் கம்பத்தில் பறந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஆட்சிக்கொடி தினசரி வழக்கப் படி இறக்கப்பட்டது அவர்கள் கண்ணில் பட்டது. "அந்நிய ஆட்சிக் கொடி விழுந்தது. கம்பத்தின்மேல் நமது கொடி ஏறும் வேளை வந்து விட்டது" என்று ஒருவர் சொன்னார்.  பத்திரிகைக்குக் கம்பத்தில் ஏறப்போகும் புதிய பாரத சக்திக் கொடிப் பெயராகவே வைக்கவேண்டும் என்ற கருத்து எழுந்தது.  சீனிவாசன் கம்பன் கவிதையில் திளைத்தவர்.  ராமகாதை பாலகாண்டத்தில் கோசிக முனிவனைத் தொடர்ந்து ராமனும் இலக்குவனும் மிதிலை நகருக்குள் நுழைந்தபோது அந்தக் கடிநகரின் கோட்டை மதில்கள் மீதும், மாடங்களின் மீதும் கொடிகள் பறந்து ஆடியது, ஐயனை 'வருக வருக' என்று அழைப்பது போல இருந்தது என்கிறான் கம்பன்.

                                        "மையறு மலரின் நீங்கி
                                          யான் செய்மா தவத்தின் வந்து 
                                          செய்யவள் இருந்தாள்....."

என்று சேதி சொல்லி ராமனை அழைத்த அக்கொடிகளைக் கம்பன் 'செழுமணிக் கொடிகள்' என்று குறிப்பிட்டிருப்பது சீனிவாசன் நினைவுக்கு வந்தது. அவர் அதைச் சொன்னவுடன் வ.ரா. "கம்பன் மட்டுமென்ன? பாரதியாரும் 'தாயின் மணிக்கொடி' என்றுதானே பாடியிருக்கிறார்?"  என்றார்.
          
அந்த மாலைப் பொழுதில் கடற்கரை மணலில் புதுப் பத்திரிகைக்கு 'மணிக்கொடி' என்று பெயர் சூட்டப்பட்டது..........".
                  
இந்தச் சம்பவங்கள் நேரில் பார்த்தது போல பி எஸ் ராமையா சொல்லியிருந்தாலும் இதற்குப் பிறகு வெகுநாட்கள் கழித்தே அவர் இவர்களுடன் இணைகிறார். அதுவும் எழுத்தாளராக இல்லாமல், விளம்பரப் பொறுப்பாளராக!
                 
அந்த நாளில் லண்டனில் இருந்து ஞாயிறன்று மட்டும் வெளிவரும் 'சண்டே அப்சர்வர்' என்ற பத்திரிகையின் பாதிப்பில் இதையும் ஞாயிறன்று மட்டும் வெளிவரும்படி, தொடங்கப் பட்ட மணிக்கொடி இதழ் முதன் முதலாக 1933 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி வெளியானது. அதைப் படித்து விட்டு முதன் முதலாகச் சென்று பாராட்டியவர் கல்கி. 
அவர் அதில் உடனடியாக இணைய முடியாமல் அப்போதுதான் விகடனில் இணைந்திருந்ததால் (அதுவரை நவசக்தியில் பணியாற்றிக் கொண்டிருந்தாராம்) இதில் அவரால் இணைய முடியாமல் போனதாகக் குறிப்பிடுகிறார் பி எஸ் ராமையா. இரண்டாவதாகச் சென்றவர் இவர்தானாம்.  கல்கி அப்போது "இந்தத் தமிழ் மாதிரி யாரால் எழுத முடியும்? இந்த மாதிரி வேறு யாரால் மொழி பெயர்க்க முடியும்" என்று தமது உள்ளப் பரபரப்பையும், உவகையையும் கொட்டினாராம். அதற்குக் காரணமாக இருந்த வரி,
             
"A thing of beauty is a joy for ever" என்ற ஆங்கில வாக்கியத்துக்கு மணிக் கொடி கொடுத்திருந்த "அழகிய ஒரு பொருள் அழியா இன்பம்" என்ற தமிழ் வாக்கியம்தானாம்.
         
1900 த்தின் ஆரம்பங்களில் சென்னையிலிருந்து வெளி வந்து கொண்டிருந்த விவேக சிந்தாமணி என்ற தமிழ் மாதப் பத்திரிகையில்தான் பி ஆர் ராஜம் ஐயர் தமது கமலாம்பாள் சரித்திரத்தைத் தொடர்கதையாக எழுதினாராம். 
                 
பின்னாளில் தினமணி ஆசிரியரான ஏ என் சிவராமனுடனான தன் அனுபவங்களையும் அங்கங்கே சொல்கிறார் ஆசிரியர். 
                
அன்றைய ஆட்சியாளர்களுக்குச் சாதகமாகவே செய்திகளைத் திரட்டித் தந்து கொண்டிருந்த ராய்ட்டருக்கும், அசசோசியேட்டட் பிரஸ்சுக்கும் நடுவே உண்மைச் செய்திகளை செய்தி நிறுவனங்களுக்குக் கொடுக்க 'ஃப்ரீ பிரஸ்' என்ற ஒன்றைத்  தொடங்கிய வரலாறையும் எழுதி இருக்கிறார். தொடங்கியவர் மணிக்கொடி நிறுவனர்கள், ஆசிரியர்களில் ஒருவரான கு சீனிவாசனின் கல்லூரிப் பருவத் தோழர் சதானந்த்.
                 
நமக்கு எல்லோருக்கும் பாரதிதாசனின் "தமிழுக்கும் அமுதென்று பேர்" பாடல் தெரியும். தெரியாத ஆட்களே இருக்க முடியாது. அந்தப் பாடலை வெளியிட்டது (முதன் முதலில்) மணிக்கொடி. அதுவும் தன் இரண்டாவது இதழிலேயே. அப்போது பாரதிதாசன் என்றால் நிறையப்பேர் யாரென்று அறிந்திருக்கவில்லை என்கிறா பி எஸ் ஆர். 
                             
மணிக்கொடிக் காலம், மணிக்கொடி இலக்கியம் என்றாலே எரிச்சல் அடைந்த எழுபதுகளின் பல எழுத்தாளர்களைப் பற்றியும் சொல்கிறார்!


ஆரம்ப காலங்களில் பி எஸ் ராமையா பக்கெட் ஷாப்பில்தான் வேலை பார்த்தாராம். 
             
ஆமாம், 'பக்கெட் ஷாப்' என்றால் என்னவென்று தெரியுமோ....?  
---------------------------------------------  
     
மணிக்கொடி காலம் (சாகித்ய அகாடெமி பரிசு பெற்றது)
ஆசிரியர் பி எஸ் ராமையா
மெய்யப்பன் பதிப்பகம்
முதற்பதிப்பு ஜூலை 1980
இரண்டாம் பதிப்பு ஆகஸ்ட் 2004. 
விலை :  80.00
                     

28 கருத்துகள்:

  1. மணிக்கொடி காலம் ஹூஸ்டனிலே படிச்சேன், 2007-இல் முழுதும் முடிக்க முடியலை. இம்முறை திரும்பப் படிக்கலாம்னு தேடினால் புத்தகமே இல்லை. :((( அருமையான புத்தகம்; நல்ல அலசல். சி.சு. செல்லப்பாவின் புத்தகம் (இரண்டு பாகம்)"சுதந்திர தாகம்" படிச்சிருக்கீங்களா?

    பதிலளிநீக்கு
  2. பி.எஸ்.ராமையாவோட நந்தா விளக்கு படிச்சிருக்கீங்களா? முதல் பதிப்பா இருந்தாத் தேவலை. சமீபத்திய பதிப்புகளில் கதையை ரொம்பவே சுருக்கி இருக்காங்க. :(

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. மணிக்கொடி காலம் என்பது இதழ் மட்டும்தானா இல்லை அப்படி ஒரு காலமும் இருந்ததா???

      நீக்கு
    2. அஞ்சுவா? மணிக்கொடி இதழ்கள் வெளிவந்த அந்தக் குறிப்பிட்ட காலத்தை "மணிக்கொடி காலம்" என்பார்கள். பல எழுத்தாளர்கள் பிரபலம் ஆனது மணிக்கொடி மூலமே! பி.எஸ்.ராமையா பின்னாட்களில் குமுதம் எஸ்.ஏ.பி. அவர்களால் ஆதரிக்கப்பட்டார். மத்தவங்களில் சிலர் பெயர் பெற்றனர். பலர் முன்னுக்கு வராமலேயே மறைந்தனர்.

      நீக்கு
    3. அனானியா வந்தாலே அஞ்சுதானா? அநியாயம் கீதா அக்கா! (ஒருவேளை அவர்தானோ!!)

      நீக்கு
  4. இரண்டுக்குமே ஊ..ஹூம் தான்! சி.சு செல்லப்பாவின் சுதந்திர தாகம் படித்ததில்லை. என்ன பதிப்பகம், என்ன விலை? நந்தா விளக்கும் படித்ததில்லை! பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. அவரே சொந்தமாக அச்சிட்டு வெளியிட்டதாய்ப் படித்த நினைவு. பதிப்பகம் தெரியவில்லை. நான்கு வருடங்கள் முன்னர் ஹூஸ்டனில் தான் மீனாக்ஷி கோயில் நூலகத்தில் கிடைச்சது. படித்தேன்.

    இது பற்றி மின் தமிழ்க் குழுமத்தில் வந்த ஒரு தொகுப்பில் இருந்து சின்னக் குறிப்பு.

    சி.சு.செல்லப்பாவின் இலட்சியமான "சுதந்திர தாகம்" நூலை வாழ்நாளில் அச்சிட்டு
    வெளியிட்டு விடவேண்டும் என்பதே அவருடைய இறுதி நாள்களில் ஏற்பட்ட ஆசை.
    தன் நெருங்கிய நண்பர்கள் நால்வரிடம் ஐயாயிரம் ரூபாய் வீதம் கைமாற்றாக
    வாங்கிக்கொண்டு அச்சிட்டு நூலை வெளியிட்டார்.
    புத்தகம் வெளிவந்தவுடன் பரபரப்பாக அறுநூறு பிரதிகள் விற்பனையாகிவிட்டன.
    சுதந்திர தாகம் நாவலைப் பற்றி பின்னுரையில், பிரபல விமர்சக எழுத்தாளர் "சிட்டி"
    (பெ.கோ.சுந்தரராஜன்) 1997 குறிப்பிட்டதை மீண்டும் தெரிவித்தால்தான் அமரர்
    சி.சு.செல்லப்பாவின் எழுத்தின் வலு தெரியவரும்.
    "நாவல் என்ற அளவில் இந்த முயற்சி சிறந்த இலக்கியத் தரமும் கலையம்சமும்
    வாய்ந்தது. நாட்டு விடுதலைப் போராட்டத்தைப் பற்றி இவ்வளவு பெரிய - விரிவான,
    ஏறக்குறைய 1,700 பக்கங்கள் கொண்ட நாவல் இதுவரை வெளிவரவில்லை. செல்லப்பாவின்
    இலக்கிய வாழ்க்கைக்கு இந்த நாவல் சிகரம் வைத்தது போல் அமைந்திருக்கிறது''.
    செல்லப்பாவின் மன உறுதி, வைராக்கியத்தோடு ஒரு செயலைச் செய்து முடிக்கும் குணம்,
    கொள்கையில் வேறுபாடிருந்தாலும் நட்பில் விரிசல் கொள்ளா குணம் - இவை செல்லப்பா
    என்ற இலட்சிய எழுத்தாளரை என்றும் நினைக்கத் தோன்றும்.
    சிறுகதை, குறுநாவல், கவிதைத் தொகுப்பு, கட்டுரைத் தொகுப்பு, நாடகம், இறுதி
    நாள்களில் வெளியான "சுதந்திர தாகம்" நூல், நிறைவாக "பி.எஸ்.இராமையாவின்
    சிறுகதைப் பாணி" கட்டுரை உள்பட 29 நூல்கள் எழுதிய சி.சு.செல்லப்பா, 1998ஆம்
    ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி மறைந்தார்.
    ஆனாலும், அவருடைய "எழுத்து" இலட்சியம் மறையவில்லை.

    பதிலளிநீக்கு
  6. எதுக்கும் வடக்கு வாசல், பெண்ணேஸ்வரனைக் கேட்டுப் பாருங்கள். அவருக்கு இன்னும் அதிகத் தகவல்கள் தெரியும்.

    பதிலளிநீக்கு
  7. மணிக்கொடி எழுத்தாளர்களின் கதைகள்/கட்டுரைகள் குறிப்பிட்ட சிறப்பானவை தொகுக்கப்பட்டும் வந்துள்ளது. அதில் மணிக்கொடி எழுத்தாளர்கள் அனைவரின் படைப்புகளையும் பார்க்கலாம். அதில் தான் வாலியை ராமர் அம்பால் கொன்ற இடம்(குகை) பற்றிய ஒரு கட்டுரை படித்து ஆச்சரியம் அடைந்தேன். அதற்குப் பின்னர் நாங்களே அங்கே போய் எந்த இடத்தில் ராமர் நின்று அம்பு போட்டிருப்பார் என்றும், வாலி எங்கு இருந்தான் என்பதையும் வழிகாட்டி விவரிக்கப் பார்க்க நேர்ந்தது ஒரு தனி அனுபவம்.

    கிஷ்கிந்தையில் மழைக்காலத்தில் சுக்ரீவனுக்குப் பட்டம் கட்டிவிட்டு ராமர் தங்கி இருந்த குகையையும் பார்த்தோம். அங்கே ஒரு தமிழ்க்கார சித்தர் (இளம் வயது)ஒருத்தரையும், அவரின் வயது முதிர்ந்த சீடரையும் கண்டோம். அந்த சித்தர் எங்கள் குழுவில் ஒரு குறிப்பிட்ட மனிதருக்குச் சில செய்திகள் சொன்னதும், அவை அந்த மனிதரின் வாழ்விலே நடந்தது என்பதும், அதன் பின்னர் அவரைத் தனியாகக் கூப்பிட்டுச் சில ஆலோசனைகள் கூறியதையும் நேரிலே காண நேர்ந்தது. அந்த மனிதரைத் தவிர மற்றவர்கள் கேட்டும் அந்த சித்தர் வாயே திறக்கவில்லை.

    எங்கள் வாழ்க்கையில் நாங்கள் கண்களால் கண்ட அனுபவம் இது.

    பதிலளிநீக்கு
  8. மறந்துட்டேனே, பி.எஸ். ராமையாவோட தேரோட்டி மகனைத் தழுவித் தான் "கர்ணன்" திரைப்படம் எடுக்கப் பட்டது.

    அப்புறமா அவர் B.S.Ramaiah னு நினைக்கிறேன். வத்தலக்குண்டு ஊர் ஆங்கிலத்தில் Batlagund என்று வருவதால் ஊரின் பெயரோனு ஒரு சந்தேகம்.

    பதிலளிநீக்கு
  9. Geetha sambasivam

    சுவாரஸ்யமான பின்னூட்டங்களுக்கு நன்றி. சுதந்திர தாகம் வெளியான வரலாறு படித்த நினைவு வருகிறது. கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதுவும், நீங்கள் சொன்ன நந்தா விளக்கும் படிக்க வேண்டிய லிஸ்ட்டில் சேர்க்கப் பட்டது. மணிக்கொடி எழுத்தாளர்களில் ந.பிச்சமூர்த்தி, புதுமைப் பித்தன் போன்றோர் படைப்புகள் கிடைப்பதில் சிரமமில்லை சுவாமிநாத ஆத்ரேயா, மற்றும் கு. சீனிவாசனின் எழுத்துகளைப் படிக்கும் ஆவலும் ஏற்பட்டுள்ளது.. கு. சீனிவாசன் புத்தகம் கைக்குக் கிடைத்துள்ளது. இனிதான் படிக்க வேண்டும்!

    நீங்கள் சொல்லியுள்ள காரணத்தினால்தான்.... அவரின் பெயர் B S ராமையா தான். .

    பதிலளிநீக்கு
  10. நன்றி ராமலக்ஷ்மி, middleclassmadhavi...

    பதிலளிநீக்கு
  11. பி.எஸ். ராமையா பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு என் பதிவில் 'எழுத்தாளர்' பகுதியில் அவரைப் பற்றி நான் எழுதியிருப்பதை பாருங்கள்.

    இந்தப் பதிவின் விசேஷம் என்னவென்றால்,அமெரிக்கா Redmond நகரத்தில் இருக்கும் பி.எஸ்.ராமையா அவர்களின் திருமகனார் திரு.ராமையா
    சுப்ரமணியன் அவர்கள் இந்தப் பதிவைப் படித்து விட்டு, 'எங்கள் தந்தை பீ.எஸ். ராமையா பற்றி இவ்வளவு நன்றாக எழுதியதற்கு மிக்க நன்றி. இப்பொழுது அமெரிக்காவில் இருந்து கொண்டு என் மகனுடன் இதைப் படித்து மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்' என்று அந்தப் பதிவுக்குப் பின்னூட்டமிட்டிருப்பது தான். இணையத்தில் எழுதுவதின் ஆகப்பெரிய வீச்சு இது.

    'எழுத்து' சி.சு. செல்லப்பா பற்றியும் எனது 'எழுத்தாளர்' பதிவில் எழுதியிருக்கிறேன். கீதாம்மா குறிப்பிட்டிருக்கும் வடக்கு வாசல் பெண்ணேஸ்வரன், செல்லப்பா அவர்களை ஆவணப்படம் எடுக்க முயற்சித்து அனுபவப்பட்ட அனுபவங் கள் மனதைக் கலக்கும். சொந்த வாழ்க்கையில் எத்தனையோ சிரமங்களுக்கிடையே இலட்சிய தாகத்தோடு செயல்பட்ட இப்படிப்பட்ட எழுத்தாள செம்மல்கள் வாழ்ந்த பூமி இது.

    பதிலளிநீக்கு
  12. நன்றி ஜீவி சார்.... சுதந்திர தாகம் எந்த பதிப்பகம் என்ன விலை என்று அறிய கூகிளிட்ட போது சி சு செல்லப்பா பற்றிய உங்கள் தளத்தின் பக்கத்தைப் பார்க்க முடிந்தது. உங்கள் தளத்தில் எழுத்தாளர்கள் பற்றிய பதிவுகள் ஏற்கெனவே சிலபல படித்ததுண்டு. உங்கள் தளத்தில் எழுத்தாளர்களைப் பற்றி நீங்கள் எழுதியுள்ள பதிவுகள் மிகச் சிறப்பானவை. கடும் உழைப்புடன், அரிய தகவல்களுடன் கூடியவை.

    பதிலளிநீக்கு
  13. அனுபவங்களின் மீட்பு.பதிவையும் பின்னூட்டங்களையும் வாசிக்குபோதே ஒரு சுகம் !

    பதிலளிநீக்கு
  14. //"தமிழுக்கும் அமுதென்று பேர்" பாடல் தெரியும். அந்தப் பாடலை வெளியிட்டது (முதன் முதலில்) மணிக்கொடி.//

    இந்தப் பாடல் முதன் முதலாக அச்சானது 'தமிழரசு' என்னும் பத்திரிகையில். அச்சுக்கோத்தவர் யார் தெரியுமா?.. பின்னால் 'கல்கி'க்கு வந்து பிரபலமான எழுத்தாளர்
    'பாலும் பாவையும்' விந்தன்!

    பதிலளிநீக்கு
  15. கு.அழகிரிசாமி, புதுமைப் பித்தன் போன்றவர்களையும் சேர்த்துக்குங்க.

    பதிலளிநீக்கு
  16. சில வருஷங்கள் முன் வரை - மணிக்கொடி எழுத்தாளர்களை பற்றி படிக்கக்கூடிய வாய்ப்பு இருந்து கொண்டே இருந்தது. இப்போது அது மறைந்து வரும் சூழலில் ஞாபகப்படுத்திவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  17. //அந்தப் பாடலை வெளியிட்டது (முதன் முதலில்) மணிக்கொடி.//

    ஸ்ரீராம்,

    இதைச் செக் செய்து விட்டீர்களா?
    பீ.எஸ். ராமையா அவர்கள் 'தீபம்' இதழில் தொடர்ந்து 'மணிக்கொடி காலம்' என்று தலைப்பிட்டு எழுதி வந்தார். உங்களிடம் இருக்கும் புத்தகம் அந்த 'தீபம் தொடரின்' தொகுப்பா? அதிலா பாரதிதாசனாரின் அந்தப் பாடலை முதன் முதலில் வெளியிட்டது, மணிக்கொடி என்று அச்சாகியிருக்கிறது?

    தெரிந்து கொள்ள ஆவல்.

    பதிலளிநீக்கு
  18. //அந்த 'தீபம் தொடரின்' தொகுப்பா? அதிலா பாரதிதாசனாரின் அந்தப் பாடலை முதன் முதலில் வெளியிட்டது, மணிக்கொடி என்று அச்சாகியிருக்கிறது?//

    ஆமாம். தீபம் இதழில் வந்ததன் தொகுப்புதான் இந்தப் புத்தகம். இந்தப் புத்தகத்தில் நா பா (தினமணி கதிர், சென்னை - 2) 21 - 5- 1980 தேதியிட்டு இது பற்றிக் குறிப்பிட்டு முன்னுரையும் எழுதி இருக்கிறார்.

    முதன்முதலில் மணிக்கொடியில்தான் அந்தக் கவிதை (தமிழுக்கும் அமுதென்று பேர்) வெளியானது என்ற அர்த்தம் எடுத்துக் கொள்ளும் வகையில்தான் வரிகள் அமைந்துள்ளன. நீங்கள் சொன்ன தகவலைப் படித்த போது வேறு எங்கோ படித்து அறிந்திருக்கிறீர்கள் என்று எண்ணினேன். இந்தத் தகவல் வரும் பாரா...

    "மணிக்கொடி முதல் இதழ் செப்டம்பர் பதினேழு (1933) வெளிவந்தது. அடுத்த ஞாயிறு அன்றே 'மணிக்கொடி' ஒரு சக்தி என்ற உண்மையும் வெளிவந்தது. இரண்டாவது இதழில் "இன்பத் தமிழ்" என்ற தலைப்பில் ஒரு கவிதை வெளிவந்தது. "தமிழுக்கும் அமுதென்று பேர்..." என்று தொடங்கிய அந்தக் கவிதையை எழுதியவர் பெயர் பாரதிதாசன் என்று குறித்திருந்தது. அப்போது பாரதிதாசன் யார் என்பது எனக்குத் தெரியாது. எனக்கு மட்டுமென்ன, பாரதியார் வட்டாரத்தில் நெருங்கிப் பழகியவர்கள் சிலரைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியாது....."

    இன்னொரு தகவலாக இரண்டு பக்கங்கள் தளளி..(51)

    ""மணிக்கொடி" நான்காவது இதழுக்கு நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை "அன்பே நாதனைக் காண்பது" என்ற ஒரு பாடல் அனுப்பியிருந்தார்.

    அதற்கு அடுத்த இதழில் பாரதிதாசனின் இரண்டாவது கவிதை "வளர்ந்த திங்கொருதீ " என்ற தலைப்பில் வெளிவந்தது. அந்தக் கவிதை ஞானதீபம் என்ற மணிக்கொடி தலைப்புப் பகுதியில் வெளியிடப் பட்டிருந்ததாய் ஞாபகம்....."......

    இன்னொரு இடத்தில் (பக்கம் 74) பாரதிதாசன் எழுதிய 'சக்திப் பாட்டு' என்ற பாடல் பற்றி எழுதி உள்ளார். பாரதியாரால் சிலாகிக்கப் பட்டு, அவராலேயே சுதேசமித்திரனுக்கு 'நம்மிடம் வந்த ஒரு புலவர் பாடியது' என்ற அறிமுகத்துடன் அனுப்பிவைக்கப் பட்டு பிரசுரமானது. (சுதேசமித்திரனில்) அந்தப் பாடலை மறுபடி மணிக்கொடியில் ஒரு கூடுதல் கண்ணியுடன் பாரதிதாசனே நேரில் வந்து எழுதிக் கொடுத்தாராம். அப்போது பி எஸ் ஆர் அவரை அருகில் நின்று வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாராம்.

    தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  19. //முதன்முதலில் மணிக்கொடியில் தான் அந்தக் கவிதை (தமிழுக்கும் அமுதென்று பேர்) வெளியானது என்ற அர்த்தம் எடுத்துக் கொள்ளும் வகையில்தான் வரிகள் அமைந்துள்ளன. நீங்கள் சொன்ன தகவலைப் படித்த போது வேறு எங்கோ படித்து அறிந்திருக்கிறீர்கள் என்று எண்ணினேன்//

    எழுத்தாளர் விந்தனின் அணுக்கத் தோழர் மு.பரமசிவம் அவர்கள்.
    அவர் விந்தனின் வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதியிருக்கிறார்.

    அச்சகத் தொழிலாளியாய் வாழ்க்கையைத் துவக்கியவர் விந்தன். அவர் 'தமிழரசு' என்னும் பத்திரிகையில் அச்சுக் கோப்பவராகப் பணியாற்றும் பொழுது, அந்தப் பத்திரிகையில் பிரசுரிக்கவிருந்த பாரதிதாசனாரின் 'தமிழுக்கும் அமுதென்று பேர்' கவிதையை அச்சுக் கோர்த்ததாகவும் மு. பரமசிவம், விந்தனின் அந்த வாழ்க்கை வரலாற்று நூலில் எழுதியிருக்கிறார்.

    பின்னால் அச்சகத் தொழிலாளியாகவே 'கல்கி'யில் பணியாற்றுகிறார் விந்தன். 'என் கையெழுத்து, கடவுளுக்கும் எனக்கும் தான் புரியும்' என்று சிரித்துக் கொண்டே சொல்வார் கல்கி. ஆசிரியர் கல்கியின் கையெழுத்தைப் புரிந்து கொண்டும்
    அவர் எழுத்து வேகத்திற்கும், திருத்தல்களுக்கும் ஈடுகொடுத்து, சலித்துக்கொள்ளாமல் அச்சுக்கோர்த்த கோவிந்தனை மிகவும் பிடித்துப் போய்விடுகிறது கல்கிக்கு. விந்தனின் உள்ளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக படிந்து வந்த எழுத்தாற்றலையும், எழுதத் தோன்றிய ஆசைகளையும் மிகச்சரியாகப் புரிந்து கொண்ட கல்கி, அவரை 'கல்கி' பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவராக்கி தன் பக்கத்தில் அமர்த்திக் கொள்கிறார்.
    விந்தனின் 'பாலும் பாவையும்' தொடர்கதையாக 'கல்கி'யில் தான் பிரசுரமாயிற்று.

    விந்தனின் இயற்பெயர் கோவிந்தன்.
    'விஜி' என்கிற பெயரில் எழுதத் தொடங்கியவரை விந்தனாக்கியது,
    அமரர் கல்கி தான்!

    விந்தனைப் பற்றி என் எழுத்தாளர் பகுதியில் எழுதியிருக்கிறேன். 'பாலும் பாவையும் விந்தன்' என்று கூகுளில் தேடினால் கிடைக்கும். படித்துப் பாருங்கள். அற்புதமான எழுத்தாளத் தோழர் அவர்!

    பதிலளிநீக்கு
  20. Manikodi parambarai kavizhargal yaar?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!