திங்கள், 14 மே, 2012

நடக்கும் நினைவுகள்... (06) கில்லி!

               
நடந்து சென்று,  கடந்து செல்லும்போது கிரிகெட் விளையாடிக் கொண்டிருந்த சில வாண்டுகளைத் தாண்டிச் சென்றேன். மரியாதை நிமித்தம் நான் கடந்து செல்லும்வரை ஆட்டம் நிறுத்தப் பட்டது. பௌலர் விக்கெட் கீப்பரைப் பார்த்து "உங்க ஸ்கோர் என்ன" என்றான்! (சாதாரணமாக பௌலரும் விக்கெட் கீப்பரும் ஒரே டீமாகத்தானே இருக்க வேண்டும்? தெரு கிரிக்கெட்டின் நியதிகள் தனி. ஆள் பற்றாக்குறையால் தன் டீமுக்கு தானே கீப்பிங் செய்வார்கள்!) ஃபீல்டர் வாண்டு ஒன்று "பதினேழு" என்றது. பௌலர் கடுப்பானான். "எப்படி, எப்படி... இப்போதானே பதினொன்னுன்னு சொன்னே" என்று பாய, கீப்பர், ஃபீல்டர் ஆகியோர் பஞ்சாயத்தில் ஈடுபட, நான் முனநோக்கி நடந்தாலும் என் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன! 
                  
கிரிக்கெட்டுக்கு ஆதி விளையாட்டு கிட்டிப் புள்! கிட்டி என்று அழைக்கப் படும் பாதி விறகு போன்ற சவுக்குக் கட்டை ஒரு முனையில் பாதியாகச் சீவப் பட்டு கிரிக்கெட்டில் இருக்கும் 'பேட்'டுக்குச் சமானமாய் இருக்கும். புள் என்று அழைக்கப் படும் வஸ்து,  உள்ளங்கை சைஸில்அதே சவுக்குக் கட்டை இரண்டு பக்கமும் கூராகச் சீவப்பட்டு இருக்கும்.  இதைப் பந்தாகக் கொள்ளலாம்! 
                        
ஒரு வட்டத்துக்குள் செதுக்கப் பட்டிருக்கும் சின்னஞ்சிறு நீள் குழியில் இந்தப் புள் குறுக்கு வாட்டில் வைக்கப் பட்டு, 'கீந்த'ப் படும்! கெந்தி விடுதல் கெந்துதல் என்பதுதான் கீந்துவது என்று பேச்சு வழக்காக இருந்தது. சற்று தூரத்தில் ('கீந்த'ப் படும் புள் உத்தேசமாகப் பயணம் செய்யும் தூரத்தில்) எதிர்க் கட்சி ஆட்கள் நின்றிருப்பார்கள் கீந்தப் படும் 'புள்'ளை (கையில் துண்டுடன் அல்லது கழற்றப்பட்ட அவரவர் சட்டையுடன் - விக்கெட் கீப்பர் போலத்) தயாராய் நிற்கும் எதிர் டீம் ஆட்கள் கேட்ச் செய்து விட்டால் கீந்திய ஆள் அவுட். பக்க வாட்டிலோ, தலைக்கு மேலோ வேகமாக 'கீந்த'க் கூடியவர்கள் திறமை சாலிகள். 
                     
இதில் கண்டிஷன் எல்லாம் உண்டு. திரும்பி நின்று தலைகீழாய் கால்களுக்கிடையே கீந்த பெரும்பாலும் தடை விதிக்கப் படும்! வேகம் அதிகம் இருக்கும் என்பதால். நேராக நின்றுதான் கீந்த வேண்டும்!! கேட்ச் பிடிக்கப் படாமல் கீழே விழும் 'புள்'ளை எதிர் டீம் ஆட்கள் எடுத்து, கீந்தியவன் அந்த வட்டத்தின் மேல் முனையில் வைத்திருக்கும் கிட்டியை அடிக்க வேண்டும். புள்ளால் கிட்டியில் அடித்து விட்டால் கீந்தியவர் அவுட். 
                  
இதிலும் தப்பி விட்டால் அந்தப் 'புள்' எங்கு விழுந்திருக்கிறதோ அங்கு சென்று கிட்டியால் 'புள்'ளை ஒரு முனையில் தட்டி மேலெழுப்பி அடிக்க வேண்டும். இது மாதிரி மூன்று முறை செய்யலாம். மூன்றாவது முறையும் புள்ளை மேலே எழுப்பி எவ்வளவு தூரத்தில் அடித்திருக்கிறோம் அங்கிருந்து வட்டம் வரை கிட்டியால் அளந்து கொண்டே வர வேண்டும். அது ஸ்கோர்!
                  
பதில் ஆட்டத்தில் எதிர் டீம் அந்த டார்கெட்டைத் தாண்ட வேண்டும்!
                         
கிட்டியால் புள்ளை ஓரச் சீவலில் அடித்து மேலெழுப்பும் போது எதிர் டீம் ஆட்கள் புள்ளைக் கேட்ச் பிடித்து விட்டாலும் அவுட்! அதே சமயம் புள்ளைக் கிட்டியால் அடித்து மேலே எழுப்பி அதை இரண்டு முறை மூன்று முறை என்று எத்தனை முறை வேண்டுமானாலும் (முடிந்தால்) தட்டி அப்புறம் அடிக்கலாம். இதற்கு(த்தான்) கில்லி என்று பெயர்! அபபடி அடிக்க அடிக்க கிட்டியால் வட்டம் வரை அளக்கும் ஒரு அளவை இரண்டு மடங்கு மூன்று மடங்கு என்று உயரும் ஏதோ ஒரு கட்டத்தில் 'புள்ளா'ல் அளக்கும் வாய்ப்பும் கிடைக்கும். ஸ்கோர் செம எகிறு எகிற ஒரு வாய்ப்பு! 
                      
இந்த மாதிரி 'கில்லி' அடிக்கும் முயற்சிகளில் இருக்கும்போது(ம்) எதிர் டீம் கேப்டன் "ஸ்கோர் என்ன" என்று கேட்பார். (மற்ற சமயங்களிலும் கேட்கலாம். இப்போது கேட்டால் அடிப்பவரின் கவனத்தைக் குலைக்கலாமே!) யாராவது அவசரப் பட்டு தப்பாகச் சொல்லி விட்டால் போச்! அத்தோடு அந்த டீமின் ஆட்டமே காலி. எனவே ஒவ்வொரு டீமிலும் ஸ்கோர் சொல்ல என்று தனியாக ஆட்களை வைத்து விடுவார்கள், அல்லது கேப்டன் 'வேறு யாரும் சொல்லக் கூடாது. நான்தான் சொல்வேன்' என்று சொல்லி விடுவார்! 
              
ஆட்டத்தின் இந்த இடம் வாண்டுகள் கிரிக்கெட்டில் ஸ்கோர் கேட்ட இடத்தில் நினைவுக்கு வந்ததால்தான் முழு ஆட்டத்தைப் பற்றியும் நினைவுக்கு வந்து நினைவுகள் கூடவே நடந்தன! 
                         
கில்லி அடிக்கும் போது கேட்ச் பிடிக்க முயன்று எத்தனை முறை இரண்டு கை மணிக்கட்டுகளிலும் கிட்டியால் அடி வாங்கியிருக்கிறோம் என்று மணிக்கட்டுகள் வலியை நினைவு கூர்ந்தன. 
                      
கிட்டியாலும், புள்ளாலும் அடிவாங்கிய நாட்களும், தெருவில் தாண்டிச் செல்வோர் மீது பட்டு, சண்டை ஏற்பட்ட நாட்களும் நினைவில் நடை பயின்றன.
                       
இப்போது (கிராமங்களிலேனும்) யாராவது கிட்டிப்புள் விளையாடுகிறார்களா, தெரியவில்லை! 
                        

25 கருத்துகள்:

  1. //புள் என்று அழைக்கப் படும் வஸ்து, உள்ளங்கை சைஸில்... //

    'புள்'ளை விளக்க இவ்வளவு சிரமப் பட்டிருக்க வேண்டாம். அது சின்ன சைஸ் அப்பளக்குழவி என்று கொள்க.

    புள்ளென்றால் பறவை என்றும் அர்த்தம் கொள்ளலாம். கிட்டியின் நுனி பாகம் முத்தமிட்ட வேகத்தில், பறவை போன்று விண்ணென்று மேலெழும்பிப் பறப்பதால் அது புள்ளென்று பெயர் பெற்றது போலும். மறந்தும் இதை புல்லென்று வீரியமற்ற வார்த்தையில் விளித்து விடக்கூடாது. 'ள' உச்சரிக்க வராதவர்கள், ஜோராக ஒருதடவை கைதட்டி விட்டு பேசாமல் ஒதுங்கி விடலாம்.

    கீந்துவது = குழியின் குறுக்காக வைக்கப்படும் புள்ளின் நடுவயிற்றில் கிட்டியால் ஒரு தட்டு தட்டி உசுப்பி எழுப்பி அதன் முதுகில் கிட்டியால் ஓங்கி ஒரு அறை அறைவது.

    பதிலளிநீக்கு
  2. அருமை! சின்ன வயசில் தம்பி கிட்டிப்புள் ஆடும்போது அடிபட்டு அழுது கொண்டு வர, வீராங்கனையாக நான் சென்று ஆடியதும், அப்பா என்னைக் கன்னாபின்னாவேனத் திட்டியதும் நினைவில் வந்தது.

    கல்லாட்டம்,கோலிக்குண்டுகள் வைத்து, தீப்பெட்டிப் படங்கள் சேகரித்து விளையாடி இருக்கீங்களோ? அது நாங்க பெண்களும் விளையாடி இருக்கோம். ஆண்கள் ஒரு டீமாகவும், பெண்கள் இன்னொரு டீமாகவும் விளையாடியதும் உண்டு. எல்லாம் அப்பாவுக்குத் தெரியாமல் தான்! :))))))))

    பதிலளிநீக்கு
  3. Nostalgic. Took me to my school days. You can write other games also like this.

    பதிலளிநீக்கு
  4. இதெல்லாம் "boys game" என்று வேடிக்கை பார்த்ததோடு சரி. இன்னொரு காரணம், விளையாடும்போது கண்டிப்பாக, அந்த வழியே தேமே என்று போகிறவர்க்ளுக்கு அடிபடும், அப்புறம் வாங்கிக் கட்டிக்கணும்.

    ஸோ, எங்க சாய்ஸ், ஐஸ்பால், கோகோ, கண்ணாமூச்சி, ”பூப்பறிக்க வாரியா?”, ஐஸ்குச்சிகள் சேர்த்து ஒரு விளையாட்டு (இதுக்குப் பேரெல்லாம் கிடையாது!!), பாண்டி, மூலை(இது கல்யாண வீட்டில் மட்டுமே விளையாடமுடியும்; பந்தல் வேணுமே!!), நொண்டி, சிட்டிக்கல், மண்ணில் குச்சியைப் புதைத்துக் கண்டுபிடுக்கும் விளையாட்டு (பேர் மறந்துபோச்), சீட்டுக்கட்டு, ம்ம்ம்..... வேற.. வேற...

    பதிலளிநீக்கு
  5. கல்லிடைல விளையாடிய ஒரு முக்கியமான விளையாட்டு. விதிமுறைகள் அனைத்தும் மிகச்சரியாக உள்ளது. :))

    பதிலளிநீக்கு
  6. இந்த விளையாட்டு விளையாட பெரிய வெளியான இடமும் தேவை.இப்ப அதுவும் கஸ்டமான ஒன்றுதானே !

    பதிலளிநீக்கு
  7. மழை பெய்தால் நிலம் ஈரமாக இருக்கும் என்பதால் இந்த பிளஸ் போட்டு விளையாடியிருக்கோம் ஆனால் நீங்கள் சொல்லிய விதிமுறைகளில் சில மாற்றங்கள் இருக்கு.நான் விளையாடிய போது எப்படி வேணுமென்றாலும் கிந்தலாம்.3 அடி அடித்த பிறகு நாம் தான் அளவு சொல்லவேண்டும்,தப்பானால் ஆட்டம் இழக்க வேண்டிவரும்...இப்படி போகும்.

    பதிலளிநீக்கு
  8. கில்லி.....கில்லியா போகுது நினைவுகள்... ரூல் எங்காவது விடுவீங்க பார்த்தா கச்சிதமா போட்டிருக்கிங்க.. கில்லியில் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரி தான் இருந்திருக்கு....

    முனை தட்டி நேராக குதிக்க வைப்பது முதல் வெற்றி.. பின் தட்டி தட்டி ஒரே வீச்சு... சிக்ஸர் சந்தோசம் .

    பளபளக்கும் கொய்யாமரம் கில்லிக்கு தோதானது.. கிட்டியை சீவுவது தனி கலை...

    பம்பரம், குச்சி , எதரா மேலா குண்டு விளையாட்டு என பல விளையாட்டுகளுக்கு இழுத்துச்சென்றுவிட்டீர்கள்....

    பதிலளிநீக்கு
  9. ஹ்ம்ம்ம்ம்.சென்னையில் சில இடங்களில் இந்த விளையாட்டைப் பார்க்கமுடியும் என்றே நினைக்கிறேன்.நாங்கள் விளையாடும் காலத்தில் தோழி பச்சையம்மாவுக்குக் கண்ணில் பட்டுவிட்டது. நல்ல வேளை ஒன்றும் ஆகவில்லை.வீட்டுக் காம்பவுண்டுக்குள்தான் விளையாட அனுமதி.:)) நன்றி ஸ்ரீராம்.
    கீதா புளியம்கொட்டை சேர்த்து ஊதுவது,சிகரெட் அட்டையில் பலராமா பலகிருஷ்ணா எழுதிவைத்துக் கொண்டு விளையாடுவது எல்லாம் விட்டு விட்டீர்களே:)

    பதிலளிநீக்கு
  10. கீதா புளியம்கொட்டை சேர்த்து ஊதுவது,சிகரெட் அட்டையில் பலராமா பலகிருஷ்ணா எழுதிவைத்துக் கொண்டு விளையாடுவது எல்லாம் விட்டு விட்டீர்களே:)//

    ஆமா இல்ல?? :))))))))இந்தப் புளியங்கொட்டை ஊதறதிலே எங்க அண்ணா ஒருத்தர் (பெரியம்மா பிள்ளை) எங்களை எல்லாம் கொஞ்சம் ஏமாத்துவார். சண்டை போடுவோம். எங்க காலத்திலே தாத்தா வீட்டுக்கு நாங்க எல்லாம் லீவுக்குப் போகும் காலத்திலே எல்லா விளையாட்டும் எல்லாருமே சேர்ந்து விளையாடுவோம்.

    பாண்டி ஆட்டத்தில் அண்ணன்மார்களும், கிட்டிப்புள், கோலிக்குண்டில் நாங்களும் கலந்து கொண்டு ஆடுவோம். பெரியவங்க கத்தும் சமயம் உள்ளே வந்து சீட்டுக்கட்டு, ட்ரேட், தாயக்கட்டம்! ஆஹா! ட்ரேட் விளையாட்டில் எத்தனை சொத்து சேர்த்திருக்கேன் தெரியுமா? :))))))

    பதிலளிநீக்கு
  11. இப்படிப் பின்றாரே ஜீவி?
    க்ரிகெட்டுக்கு ஆதி கில்லியா? நடத்துங்க..

    பதிலளிநீக்கு
  12. எங்கள் ப்ளாக்15 மே, 2012 அன்று AM 7:58

    இதுவரையில் கருத்துரைத்துள்ள ஜீவி, கீதா சாம்பசிவம், மோகன் குமார், ஹுஸைனம்மா, தக்குடு, ஹேமா, வடுவூர் குமார், திண்டுக்கல் தனபாலன், பத்மநாபன், வல்லிசிம்ஹன் எல்லோருக்கும் எங்கள் நன்றி.
    ஜீவி அவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க சிபாரிசு செய்கின்றோம். பயங்கரமா தீசிஸ் எழுதியுள்ளார்!
    கீதா மாமி, நீங்களும் இந்த விளையாட்டுகள் எல்லாம் விளையாடி இருக்கின்றீர்களா!! சூப்பர்!

    ஹுஸைனம்மா - சீட்டுக்கட்டா!! சின்னப்புள்ளையில ரவுடியா இருந்திருப்பீங்க போலிருக்கே!! குச்சியை மண்ணில் புதைத்துக் கண்டுபிடிக்கும் விளையாட்டு ... கிச்சுக்கிச்சுத் தாம்பாளம் என்று எங்கள் ஊரில் சொல்லுவார்கள் - ஆற்று மண்ணில் (தண்ணீர் இல்லா நாட்களாகிய கோடை விடுமுறை நாட்களில்) நாங்களும் விளையாடி இருக்கோம்ல!
    தக்குடு சொல்லியிருப்பது போல, ஆட்ட ரூல்ஸ் கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் ஒன்றுதான். ஆனால் உபவிதிகள் கொஞ்சம் மாறுபடும். நூற்றுக்கு எவ்வளவு கிட்டி சிலருக்கு பதினைந்து - ரெண்டடி கில்லி போட்டால் நூற்றுக்கு ஏழரை கிட்டி --- என்றெல்லாம் சொல்லுவார்கள்.
    ஹேமா - ஆமாம் விலாசமான இடம் தேவை. அதிக போக்குவரத்து இல்லாத மண் தெருக்களில் இதை விளையாடுவார்கள்.

    வல்லிசிம்ஹன் - சிகரெட் அட்டையில் பலராமா பலகிருஷ்ணாவா? (அபச்சாரம் அபச்சாரம்!) அது என்ன ஆட்டம்? நாச்சியாரில் விவரமாக எழுதுங்கள்.

    கீதா சாம்பசிவம் - புளியங்கொட்டை ஊதுவதில், எங்கள் ஆசிரியர்களில் ஒருவர் பலே கில்லாடி. அவர் ஆடவந்தால் அடுத்து ஊதுவதற்கு வாயில் காற்றுத் தேக்கி வைத்திருப்பவர்களுக்கு ஒரு புளியங்கொட்டை கூட கிடைக்காது. புளியங்கொட்டை ஊதி, நிறைய சம்பாதித்தவுடன் ஆடப்படும் ஒத்தையா, இரட்டையா, பம்பையா, பரட்டையா - நிகழ்ச்சியிலும் சாமர்த்தியமாக ஆடி மற்றவர்களின் காய்களையும் கவர்ந்து சென்றுவிடுவார்!

    பதிலளிநீக்கு
  13. எங்கள் ப்ளாக்15 மே, 2012 அன்று AM 8:12

    கருத்துரைத்தவர்களுக்கு நாங்க நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டிருந்த அதே நேரத்தில், எங்களை முந்திக் கொண்டு ஜீவிக்கு டாக்டர் பட்டம் கொடுத்துவிட்டாரே அப்பாதுரை! நன்றி அப்பாஜி!

    பதிலளிநீக்கு
  14. ஆஹா.. பழைய நினைவுகளை கிளரி விட்டது பதிவு. தம்பியுடன் சண்டை போட்டுக்கொண்டு கில்லி விளையாடியது நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
  15. இதுக்கெல்லாம் பதிவு வேணாம் கௌதமன்.
    அப்போதெல்லாம் பாட்டிவீட்டுக்கு வரும்போது,சென்னைப் பசங்க கில்லாடிங்களா இருப்பாங்க. நாங்கள் மொஃபசல் தானே.
    சுப்பாணி என்கிற சுப்பிரமணி பாசிங் ஷோ,பெர்க்லி அப்புறம் இன்னோண்ணு வழவழன்னு இருக்கும்.

    அதுபோல ஆளுக்கு 12 சீட்டு என்று கொடுப்பான். நான் ,தைலா,வைத்தி,என் தம்பிகள்,கண்ணன் எல்லாரும் அந்தசிகரெட் அட்டையின் வெற்றுப்பக்கத்தில் பெருமாளோட எல அவதாரங்களையும் எழுதி வைத்துப்போம். அந்தப் பசங்க களக்காடைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அடிஷனலாகபலராமா,பலபத்ரா என்ற பேரெல்லாம் சொலிப் போடுவார்கள். நம்மிடமும் அந்தப் பெயர் இருந்தால்நமக்கு அந்த ரெண்டு கார்டும் கிடைக்கும். தோற்றவர்கள் பக்கத்துத் தோட்டத்திலிருந்து மாங்காய் கொண்டுவந்து உப்பு மிளகாய்ப் பொடியும் கொண்டுவரவேண்டும்.;)
    பிறகென்ன மஜாதான்.நானும் மங்காய் பறித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. ஸ்ரீராம்! கிட்டிப்புல் விளையாட்டை கௌவரவிக்கும் விதமாக பதிவிட்டமைக்கு வாழ்த்துகள்.

    எங்கள் ப்ளாக்கில் இவ்வளவு சிறப்பாக இடம் பெற்றமையால் இதை தேசிய விளையாட்ட அறிவிக்கக் கோரி மத்திய அரசை வலியுறுத்துவோம்! :-)))

    எப்படியாவது சென்னையில் ஒரு மின்னொளி கிட்டிப்புல் டோர்னமெண்ட் நடத்திப் பார்க்க ஆவல் எழுகிறது. :-)))

    பதிலளிநீக்கு
  17. டோர்னமெண்ட்டுக்கு சேப்பாக்கம் கிடைக்குமா?

    பதிலளிநீக்கு
  18. //ஹுஸைனம்மா - சீட்டுக்கட்டா!! சின்னப்புள்ளையில ரவுடியா இருந்திருப்பீங்க //

    அவ்வ்வ்வ்வ்... அதென்ன சின்னப்புள்ளையில (மட்டும்) ரவுடின்னு சொல்லிட்டீங்க!!!??? :-))))))

    அது காசு வச்சு விளையாடுவதல்ல. வெறுமே ‘செட்’ சேர்க்கும் சீட்டு விளையாட்டுதான்!! எனக்கு (இன்றுவரை) தெரிந்தது அது ஒண்ணே ஒண்ணுதான்!!

    //கிச்சுக்கிச்சுத் தாம்பாளம் //
    அதே.. அதே..
    எங்க ஊர்ல எல்லாத் தெருவழியாவும் தாமிரபரணியின் கால்வாய் போவதால், தெருமணலும் சூப்பராக இருக்கும். அதனால் தெருவிலேயே மணலில் கைபோட்டு விளையாடுவோம். இப்போ (நினைச்சா உவ்வே..) செருப்புப் போடாம காலைக் கூட வைக்கிறதில்ல தெருவில்!!! மணலும் இல்லை - தார்ரோடு ஆக்கிட்டாங்க... :-((((

    பதிலளிநீக்கு
  19. சீட்டாட்டத்தில் நாங்களும் ஹூசைனம்மா கட்சிதான். செட் சேர்க்கும் விளையாட்டுத் தான். ஆனால் எந்த விளையாட்டானாலும் தாத்தா வீட்டுக்குப் போகையிலே தான். எங்க வீட்டிலே என்றால் லீவுக்கு அப்பா எங்கேயானும் ஊருக்குப் போயிருந்தால் தான்! இல்லைனா விளையாட முடியாது. அண்ணா, தம்பி விளையாடினாலும் நான் வெளியேயே வர முடியாது. வந்தால் போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்! :)))))) வீடு ரெண்டு படும்! தாத்தா வீட்டிற்குப் போயிருக்கச்சே பாதி விளையாட்டின் போது அப்பா வரது தெரிஞ்சா மாமாக்கள் எச்சரிக்கைக் குரல் கொடுப்பாங்க. :)))))) சுதாரிச்சுப்பேன். நல்ல பொண்ணா புத்தகத்தை எடுத்து வைச்சுண்டு உட்கார்ந்திருப்பேன். :))))) அதெல்லாம் பொற்காலம்.

    காலம்பர கல்சட்டி நிறையப் பழையதைப் பாட்டி பிசைந்து எங்களுக்கெல்லாம் கையிலே போடுவாங்க. கட்டை விரலால் குழி பண்ணிக் கொண்டு முதல்நாள் குழம்பையும், ரசத்தையும் சேர்த்துச் சுட வைச்சதை விட்டுக் கொண்டு போட்டி போட்டுக் கொண்டு சாப்பிடுவோம். திரும்பப் பதினொரு மணிக்கே பசி என்போம்.

    பதிலளிநீக்கு
  20. ஆமாம் காலங்கார்த்தால சாப்பிட்டது அதுவரை தாங்குமா:)
    முறுக்கு ம்கிறுக்கு ஏதாவது இருக்கான்னு கேப்போமே:)

    பதிலளிநீக்கு
  21. எங்கள் வீட்டு முற்றத்திலிருந்து சின்ன முடுக்கு(இரண்டு முடுக்கு உண்டு) முடிகிற வரை தட்டிக்கிட்டு போகலாம் புள்ளை. அண்ணன்களுக்கு நிகராக விளையாடுகிற ஆட்டங்களில் இதுவும் அடக்கம். இப்போது கோடையில் குடியிருப்பை அதிர வைத்துக் கொண்டிருக்கும் குழந்தைகளின் குதூகலத்தைப் பார்த்தும், நம்ம கால விளையாட்டுகளை பதிவிட வேண்டுமென எண்ணிக் கொண்டிருக்கையில் இந்தப் பதிவு:)! ரொம்ப அருமையா விதிமுறைகளை விளக்கியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  22. எங்கள் ப்ளாக்15 மே, 2012 அன்று PM 4:25

    மேலும் கருத்துரைத்துள்ள ராம்வி, வல்லிசிம்ஹன்,ஆர் வி எஸ், ஹுஸைனம்மா, கீதா சாம்பசிவம், ராமலக்ஷ்மி ஆகியோருக்கு நன்றி.
    ஆர் வி எஸ் - நேரு ஸ்டேடியம் போதும்!
    எங்கள் வாசகப் பதிவர்கள் எல்லோருமே ஒலிம்பிக் வீரர்கள்தான் போலிருக்கு!

    பதிலளிநீக்கு
  23. கில்லி - சென்னையில் தெருவில் நடந்து போகும் போது ஆண் பிள்ளைகள் விளையாடி கொண்டு இருப்பாங்க

    எம்மாடி தலையில் வந்து விழுந்துடுமோன்னு
    பயந்து கொண்டே போவது.,,

    பதிலளிநீக்கு
  24. 'எங்கே காட்டில் காய்ந்த நிலவாகி விடுமோ' என்று நினைத்தேன்.. அப்பாஜி! தங்கள் ரசனைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!