Monday, June 25, 2012

அட்சய பாத்திரம் --- சிறுகதை

               
எல்லோரும் சாப்பிட்டு முடித்து விட்டு எல்லாப் பாத்திரங்களையும் கழுவி வைத்தாயிற்று. படுக்க வேண்டியதுதான்.
                   
காலிங் பெல் ஓசை கேட்டது.
             
கதவைத் திறந்தாள்.
                 
தாத்தா பெரிய தாத்தா அவரின் சகோதரர் இன்னுமிரு தெரியாத முகங்கள்....
 
                 
"வாங்க.... வாங்க...." கதவைத் திறந்து விட்டு உள்ளே அழைத்தாள்.
                 
"தீர்க்க சுமங்கலியாய் இரம்மா.... அவர் எங்கே.... "
                 
"வெளில போயிருக்கார் தாத்தா.... உட்காருங்க... நல்லாயிருக்கீங்களா...." (அவர் டாஸ்மாக் போயிருக்கார் என்றா சொல்ல முடியும்?) 
               
"அதெல்லாம் நல்லாத்தான் இருக்கோம்.... இவங்க எங்களுக்குத் தெரிஞ்சவங்க.... ஒரு முக்கிய வேலையா இந்தப் பக்கம் வந்தோம். போய் நீராடி விட்டு வருகிறோம்.... (நீங்களுமா...?)   எங்களுக்கு சாப்பாடு எடுத்து வைம்மா....."     
                 
பைகளைக் கீழே வைத்து விட்டுக் கிளம்பி விட்டார்கள்.
                   
ஐயோ... என்ன சோதனை இது... உள்ளே ஓடிப் போய்ப் பார்த்தாள். ஒரு டப்பாவிலும் ஒன்றுமில்லை. எதை வைத்து என்னத்தைச் சமைக்க.... இந்த அகாலத்தில் யாரிடம் போய் என்ன கேட்க? கேட்டால்தான் என்ன தருவார்கள்? எத்தனை முறைதான் கேட்பது?
                 
தாத்தாக்கள் வேறு ரொம்ப கோபக்காரர்கள். இவர்களின் திருமணத்துக்கு வராதவர்கள். ஒரு வருடம் கழித்து இன்றுதான் இவர்களைப் பார்க்க வருகிறார்கள்.
                   
கையைப் பிசைந்தாள்....  என்ன செய்ய... இவர்கள் கோபத்திலிருந்தும் இந்த தர்ம சங்கடத்திளிருந்தும் எப்படித் தப்புவது?
                 
பாதி போதையில் வந்த கணவனிடம் இதைச் சொன்ன போது அவனும் கைகளைப் பிசையத் தொடங்கினான்.
                                   
போக்கற்றவர்களுக்கு பகவானே கதி என்று பூஜையறைக்குச் சென்றாள். "கிருஷ்ணா.... என்ன செய்ய...? உதவ மாட்டாயா?"   
***************************************  
         
பறவைக் காய்ச்சல் பற்றி விலாவரியாகக் கூறி பயமுறுத்திக் கொண்டிருந்த டிவியை அணைத்தான் மதுசூதனன்.
             
எழுந்து வெளியே வந்தான். மூன்று வீடு தளளி அர்ஜுன் வீட்டில் விளகெரிவதையும் அவர்கள் இருவரும் வாசலில் தவிப்பாய் நின்று கொண்டிருப்பதையும் பார்த்து பக்கத்தில் சென்றான்.
                     
"என்ன ஆச்சு மேடம்..."
                       
கோபக்காரப் பெரியவர்கள் பற்றியும் தன் வீட்டின் தற்போதய நிலைமை பற்றியும் சொன்னார்கள்.
                     
தன் பையைத் தடவிப் பார்த்தான் மது. அவனுக்கும் மாதக் கடைசிதான். சற்றுமுன் பார்த்த டிவி நியூஸ் நினைவுக்கு வந்தது.

'என்ன செய்வது..... என்ன செய்வது..... ம்..... ஐடியா.... ஆனா எனக்குத் தானாக வராதே....! நேரமாகிறதே... அவர்கள் வரும் நேரமாகிறதே...'

"நீங்க சாப்பிட்ட பாத்திரத்தைக் காட்டுங்கள்... அதைக் கொஞ்சம் எடுங்கள்..."

"இல்லீங்க.... கொஞ்சம் கூட மிச்சம் இல்லை... எல்லாத்தையும் கழுவி வச்சிட்டோம்...." என்றாள் அவள்.

"நீங்க எடுத்துட்டு வாங்க...."

உள்ளே சென்று எடுத்து வந்தாள்.

'அதானே... நீங்கல்லாம் கழுவற லட்சணம் எனக்குத் தெரியாதா...'
     
ஒரு பாத்திரத்தில் ஒட்டியிருந்த சிறு கீரைப் பகுதியையும், இன்னொரு பாத்திரத்தில் ஒட்டியிருந்த சிறு சதைப் பகுதியையும் எடுத்து முகர்ந்து பார்த்தான்.

அவள் லேசாக வெட்கப் பட்டு மற்ற பாத்திரங்களையும் காட்டினாள்.
   
முகர்ந்தது போதவில்லை என்று தோன்றவே, எல்லாப்பாத்திரங்களின் ஓரத்திலும் அடியிலும் ஒட்டியிருந்தவைகளை எடுத்து நாக்கில் இட்டுக் கொண்டான்.

'ம்.... வேலை செய்கிறது...'

"நீங்க உள்ள போங்க அண்ணி.... நான் இதோ வர்றேன்..."

விரைந்து நடந்தான்.

அவர்கள் திரும்பி வரும் வழியில் நின்று கொண்டான்.   
***********************************************

'நீராடி' திரும்பி வந்து கொண்டிருந்த அந்த நால்வரும் வழியில் ஒருவன் நின்று வாந்தி எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து நின்றார்கள்.
   
"என்ன ஆச்சு..."

பதில் சொல்லாமல் வாந்தி எடுத்துக் கொண்டிருந்த மது, தன் கைகளை நீட்டி "சுடுதா பாருங்க.." என்றான்.

ஒரு பெரியவர் தொட்டுப் பார்த்து விட்டு "இல்லையே.." என்றார்.

"அப்பாடா... வாந்தி எடுத்ததும் ஜுரம் குறைஞ்சிடிச்சு போல... மறுபடி ஜுரம் வந்தா வாந்தியும் வரும்... இந்தப் புது வகைக் காய்ச்சல்ல இது ஒருவகைக் கஷ்டம்..."
                  
"ஏன் தம்பி.,... என்ன ஆச்சு?"
               
"இந்தத் தெருவில, என் ஃபிரண்டு அர்ஜுன் வீட்டுல சாயங்காலம் சாப்பிட்டேன். சாப்பிடும்போது கோழி, கீரைன்னு எல்லாம் அமர்க்களமா நல்லாத்தான் இருந்தது... என்ன ஆச்சோ தெரியல.... ஒரே வாந்தி... அர்ஜுனும் இப்போதான் வாந்தி எடுத்துட்டுப் போனான்...."
              
அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.  
**************************************************
      
'செல்' அடிக்கவும் எடுத்துப் பேசியவள் முகம் மலர்ந்தது. அர்ஜுனைக் கூப்பிட்டாள்.
                 
"என்னங்க... அவங்க வீட்டுக்கு வரலையாம். வேறொரு முக்கிய ஜோலி வந்துடுச்சாம். பைகளை எடுத்துக் கொண்டு வந்து தெருமுனைல தரச் சொல்றாங்க...."
           
அர்ஜுன் சொன்னான், "மதுசூதனா.... என்னடா செஞ்சே.... எல்லாம் உன் செயல்!" 
       

22 comments:

ராமலக்ஷ்மி said...

பீதியைக் கிளப்பும் பறவைக் காய்ச்சலால் இப்படியும் ஒரு பயனா:))? நல்ல கதை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

விருந்தினரை எப்படியோ விரட்டியாச்சு.

நல்ல நகைச்சுவைக் கதை தான்.

middleclassmadhavi said...

:-)) Super!

ஹுஸைனம்மா said...

என்ன ஆச்சு ‘எங்கள் ப்ளாக்’கிற்கு? வரவர, ஒரே வாந்தி, பேதி பீதியா இருக்கு சிறுகதைகளில்?

:-((

இராஜராஜேஸ்வரி said...

"மதுசூதனா.... என்னடா செஞ்சே.... எல்லாம் உன் செயல்!

Ramani said...

நல்ல நகைச்சுவைக் கதை
நறுக் நறுக் கென சொல்லிச் சென்றவிதம்
மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்

Geetha Sambasivam said...

கதை நல்லா இருக்கு; இப்போதைய நிலைமைக்கு ஏற்ற கதை. ஆனால் எனக்கு நிஜம்ம்ம்மா இந்த அனுபவம் உண்டு. நாங்க வீடு கட்டின புதுசிலே! அப்போ எல்லாமே சிக்கனம். ஏற்கெனவே வீட்டில் ஒரு வேளைக்குப் பத்துப் பேர் சாப்பிட்டாகணும். சாப்பிட்டு முடிச்சுப் பாத்திரங்களை ஒழிச்சுப் போட்டுட்டு நானும் மாமியாரும் சமையலறையை விட்டு வருவோம். யாரானும் உறவினர் 2,3 பேர் வருவாங்க. அரிசி இருந்தாலும், மற்ற சாமான்கள், எண்ணி எண்ணிச் செலவு செய்த நாட்கள்!

இருந்த சாம்பாரிலேயே பக்கத்து வீட்டு சாம்பாரைச் சேர்த்து எங்க போர்ஷனில் குடி இருந்தவங்க வீட்டு ரசத்தை வாங்கி எங்க ரசத்தோட சேர்த்து, எண்ணெய் கடன் வாங்கி அப்பளம், வடாம் பொரித்து, எப்போதும் கை கொடுக்கும் உ.கி. கறி பண்ணிச் சமாளிப்போம். சனி, ஞாயிறுன்னா கேட்கவே வேண்டாம். திருவிழாக் கூட்டம் தான். செண்ட்ரல் ஸ்டேஷன் மாதிரி வீட்டிலே பெட்டியும், படுக்கையுமா இருக்கும். :))))))))

மோகன் குமார் said...

நல்லா கெலப்புரீங்கையா பீதியை :)

Madhavan Srinivasagopalan said...

// 'செல்' அடிக்கவும் எடுத்துப் பேசியவள் முகம் மலர்ந்தது. .//

அதே செல்லுல ஒரு ரெண்டு வேணாம்.. வேணாம்.. ஒரு மணி நேரத்துக்கு முன்னால 'டின்னர் சாப்பிட' வர்றோம் நாலு பேரு (தாத்தா)னு சொல்லு இருந்தா.. பீதி கெளம்பாம இருந்திருக்குமில்ல..

சே. குமார் said...

இது கூட நல்ல ஐடியாவா இருக்கே...
நல்ல நண்பணும் வேணுமுல்ல்...

அப்பாதுரை said...

மறுபடி வாந்தி கதையா?

அப்பாதுரை said...

மறுபடி ஹூஸைனம்மா!

அப்பாதுரை said...

அசலும் இப்படித்தான் நடந்திருக்குமோ?

ஜீவி said...

//(அவர் டாஸ்மாக் போயிருக்கார் என்றா சொல்ல முடியும்?) //

ஹி..ஹி..

//(நீங்களுமா...?)//

ஒரு பெரிய ஹி..ஹி..ஹி..

//'ம்...வேலை செய்கிறது..'

இன்னொரு பெரீய்ய ஹி.ஹி.ஹி.ஹி

--இப்படியே இந்த மூடிலேயே தொடர்ந்திருந்தால், வயிறு குலுங்கி இருந்திருக்குமே என்கிற வாய்ப்பிழைப்பை (வாய்ப்பு+இழப்பை.. சரி தானே.. எனக்கே என்னமோ சந்தேகமாக இருக்கு..) நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை..

பாண்டவருக்கு ஒரு அர்ஜூன், திரெளபதி,கிருஷ்ணனான மதுசூதனன் அட்சயப்பாத்திரம் என்கிற நினைவுக் களுக்கிடையில், சடாரென்று பறவைக் காய்ச்சல் சமாச்சாரம் சிறகுகள் படபடக்கப் புகுந்து கொண்டது பாருங்கள், சடார் மாற்றம்!

ஆயிரம் இருக்கட்டுமே, கட்டக் கடைசியில் அந்த டிராவல் பேக்களை நிறுத்தி வைச்சு சிம்பாலிக்கா அவங்க கிளம்பிட்டாங்கன்னு சொன்னதற்கே (ஒரு பெரிய, அதுக்கும் கொஞ்சம் சின்ன, அதுக்கும் கொஞ்ச சின்ன என்று) மூன்று புஸ்தகங்களைப் பரிசாக் கொடுத்திடணும்!

Geetha Sambasivam said...

லாஜிகலாப் பார்க்கலை இந்தக் கதையை. ஆனால் இப்போ சில பின்ன்னூட்டங்களைப் பார்த்ததும் தோணுது; டாஸ்மாக்கிலே சும்மாவா கொடுப்பாங்க? அதுக்குனு காசு இருக்கிறச்சே, சமையல் பொருட்கள் வாங்கி வைக்கக் காசு இல்லாம இப்படி ஒரேயடியாத் துடைச்சா வைப்பாங்க?? குறைந்த பக்ஷம் ஸ்வாமி உண்டியல் கூடவா இல்லை??

அப்பா, எனக்கு எத்தனை முறை சாமி உண்டியல் கை கொடுத்திருக்குனு எண்ணிப் பார்க்க முடியாது! அப்புறமா வட்டியோட(சாமி கேட்கலை தான்; ஆனாலும் மனசு உறுத்துமே அதுக்காக) போட்டாலும், அந்தச் சமயம் ஆபத்பாந்தவனா இருந்திருக்கு. :))))))))

சீனு said...

ஹா ஹா விருந்தினர்களைத் தொரத்தும் அக்சயப் பாதிரமா...... என்ன ஒரு ஐடியா

வெங்கட் நாகராஜ் said...

எப்படியெல்லாம் பீதியைக் கிளப்புறாங்கப்பா...

பறவைக்காய்ச்சலையும் மதுசூதனின் அட்சயப் பாத்திரத்தையும் சேர்த்து புனைந்த கதை நல்லாத்தான் இருக்கு....

Geetha Sambasivam said...

எங்கே ஸ்ரீராம்? ஆளையே காணோம்?? கேள்விகளைப் பார்த்துட்டு அடுத்த கதையைத் தொடரப் போறாரா? அல்லது ஜகா வாங்கப் போறாரா? யோசிக்கிறாரோ? :))))))))

எங்கள் ப்ளாக் said...

கீதா மேடம் 'என் (எங்கள்) கேள்விக்கென்ன பதில்' என்று பாடுவதால் 'ஆரமிச்சுடலாம் கச்சேரி'யை என்று ஆரம்பித்து விடுவோம்.... யார் பதில் சொன்னா என்ன...?

பறவைக் காய்ச்சல் இதற்கு உதவுவது சரிதான், ஆனால் வீடு தேடி வந்த உறவினர்களை இப்படி விரட்டலாமா என்று கேட்க மாட்டீர்களா ராமலக்ஷ்மி மேடம்....!!

நன்றி வைகோ சார்...

நன்றி middleclassmadhavi..

'வாந்திக் கதைகள்'ங்கற தலைப்புல இந்த ரெண்டு கதைகளையும் அடக்கி சாந்தி பண்ணிடலாமா ஹுஸைனம்மா...? ஏதோ அமைந்து விட்டது. அவ்வளவுதான். மற்றபடி இனி வாந்தி வராது!! நோ வொரீஸ்!

நன்றி ராஜராஜேஸ்வரி மேடம்!

நன்றி ரமணி சார்...

கீதா மேடம்... எங்கள் வீட்டு கல்யாணம் ஒன்றிலேயே நாங்கள் (பெண் வீட்டுக் காரர்கள்) சாப்பிடச் சென்றால் சமையல்காரர் 'இன்னும் சாப்பிலவில்லை நீங்கள்" என்று அதிர்ச்சியடைந்து தூக்கு வலைகளைத் தூக்கிக் கொண்டு பக்கத்து சத்திரங்களுக்குச் சென்று வந்தார்! இது எல்லோருக்கும் நேரக் கூடியதுதான். ஆனால் கல்யாணத்திலா...!

பயம் வேண்டாம் எம்கே.... இனி வாந்தி வராம, ஸாரி... வாந்திக் கதைகள் (உடனே) வராம நாங்க பார்த்துக்கறோம்...!

அந்த செல்லுல ரெண்டு மணி நேரம் முன்னாலேயே சொல்லியிருந்தால் வீட்டைப் போட்டிக் கொண்டு ஓடியிருக்கலாம் இல்லை? நல்ல ஐடியா மாதவன்....!

நன்றி குமார்.... நண்பர்களுக்கா பஞ்சம்... 'அழைப்பவர் குரலுக்கு வருவேன் என்றான்' என்று வந்து விடமாட்டார்களா என்ன!

நன்றி அப்பாதுரை...

ஜீவி சார்... நகைச்சுவைக் கதை மாதிரித் தொடங்கி ட்ராக் மாறி விட்டது என்கிறீர்களா....
//அதுக்கும் கொஞ்ச சின்ன என்று) மூன்று புஸ்தகங்களைப் பரிசாக் கொடுத்திடணும்!// எப்போ வாங்கிக்கலாம் சொல்லுங்க.... நாங்க ரெடி!

லாஜிக் எல்லாம் சிறுகதைல ரொம்பப் பார்க்கக் கூடாது கீதா மேடம்.... ஆனாலும் இருக்கற காசை எல்லாம் 'டாஸ்மாக்'குலத் தொலைக்கறவங்களைப் பார்த்ததில்லையா நீங்க? உண்டியல் இருந்தாள் அதுலேருந்தும் எடுத்துட்டுப் போய்க் காலி பண்ணிடுவாங்களே....!

நன்றி சீனு...

நன்றி வெங்கட் நாகராஜ்...

கீதா மேடம்...// கேள்விகளைப் பார்த்துட்டு அடுத்த கதையைத் தொடரப் போறாரா? //

அதெல்லாம் வரிசை கட்டி நிற்கின்றன. ஒவ்வொண்ணா வரும்!

Geetha Sambasivam said...

கீதா மேடம்... எங்கள் வீட்டு கல்யாணம் ஒன்றிலேயே நாங்கள் (பெண் வீட்டுக் காரர்கள்) சாப்பிடச் சென்றால் சமையல்காரர் 'இன்னும் சாப்பிலவில்லை நீங்கள்" என்று அதிர்ச்சியடைந்து தூக்கு வலைகளைத் தூக்கிக் கொண்டு பக்கத்து சத்திரங்களுக்குச் சென்று வந்தார்! இது எல்லோருக்கும் நேரக் கூடியதுதான். ஆனால் கல்யாணத்திலா...!//

அதை ஏன் கேட்கறீங்க? நெருங்கின சொந்தக்காரங்க கல்யாணம், நாங்களும் பெண் வீடுதான். தஞ்சாவூரிலே, கும்பகோணத்திலே கோயிலிலே கும்பாபிஷேஹம், அதை முடிச்சுட்டு வரோம், சாப்பாடு வைங்கனு சொல்லி இருந்தோம். போனால் பாத்திரங்கள் காலி! பாயசப் பாத்திரத்தில் அடியிலே கொஞ்சூண்டு இருந்ததைக் குடிச்சுட்டு வயித்தை ரொப்பினோம். இந்த அழகிலே டிரைவர் சாப்பிட்டு வரேன்னு போனவரை வேறே கல்யாணச் சாப்பாடு சாப்பிடுங்கனு உபசாரம் பண்ணிக் கூப்பிட்டுப் போனோம். :))))))))

மத்தியானம் காபி, டிபன் எப்போக் கொடுப்பாங்கனு ஆலாய்ப் பறக்க வேண்டியதாப் போச்சு! :))))

எ.பி. எக்கச்சக்கம். இம்பொசிஷன் கொடுக்க வேண்டியதுதான் இனிமேலே. :)))))

எங்கள் ப்ளாக் said...

//எ.பி. எக்கச்சக்கம். இம்பொசிஷன் கொடுக்க வேண்டியதுதான் இனிமேலே. :)))))//

தூக்கு வாளிகளை தூக்கு வாளிகளை தூக்கு வாளிகளை தூக்கு வாளிகளை தூக்கு வாளிகளை தூக்கு வாளிகளை தூக்கு வாளிகளை தூக்கு வாளிகளை தூக்கு வாளிகளை தூக்கு வாளிகளை

உண்டியல் இருந்தால் உண்டியல் இருந்தால் உண்டியல் இருந்தால் உண்டியல் இருந்தால் உண்டியல் இருந்தால் உண்டியல் இருந்தால் உண்டியல் இருந்தால் உண்டியல் இருந்தால் உண்டியல் இருந்தால்

ஹி...ஹி.....

எங்கள் ப்ளாக் said...

// Madhavan Srinivasagopalan said...
// 'செல்' அடிக்கவும் எடுத்துப் பேசியவள் முகம் மலர்ந்தது. .//

அதே செல்லுல ஒரு ரெண்டு வேணாம்.. வேணாம்.. ஒரு மணி நேரத்துக்கு முன்னால 'டின்னர் சாப்பிட' வர்றோம் நாலு பேரு (தாத்தா)னு சொல்லு இருந்தா.. பீதி கெளம்பாம இருந்திருக்குமில்ல..//

மாதவன்! செல்லுல அர்ஜுன் வீட்டுக்கு அலை பேசியவர் மதுசூதனன். வந்திருந்த தாத்தாக்கள், நண்பர்கள் அந்தக் காலத்து ஆட்கள். அவர்களுக்கு செல் என்று ஒன்று இருப்பது தெரியும். ஆனால் அதை கையாளத் தெரியாது! அவர்கள் மதுசூதனிடத்தில் சொல்லி, அர்ஜுன் வீட்டுப் பக்கம் கூட வருவதற்கு பயந்து, அவர்களின் பைகளை கொண்டுவந்து தரும்படி சொன்னார்கள்! ஆகவே, அவர்களால் சாப்பிட வரும் விஷயத்தை முன் கூட்டியே சொல்ல இயலவில்லை!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!