புதன், 4 ஜூலை, 2012

அலுவலக அனுபவங்கள் 06:: சார் தந்தி!

                 

(ஆரம்ப எண்பதுகளில் நடந்த ஒரு சம்பவம். சொன்னவர், சம்பவ மாந்தர்கள் பெயர்கள் மட்டும் மாற்றப் பட்டு....!)  
      

கையெழுத்திட்டு வாங்கி, தந்தியைப் பிரித்துப் பார்த்ததும் மனம் பதறியது. 
                    
Wife expired. Start immediately.
    
தந்தி வந்தது எனக்கல்ல. என் நண்பன், பக்கத்து சீட் குமாருக்கு. அவன் மனைவி பிரசவத்துக்காகத் தன் பிறந்த வீட்டுக்குப் போயிருக்கிறாள். இன்று வியாழக் கிழமை. நாளை மாலைக் கிளம்பி ஊர் சென்று மனைவியைப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தான் குமார். இப்போது சம்பள பில்லுடன் டிரஷரி போயிருக்கிறான். அவனிடம் எப்படிச் சொல்வது?
                   
அவனே இருந்து, தந்தியை வாங்கியிருந்தால் இப்போது நான் சொல்ல வேண்டிய தர்மசங்கடம் வந்திருக்காதே... ஆனால் அதுவும் நல்லதுக்குத்தான். அவனிடம் மெதுவாகச் சொல்ல வேண்டும். 
                   
"திருப்பதி....இங்க வா.." எதிர் சீட் ஜூனியர் அசிஸ்டன்ட் திருப்பதியைக் கூப்பிட்டேன். தந்தியைக் காட்டினேன். பதறிப் போனான். 
            
"என்ன சார் செய்யறது.... அடப் பாவி... துடிச்சிப் போவானே..."
                 
என்ன செய்வது என்று கலந்து பேசினோம். அவனிடம் சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்தோம். திருப்பதியிடம் ஆயிரம் ரூபாயைக் கையில் கொடுத்தேன். "நீயும் அவன் கூடக் கிளம்பிப் போ.... இங்கேருந்து ஒண்ணும் சொல்லாம அழைச்சிகிட்டுப் போ... வழியில சந்தர்ப்பம் பார்த்துச் சொல்லு... பத்திரம். மெல்ல அவனை அதுக்குத் தயார் படுத்தணும்.."
            
இரண்டு மணிக்குமேல் டிரஷரியிலிருந்து திரும்பினான் குமார். தண்ணீர்க் கேனிலிருந்து தண்ணீரைப் பிடித்துக் குடித்தான். 
             
பில் சப்மிட் செய்த விவரம் சொல்லி டோக்கன்களை ஏ ஓ விடம் தந்து திரும்பும்வரை திருப்பதி காத்திருந்தான். அப்புறம் அவனை அழைத்துக் கொண்டு மெல்ல வெளியில் சென்றான்.
             
சற்று நேரம் கழித்து இருவரும் பையோடு வந்தார்கள். 
            
குமார்.  "சார்... திருப்பதி சார் ஊருக்குக் கூப்பிடறார். எங்கள் லீவு லெட்டர் இதோ இருக்கு... போயிட்டு வந்துடறோம்.... என்னன்னு கேட்டா ஒண்ணும் சொல்லாம 'எனக்காகக் கிளம்பு'ன்னு மட்டும் சொல்றார். என்ன பிரச்னை அவருக்கு? உங்களுக்கு ஏதும் தெரியுமா சார்?"
               
என்ன சொல்ல....! 
              
"சரியாத் தெரியலை.... போற வழியில கேட்டுக்கோ.." திருப்பதி கையை அசைத்து விட்டு அவனுடன் கிளம்பினான். என் மனம் ரொம்பக் கஷ்டப் பட்டது. குமார் எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறான் இந்தச் செய்தியை? திருமணமாகி இரண்டு வருடம் இருக்குமா....? பாவம் இப்போதுதான் குழந்தை வரம் கிடைத்து ஊர் சென்றிருந்தாள் அவன் மனைவி.
              
மனம் வேறு எந்த வேலையிலும் நாட்டம் கொள்ளாமல் தவிப்பாக இருந்தது. சாயந்திரம் வீட்டுக்கு வந்தும் எதையோ பறிகொடுத்தவன் போல உர்கார்ந்திருந்ததைப் பார்த்து மனைவியும் பெண்ணும் விவரம் கேட்க, சொன்னேன். 
                  
அவர்களும் ரொம்ப விசனப் பட்டார்கள்.
               
ஃபோன்  அடித்தது. எடுக்கக் கை அவசரப் பட்ட அளவு மனம் பேசத் தயாராகவில்லை. 
திருப்பதிதான். 
பொதுத் தொலைபேசியிலிருந்து பேசினான். 
                 

"சார்... வீட்டுக்கு வந்துட்டீங்களா..."

                  
"வந்துட்டேன் திருப்பதி... எங்கே இருக்கீங்க..."
                       
"பழனி பஸ் ஸ்டாண்டுல இருக்கோம் சார்.... அவனைக் கோயம்புத்தூர் பஸ்சுல ஏத்தி விட்டுட்டேன்."
                 
"சொல்லிட்டீங்களா... ரொம்ப அழுதானா..?" 
                        
"சொல்லிட்டேன் சார்.... கோயம்புத்தூர் பஸ்சுல ஏத்தி விட்டதும் 'அட, எங்க ஊர் பஸ்' என்றான். 'மனசைத் தேத்திக்கோடா... நீதான் ஊருக்குப் போறே' என்றேன். 'தந்தி வந்துருக்கு' என்றேன். 


'அட, வந்துடுச்சா... டெத் நியூஸ்தானே... செத்துப் போயாச்சா... எதிர்பார்த்ததுதான் இப்படிக் கஷ்டப் படறதுக்கு போயிடலாம்னுதான் நெனச்சோம்....னானே பார்க்கணும்....! எதாவது கிறுக்குப் பிடிச்சுடுச்சானு பார்த்தா ........ 


செத்துப் போனது அவன் மாமியாராம். ரொம்ப நாளா படுத்த படுக்கையா இருந்தாங்களாம்... தந்தி கொடுத்துருக்கற அவன் மாமனார் அவ்வளவு லட்சணமா தந்தி கொடுத்துருக்கார்... போங்க சார்... வெறுத்துடுச்சு.... ஐநூறு ரூபாயை வாங்கிட்டுப் போயிட்டான்... மிச்ச ஐநூறு இருக்கு.. என்ன சார் செய்ய...?"
                       
"அடச்சே.... பக்கத்துல 'கடை'  இருக்கா.... உள்ள போய் ஃபுல்லா அடிச்சுட்டு வீட்டுக்குப் போய்ப் படு..." 
                       
அலுப்புடன் ஃபோனை அதன் இடத்தில் வைத்தேன்.
                      

12 கருத்துகள்:

  1. தந்தி அனுப்பிச்சீங்களா, உடனே வந்துடுத்து. வி.வி.சி.

    பதிலளிநீக்கு
  2. ஏதோ ஒரு "க்" வைச்சிருக்கீங்கனு தலைப்பிலேயே புரிஞ்சது. :)))))

    பதிலளிநீக்கு
  3. அது ஏன் அலுப்பு? சந்தோஷம் இல்லை வந்திருக்கணும்??????????????

    பதிலளிநீக்கு
  4. சீரியஸா படிக்க ஆரம்பிச்சு சிரிப்போடு படிச்சு முடிச்சேன்

    பதிலளிநீக்கு
  5. படிக்க ஆரம்பித்ததுமே நினைச்சேன்.

    செத்துப்போனது யாராக இருந்தாலுமே வருத்தம் தான்.

    யாரோ ஒருவர் செத்துப்போய் விட்டதாக இவர்களாகவே நினைத்துக் கொண்டு விட்டதால், கதையில் சற்றே விறுவிறுப்ப்ம், படபடப்பும் ..... படிப்பவர்களுக்கும் கூட.

    கடைசியில் குழப்பமான தந்தியால், செத்தவர் வேறு ஒருவர், சற்றே வயதானவர், என்பதிலும் ஒரு சலிப்பு இவர்களுக்குள்....

    ஒரே சிரிப்பு தான்.

    அந்தக்காலத்தில் தந்தி வந்தாலே எல்லோரும் பதறிப் போவார்கள்.

    இதுபோல MISUNDERSTANDING களும் அடிக்கடி நிக்ழ்வதுண்டு தான்.

    வேடிக்கையான பதிவுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  6. கவனக்குறைவால் ஏற்பட்டக் கலவரம்:)!
    மறைந்தவர் ஆத்மா சாந்தியடையட்டும்.

    தலைப்பும் பகிர்வும் அருமை.

    பதிலளிநீக்கு
  7. தந்தி வந்தாலே அழும் சிலரைப் பார்த்திருக்கிறேன். தந்தியைப் பிரித்துப் படிக்குமுன்னரே அழ ஆரம்பித்து விடுவார்கள்....

    தலைப்பும் கதையும் அருமை.

    பதிலளிநீக்கு
  8. அந்தக்காலத்துல தந்தின்னா,. இந்தக்காலத்துல அகால நேரத்துல அடிக்கும் டெலிபோன் மணி... கலவரத்தை உண்டு பண்ணுது.

    ஜூப்பர் க்ளைமாக்ஸ் போங்க.. :-)))

    பதிலளிநீக்கு
  9. It was a convention to use 'ing' if the person sending the telegram says abt. himself.

    Suppose the sender is in Madurai, and the receiver is in Bangalore.. and the message is

    (1) "Reaching chennai, tomorrow" -- means the sender will reach chennai the next day.

    (2) "Reach chennai tomorrow" means, the sender asks the receiver to be in chennai the next day.


    BTW the is 'telegram' system still exist ?

    பதிலளிநீக்கு
  10. அத்தனை லட்சணமா தந்தி கொடுத்துருக்கார்..
    ரொம்ப விவரமானவர் ...
    சிக்கனவாதி போல் !

    பதிலளிநீக்கு
  11. குரோம்பேட்டை குறும்பன்5 ஜூலை, 2012 அன்று PM 5:57

    மாதவன் சொன்ன முறையில், குமாரின் மாமனார் தந்தி அடித்திருந்தால்,
    "My wife is expiring; Start immediately" என்று இருந்திருக்குமோ? டவுட்டு#

    பதிலளிநீக்கு
  12. // My wife is expiring; //

    'ing' is used only if the action maker is oneself.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!