புதன், 25 ஜூலை, 2012

ராம ஜோசியம்

            
'ராம ஜோசியம், சீதா சாஸ்த்திரம் ' 'டொய்ங்....டொய்ங் ..' என்று ஒற்றைத் தந்தி தம்புராவை மீட்டிக் கொண்டு நெற்றியில் ஒரு குங்குமப் பொட்டுடன, தோளில் ஒரு ஜோல்னாப் பையுடன், யாரும் கூப்பிடும் முன் நிற்காது தானுண்டு தன் நடையுண்டு என்று போகிற பைராகிகளை அந்தக் காலத்தில் வீதிகளில் நிறையவே காணலாம்.

http://www.sanatansociety.org/india_travels_and_festivals/images/12a_jpg.jpg
    
தெருக் கோடியில் நின்று எல்லோர் வீட்டையும் பற்றி யாரிடாமாவது கேட்டுத் தெரிந்து கொண்டுதான் வருவார்களா அல்லது நம் முகத்தைப் பார்த்தவுடனேயே இதெல்லாம் சொல்லலாம் என்று சொல்வார்களோ தெரியாது, ஆனால் சொல்லப் படுபவை நமக்கு நன்கு பொருந்தி வரும்.அல்லது அப்படித் தோன்றும் படியாக வார்த்தைகள் அமைந்திருக்கும். 
             
உதாரணமாக எங்கள் வீட்டு முன் சற்றே தயங்கி நடந்து போன ஒரு தம்புராக் காரரைப் பார்த்து விட்டு "டேய், அவரைக் கூப்பிடுடா" என்று அம்மா சொன்னவுடன் நான் கூப்பிடும் முன்னரே அவர் வந்து திண்ணையில் உட்கார்ந்து கொண்டு 'ஒரு டம்ப்ளர் தண்ணீர்  கொடுக்கறீங்களா ?' என்றார்.  நான் தண்ணீர் [அப்பொழுதெல்லாம் கிணற்றுத் தண்ணீரை அப்படியே வடிகட்ட வேண்டிய அவசியம் கூட இல்லாமல் குடிக்க முடிந்ததற்கு காரணம் நம்முடைய அறியாமையா அல்லது தண்ணீரின் மாசற்ற தன்மையா என்று நான் அடிக்கடி கேட்டுக் கொள்வதுண்டு ] எடுத்துக் கொண்டு வரும் பொழுது 
             
"ஏம்மா, உன்னை ஒரு கவலை அரிக்கிறது இல்லையா ? " என்று கேட்டுக் கொண்டே அம்மாவின் முகத்தை ஏறிட்டார்.  "கவலை என்ன ஒன்றா இரண்டா" என்று அலுத்துக் கொண்ட அம்மாவிடம் 'ஒரு குழந்தையைப் பற்றிய கவலை ...' என்றார்.  
    
"உண்டுதான்" என்ற அம்மாவிடம், 'ராமர் என்ன சொல்றாருன்னு பார்ப்போமா ?' என்று அவர் கேட்டதற்கு அம்மா பதில் கூறும் முன்னரே நான், பக்கத்து வீட்டு தண்டு, ஸ்ரீனிவாசன், பிருந்தா, எல்லோருமாக ' ஒ, பார்ப்போமே ' என்று ஒரே கோரசாகக் கத்த, அவர் உள்ளே வந்து, தாழ்வாரத்தில் தன்னுடைய குடை, பை, தம்புரா எல்லாவற்றையும் மூன்று திசைகளிலும் எல்லையாக வைத்துப் பின் நடுவில் இருந்த காலியிடத்தில் வைக்க ஒரு மனைப் பலகை கேட்டார்.   
       
அதற்குள் முன் போர்ஷனில் குடி இருந்த உபாத்தியாயர் பாலசுப்ரமணியம், இவர்களை எல்லாம் உள்ளே விடுவதே தப்பு என்று சொல்லி கதவைச் சார்த்திக் கொண்டாலும், சற்றே திறந்து வைத்து, இடுக்கில் ஒரு கண் வைத்துப் பார்த்துக் கொண்டிருக்க, அவர் மனைவி, பெண், பையன்கள் - ஜெயராம் - சின்னவன் பெயர் என்ன ? கிருஷ்ணாவா, இல்லை, நாராயணன்! அவன் - இப்படி கூட்டம் கூடியதில் அப்பா வந்ததையே யாரும் கவனிக்கவில்லை. 

http://www.sanatansociety.org/india_travels_and_festivals/images_babas/saints_babas_saddhus2_jpg.jpg
               
'என்ன கூட்டம் இங்கே ?' என்று கேட்டுக் கொண்டே வந்தவர், 'அட, நானும் ஒரு நாளாவது இவரைக் கூப்பிட்டு என்னதான் சொல்றார்னு பார்க்கணும்னு இருந்தேன் ' என்றவாறு ஒரு மனைப் பலகையை எடுத்துப் போட்டுக் கொண்டு உட்கார,
                
தாடிக்காரர் சட்டென்று 'உங்களுக்கு வெளியூரில்  உள்ள பிள்ளையை விட உள்ளூரில் இருக்கும் பிள்ளை பற்றி தான் கவலை' என்று ஆரம்பிக்க அம்மா, அப்பா, நான் எல்லோரும் எங்களை அறியாமல் தலையை ஆட்ட
நடுவில் இருந்த மனைப் பலகையின் மேல் ஒரு நாலு வெற்றிலை, பாக்கு எல்லாம் வைத்து விட்டு 'ஒரு வராகன், ஒரு வராகன்' என்று கேட்டு ஒரு வெள்ளி ரூபாயை அதன் மேல் வைத்து விட்டு,

               
ஒரு கிண்ணத்தில் இருந்த தண்ணீரில் ஒரு கல்பூரத்தைக் கொளுத்திப் போட, அது எரிந்துகொண்டே மிதந்தது.  கையில் கொஞ்சம் விபூதியை எடுத்துக் கொண்டு ஏதேதோ உச்சாடனங்களுடன் கிண்ணத்தில் இருந்த தண்ணீரில் போட, கல்பூரம் சுற்றி சுற்றி வர ஆரம்பித்தது. 
                     
இப்பொழுது அப்பாவைப் பார்த்து 'உன் பிள்ளைக்கு உடம்பு சரியாக வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்' என்றார்  எதுவும் நடக்கவில்லை - கற்பூரம் கூட அசைவதை நிறுத்திக் கொண்டது. ' இன்னும் கொஞ்சம் உண்மையாக, நான் அதற்கு என்ன பரிகாரம் வேண்டுமானாலும் செய்வேன்' என்று சொல்லி வேண்டிக்கொள்'  என்றதும் மற்றொரு முறை வேண்டுவதற்கு முன் 'பரிகாரம்னா என்ன பண்ணணும்?' என்று அப்பா கேட்க, "சரியான முன் ஜாக்கிரதை முனுசாமி " என்று சொல்லாவிட்டாலும், அந்த பாவனையுடன் 'ஒரு நூறு பேருக்கு சாப்பாடு போட வேண்டும்' 
                   
'நூறு பேருக்கு சாப்பாடு போடுவதானால் அதற்கு எவ்வளவு செலவு ஆகும்' என்று அப்பா திரும்பிக் கேட்க, 'அதி அந்தாம் அதிகம் லேது சுவாமி - ஒக மூடு வரஹால்லே அவுதுன்னாய் '  இருநூறு ரூபாய் பக்கம் ஆகலாம்' என்றதும் இரண்டு மாத சம்பளத்துக்கு சமானமாயிற்றே என்று யோசித்தாலும் "சரி, செய்கிறேன்" என்று சொல்லி விட்டு வருடா வருடம் நவம்பர்  பத்தொன்பதில் இப்பொழுது வரும் சாலிடாரிட்டி வாக்கு மாதிரி மீண்டும் ஒரு முறை தன் இஷ்ட தெய்வங்களை எல்லாம்  வேண்டிக் கொண்டு 'நான் கேட்டது எல்லாம் நடக்கும் என்றால் என் அருகில் வா!' என்று கூப்பிட,
                 
மனை  மேல் இருந்த வெற்றிலை பாக்கு, ஒரு ரூபாய் எல்லாமாக  ஒரு மூன்றங்குலம்  இடம் பெயர்ந்தன. 'நடக்கும் என்று அந்த வெங்கடாசலபதியே சொல்லி விட்டார். என் தக்ஷிணை மூன்று வராஹன் கொடு' என்று தாடிக்காரர் ஆரம்பிக்க, 'இதென்னடா புது ரோதனை! நடந்தால் மூன்று வராஹன் தருவியா என்னும் பொழுதே எது நடந்தால் என்று கேட்டிருக்க வேண்டும்  இப்படி வெற்றிலை பாக்கு நடந்ததற்கெல்லாம் மூன்று வராஹன் தந்தால் நான் என்ன ஆவது' என்று அப்பா எடுத்துரைக்க [ஏன், கொஞ்சம் இடித்தே உரைத்தார் கூட !] 
                     
"நெனன்நானு  - ஆ சமாசாரம் ஜரிஹிதே மீறு நாக்கு மூடு வராஹாலுலு ஈவலனி.  இப்புடு ஜரிஹிந்தானிக்கி வெனக மீறு இலா செப்படம் சரி லேது " என்று கையை ஆட்டிப் பேச அப்பா, "ஒய் ராம ஜோசியம், நீங்க என்ன சொன்னாலும் என் கிட்ட இருப்பது பத்து ரூபாய் தான். அதை வேணா தருகிறேன் "  என்று புத்தம் புதிதான இரண்டு ஐந்து ரூபாய் நோட்டுகளை எடுத்து வைக்க, 





தாடிக்காரர் சட்டென்று அதை எடுத்துக் கொண்டு தெலுங்கும் இல்லாத ஒரு புரியாத மொழியில் ஒரு சாபம் தான் கொடுத்திருக்க வேண்டும்  பின்னே வெங்கடாசலபதியே போட்ட உத்தரவு செல்லாமல் போனதற்கு யார் காரணம் ? தம்பி செத்துப் போகும் வரை அவனுக்கு உடம்பு குணமாகவில்லை ! 

படங்கள் உதவி : நன்றி இணையம்
 
                  

8 கருத்துகள்:

  1. //தம்பி செத்துப் போகும் வரை அவனுக்கு உடம்பு குணமாகவில்லை ! //
    கடைசியிலே ரொம்பவே வருத்தமாப் போச்சு! :(

    பதிலளிநீக்கு
  2. ஆனால் இம்மாதிரித் தெருவோடு போகிறவர்களை அழைக்கும் வழக்கம் எங்க வீட்டிலே(பிறந்த வீட்டிலே) கிடையாது. எல்லாம் அவன் செயல்; அவன் பார்த்துப்பான் என்று சொல்லிவிடுவார்கள். அதோடு திருப்பதி வெங்கடாசலபதியை நினைத்து விபூதி(ஆமாம், விபூதியே தான்) இட்டு விடுவார்கள். அம்மா சொப்பனத்தில் தன் மாமனார் வந்து விபூதி இடணும்னு வேண்டிப்பா. எங்க தாத்தா ஒரு தேர்ந்த வைத்தியர்; அவர் வந்து மந்திரிச்சு விபூதி இடுகிறாப்போல் சொப்பனம் வந்தால் எங்களுக்கெல்லாம் உடம்பு சரியாயிடும்னு அம்மாவுக்கு ஒரு நம்பிக்கை.

    பதிலளிநீக்கு
  3. ஆனால் மாமியார் வீட்டில் நேர் எதிரிடையாகத் தெருவில் போகும் கிளி ஜோசியத்திலிருந்து, குடுகுடுப்பையிடமிருந்து எல்லாரிடமும் ஜோசியம் கேட்பார்கள். இம்மாதிரிப் பலர் பல முறை ஏமாற்றி இருக்கின்றனர். என்றாலும் அடுத்த முறை இதை மறந்துவிட்டு மீண்டும் போவார்கள். குறி கேட்பதும் உண்டு. ஒருத்தர் பொள்ளாச்சி மஹாலிங்கத்திற்கு உறவு; அவர் கிட்டே சொல்லி உங்க பையனுக்கு வேலை வாங்கித் தரேன்; பெண் கல்யாணத்துக்குப் பணம் வாங்கித் தரேன்னு சொல்லிக் கொண்டு கிராமத்தில் மாமனார் வீட்டில் தன் பரிவாரங்களோடு மூன்று நாள் தங்கி ராஜ உபசாரங்களோடு, எண்ணெயில் போட்டு ஜோசியம் பார்க்கணும்னு என் மாமியாரின் கெம்புக்கல் மூக்குத்தியையும் கேட்டு வாங்கிக் கொண்டு, பேச்சு வாக்கில் சத்தம்போடாமல் அதையும் சில, பலசின்னச் சின்ன வெள்ளி ஐடம்களையும் சுருட்டிண்டு போனார்.

    பதிலளிநீக்கு
  4. கடைசி வரை அவரை எதிர்த்தது நான் ஒருத்தியே. அதனால் தானோ என்னமோ என் ஜாதகத்தைப் பார்த்துட்டு ரொம்ப மோசமான ஜாதகம், உங்க பிள்ளைக்குப் பொருந்தாத ஜாதகம்; பிள்ளை ரொம்பக் கஷ்டப்படுவார்னு எல்லாம் சொல்லி பயமுறுத்திட்டுப் போனார். :))))) அதை நாங்க இரண்டு பேரும் நம்பலைங்கறது வேறே விஷயம். ஆனால் உண்மையான ஜோசியர் என்றால் பேசும்போது நன்கு புரிந்துவிடும்.

    பதிலளிநீக்கு
  5. உங்களது பதிவுகளை அழஹி.காம் என்னும் பதிவர் தளத்தில் பதிவு செய்து மற்றும் உங்களது நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள் Azhahi.Com

    இப்படிக்கு
    Azhahi.Com

    பதிலளிநீக்கு
  6. இன்னும் இதையெல்லாம் நம்பவும் நம்பவைக்கவும் ஆட்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.ஒன்றும் செய்ய முடியாது !

    பதிலளிநீக்கு
  7. படிச்சுட்டே வரும்போது கடைசியில் கஷ்டமாப்போச்சு.

    எத்தைத்தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கறவங்க இப்படிப்பட்ட ஆட்களிடம் ஜோசியம் கேட்பது சகஜம்தானே

    பதிலளிநீக்கு
  8. ஒரு வித ஸ்வாரசியத்தோடு படித்துக் கொண்டே வந்தேன். கடைசி வரிகள் படித்ததும் மனதில் வருத்தம் வந்து உட்கார்ந்து கொண்டுவிட்டதே...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!