சனி, 22 செப்டம்பர், 2012

பாசிட்டிவ் செய்திகள் இந்த வாரம் 16/09 To 22/09/12


திண்டுக்கல் மேட்டுப் பட்டியைச் சேர்ந்த மிக்கேல்-சந்தியாகு அம்மாள் புதல்வர் நீதியரசர் எம் லியோ இத்தாலி வாடிகன் கத்தோலிக்கத் திருச்சபை உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக இருக்கிறார். பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். நல்லாசிரியர் விருது பெற்ற தந்தை. விடுமுறையில் தமிழகம் வந்திருக்கும் இவர் பற்றி தினமணி கட்டுரை வெளியிட்டிருக்கிறது.

=============================


சாலையில் அடிபட்டுக் கிடப்பவரையோ மயங்கிக் கிடப்பவரையோ பார்த்துக் கடந்து செல்லும் எண்ணிறந்த நபர்களில் நானும் ஒருவன்தான். அப்படிச் செல்லாத, உடனே அவர்களைத் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்து, அப்புறமும் ஆன உதவிகள் செய்து இன்னும் பல உதவிகள் செய்யும் உன்னத மனிதர் ஆனைக்குட்டி ஆனந்தன். மிக ஆரம்ப காலங்களில் பிறருக்கு உதவ வேண்டும் என்பதாலேயே மிகக் குறைந்த விலையில் சாலையோர டிபன் கடை வைத்தவராம் இவர்.1977 ல் இவர் ஒட்டிய ஆட்டோவின் பின்புறத்தில் இவரால் எழுதப் பட்ட 'பிரசவத்துக்கு இலவசம்' தான் அநேகமாக அந்தவகை இலவசங்களுக்கு முதலாம். இவரைப் பற்றியும் தினமணியில்...

========================== 

 
ஒரு ரூபாய்க் கூடக் கட்டணம் வாங்காமல், அதே சமயம் மாணவர்கள் ஒவ்வொருவர் பெயரிலும் ஒவ்வொரு லட்சம் இன்சுரன்ஸ் வங்கியில் போட்டும் ஆங்கில வழிக் கல்வியை போதிக்கும் பள்ளி. தமிழகத்திலேயே முதல் முறையாக சூரிய ஒளியில் மின்சாரம் பெற்று இயங்கும் பள்ளி. இத்தனை பெருமையும் பெற்றுள்ள பள்ளி திருவண்ணாமலை வேடப்பநூர் கிராமத்தில் உள்ள 'அருணாச்சலா வில்லேஜ் ஸ்கூல்'.  (முகப்புத்தகத்திலிருந்து)

=======================


கேரளாவில் பள்ளியில் பயிலும் குழந்தைகளை வைத்துத் தொடங்கப்பட்ட 'ஸ்டூடன்ட் போலீஸ் கேடட் ஆப் கேரளா' ஆரம்பத்தில் 120 மாணவர்களுடன் தொடங்கப்பட்டு இப்போது 16,000 மாணவர்களை வைத்து நடத்தப் படுகிறது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது, வனப் பாதுகாப்பு, விழாக்காலங்களில் பொது மக்கள் பாதுகாப்பு என்று வெற்றிகரமாக நடத்தப் படும் இத்திட்டத்தில் மாணவர்களுக்கு தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், உடற்பயிற்சி, கராத்தே, குங்க்ஃபூ , வாள் சண்டை, கலரி, வர்மக் கலை, யோகா என்று சகலமும் கற்றுக் கொடுக்கப் பட்டு மாணவர்களுக்கும் தன்னம்பிக்கை அளிக்கிறது. தமிழ்நாட்டிலும் பின்பற்றக் கூடிய நல்லதொரு திட்டம். (ஆனந்த விகடன்)

=============================


8695959595 ....... சென்னைக்குப் புதிதாக வரும் பலருக்கும் அவர்கள் போக வேண்டிய இடத்துக்கு இடங்களுக்குப் போகும் வழியைக் கூறும் நம்பர். பெயர் 'ரூட்ஸ்'. சென்னையில் எங்கு போக வேண்டுமானாலும் ரூட் இந்த நம்பரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். (ஆனந்த விகடன்)

===========================


சென்னைப் பல்கலைக் கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறைத் தலைவர் பேராசிரியர் இராம மணிவண்ணன். வேலூரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் கணியம்பாடிக்கு அருகில் குரும்பப்பாளையம் என்ற கிராமத்தில் அமைதிப் பூங்கா என்ற பெயரில் ஆரம்பப் பள்ளி அமைத்து, யாரிடமும் எந்தக் கட்டணமும் வாங்காமல், மத்திய உணவு, பாடப் புத்தகம் எல்லாம் இலவசமாகத் தந்து படிக்க வைக்கிறார். எல்லாச் செலவையும் தன் சொந்த சம்பாத்தியத்திலேயே நடத்தும் இவரைப் பற்றி விளக்கமாக பேட்டி கண்டு எழுதி இருக்கிறது விகடன்.

==============================
======

மூணாறில் முப்பதடி ஆழம் கொண்ட, சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றில் விழுந்து அழுத மகனின் குரல் கேட்டுத் தவித்த சிறுவனின் தாய் சுஜா நீச்சல் தெரியாவிடினும் துணிச்சலாகக் கிணற்றில் குதித்து மகனை மீட்டு, அங்கிருந்த குழாயைப் பிடித்துப் போராட, ஊர் மக்கள் அவர்களை மீட்டனர்.

==========


வேலூர் 'உதவும் உள்ளங்கள்' தொண்டு அமைப்பு,  தெருவில் சுற்றிக்கொண்டிருந்த மனநலம் பாதிக்கப் பட்ட ஒருவரை மீட்டு சிகிச்சை அளிக்க, மெல்ல நினைவு திரும்பிய அவர் 26 ஆண்டுகளுக்கு முன் மன நிலை பாதிக்கப் பட்டு வீட்டை விட்டு வெளியேறிய நினைவுகள் வந்து, தன்னைப் பற்றிய விவரங்களைச் சொல்ல,  அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப் படார். பெயர் ஹிரேமட். அவர் ஒரு ஹோமியோபதி மருத்துவராம்.


====================

 

13 கருத்துகள்:

  1. ஆஹா... எங்கள் ஊரில் ஆரம்பித்து (வீட்டில் இருந்து நடக்கும் தூரம்) அனைத்தும் + செய்திகள்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  2. ரூட்ஸ் பற்றி எழுத நானும் குறிச்சு வச்சிருக்கேன்

    பதிலளிநீக்கு
  3. பாராட்டுக்குரிய அமைப்புகள், மனிதர்களைப் பற்றிய பகிர்வு. மனதுக்கு நிறைவு.

    கடைசி செய்தியில், 26 ஆண்டுகள் கழித்து நினைவு திரும்பியது ஆச்சரியமானது.

    மொத்தத்தில் வாழ்க ‘உதவும் உள்ளங்கள்’!

    பதிலளிநீக்கு
  4. // அங்கிருந்த குழாயைப் பிடித்துப் போராட, ஊர் மக்கள் அவர்களை மீட்டனர். // படிக்கவே நெஞ்சு பதைபதைகிறது... அம்மாவின் பாசம் எப்போதுமே உயர்ந்தது தானே...

    பாசிடிவ் செய்திகள் தொடருங்கள் சார்

    பதிலளிநீக்கு
  5. அருமையான செய்திகள்..

    ஆனைக்குட்டி ஆனந்தன் போற்றப்பட வேண்டியவர்.

    பதிலளிநீக்கு
  6. திருவண்ணாமலையில் ஒரு பள்ளிக்கு போயிருந்தேன் - இதுவாக இருக்கலாம் (எல்லாமே அருணாசலம் அல்லது அண்ணாமலை என்று வருவதால் பெயர் வித்தியாசம் புரியவில்லை). வசதிகளைப் பார்த்து அசந்து போனேன். ஆசிரியர்கள் ஆங்கிலம் பேசும் போது மட்டும் கொஞ்சம் சங்கடமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  7. முதல் குறிப்பில் பாசிடிவ் என்ன இருக்கிறது புரியவில்லையே?

    பதிலளிநீக்கு
  8. உதவும் உள்ளங்களே உயர்ந்த உள்ளங்கள். நிறைவை தரும் பதிவு.

    பதிலளிநீக்கு
  9. இத்தனை நல்ல செய்திகளா.பூங்கொத்தாக
    மலர்கின்றது.

    பதிலளிநீக்கு
  10. all are new and good ones especially routes. while typing no power. It follows me wherever I go!:))))

    பதிலளிநீக்கு
  11. இன்றைய காலத்திலும் உதவும் உள்ளங்கள் மிகச் சிறப்பு !

    பதிலளிநீக்கு
  12. படித்து ரசித்து கருத்துரைத்து ஆதரவளித்து உற்சாகமளித்த அனைவருக்கும் எங்கள் நன்றி!!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!