வியாழன், 1 நவம்பர், 2012

இதுவும்......

   
நாற்பது கிலோமீட்டர் வேகத்தில் வண்டி ஒட்டிக் கொண்டிருந்தேன்.
    
சாலை மெதுவாக பின்னோக்கி விரைந்து கொண்டிருந்தது. யாருமற்ற நீண்ட சாலையில் செல்வது தனி அனுபவம். மனதில் என்னென்னவோ தத்துவார்த்த சிந்தனைகளும், பிடித்த பாடல்களும், படித்ததில் பிடித்த வரிகளும் ஓடும்!

நீங்கள் இந்த மாதிரித் தனிமைச் சாலையின் பயணத்தை எப்போதாவது ரசித்ததுண்டா?

சாலையின் இருபுறங்களும் அழகாக நிழல் தரும் மரங்கள் சீரான இடைவெளியில் நடப்பட்டு அந்தச் சாலையில் வண்டி ஓட்டுவதே மிக ரம்மியமாக இருந்தது.

மாலையின் இளங்காற்றும், மிதமான வெளிச்சமும் மேலும் ரம்மியமான சூழ்நிலையைக் கொடுத்தன. 

கிஷோர் குமார்க் குரலில் 'ராஹோன்மே ரெஹத்தே ஹை ..' என்றோ 'ஏக் ராஸ்தா ஹை ஜிந்தகி' என்றோ பாடத் தோன்றியது.  முன்னால் சென்ற ஓரிரு லாரிகளும், கார்களும் கண்ணிலிருந்து மறைந்து விட, நீண்ட சாலை சிறிய வளைவுகளுடன் வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லுவது போலத் தோன்றியது.
 

சற்று வண்டியை நிறுத்தி, சாலையோரம் இருந்த மரத்தினடியில் கொஞ்ச நேரம் அமர்ந்து, இயற்கையை ரசிக்கும் எண்ணத்தைக் கைவிட்டு, அல்லது ஒத்திப் போட்டு, தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். 

"சாலையோரம் சோலையொன்று ஆடும்... சங்கீதம் பாடும்.." வாய் முணுமுணுத்தது. 

பின்னால் சத்தம் கேட்டது. கண்ணாடியில் கவனித்தேன். க்ரீம் கலரில் ஒரு டாட்டா இண்டிகா வந்து கொண்டிருந்தது. அதற்கு லேசாக வழி விட்டு, நடு சாலையிலிருந்து சற்றே இடப்புறமாகச் செல்லத் தொடங்கினேன்.  ஒரு காற்று கடப்பது போல அது என்னைக் கடந்து சென்றது. 

கொஞ்ச தூரம் சென்றிருப்பேன். மீண்டும் பின்னால் ஹார்ன் சத்தம். பார்த்தபோது ஒரு 'பைக்'கும், ஒரு லாரியும் பின்னால் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. உடனே கடந்து சென்று விடுவார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தால் அவர்களும் சீரான வேகத்தில் பின்னாலேயே தொடர்ந்தார்கள். 

என் தனிமை கெடுக்கப் படுவதைப் போல உணர்ந்தேன். வேகத்தை இன்னும் சற்றுத் தணித்தேன். அவர்களும் கடந்து சென்றார்கள். 
கொஞ்ச தூரம் மறுபடி நானும் சாலையும் மட்டும். மெதுவாக தலையை சுற்றுமுற்றும் சுழற்றிப் பார்த்து ரசித்தபடி போய்க் கொண்டிருந்தேன். 
தனிமைப் பயணம் நீண்ட நேரம் தொடர்ந்து கிடைப்பதில் தடைகளாக அவ்வப்போது சில வண்டிகள் பின்னால் வந்த வண்ணமிருந்தன. அவைகள் அவ்வப்போது கடந்து போய்க் கொண்டே இருந்தன.


இப்போது சாலையோரம் மரங்கள் அவ்வளவு இல்லை என்பதோடு சாலையும் ஒரே சீராக இல்லை. சற்றே சுவாரஸ்யம் குன்றி ஓட்டிச் சென்றபடி இருந்தேன். பின்னால் சத்தம். பார்த்த போது பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. காலியாகத்தான் இருந்தது. 
   
மெல்ல நெருங்கியது.
கண்ணாடியில் தெரிந்த பஸ்ஸைப் பார்த்தேன். 
  
"ம்.... இதுவும் கடந்து போகும்..."

படங்கள் : நன்றி இணையம்.
               

22 கருத்துகள்:

  1. நன்றாக இருக்கிறது.

    என்னுடைய டெம்ப்ளேட் பின்னூட்டத்தை திண்டுக்கல் தனபாலன் உபயோகித்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  2. அருமை அருமை
    இதுவும் கடந்து போகும்
    தனிமைச் சுகம் தொடர்ந்து வந்து சேரும்
    கவித்துவமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. பழநியில் இருந்து பெரியகுளம் வரும் சாலையும், மதுரையில் இருந்து பெரிய குளம் வரும் சாலையும் ஒரு காலத்தில் இப்படி இருந்தது நினைவில்வருது. பழநி பெரியகுளம் சாலையானும் கொஞ்சம் பரவாயில்லை. மதுரை-தேனி வரை முற்றிலும் நரக மயம். :((((( நானும் இப்படி ரசிப்பேன். ஆனால் பைக்கில் எல்லாம் போனதில்லை. காரில் அல்லது பேருந்தில் போகையிலேயே கூட ரசிக்கலாமே. என்ன நான் சொல்றது? :))))))

    பதிலளிநீக்கு
  4. பேருந்தில் காற்று முகம் பூரா வீசும்.பைக்கில் இன்னொருத்தரைப் பிடிச்சுக்கணும். ரயில் என்றால் இன்னும் சுகம். தனிமை மனத்தைப் பொறுத்தது தானே.:) என் நினைவில் சென்னை காஞ்சீவரம் சாலை கூட அப்படி இருந்த காலம் உண்டு. திண்டுக்கல் தஞ்சாவூர் பாதையும் அப்படித்தான்.மரமெல்லாம் எங்கே போச்சு.
    நன்றி ஸ்ரீராம்.அழகான பகிர்வு.எனக்கே ஆசையாக இருக்கிறது ஒரு பயணம் போக.!

    பதிலளிநீக்கு
  5. நல்ல ரசனை. இது போன்ற சாலையில் சைக்கிள் பயணம் செய்வது இன்னும் சுகம்!

    பதிலளிநீக்கு
  6. சாலையோரம் சோலையொன்று ஆடும்... சங்கீதம் பாடும்.

    ரசிக்கவைத்த பயண நினைவலைகள்..

    பதிலளிநீக்கு
  7. காரில் அதிகம் பயணித்ததில்லையென்றாலும், ஒவ்வொரு நீண்ட பேருந்துப்பயணத்தின்போதும் ஜன்னலுக்கு வெளியே பார்த்து லயிப்பது எனக்கும் பிடித்தமான விஷயம்; இரவிலும் இருட்டிலும் கூட!

    அப்புறம், எனக்கும் கிஷோர்குமார் பாடல் பாட வேண்டும் போலிருக்கும்.

    ‘முசாஃபிர் ஹூன் யாரோ..’

    பதிலளிநீக்கு
  8. அனுபவம் அருமை.

    @வல்லி: பேசாம எங்கூருக்கு வாங்க. சாலை முழுசும் ஏகாந்தம்!!!!

    (ஆனா குளிர் மட்டும் கூடவே வரும்)

    பதிலளிநீக்கு
  9. இது போன்ற இயற்கை கொஞ்சும் பாதைகளில் தனிமையில் நடப்பதை நான் மிக மிக விரும்புவேன். இது போன்ற இடங்களில் மழை காலத்திலும், பனி காலத்திலும் நடப்பது இன்னும் சுகம். அதிலும் மழை பெய்து முடித்தவுடன் மரம், செடி, கொடிகள் குளித்து முடித்து புத்துணர்ச்சியுடன் அழகாய் சிரிக்கும் குழந்தை போல் பூத்து குலுங்கும் மலர்களுடன், காற்றில் தலை ஆடிய வண்ணம், ஜில்லென்று இருக்கும் பூமியில் நடப்பதில் இருக்கும் சுகம் ஆஹா...இதை
    அனுபவத்தில்தான் உணர முடியும். இரவின் அமைதியில் க்ரீச்,கிரீச் என்று ஒலிக்கும் கிரிக்கேட்ஸ் ஒலியை ரசித்த வண்ணம் நடப்பது ஒரு விதமான சுகம். நடக்கும்போது நான் என்றுமே பாடல்கள் கேட்க மாட்டேன். எனக்கு headphones பிடிக்காது.
    மேலும் இது போன்ற சாலைகளில் காரில் பயணம் செய்யவும் மிகவும் பிடிக்கும். நான் எப்போதும் தனிமையில் காரில் செல்லும்போது பாடல்கள் கேட்காமல் இருந்ததே இல்லை. கார் ஸ்டார்ட் பண்ணும்போதே பாடலும் ஸ்டார்ட் ஆகிவிடும். சில நேரம் சேருமிடம் வந்து விட்டால் பாடல் பாதியில் இருந்தால், அந்த பாடல் முடிந்தவுடன்தான் காரில் இருந்து இறங்குவேன். அது எத்தனை முறை கேட்ட பாடலாக இருந்தாலும் சரி, நான் என்னவோ அதை அப்போதுதான் முதலில் கேட்பது போல கேட்டுவிட்டுதான் இறங்குவேன். பாதியில் பாடலை நிறுத்த மனமே வராது. அதுதான் மெல்லிசை மன்னரின் பாடல்களின் மகத்துவம்.

    பதிலளிநீக்கு
  10. ரஸமான நடையில் உங்கள் அனுபவத்தைப் படிக்கையில் தென்றல் என்னைக் கடந்து போவதாய் உணர்ந்தேன். நானும் இப்படிப் பயணத்தை விரும்புவேன். இது மாதிரி சாலைகளில் பின்னால் வரும் வாகனங்கள் எல்லாம் பேய் வேகத்தில் விஷ்க் விஷ்க் என்று கடந்து செல்கையில் எரிச்சலாக வரும். ரசனையற்ற ஜென்மங்கள் இப்படி ராட்சச வேகத்தில் போய் என்ன செய்யப் போகிறார்கள் என்று. மீனாக்க்ஷி சொல்வது போல பழைய பாடல்கள் என் நாவில் இடம்பிடித்து விடும். (பக்கத்துல யாரும் இல்லங்கற தைரியம்.) ஹி... ஹி...

    பதிலளிநீக்கு
  11. //மெல்ல நெருங்கியது.
    கண்ணாடியில் தெரிந்த பஸ்ஸைப் பார்த்தேன். //

    இதற்கு மேல் தொடர்ந்து எழுதியதையும் போட்டிருக்கலாமில்லே?.. ஏன் டெலீட் செய்தீர்கள்?.. 'ஒன்றுமில்லை' என்கிற லேபிலுக்காகவா?..

    இன்னொன்று. ஒன்றுமில்லை என்று ஏதுமில்லை. இதையே முதல் வரியாய் வைத்து கவிதை எழுதிப் பாருங்கள். அழகாக வரும்.. என்ன, கொஞ்சம் தத்துவ விசாரம் தெரிந்திருக்க வேண்டும். அவ்வளவு தான்.

    பதிலளிநீக்கு
  12. அருமை:)! எல்லாமே இப்படிதான் கடந்து போகிறது.

    பதிலளிநீக்கு
  13. மரங்கள் அடர்ந்த சாலை படங்கள் மிக அருமை.
    நீங்கள் குறிப்பிட்டு இருப்பதுபோல எல்லாமே கடந்து போய்தான்விடும்.

    பதிலளிநீக்கு
  14. யாருமற்ற சாலை நல்ல அனுபவம்தான்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. படங்களும் அதற்கேற்றாற் போல் வரிகளும் என மிகவும் ரசிக்க வைத்தது. எனக்கு இது போல் ரயிலில் ஜன்னலோர பயணம் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  16. பாடம் சொல்வது போல் ஒரு இடுகை. ரசித்து எழுதி இருக்கிறீர்கள். அருமை.

    பதிலளிநீக்கு
  17. ஹைய்யோ.. ரசனையான பயணம் போனாப்ல இருக்கு.

    பதிலளிநீக்கு
  18. அதுவந்து... எல்லாரும் தனிமையை ரசிச்சு இருக்கீங்க... நான் என் கருத்தைச் சொல்லுவேன்... யாரும் திட்டப்படாது!!

    கார், பஸ்ல போகும்போது இந்த மாதிரி தனியான, யாருமில்லாத, ஏகாந்தமான பாதை வந்துச்சுன்னா எனக்கு ரொம்பப் பயம்ம்ம்மா (கொள்ளைக்காரன்) இருக்கும்!! அக்கம்பக்கம் ஒண்ணுரெண்டு வண்டியோ, அல்லது ஆள் நடமாட்டமோ இருந்தாத்தான் நிம்மதியா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  19. எங்கள் ப்ளாக்4 நவம்பர், 2012 அன்று PM 8:58


    திண்டுக்கல் தனபாலன், நன்றி.
    கந்தசாமி ஸார்,நன்றி.
    ரமணி, நன்றி.

    கீதா சாம்பசிவம், நன்றி..காரில் போனாலும் பஸ்ஸில் போனாலும் ரசிக்கலாம்.

    வல்லிம்மா... நன்றி. தனிமை மனதைப் பொறுத்தது. உண்மை. ரயிலில் போவது இன்னொரு வகை சுகம்.

    நன்றி வெங்கட், சைக்கிள் இன்னும் சுகம்!

    நன்றி ராஜராஜேஸ்வரி மேடம்.

    நன்றி சேட்டை சார்.... இன்னொரு அருமையான பாடலையும் நினைவு படுத்தினீர்கள்!

    நன்றி துளசி மேடம்....

    நன்றி மீனாக்ஷி... இன்னும் ரசனைக்காரராக இருக்கிறீர்கள்.

    நன்றி கணேஷ்.... அனுபவம் இல்லை, கற்பனைதான். ஹி...ஹி...

    ஜீவி ஸார்... தொடர்ந்து எதுவும் எழுதி டெலீட் செய்யவில்லை. சும்மா 'இதுவும் கடந்து போகும்' வார்த்தைக்கு ஒரு நகைச்சுவையாக ஒரு பதிவு எழுத வந்து அது வேறு மாதிரி அமைந்து விட்டது!! நீங்கள் கற்பனையைத் விடுகிறது.


    நன்றி லக்ஷ்மிம்மா...

    நன்றி ராமலக்ஷ்மி.

    நன்றி RAMVI.

    நன்றி 'தளிர்' சுரேஷ்.

    நன்றி கோவை2தில்லி.

    நன்றி இமா. சும்மா கற்பனைதான்!

    நன்றி ஹுஸைனம்மா. இதில் என்ன இருக்கு! அவரவர்க்கு அவரவரது ரசனைகள்!

    பதிலளிநீக்கு
  20. இதுவும் கடந்து போகும் என்பதில் நல்ல சாலையையும் அழகான மரங்களையும் கடந்து விட்டோம்.... என்று பெறுவோம் மீண்டும் அவற்றை

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!