புதன், 5 டிசம்பர், 2012

அலேக் அனுபவங்கள் 15:: அஞ்சு பீரியட்!

                 
பள்ளிக்கூட நாட்களில், சில உள்ளூர் விசேஷங்களுக்கும், கார்த்திகை தீபம் போன்ற மாலை நேர விழாக்களுக்கும், அஞ்சு பீரியட் பள்ளிக்கூட வகுப்புகள் நடக்கும். பிறகு எல்லோரும் 'வீட்டுக்கு பெல்' அடித்தவுடன், வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகளாக வீட்டை நோக்கி சந்தோஷமாக ஓடுவோம்.
                    
அசோக் லேலண்டில் வருடம் இரண்டு நாட்கள், நாங்க அஞ்சு பீரியட் என்று அழைக்கின்ற நாட்கள் வரும்.
              
ஒன்று கார்த்திகை தீபம். இரண்டாவது, கிறிஸ்துமசுக்கு முதல் நாள். இவைகள் வாராந்திர விடுமுறை நாட்களில் இல்லாமல் இருந்தால், அஞ்சு பீரியட் வேலை, அப்புறம் வீட்டுக்கு! இது தவிர, சட்டசபை தேர்தல்  நடக்கின்ற நாட்களில் கூட இந்த வகையில் அஞ்சு பீரியட் கணக்கு உண்டு. ஆனால் என்ன,  பெரும்பாலும் நாம் ஓட்டுப் போட சென்று பார்க்கையில், நம்முடைய வோட்டை யாராவது போட்டிருப்பார்கள் (என்று எண்ணி, வோட்டுப் போட  செல்லாமலும் இருந்துவிடுவோம்!)
                    
காலை ஏழரை மணி முதல், மதியம் ஒன்றரை மணி வரை வேலை. கம்பெனி பேருந்துகள், மதியம் ஒன்று ஐம்பதுக்கு கிளம்பி, பேருந்து பயண வசதி பெற்றவர்களை, ஏற்றிச் செல்லும்.
                
இந்த அஞ்சு பீரியட் நாட்களில், காண்டீனில் மதிய உணவாக சர்க்கரைப் பொங்கல் செய்வார்கள். தனியாக மதிய உணவு நேரம் என்று அந்த நாட்களில் கிடையாது. தாமரை இலையில் கட்டப்பட்ட சர்க்கரைப் பொங்கல், சுடச்சுட பதினொன்றரை மணிக்கு, தொழிற்சாலையின் எல்லா பகுதிகளுக்கும் வந்துவிடும். ஆரம்பத்தில், சில நாட்கள் ஒரு பாக்கெட் பதினாறு பைசா கூப்பன் கொடுத்து வாங்கினோம். போகப் போக, அது இலவசமாகவே கொடுக்கப்பட்டது. ஒருவருக்கு ஒரு பாக்கெட். என்ற வகையில் கியூவில் நின்று வாங்கிக் கொள்வோம். முந்திரியும், திராட்சையும் போட்ட, சர்க்கரைப் பொங்கல். எல்லோருமே விரும்பி சாப்பிடுவோம். 

                    
எண்பதுகளில் ஒரு கார்த்திகை தீப தினத்தன்று, வீட்டுக்கு மாலை வந்துவிடுவேன், பிறகு அகல் விளக்குகள் ஏற்றலாம் என்று கூறி, அலுவலகம் சென்றேன். நான் பணியாற்றிய பகுதியில், என் குழுவிற்கு அப்பொழுது தலைவராக இருந்த ஒருவர், அந்த நாளை, என்னுடைய பொறுமையை சோதித்துப் பார்க்கின்ற நாளாக தேர்ந்தெடுத்துவிட்டார். 
                
தனியார் நிறுவனங்களில், சாதாரணமாக நிகழ்கின்ற ஒரு விஷயம்தான், இது. ஆண்டு முழுவதும் நாம் செய்யும் பணிகளை அதிகம் கவனியாமல், நம்முடைய ஆண்டு சம்பள உயர்விற்காக படிவங்கள் பெர்சனல் டிப்பார்ட்மெண்ட் அனுப்பும் பொழுது மட்டும் விழித்துக் கொள்வார்கள். இவர், என்னுடைய பேப்பர்கள் வந்த ஆறு மாதங்கள், அதை அனுப்பாமல் வைத்திருந்து, பிறகு, என் பொறுமை குணம் எவ்வளவு என்று தெரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பமாக இந்த நாளை தேர்ந்தெடுத்தது, என்னுடைய துரதிருஷ்டம் என்றுதான் நினைக்கின்றேன். 
                 
லாரியின் முன் பகுதியில் இருக்கின்ற காபின் பகுதியில், புதிய கியர் பாக்ஸ் பொருத்தினால், அதை இயக்குகின்ற லீவர் பானட்டு கவர் மீது அமைக்க ஒரு பெட்டி. அதை பானட்டு கவர் மீது அமைப்பதற்கு, என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும், என்கிற விவரங்களை ஒரு படமாக வரைய சொன்னார். அப்பொழுது மணி மதியம் ஒன்று பதினைந்து. பதினைந்து நிமிடங்களில் வரைந்து கொண்டு போய் கொடுத்தேன். அவர் ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார். நான் அவருடைய அறையில் நின்று கொண்டிருந்தேன். நின்று கொண்டே இருந்தேன். கம்பெனி பேருந்துகள் எல்லாம் கம்பெனியிலிருந்து அலுவலர்களை ஏற்றிச் சென்றன - அவருடைய அறையிலிருந்து எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது. அவரும் அதை உணர்ந்தவராக, கடைசி பேருந்தும் சென்ற பிறகு, போன் பேச்சை முடித்து, நான் வரைந்த படத்தை பார்த்தார். இரண்டு மூன்று மாற்றங்கள் சொன்னார். செய்தேன். மணி இரண்டரை. 
                
மீண்டும் பார்த்து, சில மாற்றங்கள் சொன்னார். செய்தேன். மணி நான்கு. இவ்வாறு மாற்றங்கள் சொல்லி, செய்து, சொல்லி செய்து, ஆறு மணி வரையிலும் இழுத்தடித்தார். 
                        
அதற்குப் பின் நான் வரைந்த படத்திற்கு நகல்கள் தயார் செய்யச் சொன்னார். பிறகு அவருடைய உதவியாளரை அழைத்து, ஒரு கடிதம் டிக்டேட் செய்து, அதிலும் மாற்றங்கள் பல சொல்லி, செய்து, கடிதத்தையும், படத்தையும் கொண்டுபோய் பர்ச்சேஸ் டிப்பார்ட்மெண்டில் கொடுத்துவிட்டு வரச் சொன்னார். 
                 
எல்லா வேலைகளையும் முடித்து விட்டு கிளம்பும் சமயத்தில், அந்த அதிகாரி, 'என்னுடன் வருகிறாயா? பீச் ஸ்டேஷனில் டிராப் செய்கிறேன்?' என்று கேட்டார். எனக்கு இருந்த வெறுப்பில், நான் சிறிய புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு, 'இல்லை சார். நான் டிரெயினில் போய்க் கொள்கிறேன்' என்று கூறி விட்டுக் கிளம்பினேன். கத்திவாக்கம் ஸ்டேஷனில் ரயில் ஏறி, சென்டிரல் வரை பிரச்னை இல்லாமல் போய் சேர்ந்தேன். 
               
ஆனால், அன்றைக்கு சோதனையாக, பார்க் ஸ்டேஷனிலிருந்து கிளம்பிய மின் தொடர், வழியில் ஏதோ பிரச்னையில் நின்று போய், குரோம்பேட்டை சென்றடைய இரவு பதினொரு மணி ஆகிவிட்டது. வீட்டில், மனைவியும், அப்பாவும் மிகவும் கவலையுடன் காத்திருந்தனர். அப்பொழுது வீட்டில் தொலை பேசி, அலை பேசி என்று எந்த தகவல் சாதனமும் கிடையாது. அன்றைக்குப் பார்த்து சென்னை தொலைக்காட்சியில் ஏதோ சோக படம் வேறு போட்டிருந்தார்கள் போலிருக்கு. (தூரத்து இடி முழக்கம்?). மனைவி மிகவும் சோகமாக இருந்தார். என்னைப் பார்த்த பின்தான் அவர்களுக்கு மகிழ்ச்சி திரும்பியது.
     
அவ்வளவு கஷ்டப்பட்டு, நான் வரைந்த படத்தை, ஒரு வாரம் கழித்துதான், சப்ளையரிடம் பர்ச்சேஸ் டிபார்ட்மெண்டிலிருந்து கொடுத்தார்கள் என்று பிறகு ஒரு நண்பரிடமிருந்து தெரிந்து கொண்டேன். 
                  

14 கருத்துகள்:

  1. அட கொடுமையே! இப்படித்தான் பலர் நம் பொறுமையை சோதிக்கிறார்கள்! நல்ல அனுபவம்!

    பதிலளிநீக்கு
  2. சிறு இடங்களில் கூட பொறுமையை கடைபிடுக்க தவறினால் அவ்வளவு தான் அதுவே நமக்கு ஆபத்தாகிவிடும்

    பதிலளிநீக்கு
  3. அன்றைக்குப் பார்த்து சென்னை தொலைக்காட்சியில் ஏதோ சோக படம் வேறு போட்டிருந்தார்கள் போலிருக்கு.

    கொடுமை !!!!

    பதிலளிநீக்கு
  4. நிச்சயம் அப்போது உங்கள் வீட்டில் தவித்து போயிருப்பார்கள்...

    பதிலளிநீக்கு
  5. இன்று படிக்க சுவாரஸ்யமாக இருந்தாலும் அன்று எப்படி தவித்திருப்பீர்கள் - உங்கள் வீட்டிலும் - பண்டிகையும் அதுவுமாக!
    அந்தத் தவிப்பு எழுத்தில் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  6. "அலேக் அனுபவங்களில் வரவர ஒரே பண்டிகை அனுபவமாகவே இருக்கே..” என்று பின்னூட்டம் எழுதணும்னு நினைச்சுகிட்டு இருந்தேன், சர்க்கரைப் பொங்கல் பத்திவரை. அடுத்த பாராவிலிருந்து ஒரே ஃபீலீங்ஸா ஆகிடுச்சு... ‘ச்சே... இப்படிக் கஷ்டப்பட்டவரைப் போய் அப்படி நினைச்சுட்டோமே’ன்னு...

    தொலைபேசி இல்லாக் காலங்களில் தாமதம் என்றால், வீட்டினருக்கு ரொம்பவேக் கவலையாக இருக்கும்தான். அக்கம்பக்கத்து வீடுகளிலும்/கடைகளில் யாரிடமும் தொலைபேசி இல்லையா?

    பதிலளிநீக்கு
  7. அவருடைய கார்/பைக் டயர் எதுவும் உங்க கண்ணில படலியா?

    பதிலளிநீக்கு
  8. அவரவரும் தங்கள் தங்கள் பதவிக்கேற்றவாறு குட்டி அதிகாரம் செய்கிறார்கள்.....பொறுமை பொறுமை !

    பதிலளிநீக்கு
  9. ஆனாலும் உங்களுக்குப் பொறுமை அதிகம்தான் :-)

    நல்ல வேளை தூரத்து இடி முழக்கம்தான்... வீட்டில் இடி முழக்கம் இல்லாத வரையில் பிழைத்தீர்கள் :-)

    பதிலளிநீக்கு
  10. இந்த மாதிரி வேண்டுமென்றே வயத்தெறிச்சல் கொட்டிக்கறவங்க நிறைய பேர். செல் போன், வீட்ல போன் இல்லாத காலத்துல இந்த மாதிரி தாமதமா வர நேர்ந்தா வீட்ல இருக்கறவங்க பாடு திண்டாட்டம்தான். அந்த நேரத்துல வேண்டாத நினைப்பெல்லாம்தான் முதல்ல வரும். அப்பாவுக்காக இந்த மாதிரி நிறையதடவ காத்துண்டு இருந்திருக்கேன். அப்ப எல்லாம் பக்கத்து குடித்தனகாரங்க இரும்பு கரண்டியை ஒரு பக்கெட் தண்ணீல போட்டு வைக்க சொல்லுவாங்க. எதுக்காகன்னு கேக்க அப்ப தோணினதே இல்ல. இப்ப இதை எழுதும்போது எதுக்காக அப்படி சொல்லி இருப்பாங்கன்னு யோசிக்கறேன். :)

    பதிலளிநீக்கு
  11. ஆதரவுக் கருத்துகள் பதிந்த அனைவருக்கும் நன்றி.

    //அப்பாதுரை said...
    அவருடைய கார்/பைக் டயர் எதுவும் உங்க கண்ணில படலியா?//

    அவருடைய கார் டிரைவர் அப்பாவி, மிகவும் நல்ல மனிதர். கார் டயர் பங்சர் ஆனாலோ அல்லது டயரில் காற்று இல்லை என்றாலோ, டிரைவரை அந்த அதிகாரி, வார்த்தைகளினாலேயே வெறிநாய் கடி கடித்துவிடுவார். மேலும், கார் ரிப்பேர் ஆகிவிட்டால் அதிகாரியை விட அந்த டிரைவர்தான் அதிக சிரமப் படுவார். ஆகவே டயர் கண்ணில் பட்டாலும், டிரைவரின் அப்பாவி முகம்தான் மனதில் தெரியும்!!

    பதிலளிநீக்கு
  12. எனக்கு அந்த கார்த்திகை நன்றாக நினைவு இருக்கிறது. 1980யோ என்னவோ. எங்க மாமியார் இவியை நிறுத்தச் சொல்லி என்னைக் கடிந்து கொண்டார்.நல்ல நாளும் அதுவுமா வைக்கிறான் பார்.:)
    ஆனாலும் உங்களுக்கு மிகவும் பொறுமை.
    அவருக்கு என்ன கடுப்போ.
    படிக்கவே கஷ்டமாக இருக்கு.

    பதிலளிநீக்கு
  13. இரும்பு கரண்டியை ஒரு பக்கெட் தண்ணீல போட்டு வைக்க சொல்லுவாங்க. எதுக்காகன்னு கேக்க அப்ப தோணினதே இல்ல. இப்ப இதை எழுதும்போது எதுக்காக அப்படி சொல்லி இருப்பாங்கன்னு யோசிக்கறேன். :) //

    எங்க வீட்டிலே இன்னமும் இந்த வழக்கம் உண்டு. இரும்பைத் தண்ணீரிலே போட்டால் தொலைந்த பொருட்கள், மேலும், ரொம்ப நேரம் ஆகியும் வீட்டுக்குத் திரும்பாமல் இருக்கிறவங்க எல்லாம் சரியாகும் என ஒரு நம்பிக்கை. அதே போல் மறந்ததை நினைவு படுத்திக் கொள்ளவும் போடுவாங்க. இதுக்குன்னே எங்க மாமியார் ஒரு கரண்டியைத் தனியா வைச்சிருப்பாங்க. :)))))))

    பதிலளிநீக்கு
  14. உங்க மேலதிகாரிக்கு என்ன கோபமோ அன்னிக்கு! வீட்டிலே மனைவியோட லடாயா இருந்திருக்கலாம். அதை உங்க கிட்டேக் காட்டிட்டார் போல. :)))) எண்பதாம் வருஷம் கார்த்திகையிலே சென்னையிலே தான் இருந்தேன். தொலைக்காட்சி எல்லாம் அப்போப் பார்த்ததில்லை. எண்பத்தி ஒன்றிலே தான் முதல் தொலைக்காட்சிப் பெட்டியே வாங்கினோம்.



    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!