செவ்வாய், 25 டிசம்பர், 2012

இசை விழா

இசை விழா உச்சத்தில் இருக்கிறோம். நித்யஸ்ரீ கணவர் குறித்த செய்தி நீங்கலாக மற்ற எல்லாம் நன்றாகவே போய்க்கொண்டு இருக்கின்றன பாவம் நித்யஸ்ரீ. 
                                       
அவரைப் பார்த்தால் நம்ம வீட்டு சொந்தக் காரர் மாதிரி ஒரு உணர்வு வரும். அவருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்க வேண்டாம் தான். அதற்கு மேல் என்ன சொல்ல இருக்கிறது.
                                                
இசைவிழாவைப் பொறுத்தவரை இந்த ஆண்டு நான் பார்த்த வரை வெகு சில நிகழ்ச்சிகள்  தவிர மற்ற அனைத்துக்கும் உட்கார இடம் அல்லது டிக்கெட் கிடைப்பதில் அதிக சிக்கல் இல்லை.

நிறைய இளம் வித்வான்கள் பாடுகிறார்கள். டெக்னிகலாக நன்றாகவே பாடுகிறார்கள். உள்ளத்தைத் தொடும் இசை அபூர்வமாகவே கிடைக்கிறது.  அவரவர் சொந்த விருப்பு வெறுப்புக்கேற்ப இவர் பாடினால் மயிர்க்கூச்செறியும் அல்லது அவர் பாடினால் கண்களில் நீர் துளிர்க்கும் என்று சொல்லிக் கொள்ளலாம்.  ஓரிருவர் அப்படிப் பாடுவது என்னவோ உண்மை.

இசை விழா சமயத்தில் படே படே ஆசாமிகள் பஜ்ஜிக்கும் தோசைக்கும் பறக்கும் காட்சி ரொம்ப சகஜம். இந்த முறை பஜ்ஜி பக்கோடா, எதுவும் முப்பதுக்குக் குறைந்த விலையில் கிடைக்கவில்லை.  சாப்பாடு விலை விபரம்  தலையைச் சுற்ற வைக்கும்.  125, 150, 170 எல்லாம் சர்வ சாதாரணம். தரம் சுமாருக்குக் கொஞ்சம் மேலே. அவ்வளவுதான்.  உபசாரம் சில இடங்களில் பலம். சில இடங்களில் அன்ன தானம் செய்யும் சத்திரம் மாதிரி அவர்கள் கருணைக் கண் கொண்டு நோக்கி என்ன கொடுத்தாலும் சாப்பிட வேண்டியதுதான். 
                                                
இந்த ஆண்டு இளைய பாடகர்கள் பலருக்கு சீனியர் ஸ்லாட் கொடுத்து அவர்களின் ரசிக்கக் கூட்டத்தை இளைக்க வைத்துவிட்டார்கள்.  அம்ருதா முரளி மங்கையர் மலரில் சொன்னதை வைத்துப் பார்த்தால் இந்த இளம் மேதைகளுக்கு அவர்களுக்கு அளிக்கப் பட்ட உயர்வு மகிழ்ச்சியை அளித்திருப்பதாகத் தெரிகிறது. சன்மானம் என்ன கிடைக்கிறது என்பது பற்றி நமக்கு அதிகம் தெரியாது. நிறைய ஸ்பான்சர்கள் இருப்பதால் சன்மானம் பலமாக இருந்தால் நமக்கும் சந்தோஷமே.  கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால் நமது இசை மணிகள் லட்சம், எழுபத்தி ஐந்து ஆயிரம் என்றெல்லாம் கேட்பதாகத்தெரிகிறது. இவ்வளவு கொடுத்து  கூப்பிடுபவர்கள் இருக்கிறார்கள் என்பது நமக்கும் சந்தோசம் தான்.  ஆனால் இசை மேல் கொண்ட பற்று காரணமாக அவ்வளவாக பசை இல்லாத அன்பர்கள் கூப்பிட்டால் அந்தக் காலத்தில் மதுரை மணி ஐயர் போன்ற மேதைகள் கொடுத்ததை வாங்கிக் கொண்டு அற்புதமாகப் பாடுவார்கள் என்பது இவர்களுக்குத் தெரிந்தால் நல்லது.
702       
இசை விமரிசனம் எழுதும் அளவுக்கு எனக்கு ஞானம் பற்றாது என்றாலும் சஞ்சய் சுப்ரமணியம் வெளிப்படுத்தும் கற்பனை வளம், பம்பாய் ஜெயஸ்ரீயின் குரல் இனிமை, பற்பல வயலின் வித்வான்கள், மிருதங்க வித்வான்கள் செய்யும் சாகசம் இவற்றை வியந்து பாராட்டியாக வேண்டும்.  திருச்சி சங்கரன், மன்னார்குடி ஈஸ்வரன் போன்ற சீனியர்கள் தம் சுகமான வாசிப்பால் ரசிகர்களை குதூகலிக்க வைத்தார்கள்.  அக்கரை சுப்புலட்சுமி வாசிப்பு சொக்க வைக்கிறது.  கமல் கிரண் விஞ்சமூரி என்ற ஒரு மிக இளை ஞர்  அருமையாக வாசித்துக் கவர்ந்தார். நெய்வேலி சந்தான கோபாலன் காட்டும் அவை அடக்கம், அவர் பெண் ஸ்ரீரஞ்சனி காட்டும் இசைத்திறன் குறிப்பிடத் தக்கது.பாரத் சுந்தர் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கிறார். விஜய் சிவா பாடும் சமஸ்கிரு த சுலோகங்கள் கேட்க மெய் சிலிர்க்கும்.   நான் பார்த்த நிகழ்ச்சி அடிப்படையில் சொல்வதால் இவ்வளவுதானா , வேறு யாரும் நன்றாகப் படவில்லையா என்று திகைக்காதீர்கள் . 

--
K.G.Y.Raman

18 கருத்துகள்:

  1. இசை விழா பற்றிய ஒரு ரவுண்டு அப். நன்றி! பாம்பே ஜெயஸ்ரீ கச்சேரி ஒரு முறையாவது நேர கேக்கணும்னு ரொம்ப ஆசை. பாக்கலாம்.
    இரண்டு வருடங்களுக்கு முன் P.S.B.B. பள்ளியில் நித்யஸ்ரீ கச்சேரி கேட்டேன். பிரமாதமா இருந்துது. இப்ப நடந்த நிகழ்ச்சி மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு. அவங்க மனசு ஆறுதலும், அமைதியும் அடையணும்னு மனசார நினைக்கறேன்.

    பதிலளிநீக்கு
  2. இசைக்கு ஞானம் தேவை இல்லை என்றே நான் நினைக்கிறேன்.
    காதுகளில் இனிமையாக விழும் எந்த இசையும் நல்லதே.

    நித்ய ஸ்ரீயின் சோகம் எத்தனையோ பேரைத் தாக்கி இருக்கிறது. நலம் பெறட்டும்.

    பதிலளிநீக்கு
  3. இசை நுணுக்கங்கள் தெரியாவிட்டாலும் விமர்சனங்கள் படிப்பது உண்டு. நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
  4. இசை நுணுக்கங்கள் தெரியாவிட்டாலும் விமர்சனங்கள் படிப்பது உண்டு. நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
  5. // கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால் நமது இசை மணிகள் லட்சம், எழுபத்தி ஐந்து ஆயிரம் என்றெல்லாம் கேட்பதாகத்தெரிகிறது. இவ்வளவு கொடுத்து கூப்பிடுபவர்கள் இருக்கிறார்கள் என்பது நமக்கும் சந்தோசம் தான். ஆனால் இசை மேல் கொண்ட பற்று காரணமாக அவ்வளவாக பசை இல்லாத அன்பர்கள் கூப்பிட்டால் அந்தக் காலத்தில் மதுரை மணி ஐயர் போன்ற மேதைகள் கொடுத்ததை வாங்கிக் கொண்டு அற்புதமாகப் பாடுவார்கள் என்பது இவர்களுக்குத் தெரிந்தால் நல்லது.//
    இன்றும் இசையை வாழ்வாதாரமாக வைத்துக்கொண்டு வாழ்வது மிக மிக கடினம். வருடம் முழுவதும் கச்சேரிகளும் கிடையாது. ஜீவனத்திற்கு வேறு வழி வைத்துக்கொண்டு இசையை பொழுது போக்காக வைத்துக்கொண்டால்தான் பணத்தின் மீது எந்த அக்கறையும் இல்லாமல் கொடுப்பதை வாங்கிக்கொண்டு கச்சேரி செய்ய முடியும். ஆனால், இந்த அளவு இசைக்குப்பின்னால் எந்த அளவு அசுர சாதகம் செய்திருப்பார்கள் இவர்கள் என்று யோசித்தால் பொழுதுபோக்காக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.
    so, i find it pretty justified. Happy that people are ready to pay this

    பதிலளிநீக்கு
  6. இசை விழா
    இசைத்த பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு


  7. இந்த வருடம் விஜய் சாந்தி நிறுவனத்தாரும் ஐ பால் நிறுவனத்தாரும் சேர்ந்து வளசரவாக்கம் கல்யாணி மஹாலில் ஒரு ஐந்து
    நாட்களுக்கு இசை விழா கொண்டாடியது இங்கிருக்கும் மூத்த குடி மகன்களாகிய எங்களுக்கு பேரானந்தத்தை ஈந்தது.

    முதல் நாள் டாக்டர் ராதா பாஸ்கர் அவருடன் கௌசிக் பாலசுப்பிரமணியன் மிருதங்கம். இள வித்துவான். இவரது வாசிப்பில்
    கேட்ட நாதம் ஒரு நாள் பாலக்காடு மணி ஐயர், உமையாள்புரம், வினாயக் ராம் அவர்கள் ரேஞ்சுக்கு செல்வார் என எனது கணிப்பு.

    இரண்டாம் நாள் ராஜேஷ் வைத்யா. இவரது இசை ஞானம் ஈடு இணையற்றது. ஒவ்வொரு ஸ்வரத்திலும் சஞ்சாரம் செய்யக்கூடிய‌
    திறன் அற்புதமாக இருக்கிறது. இருந்தாலும்...... சொல்லி த்தான் தீரவேண்டும்... ஒரு சினிமாத்தனம் இருக்கிறது. சாஸ்திரீய
    சங்கீததில் ஜிம்மிக்ஸுக்கு இடம் இல்லையெனவே நினைக்கிறேன். இந்த ஜிம்மிக்ஸை ஒரு பாட்டுக்கு அல்லது இரண்டுக்கு
    வாசிக்கலாம். கச்சேரி முழுவதும் இது போல் இருந்தால்....??

    மூன்றாம் நாள் திருமதி சாருலதா மணி அவர்கள். இவர்களது இசை பயணம் நிகழ்ச்சியை நாம் எல்லோருமே டி.வியில் அடிக்கடி
    கேட்கத்தான் செய்கிறோம். ஒவ்வொரு பாடலுக்கு முன்பும், பாடப்போவது என்ன ராகம், அதில் ஆரோஹணம் அவரோஹனம்
    சொல்லி, ஆலாபனை செய்துவிட்டு பின் பாடல் . சாதாரணமாக, கச்சேரி நடுவில் தான் ஒரு பெரிய கன ராகத்துக்கு விஸ்தாரமாக‌
    ஆலாபனை செய்வதும் அதைத் தொடர்ந்து வயலின் வித்வானுக்கு தனி ஆலாபனை செய்யவும் கேட்டிருக்கிறோம். இது
    கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. ஒவ்வொரு ஐடத்துக்கு முன்பேயும் இவரும் ஆலாபனை செய்து, வயலினும் ஆலாபனை
    செய்த தால், கூட்ட ரசிகர்கள் கொஞ்சம் டயர்டு ஆகத்தான் செய்தனர்.

    நான்காவது நாள் என்னால் போக இயலவில்லை.

    ஐந்தாம் நாள் செல்வி சுசித்ரா பாலசுப்பிரமணியன் அவர்கள். இருப்த்தி மூன்று வயதில் இப்படி ஒரு ஞானமா என்று அதிசயிக்கத்
    தக்க பர்ஃபார்மென்ஸ். க்ருஷ்ணாம்ருதம் என்ற தலைப்பிலே ஒரு இருபது நூற்றாண்டுகளில் க்ருஷ்ண்னைப்பற்றி பாடிய வாக்கேயக்காரர்கள்
    அனைத்துப்பேரையும் முன்னுக்கு கொண்டுவந்து நிறுத்தி அவர்களது சரித்திரங்களைச் சொல்லி, க்ருஷ்ண பக்தியில் திளைத்த
    அத்தனை சாஹித்யகாரர்களின் பாடல்களிலும் ஒன்றிரண்டு பாடி, சபையை பிரமிக்க வைத்துவிட்டார். கனகதாசர், ஊத்துகுடி , புரந்தரதாசர்,
    அன்னமாசாரியர், ராகவேந்திர, பண்டரிபுரம் விட்டல சாகித்யங்கள், அபங்க பாடல்களின் பின்னணி, வட இந்தியாவில் ஜெயதேவரின்
    இதிஹாசம், அவர் எழுதிய அஷ்டபதி, பின்னே துளசிதாசர், பக்தமீரா, கடைசியில் எம்.எஸ்.அம்மா பாடிய காற்றினிலே வரும் கீதம்
    ராஜாஜி எழுதிய குறை ஒன்றும் இல்லை யுடன் அவர் முடிக்கையிலே

    ரசிகர்களுக்கு அன்று ஒரு குறையும் காண முடியாது தான் இருந்தது. இந்த இளம் வயதில் இப்பேர்ப்பட்ட ஒரு சங்கீத உபன்யாச நிகழ்ச்சியை
    நிகழ்த்தியது scholarly and erudite என்ற வாறே சொல்ல முடியும்.

    இளம் வித்துவான்களுக்கு இன்னமும் உற்சாகம் தரவேண்டும். அவர்களும் இலக்கண சாஸ்திரீய வழியிலே சென்று கர்னாடக சங்கீதத்தின்
    தூய்மையை பாதுகாக்க வேண்டும்.

    சுப்பு ரத்தினம்.

    பதிலளிநீக்கு
  8. ரசிக்க மட்டும் தெரிகிறது.என் தாத்தா இருந்த காலத்தில் இசைவிழாக் காலங்களில் தமிழ்நாட்டுக்கு வந்திடுவார்.ஞாபகம் வருகிறது !

    பதிலளிநீக்கு
  9. நித்திய ஸ்ரீ எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடகர்... அவர் குடும்பப் பிரச்னை வருத்தம் அளிக்கிறது... இசை ஞானம் அறவே கிடையாது... திருவிழா கச்சேரியோடு நின்று விடுகிறது எமது தேடல்

    பதிலளிநீக்கு
  10. நித்யஸ்ரீ விஷயம் நினைக்கவே கஷ்டம் என்றால் எளிதில் மறக்க முடியாமல் படுத்துகிறது. இன்று பத்து நாட்கள் ஆகிவிட்டாலும் நினைக்க நினைக்க ஆறவே இல்லை. :(((((( தீராத சோகம்.

    மற்றபடி கல்யாணக் கச்சேரிகளில் பாடக, பாடகிகளுக்கு என்ன கொடுக்கிறாங்களோ தெரியலை. பக்க வாத்தியக்காரர்கள் 500ரூ, 1,000ரூபாயோடு திருப்தி அடைய வேண்டி இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா சொல்கிறது. வருத்தம் தரும் செய்தி தான்.

    பதிலளிநீக்கு
  11. உங்களது இசைவிழா தொகுப்பும், திரு சுப்புரத்தினம் அவர்களின் பின்னூட்டத் தொகுப்பும் எங்கோ உட்கார்ந்திருக்கும் என் போன்றவர்களுக்கு பெரிய விஷயம்.

    நித்யஸ்ரீ பற்றி நினைக்க நினைக்க ஆறவில்லை.

    எங்கள் ஊரில் ஸ்ரீராம நவமி கச்சேரிகள் கிட்டத்தட்ட 45 நாட்கள் நடக்கும். நம்மூர் பாடகர்கள் இங்கும் வருவார்கள். நிறையக் கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. இசைவிழா பற்றி பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. நித்யஸ்ரீயின் சோகம் அனைவரையும் உலுக்கி விட்டது.
    //உபசாரம் சில இடங்களில் பலம். சில இடங்களில் அன்ன தானம் செய்யும் சத்திரம் மாதிரி அவர்கள் கருணைக் கண் கொண்டு நோக்கி என்ன கொடுத்தாலும் சாப்பிட வேண்டியதுதான். //இசை விழா நடக்கு காமராஜர் அரங்கத்தில் அறுசுவை திருவிழாவும் நடந்து கொண்டுள்ளது:)

    பதிலளிநீக்கு
  14. நித்யஸ்ரீயின் சோகம் அனைவரையும் உலுக்கி விட்டது.
    //உபசாரம் சில இடங்களில் பலம். சில இடங்களில் அன்ன தானம் செய்யும் சத்திரம் மாதிரி அவர்கள் கருணைக் கண் கொண்டு நோக்கி என்ன கொடுத்தாலும் சாப்பிட வேண்டியதுதான். //இசை விழா நடக்கு காமராஜர் அரங்கத்தில் அறுசுவை திருவிழாவும் நடந்து கொண்டுள்ளது:)

    பதிலளிநீக்கு
  15. நித்யஸ்ரீ எனக்கு மிகவும் பிடித்த பாடகி. மைக் செட் அவசியமில்லாமல் ஆயிரம் பேருக்குக் கேட்கும் காத்திரமான குரல். அமிர்தமான குரல்வளத்தை வழங்கிய ஆண்டவனின் அனுக்கிரஹம் ஏனோ அவரது குடும்ப வளத்திற்கு கிடைக்கவில்லை. இந்த மார்கழியில் கம்பீர நாட்டையிலும் தர்பாரிலும் அடானா போட்டுப் பாடவேண்டியவரை முகாரி பாடவைத்த அந்த மஹாதேவனின் திருவிளையாடலை என்னவென்று சொல்ல?

    பதிலளிநீக்கு
  16. நித்யஸ்ரீக்கு நடந்தது நினைக்க நினைக்க ஆறவே மாட்டேங்குது.

    இசையை ரசிக்க நல்ல காது இருந்தாப்போதுமே. இசைவிழா பற்றிய பகிர்வும் அருமை.

    பதிலளிநீக்கு

  17. நன்றி மீனாக்ஷி.

    நன்றி வல்லிம்மா.

    நன்றி TN முரளிதரன்.

    நன்றி bandhu

    நன்றி சுப்பு தாத்தா.

    நன்றி ஹேமா.

    நன்றி சீனு

    நன்றி கீதா சாம்பசிவம்.

    நன்றி ரஞ்சனி நாராயணன்.

    நன்றி சே. குமார்.

    நன்றி சாதிகா

    நன்றி RVS

    நன்றி அமைதிச்சாரல்.

    பதிலளிநீக்கு
  18. நித்யஸ்ரீ இந்த சோகத்திலிருந்து சீக்கிரமே மீண்டு வருவார் என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!