செவ்வாய், 15 ஜனவரி, 2013

எண்ணை மறந்ததேன்? என் நிலை சொல்லி வா!

              
அலுவலகத்தில், தனக்கு எதிரே அமர்ந்திருக்கும் பதினான்கு பேர்களிடமும் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார், ஜகன். 

          
"நண்பர்களே! நம் தொழிலகம், ஐ எஸ் ஓ சான்றிதழ் பெறுவதற்கு, ஆடிட் நடத்த அடுத்த வாரம் நம் தொழிலக வளாகத்தில், ஆடிட்டர்கள் வரவிருக்கின்றார்கள். இந்தத் தொழிலகத்தின் ஐ எஸ் ஓ சான்றிதழ் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில், நான் உங்கள் எல்லோருக்கும் நாம் ஆடிட்டின் பொழுது கடைபிடிக்க வேண்டிய சில .... "
               
அவர் பையில் இருந்த அலைபேசி மெளனமாக அதிர்ந்தது. ஏதோ குறுந்தகவல். சற்றுத் தயங்கியவர், தொடர்ந்தார். ".... சில யுக்திகளை உங்களுக்குச் சொல்ல கடமைப் பட்டுள்ளேன். முதலாவதாக, ஆடிட்டர்களுக்கு, அவர்கள் கேட்காமல், எந்த அதிகப்படி தகவல்களையும் ......" 
   
மீண்டும் சட்டைப்பை அலைபேசி மெளனமாக அதிர்ந்தது. பேச்சு தடைப்பட்டது. அலைபேசியைக் கையில் எடுத்து, யாரிடமிருந்து குறுந்தகவல் என்று நோட்டமிட்டவாறு, பேச்சைத் தொடர்ந்தார். ".... நாமாக அளிக்கக் கூடாது. சில இடங்களில் நாம் வேண்டுமென்றே சில மைனர் நான்-கன்ஃபார்மிடீஸ் - ஆடிட்டர்கள் கண்டுபிடிப்பதற்காக - அவர்களைத் திருப்திப்படுத்த, விட்டு வைத்திருக்கின்றோம். இது ஒரு மனோ தத்துவ யுக்தி. ..."     

            
குறுந்தகவல் வந்திருந்தது, அவருடைய மனைவியின் அலைபேசியிலிருந்து. "எக்ஸ்கியூஸ் மீ ஜென்டில்மென்..." என்றவாறு, குறுந்தகவல் என்ன என்று மேலோட்டமாகப் பார்த்தார். அடிக்கடி வருகின்ற குறுந்தகவல்தான்! 

                  
"அவசரம். என்னுடைய ஐ சி ஐ சி ஐ கார்டின் தற்போதைய கடவு எண் ( PIN) என்ன என்று எஸ் எம் எஸ் செய்யவும்." 
               
'மனைவியின் ஐ சி ஐ சி ஐ அட்டை கடவு எண் மனைவிக்கே தெரியாதா?' என்று கேட்கின்றீர்களா? 
                     
பாதுகாப்பு கருதி, ஜகன், அவர்களின் இருவருடைய கடன் அட்டை கடவு எண்ணையும் ஆன் லைனில் அடிக்கடி மாற்றி வைத்து விடுவது வழக்கம். ஆனால், ஒவ்வொரு முறை எண் மாற்றும் பொழுதும், அந்த எண்ணை, ஞாபகமாக தன்னுடைய அலைபேசியில், தேதியிட்டு, சேமித்து வைத்துவிடுவார்.   
      
இன்று காலை மனைவி மங்களம், தான் பண்டிகை கால பர்ச்சேஸ் செய்ய தி.நகர் செல்வதாகச் சொன்னதும், தன்னையும் அழைத்ததும், அவருடைய நினைவுக்கு வந்தது. 
             
"நான் வரவில்லை மங்களம். ஆபீசில் ஆடிட் பிரிபரேஷன் மீட்டிங். எனக்கு அனாவசியமாக கால் எதுவும் செய்யாதே. ஏதேனும் அவசரம் என்றால், எஸ் எம் எஸ் அனுப்பு." என்று சொல்லிவிட்டு வந்ததும் அவருடைய நினைவுக்கு வந்தது. 
             
அவசரமாக மங்களத்தின் கடன் அட்டை கடவு எண்ணை சேமிப்பிலிருந்து பார்த்து, எஸ் எம் எஸ் அனுப்பினார்.   

     
ஜகன் தன்னுடைய உரையை தொடர்ந்தார். "ஆடிட்டுக்கு வருகின்ற வெளி ஆடிட்டர்கள் கண்டு பிடிப்பதற்காக நாம் ஆங்காங்கே தூவி வைத்திருக்கின்ற 'நான் கன்பார்மிடி' என்னென்ன என்று நான் அறுதியிட்டுக் கூறப்போவதில்லை. ஆடிட்டர்களுடன் வருகின்ற நம் அலுவலக உள் மட்ட ஆடிட்டர்களுக்கு மட்டும் அவை தெரியும். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், உள் மட்ட ஆடிட்டர்கள் தீர்த்து வைப்பார்கள். எதற்கும் கவலைப் படாதீர்கள். நம் அலுவலகத்திற்கு ஐ எஸ் ஓ சான்றிதழ் நிச்சயம் கிடைத்துவிடும்."   
     
உறுப்பினர்கள் பலமாகக் கை தட்டினார்கள். பிறகு சில உறுப்பினர்கள் சில சந்தேகங்கள் கேட்டார்கள். எல்லாவற்றிற்கும் விளக்கம் அளித்தார் ஜகன்.   
              
அலைபேசி மீண்டும் தொடர்ந்து அதிர்ந்தது. குறுந்தகவல் அல்ல; யாரோ அழைக்கிறார்கள். எடுத்துப் பார்த்தார், அறிமுகம் இல்லாத எண்ணிலிருந்து அழைப்பு. எடுத்தால், கடன் தருகிறோம் என்றோ அல்லது ஏதேனும் நிறுவனம் அவர்களுடைய சூப்பர் சேமிப்பு திட்டம் குறித்தோ குழைந்து குழைந்து கூறுவார்கள் என்று தோன்றியது. பேசாமல் கட் செய்தார், அந்த அழைப்பை.   
         
மீட்டிங் முடிந்தது.   
               
எல்லோரும் டைனிங் ஹாலுக்கு சென்றனர். உணவு சாப்பிட்டதும், அலுவலகத்தில் கவனிக்கப்பட வேண்டிய சில அவசர வேலைகளைப் பார்த்து, பிறகு வீட்டிற்குக் கிளம்பினார், ஜகன்.   
            
*** *** *** 
    
வீட்டிற்கு வந்தவுடன், மனைவி மங்களத்திடம் கேட்டார், "ஷாப்பிங் எல்லாம் முடிச்சுட்டியா? என்னென்ன வாங்கினே, எவ்வளவு செலவாச்சு?" 

           
மங்களம்: " ஷாப்பிங் போனேன்; கையிலிருந்த பணத்திற்கு மட்டும் ஏதோ கொஞ்சம் டிரஸ் வாங்கினேன். ஆனால் பெரியதாக ஒன்றும் வாங்க முடியவில்லை!" 
           
ஜகன்: " ஏன்?"   
           
மங்களம்: "கடையில், என்னுடைய கைப்பையை, புடவை இரகங்கள் பார்க்கும் பொழுது, அந்த மேஜை மீது வைத்திருந்தேன். அதன் மீது ஒரு கண்ணும் வைத்திருந்தேன். ஆனால், எப்படிப் போச்சு, எப்போ போச்சு என்று தெரியலை, புடவைகள் எல்லாம் செலெக்ட் செய்து, பணம் கொடுக்கலாம் என்று கைப்பையை எடுத்தால், அதற்குள்ளே இருந்த ஐ சி ஐ சி ஐ கார்டைக் காணோம். ஒருவேளை வீட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டேனோ என்ற சந்தேகம். இருந்தாலும் கார்டு காணோம் என்று உங்களுக்கு போன் செய்து சொல்லலாம் என்று பார்த்தால், செல் போனையும் காணோம்! அப்புறம் யோசித்துப் பார்த்தேன். ஒரு தடவை விலை உயர்ந்த செல் போன் காணாமல் போனதிலிருந்து மலிவான செல் போன்களை மட்டும்தான் என் உபயோகத்திற்கு எடுத்துச் செல்வது வழக்கம். காணாமல் போன செல் நாம அறுநூற்றைம்பது ரூபாய்க்கு, ஆறு மாதங்களுக்கு முன்பு வாங்கியது. அப்புறம் ஐ சி ஐ சி ஐ கார்டு. அதனுடைய 'பின்' நம்பர் என்ன என்று எனக்கே தெரியாது. எடுத்துகிட்டுப் போன ஆளுக்கா தெரியப் போகுது?"    
  
            
ஜகன்: "அடப்பாவி! காணாமல் போன கார்டு, போன் எல்லா விவரமும் எனக்கு பொதுத் தொலைபேசியிலிருந்தாவது போன் செய்து சொல்லியிருக்கலாமே?"   
             
மங்களம்: "கடைக்காரரிடம் கெஞ்சிக் கூத்தாடி, புடவைக் கடையிலிருந்து போன் செய்தேன். நீங்க அந்த அழைப்பைக் கட் செய்து விட்டீர்கள்." 
      
ஜகன் அவசரம் அவசரமாக கம்பியூட்டரில் நெட் புகுந்து, மங்களத்தின் அக்கவுண்ட் எண் - கடவுச் சொல் கொடுத்து அக்கவுண்ட் பாலன்ஸ் என்ன என்று பார்த்ததில். காலையில் கணக்கில் இருந்த எண்பத்து எட்டாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது ரூபாய்கள், ஐந்தாறு வெவ்வேறு டிரான்சாக்ஷன்ஸ் முடிந்து, மீதி நூற்றுப் பதினொரு ரூபாய்கள் உள்ளன என்று காட்டியது! 
                 
(எங்கள் வாசகர்களில் துப்பறியும் நிபுணர் யாரேனும் இருந்தால், மங்களம் சென்ற புடவைக் கடை எது என்று கண்டு பிடித்துக் கூறலாம். முதல் துப்பறியும் நிபுணருக்குப் பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளது!) 
                         

18 கருத்துகள்:

  1. "பகல் கொள்ளைக்காரன் ஜவுளிக்கடை" - இதைக் கண்டுபிடிக்க ஷெர்லாக் ஹோம்ஸ் வேண்டுமாக்கும்?

    பதிலளிநீக்கு
  2. எங்கள் ப்ளாக்15 ஜனவரி, 2013 அன்று AM 9:04

    // பழனி.கந்தசாமி said...
    "பகல் கொள்ளைக்காரன் ஜவுளிக்கடை" - இதைக் கண்டுபிடிக்க ஷெர்லாக் ஹோம்ஸ் வேண்டுமாக்கும்?//

    பழனி கந்தசாமி சார். ஜவுளிக்கடைக்கும், கொள்ளைக்கும், கொள்ளைக்காரனுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. உண்மையில், ஜவுளிக்கடைக்காரரின் உதவி கொண்டு, திருடிய நபர்களைக் கண்டுபிடித்தார், எலெக்டிரானிக் சாமியார். மங்களம் ஜவுளி வாங்கிய கடை எது என்று மங்களத்திடமே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்தான்; ஆனால் வாசகர்களைக் கேட்டிருப்பதின் நோக்கம், வாசகர்களை சிந்திக்க வைப்பதற்குதான். அது மட்டும் அல்ல, சென்ற பதிவின் ஆசிரியர் பரிசாகக் கொடுக்க சில புத்தகங்கள் வாங்கியதாக எழுதியிருந்தார், அதையும் உடனே செய்துவிடலாம் என்றும் வேறொரு ஆசிரியர் நினைத்ததால்தான்!

    பதிலளிநீக்கு
  3. ஓ இது உண்மைக் கதையா... கடையைக் கண்டு பிடிப்பதற்கு ஏதேனும் க்ளு கொடுத்த மாதிரி தெரியவில்லையே... அப்படி என்றால் அந்தப் பரிசு எனக்குக் கிடையாதா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  4. உண்மைக்கதையா?

    கார்ட் தொலைந்தால் அதை உடனடியாக பிளாக் செய்ய வேண்டும். அதுதான் நல்லது.

    கொடுத்துள்ள தொலைபேசி எண் அந்த ஜவுளிக்கடையினுடையாதா? அப்படி என்றால் கடையை கண்டு பிடிக்கலாம்.

    பதிலளிநீக்கு

  5. (எங்கள் வாசகர்களில் துப்பறியும் நிபுணர் யாரேனும் இருந்தால், மங்களம் சென்ற புடவைக் கடை எது என்று கண்டு பிடித்துக் கூறலாம்.//


    Pothys in Chennai

    பதிலளிநீக்கு
  6. எங்கள் ப்ளாக்15 ஜனவரி, 2013 அன்று AM 11:54

    இராஜராஜேஸ்வரிக்குப் பரிசு. அவர் விலாசத்தை engalblog@gmail.Com மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.

    பதிலளிநீக்கு
  7. Hearty congratulations Rajarajeswari Madam. (Naan konjam late. because i'm a tubelight always. hi... hi...)

    பதிலளிநீக்கு
  8. bongu attam, othukka mudiyathu. Rajeswari kurina pathilai veliyidamal vaichirukkanum. innum yaranum solrangkalanu parthirukkanum. ithai ethirthu nan veli nadappu seykiren. :P:P:P:P

    பதிலளிநீக்கு
  9. T.Nagarle Nalli thavira engeyum ponathillai, porathum illai. kuttamnale allergy! :)))))

    பதிலளிநீக்கு
  10. ஆடிட்டரை ஏமாற்ற அவர் பொடி தூவினால் அவரை ஏமாற்ற வேர யாரோ பொடிவைத்துவிட்டான்.:)
    நல்லவேளை கண்டுபிடித்தார்களே.வெகு சுவாரஸ்யம்.
    வாழ்த்துகள் இராஜராஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  11. கதையோ கற்பனையோ, நிறைய படிப்பினை இருக்கு:)! இராஜராஜேஸ்வரிக்கு வாழ்த்துகள்!!

    பதிலளிநீக்கு
  12. என்ன அநியாயம்.பொதுவில் பகிர்ந்துகொண்டமை நல்லது.பலபேருக்குப் பாடம் இது !

    பதிலளிநீக்கு
  13. SMS. Chat இதுல எல்லாம் அடுத்த முனைல யார் இருக்காங்கன்னு தெரிய வாய்ப்பே இல்லை. அதனால முக்கியாம ஏதாவது சொல்லனும்னா பேசறதே நல்லது.
    பதிவோட தலைப்பு சூப்பர்! :)

    ராஜராஜேஸ்வரிக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  14. ஆஹா.... வடை போச்சே.... :(

    இராஜராஜேஸ்வரி ஜிக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. நல்ல கதை விழிப்புணர்வு கதை.
    திருமதி. இராஜராஜேஸ்வரிக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. பரிசளிப்புக்கும்

    வாழ்த்து அளித்த அனைவருக்கும்

    மனம் நிறைந்த இனிய நன்றிகள் ..

    பதிலளிநீக்கு
  17. //SMS. Chat இதுல எல்லாம் அடுத்த முனைல யார் இருக்காங்கன்னு தெரிய வாய்ப்பே இல்லை. அதனால முக்கியாம ஏதாவது சொல்லனும்னா பேசறதே நல்லது. //

    உண்மைதான் ரொம்பப் பெரியவர்களும், புத்திசாலிகளும் சாட்டிலும் , மெயிலிலும் தவறாகப்புரிந்துகொண்டு வருத்தத்தைக் கொடுக்கிறார்கள்...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!