Friday, February 8, 2013

கொசு புராணம்

               
இந்த பதிவு அனுப்பப்படும் நேரத்திலிருந்து உங்களுக்கு (ஆமாம் சப்ஜெக்ட் என்பதற்கு சரியான தமிழ் வார்த்தை என்ன ?) எடுத்துக் கொண்ட பொருளின் தாக்கம் தெரிய வரலாம்.  
             
 இந்த ஆண்டு பொங்கல் நேரத்தில் இருந்ததை விட இப்பொழுது நிறைய கொசுத் தொல்லை இருக்கிற மாதிரி எங்களுக்குத் தோன்றுகிறது.


                 
வீட்டில் இருக்கும் உறுப்பினர்களுடன் வந்திருந்த விருந்தினர்களையும் கலந்து ஆலோசித்ததில்,   அவரவர்க்குத் தோன்றியதை சொன்னார்கள்.  அவற்றில் மிக அபத்தம் என்பதை நாங்களே விட்டு விட்டோம்.  இங்கு போட்டிக்கு தேர்ந்து எடுப்பதற்காக, நாங்கள் கொடுத்திருக்கும்  பட்டியலிலிருந்து அவை எவ்வளவு அபத்தமாக இருந்திருக்கக் கூடும் என்பதை ஒரு வாறு நீங்கள் ஊகித்துக் கொள்ளலாம். 
            
1) நம் ஊர் படக் கொட்டகையில் விஸ்வரூபம் படம் வெளியிடப் படலாம் என்ற விவரம் தெரிந்தவுடன், பக்கத்தில் இருக்கும் சின்ன ஊர்களிலிருந்து கரும்பு கட்டை கடித்து, மென்று கொண்டு வந்த மக்கள் அங்கங்கு கரும்புத் தோகையும் மென்ற கரும்புமாக குப்பைகளை சேர்த்து விட்டதால், கொசுக்களும் பல்கிப் பெருகி விட்டன.
                
2) அப்படி படம் வெளியிடப்பட்டால், பார்ப்போருக்கு படக் காட்சிகளை விட கொசுக்கடி மட்டுமே நினைவுக்கு வர வேண்டும் என்று யாரோ செய்த சூழ்ச்சி .  
               
3) பொங்கலுக்கு  கோயம்பேடு சந்தைக்கு லாரி லாரியாக வந்த இறங்கிய ஜவ்வந்தி பூக்களை என்ன செய்வது என்று யோசித்த அதிகாரிகள் அவற்றை அரைத்துக் கொசு மருந்தாகத் தெளிக்கப் போய் அதன கொசு விரட்டும் ஆற்றலை விட கொசு ஈர்ப்பு அதிகரித்ததன் விளைவு.  

4) உள்ளாட்சித் தேர்தல்கள் நெருங்கி வரலாம்.
5) புது கொசு மருந்து ஒன்று அறிமுகப படுத்தப் படலாம்.

6) சென்ற முறை தலைவரின் பிறந்த நாளுக்கு மரம் நடுவதற்கு நம் வீட்டு மரக் கிளைகளை வெட்டினார்கள்.  இந்த முறை கொசுக்களின் உதவியுடன்  கொண்டாட்டங்கள் இருக்கலாம் . 

7) உங்கள் பேட்டை குப்பை காண்டிராக்டு முடியப் போகிறது 
8) இப்பொழுது உபயோகத்தில் இருக்கும் மருந்துகளுக்கு கொசுக்கள் பழகிவிட்டன.  அந்த மருந்து தயாரிப்பவர்களே அதில் கொசு உரம் போடுகிறார்கள். கொசு வத்தி எரிந்து முடிந்த உடன் ஒரு மகா வீரியத்துடன் கொசுக்கள் கடிப்பதை கவனித்திருக்கிறீர்களா ?
  
9) பொங்கலுக்கு எல்லோரும் வீடுகளை சுத்தம் செய்து பெயிண்டு அடித்து விட்டதனால் கொசுக்களுக்கு   தாங்கும் இடம் இன்றி இன்றி நம் மேல் படை எடுக்கின்றன 
10) மழை இன்மையால் செடிகள் வாடி விட்டதனால் செடிகளின் சாற்றை உறிஞ்சிய கொசுக்கள் ரத்தம் உறிஞ்சிகளாகி விட்டன 
              
11) பாம்புகள் மற்றும் அவைகளின் இரையாகிய  தவளைகள் பெருகி பிட்டதால், அவை தமக்கு உணவு கிடைத்துக் கொண்டிருக்க கொசுக்களை எதோ ஒரு வழியில் பெருக வகை செய்து விட்டன 
12) டெங்கு ஒழிந்தது என்ற அறிக்கை பார்த்த  எதிரிகள் செய்த சூழ்ச்சி.
13) இவை டெங்கு பரப்பும் கொசுக்கள் அல்ல வேறு மன  நோய்களை உண்டாக்கக் கூடியவை.   கற்பழிப்புக் குற்றங்கள்  பெருகி விட்டதற்கு இதுவே காரணம்.
             
14) கொசுக்கள் பெருகுவதை தடுப்பது பற்றிய ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தவர்களின் அஜாக்கிரதை.  
              
15) பெட்ரோலில் எத்தனால் கலப்பது போல சமையல் எரி வாயுவிலும் சாண எரி வாயு கலப்பதனால் கொசுக்கள் வீட்டுக்குள் ஈர்க்கப் படுகின்றன.
16) வீட்டில் சமையல் காஸ் எரியும் பொழுதே கொசுக்களை அழிக்க முடிந்தால் ........என்ற ஆராய்ச்சியின் ஒரு கட்டம் - அதே முறையில் கொசு வளர்ப்பு !
17) கொசு அடிக்கும் மட்டை விற்பனை அதிகரிப்பு செய்ய முயற்சியோ?
             
18) எங்களை, 'தங்களை'ப் பற்றி ஒரு பதிவெழுத எப்படியாவது செய்துவிட வேண்டும் என்று குரோம்பேட்டை நாற்பத்து நான்காவது வட்ட கொசுக்கள் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியிருக்குமோ?
      
கொசுக்கள் பெருகியதற்கு என்ன காரணமாக இருக்கும்? வாசகர்களின் கருத்துகளும்  வரவேற்கப் படுகின்றன.
 
 

20 comments:

melur raja said...

நான் அடிக்கடி கேட்கும் கேள்வி இது தான் தெருவில் படுத்து உறங்கிய போது இல்லாத கொசு இப்போது எப்படி வீட்டிலும் படுக்க விடாமல் இப்படி பெருகியது ? யாராவது சொல்றாங்களா பார்க்கலாம்.

Sasi Kala said...

சரியான காரணம் தெரியவில்லை தெரிந்தவர் சொன்னால் கேட்கலாம்.

திண்டுக்கல் தனபாலன் said...

சாதியில்லை...
மதமில்லை...
தெரிந்தது ரத்தம் சிவப்பு...
புரியும் வரை
தொடரும் எங்கள் ஆப்பு...

-கொசு

கோவை2தில்லி said...

திறந்த சாக்கடைகளால் இருக்கலாம்.....

இராஜராஜேஸ்வரி said...

http://jaghamani.blogspot.com/2013/02/blog-post_6.html

சர்வதேச யானைகள் தங்க்ளை வரவேற்கின்றன ...

இராஜராஜேஸ்வரி said...

எந்திரன் படத்தில் சிட்டி ரோபோமாதிரி கடித்த கொசுவை தேடிக்கண்டுபிடித்து இந்த பதிவை படிக்கச்சொல்லாம் ...

Geetha Sambasivam said...

ஹாஹாஹா, இன்றைய இந்தியாவின் "தலை"யாய பிரச்னை இதே! :P :P :P :P

அது சரி, உங்கள் கேள்விகளில் நாலு மாடி தாண்டி வந்தும் கடிக்கும் கொசுக்களை என்ன செய்யலாம்னும் ஒரு கேள்வி சேர்த்துக்கோங்க. விடை தெரியலைனா மண்டை வெடிச்சுடும். :))))))

RAMVI said...

(கொசுக்) கடி பதிவு.......

ezhil said...

ஆமாங்க... எங்க ஏரியால மட்டும்தான் அதிகமாயிடுச்சின்னு நினைத்தேன் ..அப்போ இது தமிழ் நாட்டோட பிரச்சனையா?
கால நிலை மாற்றம் தவறானதும் ஒரு காரணமாயிருக்கலாமோ? பனி அதிகமாக இருக்கும் ஜனவரி,பிப்ரவரியில் கோவையில் வியர்த்துக் கொட்டுகிறது..
கொசுவின் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற காலமோ?
கொசுவின் லார்வாக்களை சாப்பிடும் தவளை இனமும், தும்பிகளும் குறைந்த காரணமாயிருக்கலாம்.ஆனா திடீர்னா அவை காணாமல் போயிருக்கும்

Madhavan Srinivasagopalan said...

கொசுவா....... அப்டீன்னா என்னாது ?

middleclassmadhavi said...

OrE veettukkuLLE athu ennai mattum En kadikiRathunnu nAnE ArAichiyil iukkEn! :-))

மதுரை அழகு said...

இதெல்லாம் ஓவர் நக்கல்...!

s suresh said...

உங்க கடிக்கு கொசுக்கடி தேவலை! நல்ல ஆராய்ச்சி!

Anonymous said...

//'தங்களை'ப் பற்றி ஒரு பதிவெழுத எப்படியாவது செய்துவிட வேண்டும் என்று குரோம்பேட்டை நாற்பத்து நான்காவது வட்ட கொசுக்கள் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியிருக்குமோ?//

hahahaha! சூப்பர்! :))
நான் இப்போ தள்ளி இருக்கறதால காரணம் தெரியல. பக்கத்துல வந்ததும் சொல்றேன். :)

பால கணேஷ் said...

எத்தனை கொசுக்கள் சேர்ந்து தூக்கினால் ஒரு மனிதனை வேறிடம் கடத்த முடியும் என்று ஆராய்வதற்காக தங்கள் ஜனத்தொகையைப் பெருக்கி சோதனை செய்து வருகின்றனவோ என்னவோ...! (யப்பா... என்னா ஆராய்‌ச்சி!)

கோமதி அரசு said...

வெளியில் குப்பைகள் உடனுக்கு உடன் அப்புறப்படுத்தாதது ஒரு காரணம்.

வீட்டில் அடைசல் அதிகமானதும், , சாம்பிராணி அடிக்கடி வீட்டில் காட்டப் படாததும் காரணம்.

கழிவுநீர் குட்டைகளில் அடிக்கடி மருந்து அடிக்க வேண்டும்.
திறந்த சாக்கடைகளை மூட வேண்டும்.

வீட்டில் தோட்டத்தில் குப்பைகளை அகற்றி செடி, கொடிகளை கத்தரித்து அடர்த்தி இல்லாமல் போதிய வெளிச்சம் காற்று வருவது மாதிரி வைத்து இருந்தால் கொசு கட்டுப்படும்.
சுற்றுபுறத் தூய்மை, வீட்டுத்தூய்மை கொசுவை ஒழிக்கும் என்று நினைக்கிறேன்.

உங்கள் பதிவு நகைச்சுவையாக இருந்தது.

ஹுஸைனம்மா said...

//சப்ஜெக்ட் என்பதற்கு சரியான தமிழ் வார்த்தை என்ன ?//

இஸ்கூல்ல லெட்டர் எழுதும்போது, “பொருள்:” அப்படின்னு எழுதுவோம். :-))

//இங்கு போட்டிக்கு தேர்ந்து எடுப்பதற்காக, நாங்கள் கொடுத்திருக்கும் பட்டியலிலிருந்து அவை எவ்வளவு அபத்தமாக இருந்திருக்கக் கூடும்//

ஆமா, பின்னே?? ”போட்டியில் தேறாதவை” என்ற தலைப்பில் விடுபட்டவற்றையும் இங்கு எழுதிவிடாமல் இருந்ததற்காகவே “எங்கள்” வாசகர்கள் நன்றி நவிலுதல் விழா எடுக்கவேண்டும்!!

பதினெட்டுப் பட்டியையும்... ச்சே.. ஸாரி.. பட்டியலிட்ட காரணங்களையும் வாசித்ததும், உணர்ச்சி மேலீட்டில் கண்ணீர்ப் பிரவாகமே பொழிஞ்சுட்டுது!! எப்பேர்ப்பட்ட (பதிவு)ஆசிரியர்களைக் கொண்டிருக்கிறோம் நாம்!! கண்டிப்பாக நானும் உருப்படியாகப் பதிவெழுதும் டெக்னிக்கைப் படித்துவிடுவேன் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!!

அப்புறம்.. ஒரு ரகஸ்யம் சொல்றேன் கேளுங்க... இப்பல்லாம் (குளிர்காலத்தில் மட்டும்) அபுதாபில எங்க ஏரியாலயும் கொசு வந்துடுச்சு!! மாலை என்ன, காலையிலேயே வீட்டில் (இந்தியாவில் இருந்து இம்போர்ட் செய்யப்பட்ட) டென்னிஸ் மட்டையோடு ப்ராக்டீஸ் செய்கிறோமாக்கும்!! இங்கயும் ஆல்-அவுட் போன்ற லிக்விடெல்லாம் கிடைக்குதாக்கும்!! :-)))))

வல்லிசிம்ஹன் said...

கொஞ்ச நாள் மறந்துட்டு இருக்கலாம்னு நினைச்சேனே. கொண்டுவந்துட்டீங்களே
கொசுவப் பதிவிலே:( :)

Madhavan Srinivasagopalan said...

//இஸ்கூல்ல லெட்டர் எழுதும்போது, “பொருள்:” அப்படின்னு எழுதுவோம். :-))//

Doesn't that mean 'Object' (rather than subject) ?

ஹுஸைனம்மா said...

//Doesn't that mean 'Object' (rather than subject) ?//

சார், ஆங்கிலத்தைப் போலவே தமிழ் வார்த்தைகள் பலவற்றிற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் உண்டுதானே? ‘பொருள்’ என்பதற்கு - object, subject என்ற இரண்டு அர்த்தங்களும் - இடத்தைப் பொறுத்து - வரும்.

ஏன், subject என்கிற ஆங்கில வார்த்தைக்கே பல ‘பொரு(ட்க)ள்’ உண்டே. And you cannot "object" it!! :-)))))))

"பொருட்”குற்றம் இருப்பின், தெளிவுபடுத்துங்க. நன்றி.

Close Match and Related Words (http://www.dictionary.tamilcube.com/index.aspx)
subject : அடிப்படுத்து , கீழடக்கு , கீழ்ப்படுத்து , ஆட்படச்செய் , செயலுக்கு உள்ளாக்கு , விளைவுக்கு உரியதாக்கு .
subject : குடிமகன் , குடிமகள் , பிரஜை , ஆளப்படுபவர் , ஆட்சிக்கு உட்பட்டவர் , நாட்டில் மன்னரல்லாத ஒருவர் , வாழ்குடி , குடியுரிமையாளர் , குடியாள் , குடியானவர் , குடியாண்மை ஏற்பவர் , கீழுரிமையாளர் , அடங்கியவர் , ஆட்பட்டவர் , ஆணைக்கு உட்பட்டவர் .
subject : பொருள், உரிப்பொருள்.
subject : பொருள் , குடிமகன் , உட்பட்ட .
subject : அடிமைப்பட்ட , கீழ்ப்பட்ட
subject : குடிமகன், விவாதிக் கப்படும் விஷயம்.
subject : எழுவாய் .
subject : கீழடங்கிய , கட்டுப்பட்ட , அடிமையான , அடக்கு , அனுபவிக்க செய் , தாங்கிக் கொள்ளச்செய் .
subject : பாடம் , குடிமகன் .
main subject : பிரதான பாடம் . வினை முதல் , (in gram .) subject .
விளக்கிக் காட்ட , to explain a subject . அதை எடுத்துப்பேசினான் , he took up the subject .
நுதலிய பொருள் , the subject or contents of a book .

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!