சனி, 4 மே, 2013

பாசிட்டிவ் செய்திகள் ஏப்ரல் 28, 2013, முதல் மே , 2013 வரை.

             
எங்கள் B+ செய்திகள்.  

- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.   

- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.   


- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.   


- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....  
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
1) கல்லூரி முதல்வர் கனவுடன் போராடும் பெண் மெக்கானிக்

வடபழனி துரைசாமி சாலையோரத்தில், வாகனங்களுக்கு கீழே படுத்து வேகமாகவும், லாவகமாகவும் பழுது பார்க்கும், பெண் மெக்கானிக் ஜெசிந்தாவின் செயல்பாடுகள், பார்ப்பவர்களுக்கு ஆச்சரியம் அளிக்கத் தான் செய்யும். ஆனால் அவருக்கு, வாகனங்களில் பழுது பார்க்கும் பணி அனைத்தும் அத்துப்படி.   
                    
வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளும் அவரிடம் உரையாடியதில் இருந்து...

* வாகனங்களில் என்னென்ன பழுதுகளை பார்க்கிறீர்கள்?ஆட்டோ, வேன் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் கிரீஸ் அடிப்பது, ஆயில் மாற்றுவது, கிளட்ச் ஒயர் மாற்றுவது மற்றும் வாகனங்களில் ஏற்படும் சிறிய அளவிலான பழுதுகளை சரி பார்ப்பேன்.

* யாரிடம் தொழில் பழகுனீங்க?
என் கணவர் ஜெயக்குமார் தான் என் குரு; அவர் ஆட்டோ ஓட்டுனர். வாகனங்களில் பழுது பார்ப்பதில் அடிப்படையான விஷயங்களையும், வாகனங்களுக்கு கிரீஸ் அடிப்பது குறித்தும் சொல்லி தந்தார். அதன் பின், அவ்வப்போது பழுது பார்த்துக் கொண்டே, நிறைய கற்று வருகிறேன். 
    
* மெக்கானிக் பணியில் விருப்பம் வந்தது எப்படி?
சூழ்நிலை தான் விருப்பமாக மாறியது. எனக்கு யாரும் உதவ முன் வராத போது, மெக்கானிக் பணியை ஆர்வத்துடன் எடுத்து செய்தேன். ஆறு ஆண்டுகளுக்கு முன், என் மகன், வீட்டின் மேல்தளத்தில் இருந்து கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 4 லட்சம் ரூபாய் தேவைப்பட்ட போது, நான் வேலை பார்த்த நிறுவனம் எனக்கு உதவவில்லை. போதிய பணம் இல்லாததால், என் மகன் இறந்துவிட்டான். அவனது இறப்பே என்னை, சுய தொழில் துவங்க தூண்டியது. அந்த நிமிடம், அந்த நிறுவனத்தை உதறிவிட்டு, இந்த தொழிலில் இறங்கி விட்டேன்.
                  
* நிறுவனத்தில் வேலை பார்த்தீர்களா?
ஆமாம். டி.எம்.எல்.டி., என்கிற தொழிற்படிப்பை முடித்துவிட்டு, தனியார் நிறுவனம் ஒன்றில், "சிஸ்டம் ஆப்ரேட்டராக' பணி புரிந்தேன்; பின், எம்.ஏ., முடித்தேன். தற்போது எம்.பில்., படித்து வருகிறேன். பிஎச்.டி., படிக்க வேண்டும் என்பது லட்சியம்.
                
* படிப்பு, நிறுவன வேலையெல்லாம் உதறிவிட்டு நடைபாதையில் எப்படி...?
                 
துவக்கத்தில் சற்று கூச்சமாக தான் இருந்தது. பழுது பார்ப்பதில் ஆர்வம் வந்ததில், கூச்சம் தானாக போனது. பழுது பார்க்க வருவோரின் பாராட்டுகள், நம்பிக்கையையும், துணிச்சலையும் தந்தன.
            
* மீண்டும் நிறுவன வேலைகளுக்கு செல்ல விருப்பமில்லையா?
                                         
                      
நான் இங்கு பார்க்கும் தொழிலில், தினமும், 500 ரூபாய் கிடைக்கிறது. என் மகளை பள்ளிக்கு அழைத்து சென்று வருவதற்கும், என் குடும்பத்தை பார்த்து கொள்ளவும் முடிகிறது. பிஎச்.டி., முடித்த பின், மீண்டும் கல்லூரியில் பணி புரியலாம் என்று யோசித்து வருகிறேன். கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்து பணிபுரிந்து, கல்லூரி முதல்வர் பதவி வரை உயர வேண்டும் என்பதே என் லட்சியம். ( தினமலர் )
                  
2) சிவகாசி.
                 
வியர்வை சிந்துபவர்களுக்கு உயர்வைதரும் ஊர்.
உழைப்பு எனும் உதிரம் சிந்துபவர்களால் வீட்டிற்கு மட்டுமல்ல நாட்டிற்கே அந்நிய செலவாணி என்ற படியளக்கும் கந்தக பூமி.
மண்தான் வறட்சியானது, மக்களின் மனமோ வளமானது.
தன்னை வளர்த்து ஆளாக்கிய ஊருக்காக முடியாவிட்டாலும், யாருக்காவது நன்மை செய்யவேண்டும் என்ற துடிப்பு கொண்ட மனிதர்களை கொண்ட பூமி. 
                  
இப்படிப்பட்ட சிவகாசியை விரும்பி ஏற்றுக்கொண்ட ஒருவரது சேவையால் இன்று இந்தியாவே திரும்பி பார்க்கிறது.

அவர்தான் நாட்டிலேயே அதிக அளவு தனி நபர் கண்களை தானமாக திரட்டி தந்தவரும், தந்து வருபவருமான பட்டாஸ்நகர் அரிமா சங்கத் தலைவர், கண்தானக்குழு பட்டயத் தலைவருமான ஜெ.கணேஷ்.  
               
இதுவரை 2200 பேரிடம் இருந்து கண்களை தானமாக பெற்றதன் மூலம் 4400 பேர் பார்வை பெறுவதற்கு காரணமாக இருந்துள்ளார். தனது இந்த சேவைக்காக டாக்டர் பட்டம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும், பட்டங்களையும் பெற்றவர்.

ஒருவர் தனது கண்களை தானம் செய்வதாக எழுதி கொடுத்திருந்தால் கூட, இறந்த பிறகு அவரது குடும்ப உறவுகளைத் தாண்டி கண்களை தானமாக பெறுவது என்பது சென்னை போன்ற பெரு நகரங்களிலே அரிதான விஷயமாக இருக்கும் போது, சிவகாசியில் இருந்து கொண்டு இது எப்படி சாத்தியம் என்ற கேள்விக்கு வந்த உற்சாகமான ஒரு வரி பதில், நல்ல மனதோடு முயற்சித்தால் முடியாதது எதுவுமில்லை என்பதுதான்.
               
இன்னும் கொஞ்சம் விவரமாக என்றவுடன்.........
             
நான் சிவகாசியில் பட்டாசு தொழில் செய்யறேன், இந்த தொழிலைத் தாண்டி ஒரு ஆத்ம திருப்தி வேண்டும் என்பதற்காக 18 வருஷத்துக்கு முன்னாடி சிவகாசி லயன்ஸ் கிளப்பில் சேர்ந்தேன். உறுப்பினரா சேர்ந்த புதுசல தையல் மிஷின் கொடுப்பது, பசங்களுக்கு பாடபுத்தகம் வழங்குவது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துட்டு ஓடிவந்துட்டு இருந்தேன்.

சங்கத்தோட தலைவர்ங்ற பொறுப்புக்கு வந்ததும், ஏதாவது உருப்படியா செய்யணும்னு தோணுச்சு. அந்த நேரம் மதுரை அரவிந்த் கண் ஆஸ்பத்திரி நிர்வாகியை பார்க்க போயிருந்தேன், அவர் கார்னியா பிளாக்குக்கு கூட்டிட்டு போனார், நாலைஞ்சு வயது குழந்தைங்கள்ல இருந்து வயசானவங்க வரை பலர் தானமா வர்ர கண்ணுக்காக காத்திட்டு இருந்தாங்க..
             
ஒரு நாள் இரண்டு நாள் அல்ல பல வாரங்கள், மாதங்கள், ஆண்டுகளாக காத்திருப்பவர்களும் அதில் உண்டு.
               
இன்றைக்கு நமக்கான கண்வந்துரும், நாளைக்கு பார்வை கிடைச்சுடும் என்ற அவர்களது ஏக்கத்தை அருகில் இருந்து பார்த்தேன். அன்று என் தூக்கத்தை தொலைத்தேன்.
                   
எத்தனையோ பேர் தினம், தினம் இறந்து போகிறார்கள். அவர்கள் யாருமே கண்களை தானமாக தரவில்லையா, நடிகர்கள், அரசியல்வாதிகள் பிறந்த நாளின் போது நிறைய பேர் கண்களை தானமாக தருவதாக பதிவு செய்கிறார்களே, அவர்கள் யாரும் இறப்பது இல்லையா என்று மருத்துவரிடம் கேட்டபோது அதெல்லாம் "பப்ளிசிட்டிக்காக' செய்பவை, சுத்த வேஸ்ட் என்றார். எனக்கு ஆச்சர்யத்தைவிட அதிர்ச்சியே மேலோங்கியது.
                 
இறந்தவர்களின் நெருங்கிய உறவினர்களிடம் மனமாற்றம் ஏற்பட்டால்தான் இந்த கண்தானம் என்பது நடக்கும், எங்களுக்கு கண்கள் கிடைக்கும் என்றார் இறுதியாகவும், உறுதியாகவும்.  
              
கனத்த இதயத்துடன் சிவகாசி திரும்பியதும் இனி கண்தானங்களை பெறுவதே பிரதான வேலை என்று தீர்மானித்துக்கொண்டேன்.   
               
கண் தானத்தை வலியுறுத்தி ஊர் முழுவதும் டிஜிட்டல் போர்டு, பேனர், பல ஆயிரம் நோட்டீஸ், ஸ்டிக்கர், பஸ் பின்புறம் விளம்பரம் என்று நிறைய செலவழித்தேன் ஆனால் ஒரு கண்கூட தானமாக வரவில்லை
வேறு மாதிரி முயற்சிப்போம்னு கண்தானத்தை வலியுறுத்தி கோயில், சர்ச், மசூதி என்று எல்லா இடங்களிலும் எனது அணியோடு போய் பேசினேன், ம்ஹீம் பிரயோசனமில்லை.
                    
பிறகு மாணவர்களை தயார்படுத்தினேன், அவர்கள் கண்களை பத்து நிமிடம் கட்டிவிட்டு அங்கேயும், இங்கேயும் போகவிட்டு, இந்த பத்து நிமிட பார்வை இல்லாததையே நம்மால் தாங்க முடியவில்லையே, வாழ்க்கை முழுவதும் பார்வை இல்லாமல் இருப்பதை எப்படி தாங்கமுடியும், இறந்த பிறகு புதையுண்டோ, எரிக்கப்பட்ட யாருக்கும் பிரயோசனமில்லாமல் போகக்கூடிய கண்களை தானமாக கொடுத்தால் இரண்டு பேர் கண்தானமாக பெறுவார்களே என்று சொன்னதும் அந்த வார்த்தை நிறையவே பலன் தந்தது.
                    
அவர்கள் வீட்டைச் சேர்ந்தவர்கள் இறந்ததும் அவர்களே பேசி எங்களை வரச் சொல்லி கண்களை எடுத்துக்கொள்ளச் சொன்னார்கள், அப்படிக் கிடைத்த கண்கள் பொருத்தப்பட்ட இருவர் பார்வை கிடைத்த மகிழ்ச்சியை பரவசமாக எங்களிடம் பகிர்ந்து கொண்ட போது, இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கண்களை தானமாக பெறுவதில் இன்னும் தீவிரமானேன்.
                   
கண்களை தானமாக பெற்றவர்களை பேசவைப்பது, கண்களை தானமாக தந்தவர் பெயரைப் போட்டு போஸ்டர் அடித்து அவரது குடியிருப்பு பகுதி முழுவதும் நன்றியும், பாராட்டு சொல்லியும் ஒட்டுவது, கண்தானம் செய்தவரின் புகைப்படம் ஒட்டிய ஷீல்டை உள்ளூர் பிரமுகர் கையால் சம்பந்தபட்டவரின் குடும்பத்தாரிடம் கொடுத்து கவுரவிப்பது என்றெல்லாம் செய்தபின் தானமாக கண்கள் கிடைத்தது.
                         
தானமாக கிடைக்கும் கண்கள் தாராளமாக கிடைக்க என்ன செய்வது என்று யோசித்தேன், அப்ப நீங்கதான் எனக்கு உதவ முடியும் என்று சுடுகாட்டில் இருப்பவர்கள், ஆம்புலன்ஸ் ஒட்டுபவர்கள், ஆஸ்பத்திரி எமர்ஜென்சி வார்டில் வேலை செய்பவர்கள் போன்றவர்களிடம் யாசித்தேன்.
               
இதன் காரணமாக ஊருக்குள் யார் இறந்தாலும் தகவல் வந்துவிடும்.
இறந்தவர்கள் வீட்டில் உள்ள மாணவர்கள் எப்படியும் பேசி வைத்திருப்பார்கள்.
                 
இல்லாவிட்டாலும் கவலை இல்லை என்று மாலையோடு போய் மரியாதை செய்தபிறகு, உரியவர்களிடம் பக்குவமாக பேசி கண்களை தானமாக பெற்றுவிடுவோம். இறந்து போனது பெண்களாக இருந்தால் என் மனைவி பிரேமலதா தலைமையிலானவர்கள் போய் பேசி விடுவார்கள்.
                   
நாங்களே சோகத்துல இருக்கோம், கண்ணை புடுங்க வந்துட்டான்ய்ங்க என்று கோபாவேசமாகத்தான் பேச ஆரம்பிப்பார்கள். ஆனால் அவர்களிடம் பொறுமையாக பேசி, பேசி கண்களை தானமாக பெற்றுவிடுவோம்.
                    
இப்படி ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக கண்களை தானமாக தரும் முதல் மாவட்டம் என்ற பெயரை இவர் சார்ந்த விருதுநகர் மாவட்டம் பெற்றுள்ளது. இப்போது சிவகாசி மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, மதுரை, தேனி, கன்னியாகுமரி, ஈரோடு, கோவை வரை பிரச்சாரத்திற்கு செல்கிறார். அங்குள்ள பள்ளி, கல்லாரி மாணவர்களிடம் மட்டும் இதற்காகவே இதுவரை 585 கருத்தரங்குகள் நடத்தியுள்ளார்.   
                      
கருத்தரங்கு என்பது கேள்வி, பதிலாக. பதிலுக்கு ஒரு பரிசாக நடக்கும், முடிவில் மாணவ, மாணவியரின் இதயத்தில் கண்தானம் குறித்து ஆழமாக பதிவு செய்வதாக இருக்கும்.
                         
இது எனக்கு கிடைத்த வெற்றி அல்ல மக்களின் விழிப்புணர்வுக்கு கிடைத்த வெற்றி எனது அணியைச் சேர்ந்த டாக்டர் ராமன், ஒரு பைசா கூட வாங்கிக் கொள்ளாமல், இதுவரை 800 பேரின் கண்களை எடுத்து தந்துள்ளார். நள்ளிரவில் போன் வந்தால் கூட நானாச்சு என்று ஒடோடி சென்று உரிய வேலைகளை பார்க்கும் நண்பர்கள் ராமர், தனசேகரன், கணேசன், ராம்தாஸ், நர்ஸ் ராணி மற்றும் என் மனதை புரிந்து கொண்டு எனக்கு பக்கபலமாக இருக்கும் மகன் கோபி அவர்களின் ஒத்துழைப்பால் கிடைத்த வெற்றி.
                                          
                     
ஆனாலும் இதனை வெற்றி என்று சொல்ல முடியாது காரணம் பார்வையில்லாதவர்கள் இந்த பாரத தேசத்தில் பல ஆயிரம் உள்ளனர். கண்களை தானமாக தருபவர்கள் வெறும் சில நூறு பேர்களாகவே இருக்கின்றனர், அதுவும் இப்போதுதான்.இந்த கண்தானம் என்ற இயக்கம் அனைவருக்கும் பரவி, பெருகி நாட்டில் பார்வையற்றவர்களே இல்லை என்ற நிலை வரவேண்டும், அதுவரை எனது கைகளும்,இதயமும் கண்களை தானமாக கேட்கும் இல்லையில்லை கெஞ்சும்...   
                     
இது குறித்து மேலும் விளக்கம் பெற தொடர்பு கொள்ளவும் ஜெ.கணேஷ் போன் எண்: 9843088828.
                  
பெட்டிச் செய்தி ஒன்று... பார்வையற்றோரே இல்லையெனும் பாரதம் படைப்போம்.
                        
ஒருவர் கண்தானம் இருவர் வாழ்வில் பிரகாசம்.

மண்ணுக்கும், நெருப்புக்கும் கொடுப்பதை மனிதர்க்கும் கொடுப்போம்.
இறந்தும் இறவாப்புகழுடன் வாழ இருவர் வாழ்வில் ஒளியேற்ற கண்தானம் செய்வோம்.
                     
முயற்சி செய்யுங்கள், முடியும் உங்களால்.   
                    
பெட்டிச் செய்தி இரண்டு:

* ஒருவர் இறந்த பிறகே கண்களை தானமாக வழங்கமுடியும்.

* இறந்த நான்கு மணி நேரம் முதல் ஆறு மணி நேரத்திற்குள்ளாக கண்கள் அகற்றப்பட வேண்டும்.

* போன் செய்தால் போதும் கண்தானம் பெறுவோம் நேரில் வந்து கண்களை எடுத்துச்செல்வர்.

* கண்களை எடுக்க தனி அறையோ, இடமோ தேவையில்லை.

* பத்து நிமிடத்தில் கண்கள் எடுக்கப்பட்டுவிடும்.

* கண்தானம் பெறுவோர் வரும்வரை மின்விசிறியை நிறுத்திவிட்டு கண்களின் மீது ஈரமான பஞ்சை வைக்கவும். குளிர்சாதன வசதியிருந்தால் அதனை ஒடவிடவும்

* ஆண், பெண் இருபாலர்களும் எந்த வயதினரும் கண்களை தானம் செய்யலாம்.

* மஞ்சள் காமாலை, எய்ட்ஸ், மூளைக்காய்ச்சசல், வெறிநாய்கடியால் இறந்தவர்கள் மட்டும் கண்களை தானம் செய்யமுடியாது.

* கண்தானம் செய்ய முடிவு செய்தவர்கள் உள்ளூர் கண்மருத்துவமனையை உடனடியாக தொடர்பு கொள்ளவும்.
                
3) கோவையை சார்ந்த தாய் மரம் என்ற குழுவினர் மரம் வளர்ப்பதை ஊக்குவிப்பதிற்காக ஒரு புதிய அமைப்பு ஒன்றை நிறுவி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.அதன் செயல் வடிவம்
பின்வருமாறு
                  
உங்கள் நிலத்திலோ, வீடுகளிலோ பயன்படுத்தாத உபரி இடம் இருந்தால் மரம் நடுவதற்கு அனுமதியுங்கள்.
                      
மரம் நடுவதற்கு ஏற்ற இடம் உருவாக்கி கொடுக்க வேண்டும் என்பதே உங்களிடம் நாங்கள் எதிர்ப்பார்ப்பது. ப்ரணவ பீடம் அறக்கட்டளை நட்சத்திர மரங்களை இலவசமாகவே வழங்க இருக்கிறது. உங்களுக்கு மரம் நடும் ஆர்வம் இருந்தால் எங்களுடன் இணைந்து கொள்ளலாம். மற்றவை இயற்கை தானாகவே பார்த்துக்கொள்ளும்.
                   
சில இயற்கை அமைப்புக்கு உகந்த நிலையில் நட்சத்திர மரக்கன்றுகளை நடுவதன் மூலம் சுற்று சூழலை தன்வசமாக்கி மரங்கள் ஆதிக்கம் செலுத்த துவங்கும். அதனால் மாசுபடுதல் குறையும் மற்றும் தாவர இனப்பெருக்கம் அதிகரிக்கும்.
                    
இந்த பணியை இலவசமாகவே செய்கிறோம். மரக்கன்றுகள் இலவசம். முதல் சில வருடங்களுக்கு இலவச பராமரிப்பும் செய்கிறோம். குறைந்த பட்சம் 5 சென்ட் பயன்படுத்தாத இடம் தேவை. அதிகமாக எத்தனை பெரிய இடமாக இருந்தாலும் நலம்.
                                            

இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தாலும் இப்பணியை இலவசமாக செய்ய காத்திருக்கிறோம்.
                       
தாய் மரம் உருவாக்க இணைந்து பணியாற்ற விரும்பினாலும் இத்திட்டத்தை பற்றிய மேலும் விளக்கங்கள் தேவைப்பட்டாலும் மின்னஞ்சல் செய்யுங்கள்
தொலைபேசி : +91 9944 1 333 55
                           
சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி என்றால் 9842120908, 9442627556, 0462-2337103 போன்ற எண்களை தொடர்பு கொள்ளவும். ( முகநூல் )
                     
4) மக்களுக்காகவே ஒரு மக்கள் மருத்துவமனை!
                 
ஒரு டாக்டர், நோயாளிகளிடம் கொஞ்சம் கருணையோடு நடந்துகொண்டாலே, ‘மக்களின் மருத்துவர்’ எனக் கொண்டாட ஆரம்பித்துவிடுவோம். உண்மையிலேயே, ஏழை மக்களே சேர்ந்து ஒரு மருத்துவமனையை நடத்தினால் எப்படி இருக்கும்? இந்தக் கனவை நனவாக்கி இருக்கிறது, சுகம் சிறப்பு மருத்துவமனை.
                
                

5) 30 ஏழை பெண்களுக்கு மார்பக புற்று நோய்க்கான மருத்துவ செலவுகளை ஏற்றுள்ள ஹன்சிகா மோத்வானி!

 நடிகை சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மும்பையில் 22 குழந்தைகளை தத்தெடுத்து கல்வி உதவி வழங்கி வருகிறார்.    

அடுத்து 30 ஏழை பெண்களுக்கு மார்பக புற்று நோய்க்கான மருத்துவ செலவுகளை ஏற்றுள்ளார்.


வெஸ்ட் கேன்சர் ரிசர்ச் பவுன்டேஷன் என்ற அமைப்பு பெண்கள் மார்பக புற்று நோய் குறித்த விழிப்புணர்வுக்காக சென்னை டேர்ன்ஸ் பிங்க் என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளது.
              
                                            
இதன் தூதுவராக ஹன்சிகா மோட்வானி நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிமுக விழாவில் பங்கேற்று பேசும் போது 30 ஏழை பெண்களின் மார்பக புற்று நோய் சிகிச்சை செலவை ஏற்பதாக ஹன்சிகா மோட்வானி அறிவித்தார்.

ஹன்சிகா மூலம் சிகிச்சை பெறப்போகும் நோயாளிகளை சென்னை டேர்ன்ஸ் பிங்க் இயக்கத்தினர் தேர்வு செய்வார்கள் என்று அதன் நிறுவனர் ஆனந்தகுமார் தெரிவித்தார்.

ஹன்சிகா நிருபர்களிடம் கூறும் போது, மார்பக புற்று நோய் விழிப்புணர்வு இயக்கத்தின் பணிகள் என்னை கவர்ந்தன. விழிப்புணர்வு மூலம் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும். எனவே நானும் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளேன் என்றார்.

மார்பக புற்று நோய் சிகிச்சைக்கு ஒரு பெண்ணுக்கு ரூ.3 இலட்சத்துக்கு மேல் செலவாகும். 30 பெண்களுக்கும் ஹன்சிகா ரூ.1 கோடி வரை மருத்துவ செலவுகளை ஏற்க உள்ளார்.
           
6) பெரியவருக்கு 101 வயசு ஆகுது.பவானி சிவன் கோயிலில் தினமும் 100 ஏழைகளுக்கு ராகி கஞ்சி காய்ச்சி ஊற்றுகிறார்.காலை 6 மணிக்கெல்லாம் கோயிலில் அடுப்பு பற்ற வைத்து சூடாக கஞ்சி காய்ச்சி விடுகிறார்.முன்பு நெசவு செய்து அதில் வரும் வருமானத்தில் செலவு செய்தாராம்..முதுமை காரணமாக இப்போது பக்தர்கள் நண்கொடை மூலம் தினசரி உதவுகிறார்.
                                       
                
தினமும் காலை பேரன் உதவியால் கோயிலுக்கு வருகிறார்.எத்தனை வருசமா இதை செய்றீங்க தாத்தா என்றேன் 30 வருசமா செய்றேன்பா..வள்ளலார் சொன்ன,பசிக்கு உணவாற்றும் தொண்டு என்ற தத்துவம் பிடித்துபோய் இதை செய்கிறேன் என் காலம் இருக்கும் வரை இதை செய்வேன் என்றார்..அவர் சேவைக்கு சிறு உதவி செய்து ஆசி பெற்று வந்தேன். ( முகநூல் - சதீஷ்குமார் ஜோதிடர் )
                  
7)  பொன்மணி தேவி டீச்சர்....இவங்க கணவர் இறந்துட்டாங்க..கொஞ்ச நாளிலேயே இவங்க ஒரே மகனும் இறந்துட்டாங்க..தமிழாசிரியரான இவர் அதன் பின்...தானும் தன் கணவரும் சம்பாதித்த சொத்துக்களை சித்தோடு அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி..அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளிகளில் கலை அரங்கம் முதல் காம்பவுண்ட் சுவர் வரை பல லட்சம் செலவில் கட்டிக்கொடுத்துருக்காங்க..எங்க ஊர்ல...நடக்குற எல்லா பொது நல காரியத்துக்கும் முதல் நிதி உதவி இவங்களோடதா தான் இருக்கும்..10 வருடத்துக்கு முன்பு எங்க ஊர்ல நானும் என் நண்பரும் ஒரு பத்திரிக்கை நடத்தினோம்..    
                                              
அதை அவங்ககிட்ட காண்பிச்சு வருட சந்தா 100 ரூபா கொடுங்க...மாசாமாசம் உங்களுக்கு பத்திரிக்கை தருவோம்னு சொன்னதுக்கு ,,,சிரிச்சுக்கிட்டே ஆயிரம் ரூபாயை கொடுத்து ,நல்லா நடத்துங்க..என்ன உதவின்னாலும் என்கிட்ட கேளுங்கன்னு சொன்னவங்க...இப்போ கல்வி வளர்ச்சிக்காக தன்னிடம் இருந்த 50 லட்சத்தையும் ஈரோடு கலெக்டர் கிட்ட கொடுத்துட்டாங்க..தன் மகனை நினைத்து நினைத்து உருகும் தாய் இவர்..அந்த மகன் சமாதியை அவ்ளோ அழகா பூங்கா தோட்டத்துடன் அமைத்திருக்கிறார்..மாலை நேரத்தில் அந்த வழியாக பைக்கில் நான் போகும்போது அந்தம்மா சோகமாக மகன் சமாதியில் அமர்ந்திருப்பதை கண்டு கலங்கியிருக்கிறேன்!! 
       
8) எனக்கு பிடித்த நிஜ மனிதர்கள் - கண்ணையா. 



     
வெளியூர் நண்பர் ஒருவர் இன்று கோவை அண்ணப்பூர்னா ஹோட்டலில் தங்கியிருந்தார். இன்று இரவு சென்னை திரும்புகிறார் என்பதால் ஒரு ஐந்து மணி சுமாருக்கு பக்கத்திலேயே எங்காவது பேசிக் கொண்டிருப்போம் என்று காந்தி பூங்கா சென்று காலாற நடந்தோம்.
   
ஆங்காங்கே, காதல் ஜோடிகள், நடைப்பயிற்சி செய்பவர்கள், பொழுது போக்குபவர்கள் என்று பூங்கா உயிரோட்டமாக இருந்தது. உட்கார இடமில்லாமல் பலர் இடத்தை பிடித்திருந்தனர். நெருக்கமாக இருக்கும் மரங்களின் மேலே கணக்கற்ற வௌவால்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. உட்காருவதற்காக போடப்பட்டிருந்த‌ க்ரானைட் மேஜைகளில் வௌவால்கள் மற்றும் காக்கைக‌ளின் எச்சங்கள் நிறைந்திருந்தன.
         
நாங்கள் பூங்காவை பெரிதாய் ஒரு வட்டம் அடித்து விட்டு திரும்புகையில், ஒரு பெரியவர் ஒரு க்ரானைட் 'பென்ச்'சை
துடைத்து கொண்டிருந்தார். பக்கத்தில் ஒரு தண்ணீர் பாட்டிலும் இருந்தது. ஒரு தகடை போல் ஒன்றை வைத்திருந்தார். நான் இவர் என்ன செய்கிறார் ? எனக் கேட்க, நண்பர் "உட்காருவதற்காக துடைக்கிறார் போலும்" என்றார். எனக்கு அப்படி தோன்றவில்லை. அவரை பார்த்தால் பூங்காவில் வேலை செய்பவர் போன்றும் இல்லை. என் கரபேசியில் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன். பின்னர் "ஐயா" என்று அழைத்ததும் திரும்பினார். என்ன செய்கிறீர்கள் ?என்று கேட்டதும். "இந்த பூங்காவிற்கு எத்தனையோ பேர் வருகிறார்கள், குடும்பத்தோடு வந்து உட்கார இடம் இல்லாமல் தவிக்கிறார்கள், அதனால், நான் இங்கு வரும்போதெல்லாம் இந்த சிறு வேலையை செய்கிறேன்" என்றார். மீண்டும் பேசிக் கொண்டே அந்த க்ராணைட் 'பென்ச்'சில் உள்ள எச்சங்களில் கரைகளை சுத்தம் செய்தார்.
         
பூங்காவிற்கு வந்துள்ள அத்தனை மக்களுக்கு இல்லாத அந்த சமூக அக்கறை இந்த பெரியவருக்கு இருப்பதைக் கண்டு நான் திகைத்து போனேன். முழுவதுமாக துடைத்து முடித்துவிட்டு பெரியவர் நிறைய பேசினார். அவர் பெயர் "கண்ணையன்" என்றும் "கவுர" சமூகத்தை சேர்ந்தவர் என்றும், சொன்னார். அவரோடு பேச பேச அவரின் பல சமூக சேவைகள் தெரிய வந்தன.
           
வார்த்தைக்கு வார்த்தை "நாராயணா" என்கிறார். சிறு வயதில் அவர் வளையல் வியாபாரியாம். பிரிட்டீஷ் காலத்தில் திருச்சூரில் இருந்து வளையல் வாங்கி வந்து வியாபாரம் செய்வாராம். கோவையில் கவுரவ சமூகத்திற்காக, ஒவ்வொருவரிடமும் நாலணா வீதம் வசூல் செய்து கல்யான மண்டபம் கட்டியுள்ளாராம். வலையல் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைந்து இருந்தாராம். இப்போது கடைசியாக‌ பண்ணிரெண்டு வருடம் தாராபுரம் பக்கத்தில் உள்ள ஒரு காட்டில் தன் குல தெய்வமான "கருப்பராயன் மற்றும் கண்ணிமார்" கோவிலில் தங்கி விட்டாராம். அங்கு இறைவனுக்கு தொண்டு செய்த போது கிடைத்த திருப்தி, தன் வாழ்வில் வேறு எதுவும் தரவில்லை என்றார். இப்போது கோவையில் உள்ள மகன் வீட்டுக்கு வந்து ஐந்து மாதம் ஆகியுள்ளதாம்.
             
இப்போது எல்லாவற்றையும் இழந்து விட்டிருப்பாரோ ? அவருக்கு ஏதேனும் சிறு பன உதவி செய்யலாமா என்று நான் மனதில் யோசித்து கொண்டிருந்தேன். அவர் தவறாக நினைத்துவிடப் போகிறார் என்று, "உங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் உள்ளதா" என்று கேட்டேன் ? "எனக்கு ஒரு குறையும் இல்லை" என்றார். வளையல் வியாபாரத்தில் பல சொத்துக்களை வாங்கி போட்டிருப்பதை யதார்தமாய் சொன்னார். வணிக வளாகங்கள் கூட நகரின் மைய பகுதியில் உள்ளதாம். எல்லாவற்றையும் மகனிடம் ஓப்படைத்து விட்டு, நிம்மதியாய் உள்ளாராம்.
             
எனக்கு ஒரு சத்தியமான துறவியை கண்ட திருப்தி ஏற்பட்டது. இப்படிப்பட்டவர்கள் வாழ்வதால் இன்னும் இந்த பூமி நிலைப்பெற்றிருப்பதை உணர்ந்தேன். இறைவன் இப்படி பட்டவர்களின் உருவத்தில் தான் வந்துக் கொண்டிருக்கின்றான் வாழ்க்கையில் தோல்வி அடைந்த பலர் துறவரம் நோக்கி செல்வதை பார்க்கலாம். அது நிலைக்காது. வாழ்க்கையை முழுமையாய் வென்றுவிட்டு துறவறம் செல்பவனே நிலைத்திருப்பான்.
               
உங்கள் வயதென்ன என்று கேட்கையில் "பயப்படாதீங்க தொன்னூற்றி ஐந்து" என்று சொல்லி, வெள்ளைக்காரன் காலத்திலிருந்து, பல‌ கதைகளை சொன்னார். உட்காராமல் நின்றுக் கொண்டே பேசினார். விடை பெறுகிறேன் என்றதும், ஒரு சிறுவனைப் போல‌ கையை கூப்பிக் கொண்டு "ஓம் நமோ நாராயணாய நமஹ" என்றார்.
       
நான் அவரிடம் சொன்னேன் "ஐயா இந்த மந்திரத்தை 18 முறை தன் குருவிடம் சென்று அறிந்துக் கொண்ட இராமானுஜர், சமூக நலமே முக்கியம் என்பதற்காக, தான் நரகத்திற்கு போனாலும் பரவாயில்லை, அனைவரும் சுவர்கம் செல்ல வேண்டும் என்று இதை அனைவருக்கும் உபதேசித்தார். அதே சமூக அக்கறையை உங்களிடமும் காண்கிறேன். நீங்களும் ஒரு இராமானுஜர்தான்" என்றேன். பெரியவர் நெகிழ்வோடு சிரித்து விட்டு, வேறொரு மேஜையை துடைக்கச் சென்றார்.    

    :: Enlightened Master - Facebook::
(முக நூலிலிருந்து) 


9) சென்னையை சேர்ந்த ஜெகன் மற்றும் சுஜாதா குப்பையை கையாளுவதில் புதிய அணுகுமுறையை உருவாக்கியுள்ளனர்.  

இவர்களுடைய குப்பைத்தொட்டி டாட்காம் என்னும் இணையதளத்தில் பதிவு செய்துகொண்டால் வீட்டுக்கே வந்து மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளான புத்தகங்கள்,பாட்டில்கள்,அலுமினியம்,எலக்ட்ரானிக் பொருட்கள்,தாமிரம் என அனைத்தையுமே பெற்றுக்கொள்கின்றனர். 

அதாவது ஆன்லைன் காயலாங்கடையை போன்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். பெறப்படும் குப்பைகளுக்கு உரிய பணத்தினையும் நியாயமான முறையில் தந்தும் விடுகின்றனர்.

                                           

இதன் மூலம் ஆபத்தை விளைவிக்கும் குப்பைகளை தெருவில் கொட்டுவது குறைவதோடு சுற்றுசூழலுக்கும் நல்லது , அதோடு மக்காத குப்பைகளை மக்கும் குப்பைகளோடு கலந்து கொட்டுவதும் தடுக்கப்பட்டுள்ளது என்கிறார் ஜெகன்.

இம்முயற்சிக்கு சென்னையின் பலபகுதி மக்களிடையேயும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.. மேலும் விபரங்களுக்கு –http://www.kuppathotti.com/ என்ற இணையதளத்தை காணலாம்.

                

14 கருத்துகள்:

  1. ஒரு சத்தியமான துறவியை கண்ட திருப்தி ஏற்பட்டது. இப்படிப்பட்டவர்கள் வாழ்வதால் இன்னும் இந்த பூமி நிலைப்பெற்றிருப்பதை உணர்ந்தேன். இறைவன் இப்படி பட்டவர்களின் உருவத்தில் தான் வந்துக் கொண்டிருக்கின்றான் வாழ்க்கையில் தோல்வி அடைந்த பலர் துறவரம் நோக்கி செல்வதை பார்க்கலாம். அது நிலைக்காது. வாழ்க்கையை முழுமையாய் வென்றுவிட்டு துறவறம் செல்பவனே நிலைத்திருப்பான்.

    அருமையான வரிகள்...

    பதிலளிநீக்கு
  2. நானிலத்துலே
    ந்ரகாசுரர்கள் மத்தியிலே
    நாராயணனும் நடு நடுவே
    நல்லது செய்வபர் உருவத்தில்
    நிற்கிறார்கள்.

    குப்பை காம் ஆ ?
    குப்பயை கம் என்று சொல்லவே வேண்டாம்.

    அது எங்கேயும் எக்காலமும் ப்ரசன்னம்.

    குப்பைக்கு குட் பை சொல்ல
    குப்பை கோ என்று சொல்லும்
    குப்பை காமுக்கு
    குனிந்து தலை வணங்குவோம்.

    இந்தக்குப்பய எடுத்துப்போக,
    என்னிக்கு நீ வரப்போற...

    நாராயணா ஹரே நாராயணா.
    https://www.youtube.com/watch?v=ncCNqYC2s4I
    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  3. பாஸிடிவ் செய்திகளில் வாராவாரம் விறுவிறுப்புடன் சுவாரஸ்யமான செய்திகளை வெளியிடுகிறீர்கள்! பிடியுங்கள் பூங்கொத்தை!

    பதிலளிநீக்கு
  4. கல்லூரி முதல்வர் கனவுடன் போராடும் பெண் மெக்கானிக்//
    வருங்கால முதல்வருக்கு வாழ்த்துக்கள்.
    டாக்டர் ராமன், தொழில் அதிபர், ஜெ. கணேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    // கண்தானம் செய்ய முடிவு செய்தவர்கள் உள்ளூர் கண்மருத்துவமனையை உடனடியாக தொடர்பு கொள்ளவும்.//

    நானும், என் கணவரும் உள்ளூர் கண்மருத்துவமனையில் பதிவு செய்து வைத்துள்ளோம் கண் தானத்திற்கு. 15 வருடத்திற்கு முன்பே செய்து வைத்துவிட்டோம்.
    //சில இயற்கை அமைப்புக்கு உகந்த நிலையில் நட்சத்திர மரக்கன்றுகளை நடுவதன் மூலம் சுற்று சூழலை தன்வசமாக்கி மரங்கள் ஆதிக்கம் செலுத்த துவங்கும். அதனால் மாசுபடுதல் குறையும் மற்றும் தாவர இனப்பெருக்கம் அதிகரிக்கும்.//
    இவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பெருஞ்சேரி(நாகபட்டணம் மாவட்டம்) என்ற ஊரில் முருகன் கோவிலில் 27 நட்சத்திரங்களுக்கு உள்ள மரம் வைத்து பரமாரித்து வருகிறார்கள்.

    // நடிகை சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மும்பையில் 22 குழந்தைகளை தத்தெடுத்து கல்வி உதவி வழங்கி வருகிறார்.//
    அடுத்து 30 ஏழை பெண்களுக்கு மார்பக புற்று நோய்க்கான மருத்துவ செலவுகளை ஏற்றுள்ளார்//

    அவ்ரின் நல்ல சேவைக்கு வாழ்த்துக்கள்.

    பெரியவருக்கு 101 வயசு ஆகுது.பவானி சிவன் கோயிலில் தினமும் 100 ஏழைகளுக்கு ராகி கஞ்சி காய்ச்சி ஊற்றுகிறார்.//

    பெரியவருக்கு வணக்கங்கள் வாழ்த்துக்கள்.
    பொன்மணி தேவி டீச்சர் அவர்களுக்கு வணக்கங்கள் வாழ்த்துக்கள்.
    நிஜ மனிதர் கண்ணையா அவர்களுக்கு வணங்கள். வாழ்த்துக்கள்.
    "ஓம் நமோ நாராயணாய நமஹ"

    //சென்னையை சேர்ந்த ஜெகன் மற்றும் சுஜாதா குப்பையை கையாளுவதில் புதிய அணுகுமுறையை உருவாக்கியுள்ளனர்.

    இவர்களுடைய குப்பைத்தொட்டி டாட்காம் ஆன்லைன் காயலாங்கடை

    வாழ்த்துக்கள்.

    நல்லவைகளை தரும் எங்கள் பிளாக் வாழ்க!

    பதிலளிநீக்கு
  5. எல்லா நல்ல செய்திகளையும் அள்ளித்தரும் எங்கள் ப்ளாகிற்கு முதலில் நன்றி.

    கண்தானம், மரம் வளர்ப்பு,குப்பை அகற்றுதல். சுகம் மருத்துவமனை, கோவை நாராயண தாத்தா, ஜெசிந்தா எத்தனை நபர்கள். !!!மகனையும் கணவனையும் இழந்த தாய் வருந்தி உட்காரமல் மற்ற உயிர்களுக்குக் கொடைவள்ளல் ஆகியிருக்கிறாரே.
    அவர் இருக்கும் திசைக்கு ஒரு நமஸ்காரம்.மனம் நிறைந்தது.

    பதிலளிநீக்கு
  6. பாசிட்டிவ் செய்திகள் மனதிற்கு தெம்பூட்டியது. பாராட்டுகள்.

    நானும் என் கணவரும் கண் தானத்திற்கு பதிந்துள்ளோம்...

    //மஞ்சள் காமாலை, எய்ட்ஸ், மூளைக்காய்ச்சசல், வெறிநாய்கடியால் இறந்தவர்கள் மட்டும் கண்களை தானம் செய்யமுடியாது.//

    இவற்றோடு புற்றுநோயையும் சேர்த்து விடுங்கள். என் அம்மாவின் கண்களை தானம் செய்ய நினைத்த போது மருத்துவர் மறுத்து விட்டார். அதனாலேயே தந்தைக்கு கேட்கவே இல்லை...

    பதிலளிநீக்கு
  7. அத்தனை செய்திகளும் அருமை. ஜெஸிந்தாவின் கனவுகள் நனவாகட்டும். பாராட்டுக்குரியவர்களைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. ஜெசிந்தாவின் கனவுகள் மெய்பட வாழ்த்துக்கள். இவரது கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.
    கண் தானம் மிகச் சிறந்த தானம். தொலைக்காட்சியில் பேசிய ஒரு சமூக ஆர்வலர் சொன்ன ஒரு கருத்து இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
    கண் தானம் செய்ய பதிவு செய்பவர்கள் வீட்டில் இருப்பவர்களிடம் அதை சொல்லுங்கள் என்றார். ஏனெனில் பதிவு செய்த ஒருவர் இறந்த செய்தி வந்தபின் அவரது வீட்டிற்கு கண்களை எடுக்கப் போனால் எங்களிடம் சொல்லவில்லை என்று கண்களை எடுக்க அனுமதிப்பது இல்லையாம். மிகவும் வருத்தத்துடன் சொன்னார் அந்த ஆர்வலர்.

    எல்லா பாசிடிவ் செய்திகளிலும் ரொம்ப பிடித்தது ஆன்லைன் காயலாங் கடைதான். குப்பைகளைப் பிரித்து போடுவது என்பது மிகப் பெரிய வேலையாக இருக்கிறது. இதைப்போல யாராவது வந்து எடுத்துக் கொண்டு போனால் நன்றாக இருக்கும்.

    நடிகை ஹன்சிகாவிற்கு பாராட்டுக்கள்.
    கணவர், பிள்ளை இவர்களை இழந்தும் மனிதாபிமானம் இழக்காமல் இருக்கும் பொன்மணி தேவி டீச்சர்க்குப் பாராட்டுக்கள்.

    உங்களது பாசிடிவ் செய்திகள் படித்தவுடன் மனிதர்கள் மேல் இருக்கும் நம்பிக்கை துளிர் விடுகிறது.

    வாழ்க எங்கள் ப்ளாக்!

    பதிலளிநீக்கு
  9. அனைவருமே நல்ல சேவையில் முன்னிற்கின்றார்கள்.

    வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  10. இவ்வளவு பாசிடிவ் செய்தி கொடுத்து அசத்துகிறிர்களே!படிக்கும் போது மிகவும் சுவாரஸ்யமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.
    நம் இந்தியா இது என்று பெருமை கொள்ள வைக்கும் பகிர்வு. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  11. அனைத்தும் அருமை... 95 வயது பெரியவர் மனதை மிகவும் கவர்ந்தார்...

    ஹன்சிகா மோத்வானி உட்பட அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  12. பாசிடிவ் செய்திகள் புது உருக்கொண்டு மிளிர்வதற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. இந்த வாரம் படித்த அத்தனை பாசிடிவ் செய்திகளும் ஏதோ வொரு விததில் மனதிற்கு உற்சாகம் தருகிறது சார்.. நல்ல தேடல்... உங்கள் தேடலுக்காகா பல பாசிடிவ் செய்திகள் உங்கள் கண்களில் சிக்கட்டும்..

    மெக்கானிக் பெண்ணும், பூங்கா பெரியவரும், மனத்தைக் கவர்ந்துவிட்டனர்

    பதிலளிநீக்கு
  14. அனைத்து பாசிடிவ் செய்திகளும் சொன்னது "இன்னும் மனிதம் மிச்சம் இருக்கிறது."

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!