Wednesday, May 1, 2013

அவ்வுலகம் : வெ. இறையன்பு - படித்ததன் பகிர்வு


                                                         

வெ. இறையன்பு எழுதிய எத்தனையோ சுயமுன்னேற்றப் புத்தகங்கள் பெயர்கள் பார்த்திருக்கிறேன். எதுவும் படித்தது இல்லை. இதுதான் அவர் எழுதியதில் நான் படித்த முதல் புத்தகம். மரணத்துக்குப் பின் என்ன என்று அவர் யோசித்திருப்பதைக் கதை வடிவில் சொல்கிறார். 

                            

அப்பா இறையன்புவின் ரசிகர். அவர் பேசுவதைக் கேட்கச் செல்வார். இறையன்பு எழுதிய புத்தகங்களும் படிப்பார். அவர் 'படி' என்று கொடுத்த புத்தகம்.

மரணத்துக்குப்பின் என்ன இருக்கலாம் என்று எழுதியிருக்கிறார் என்பதுதான் இதைப் படிக்கும் ஆவலை ஏற்படுத்தியது.

மரணத்துக்குப் பின் என்ன என்று ஒரு வகையில் யோசிக்காமல் பலவகையில் யோசித்து அத்தனையையும் எழுத்தாக்கியிருக்கிறார்.

சாமியைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆவலில் செல்லும் திரிவிக்ரமன் கூட்டத்தில் சத்தமாக 'என்னம்மா... சாமி சாமின்னு சொன்னே...வெறும் சிலைதான் இருக்கு' என்று கேட்டு திகைக்க வைக்கிறான், சிறுவயதில். பக்கத்து வீட்டுத் தாத்தா மரணம் எய்தியதே அதிர்ச்சி அவனுக்கு. மனிதருக்கு மரணம் நிச்சயம் என்று தன அண்ணனிடம் கேட்டு அறிந்த முதல் அனுபவம்.


'பேசாமக் கும்பிட'ச் சொல்லும் அம்மா. பிரார்த்தனையே மறந்து போகிறது திரிவிக்ரமனுக்கு. 


 "எல்லாக் கற்பனைகளுமே பொடிப் பொடியாகிற நிகழ்வுகளின் தொகுப்புதான் வாழ்க்கை' என்று புரியத் தொடங்குகிறது.

சட்டென வயதாகி அடுத்தடுத்து மூன்று தலைமுறை வந்து விடுகிறது நாவலில்.

திரிவிக்ரமன் மிக நேர்மையான மனிதராக வாழ்கிறார். இறுதிக் காலத்தில் இருக்கும் தன நண்பர் காளிதாசைப் பார்த்துப் பேசி, அவர் புத்தகங்களைப் பரிசாகப் பெறுகிறார். அடுத்த சில வரிகளிலேயே திரிவிக்ராமனின் இறுதிக் காலம் வந்து விடுகிறது. அவருக்கு ஒரு சீடராய் சுக்கிரன்.

சுக்கிரனிடம் தன புத்தகங்களைக் கொடுக்க நினைக்கிறார் திரிவிக்ரமன். தன்னைப் பார்க்க வரும் சுக்கிரனிடம் கொஞ்சம்  பணம் கொடுத்து, 'தன் இறுதிக்காலம் நெருங்கி விட்டது, இறுதிக்கிரியைகள் செய்ய இந்தப் பணம்' என்று கொடுக்கிறார்.

இதற்குப் பிறகு வரும் பகுதி திரிவிக்ரமனின் மயக்கக் கனவுகளா அனுபவங்களா என்று சொல்லாத நிலையில் கதை தொடர்கிறது.

விழித்தெழும் அவர் 'அவ்வுலகி'ல் இருக்கிறார். அங்கு இருக்கும் நிர்வாகி இவருக்கு ஒரு அறை ஒதுக்கிக் கொடுக்கிறார். பசி, தூக்கம் இல்லாத உலகம். கொஞ்சம் 'யோகியின் சுயசரிதை'யில் வரும் இன்னொரு உலகம் நினைவுக்கு வருகிறது.

அங்கு அவர் வாழ்க்கையில் சந்தித்த நல்ல, கெட்ட மனிதர்களைச் சந்திக்கிறார். இவர் 'நல்ல கேடகரி' என்பதால் இதுபோன்ற சில சலுகைகள் இவருக்கு வழங்கப் பட்டிருக்கின்றன என்று 'நிர்வாகி' மூலம் அறிகிறார். கேள்விகள் கேட்கக் கூடாது என்று எச்சரிக்கப் படுகிறார்.


சொர்க்கம் நரகம் எல்லாம் ஒரே இடத்திலேதான், அவரவர்களுக்கு வழங்கப் பட்டிருக்கும் சலுகைகளை வைத்து, சொர்க்கம் என்பதும் நரகம் என்பதும் அவரவர் மனதைப் பொறுத்தது என்றெல்லாம் கருத்துகள் முன்வைக்கப் படுகின்றன.

பூமியில் நல்லவர் என்று சொல்லிக் கொண்ட நபர்கள்  ஆன்மீக வியாபாரிகள், இவர் உயிர் நண்பன், இவரைக் காதலித்த, இவரும் இளவயதில் மனதைப் பறி கொடுத்திருந்த, ஆனால் காதலை ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளாத காதலி, மோசமான இவரின் மேலதிகாரி என்று சகலரையும் ஒவ்வொரு நாளில் அல்லது சீரான இடைவெளியில் சந்திக்கிறார்.

அவர் மன்னிப்புக் கேட்க விரும்பும் நபரைச் சந்திக்க முடியுமா என்று அறிய இவருக்கு ஆவல். அது கதையின் லேசான சஸ்பென்ஸ் பகுதி.


நல்லது எது, கெட்டது எது என்று  அலசப் படுகிறது. அவரின் தாபம் தீரும்போது அவர் நினைவுகள் முடிகின்றன. இவர் கூட இருக்கும் உதவியாள் ஒருவன் சுக்கிரனுக்கு இவரின் மரணத்தை அறிவிக்கிறான். உதவியாளுக்குத் தன் வீட்டையும், சுக்கிரனுக்கு தன் புத்தகங்களையும் சுக்கிரன் மனைவியின் குறை தீர கணிசமான பணத்தையும் சுக்கிரனுக்கு விட்டுச் செல்கிறார்.

                                             

மரணத்தை நெருங்குபவர்களுக்கு அவர்களின் வாழ்க்கை ஒரு படமாய் கண்முன்னே மனத்திரையில் ஓடும் என்று படித்திருக்கிறேன். இவரும் படித்திருக்கிறார் போலும்!

சாதாரண கதை. நடுவில் மரணத்துக்குப் பின் என்ன இருக்கக் கூடும் என்ற எண்ணங்களை ஆங்காங்கே சம்பவங்கள் போலப் பகிர்கிறார் இறையன்பு. நிறையச் சோதனை செய்திருக்கிறார்!

அவ்வுலகம்
உயிர்மைப் பதிப்பகம்
191 பக்கங்கள், 140 ரூபாய்.


10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சுயமுன்னேற்றப் புத்தகங்கள் படித்ததுண்டு... அவ்வுலகத்தை படிக்க வேண்டும்...

சஸ்பென்ஸ் பகுதி என்றால் உடனே வாங்கி படித்து விட வேண்டியது தான்... சுவாரஸ்யமான நூல் அறிமுகத்திற்கு நன்றி...

middleclassmadhavi said...

Very interesting. Thanks for sharing

சீனு said...

ஸ்ரீராம் சார் உங்களைப் பார்த்து பொறாமைப் படுகிறேன்.. ஒரு ஆர்வத்தில் யோகியின் சுயசரிதைப் புத்தகத்தை வாங்கி வந்துவிட்டேன், இரண்டு பக்கங்களைக் கூட என்னால் முழுசா தாண்ட முடியல... நீங்க எப்டி படிச்சி முடிசீங்க... டிப்ஸ் கொடுங்க....

உயிர்மை விலையைப் பார்த்தால் தான் பகீர் என்கிறது... உயிர்மை எனது உயிர்மொய்யில் கை வைக்கிறார்கள்...

இறையன்பு எழுதிய கட்டுரைகள் படித்து உள்ளேன்.. புத்தகமாக படித்தது இல்லை... இயல்பான எளிமையான எழுத்துக்கு சொந்தக்காரர்

பழனி. கந்தசாமி said...

நல்ல கற்பனைகள்.

வல்லிசிம்ஹன் said...

படிக்க வேண்டிய சப்ஜெக்ட்.
நாம் எல்லோரும் நசிகேதனாகி விடமுடியாது என்ற ஒரே காரணத்தினால்:)
இறையன்பு பார்க்கவும் படிக்கவும் எளிமையானவர்.

@சீனு சார்
என்னாலும் யோகியின் சுய சரிதையை படித்து முடிக்க முடியவில்லை. நான் புத்தகத்தைக் கொடுத்தவர்கள் இப்போது ஞானிகள் போலத்தான் பேசுகிறார்கள்.

நல்லதொரு அனுபவத்தை இந்தப் புத்தகம் கொடுக்கும் என்று நம்புகிறேன் ஸ்ரீராம். அந்த ஒரு எண்ணத்தை உங்கள் கட்டுரை கொடுக்கிறது.சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறீர்கள்.

கோமதி அரசு said...

இறையன்பின் ஜென் கதைகள் தொலைக்காட்சியில் கேட்டு இருக்கிறேன். அவர் கட்டுரை தொகுப்பு ஒன்று என் மகனிடமிருந்து எடுத்து வந்தேன் இன்னும் படிக்கவில்லை
’மென்காற்றில் விளை சுகமே கட்டுரை தொகுப்பின் பேர்.சீக்கிரம் படித்துவிடவேண்டும்.
நீங்கள் இறையன்பு அவர்களின் அவ்வுலகம் படித்து அதை விமர்சித்த விதம் படிக்க தோன்றுகிறது.
நன்றி.

Ranjani Narayanan said...

இறையன்பு அவர்களின் சொற்பொழிவு கேட்டிருக்கிறேன். புத்தகங்கள் எதுவும் படித்ததில்லை.
மரணத்திற்குப் பின் என்ன என்பதை அறிய எல்லோருக்குமே ஆவல் இருக்கும். இந்தப் புத்தகத்தை வாங்க வேண்டிய லிஸ்டில் சேர்க்கிறேன்.
சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறீர்கள்.

ஹேமா (HVL) said...

கண்டிப்பாய் படித்துப் பார்க்கிறேன்!

கோவை2தில்லி said...

சிறப்பான பகிர்வு. புத்தக கண்காட்சியில் இவரது புத்தகங்களை பார்த்து விட்டு வந்திருக்கிறேன். படித்தது இல்லை. பொதிகையில் பயணங்கள் குறித்து இவர் பேசியதை கேட்டிருக்கிறேன். எளிமையான மனிதர்.

வாங்கி படிக்கும் ஆவலை தூண்டியது.

வெங்கட் நாகராஜ் said...

படிக்கத் தூண்டும் விமர்சனம்.....

புத்தகங்கள் வாங்கும்போது இவரது புத்தகங்களையும் ஓரக் கண்ணால் பார்த்ததோடு சரி..... இனி படிக்க வேண்டும்.....

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!