புதன், 17 ஜூலை, 2013

மதுரை சந்திப்பு!

       
யாரையாவது தற்காலத்தில் வாழ்த்தினால், 'பதினாறும் பெற்று .......... 'என்றோ 'நூறாண்டு காலம் வாழ்க' என்றோ வாழ்த்தினால், காலத்துக்குப் பொருந்தாத வாழ்த்துக்களாக காணப்படும். 
               
சுருக்கமாக, "ஐ ஆர் சி டி சி தளத்தில், நீ மேற்கொள்ளும் பயணத்திற்காக முன்பதிவு,  உன் இஷ்டம் போல அமைந்து, விரும்பும் சீட் . பெர்த் கிடைத்து, அதற்கு சரியாக பணம் எடுக்கப்பட்டு, உடனடியாக பயணம் உறுதிப் படுத்தப்பட்டு முன்பதிவு நன்கு அமைந்து, சுலபமான சுகமான பயணமாக அமையட்டும்" என்று வாழ்த்தலாம். 
   

ரயில்வே முன் பதிவிற்காக ஆன் லைனில் ஐ ஆர் சி டி சி தளத்தை இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் அணுகிய பொழுது, எங்கள் வீட்டு மேடம் சொன்ன சில மாற்றங்கள், மோடத்திற்குப் பிடிக்கவில்லை. இணையத்தை கணினியோடு இணைக்காமல், வெளியிலேயே நிறுத்திவிட்டது. அப்புறம், திண்டாடி, தெருப் பெருக்கி, இணையம் கிடைத்தபோது, ஐ ஆர் சி டி சி தளம், மன்மோகன் சிங் போல மௌன விரதமிருந்தது. 
          
'எண்டர்' தட்டினால், எல்லாம் டிஸ்-என்ட்ரி. சுற்றி சுற்றி வந்தது. உள்ளே விடவில்லை. என்ன செய்வது? லாப் டாப் காமிராவை ஆன் செய்து, அதற்கு முன்பாக ஒரு நூறு ரூபாய் நோட்டை இரண்டு முறை இப்படியும், அப்படியும் பாஸ் செய்தேன். ஆஹா! உடனே ஐ ஆர் சி டி சி தளம் செயல் படத் துவங்கியது. 
                
ஆனால் என்ன - எல்லா வகுப்புகளும் நிறைந்து, வெள்ளிக்கிழமை இரவுப் பயணம் என்பதால், சென்னை டு மதுரை, பாண்டியன் எக்ஸ்பிரசில் முதல் வகுப்பு ஏ சி மட்டுமே மீதி இருந்தது. அதையும் யாரும் பதிவு செய்யும் முன்பாக அவசரம் அவசரமாக புக் செய்தேன். 
   

அதற்கு பணம் செலுத்த முயன்றபோது இரண்டு மூன்று தடவை ஐ ஆர் சி டி சி என்னைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியது. தன முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்யன், மீண்டும் கணினியில் ஐ ஆர் சி டி சி தளத்தை வீழ்த்தி, அதை தன் பர்சுக்குள் வைக்க முயன்றபோது, அதனுள்ளிருந்த பேமெண்ட் மோட் என்னும் வேதாளம் என்னைப் பார்த்து எள்ளி நகைத்தது. 
            
அது மேலும் கூறியது. "கௌதமனே! யாருக்கோ அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற நீ இந்தக் கஷ்டம் படுகின்றாய். சரி உன்னிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கின்றேன். அதற்கு சரியான பதில் கூறினால், உன் பயணப் பதிவு உடனடியாக நிறைவேறும்." 
                 
"சரி. என்ன கேள்வி?"

"========== ======= =======?"

" -----------------  ---    ------------- !"

சரியான பதில்! 

"இதோ உன் பயணப் பதிவு உறுதிப் படுத்தப்பட்டது. சுப் யாத்ரா!"

வெள்ளிக்கிழமை இரவு. எக்மோர் ஸ்டேஷன். முதல் வகுப்பைத் தேடிக் கண்டுபிடித்து, நுழைவு வாயிலில் ஒட்டப் பட்டிருந்த பட்டியலை சரி பார்த்து, முன்னே பின்னே இருக்கின்ற பெயர்களை மேம்போக்காக நோட்டமிட்டேன். 

பட்டியலில் முதலில் இருந்த பெயர்களில் ஒரு பெயர் 'எஸ் டி கே ஜக்கையன்' என்று இருந்தது. 
   

நானும் என் திருமதியும், இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து உட்கார்ந்தபொழுது, கரை வேட்டி கட்டிய ஒருவர் கம்பார்ட்மெண்டின் தள்ளு கதவைத் திறந்துகொண்டு, அலைபேசியில், "ஆமாம், ஆமாம், இப்போ கம்பார்ட்மெண்டில் நுழைந்துவிட்டேன். இப்போ என்னுடைய இடம் பார்த்து  உட்காரப் போகின்றேன்" என்று ரன்னிங் கமெண்ட்ரி --- இல்லை இல்லை வாக்கிங் கமெண்ட்ரி கொடுத்தவாறு என்னைக் கடந்து சென்றார். பின்னாடியே பவ்யமாக இன்னுமொரு கரை வேட்டி கட்டியவர் நடந்து சென்றார். 

ஸ்ரீராமை அலைபேசியில் அழைத்து, இந்த விவரங்கள் கூறினேன். ஸ்ரீராம் உடனே, "நீங்க வேணா பாருங்க. மதுரை போய் சேர்வதற்குள் அவரே உங்களிடம் வந்து பேசுவார். எனக்கு இப்படி நடக்கும் என்று ஒரு பட்சி சொல்லுது" என்றார். 
     

ஸ்ரீராம் கிட்ட அந்த பட்சி பொய் சொல்லியிருக்கு என்று நினைக்கின்றேன். அப்புறம் அன்று நான் அவரை பார்க்கவே இல்லை. 

ஆனால், என் இருக்கைப் பகுதிக்கு மறுபக்கம் ஒருவர், இரயில் கிளம்பிய பிறகு, தன் உடைகளை மாற்றி உறங்குவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார். அவர் முகம் மிகவும் பெமிலியர் ஆக இருந்தது. நான் போய் அல்பசங்கைகள் (வார்த்தை உபயம் & நன்றி: ஸ்ரீராம்) முடித்து திரும்ப வரும்பொழுது, அவர் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தார். 

இவரை / இவர் படத்தை எங்கேயோ பார்த்திருக்கின்றோம் என்று மீண்டும் தோன்றியது. 'மலையாள ஆக்டர்? தெலுகு ஆக்டர்?' 

அருகே சென்று, "சார்! எக்ஸ்கியூஸ் மீ. உங்கள் முகம் மிகவும் தெரிந்த முகம் போல இருக்கு. சட்டென்று நினைவுக்கு வரவில்லை. நீங்க யாரு?" என்று கேட்டேன். 

அவர் முகம் பிரகாசமடைந்தது. 
     
"நான் ஃபார்மர் எம் பி ஆஃப் ராம்நாத்" என்றார். 
     
"பெயர் என்ன சார்?"
     
"ராஜேஸ்வரன். நீங்க?"
    
என்னைப் பற்றிய விவரங்களை பத்து வார்த்தைகளில் கூறினேன். 
   
வாய் வரையிலும் வந்த அடுத்த கேள்வியைக் கேட்காமல் ("நீங்க எந்தக் கட்சி சார்?") ஓடி வந்து என்னுடைய படுக்கையில் அமர்ந்துகொண்டு 'துக்ளக்' படிக்கத் துவங்கினேன். 
          

திரு ராஜேஸ்வரனிடம் நான் வாங்கியது பல்பா? 
                 

15 கருத்துகள்:

  1. ஆமாம். நல்லா தூங்கினேன். திண்டுக்கல்லில் வண்டி அதிக நேரம் நின்றது. உங்களை நினைத்துக் கொண்டேன். சனிக்கிழமைக் காலை ஐந்தரை மணிக்கு உங்களுக்குப் புரை ஏறியதா?

    பதிலளிநீக்கு
  2. ஒரு போன் செய்திருந்தால் போதும்... ஸ்டேஷன் வழி தான் வாக்கிங்...!

    பதிலளிநீக்கு
  3. எப்படிலாம் பதிவு தேத்துறீங்க? :-( “பதிவு தேத்துவது எப்படி?”ன்னு ஒரு பதிவு எழுதுங்களேன், நேயர் விருப்பம்.

    பதிலளிநீக்கு
  4. // எப்படிலாம் பதிவு தேத்துறீங்க? :-( “பதிவு தேத்துவது எப்படி?”ன்னு ஒரு பதிவு எழுதுங்களேன், //

    ஆமாமாம்.....
    என்னையப் போல ஆளுங்களுக்கு கமெண்ட் எழுதுறது கூட கஷ்டமாயிட்டுது....

    பதிலளிநீக்கு
  5. ராமாயாணம், மகாபாரதம் எல்லாம் போர், போர். இனி உங்க பதிவு தான் ஜோர், ஜோர்.. ஒரு சாதா விடயத்தைக் கூட சூப்பராய் எழுதி சட்டமன்ற உறுப்பினரிடம் பல்பு வாங்கியும் விட்டீர்கள், வெப் கேமரா முன் பணம் காட்டிய மேட்டர் சூப்பர். பலருக்கும் இனி பய(ன்)படும்..

    பதிலளிநீக்கு
  6. பல்பு வாங்கினீங்களோ இல்லையோ எனக்கு கொடுத்திட்டீங்க பல்பு! மதுரையில் யாரையாவது சந்தித்த கதை என்று வந்தேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  7. haahaahaaIRCTC மூலம் வெற்றிகரமா டிக்கெட் புக்கிங் செய்ததுக்கு வாழ்த்துகள். எங்களுக்கு முதல்லே தளமே திறக்காது. அப்படியே திறந்தாலும் ப்ளான் மை ட்ராவல் வராது. அது வந்தாலும் Please enter 4 characters only னு சொல்லிட்டு இருக்கும், இத்தனைக்கும் ரயில்வே கைடைப் பக்கத்திலே வைச்சுட்டு abbreviations சரி பார்த்து, எந்த ஊருக்கு எதுனு செக் பண்ணிட்டுப் போடுவோமாக்கும். அப்படியும் ஒத்துக்காது. அப்புறமா இந்த விளையாட்டு அலுத்துப் போய் கேட்கிற இடத்துக்குப் போற ட்ரெயின்களைக் காட்டும். செலக்ட் செய்து, பெயர் கொடுத்து, பேமென்ட் பண்ணறச்சே வரும் பாருங்க ஒரு மெசேஜ் could not processed to payment gateway,please try later அப்படினு வரும். நொந்து நூலாகிவிடுவோம். அப்புறமா விதியேனு ஸ்டேஷனுக்குப் போய் டிக்கெட் புக் பண்ணிட்டு வருவார்.

    கிடைக்கிற காப்பிலே என் கிட்டே உனக்குச் சரியா இதெல்லாம் பண்ணத் தெரியலை, அவனவன் ஊர், உலகத்திலே ஆன்லைனில் தான் புக் பண்ணறான். நம்ம வீட்டிலே எல்லாத்தையும் வைச்சுட்டு நான் கஷ்டப்பட வேண்டி இருக்குனு அர்ச்சனை போனஸாக் கிடைக்கும். :)))

    அப்புறம் என்ன?? ஊர் போயிட்டுத் திரும்பற வரை பேச்சு வார்த்தையே முறிஞ்சுடும் :)))))

    பதிலளிநீக்கு
  8. டிக்கெட் புக் பண்ணுவது கயிற்றில் நடப்பது மாதிரி இருக்கும் போலவே... வெற்றிகரமா புக் பண்ணிட்டீங்க...
    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  9. வாங்கியது பல்பா தெரியாது. சுவைபடச் சொல்லியிருக்கிறீர்கள்:)!

    பதிலளிநீக்கு
  10. On many occasions, the link between the payment gateway (whatever be the bank or type of card) and irctc gets interrupted. On many occasions, my account got debited in the bank, but ticket was not booked. ( though, in the next two working days, I get back the amounts duly credited)

    There is no dedicated line for the purpose, it appears.

    It also appears that the server of irctc is often down due to its limited capacity.

    subbu thatha.
    www.subbuthatha72.blogspot.com

    One need not book a ticket through an irctc route to arrive at the above blog.


    பதிலளிநீக்கு
  11. IRCTC ஓபன் ஆவதற்குள் உலகையே ஒரு ரவுண்டு வந்து விடலாம்.
    எம்.பி. அவர்தான் நொந்து போய் இருப்பார் நம்மை யாருக்கும் தெரியவில்லையே என்று.
    உங்க நல்ல காலம் அவர் பார்மர் ஆக இருந்துவிட்டார்.

    பதிலளிநீக்கு
  12. கணினி முன்னர் பணம் காமிக்கும் ஐடியா சூப்பர்..... ]

    காலை 10 முதல் 12 மணி வரை தத்கால் புக்கிங் சமயத்தில் IRCTC தளத்தில் நிறையவே பிரச்சனைகள். மற்ற நேரங்களில் பிரச்சனைகள் அவ்வளவாக இருப்பதில்லை. நான் ஆன்லைனில் தான் எப்போதும் முன்பதிவு செய்கிறேன் .

    பதிலளிநீக்கு
  13. வெங்கட் சொல்வதுபோல நானும் எப்போதும் ஆன்லைனில் தான் டிக்கெட் வாங்குகிறேன்.

    'பொறுமையென்னும் நகையணிந்து' படாத பாடு பட்டு வெற்றிகரமாக புக் செய்து பெருமை கொள்ளுவேன்.

    அதுவும் சமயத்தில் சைடு அப்பர் பர்த், மேல் பர்த் என்று கிடைக்கும்.

    பொறுமை பெருமை எல்லாம் போய்விடும்.

    இன்று கூட ஒரு பெரிய ப்ராஜெக்ட் - IRCTC யில் இருக்கிறது, வரட்டுமா?

    யாரோ blogger என்று நினைத்தீர்களோ? சரியான பல்பு!

    பதிலளிநீக்கு
  14. //"நான் ஃபார்மர் எம் பி ஆஃப் ராம்நாத்" என்றார்.

    "பெயர் என்ன சார்?"

    "ராஜேஸ்வரன். நீங்க?"//

    ஓ ராம்நாட் ஆ, ராம்நாத், ராஜேஸ்வரன் மூளைய கசக்க வச்சிடீன்களே

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!