செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

சைக்கிள் வண்டி மேலே! :: 03

       
           
   
நாங்கள் மூன்று பேரும் ஏன் செய்வதறியாது திகைத்தோம் என்றால், வீட்டு சொந்தக்காரரின் உறவினர்தான் வாடகை வசூல் செய்ய வருபவர். அவர் உள்ளே வந்து சுவற்றை நான் சைக்கிளால் உழுது வைத்திருந்ததைப் பார்த்தால், எங்கள் கதை கந்தல் ஆகிவிடும். அவர் சுவற்றையும், சைக்கிளையும், என்னையும் பார்த்தால், 2+2+2 =டுட்டுடூ என்று ஈசியாகக் கணக்குப் போட்டு விடுவார். இதை எப்படி சமாளிப்பது என்று யோசனை செய்தோம். 
     
சின்ன அண்ணன்தான் ஐடியா மாஸ்டர் ஆயிற்றே. சைக்கிளை அப்படியே குண்டுக் கட்டாகத் தூக்கி அதை என்னிடமும் தம்பியிடமும் கொடுத்து, "ஆளுக்கொரு பக்கமாகத் தூக்கி ரூமுக்குள் ரெண்டு பேரும் சைக்கிளோட பதுங்கிடுங்க" என்று சொன்னான். 

இல்லை, இல்லை அப்படி சொல்லவந்தான். ஆனால் என்ன நடந்தது? அவன் அப்படி சைக்கிளைத் தூக்கும்பொழுது, சைக்கிள் பார்ட் எல்லாம் பொல பொல என்று உதிர்ந்து, முன் சக்கரம் முன்னால் ஓட, பின் சக்கரம் பின்னால் ஓட, கிரான்க் கழண்டு அண்ணன் காலில் விழ, அவன் இடது பாதம் தூக்கி ஆட ......  
  
அவசரம் அவசரமாக கைக்குக் கிடைத்த ஃபிரேம், சீட்டு, ஹாண்டில் பார் மட்கார்ட் எல்லாவற்றையும் அண்ணன் ரூமுக்குள் வீச, நான் முன் சக்கரத்தை  உருட்டிக் கொண்டு ரூமுக்குள் பாய்ந்தேன். பின்னால் என்னுடைய தம்பி பின் சக்கரத்தை 'சர்க்கஸில் இப்படித்தான் ஒற்றைக்கால் சைக்கிள் விடுவார்கள்' என்று கூறியபடி,  மட்கார்ட் மீது பாதி உட்கார்ந்து பாலன்ஸ் செய்தபடி ரூம் வாசல்படி வரை வந்து, ரூமுக்குள் வழுக்கி விழுந்தான். 
  
மகாதேவன் உள்ளே வந்தார். எங்கும் நிசப்தம் நிலவியது. ஆனால் அவர் உள்ளே வருவதற்கும், தம்பி பாலன்ஸ் செய்துகொண்டே வந்து உள்ளே விழுவதற்கும் சரியாக இருந்தது. 
  
காதலிக்க நேரமில்லை படத்தில், வேஷம் கட்டிய முத்துராமன், பாலையாவிடம், "விஸ்வநாதன், இந்த இடத்தை ஏதாவது நாடகக் கம்பெனிக்கு வாடகைக்கு விட்டிருக்கீங்களா?" என்று கேட்பது போல, மகாதேவன், " கோபாலன் சார், இந்த இடத்தை ஏதாவது சர்க்கஸ் கம்பெனிக்கு உள்வாடகைக்கு விட்டிருக்கீங்களா?" என்று கேட்டார். 

எங்க அப்பா பாலையா போலவே "அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லீங்களே .... " என்று சொல்லி சிரித்துச் சமாளித்தார்.  சுவற்றையும் அதன் ஆழமான வடுக்களையும் பார்த்த மகாதேவன், "இது எல்லாம் என்ன? என்னிடம் சொல்லாமல் நீங்களே ஏதோ கொத்தனார் வெச்சு வொர்க் ஆரம்பிச்சுட்டீங்க போலிருக்கு?" என்று கேட்டார். 

அண்ணன், "நீங்க போன மாதம் அனுப்பிய எலெக்ட்ரீசியன் இங்கே ஒயரிங் பண்ணச் சொல்லி அவருடைய ஆள் கொத்த ஆரம்பிச்சாரு. அப்புறம் இது ரொம்பக் கீழே இருக்கு வேண்டாம் என்று சொல்லி மேலே ஓபன் ஒயரிங் பண்ணிட்டாரு. இப்போ பாருங்க இந்த சுவிட்ச் போட்டால் - ..... "

நான் சொன்னேன், " இல்லை இல்லை நீங்க ரெண்டு மாசம் முன்பு கதவு, தாழ்ப்பாள் எல்லாம் சரி செய்ய அனுப்பிய கார்பெண்டர், கதவுகளைக் கழற்றி, டேபிள் மீது வைத்து, இழைத்து, அறுத்து துவம்சம் செய்யும் பொழுது கதவு சுவற்றில் மோதி, அதனால் ஏற்பட்ட காயம் இது".  

மகாதேவன் இரண்டில் எதை நம்பினாரோ! மற்ற சுவர்களைப் பார்க்கக் கிளம்பிவிட்டார். ரூமுக்குள் நான்கு சுவர்களும் நன்றாக இருக்கின்றன என்று சொல்லி ரூமுக்குள் அவர் வராமல் பார்த்துக் கொண்டோம். 

இவ்வளவு டாமேஜஸ் ஆனதால், அப்பா என்னிடம், இனிமேல் வீட்டுக்குள் யாரும் சைக்கிள் விடக்கூடாது என்று கூறிவிட்டார். அப்புறம் சைக்கிளை தினமும் மாலை வேளைகளில் ஆளரவம் குறைந்த சந்தர்ப்பத்தில், ஏழுபடிகள் தாண்டி, வீதியில் இறக்கி, ஜாக்கிரதையாக காரியரில் அமர்ந்துகொண்டு, உந்தி, உந்தி, சைக்கிளை பாலன்ஸ் செய்யக் கற்றுக் கொண்டேன். 
  
தெருவில் (காக்கா குளத்தில் ஸ்நானம் செய்து வந்த) நான்கு குட்டிப் பன்றிகள், ஒரு பெரிய பன்றி, மூன்று சொறி நாய்கள், ஒரு கிழவர், இரண்டு கிழவிகள், ஒரு மூட்டை தூக்குபவர், ஆகியோர் மீது மட்டும் மிதமாக மோதி, காரியரில் உட்கார்ந்து சைக்கிள் விடுவது எப்படி என்று கற்றுக் கொண்டேன். 

ஆனாலும் சைக்கிளில் ஏற இறங்கத் தெரியவில்லையே என்ற குறை இருந்தது. 

*** *** ***  
அந்தக் குறையை, நான் வேலை பார்க்க ஆரம்பித்த பன்னிரண்டு வருடங்கள் கழித்து, ஒருநாள், மதுரைக்குச் சென்றிருந்த பொழுது, என்னுடைய அக்காவின் பையன்கள் இருவரிடமும் பேச்சு வாக்கில் சொன்னேன். 
            
அவ்வளவுதான்! அக்காவின் பையன்கள் இருவரும் எனக்கு சைக்கிள் ஏறு படலம், இறங்கு படலம் இரண்டையும், அன்று மாலையே - சொல்லிக் கொடுத்துவிடுகிறோம் என்று உறுதியளித்தனர். 
  
இந்த உறுதிமொழிக்குப் பின்னால் ஒரு பெரிய சதித் திட்டமே அவர்கள் இருவரும் தீட்டியிருக்கின்றார்கள் என்பது எனக்கு அப்போது புரியவில்லை! 
     
(தொடரும்) 
              
(அடுத்த பதிவுடன் கண்டிப்பாக முடியும். அந்தப் பதிவில் தலைப்புக்கான தொடர்பு, நிலை நிறுத்தப்படும்!) 
                  

6 கருத்துகள்:

  1. ஹா! ஹா! நல்ல காமெடிதான் போங்கோ! தொடர்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  2. காதலிக்க நேரமில்லை படத்தில், வேஷம் கட்டிய முத்துராமன், பாலையாவிடம், "விஸ்வநாதன், இந்த இடத்தை ஏதாவது நாடகக் கம்பெனிக்கு வாடகைக்கு விட்டிருக்கீங்களா?" என்று கேட்பது போல, மகாதேவன், " கோபாலன் சார், இந்த இடத்தை ஏதாவது சர்க்கஸ் கம்பெனிக்கு உள்வாடகைக்கு விட்டிருக்கீங்களா?" என்று கேட்டார். //

    நல்ல நகைச்சுவை.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. சைக்கிள் ஏறு படலம், இறங்கு படலம்
    வித்தைதான் காட்டியிருக்கிறீகள்..!

    பதிலளிநீக்கு
  4. //நான் வேலை பார்க்க ஆரம்பித்த பன்னிரண்டு வருடங்கள் கழித்து..அக்காவின் பையன்கள் .. எனக்கு சைக்கிள் ஏறு படலம், இறங்கு படலம் ... சொல்லிக் கொடுத்துவிடுகிறோம்..//

    அப்படின்னா, அவ்வளவு நாளா எப்படி சைக்கிளில் ஏறுவீங்க, இறங்குவீங்க?

    பதிலளிநீக்கு
  5. //அப்படின்னா, அவ்வளவு நாளா எப்படி சைக்கிளில் ஏறுவீங்க, இறங்குவீங்க?//சைக்கிளில் ஏறுவது இறங்குவது இப்பவும் எனக்குத் தெரியாது!! சைக்கிளை சாய்த்து, சீட்டில் அமர்ந்து, அப்படியே பெடல் செய்து ஓட்டிச் செல்வேன். இறங்குமிடம் வரும்பொழுது ப்ரேக் பிடித்து, காலை ஊன்றி, சைக்கிளை சாய்த்து இறங்கிவிடுவேன்!

    பதிலளிநீக்கு
  6. சைகிளே ஓட்டத்தெரியாமல் இருப்பதற்கு இது பரவாயில்லை. :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!