புதன், 18 செப்டம்பர், 2013

அலேக் அனுபவங்கள் 23:: மாடு பிடித்த கதை!

     
வெகு பழங்காலத்தில், என் உடன் பணியாற்றிய நண்பர், அவருடைய மேலதிகாரி பற்றி, அவரின் விசித்திர பழக்கங்கள் பற்றி, என்னிடம் சில விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். மதிய உணவு நேர அரட்டை கச்சேரிகளில், மேலதிகாரிகளின் தலைகளை நிறைய உருட்டுவோம். 
            
பெயர்கள் ஒன்றும் குறிப்பிடாமல், சம்பவங்களை மட்டும் வாசகர்களோடு பகிர்ந்து கொள்கின்றேன். 
              
நண்பரும், அதிகாரியும், ஒரு குறிப்பிட்ட லாரி வகை ஒன்றைப் பார்த்து, அதனுடைய கேபின் வடிவமைப்புப் பற்றி ஆராய்ந்து, சில அளவுகள் எடுப்பதற்காக, அண்ணா சாலையில் உள்ள, ஒரு டீலர் பாயிண்ட்டுக்குச் சென்றிருக்கின்றார்கள். 


டீலர், குறிப்பிட்ட அந்த (போட்டியாளர்) வண்டி, இரவு பதினொரு மணிக்குத்தான் அங்கு வரும் என்று கூறியிருக்கிறார். 
        
நண்பரும், மேலதிகாரியும் இரவு எட்டு மணிக்கே அங்கு சென்று விட்டதாலும், அதிக நேரம் காத்திருக்க வேண்டும் என்பதாலும், பக்கத்தில் உள்ள உணவகம் சென்று, அங்கே இரவு உணவை முடித்துக் கொண்டு வந்து விடலாம் என்று சென்றிருக்கிறார்கள். 

இனி நண்பர் கூறியது, அப்படியே: 

ஹோட்டலில் நுழைவதற்கு முன்பு, ஹோட்டல் வாசலில் எழுதியிருந்த மெனுவை, நன்கு, ஊன்றிப் படித்து, மனனம் செய்து கொண்டார் அதிகாரி. உள்ளே நுழைந்து, முதலில் ஓரிடத்தில் உட்கார்ந்து பிறகு அந்த இடம் வேண்டாம், சுத்தமாக இல்லை என்று வேறு ஒரு இடத்தில் போய் உட்கார்ந்தார், என்னையும் இழுத்துக் கொண்டு. 
     
அதிகாரி: நீ என்ன சாப்பிடறே?
               
'எனக்கு நான்கு இட்லிகள் போதும்' என்றேன். 
                
அவர் சர்வரை அழைத்து, மள மள வென்று, செட் தோசை, சப்பாத்தி, ஆனியன் ரவா, தயிர் சாதம் என்று பெரிய மெனு கொடுத்து, இவருக்கு நாலு இட்லி என்று கூறினார். எல்லாவற்றையும் அவர் சாப்பிட்ட வேகம் அசாத்தியமாக இருந்தது. இதெல்லாம் முடிந்தவுடன், சர்வரிடம், ஒரு பால், ஒரு காபி என்றார். 
    

"எனக்கு எதுவும் வேண்டாம்." என்று நான் சொல்லிய பொழுது, 'இரண்டுமே எனக்குதான்' என்றார். 

"எதற்கு இரண்டும்?"

"பால் ஹெல்த்துக்காக,காபி தூக்கம் வராமல் இருக்க - வண்டி வந்து, அளவுகள் எடுத்து முடித்து, வீட்டுக்குப் போய்ச் சேரும் வரை தூக்கம் வராமல் இருக்கணுமே!"

"ஓஹோ? சரிதான்!"

அத்தோடு விட்டாரா? ஹோட்டலுக்கு வெளியே வந்ததும், அங்கே இருக்கின்ற கடையில், அரை டஜன் பச்சை வாழைப் பழம் வாங்கினார். சரி, இரவு வெகு நேரம் ஆகிவிட்டால், வயறு காயக்கூடாது என்று, பிறகு கடைகள் மூடிவிடுமே என்ற பயத்தில், முன்னேற்பாடாக வாங்குகிறார் போலிருக்கு என்று நினைத்துக் கொண்டேன். 
  

"நீ பழம் சாப்பிடுறியா?" 

"வேண்டாம்! வேண்டாம்! நாந்தான் சொன்னேனே - இரவு உணவு நான் எப்பவுமே ரொம்ப சிம்பிளாதான் சாப்பிடுவேன்!"

அவர், கடைக்காரர் பழங்களைப் போட்டுக் கொடுத்த கேரி பாகிலிருந்து ஒவ்வொன்றாக பழத்தை எடுத்து, உரித்துச் சாப்பிட்டு, பழத்தின் தோலை, அதே கேரி பாகில் போட்டார். ஆறு பழங்களையும் சாப்பீட்டு முடித்து, பையில் ஆறு பழத்தின் தோல்களையும் பத்திரப் படுத்திக் கொண்டார். இன்னும் ஒரு மணி நேரம் கழித்து அதையும் சாப்பிட்டு விடுவாரோ என்று சந்தேகம் வந்தது. 

"இரவு சாப்பாட்டிற்குப் பிறகு, எப்பவும் கொஞ்சம் வாக்கிங் போகணும். அதுதான் ரொம்ப நல்ல பழக்கம் என்று எங்க தாத்தா சொல்லியிருக்கார். வா என்னோடு!"

அவர் பின்னேயே சென்றேன். நேராக ஜெமினி மேம்பாலம் வரை சென்றோம். 
     
மேம்பாலத்தின் கீழே, சில மாடுகள் உட்கார்ந்து, அசை போட்டுக் கொண்டிருந்தன. 
      

உட்கார்ந்திருந்த ஒரு மாட்டை அவர் சுற்றி வந்தார். மாடு அவரைப் பார்த்து கொஞ்சம் மிரண்டது போல இருந்தது. அதன் முகத்தின் அருகில் போய் நின்று கொண்டார். கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தார். பிறகு, மாட்டின் வால் பக்கம் வந்து, "ஹேய்" என்று லேசாக அதட்டினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. மாட்டிற்கும் ஒன்றும் புரிந்திருக்காது போலிருக்கு. அவரை இக்னோர் செய்து, அசை போடுவதில் கவனமாக இருந்தது. 

அடுத்து அவர், தன் வலது கால் ஷூ வை தரையில் சத்தமாக உதைத்து, "ஹேய்" என்றார். மாடு, 'இது ஏதடா இந்த மனுஷன் நம்மை நிம்மதியாக உட்கார்ந்து அசை போட விட மாட்டான் போலிருக்கே' என்று நினைத்து, சிரமப்பட்டு கால்களை ஊன்றி, எழுந்தது. இருட்டில், அந்த மாட்டின் அடிப் பாகத்தை உன்னிப்பாக கவனித்த அதிகாரி, "ச்சே! காளை மாடு" என்று அலுத்துக் கொண்டு அடுத்த மாட்டை நோக்கி நகர்ந்தார். 
              
அதிகாரி, அப்புறம் சொன்னார், "பழத் தோலை, பசு மாடுகளுக்கு உண்ணக் கொடுத்தால், ரொம்ப புண்ணியம் என்று தாத்தா சொன்னார் .... " 
     

13 கருத்துகள்:

  1. //இன்னும் ஒரு மணி நேரம் கழித்து அதையும் சாப்பிட்டு விடுவாரோ என்று சந்தேகம் வந்தது. // :-)

    பதிலளிநீக்கு
  2. பாவம் அந்த மாடு! நிம்மதியாக அசைபோட்ட மாட்டை எழுப்பி என்ன மனிதர்!

    //இன்னும் ஒரு மணி நேரம் கழித்து அதையும் சாப்பிட்டு விடுவாரோ என்று சந்தேகம் வந்தது. //

    நன்றாக நினைத்தீர்கள்.அதில் நிறைய சத்து இருக்கே! அதை யாரும் சொல்லவில்லை போலும்.

    பதிலளிநீக்கு
  3. பசு மாட்டுக்கு மட்டுமல்ல பசியோடு இருக்கும் காளை மாட்டுக்குக் கொடுத்தாலும் புண்ணியந்தான் :-)

    பதிலளிநீக்கு
  4. காபிக்கும் தோலுக்கும் அவர் கொடுத்த விளக்கம் சூப்பர்...

    மாடு இவரை முட்டாமல் விட்டதே....:)))

    பதிலளிநீக்கு
  5. வித்தியாசமான மனிதர்தான்! நடு ராத்திரியில் மாடுகளை தேடியிருக்கிறாரே! இந்த காலம் என்றால் திருடன் என்று உதைத்து இருப்பார்கள்!

    பதிலளிநீக்கு
  6. போன காரியம் என்னவாயிற்று? வண்டியை பார்த்தார்களா? இல்லை எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டு வந்துவிட்டார்களோ என்று சந்தேகம்!

    பதிலளிநீக்கு
  7. வித்தியாசமான மனிதர்.....

    மாடு கொஞ்சம் மிரண்டிருந்தால் தெரிந்திருக்கும்...... :)

    பதிலளிநீக்கு
  8. ’கல்யாண சமையல் சாதம்’ பாட்டுதான் ஞாபகம் வருது. ஆமா, காசு கொடுத்துச் சாப்பிடறப்பவே இப்படின்னா, கல்யாண வீட்டில எப்படி??!!

    பதிலளிநீக்கு
  9. நச், நச், நச்! தலையிலே அடிச்சுண்ட சப்தம் இது! :))))

    பதிலளிநீக்கு
  10. ராத்திரிக்கே இப்படின்னா, பகல் உணவு?????????????????

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!