Wednesday, October 2, 2013

நிற்க இடம் கிடைக்குமா?

 
1919-ஆம் ஆண்டு இரவு எட்டு மணி. லாகூர் ரயில் நிலையத்திலிருந்து தில்லி செல்லும் ரயில் புறப்பட இன்னும் ஒரு நிமிடம்தான் இருக்கிறது. அங்கும் இங்கும் ஆட்கள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது, அவசரம் அவசரமாக ஒரு மனிதர்   ஓடி வந்தார்.
    
அவர் முகத்தில் பதற்றம் தெரிந்தது. வியர்த்துக் களைத்திருந்தார். மூன்றாம் வகுப்புப் பெட்டிகளை ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டே வந்தார். எந்தப் பெட்டியிலும் இடம் இல்லை. பெட்டிகளில் எல்லாம் ஒரே கூட்ட நெரிசல். உள்ளே இருந்தவர்கள் கதவுகளைப் பூட்டிக்கொண்டார்கள். 'கதவைத் திறங்கள்' என்று அந்த மனிதர் கெஞ்சிக் கேட்டும் யாரும் இரக்கப்படவில்லை. கதவைத் திறக்க மறுத்துவிட்டார்கள். 
    
அப்போது, சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் அந்தப் பக்கமாக வந்தார். ரயிலில் ஏற இடம் கிடைக்காமல், அந்த மனிதர் தவித்துக்கொண்டிருந்ததைக் கண்டார். அவர், அந்த எளிய மனிதரிடம் சொன்னார்: 
     
"ஐயா, நீங்கள் இந்த ரயிலில் பயணம் செய்ய வேண்டுமானால் எனக்கு முக்கால் ரூபாய் கொடுங்கள். நான் உங்களை ஏற்றிவிடுகிறேன்.''  
                  
அந்த மனிதர் சற்று யோசித்தார். இந்தத் தொழிலாளி செய்யும் உதவிக்கு முக்கால் ரூபாய் கொடுப்பதில் தவறு ஒன்றும் இல்லை என்று அவருக்குத் தோன்றியது. எனவே, அவர் சொன்னார்: 
"சரி, நான் முக்கால் ரூபாய் தருகிறேன். என்னை எப்படியாவது இந்த ரயிலில் ஏற்றிவிடுங்கள். நான் அவசியம் தில்லி சென்றே ஆகவேண்டும்.'' 
   
அந்தத் தொழிலாளி இடம் ஒன்றும் பிடித்துக் கொடுக்கவில்லை. ரயில் பெட்டி ஒன்றிற்குள் எப்படியோ அவரைத் திணித்துவிட்டார் அவ்வளவுதான்.  
   
உள்ளே மிகவும் நெருக்கடியாக இருந்தது. சரியாக கால் வைத்து நிற்கக்கூட இடமில்லை. ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டுதான் எல்லோரும் நின்றார்கள். வியர்வை நாற்றமும், சுருட்டுப்புகை நெடியும் சேர்ந்து மயக்கம் வருவது போலிருந்தது. அந்த மனிதர்  எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு நின்றிருந்தார். 
  
வண்டி புறப்பட்டு ஒரு மணி நேரம் கடந்தது. அந்த மனிதர் நின்றுகொண்டே பயணம் செய்தார். அவர் மிகவும் பொறுமையுடன்தான் இருந்தார். ஆனால், அவர் முகத்தில் எல்லையற்ற சோர்வு தெரிந்தது. உடன் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர்             மனம் இரங்கி அவரைப் பார்த்துக் கேட்டார்:
"நீ யாரப்பா? உன்னைப் பார்த்தால் மிகவும் பரிதாபமாக இருக்கிறது. இந்த நெரிசலில் பயணம் செய்து நீ எப்படித்தான் ஊர்ப்போய்ச் சேரப்போகிறாயோ! உன் பெயர் என்ன?'' 
    
அந்த மனிதர் தன் பெயரைக் கூறியதும் எல்லோரும் அதிர்ச்சி அடைந்தார்கள். அவருக்கு இடம் கொடுப்பதற்காக அந்தப் பெட்டியில் இருந்தவர்கள் அனைவருமே எழுந்து  நின்றார்கள்.  
    
அந்த மனிதர்தான் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. 
        

                       

18 comments:

Ramani S said...

மகாத்மா குறித்த
இதுவரை அறியாத செய்தி
காணொளி வெகு சிறப்பு
சிறப்புப் பதிவு வெகு சிறப்பு
பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Geetha Sambasivam said...

புதிய தகவல். பகிர்வுக்கு நன்றி. ஒரு நிமிஷம் அலை ஓசை நாவலில் வரும் சம்பவமோனு நினைச்சுட்டேன். அதிலேயும் சீதா--தாரிணியின் அப்பா இப்படித் தான் ஒரு கட்டத்தில் ஓடி வருவார்னு நினைப்பு. :)))

இல்லாட்டி சம்பந்தமில்லாமல் எனக்குத் தான் தோணித்தோ? :))))

இமா said...

அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.

Geetha Sambasivam said...

லதாவா பாடி இருப்பது? குரல் லதாவுடையது போல் இருக்கே?

Geetha Sambasivam said...

ஆஷா போஸ்லே? ம்ஹூம் இல்லை லதா தான். :))))

திண்டுக்கல் தனபாலன் said...

சிறந்த நாளில் அறியாத தகவல்... நன்றி...

இராஜராஜேஸ்வரி said...

மனதில் நிற்கும்
மகாத்மாவின் பகிர்வுகள் அருமை..!

middleclassmadhavi said...

மனிதரிலிருந்து மஹானானவரைக் குறித்த பகிர்வுக்கு நன்றி! அனைவரின் மனதிலும் நிற்பவரல்லவா அவர்??
இந்தக் காலத்தில் இருப்பது போல் அப்போது டிவி இருந்திருந்தால் எல்லாரும் அடையாளம் கண்டு கொண்டிருந்திருப்பார்கள் இல்லை??!!

வெங்கட் நாகராஜ் said...

மகாத்மா குறித்த இந்த தகவல்.... நான் அறிந்ததில்லை.....

பாடலும் அருமை - மனதிற்கினிமை....

T.N.MURALIDHARAN said...

இதுவரை அறியாத தகவல் நன்றி என்ன எளிமையான மனிதர். அடுத்த தலை முறை குழந்தைகளிடமவது காந்தியைப் பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்த வேண்டும்.

ஹேமா (HVL) said...

இது எனக்கு புது விஷயம், படங்களும்...

வல்லிசிம்ஹன் said...

எத்தனை தரம் தான் இரயிலில் அவமாப் பட்டு இருப்பாரோ மஹான்.
இப்போது இருப்பவர்கள் பறந்து கொண்டே இருக்கிறார்களே நினைத்துப் பார்ப்பார்களா,.
பாட்டு அமிர்தம்.

Ranjani Narayanan said...

இந்த மாமனிதரைப் பற்றி நமது இளைய தலைமுறைக்கு சரியாக யார் எடுத்துரைக்கப் போகிறார்கள்?

s suresh said...

அறியாத சுவாரஸ்யமான செய்தி! நன்றி!

வெற்றிவேல் said...

அறியாத தகவல் அண்ணா...

காந்தி ஜெயந்தி வாழ்த்துகள்...

கோமதி அரசு said...

வெள்ளிக்கிழமை பொதிகையில் காந்தி நினைவுகளை பகிர்வார்கள். அதில் கேட்டு இருக்கிறேன், காந்தியின் இந்த ரயில் பயண அனுபவம் பற்றி. நல்ல
பகிர்வுக்கும், காந்திக்கு பிடித்தபாடல் பகிவுக்கும் மிகவும் நன்றி.

பாமரன் said...

தகவலுக்கு நன்றி

தமிழ்மொழி.வலை

http://www.thamizhmozhi.net

சே. குமார் said...

அறியாத செய்தியை அறியத் தந்தமைக்கு நன்றி அண்ணா...

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!