திங்கள், 11 நவம்பர், 2013

ஓடிப் போன உறவு



அந்தத் திருமணத்தில் இப்படி ஒரு சந்திப்பு நடக்கும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. வேலையிலிருந்து நேராக வந்து விட்டிருந்தாள்.

இத்தனைக்கும் உறவுக்காரர்கள் கல்யாணம் கூட இல்லை. நட்புதான்.

இவளைப் பார்த்ததும் அந்த முகத்தில் தெரிந்த வெளிச்சம் வெறுப்பைத்தான் ஏற்படுத்தியது. இவளை இங்கு எதிர்பார்க்கவில்லை என்று சொல்லாமல் சொன்ன பாவம்.

கூட்டத்தை விலக்கிக் கொண்டு மெதுவாக  அருகில் வருவது தெரிந்தது. நகர்ந்து  எங்கும் செல்ல முடியாத நிலை. முகத்தை வேறு பக்கம் பார்ப்பதுபோல திரும்பிக் கொண்டிருந்தாள்.

" சௌக்கியமா?"

"--------------------------"

"இன்னும் கோபம் தீரவில்லையாம்மா ?"

"--------------------------------"

"என் முகத்தைக் கூடப் பார்க்க மாட்டியா?"

"எப்படிப் பார்க்கத் தோணும்? தன் சுகம்தான் பெரிசுன்னு வீட்டை விட்டு ஓடிப் போனபோது?  நாங்களெல்லாம் அலுத்துப்  போன சொந்தம்தானே?"

     

"அப்படி இல்லைம்மா.... நான் எப்படிச் சொல்வேன்? அந்த நேரத்துல என் நிலை சொல்லவே முடியாது... "

"இனி சொல்லித்தான் என்ன ஆகப் போகுது?"  கிண்டலாகச் சொன்னாள்..

"அபர்ணா எப்படியிருக்கா?"

"எப்படியிருந்தா உனக்கென்ன?"

அப்புறம் நீண்ட நேரம் அளிக்கப்பட்ட விளக்கங்களைக் கேட்கவே பிடிக்கவில்லை. நான்கு வருடங்களுக்கு முற்பட்ட கதை. அழகிய கவிதையாய் இருப்பதாய் நம்பிக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தை உலுக்கிப் போட்ட ஒரு கதை.

எங்கிருந்தோ வந்த ஒரு பெண் இந்த வீட்டின் சந்தோஷத்தைக் குலைத்துப்போட்ட கதை. குரு ஒரு பெண்ணுடன் ஒருநாள் காணாமல் போனபோது துவண்டு போனது குடும்பம்.

அதற்குப் பிறகு இன்றுதான் குருவுடனான இந்தச் சந்திப்பு. மனமெல்லாம் கசந்து வழிந்தது நர்மதாவுக்கு.

'என்ன உறவோ... என்ன பிரிவோ..'

முதல் கொஞ்ச நாட்களைக் கடப்பதுதான்  ரொம்பக் கஷ்டமாக இருந்தது. கேள்விகளைச் சந்திப்பதில் பயத்திலிருந்து அலுப்பு என்ற நிலைக்கு மாறியது. இப்போதும் நினைத்துப் பார்க்க விரும்பாத நாட்கள்.

அப்புறம் இயந்திரமயமான வாழ்க்கை. இவ்வளவு நாள் தன்னுடன் கூட இருந்த குடும்பத்தைவிட, நேற்று வந்த ஒரு பெண் முக்கியமாகிப் போனாளா என்ற கேள்வி எல்லார் மனதையும் அறுத்தது.

எந்த விழாக்களையும் அட்டெண்ட் செய்வதில்லை. யாரிடமும் பேசுவதில்லை. குடும்பம் தனக்குள்ளேயே சுருங்கிப் போனது.

நினைவை உதறிக்கொண்டு சாப்பிடாமலேயே கிளம்பி விட்டாள்.


பஸ் ஸ்டாப்பில் நின்றபோதும், பஸ்ஸில் இயந்திரமாய் டிக்கெட் எடுத்த போதும், கூட்டம் நெரிக்க நெரிக்க பஸ் ஓடியபோதும் மனம் எதிலும் செல்லவில்லை நர்மதாவுக்கு.  தன்னுடைய நிறுத்தம் வந்ததும் இயந்திரமாய் இறங்கி நடந்தாள்.

வீட்டுக்குள் நுழைந்து செருப்பைக் கழட்டிப் போடும்போது அபர்ணா எதிர்ப்பட்டாள்.

கைப்பையை மேஜை மேல் வைத்து விட்டு சென்று முகம், கைகால் கழுவிக்கொண்டு வந்தாள் நர்மதா. அபர்ணா அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"கல்யாணத்துக்குப் போனே இல்லே?"

"ம்...."

"என்னடி உடனே வந்துட்டே? அங்கே சாப்பிடலையா?"

"இல்லை"

"ஏன்?"

"-----------------"

இவள் முகத்தைப் பார்த்த அபர்ணா சற்றே தயக்கத்துடன் கேட்டாள். "ஏண்டி? யாராவது ஏதாவது மறுபடி கேட்டுட்டாங்களா?"

"யாராவது, ஏதாவது கேக்கறதா? அங்க ஓடிப்போன மாப்பிள்ளையைப் பார்த்தேன். உன் புருஷன், அதான் எங்கப்பன் திருவாளர் குருமூர்த்தி அவர்களைப் பார்த்தேன்... வந்து விளக்கம் சொல்றார் உன் புருஷன்... அபர்ணா எப்படியிருக்கா'னு உன்னையும் விசாரிச்சார்... போதுமா?"

கோபத்துடன் இரைந்துவிட்டு உள்ளே சென்று விட்ட நர்மதாவைப் பார்த்து விக்கித்து நின்று கொண்டிருந்தாள் அவள் அம்மா அபர்ணா.

  

26 கருத்துகள்:

  1. அப்பாவால் ஏற்பட்ட அவமானங்களை சகித்துக் கொண்டிருந்த நர்மதா சரியான பதிலடி கொடுத்து விட்டாள்.அருமையான சிறுகதை.
    வாழ்த்துக்கள்........

    பதிலளிநீக்கு
  2. அருமையான கதை.
    வாழ்த்துக்கள் அண்ணா.

    பதிலளிநீக்கு
  3. அப்பாவால் அமைதியிழந்த குடும்பமோ?

    பதிலளிநீக்கு
  4. உணர்வுப் பூர்வமான கதை
    சொல்லிச் சென்றவிதம் அந்த கதாப்பாத்திரங்களின்
    மன நிலையை என்னையும் உணரவைத்தது
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. அப்பாவா!!
    காரணமில்லாமல் ஏன் போனார்.
    அருமையாக எழுதி இருக்கிறீர்கள் .ஒரு பெண் மனசின் குமுறல் இப்படித்தான் இருக்கும்.பாவம்.
    வாழ்த்துகள் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  6. வீட்டை விட்டு ஓடாமல் இருந்திருந்தால், குழப்பங்கள் இன்னும் அதிகமாக இருக்கும் .

    இருந்தாலும், அந்த ஓடிப்போன அப்பா செய்தது கோழைத்தனம் மட்டுமல்ல, ஹிபோக்ரசி .

    மனைவியை விட்டு ஓடிப்போன, அல்லது காணமல் போன அல்லது எங்கே போனார் என்று தெரியாத எனது ஒரு நண்பரின் மனைவி இன்னும் அதாவது ஒரு ஐம்பது வருடங்களுக்குப்பிறகும் அவரைப்பார்க்கலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

    எது நடக்கிறதோ அது நமது வசத்தில் இல்லை என்னும்போது அதை பற்றி கவலைப்படுவதில் என்ன பிரயோசனம் ?

    காயப்படுத்தியவனுக்கு மன்னிப்பு இவ்வுலகிலும் கிடையாது. அவ்வுலகிலும் கிடைக்காது.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  7. In my commet,please read this
    //எனது ஒரு நண்பரின் மனைவி //
    as எனது ஒரு நண்பரின்( ????))) மனைவி
    I meant, wife of an acquaintance

    subbu thatha.


    பதிலளிநீக்கு
  8. ஓடிப் போனது அப்பா என்பது கடைசியில் எதிர்பாராத் திருப்பம். என்னதான் நியாயங்கள் கற்பிக்கப்பட்டாலும், (கவனிக்கவும், கற்பிக்கப்பட்டாலும்) இத்தகைய துரோகத்தைப் பெண்கள் ஒரு நாளும் மன்னிக்கவே கூடாது. மன்னித்தால் எல்லா ஆண்களுக்கும் துளிர் விட்டுப் போகும்! நறநறநறநறநற

    நர்மதா செய்தது சரியே!

    பதிலளிநீக்கு
  9. அருமை... (நண்பரின் கைபேசி மூலம் இந்தக் கருத்துரை) நன்றி...

    பதிலளிநீக்கு
  10. முடிவு வித்தியாசமாக இருந்தது. அருமை.

    பதிலளிநீக்கு


  11. வித்தியாசமான கதை! என்றாலும்
    வேதனை மனதைத் துளைத்தது

    பதிலளிநீக்கு


  12. வித்தியாசமான கதை! என்றாலும்
    வேதனை மனதைத் துளைத்தது

    பதிலளிநீக்கு
  13. விட்டுச் சென்ற உறவு யார் என்கிற சஸ்பென்ஸை இறுதிவரை கொண்டு சென்ற சிறப்போடு, ஆறாத வலிகளையும் உள்ளுக்குள் புதைந்து கிடைக்கும் வேதனைகளையும் சொல்லும் கதை.

    அருமை.

    பதிலளிநீக்கு
  14. நீ நான் என்று வரும் போதே ஏதோ எதிர்பாராதது இருக்கிறது என்று க்ளூ கிடைத்து விட்டது! அருமை!

    பதிலளிநீக்கு
  15. வித்தியாசமான முடிவு! சிறப்பான சிறுகதை! நன்றி!

    பதிலளிநீக்கு
  16. திருவாளர் அப்பனாக இருக்கும் என்பது யூகிக்காத,யூகிக்கமுடியாத முடிவு.
    வேலைக்குப் போகும் பெண். இம்மட்டில்
    வீட்டில் வந்து குமுறினாளே.
    நல்ல கதை. பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  17. நன்றி ராஜராஜேஸ்வரி மேடம்.

    நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம்.

    நன்றி ஏஞ்சலின்.

    நன்றி குமார்.

    நன்றி கவியாழி ஸார்.

    நன்றி ரமணி ஸார்.

    நன்றி வல்லிம்மா.

    நன்றி சூரி ஸார்.

    நன்றி கீதா மேடம்.

    நன்றி DD.

    நன்றி மணிமாறன்.

    நன்றி புலவர் ஐயா.

    நன்றி ராமலக்ஷ்மி.

    நன்றி middleclassmadhavi.

    நன்றி 'தளிர்' சுரேஷ்.

    நன்றி காமாட்சி அம்மா.

    பதிலளிநீக்கு
  18. கதை சொன்ன முறை அருமை. கைவிட்டுப் போன கணவனுக்காக அவன் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்பது கூடத் தெரியாமல் நோன்பு நோற்ற பெண்களும் உண்டு.
    இந்த விஷயத்தில் ஓரளவு வயசான பின் ஆண்களைப் போல பெண்கள் இருப்பதில்லை.

    நர்மதாவுக்கு வேண்டுமானால் தந்தையாக இருக்கலாம். ஆனால் அபர்ணாவுக்கு புருஷனில்லையோ?..

    கதையின் கடைசி வரி இப்படி ஏன் இருந்திருக்கக் கூடாது?..

    "அவர் எப்படி இருக்கிறார்?" என்று கேட்டுவிட நுனி நாக்கு வரை வார்த்தைகளை நர்மதாவின் கோபத்தைப் பார்த்து கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள் அபர்ணா.

    பதிலளிநீக்கு
  19. நன்றி ஜீவி ஸார்... வெளியூர்ப் பயணமோ! 'பூவன'த்திலும் காணோம்.

    //கதையின் கடைசி வரி இப்படி ஏன் இருந்திருக்கக் கூடாது?..//

    கதையின் கடைசி வரிகளை வாசகர்கள் இஷ்டத்துக்கு/கற்பனைக்கு விடுவது நல்லது இல்லையா? :))

    பதிலளிநீக்கு
  20. அருமையான கதை. எதிர்பாராத முடிவு.....

    பதிலளிநீக்கு
  21. ஜீவி அவர்கள் தமது கண்ணோட்டத்தில்

    ஒரு லட்சிய மனைவி கணவன் தன்னைக் கை கழுவி விட்டு சென்ற நிலையிலும் எப்படி இருக்கவேண்டும் எவ்வாறு சிந்திக்கவேண்டுமென

    சித்தரிக்கிறார்.

    ஐ பிடி நாட் அபர்ணா
    பட்
    ஜீவி sir
    பார் த இன்ஹுயுமன் வால்யுஸ்
    ஹி ஹோல்ட்ஸ் டியர் டு ஹிஸ் ஹார்ட்.



    பதிலளிநீக்கு
  22. வணக்கம், சூரி சார்.

    தாங்கள் சொல்லியிருக்கும் கருத்து சரியா புரியலே.

    முக்கியமா அந்த 'ஹி'. ஹூ?..

    இதில் என் தனிப்பட்ட கருத்து என்று ஏதுமில்லை. கதை எப்படி போனதோ அதன் போக்கோடு ஒட்டிச் சொன்ன முடிவு மட்டுமே.

    இதில் லட்சிய மனைவி என்றெல்லாம் கூட ஒன்றுமில்லை. மன உணர்வுகளின் தத்தளிப்பு தான்.

    தங்கள் கருத்தைத் தமிழில் சொன்னால் கதையோடு பொருத்தி எந்த காரணத்திற்காக அப்படிச் சொன்னேன் என்று என் கருத்தை விளக்கமாகச் சொல்கிறேன்.

    அன்புடன்,
    ஜீவி

    பதிலளிநீக்கு
  23. இதில் லட்சிய மனைவி என்றெல்லாம் ஒன்றுமில்லை. வீம்புத்தனமில்லாத இயல்பான மன உணர்வுகளின் தத்தளிப்பு தான்.

    கதையின் போக்கோடு ஒட்டிச் சொன்ன கருத்தை, தனிநபரின் சொந்தக் கருத்தாக முடிச்சுப் போடக் கூடாது.

    என் சொந்தக் கருத்துக்கள் என் கதைகளோடு சரி. அவற்றோடு நீங்கள் ஒத்துப்போக முடியாவிட்டாலும் நிச்சயம் அந்த
    'pity' இருக்காது.

    தங்கள் கருத்தை தமிழில் சொல்லுங்கள். நான் சொன்னது இந்தக் கதையோடுப் எப்படிப் பொருந்தி வருகிறது எனப் பொருத்திச் சொல்கிறேன்.

    அன்புடன்,
    ஜீவி

    பதிலளிநீக்கு
  24. நேற்று தான் பார்த்தேன்.

    இருப்பினும் அதற்கான பதிலை சொல்வதற்கு உங்கள் வலைத்தளத்தை ஒரு விவாத மேடையாக ஆக்கிட முடியுமா என்பதில் உடன்பாடு அவாளவு இல்லை. அதனால் வாளா இருந்தேன்.

    பொதுவாக, எழுத்தாளர்கள் தம் மனம் ஒப்புக்கொண்ட நிலைகளை தத்தம் கதா பாத்திரங்கள் மூலம் பிரதிபலிப்பது இயற்கையே.

    தன்னைக் கை கழுவி விட்டு போன கயவன் கணவன் பால், இக்காலத்து பெண்டிர் தம் உள்ளத்தில் அந்தக்கால புராண காலத்து பதிவிரதா தர்மத்தை மேற்கொண்டு அவனையே நினைத்து உருகும் மன நிலை இருக்கும் அல்லது இருக்கவேண்டும் அதுவே பெண்டிற்கழகு என்பதெல்லாம் நாம் எந்த காலத்தில் இருக்கிறோம் என்பதற்கு ஒரு சான்றே.

    அவர் எப்படி இருக்கிறார் ? என்ற கேள்வியே அல்லது அந்த கேல்வி உதிக்கும் மன நிலை எனக்கு கேலிக்கு உரியதாக ப் படுகிறது.

    அந்தக் கயவனை ஒரு பாமிலி கோர்ட்டில் நிற்கவைத்து கம்பிக்குப் பின்னால் இந்தக் காலத்து பெண்டிர் நிறுத்துவர். அதுவே எனக்கு இயல்பாகவும், தர்மமாகவும் தெரிகிறது.

    ஒரு யுகத்து தர்மங்கள் இன்னொரு யுகத்துக்கு பொருந்தா.

    இத்தனை சொன்னாலும், அந்த பின்னூட்டம் போட்ட போது இருந்த என் கோபம் எப்போது இல்லை.

    வருத்தமாக இருக்கிறது.

    உங்களது அடுத்த பின்னூட்டத்தின் விளக்கமும் தெளிவாக இருக்கிறது. ஸோ நோ issues.
    you are entitled to your views.
    i am sorry if i have hurt u in anyway.
    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!