வியாழன், 13 மார்ச், 2014

2. முதியோர் இல்லமும் கூட்டுக் குடும்பமும் - வெட்டி அரட்டை - 2

                
வீட்டிலிருக்கும் முதியவர்களை அன்புடனும், மதிப்புடனும் நடத்திய காலம் போய், இப்போது பொறுத்துக் கொள்ளவே மனமில்லா நிலைக்கு வந்து விட்டோம். முதுமை என்பது அவர்களின் இரண்டாவது குழந்தைப்பருவம் என்பதை மறந்து விடுகிறோம். அப்பாவின் சட்டைப்பையிலிருந்து உரிமையாக பணத்தை எடுத்து செலவு செய்தோமே... அதே உரிமை அப்புறம் அப்பாவுக்கோ, தாத்தாவுக்கோ நம்மிடம் இருக்கிறதா? அந்தக் காலத்தில் வீட்டுக்கு மூத்தவர்களிடம்தான் பணப்பெட்டியின் சாவி இருக்கும்.
    
இப்போது ஏன் சேர்ந்து வாழ முடிவதில்லை? அந்தக் காலத்தில் வேலை வாய்ப்புகள் கம்மி. சொந்த நிலங்கள் வைத்திருந்தவர்கள் விவசாயம் செய்து கொண்டோ, தோட்டம் துரவு என்று இருந்தவர்களோ நகர்ப்புறத்தின் கவர்ச்சிகள் இல்லாமல், பணத்தின் தேவைகள் இல்லாமல் ஒன்றாக இருக்க முடிந்தது. முடிந்தவரை சொந்தங்களிலேயும் திருமணம் செய்த காலம் அது.

அப்புறம் சொந்தத்தில் திருமணம் செய்வது தப்பு என்றார்கள். நாமிருவர், நமக்கிருவர் என்றார்கள். அதற்கும் பிறகு நாமே இருவர், நமக்கெதற்கு இருவர்? ஒருவர் போதுமே என்றார்கள்.
         
விவசாயம் பார்த்தவர்கள் மழை பொய்த்ததாலோ வேறு காரணங்களுக்காகவோ நிலம் விற்று நகரத்துக்கு நகர்ந்தார்கள்.
               
படித்தவர்களுக்கு வெவ்வேறு இடங்களில் வேலை கிடைக்கும்போது, எல்லோரும் ஒரே இடத்தில் வாழ்தல் சாத்தியமற்றுப் போனது. வெளியூர் என்பது வெளிநாடாகிப் போனபோது இடைவெளி இன்னும் அதிகரித்தது.
    

பணம் பார்க்கும் நோக்கில் சேர்ந்திருக்கும் சந்தோஷங்களையோ, உறவுகளின் மதிப்பையோ மிஸ் செய்கிறோமோ...

வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும், அங்கேயே செட்டிலாகி விட்ட தோழி ஒருவர் சமீபத்தில் இந்தியா வந்திருந்தபோது அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.  பேசிக் கொண்டிருந்தபோது அவர் தந்தை சில வருடங்களுக்கு முன்னர் காலமாகி விட்டார் என்ற செய்தியைச் சொன்னார். அவர் தந்தை இறந்து விட்டார் என்ற செய்தி கிடைத்தும் அவரால் இந்தியா வர முடியவில்லை என்பதையும் சொன்னார். மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்திலிருந்து வந்தவர் அவர். இவர் இப்படி மேலே வர, அவர் தந்தை அந்நாளில் பட்டினியுடன் பட்ட கஷ்டங்கள் நினைவுக்கு வந்தது. இந்தச் செய்தியைச் சொன்னபோது அவரிடம் பெரிய வருத்தம் ஒன்றையும் என்னால் பார்க்க முடியவில்லை.

அந்தக் காலத்தில் பள்ளிகளே குறைந்த எண்ணிக்கையில்தான் இருந்தன. பள்ளி நேரமும் 9.30க்கு மேல்தான். 4 மணிக்கும், 3.30 க்கும் விட்டு விடுவார்கள். ஸ்ட்ரெஸ் கிடையாது. மாலை பள்ளி விட்டு வீடு வந்ததும் புத்தகப்பையை ஒரு ஓரமாகத் தூக்கிப் போட்டு விட்டு தெரு நண்பர்களுடன் விளையாடப் போய்விட முடிந்தது. தொலைகாட்சி கிடையாது. கணினி கிடையாது. முக்கியமாக தொலைபேசி/அலைபேசி கிடையாது! தெருவில், பரந்த மைதானங்களில் ஓடியாடி விளையாட முடிந்தது. கபடி என்ன, கால் பந்து என்ன, கிரிக்கெட் என்ன, ஓடிப்பிடித்து என்ன, கண்ணாமூச்சி என்ன, கோலி விளையாட்டு என்ன, கிட்டிப்புள் என்ன.....
            

இப்போது...? விளையாட இடமும் இல்லை, நேரமும் இல்லை! எல்லா விளையாட்டுகளும்  கணினியிலும், அலைபேசியிலுமே முடிந்து விடுகிறது! ஆரோக்கியக்கேடு!
             
காலை பள்ளிக்குக் கிளம்பும் வரையிலும் கூட ஹோம்வொர்க் செய்யும் பிள்ளைகள் பள்ளிக்கு ஓடுவதும், பள்ளி விட்டு வந்ததும் மாலை வேறு டியூஷன்களுக்கோ, சிறப்புத் தகுதிக்கான படிப்பு வகுப்புகளுக்கோ துரத்தப்படும் மாணவர்கள். நாட்டிய வகுப்பு, பாட்டு வகுப்பு என்று துரத்தப்படும் மாணவிகள்.
             
ஆயுள் காப்பீட்டைப் பற்றி ஒரு ஜோக் சொல்வார்கள். இளமை முழுவதும் சேர்க்கும் பணத்தை சேர்த்து வைக்க வேண்டி ஆயுள் காப்பீட்டில் இட்டு, அப்படிச் சேர்த்த பணத்தை இளமை தொலைந்தவுடன் வரும் நோய்களுக்காகச் செலவழிக்கிறோம் என்று!
              
அதுபோல, இளமையை வீணாக்கி, சந்தோஷத்தை மறந்து ஓடி ஓடிப் படித்து, முதல் வகுப்பு, டிஸ்டிங்ஷன் என்று அலைந்து வேலையில் சேர்ந்து பணம் சேர்த்து வீடு, சொத்து வாங்கி, திருமணம் செய்து பிள்ளை பெற்று அவர்களைப் படிக்க வைக்க ஓடி ஓடி சம்பாதித்து, அவர்களையும் மிஷின்களாக்கி, பணம் சம்பாதிக்க வெளிநாடு அனுப்பி விட்டு, வயதான காலத்தில் தனிமையில் இங்கு காலம் கழித்துக் கொண்டு...எதைப் பெறுகிறோம், எதை இழக்கிறோம்?
             

முன்பு ஒரு குளிர் பானத்தின் விளம்பரம் ஒன்று வரும். ஓய்வாக அமர்ந்து கவலையின்றி குளிர்பானம் குடிக்கும் ஒருவனிடம், அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் அவன் நண்பன் ஒருவன் ஓடி ஓடி சம்பாதிப்பதின் அவசியத்தைச் சொல்வான். 'ஓடி?' என்று இவன் கேட்க, 'ஓடி ஓடி சம்பாதிக்கணும்' என்பான் அவன். 'சம்பாதித்து?' என்பான் அவன். 'நிறைய சம்பாதித்தபின் ஓய்வாக அமர்ந்து குளிர்பானம் அருந்த வேண்டும்' என்பான் அவன். 'அதைத்தான் நான் இப்போதே செய்கிறேன்' என்பான் இவன்.
         
போதுமென்ற மனம் இருப்பவனே பெரிய பணக்காரன்.
                

முதல் முதியோர் இல்லம் எப்போது வந்தது? வீட்டில் இருக்கும் இளையவர்கள் பேசும் பேச்சில், நடத்தையில் மனம் புண்பட்டு  இருப்பதைவிட,முதியோர் இல்லங்களில் இருப்பதும் தவறில்லை. அதை முதியோர் இல்லம் என்று பார்க்காமல் முதியவர்களின் தனிக்குடித்தனமாகப் பார்க்க வேண்டியதுதான். (சம்சாரம் அது மின்சாரம் லக்ஷ்மி வசனம் நினைவுக்கு வருகிறதா?) ஏனென்றால், வீட்டின் மூத்த உறுப்பினர்களாகிய இவர்களும் தங்கள் அனுபவத்தை வைத்து சில சமயம் எதிர்பார்ப்பில்லாமல் வாழவும், ரொம்பக் கேள்விகள் கேட்டும், எல்லா விஷயத்திலும் தலையிடுவதைத் தவிர்க்கவும் வேண்டும் என்று இளைய தலைமுறை எதிர்பார்க்கிறது.
       

மாமியாருக்கு மருமகளைப் பிடிக்கவில்லை. மருமகளுக்கு (அதனாலேயே)  மாமியாரைப் பிடிக்கவில்லை. பின்னால் மாமியாராகப் போகும் இந்த மருமகள் தானாவது நல்ல மாமியாராக இருக்கலாம் என்று நினைக்கிறார்களா? அதுவும் பெரும்பாலும் நடப்பதில்லை! ஆனால் மூத்தோர் தங்கள் விஷயத்தில் தலையிடுவதைத்தான் இளையவர்களும் விரும்பவில்லையே... கீதா சாம்பசிவம் மேடம் கேட்டிருக்கும் பத்து கேள்விகள் நினைவுக்கு வருகின்றன!
         
எனக்கு முந்தைய தலைமுறையில் 14 சகோதர, சகோதரிகள். எங்கள் தலைமுறையில் 4 அல்லது 5. இப்போதெல்லாம் ஒரு வீட்டில் இரண்டு குழந்தைகள் என்பதே கூட அரிதாகி வருகிறது. சிக்கனம். பாதுகாப்பு. முன்பு அத்தனை குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்க முடிந்தது. இப்போது இரண்டு பெற்றவன் கூட படிப்புக்கும், திருமணம் செய்து வைப்பதற்கும் முடியாமல் முழி பிதுங்கி நிற்கிறான். போட்டி. மற்ற உறவினர்களின் பிள்ளைகளைவிட, தன் பிள்ளைகள் இன்னும் உயர்ந்தவர்கள் என்று காட்டும் போட்டி!  
                              

20 கருத்துகள்:

  1. இன்றைய 'நவீன' சூழ்நிலை இளைய தலைமுறையை மாற்றி விடுகிறது என்று சொல்லவே முடியாது... மாற்ற வைப்பதே வளர்ப்பு முறை தானே...? தன்னையும் ஒப்பிட்டு, தனது வாரிசுகளையும் கெடுத்து, என்னத்த சொல்ல...?

    அந்தப் பெண்மணியிடம் பெரிய வருத்தத்தை எதிர்ப்பார்க்கவே முடியாது... ஏனென்றால் பக்கா சுயநலம்... அவரின் துணைவரிடமும் இருக்கலாம்...!

    சின்ன சின்ன சந்தோசத்தை இழக்கிறோம்...! நிம்மதியற்ற சாவைப் பெறுகிறோம்...!

    'என்ன' தான் இருந்தாலும் படுத்தவுடன் நிம்மதியாக தூக்கம் வருகிறதா...? அவர்கள் தான் திருப்தியான பணக்காரர்கள்...

    பதிலளிநீக்கு
  2. போதுமென்ற மனம் இருப்பவனே பெரிய பணக்காரன்.

    பதிலளிநீக்கு
  3. சாப்பிட்டுட்டு மெதுவா வரேன். :))))

    பதிலளிநீக்கு
  4. முதுமை என்பது அவர்களின் இரண்டாவது குழந்தைப்பருவம்//

    உண்மை.
    இரண்டாவது குழந்தை பருவத்தை ரசித்து வாழ சுற்றி இருப்பவர்களும் அவர்களுக்கு துணை இருக்கலாம்.
    எங்கள் அம்மாவை நாங்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டோம்.

    எங்கள் மாமனார், மாமியாரை மகிழ்ச்சியாக பார்த்துக் கொண்டோம்.
    இப்போது மாமனாருக்கு பிறகு அத்தையை எல்லோரும் மாறி மாறி பார்த்துக் கொள்ள முடிவு செய்து உள்ளோம். ஆனால் எல்லாம் பக்கத்தில் இருப்பதால் சாத்தியம்.

    ஆனால் எங்கள் குழந்தைகள் வெளிநாட்டில், வெளிமாநிலத்தில் இருக்கிறார்கள்.

    எங்களுக்கு வயதான காலத்தில் தனிமையில் இருப்பது காலத்தின் கட்டாயம் ஆகி விட்டது.

    நாங்கள் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை பெற வேண்டியது ஆகி விட்டது.

    வரும் போது சந்தோஷப்பட்டு, மீதி காலத்தை அந்த மகிழ்ச்சி கழிக்க வேண்டும்.


    எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு பிரியமாய் எங்கு இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இருப்பதே நலம் என்று நினைக்கிறேன்.







    பதிலளிநீக்கு
  5. வரும் போது சந்தோஷப்பட்டு, மீதி காலத்தை அந்த மகிழ்ச்சியில் கழிக்க வேண்டும்.(அந்த மகிழ்ச்சியை எண்ணிப்பார்த்துக் கொண்டு)

    பதிலளிநீக்கு
  6. தனபாலன் சொல்வதும், அன்பு கோமதி சொல்வதும் நல் வாக்குகள். என் பெற்றோர்கள் அவர்களின் பெற்றோரை வெகு நன்றாகப் போற்றினார்கள். அதைப் பார்த்து நானும் என் மாமனார் மாமியாரிடம் நலமே இருந்தேன். இனி வரும் தலைமுறையினரும் அப்படி இருக்கவேண்டும் என்றே நினைக்கிறோம். வெளிநாடுகளில் வாழும் பெண்களுக்கு வேலை,வெளிவேலை எல்லாமே ஒரு சுமை. இதற்கு நடுவில் மாமியாரோ மாமனாரோ வந்தால் சிலநாட்கள் பொறுமை. எங்கள் பெண்ணின் தோழி ஆதரவில்லாத அம்மாவை இந்த ஊரில் குடியுரிமை பெற்றவராகவே ஆக்கிவிட்டார். மாமியாருக்கு எந்த நிலையோ தெரியாது.அன்பு ஒரு பக்கம் ஓடும் வெள்ளமாக இருக்கக் கூடாது. இருபக்கமும் உழைப்பும் விட்டுக் கொடுத்தலும் வேண்டும்.நம்மால் நம் பெண்ணோ பிள்ளையோ வருத்தப் படக்கூடாது.நிறையப் பக்குவம் வேண்டும். மிச்சத்தைப் பகவான் தான் பார்த்துக் கொள்ளவேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. மிக விரிவான அலசல்! எதிர்காலம் இன்னும் எங்கு சென்று முடியுமோ? அருமையான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு

  8. எனக்கு ஒரு நண்பர். நன்றாகச் சம்பாதித்தார். இரண்டு ஆண்பிள்ளைகள் வெளிநாட்டில்படிக்க வைத்தார் அங்கேயே வேலை. ஒரு முறை அந்தப் பிள்ளைகளிடம் பேசிக் கொண்டிருந்தேன். தாய் தந்தையர் இங்கு தனியாக இருப்பதில் வருத்தமில்லையா என்று கேட்டேன். எல்லோரும் தனித்தனிதான் என்றனர். வயதான காலத்தில் உடல் நலக் குறைவு வந்தால் யார் அவர்களை பார்ப்பது என்ற கேள்விக்கு இங்கிருந்தாலும் நாங்களா பார்ப்போம். மருத்துவர்தானே . வேண்டிய பணம் வேண்டுமானால் தருகிறோம். அவர்களில் யாராவது இறந்து போனால் என்ற என் கேள்விக்கு அங்கிருந்தே முடிந்தால் திவசம் செய்வோம் என்றார்கள். இதுதான் தற்காலப் பிள்ளைகளின் மனோபாவமோ என்னும் ஐயம் எழுகிறது. தான் பெற்றதுகளே ஆனாலும் அவர்களிடமிருந்து எதையும் , அன்பு உட்பட எதிர்பார்க்கக் கூடாது என்று அறிவு சொல்கிறது. இருந்தாலும் நாம் வளர்ந்த முறை அப்படி அல்லவே.

    பதிலளிநீக்கு
  9. இன்றைய சூழலை விரிவாக அலசியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  10. இன்றைய சூழலை விரிவாக அலசியிருக்கிறீர்கள்...

    இன்றைய குழந்தைகளில் ஓட்டத்தை நாம்தானே நடத்திக் கொண்டிருக்கிறோம்....

    பதிலளிநீக்கு
  11. சென்ற தலைமுறையின் முக்கியத்துவத்தை (values) சொல்லிக் கொடுத்து வளர்க்காத போன தலைமுறையை தான் குற்றம் சொல்வேன்!!

    பதிலளிநீக்கு
  12. பழைய காலத்தில் வானப்ரஸ்தம் என்ற ஒரு நிலை இருந்தது.

    இல்லறத்திற்குப் பின்னே துறவு நிலைக்கு முன்பு தன்னைத் தானே எல்லாவற்றையும் துறப்பதற்கு தயாராகிக் கொள்வதற்கு அது ஒரு பள்ளி.

    இன்று, நமது பிள்ளைகளை வளர்த்து, ஆளாக்கி, அவர்களை பெரிய படிப்பு படிக்க வைத்து,அவர்கள் அமெரிக்காவில், சிங்கப்பூரில், துபாயில் வேலை பார்க்கிறார்கள் என்று அக்கம்பக்கத்தில் தம்பட்டம் அடித்துக்கொள்கிறோம்.

    அதற்காக ஒரு விலை கொடுக்க வேண்டும் இல்லையா ?
    உலகத்தில் எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கிறது.

    அமெரிக்காவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் பையனை அனுப்பி வைத்துவிட்டு, அவன் அனுப்பும் பணத்தில், எல்லா வசதிகளையும் பெறும் இந்த காலத்து பெற்றோர், எந்த அளவுக்கு தனது மகன், அல்லது மகள் அவர்களது அன்றாட வாழ்க்கை முறைகள் இருந்து ஒதுங்கி நிற்கிறார்களோ அது தான் அவர்களுக்கு நிம்மதி கிடைக்கும்.

    கூட்டுக் குடும்பம் தான் வேண்டும் என்கிறவர்கள் தம் வாரிசுகளை ப்ளஸ் டூ வுக்கு மேல் படிக்க வைக்க கூடாது. அதே தெருவில் ஒரு பெட்டிக்கடை வைத்து கொடுக்கவேண்டும். இல்லையேல் , அதே ஊர் கோவிலில் ஒரு எடுபுடியாக,ஊழியராக, புரோஹிதராக, வேலைக்கு மட்டும் போகும்படியான நிலை ஏற்படுத்த வேண்டும். அப்படி இருந்தால், அந்த சூழ்நிலைக்குத் தகுந்தபடி வரும் மருமகளை ஆட்டிப் படித்துக்கொண்டு, இருந்து கொள்ளலாம்.

    ஆனால், இந்த காலத்து அம்மாக்களுக்கு, வரும் மருமகள் வேலை பார்க்கவேண்டும் அவர்கள் கொண்டு வரும் பணத்தில் புதிய வீடு கட்டவேண்டும், தான் அந்தக் காலத்தில் அனுபவிக்க இயலாத
    வசதிகளை அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது.

    யூ கான்ட் ஹாவ் த கேக் அண்ட் ஈட் இட் டூ.

    வாழ்க்கையில் ஒன்று விட்டால் தான் இன்னொன்று கிடைக்கும்.

    முது வயதில் மன நிம்மதி வேண்டும் என்றால் இந்த காலத்து வாழ்க்கை வசதிகளுக்கு ஆசைப் படாதீர்கள்.

    நீங்கள் ஒதுக்கப் படுமுன்பே ஒதுங்குங்கள்.

    நீங்கள் பெற்ற குழந்தைகள் அவர்கள் நினைத்தவாறு வழி
    .விடுங்கள்.

    அது அவர்களுக்கும் நிம்மதி.
    உங்களுக்கும் நிம்மதி.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  13. எனது சிறு வயதில் கூட பல விளையாட்டுக்கள் விளையாடுவோம். ஆனால், இன்று சிறு பிள்ளைகள் கணினி விளையாட்டுதான் ஆடுகிறார்கள்.

    www.tamilpriyan.com

    பதிலளிநீக்கு
  14. @DD

    கடைசி வரி நன்றாகச் சொன்னீர்கள். என்னதான் பார்த்துப் பார்த்து வளர்த்தாலும் ஒரு குறிப்பிட்ட வயதுக்குமேல் சமூகச் சூழலின் பாதிப்பு அவர்களிடம் வந்து விடுகிறது.

    @இராஜராஜேஸ்வரி
    நன்றி.

    @கீதா சாம்பசிவம்
    சாப்பிட்டு விட்டு வருகிறேன் என்று அப்புறம் வரவே இல்லையே!

    @கோமதி அரசு

    உங்கள் மாமனார் பற்றி நீங்கள் சொல்லியிருப்பவை நெகிழ்ச்சி ஏற்படுத்துகின்றன. வயதான காலத்தில் தனிமையில் இருப்பது காலத்தின் கட்டாயம் என்று சொல்லி இருப்பதும் நிஜம். மகிழ்ச்சியை எண்ணிப் பார்த்துக் கொண்டு காலத்தைக் கழிப்பது நாம் செய்து கொள்ளும் சமாதானம்தான் இல்லையா?

    @'தளிர்' சுரேஷ் நன்றி.

    @ஜி எம் பாலசுப்ரமணியம்
    நீங்கள் சொல்லியிருக்கும் சம்பவம் வருத்தத்தைத் தந்தாலும் அப்படித்தான் நடக்கிறது. இன்னும் 50 வருடங்களில் நிலைமை எப்படி இருக்குமோ!

    @ராமலக்ஷ்மி
    நன்றி.

    @சே. குமார்
    நன்றி.

    @சூரி சிவா
    //உலகத்தில் எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கிறது. //
    ஆம்.

    //நீங்கள் ஒதுக்கப் படுமுன்பே ஒதுங்குங்கள்.//

    மிகச்சரியான கருத்து.

    ஆனால் உள்நாட்டிலேயே இருக்க வேண்டுமென்றால் எடுபிடியாகவோ, புரோஹிதராகவோதான் இருக்க வேண்டும் என்று கட்டாயமா என்ன? வேறு வழியில்லையா என்ன? :)))

    @Regan Jones
    ஆம்.

    பதிலளிநீக்கு
  15. //@கீதா சாம்பசிவம்
    சாப்பிட்டு விட்டு வருகிறேன் என்று அப்புறம் வரவே இல்லையே!//

    ஆமா இல்ல??? எப்படியோ மறந்திருக்கேன். இன்னிக்கு மறுபடி படிச்சுட்டு வரேன். :))))

    பதிலளிநீக்கு
  16. //அப்பாவின் சட்டைப்பையிலிருந்து உரிமையாக பணத்தை எடுத்து செலவு செய்தோமே... அதே உரிமை அப்புறம் அப்பாவுக்கோ, தாத்தாவுக்கோ நம்மிடம் இருக்கிறதா? அந்தக் காலத்தில் வீட்டுக்கு மூத்தவர்களிடம்தான் பணப்பெட்டியின் சாவி இருக்கும்.//

    பொது விதி. தந்தையின் சம்பாத்தியத்தையும், சொத்துக்களையும் குறித்து மகன் கேள்வி கேட்கலாம். ஆனால் மகனின் சம்பாத்தியம் சொத்து குறித்துத் தந்தை கேள்வி கேட்க முடியாது. :)))))) இப்போதெல்லாம் பெரியவங்க சேர்ந்து இருந்தாலும் பணப்பெட்டியின் சாவி அவங்க கிட்டே யாரும் கொடுப்பது இல்லை.

    பதிலளிநீக்கு
  17. வேலை வாய்ப்புக் கம்மி என்பதால் தான் சேர்ந்து இருந்தார்கள். போறதுக்கு இடம் இல்லையே! இப்போ அப்படி இல்லை. வெளி நாட்டில் வசிக்கும் பல பெண்களும் தாய்,தந்தையர், மாமியார், மாமனார் உடலில் தெம்பு இருக்கும் வரையிலும் அழைத்துக் கொண்டு வைத்துக் கொள்கின்றனர். தெம்பு இல்லை எனில் கவனிப்பது இல்லை. இது சுடும் நிஜம்.

    பதிலளிநீக்கு
  18. ஆமாம், சாவகாசமாப் பள்ளிக்குப் போன அன்றைய மாணவர்கள் எங்கே! அவதி அவதியாப் போகும் இன்றைய மாணவர்கள் எங்கே!

    பதிலளிநீக்கு
  19. இப்போதை குடும்பங்களின் நிலைக்குக் காரணம் நமக்கு ஒரு குழந்தை மட்டும் போதும் எனப் பெற்றோர் நினைப்பது தான். சில காலம் முன்னர் வரை பெண்கள் அதிகமாகி ஆண்கள் குறைவாக இருந்ததால் மாப்பிள்ளைக்கு கிராக்கியும் அதன் மூலம் விரும்பத் தகாத வரதக்ஷணைப் பிரச்னைகளும் ஏற்பட்டன.

    ஆனால் இப்போது இந்தியா முழுவதுமே ஆண்கள் அதிகமாகிப் பெண்கள் குறைவாக இருப்பதால் பெண்களுக்கு கிராக்கி ஏற்பட்டிருப்பதோடு தமிழ்நாட்டில் பெண்கள் போடும் நிபந்தனைகள், அதற்கு ஒத்து ஊதும் பெண்ணின் பெற்றோர்கள் என நினைத்துப் பார்க்கவே பயப்படும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதுவும் ஆரோக்கியமான சூழ்நிலை இல்லை.

    இதுவே திரும்பாது என்று என்ன நிச்சயம்?

    பதிலளிநீக்கு
  20. ஆழமான அலசல்
    இன்னும் விரிவாகத் தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!