புதன், 30 ஏப்ரல், 2014

சுஜாதா



                                                                  


.... எனவே விஞ்ஞானக் கதையில் சாதாரணக் கதைகளின் அம்சங்கள் அனைத்தும் இருக்கலாம். அதில் ஒரு விநோதத்தைத் தொட்டுக் கொள்வதற்குத்தான் விஞ்ஞானத்தைப் பயன்படுத்த வேண்டும். அதன் விஞ்ஞானம் பிசகில்லாமல் இருக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை. பெரும்பாலும் விஞ்ஞானக் கதையில் உள்ள விஞ்ஞானங்கள் தற்போதைய விஞ்ஞானத்தால் சாத்தியமில்லாதவையாக இருக்கும்.

(8/9/2002 இல் 'எது விஞ்ஞானக் கதை என்ற தலைப்பில்).

--------------------------------------------------------------
                                                                      
                                                                     
கே : ஒவ்வொரு மனிதனின் மரணமும் மற்றவர்களுக்கு விட்டுச் செல்லும் உண்மை என்ன?
ப : உன்முறை வரப்போகிறது என்கிற எச்சரிக்கைதான். அதை யார் கவனிக்கிறார்கள்?

கே : மரணம் என்ற ஒன்று இல்லாவிட்டால் மதங்கள் தோன்றியிருக்காது அல்லவா?
ப : மரணத்துக்குப் பின் என்ன என்ற கேள்விக்கான விடை தெரியாமல் இருப்பதுதான் மதங்களின் ஆதி காரணம். பொதுவாகவே, சில 'ஏன்'கள் விடை தெரியாமல் இருப்பதால்தான் மதங்கள் தோன்றின என்றும் கொள்ளலாம்.

கே : வயதானால் ஞாபக சக்தி கூடுமா குறையுமா ஸார்?
ப : ஞாபகங்கள் கூடும். ஞாபக சக்தி குறையும்.

கே : தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது எப்படி ஸார்?
ப : இப்படி பிறரைக் கேள்வி கேட்பதை நிறுத்துவது முதல்படி!

---------------------------------------------------------


                                                                       

                                                                
"வஸந்த்... நான் சொன்ன மாதிரி செய். என்ன?"

"வஸந்த்.. நானும் வரேன்.. என்னையும் சேர்த்துக்குங்க..."



"இது என்ன? அடுத்த தெருவுல போய் பென்சில் மேட்ச் ஆடற மாதிரியா?"
"இல்லை. உங்களுக்கு உதவியாய் இருக்க விரும்பறேன். கணேஷ்.. ப்ளீஸ்.. என்னையும் சேர்த்துக்கச் சொல்லுங்க"

"பாஸ்! எனக்குப் பக்கத்துல பொம்பளைங்களை வைச்சுகிட்டு வேற காரியங்களைக் கவனிக்க முடியாது. ஸோலோவாகத்தான் பழக்கம்."

"மேலும் வஸந்த்கிட்ட வேலை செய்யறதுல இன்னொரு கஷ்டம் இருக்கு. அவன் அடிக்கடி ஜோக் சொல்லிகிட்டே இருப்பான். கொஞ்சம் ஒரு மாதிரியா ஆயிரும்! இப்படித்தான் ஒரு தடவை, அது என்ன ஊர்றா? வைத்தீஸ்வரன் கோவில் பக்கத்திலே? அங்க குதிரை வண்டில போய்கிட்டிருந்தபோது ஒரு ஜோக் சொன்னான். என்னடா ஆச்சு?"

"குதிரை நின்னு பின்னங் காலைத் தூக்கிக் குடை சாச்சுருச்சு!"

"அதுக்கே தாங்கலை!"
 

-----------------------------------

                                            
                                                        
(அணுகுண்டு பரிசோதனை) முதலில் நாம் வெடித்தபோது இந்தியத் துணைக்கண்டமே பெருமிதம் கொண்டு உலகக் கோப்பையில் ஜெயித்தது போல தெருவெல்லாம் பட்டாசு வெடித்தார்கள். உடனே பாகிஸ்தான் வெடித்ததும், ஒருகால் நாம் வெடித்திருக்க வேண்டாமோ என்று சிலருக்குத் தோன்றியது. வெடித்ததால் நாம் என்ன சாதித்தோம்?

அணுகுண்டுத் தயாரிப்பில் ஒரு உண்மையான முரண்பாடு உள்ளது. அதைப் பிரயோகிக்காமல் இருப்பதற்காக அது தயாரிக்கப்படுகிறது. ஏன் முதலில் அதைத் தயாரிக்க வேண்டும் என்பது ஒரு கெடிகார மூளைக்குக் கூட எழும் கேள்வி! 'அவளைத் தொடுவானேன், கவலைப் படுவானேன்' என்று நாட்டுப்புறக் கலைஞன் சொல்வது போல எதற்காக அணு மங்கையிடம் வம்பு பண்ண வேண்டும்?  தயாரிக்காமலேயே இருந்து விடலாமே? ஜெர்மனி வெடிக்கவில்லை.  ஜப்பான் வெடிக்கவில்லை. இஸ்ரேல் கூட வெடிக்கவில்லை. இஸ்ரேலுக்கு இல்லாத நெருக்கடியா? (இஸ்ரேல் தென் ஆப்பிரிக்காவில் ஒன்று பரிசோதித்ததாக 'அனலிஸ்ட்'கள் சொல்கிறார்கள்) இருந்தும் நம் இந்திய தேசத்துக்கு அணுகுண்டு வெடி பரிசோதனை இந்த 'தன் தடவல்' (ego message) தேவைதானா? என்று ஆரம்ப உற்சாகங்கள் அடங்கியதும் பலர் கேட்கத் தொடங்கியுள்ளார்கள்.....

(ஓரிரு எண்ணங்கள்)

------------------------------------------------

                                                   
www. westegg.com என்னும் வலைத் தளத்தில் சுமார் 3500 க்ளீஷேக்கள் உள்ளன. எந்த ஒரு ஆர்த்தியை உள்ளிட்டாலும், அதைப் பயன்படுத்தும் 'க்ளீஷே' க்கள் தேடி வரும். உதாரணமாக dog என்று உள்ளிட்டால் tail wagging the dog, sleeping dog, dog eat dog, dog day என்று பல உதாரணங்கள், க்ளீஷே என்பவை நையடிக்கப்பட்ட, திரும்பத் திரும்ப பயன்படுத்தப்பட்ட சொற்கள், சொல் தொடர்கள்.

உதாரணம் 'கண்கள் குளமாயின' என்று அடுத்தமுறை நீங்கள் எழுதும்போது அது சிந்தனையின் பற்றாக்குறையைத்தான் காண்பிக்கும். சொல்ல வந்த கருத்து சரியாகப் போய்ச்சேராமல் இருந்து விடுமோ என்று பயப்பட்டு இதுவாய் பல நூறு தடவை பல நூறு பேரால் அலுக்கும்வரை பயன்படுத்தப்பட்ட சொல்லை அல்லது வாக்கியத்தைப் பயன்படுத்துவது. இது தன்னம்பிக்கைக் குறைவைத்தான் காட்டும். 

இவ்வகையில் பழ மொழிகள் க்ளீஷேக்கள் ஆகுமா என்று கேட்கலாம். பழமொழிகள் வலுக்கட்டாயமாகப் பயன்படுத்தப்படும்போது அவை நையடிக்கப்படுகின்றன. உதாரணம், 'தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலைன்னு சும்மாவா சொன்னங்க' என்னும்போது அது பிரியங்கா பற்றி என்றால்கூட மன்னிக்கக் கூடாது. காரணம் இந்தப் பழமொழியின் லட்சத்து நாற்பதாயிரத்து மூன்றாவது பயன்பாடு இது.

தமிழில் இதுமாதிரி அலுப்பு வார்த்தைகள் ஏராளம். கண்கள் குளமானதுடன், பதறினான், கதறினான், முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது, நாய் வால், விதி யாரை விட்டது, ஆண்டவன் விட்ட வழி, ஆண்டவன் கண்ணைத் திறக்காமலா போவான், சந்தேகப் பிராணி, மூக்கில் வேர்க்கும், மாற்றான் தோட்டத்து மல்லிகை, எள் போட்டால் எள் விழாது, இப்படி நூற்றுக் கணக்கில் உள்ளன. அவைகளை ஒரு பட்டியலாக உங்கள் உதவியுடன் தயாரிக்க விரும்புகிறேன். இதன் குறிக்கோள் (சே! மற்றொரு க்ளீஷே!) காரணம் புதிதாக நல்ல தமிழில் எளிதாக எழுதுவதே.

(தமிழ் அன்றும் இன்றும்)

20 கருத்துகள்:

  1. வாத்தியார் சாருக்கு இன்னிக்கே வாழ்த்துகள் சொல்லிக்கிறேன். 70 வது வந்ததுமே அலுப்புத் தட்டியது அவ்ருக்கு. அவர் சிரமப்படாமல் அவருக்குப் பிடித்த எந்த இடத்துக்கும் போய்ச் சேர்ந்திருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். நிறைய புத்தகங்கள் ஒரு கணினி எழுதிவைத்துக் கொள்ள நோட்பாட். எல்லாம் இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஐயா

    கேள்விபதில் ஏனைய விளக்கங்களும் நன்றாக உள்ளது... பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. சுஜாதா ஒரு சரித்திரம் . இதுவும் ஒரு க்ளீசே .

    பதிலளிநீக்கு
  4. இன்னும் கொஞ்ச காலம் சுஜாதா வாழ்ந்திருக்கலாம்

    பதிலளிநீக்கு
  5. தொகுத்துக் கொடுத்தவை எல்லாம்
    இதற்கு முன்பு படிக்காததாகவும் இருப்பதால்
    கூடுதல் மகிழ்ச்சி
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. இவ்வளவு தீவிரமான சுஜாதா விசிறி எல்லாம் இல்லை நான். ஹிஹிஹி, சுஜாதா கதைகள், எழுத்து பிடிக்கும். அம்புடே. :))))) நீங்க வேறே யாரையும் நினைக்கக் கூட மாட்டீங்க போல!

    பதிலளிநீக்கு
  7. தேர்ந்தெடுத்துப் போட்ட அனைத்துமே நல்லா இருந்தது. அனிதா இளம் மனைவி சமீபத்தில் படிச்சேன். அதில் வசந்த் வராத ஆரம்ப கால கணேஷ்! :)) ஆனால் வசந்தை விட மோசமாக!

    இது தொடரப் போடப்பட்ட பின்னூட்டம்.

    பதிலளிநீக்கு
  8. வாத்யார் வாத்யார் தான்...

    சிறப்பான பதிவு.

    தொகுத்த அனைத்துமே அருமை. நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  9. சுஜாதா அவர்கள் கதைகளிலிருந்து சிறு தொகுப்பு, கேள்வி, பதில் எல்லாம் அருமையாக இருக்கிறது.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  10. ஞாபகங்கள் கூடும். ஞாபக சக்தி குறையும் இப்படி ஒரு பதில் சுஜாதா ஒருவர் தவிர யாரால் கூற முடியும் ஜீ, கடந்த வாரம் முதல்வன் படம் தொலைகாட்சியில் பார்த்தபோது என் தங்கை கூறினாள் ' சுஜாதா ஒரு மரியான் நிஜ வாழ்க்கையிலும் மரிக்காமல் இருந்திருக்கலாம்'

    பதிலளிநீக்கு
  11. இவரால் மட்டுமே நச் பதில்களை எழுத முடிகிறது.
    இவரது கதைகள் மட்டுமே, ஓடுபவரின் காலரைக் கூட இழுத்துப் பிடித்து நிறுத்தி படிக்க வைக்கும் தன்மை கொண்டது.

    பதிலளிநீக்கு
  12. ஓரிரு எண்ணங்களில் சொல்லியிருக்கும் விதம் சூப்பர்....

    பதிலளிநீக்கு
  13. சுஜாதா நினைவுப் பகிர்வுகள் அருமை! கிளிஷே பகிர்வு சிறப்பு!

    பதிலளிநீக்கு

  14. சுஜாதா சொல்லாமல் விட்ட மெக்சிகோ சலவைக் காரி ஜோக் ஏதாவது தெரியுமா.?

    பதிலளிநீக்கு
  15. நான் தேடித் தேடி படித்த நூல்கள் சுஜாதாவினுடையவை. சுஜாதா என்றாலே மனதில்ஓர் மகிழ்ச்சி ஏற்படும்.
    இதுவரை காணாத படங்கள் பலவற்றுடன்அருமையான பதிவு நண்பரே
    நன்றி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!