புதன், 2 ஜூலை, 2014

அலேக் அனுபவங்கள் 140702:: பி டி சி டெப்போவில்

             
(குறிப்பு: இது ஒரு டெக்னிகல் பதிவு கிடையாது. சில விஷயங்கள் / சொற்கள் புரியவில்லை என்றால் அவற்றை பொருள் விளங்கா உருண்டையாக முழுங்கிவிட்டுப் படியுங்கள். நான் சொல்ல வருவது ஒரு நான் - டெக்னிகல் மேட்டர்தான்!) 
       
ஒரு பஸ் நூற்று எழுபத்தாறு இஞ்சு சக்கர அடிப்படை அளவு (அதாவது 176 inch wheelbase!!) கேரளா டிரான்ஸ்போர்ட் கேட்டிருந்தது என்று ஞாபகம். சாசிஸ் ஃபிரேம் டிரில்லிங் படம் வரைய நானும் என்னுடைய வரைஞர் (டிராப்ட்ஸ்மேன்) மிகவும் முனைந்து வேலை செய்யவேண்டி இருந்தது. 
           

சாசிஸ் பிரேமில் காற்றுத் தடைக்கான (ஏர் பிரேக் அமைப்புக்கு வேண்டிய சமாச்சாரம்) காற்று உருளைகள் எங்கே பொருத்துவது என்று ஒரு பிரச்னை வந்தது. 
               
பஸ்ஸில் பயணிகள் ஏற, இறங்க  இடது புறம் வழிகள் வேண்டும். அந்தப் பாதைகளுக்கு இடையே மூன்று காற்று உருளைகள் பொருத்தப்பட வேண்டும். வலது புறம் டீசல் டாங்கு. எவ்வளவு முட்டி மோதிப் பார்த்தாலும், மூன்று ஏர் சிலிண்டர்கள் (அதாங்க காற்று உருளைகள் - தமிழ் வாழ்க) அமைப்பது மிகவும் கடினமான விஷயமாகப் பட்டது. 
                 
அப்போ ஒரு சர்விஸ் இஞ்சினியர், (தமிழில் சேவைப் பொறியாளர்) பல்லவன் டிரான்ஸ்போர்ட் திருவொற்றியூர் டிப்போவில் ஒரு இருநூற்று மூன்று இன்ச் வீல் பேஸ் வண்டி - டியுவல் ப்ரேக் லைன் வண்டி இருக்கின்றது என்றும், அதில் காற்று உருளைகள் எங்கே அமைக்கப்பட்டிருக்கின்றது என்றும் பார்க்கலாம் என்று கூறினார். அதிலிருந்து இருபத்தேழு இஞ்சு கூட்டல் கழித்தல் விவகாரம் செய்துகொள்ளலாம் என்று எங்களுக்கு ஒரு ஐடியா வந்தது.
                
உடனே நானும் என் உதவியாளரும் ஒரு இன்ச் டேப் எடுத்துக் கொண்டு, திருவொற்றியூர் பல்லவன் டிப்போவிற்கு விரைந்தோம். அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. (எங்களுக்குத் திங்கக் கிழமைகள்தான்  வாராந்திர விடுமுறை) திருவொற்றியூர் பணிமனையில் அன்று அதிக ஆட்கள் இல்லை. ஒரு ஜூனியர் எஞ்சினியர் மட்டும் டிப்போ பணிகள் மேற்பார்வை பார்த்துக்கொண்டு இருந்தார். 
                  

அவரிடம் நாங்கள் வந்த விவரம் கூறியதும், ரொம்ப ரொம்ப ரொம்ப தயங்கினார். "சார் டிப்போ மேனேஜர்தான் வண்டிகளைப் பார்க்க அனுமதி வழங்கலாம். என் அளவில் நான் ஒன்றும் செய்யமுடியாது" என்றார். 
              
"நாங்க ஒன்றுமே செய்யமாட்டோம். சும்மா பார்த்து, சில அளவுகளை, நாங்கள் கொண்டுவந்திருக்கும் பேப்பரில் எழுதிக்கொண்டு செல்வோம். அவ்வளவுதான்" என்று அவரிடம் கூறினேன். 
               
"இல்லை சார். நாங்க வண்டியில் உங்களிடமிருந்து வாங்கிய பிறகு சில மாற்றங்கள் செய்திருப்போம். அவற்றை நீங்கள் பார்த்தால், வண்டியில் சர்விஸ் கிளைம் செய்வதில் பிரச்னைகள் தோன்றலாம். தயவுசெய்து என்னை வம்பில் மாட்டிவிடாதீர்கள்! இன்று போய்விட்டு, அப்புறம்  மேனேஜர் இருக்கும்பொழுது வாருங்கள்."
              
என்ன சொன்னாலும் மசியவில்லை அவர். திரும்பத் திரும்ப கீறல் விழுந்த ரெக்கார்ட் போல, அதே பல்லவி.
             
அது அலைபேசி, வலைபேசி என்ற சமாச்சாரங்கள் தோன்றியிராத காலம். திடீர் என்று ஒரு மின்னல் வெட்டு ஐடியா வந்தது. "சார் உங்க மேனேஜர் வீட்டுத் தொலைபேசி எண் கொடுங்கள். நான் அவரிடம் பேசி அனுமதி வாங்குகின்றேன்" என்றேன்.  
             
டிப்போ மேனேஜர் வீட்டு தொலைபேசி என்னை ஒரு தாளில் எழுதிக் கொடுத்தார். 
            
ஜே இ யின் மேஜையில் இருந்த தொலைபேசியை எடுத்து, அவர் கொடுத்த எண்ணைப் பார்த்தபடி, மிகவும் ஜாக்கிரதையாக ஓர் எண்ணை மட்டும் மாற்றி (அதாவது இரண்டு மூன்று என்று வந்த இடத்தில், மூன்று இரண்டு என்று மாற்றி) டயல் செய்தேன். 
             
மறுபக்கம் எடுத்தவர், நான் பேச ஆரம்பித்தவுடனேயே 'சாரி ராங் நம்பர்' என்று கூறி வைத்துவிட்டார். ஆனால் நான் அந்தப்பக்கம் டிப்போ மேனேஜரிடம் பேசுவது போல பொறுமையாக நான் யார், எங்கிருந்து வருகிறேன், வண்டியில் எந்த விஷயங்களை அளவு எடுத்துக் கொள்ளப்போகின்றேன் என்பதை விளக்கினேன். 
               
"ஆமாம் சார், ஆமாம் சார். அது மட்டும்தான்." 
         
"இல்லை சார் சேச்சே, அதேதான் உங்கள் ஜே இ யும் சொன்னார். அதுபற்றி எல்லாம் எனக்கு அக்கறை இல்லை. அப்படி ஏதேனும் மாற்றங்கள் என் கண்களில் பட்டால் நான் கண்களை மூடிக் கொள்கின்றேன். எனக்கு வேண்டியதெல்லாம் ஏர் சிலிண்டர் லொகேஷன். அவ்வளவுதான்." 
             
"இதோ இங்கேதான் இருக்கிறார் ஜே இ - பேசறீங்களா? - ஓ கே நானே சொல்லிடறேன் சார். தாங் யு." 
            
போனை வைத்துவிட்டேன். 
              
ஜே இ க்கு பரம சந்தோஷம். அவர் கிட்டே சொல்லிட்டீங்க இல்லே. அது போதும். இப்போ நீங்க அளவுகள் எடுத்துக்குங்க. வண்டியை பிட்டில் நிறுத்தச் சொல்கின்றேன்.
          
எங்களுக்கும் சந்தோஷம். அளவுகள் எல்லாம் எடுத்து, குறித்துக்கொண்டு கிளம்பினோம். 
   
அப்புறம் அந்த ஜே இ யும், டிப்போ மேனேஜரும் இந்த விவகாரம் குறித்து ஏதேனும் பேசியிருப்பார்களா என்ற சந்தேகம் எனக்கு இன்றும் இருக்கின்றது! 
                     

33 கருத்துகள்:

  1. சமயோசிதமாக பேசி சமாளித்து விட்டீர்களே! :)))

    இருந்தாலும் உங்களுக்கு இருக்கும் சந்தேகம் எனக்குள்ளும் இப்போது! :)

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஐயா
    சந்தேகம் வேண்டாம் ஆபத்தில் முடிந்துவிடும்
    என்பக்கம் கவிதையாக
    நீஎன்நெஞ்சில் தந்தகாயங்கள் வாருங்கள் அன்புடன்
    http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/07/blog-post.html

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. ஆஹா... பேசிச் சமாளிச்சிட்டீங்க...
    இனி எதுக்கு சந்தேகம்... விடுங்க அண்ணா...

    பதிலளிநீக்கு
  4. ஆகா
    வல்லவனுக்குப் பேச்சும் ஆயுதம்

    பதிலளிநீக்கு
  5. இப்படி ஒருவரை வம்பில் மாட்டிவைத்து விட்டீர்களே..!

    பதிலளிநீக்கு
  6. பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
    நன்மை பயக்கும் எனின்.

    கலைஞர் உரை: குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.
    கவனிக்கவும் "குற்றமற்ற நன்மை"

    பதிலளிநீக்கு
  7. Morally, that's not Right, KGG Sir.

    I wonder மாடிப்படி மாது's Choice of referring the meaning of Thirukkural. There were many big giants given meaning of the same, many years back and are available to us.

    # Am I a pessimist ? ( seeing the 'faults' on others')

    பதிலளிநீக்கு
  8. செய்ய நினைத்ததை எப்படியும் முடிக்கவேண்டும் என்னும் உந்துதல் செய்முறைக்கு வழிவகுக்கும் உங்கள் சமயோசித புத்தி யாருக்கும் கேடு நினைக்காதவரை தவறில்லை.அந்த ஜே யீ யையும் டெப்போ மேனேஜரையும் பிறகு சந்திக்கவேயில்லையா.?

    பதிலளிநீக்கு
  9. //அந்த ஜே யீ யையும் டெப்போ மேனேஜரையும் பிறகு சந்திக்கவேயில்லையா.?//
    பல்லவன் டிரான்ஸ்போர்ட்டில் அது ஒரு சௌகரியம். எல்லோருமே ஓராண்டு அல்லது ஈராண்டுகளில் வேறு டிப்போவுக்கு மாற்றலாகி விடுவார்கள். அப்படியே ஒருவரை மீண்டும் சந்தித்தாலும் பெரும்பாலும் நம் முகத்தை மறந்திருப்பார்கள்!

    பதிலளிநீக்கு
  10. //Morally, that's not Right, KGG Sir.

    I wonder மாடிப்படி மாது's Choice of referring the meaning of Thirukkural. There were many big giants given meaning of the same, many years back and are available to us.

    # Am I a pessimist ? ( seeing the 'faults' on others')//

    மாதவன் - நான் என்ன பொய் சொன்னேன், யாரிடம் சொன்னேன் என்று யோசித்துப்பாருங்கள். கண்டுபிடித்தால் சொல்லுங்கள். நான் யாரிடமும் ஒரு பொய்யும் சொல்லவில்லை. ஜே இ மற்றும் போனில் பேசும்பொழுதும் திரும்பத் திரும்ப உண்மைதானே சொன்னேன்?

    திருக்குறளின் அர்த்தம் விளக்கம் சொல்பவர்களால் மாறிவிடாது. மாடிப்படி மாது சொல்லியிருப்பது சரியே!
    வாதம் தொடரட்டும்! ;-)

    பதிலளிநீக்கு
  11. சமயோசிதமாக செய்திருக்கிறீர்கள்! அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
  12. பொய் சொல்லவில்லை. குறளும் பொருத்தமில்லை. இது புரட்டு வகை.

    பதிலளிநீக்கு
  13. பொய்யும் இல்லை. புனை சுருட்டு ஆகுமோ. லேலண்டுக்கு இவ்வளவு புத்திசாலி ஆஃபிசர் வேலை புரிந்திருக்குமோ.ஆனால் என்றுமே க்ரீம் ஆஃப் த லாட் தானே அவர்களிடம் வேலைக்கு அமர்வார்கள்.

    பதிலளிநீக்கு
  14. // திருக்குறளின் அர்த்தம் விளக்கம் சொல்பவர்களால் மாறிவிடாது. மாடிப்படி மாது சொல்லியிருப்பது சரியே! //

    அப்போ, திருக்குறளின் அர்த்தம்னு பொதுவா சொல்லி இருக்கலாமே. திருக்குறளுக்கு அர்த்தம் மொதல்ல சொன்னது 'கருணாநிதி' இல்லையே. என்னவோ, கருணாநிதி தான் மொதோ மொதல்ல அந்தத் திருக்குறளோட அர்த்தத்த சொன்னது போலல்லவா அவருக்கு இவரு(மாது) முக்கியத்துவம் கொடுக்கறாரு.

    // நான் என்ன பொய் சொன்னேன், யாரிடம் சொன்னேன் என்று யோசித்துப்பாருங்கள். கண்டுபிடித்தால் சொல்லுங்கள். நான் யாரிடமும் ஒரு பொய்யும் சொல்லவில்லை. ஜே இ மற்றும் போனில் பேசும்பொழுதும் திரும்பத் திரும்ப உண்மைதானே சொன்னேன்? //

    I didn't say you lied. I said, "That's not right" -- meaning, "That's not fair"

    You didn't lie, but you did cheat JE. (you acted/pretended with some intention - though the intention was harmless, of course).

    பதிலளிநீக்கு
  15. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  16. // திருக்குறளின் அர்த்தம் விளக்கம் சொல்பவர்களால் மாறிவிடாது. //

    கடவுள் வாழ்த்து
    பால்: அறம். இயல்: பாயிரம். அதிகாரம்: கடவுள் வாழ்த்து.

    குறள் 1:

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.


    மு. வரதராசன் உரை:
    தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

    கலைஞர் உரை:
    தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.

    சாலமன் பாப்பையா உரை:
    தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?.


    Please re-read the title of the 'அதிகாரம்'

    பதிலளிநீக்கு
  17. கடவுளை பெருந்தகையாளர் என்று கூறியிருக்கின்றார், கலைஞர். சரிதானே!

    பதிலளிநீக்கு
  18. ஆஹா புரட்டு வகையா! அப்பாதுரை இந்தியா வரும்பொழுது பார்த்துகிறேன் ஒரு கை! :-)

    பதிலளிநீக்கு
  19. //கடவுளை பெருந்தகையாளர் என்று கூறியிருக்கின்றார், கலைஞர். சரிதானே! //

    How come ? He says there is no 'GOD'.

    பதிலளிநீக்கு
  20. ///அப்போ, திருக்குறளின் அர்த்தம்னு பொதுவா சொல்லி இருக்கலாமே. திருக்குறளுக்கு அர்த்தம் மொதல்ல சொன்னது 'கருணாநிதி' இல்லையே. என்னவோ, கருணாநிதி தான் மொதோ மொதல்ல அந்தத் திருக்குறளோட அர்த்தத்த சொன்னது போலல்லவா அவருக்கு இவரு(மாது) முக்கியத்துவம் கொடுக்கறாரு.///

    எனக்கு சரியா அர்த்தம் சொல்ல வராது என்பதால் திருக்குறள் விளக்கவுரையை இணையத்தில் தேடினேன். பரிமேலழகர், சாலமன் பாப்பையா, கலைஞர், மணக்குடவர், மு.வரதராசனார், உள்பட நிறைய பேர் விளக்கம் அளித்து இருந்தார்கள். (தமிழில் மட்டுமே ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் – உலக மொழியில் நூற்றுக்கும் மேல்) எதாவது ஒன்று போதுமே என்பதால் கலைஞரின் உரையை கொடுத்தேன். அவ்வளவுதான். அது இருக்கட்டும் தனிப்பட்ட முறையில் என் இரண்டு கேள்விகள்
    1. கலைஞர் மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்..?
    2. ///மொதோ மொதல்ல அந்தத் திருக்குறளோட அர்த்தத்த சொன்னது //// யாரு?

    பதிலளிநீக்கு
  21. ///பொய் சொல்லவில்லை. குறளும் பொருத்தமில்லை. இது புரட்டு வகை///

    அப்பாதுரை சார், “உங்க மேனேஜர் வீட்டுத் தொலைபேசி எண் கொடுங்கள். நான் அவரிடம் பேசி அனுமதி வாங்குகின்றேன்" என்று கவுதமன் சார் சொன்னது பொய்தானே...?. அதுதான் பின்னர் நடந்த அத்தனைக்கும் மூலகாரணம்

    பதிலளிநீக்கு

  22. @ மாதவன் ஸ்ரீநிவாச கோபாலன்
    /அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு/
    குறள் இது .மூவரின் பொருள்களைப் படிக்கும்போது என்னவோ இடிக்கிறதே. இல்லை எனக்குத்தான் தமிழ் சுத்தமாகத் தெரியவில்லையா.?

    பதிலளிநீக்கு
  23. //// ஆஹா புரட்டு வகையா! அப்பாதுரை இந்தியா வரும்பொழுது பார்த்துகிறேன் ஒரு கை! :- /////

    அப்பாதுரை சார், அது ஒண்ணுமில்லை. அவர் உங்களது சமீபத்திய பதிவை படித்ததன் பின்விளைவு என்று தோன்றுகிறது. “வ்ய்ஷ்க்......வ்ய்ஷ்க்”

    பதிலளிநீக்கு
  24. // 1. கலைஞர் மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்..? //

    இதற்கு காரணம் சொல்லவும் வேண்டுமோ ?

    சரி.
    பண்டைய காலந்தொட்டு தமிழ் மொழி மற்றும் மக்கள் - கலாச்சாரத்திற்காக பல சான்றோர்கள் 'சுயநல மற்ற' சேவை புரிந்தார்கள். அவர்களில் யாரேனும் ஒருவரை மேற்கோளிட்டு சொன்னால் நான் பெருமிதம் கொள்வேன். (கவனிக்கவும் 'சுயநல மற்ற சேவை') -- இது போதும் என்று நினைக்கிறேன்.

    Please don't ask me proof for 'selflessness service'. Comparitively they were at least not so 'selfish' . (I hope you know what am I comparing here).

    Thanks & believe I am not personally against you.

    பதிலளிநீக்கு
  25. காலத்தால் முற்பட்ட உரை மணக்குடவர் உரை. அதையும் படிங்க. :)

    பதிலளிநீக்கு
  26. பரிமேலழகர், மற்றும் மு.வ. உரை தான் கொஞ்சம் நல்லா இருக்கும், மற்றவை சுகமில்லை. :(

    பதிலளிநீக்கு
  27. ///பண்டைய காலந்தொட்டு தமிழ் மொழி மற்றும் மக்கள் - கலாச்சாரத்திற்காக பல சான்றோர்கள் 'சுயநல மற்ற' சேவை புரிந்தார்கள். அவர்களில் யாரேனும் ஒருவரை மேற்கோளிட்டு சொன்னால் நான் பெருமிதம் கொள்வேன். (கவனிக்கவும் 'சுயநல மற்ற சேவை') -- இது போதும் என்று நினைக்கிறேன்.///

    தனிப்பட்ட கேள்விக்கு தாங்கள் பதிலளித்ததற்கு நன்றி. ஆனால் நான் மீண்டும் சொல்வது என்னவென்றால் இந்த விளக்கவுரை இணையத்தில் தேடிய போது கிடைத்தது. பின்னூட்டம் எழுத நான் உபயோகித்தது அதை எழுதிய கலைஞருக்கு முக்கியத்துவம் அளிக்கும் எண்ணத்தில் அல்ல. மேலும் அந்த குறள் விளக்கவுரையில் தவறுகள் எதுவுமில்லை என்பதும் அதை உதாரணம் சொல்வதற்கு தடைகள் எதுவுமில்லை என்பதும் எனது கருத்து.

    பதிலளிநீக்கு
  28. //“உங்க மேனேஜர் வீட்டுத் தொலைபேசி எண் கொடுங்கள். நான் அவரிடம் பேசி அனுமதி வாங்குகின்றேன்" என்று கவுதமன் சார் சொன்னது பொய்தானே...?. //
    ஜே இ யைப் பொறுத்தவரை, நான் மேனேஜரிடம் பேசியது உண்மைதானே? நான் போனில் சொன்னது எல்லாம் உண்மைதானே?
    அப்புறம் நான் ஜே இ யிடம் உங்க மேனேஜர் அனுமதியளித்துவிட்டார் என்று கூட கூறவில்லை.

    பதிலளிநீக்கு
  29. மானேஜரிடம் ஒரு வார்த்தை நானும் கேட்டுக்கிறேன் என்று ஜே இ உங்கள் போனைக் கேட்டிருந்தால்... உங்கள் நிலைமையை யோசித்துப் பார்த்தேன் ...அவ்வ்வ்வவ்வ்வ்வவ் !

    பதிலளிநீக்கு
  30. நல்ல சமயோசித முடிவு.....என்றாலும் தாங்கள் இறுதியில் சொல்லியிருக்கும் //அப்புறம் அந்த ஜே இ யும், டிப்போ மேனேஜரும் இந்த விவகாரம் குறித்து ஏதேனும் பேசியிருப்பார்களா என்ற சந்தேகம் எனக்கு இன்றும் இருக்கின்றது!// சந்தேகம் தோன்றியது என்னவோ உண்மையே! பகவான் ஜி சொல்லியிருப்பது போல உங்களிடம் ஃபோனை வாங்கியிருந்தால்........!!!!!!!!

    பதிலளிநீக்கு
  31. Dear "மாடிப்படி மாது",
    I understood your intention. :-)
    -----------------
    That's a very great point Bagawanjee KA.

    Infact, KGG took a (un)calculated high risk, and he was fortunate.
    -----------------

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!