திங்கள், 15 செப்டம்பர், 2014

தி கி 140915:: தி அ - சப்பாத்தி.

                            
எனக்கு சப்பாத்தி அறிமுகமானது, பத்து வயது ஆன சமயத்தில். அண்ணன், பாலிடெக்னிக்கில் படித்துக்கொண்டிருந்த காலம். . அவரே கோதுமை வாங்கி, அரைத்து வாங்கி வருவார். அவரே சப்பாத்தி மாவு பிசைந்து தருவார். அம்மா சப்பாத்தியை தோசைக்கல்லில் இட்டு, சுட்டுத் தருவார். அண்ணன் இரண்டு அல்லது மூன்று சப்பாத்தி சாப்பிட்டு, பாலிடெக்னிக் உள்ள திசை நோக்கி நடையைக் கட்டுவார். 
               
சப்பாத்திக்கு மாவு பிசையும் பொழுது சப்தம் இல்லாமல் பிசைவார். கொஞ்சம் சப்தம் கேட்டாலும்  எங்கேயோ பர் பர் என்று பாட்டு இசைத்துக் கொண்டிருக்கின்ற என்னுடைய தம்பி, அங்கே ஓடிவந்து, பிசைந்த சப்பாத்தி மாவை  அப்படியே வாங்கி, வாங்கி சாப்பிட ஆரம்பித்துவிடுவான்! 
            
அவனுக்கு பயந்து, எங்கள் வீட்டில் அஹிம்சை முறையில்தான் சப்பாத்தி தயாராகும். 
                  


ஆனாலும் சப்பாத்தி கல்லில் இடப்பட்டு எண்ணெய் ஊற்றப்பட்டவுடன் எழுகின்ற சப்தத்தைக் கேட்டு,  மணத்தை மூக்கு உணர்ந்தவுடன் - ஓடி வந்துவிடுவான், "ஆ ! சப்பாத்தி!" என்று அலறிக்கொண்டு! 
               
என்னுடைய இண்டரெஸ்ட் எல்லாம் சப்பாத்தி கிடையாது, அதனுடைய சைடு டிஷ். அம்மா செய்கின்ற பயத்தம் பருப்பு டால், உருளைக்கிழங்கு மசால் என்று எதுவாக இருந்தாலும் அதை அப்படியே சாப்பிட்டு விடுவேன்! பயத்தம்பருப்பு டால்! எலுமிச்சம்பழம் பிழிந்து, பச்சைமிளகாய் நறுக்கிப் போட்டு! அந்தப் புளிப்பும் காரமும்! அடாடா! பச்சைமிளகாயைக் கடித்து, கண்களில் நீர் மல்க, தண்ணீர் தேடிய நாட்கள்! சப்பாத்தி - ஊஹூம் முதலில் தட்டில் போட்ட சப்பாத்தி அப்படியே இருக்கும். சைடு டிஷ் மட்டும் காலி பண்ணுவேன். இன்னும் சைடு டிஷ் வேண்டும் என்று அடம் பிடிப்பேன். 
                       


சப்பாத்தியிலிருந்து இரண்டு வாய் மட்டும் சாப்பிட்டுவிட்டு, மீதியைப் பிடிக்கவில்லை என்று தட்டோடு வைத்துவிட்டு ஓடிவிடுவேன். 

தம்பிக்கு மாவு பிடிக்கின்ற அளவுக்கு சப்பாத்தி பிடிக்காது. அப்படி சப்பாத்தி சாப்பிட்டால் அவனுக்கு சர்க்கரை தவிர வேறு எதுவும் தொட்டுக்கொள்ளப் பிடிக்காது. 

பிறகு சப்பாத்தி சாப்பிடுவது தவிர்க்க இயலாததாக ஆகிவிட்ட நாட்களில், சப்பாத்தியை லேயர் லேயராக எடுத்து சாப்பிடுவதுதான் எனக்குப் பிடிக்கும். சப்பாத்தி இடும் பொழுது, மடித்து, மடித்து வைத்து, எண்ணெய் தடவி செய்தால்தான் லேயர் லேயராக வரும். 
             


லேயர் லேயராக இல்லாமல், மொத்தையாக இருக்கின்ற சப்பாத்தி எனக்குப் பிடிக்காது. 

வேலைக்குச் சென்று வந்த நாட்களில் நான் சப்பாத்திக்கு மாவு பிசைந்ததோ அல்லது சப்பாத்தி இட்டதோ இல்லை. மனைவி செய்து கொடுக்கின்ற சப்பாத்திகளை வேகமாக சாப்பிட்டு, ஓடிப்போயிடுவேன் (வேலைக்குதான்!) 

ரிடையர் ஆனா பிறகு, பெரும்பாலும் சப்பாத்திக்கு மாவு பிசைவது என்னுடைய வேலை ஆகிவிட்டது! 
               
என்னுடைய மனைவியிடம், 'எவ்வளவு மாவுக்கு எவ்வளவு தண்ணீர்? பை வால்யூம் ஆர் பை வெய்ட்' என்றெல்லாம் கேட்டு என்னுடைய இஞ்சினீரிங் அறிவை   பறைசாற்றுவேன். அவர், "இதுக்கல்லாம் ஃபார்முலா எதுவும் கிடையாது. ஒவ்வொரு பிராண்ட் மாவு ஒவ்வொரு தினுசு - எல்லாம் நாம்ப திட்டமா போட்டுத் தெரிஞ்சக்கணும்" என்பார். 
       


முதன்முதலில் நான் மாவு பிசைந்து கொடுத்தபொழுது, "சப்பாத்திக்கு மாவு பிசையச் சொன்னால் பூரிக்கு ஏன் பிசைந்து கொடுக்கறீங்க?" என்று கேட்டாள்! எனக்கு ஒரே ஆச்சரியம்! இதே மாவில் சப்பாத்தி செய்ய முடியாதா என்று கேட்டேன்! இரண்டுக்கும் ஒரே மாவு கிடையாதா? "சப்பாத்தி மாவு நெகிழ இருக்கும், பூரி மாவு இப்போ நீங்க பிசைந்து கொடுத்திருக்கீங்களே அந்தமாதிரி கெட்டியாக இருக்கும்" என்றாள்! என்னுடைய அறிவுக்கண் திறந்தது, நான் நெகிழ்ந்து போனேன்! 
           
நாங்க எப்பவும் பயன்படுத்துவது, ஆசீர்வாத் மல்டி கிரெயின் ஆட்டா. (மனைவி உட்பட) எல்லோர் மீதும் இருக்கும் கோபத்தை, மாவு மீது காட்டி, பிசைவேன். மாவு ரொம்ப சூப்பராக வரும். 
                 


இப்போ சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள, காரட், பீன்ஸ், பச்சைப்பட்டாணி என்று டெக்னிக் கலர் சமாச்சாரங்கள் போட்டு ஒரு கூட்டு செய்கிறார்கள். (உங்க காதைக் கொடுங்க! படு திராபையான சைடு டிஷ் இதுதான்!) அம்மா செய்த பயத்தம்பருப்பு டால் மனதில் ஓட, இந்த உப்பில்லாத சப்பில்லாத கூட்டு, சப்பாத்தியுடன் சேர்ந்து, உள்ளே போய் வயிற்றை நிறைக்கின்றது. 
           
சப்பாத்தி சப்பாத்திதான், டாலு டாலுதான்! 
                

16 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா.

    தங்களின் குடும்ப உறவுகளுடன் சப்பாத்தி கதையை மிக சுவையாக சொன்னீர்கள்..
    பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. டாலு டாலுதான் என கொண்டாடிய மலரும் நினைவுகளே ச்ப்பாத்தியை விட சுவைக்கிறது..!

    பதிலளிநீக்கு
  3. Rendu pachai vengaayam rendu pachchai milagaayodu chappathi saappittuvittu vadakku vaazh makkal dhus bussunu pesumpodhu varra unarchchi irukke adhu vaarththaikalil vadikka iyalaathathu.

    பதிலளிநீக்கு
  4. அதே அதே சப்பாத்தி சப்பாத்திதான் டாலு டாலுதான்....அதுவும் நீங்கள் சொல்லி இருக்கும் டால் அப்படியே சாப்பிட்டுடுவேன் (ஹார்லிக்ஸ் பாப்பா ஸ்டைல்).....இப்போது சப்பாத்திக்கு பல வட இந்திய சைட் டிஷ் கூட செய்வதுண்டு.....வெஜிட்டேரியன் ஒன்லி...---கீதா..

    நான் சப்பாத்தி பாலக்காட்டில் இருக்கும் போது செய்வதென்றால் தன் கையே தனக்குதவி.....தொட்டுக்கொள்ள காலையில் என்ன செய்கின்றேனோ அதே சாம்பார்...இல்லையென்றால் கறி.......

    வீட்டில் என்றால் சப்பாத்டி வித் வெஜ் அண்ட் நான்வெஜ்...பெரும்பாலும்....

    பதிலளிநீக்கு
  5. காலையில் சப்பாத்தி சாப்பிட்டுவிட்டு கணனியைத் திறந்தால், இங்கும் அதே சப்பாத்தி! சிறுவயதில் தாலுடன் அனுபவிதத்தையும், இப்போது த்ராபையான சைட் டிஷ்ஷுடன் அதைசாப்பிடுவதையும் சுவையாகச் சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் தான் மாவு பிசைவீர்களா!!!!!

    பதிலளிநீக்கு
  6. ரொம்ப நாள் வரை எங்கள் வீட்டில் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள வெல்லம் அல்லது பழைய குழம்புதான்! பின்னர் ஒருமுறை சித்தி வந்தபோது டால் செய்ய அதன் சுவை பிடித்துப்போனது! சப்பாத்திக்கு டால் தான் என் பேவரிட்டும்! சுவையான பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. சப்பாத்திக்கு பட்டாணி குருமாதான் பொருந்தும் ஜோடி.

    பதிலளிநீக்கு
  8. என் பொண்ணு இந்த போஸ்டை பார்த்தா அவ்ளோதான் :)
    சப்பாத்தி சப்பாத்தி எப்பவும் சப்பாத்தி :) தூங்கும்போது அவளை எழுப்ப நான் வச்சிறுக்க ஐடியா
    //எழும்புடா அம்மா சப்பாதிசுடறேன் //
    இதுபோதும் அடிச்சி பிரண்டு எழும்புவா:)chappathi is wake up alarm for her .even this morning i packed chappathi with butter and sugar for her lunch . அவளுக்கு சைட் டிஷ்லாம் வேணாம் வெறும் சப்பாத்தி போறும் !
    அப்புறம் எனக்கும் பிடிக்கும் சப்பாத்தி வித் கார குழம்பு வத்தகுழம்பு செம டேஸ்ட் !!

    அந்த டால் ரெசிப்பி கிடைக்குமா :)

    பதிலளிநீக்கு
  9. அஹா அடுத்து சப்பாத்தி புராணமா.. சூப்பர். :)

    பதிலளிநீக்கு
  10. சப்பாத்திகளில் நிறைய வெரைட்டி உண்டு. சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள கெட்டித்தயிரில் சர்க்கரை கலந்து சாப்பிடுவது எங்கள் பழக்கம். சப்பாத்திக்கு கடலைப் பருப்பு வறுத்து அரைத்த சட்னியும் ருசிக்கும். இப்போது இரவில் பெரும்பாலும் சப்பாத்திதான்

    பதிலளிநீக்கு
  11. ஹாஹாஹா, நேத்தே சொல்லி இருந்தேனே, கடும் மின்வெட்டுனு! அதனால் நேத்திக்கு வரலை. சப்பாத்திக்கு சைட் டிஷுக்குக் கஷ்டப்படவே வேண்டாம். எல்லாம் நம்ம சாப்பிடலாம் வாங்க பக்கத்தில் கிடைக்கும். நீங்க சொல்லும் லேயர் லேயரான (பரோட்டா அது சப்பாத்தி இல்லை, கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) பரோட்டாச் சப்பாத்தி உட்பட அங்கே பார்க்கலாம். இங்கே படத்தில் பார்ப்பது மேதி ரொட்டி போலத் தெரியுது. நேத்திக்கு மேதி ரொட்டி தான் பண்ணினேன். :)))) தொட்டுக்க ஆவக்காய் ஊறுகாயும், தயிரும். :))))

    பதிலளிநீக்கு
  12. மெல்ல மெல்ல ஒவ்வொண்ணா வரேன், பேசாமப் பதிவாப் போட்டுடலாமா? :))))

    பதிலளிநீக்கு
  13. இங்கே காலை மதியம் என இரண்டு வேளை சப்பாத்தி தான் - நமது ஊர் மாதிரி செய்யாமல் ஃபுல்கா! :) விதம் விதமாய் சைட் டிஷ்!

    பதிலளிநீக்கு
  14. சின்னவயதில் குருமாவுடன்தான் அறிமுகமானது எங்களுக்கு, சப்பாத்தி. பிறகு சின்ன அத்தை “டால்” அறிமுகம் செய்து வைத்தார்கள். அந்நாளில் சப்பாத்தி என்றால் ஸ்பெஷல்:)! இப்போ அன்றாட உணவாகி விட்டது. மாவைக் கபளீகரம் செய்யும் குழந்தைகள் எல்லா வீடுகளிலும் இருந்தனர் போலும்:). சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!