செவ்வாய், 28 அக்டோபர், 2014

கல்யாணி ஏன் சிரித்தாள்? 09 மோகனா!

   
முந்தைய பகுதி சுட்டி : இங்கே! 
                  
சனிக்கிழமை அந்த மொபைல் கடைக்குள் நுழைந்த கல்யாணியும் அப்புவும்சுற்றுமுற்றும் பார்த்தனர். ஊஹூம்! அந்தப் பெண்ணை எங்கும் காணோம்!
   
           
"டேய் அப்பு - சரியா பார்த்தியா? இந்தக் கடைதானா? அந்தப் பெண் இங்கு

வேலை பார்ப்பவள் என்று எதை வைத்துச் சொல்கிறாய்?"
               
"அம்மா! அன்றைக்கு நானும் என் பிரெண்ட்ஸ் நாலு பேரும், கடைத்தெரு முனையிலிருந்து, அவளைப் பின்தொடர்ந்து வந்தோம். ஒரு மொபைலை எடுத்துஅதில் எஸ் எம் எஸ் அல்லது ஏதோ வந்த கால் யாருடையது என்பது போலப்பார்த்தாள். பிறகு தன்னுடைய வாட்சில் மணி பார்த்தாள். அப்புறம் ஒரு தடவைஎங்கள் எல்லோரையும் திரும்பிப் பார்த்து, ஸ்மைல் செய்தாள்! பிறகு நடந்துவந்து, இந்தக் கடைக்குள் சென்றாள்."
              
"மொபைல் வாங்க வந்தவள் கூட இந்தக் கடைக்கு வந்திருக்கலாமே!"
            
"நானும் ஆரம்பத்தில் அவள் இந்தக் கடையில் மொபைல் வாங்க வந்தவள்என்றுதான் நினைத்தேன். நானும் நண்பர்களும் கடைக்கு வெளியே, எதிர்க்கடையில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வெயிட் செய்தோம். அந்தப் பெண் வெளியே வரவில்லை.அதனால்தான் அவள் இங்கு வேலை பார்க்கிறாள் என்ற முடிவுக்கு வந்தோம்...."
               
இந்த நேரத்தில் ஒரு கவுண்டரில் இருந்த ஒரு சேல்ஸ் மேன், "உங்களுக்கு என்னவேண்டும்?" என்று கேட்டார்.
            
அப்பு, " லேட்டஸ்ட் மாடல் மொபைல் போன் என்னவெல்லாம் இருக்கு?" என்றுகேட்டான்.
    
     

" எங்கள் கடையில் லேட்டஸ்ட் ஆக வருகின்ற எல்லா மாடல்களும் கடை ஓனர்அறையில் இருக்கும். ஓனர் ஒவ்வொரு மாடலையும் ஓரிரண்டு நாட்கள்வைத்திருந்து, அந்த மொபைலின் பிளஸ் மைனஸ் பாயிண்டுகளை அறிந்துவைத்துக்கொண்டு, அப்புறம் எங்களிடம் சொல்லி, அவற்றை விற்பனைக்கு வைப்பார்."
            
"புதுமையான ஓனரா இருக்காரே !" என்று வியந்தான் அப்பு.
             
"நாங்க அவரைப் பார்க்கலாமா?" என்று வினவினாள் கல்யாணி.
               
"ஓ! தாராளமா" என்று கூறி கடையின் ஈசான்ய மூலையில் இருந்த அறையைக்காட்டினார், அந்த சேல்ஸ்மேன்.
             
==================
                 
உள்ளே நுழைந்த அப்புவையும், கல்யாணியையும் வரவேற்றது, ஓர் இனிமையான குரல்.
                 
"வாங்கம்மா! வாங்க மிஸ்டர் அப்பு! என் பெயர் மோகனா "
            
வரவேற்றது, அப்பு தேடி வந்த அதே பெண்!
             
"அட! என் பெயர் எப்படித்  தெரியும்?" என்று கேட்டான் அப்பு. 
             
"உங்க பெயர் மட்டும் இல்லை, ஊரு, அம்மா யாரு, அவங்க உங்க கல்யாணத்துக்குப்போட்ட கண்டிஷன், எல்லாமே தெரியும்."
            
"எப்படி?"
              
"சென்ற வாரம் இந்தக் கடை வீதியில், நான் கடைக்கு வந்திருந்த லேட்டஸ்ட்மொபைலை செக் செய்ய, வெளியில் எடுத்து, selfie எடுக்க முயற்சி செய்தேன்.அப்போ என் முகத்துக்குப் பின்னாடி, நீங்களும் உங்கள் நண்பர்களும் நின்றுகொண்டு இருந்தது தெரிந்தது. அந்த நேரத்தில் உங்க மொபைலுக்கு ஒருகால் வந்தது. ஞாபகம் இருக்கா?"
              
அப்பு யோசித்துப் பார்த்து, "ஆமாம்! அம்மாதான் அப்போ கால் பண்ணினா! அது ஏன் அவ்வளவு ஞாபகம் இருக்கு?" என்று கேட்டான்.
         
"அதுவா! என்னுடைய நம்பர், 9**** **230, உங்க மொபைலிலிருந்து இந்த நம்பருக்குக் கால் கொடுங்க பார்க்கலாம்!"
               
உடனே கால் செய்தான் அப்பு.

மோகனாவின் மொபைலில் இருந்து, இந்த டியூன் இசைத்தது! 



திடுக்கிட்டு, தன மொபைலை ஒரு கணம் நோக்கினான். 
  
  

"அட! என்னுடைய மொபைலில் இருக்கின்ற அதே ஹலோ டியூன்! உங்களுக்கும் இந்த பாட்டுப் பிடிக்குமா?" 
     
"ஆமாம்! இந்த டியூன் அன்று உங்க மொபைலில் வந்ததுமே உங்களைப் பற்றிய முழு விவரம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன். என் கடை சேல்ஸ் மேன் ஒருவரை, உங்கள் கோஷ்டி எதிர்க் கடையில் இருக்கும் பொழுதும், பிறகு அங்கிருந்து கிளம்பும்பொழுதும், உங்கள் எல்லோரையும் பின் தொடர, விவரங்கள் சேமிக்க அனுப்பி வைத்தேன். நீங்களும் உங்க நண்பர்களும் எதிர்க்கடையில் இருந்தபொழுதும், தஞ்சை பஸ் ஸ்டாண்ட் வரை செல்லும்பொழுதும்  பேசியவைகளை அவர் தன்னுடைய மொபைல் போன் வாய்ஸ் ரிக்கார்டரில் பதிவு செய்து கொண்டு வந்தார். அப்போதான் உங்க பெயர் அப்பு என்பதும் அம்மா பெயர் கல்யாணி என்பதும், நீங்க எல்லோரும் கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்துகொண்டேன். 'எங்க அம்மா ஒரு ஏழைப் பெண்ணைத்தான் நான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும்னு சொல்றா, இந்தப் பெண்ணைப் பார்த்தால், அவ்வளவா வசதி இல்லாத குடும்பம் போலத்தான் தோன்றுகிறது. எனக்கு இவளைப் பிடித்திருக்கின்றது. அடுத்த வாரம் ஒருநாள் அம்மாவை அழைத்து வந்து அன் அபிசியலா பெண் பார்க்கப் போகின்றேன்' என்று நீங்கள் சொன்னதையும்,  கேட்டேன். அம்மா - நான் ஏழைப்பெண் இல்லை. ஆனால் எனக்கு அப்புவைப் பிடித்திருக்கின்றது. எங்க கல்யாணத்திற்கு உங்க சம்மதம் கிடைக்குமா?" 
                
இவ்வளவு நேரம் நடப்பவை எல்லாவற்றையும் திகைப்போடு பார்த்துக்கொண்டு இருந்த கல்யாணி, "அப்புவுக்குப் பிடிச்சிருந்தா அது போதும்; ஆமாம் - நீ மட்டும் சொன்னால் போதுமா? உன் அப்பா அம்மா என்ன சொல்வார்கள்? " 
             
"அது நல்ல கேள்வி. உண்மைதான். என் அப்பா அம்மா இருவருமே நான் ஒரு ஏழைப்பையனைத்தான் கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். அதுவும் அம்மா அப்பா இல்லாத அனாதைப் பையனாக இருக்க வேண்டுமாம்! கும்பகோணத்துல நீங்க இருக்கின்ற விலாசம் கொடுங்க. அடுத்த வாரம் அப்பா அம்மா இருவரும் உங்க வீட்டுக்கு வந்து, உங்களைப் பார்ப்பார்கள். அந்த நேரத்தில் நீங்க அம்மா அப்பா இல்லாத அனாதை மாதிரியும், உங்க அம்மா உங்க வீட்டு சமையல்காரி போலவும் சும்மா ஆக்ட் கொடுங்க. அப்பாவுக்கு நிச்சயம் உங்களைப் பிடிக்கும். அவர் சம்மதம் கிடைத்த பின்பு, எல்லா உண்மைகளையும் சொல்லிவிடலாம்!" 
           
'ஆக்ட் கொடுப்பதா! அதுதானே உண்மை!' என்று நினைத்துக் கொண்டார்கள், அப்புவும், கல்யாணியும். 
     
(தொடரும்) 
         

9 கருத்துகள்:

  1. ஆரம்பித்த இடத்திற்கே கதை வந்துவிட்டதே..!

    பதிலளிநீக்கு
  2. அடியைப் பிடிடா பாரத பட்டாவா. இந்தப் பெண்ணோட அப்பா கல்யாணியின் காதலனா இருக்குமோ.

    பதிலளிநீக்கு
  3. இருக்குமோ, என்ன வல்லிம்மா? எத்தனையோ கதைகள் படிச்சு இவ்வளவு அனுபவம் வாய்ந்த நீங்கள் சொன்னால் அது சரியில்லாம இருக்குமோ?..

    என்ன அவசரமோ, தெரிலே! கதாசிரியர் இந்தஅத்தியாயத்திலேயே முடிச்சிக்கக்கூட ரெடி தான் போலிருக்கு!

    'ஒரு ஏழைப்பெண்ணைத் தான் நான் கல்யாணம்பண்ணிக்கணும்ன்னு
    அதுவும் அந்தப் பையன் அனாதையா இருக்கணும்ன்னு என்னோட அப்பா-அம்மா விருப்பம்'ன்னு வாழைப்பழத்தை உரித்து வேறு கொடுத்தாயிற்று!

    'அப்பா விருப்பம் தான் அது; ஆனா அம்மா அதை விரும்பலே! ஏன்னா அவங்க பணக்காரங்க வம்சத்லேந்து வந்தவங்க'ன்னு நகர்கிற கதைத் தேருக்கு ஒரு கட்டையானும் போட்டிருக்கலாம்.

    அப்படியே இன்னும் நாலு அத்தியாயத்திற்கு நீட்டி.. ப்ச்! எல்லாத்தையும் மோகனா சொல்வதாகக் கொட்டி கதையை முடிச்சிக்கத் தான் அவர் அவசரப்படறாரே!

    பதிலளிநீக்கு

  4. கதை நகர்வு நன்று
    படிக்க தூண்டும் பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  5. கதை நன்றாகப் போகிறது அண்ணா...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. கதையின் போக்கு சுவாரஸ்யமாக இருக்கின்றது! இங்கு தான் ட்விஸ்ட் வரும் போலத் தோன்றுகின்றது! தொடர்கின்றோம்...

    பதிலளிநீக்கு
  7. சுவாரஸ்யமாக செல்கிறது! தொடர்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  8. தொடர்கிறேன்.... ஒரு வித ஸ்வாரசியமுடன்!

    பதிலளிநீக்கு
  9. ம்ம்ம்ம்ம் நாளைக்கு முடிவுப் பகுதியா? கல்யாணி ஏன் சிரித்தாள் என்று தெரிந்துவிடும். :))))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!