புதன், 29 அக்டோபர், 2014

ரெஹானா ஜப்பாரி



தன்னைக் கற்பழிக்க வந்தவனிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் அந்தக் கயவன் மரணமடைந்து விட,  அதனால் இந்த இளம் பெண்ணுக்கு பாதாளத்தில் தனிமைச்சிறை, மரண தண்டனை. அந்தக் கயவன்  ஒரு  ய்வு பெற்ற உளவுத்துறை அதிகாரி என்பதும் ஒரு காரணம்.  நம் நாட்டில் அல்ல, ஈரானில்.
வினோத சட்டங்கள்.

(தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்யவந்த முன்னாள் உளவுத் துறை அதிகாரியைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் ஈரானில் கடந்த சனிக்கிழமை தூக்கிலிடப்பட்ட ரெஹானா ஜப்பாரி (26), சிறையிலிருந்தபடியே தனது தாய் ஷோலேவுக்கு அனுப்பிய கடைசி வேண்டுகோள், ஒலிவடிவத்திலேயே கிடைத்திருக்கிறது. உள்ளத்தை உருக்கும் அந்தக் கடைசி வேண்டுகோள் இது.)

'தி இந்து' வில் அந்த ஒலி வடிவின் தமிழ் வடிவை திரு சாரி என்பவர் தந்திருக்கிறார். மனதை உருக்கும் அந்தப் பதிவை இந்துவுக்கு நன்றி சொல்லி இங்கு அப்படியே தருகிறேன்.

                                                            

 
மரண தண்டனை அளிக்கப்படுவதற்கு முன்பு ரெஹானா ஜப்பாரி தன் தாயிடம் வேண்டிக்கொண்டது.
 
 
  அன்புத் தாய் ஷோலே, குற்றம் இழைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நான், சட்டப்படி அதற்குப் பதிலடியாகத் தண்டனையை அனுபவிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தை நெருங்கிவிட்டேன் என்பதை ஏன் சொல்லாமல் மறைத்துவிட்டாய்?  இதுதான் எனக்கு வேதனையாக இருக்கிறது. 

இது எனக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா? 


இந்த உலகம் என்னை எந்தக் கவலையுமின்றி 19 ஆண்டுகள் வாழ அனுமதித்தது. கொடூரம் நிறைந்த அந்த இரவில் நான் கொல்லப்பட்டிருக்க வேண்டும். என்னுடைய உயிரற்ற உடல் நகரின் ஒரு மூலையில் தூக்கி வீசப்பட்டிருக்கும். சில நாட்களுக்குப் பிறகு, போலீஸார் வந்து என்னுடைய சடலத்தை அடையாளம் காட்டுவதற்காக உன்னை அழைத்துச் சென்றிருப்பார்கள். 

என்னைப் பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்துக் கொன்றார்கள் என்பதும் உனக்கு அப்போது தெரிந்திருக்கும். கொலைகாரன் யாரென்று யாருக்குமே தெரியாமல் போயிருக்கும். காரணம், நாம் அவர்களைப் போல பணமோ, செல்வாக்கோ படைத்தவர்கள் அல்லவே? அதன் பிறகு, உன்னுடைய வாழ்க்கை அவமானமும் துயரமும் நிறைந்ததாக மாறியிருக்கும். இந்த வேதனைகளைத் தாங்காமல் நீயும் சில ஆண்டுகளில் இறந்திருப்பாய், அதுதான் நம்முடைய தலையெழுத்தாக இருக்கும். 

                                                     

சாவும் கடைசி அல்ல
 
ஆனால், சபிக்கப்பட்ட அந்த அடி கதையையே மாற்றிவிட்டது. என்னுடைய உடல் வீதியில் தூக்கி வீசப்படவில்லை; எவின் சிறைச்சாலையின் தனிமைக் கொட்டடியில் அடைக்கப்பட்டது, இப்போது கல்லறை போன்ற ஷார்-இ-ராய் சிறையின் அறையில் புதைக்கப் பட்டிருக்கிறது. இதுதான் தலைவிதி என்பதால், நான் அதை ஆட்சேபிக்கவில்லை. சாவு ஒன்றே வாழ்க்கை யின் கடைசி அல்ல என்பதை நீயும் அறிவாய். 

நாம் எல்லோருமே ஒரு அனுபவத்தைப் பெறவும், பாடங்களைப் படிக்கவும் இந்த உலகத்தில் பிறக்கிறோம் என்று ஒருமுறை சொன்னாய்; ஒவ்வொரு பிறவியிலும் நம்மீது புதிய பொறுப்பு சுமத்தப்படுகிறது. சில வேளைகளில் தீமைகளை எதிர்த்துப் போராடியே தீர வேண்டும் என்று நான் கற்றிருக்கிறேன். என்னைச் சவுக்கால் அடித்தவன் தன்னுடைய தலையிலும் முகத்திலும்தான் கடைசியாக அறைந்துகொண்டான். நல்லதொரு நெறிக்காக ஒருவர் தன்னுடைய உயிரைக் கொடுத்தாவது பாடுபட வேண்டும் என்று சொல்லி யிருக்கிறாய். அதைத்தானே செய்தேன். 

பள்ளிக்குச் செல்லும்போது அடுத்தவர்களுடைய புகார்களுக்குக் காரணமாக இருந்துவிடக் கூடாது என்று அறிவுரை சொன்னாய். ஒரு காமுகன் என்னைப் பலாத்காரப்படுத்த முற்பட்டபோது, இந்த அறிவுரை யெல்லாம் பயன்படவேயில்லை அம்மா. 

                                              

நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் என்னை நிறுத்தி, காலமெல்லாம் கொலை செய்வதற்காகவே சதி செய்தவளைப் போலவும், இரக்கமில்லா கொலைகாரி என்றும் என் மீது குற்றம் சுமத்தினார்கள். நான் கண்ணீர்விடவில்லை, எனக்கு இரக்கம் காட்டுங்கள் என்று கெஞ்சவில்லை. சட்டம் பாரபட்சமில்லாமல் செயல்படும் என்ற நம்பிக் கையில் நான் அழவேயில்லை அம்மா. 

வசை கிடைத்தது
 
கடுமையாகக் குற்றம்சாட்டியும் துளியும் வருத்தம் இல்லாமல் இருக்கிறாள் பார் என்ற வசைதான் எனக்குக் கிடைத்தது. வீட்டில் நான் கொசுவைக்கூட அடித்துக் கொன்றதில்லை. எனக்குத்தான் இந்த சதிகாரி பட்டம், கொலைகாரி என்ற குற்றச்சாட்டு. 

                                                  

பிராணிகளை நான் நடத்திய விதத்தைக் கொண்டு என்னை ஆண் சுபாவம் மிக்கவள் என்று முடிவுகட்டினார்கள். நீ என்னை மிகவும் நேசிக்கச் சொன்ன இந்த தேசம்கூட நான் உயிரோடு இருப்பதை விரும்பவில்லை அம்மா; போலீஸ் விசாரணை என்ற பெயரில் சொல்ல முடியாத - காது கூசும்படியான - கேள்விகளைக் கேட்டுக்கொண்டே அடுத்தடுத்து இடிபோல என்னை அடித்துத் துவைத்தபோது, எனக்கு ஆதரவாக அங்கே யாருமே இல்லை அம்மா. 

ஒரு பெண்ணின் அழகுக்கு அழகு சேர்க்கும் என் கரிய கூந்தலை நானே மழித்துக்கொண்டதற்குப் பரிசாக என்னை 11 நாட்கள் தனிமைச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினார்கள். 

போலீஸ் காவலில் முதல் நாள் இருந்தபோது அங்குவந்த வயதான போலீஸ் அதிகாரி ஒருவர், “உனக் கெல்லாம் என்னடி நீள நகம் வேண்டியிருக்கிறது?” என்று கேட்டு சரமாரியாக அடித்தார். இந்தக் கால கட்டத்தில் இங்கு எதுவுமே அழகாக இருந்துவிடக் கூடாது என்பதைப் புரிந்துகொண்டேன். 

தோற்றப் பொலிவு, சிந்தனையில் அழகு, ஆசையில் அழகு, கையெழுத்தில் அழகு, கண்ணில் அழகு, பார்வையில் அழகு, இனிமையான குரல் அழகு என்று எதுவுமே விரும்பப்படுவதில்லை. 

இறுதி விருப்பம்
 
உனக்குத் தெரியாமலோ, நீ இல்லாமலோ என்னைத் தூக்கில் போட்டுவிடுவார்கள். அதனால், நான் சொல்ல விரும்புவதையெல்லாம் ஒலிவடிவில் பதிவுசெய்திருக்கிறேன், இது இன்னொருவர் மூலம் உன் கைக்குக் கிடைக்கும். என் நினைவாக, நான் கைப்பட எழுதிய பல பக்கங்களை வீட்டில் உனக்காக வைத்திருக்கிறேன்.


இறப்பதற்கு முன்னால் உன்னிடம் ஒன்று யாசிக்கிறேன். உன்னுடைய சக்தியையெல்லாம் திரட்டி இதை நீ செய்தே தீர வேண்டும். இந்த உலகத்திடமிருந்தும் இந்த நாட்டிடமிருந்தும் - ஏன் உன்னிடமிருந்தும் நான் எதிர்பார்ப்பது இந்த ஒன்றைத்தான். அம்மா ப்ளீஸ், அழாதே, நான் சொல்வதைக் கவனமாகக் கேள். நீதிமன்றத்துக்குச் சென்று என்னுடைய இறுதி விருப்பம் இது என்று அவர்களிடம் தெரிவி. 

எனக்காக நீ யாரிடமும் சென்று பிச்சை கேட்காதே என்று கூறிய நானே சொல்கிறேன், நீ எனக்காக நீதிமான்களிடம் பிச்சை கேட்டாலும் தவறில்லை. 

அம்மா, நான் வெறும் கழிவாக இந்தப் பூமியிலே விழ விரும்பவில்லை. என்னுடைய அழகிய கண்களும் தூய இதயமும் இந்த மண்ணோடு மண்ணாக வீணாகப் போய்விடக் கூடாது. என்னைத் தூக்கில் போட்டதும் என்னுடைய கண்கள், இதயம், சிறு நீரகம், எலும்புகள் இன்னும் என்னவெல்லாம் என் உடலிலிருந்து எடுத்து மற்றவர்களுக்குப் பயன்படுத்த முடியுமோ அதையெல்லாம் தேவைப்படுபவர்கள் எடுத்துக்கொள்ளட்டும். நான்தான் கொடுத்தேன் என்று யாருக்கும் தெரிய வேண்டாம். 

அம்மா, எனக்காக ஒரு பூச்செண்டை வாங்கு, எனக்காக இறைவனிடம் வேண்டு. என் இதயத்தின் ஆழத்திலிருந்து சொல் கிறேன், என்னை அடக்கம் செய்து எனக்காக ஒரு சமாதியை ஏற்படுத்தாதே அம்மா; வாழும்போதுதான் நான் உனக்குத் துயரங்களையே கொடுத்தேன். நான் இறந்த பிறகும் என்னுடைய சமாதிக்கு வந்து நீ அழ வேண்டாம் அம்மா. எனக்காகக் கருப்புத் துணியை நீ போட வேண்டாம். என்னையும் துயரகரமான என்னுடைய நாட்களையும் மறக்க முயற்சி செய்; என்னுடைய எந்த எச்சமும் உன் எதிரிலோ நினைவிலோ இருக்கக் கூடாது. 

கடவுளிடம் பதில்
 
இந்த உலகம் நான் வாழ்வதை விரும்பவில்லை. நான் மரணத்தைத் தழுவுகிறேன். கடவுளின் ராஜ் ஜியத்தில் நான் அந்த இன்ஸ்பெக்டர்கள் மீது வழக்குத் தொடுப்பேன். இன்ஸ்பெக்டர் ஷாம்லு, அந்த நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்லாம் பதில் சொல்லியாக வேண்டும். டாக்டர் ஃபர்வான்டி, காசிம் ஷபானி எல்லோர் மீதும் கடவுளின் நியாய ஸ்தலத்தில் நான் வழக்குத் தொடுப்பேன். குற்றம் இழைத்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், நியாயத்தின்பால் நிற்காமல் வேடிக்கை பார்த்தவர்கள் என்று எல்லோருமே கடவுளிடத்திலே பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். 

இளகிய மனம் படைத்த என்னுடைய தாயே, கடவுளின் ராஜ்ஜியத்திலே நீயும் நானும் வாதிகளாக இருப்போம், நம்மீது குற்றம்சாட்டியவர்கள் எல்லாம் பதில் சொல்லக் கடமைப்பட்ட பிரதிவாதிகளாக இருப் பார்கள். கடவுள் எதை விரும்புகிறார் என்று பார்ப்போம். என்னுடைய உடலிலிருந்து உயிர் பிரியும்வரை உன்னைத் தழுவிக்கொண்டிருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கு உலகமே நீதான் அம்மா! – 

உன் பிரிய ரெஹானா. 

(தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்யவந்த முன்னாள் உளவுத் துறை அதிகாரியைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் ஈரானில் கடந்த சனிக்கிழமை தூக்கிலிடப்பட்ட ரெஹானா ஜப்பாரி (26), சிறையிலிருந்தபடியே தனது தாய் ஷோலேவுக்கு அனுப்பிய கடைசி வேண்டுகோள், ஒலிவடிவத்திலேயே கிடைத்திருக்கிறது. உள்ளத்தை உருக்கும் அந்தக் கடைசி வேண்டுகோள் இது.)
 
- தமிழில்: சாரி

16 கருத்துகள்:

  1. ///அம்மா, நான் வெறும் கழிவாக இந்தப் பூமியிலே விழ விரும்பவில்லை. என்னுடைய அழகிய கண்களும் தூய இதயமும் இந்த மண்ணோடு மண்ணாக வீணாகப் போய்விடக் கூடாது. என்னைத் தூக்கில் போட்டதும் என்னுடைய கண்கள், இதயம், சிறு நீரகம், எலும்புகள் இன்னும் என்னவெல்லாம் என் உடலிலிருந்து எடுத்து மற்றவர்களுக்குப் பயன்படுத்த முடியுமோ அதையெல்லாம் தேவைப்படுபவர்கள் எடுத்துக்கொள்ளட்டும். நான்தான் கொடுத்தேன் என்று யாருக்கும் தெரிய வேண்டாம். ////
    மரணத்தின் மடியில் இருந்து கொண்டு இப்படிப் பேச எத்துனை தெளிவு வேண்டும், துணிவு வேண்டும்
    மனம் கணக்கிறது நண்பரே

    பதிலளிநீக்கு
  2. மனம் பாரமாகிபோனது :( ஒரு சிறு வயது பெண் பாவம் எத்தனை கனவுகள் கண்டிருப்பாள் ..அவங்க அம்மாவுக்கு இறைவன் ஆறுதலை தரனும் ..தனது உடல் உறுப்புக்களை கூட தானம் செய்திருக்கிறாளே எவ்வளவு பெரிய மனசு அவருக்கு ...!!மனம் கனத்தது வாசித்து முடித்ததும் :(

    பதிலளிநீக்கு
  3. ரெஹானா ஜப்பாரியின் வேண்டுகோள் ,மனத்தைக் கனக்கச் செய்கிறது .ஈரானில் மட்டுமல்ல பலநாடுகளிலும் இப்படிப்பட்ட ஆதிக்க சக்திகள் வைத்ததுதான் சட்டமாய் இருக்கிறது !

    பதிலளிநீக்கு
  4. //சாவும் கடைசி அல்ல.. //

    மிகவும் பொருள் பொதிந்த வார்த்தைக் கோர்வை.

    பதிலளிநீக்கு
  5. ரெஹானாவின் பேச்சை இங்கே கட்டுரையாக திரு. சாரி தந்திருப்பதை நேற்றுப் படித்தேன் அண்ணா... படிக்கப் படிக்க கண்ணீர் வந்துவிட்டது...
    எப்படிப்பட்ட பெண் என்று வியக்க வைத்தார்.
    இறக்கப் போகிறோம் என்றாலும் எனது உடல் உறுப்புக்களை இன்னாரது என்று சொல்லாமல் தானம் கொடுங்கள் அம்மா என்று சொன்ன அந்த மனம்...
    இப்படிப்பட்ட பொண்ணுக்க அந்த நாட்டில்... அந்த சமூகத்தில் எதிர்த்துக் கேட்க ஆள் இல்லாமல் போனது என்னவோ வெட்கக்கேடு...
    இன்னுமா ஆணாதிக்க வெறி அவர்களுக்குள் இருக்கிறது...
    ஒரு சாதாரண மனிதனாய் வலிக்கிறது அண்ணா...

    பதிலளிநீக்கு
  6. உள்ளத்தை உருக்கும்
    உண்மை வரிகள்
    உலகமே - இந்த
    முறையற்ற தீர்ப்பை ஏற்கிறாயா?
    கடவள்
    ஏற்க மாட்டாரென நம்புகிறேன்!

    பதிலளிநீக்கு
  7. மிக கொடுமை. என்ன சொல்வது. இம்மாதிரி நாடுகளில் பெண்களுக்கு எப்பொழுது தான் விடிவு காலம் வருமோ?

    பதிலளிநீக்கு
  8. பத்திரிக்கையில் இவரது மரணதண்டனை பற்றிய செய்தியை படித்தபோதே அதிர்ச்சியாக இருந்தது. உங்களது பதிவில் இதனை விவரமாக படித்ததும் கண்ணீரை வரவழைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
  9. //அம்மா, நான் வெறும் கழிவாக இந்தப் பூமியிலே விழ விரும்பவில்லை. என்னுடைய அழகிய கண்களும் தூய இதயமும் இந்த மண்ணோடு மண்ணாக வீணாகப் போய்விடக் கூடாது. என்னைத் தூக்கில் போட்டதும் என்னுடைய கண்கள், இதயம், சிறு நீரகம், எலும்புகள் இன்னும் என்னவெல்லாம் என் உடலிலிருந்து எடுத்து மற்றவர்களுக்குப் பயன்படுத்த முடியுமோ அதையெல்லாம் தேவைப்படுபவர்கள் எடுத்துக்கொள்ளட்டும். நான்தான் கொடுத்தேன் என்று யாருக்கும் தெரிய வேண்டாம். //

    இறக்கும் தருவாயிலும் கூட என்ன ஒரு தைரியமான, மன உறுதி உள்ள வார்த்தைகள்! தனது உறுப்புகளைத் தானம் செய்தும்....வார்த்தைகளே இல்லை. எங்களை அறியாமல் கண்களில் கண்ணீர். பேப்பரில் செய்தி படித்த போதும்,இப்போது அதை இங்கு வாசிக்கும் போதும்.....

    இப்படியும் ஒரு நாடா? இந்தியா சொர்க்கமோ?!!!

    ம்ம் நிச்சயமாக...ஈரான் நாட்டிலிருந்து ஒருவர் கீதாவின் மகனுடன் இருக்கின்றார் 45 வயதாகும் அவர் சொல்வதைக் கேட்ட போதும் இதே போல்தான் தோன்றியது. அதைப் பதிவாக எழுத ஆசைதான் ஆனால் ஏதாவது பிரச்ச்னை வருமோ என்ற ஒரு தயக்கமும் இருக்கின்றது.

    //நாம் எல்லோருமே ஒரு அனுபவத்தைப் பெறவும், பாடங்களைப் படிக்கவும் இந்த உலகத்தில் பிறக்கிறோம் என்று ஒருமுறை சொன்னாய்; // சரிதான்! ஆனால் அதற்காக இப்படியொரு அனுபவமா? இது ஒருபாடமா?

    மனம் ஒரு புறம் வலிக்கின்றது மறுபுறம் அந்தச் சிறிய பெண்ணின் தைரியத்தையும், மன உறுதியையும், அசைக்க முடியாத இறை நம்பிக்கையையும் (இப்படிப்பட்ட இறப்பு நிகழும் தருவாயில் கூட) ஆச்சரியத்தையும் தருகின்றது! அவரைப் கை எடுத்து வணங்கி பாராட்டவும் தோன்றுகின்றது!

    பதிலளிநீக்கு
  10. விசித்திரமான நாடாக இருக்கிறது ஈரான்! இந்துவிலும் படித்தேன்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  11. அதிக மனோ தைரியமுள்ள பெண்!! உடல் உறுப்புகள் தானம் செய்ய விரும்புவது பாராட்டிற்குரியது.

    ஈரான் அல்லது சவூதி அரேபியா போன்ற நாடுகள் இஸ்லாமிய நாடு என்பதாலேயே அவர்களின் செயல்கள் எல்லாமே இஸ்லாமிய முறைப்படிதான் இருக்கும் என்ற நம் எதிர்பார்ப்புதான் தவறு. இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதாலேயே எல்லா தரப்பினரும் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று நம்பப்படுவதைப் போல... :-) :-D

    எனினும், ஒரு செய்தியைப் பதியுமுன், அதைக் குறித்த தகவல்களை மற்ற ஊடகங்களிலும் படித்து உறுதிபடுத்திக் கொள்வது நமக்கு நல்லது. தமிழக ஊடகங்களின் ”நேர்மையை” பல தருணங்களில் - நேற்றைய “வீடுகளில் புகுந்து குடும்பப்பெண்களை ஏமாற்றும் ”வசீகர” பெண் - வரை நிறையப் பார்த்துவிட்டோம்.

    இப்பெண்ணுக்கான தண்டனையில் நிறைய முரண்பாடுகள் தெரிந்தாலும், கொலையுண்டவரின் (Sarbandi) வாரிசுகள் மன்னிக்க மறுத்ததே தண்டனை நிறைவேற்றப்பட முதற்காரணமாகத் தெரிகிறது. (இஸ்லாமிய சட்டத்தின்படி அவர்கள் மன்னிப்பே முதற்தேவை) மன்னிக்க மறுத்ததற்கு அவர்கள் சொல்லும் காரணம்:

    However, Sarbandi’s family insisted the murder was premeditated and that Jabbari had confessed to buying a knife two days before the killing.

    According to Jalal Sarbandi, the victim’s eldest son, Jabbari testified that a man was present in the apartment where his father was killed but she had refused to reveal his identity.

    He said in April that his family “would not even contemplate mercy until truth is unearthed”.

    “Only when her true intentions are exposed and she tells the truth about her accomplice and what really went down will we be prepared to grant mercy,” he said at the time.

    ....

    Amnesty said Jabbari had admitted stabbing the man once from behind, but she insisted another man killed him. The human rights group said her claim was never properly investigated.

    http://www.theguardian.com/world/2014/oct/25/iran-reyhaneh-jabbari-executes-appeals

    https://www.facebook.com/mohaashik/posts/771072969594690:0

    பதிலளிநீக்கு
  12. /இம்மாதிரி நாடுகளில் பெண்களுக்கு எப்பொழுது தான் விடிவு//

    //இப்படியும் ஒரு நாடா? இந்தியா சொர்க்கமோ?!!!//

    எவ்வளவு அப்பாவியாக இருக்கிறோம் நாம்!! இந்தப் பதிவைப் படியுங்கள்.

    //குஜராத்தில் ஒரு சிறிய கிராமமுமல்லாத நகரமுமல்லாத ஒரு ஊரில் இருந்து ஒரு சகோதரர் எழுதியிருந்தார்.

    அவர், அவரின் அக்கா, அம்மா, அப்பா இவர்களே அவரின் குடும்பம். குஜராத் கலவரத்தின் போது, அதில் எந்த வகையிலும் சம்பந்தப்படாத தன் வேலையுண்டு தானுண்டு என ஒரு குமாஸ்தாவாய் வாழ்ந்து வந்த அந்த சகோதரரின் தந்தையை போலீஸ் இழுத்துச் சென்றது. அப்பொழுது இந்த சகோதரரின் வயது 10 கூட இல்லை. அவரின் அக்காவிற்கு 16/17 வயது. முப்பதுகளில் அவர்களின் அம்மா. அம்மாவும், மகனும், மகளும் போலீஸ் ஸ்டேசனின் படியை தினம்தினம் ஏறினார்கள், அப்பாவியான கணவரை விட்டுவிட சொல்லி. ஒரு வாரம் கழித்து போலீஸ் ஒரு நிபந்தனையுடன் அந்த குடும்பத்தின் தலைவனை விட முன் வந்தது. நிபந்தனை என்ன, அந்த இரவில் வரும் 4 அரசியல்வாதிகளுக்கு அம்மாவும், மகளும் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். அப்போதுதான் விடுவோம் என்று. பிராமணர்கள் அதிகம் வாழும் பகுதியில் வாழ்ந்ததும், இஸ்லாமியர்களாக இருந்ததும், ஏழைகளாகவும் உதவிக்கு ஆளில்லாதவர்களாகவும் இருந்ததே அவர்கள் செய்த மகா பாவம். கணவன் முக்கியமா, கற்பு முக்கியமா என்று அதிகம் ஆராய்ந்து பார்க்க தெரியவில்லை அந்த தாய்க்கு.... ஊமையாய் ஒத்துக் கொண்டனர். அந்த இரவில் அரசியல்வாதிகளும் குண்டர்களுமாய் நான்கு பேர் வந்தனர். அந்த இரவோடு அது முடியவில்லை. ஒரு மாதம் முழுவதும் அந்த மகனின் முன் தாயும், தமக்கையும் சீரழிக்கப்பட்டனர்.

    அக்கம்பக்கம் சுற்றம் வெறுமனே வேடிக்கை பார்த்தது பின் அவல் மெல்ல தொடங்கியது. ஒரு மாதம் கழித்து அந்த தந்தையை குற்ருயிரும் கொலையுயிருமாய் விடுதலை செய்தது போலீஸ் ஸ்டேஷன். தந்தைக்கு எந்த விவரமும் சொல்லப்படாமல், அக்கம்பக்கத்தினரின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வாசகங்களை சகிக்க இயலாது வேறு ஊருக்கு சென்று விட்டனர். கடிதம் எழுதிய அந்த சகோதரர், தன் மனதை, தன் தாய், தமக்கையின் மனதை / வாழ்வை எப்படி தேற்றுவது என விம்மியிருந்தார். ஒரு குடும்பமாய் வாழ்ந்தாலும் ஒருவர் முகத்தில் ஒருவர் விழிப்பதற்கே சங்கடப்படுவதும், தினம் தினம் வாழ்க்கையை முடித்து விடாமல் காப்பதுமே பெரிய மனப்போர் என்று குமுறியிருந்தார். //

    http://mydeartamilnadu.blogspot.ae/2011/09/blog-post_19.html

    இது ஒரு சாம்பிள்தான். இன்னொரு செய்தியில், அகதிகள் முகாமில் நடைப்பிணமாக இருக்கும் தன் கர்ப்பிணி மருமகளைக் கவனித்து வரும் வயதான பெண் கூறியது: “என் மகன் கலவரத்தில் கொல்லப்பட்டானே என்று வருந்துவதா, இல்லை, பலாதகாரம் செய்யப்பட்ட இவள் கர்ப்பமாக இருப்பதற்காக இருப்பதற்காக கவலைப்படுவதா என்று தெரியவில்லை”

    இன்னும் சொல்லப்படாத எத்தனையோ உள்ளன. தவிர, வாச்சாத்தி கிராமப் பெண்கள், சிதம்பரம் பத்மினி, ஐரோம் ஷர்மிளா, காஷ்மீர் பெண்கள் இன்னும் சொல்லணும்னா நெறய்ய்யா சொல்லிகிட்டே இருக்கலாம்.

    குறிப்பாக, காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் இராணுவங்களின் பெயரால் சீரழிக்கப்படும் பெண்கள் கதைகள் கணக்கிலடங்காதவை.

    எங்கும், முதல் இலக்கு பெண்கள்தாம். இந்தியா இதில் விதிவிலக்கல்ல. எனினும், இந்தியா என் தாய்நாடு என்பதில் எனக்குப் பெருமிதம்.

    பதிலளிநீக்கு
  13. //எல்லோர் மீதும் கடவுளின் நியாய ஸ்தலத்தில் நான் வழக்குத் தொடுப்பேன். குற்றம் இழைத்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், நியாயத்தின்பால் நிற்காமல் வேடிக்கை பார்த்தவர்கள் என்று எல்லோருமே கடவுளிடத்திலே பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். //

    உரிய நியாயம் மறுக்கப்படாத இடம் அது ஒன்றுதான். அந்த நம்பிக்கைதான் வாழும் (அல்லது மரணிக்கும்??) வலிமை தருகிறது.

    பதிலளிநீக்கு
  14. பலரும் சொல்லி விட்டனர். நினைக்க நினைக்க வேதனைப்பட்ட ஒரு விஷயம். :(

    பதிலளிநீக்கு
  15. Hats off rehana.ur courage gives encouraging.nee vadikka villai kaneer.unakaha nangal vadithuvittom.unnudaya manavalimai irundhal ulaghathai vellalam.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!