திங்கள், 6 அக்டோபர், 2014

'திங்க'க் கிழமை - 'தாலி' - உத்தர் போஜன்!


சமீபத்தில் ஒரு மதிய உணவை ஹோட்டலில் சாப்பிட வேண்டிய நிர்ப்பந்தம் - வேறு வழியில்லாமல்தான்.

                                          

எங்கள் அதிருஷ்டம் மறுபடியும் வழியில் மாட்டியது 'சங்கீதா' தான்!  மறுபடியும் அதே சங்கீதாவா, வேறு ஏதாவது ஹோட்டல் கண்ணில் படுகிறதா என்று சுற்றுமுற்றும் தேடிவிட்டு, வேறு வழி இல்லாமல் உள்ளே போய் உட்கார்ந்து 'மீல்ஸ்' ஆர்டர் செய்யலாமா, 'டிஃபனா'கச் சொல்லி விடலாமா என்று தர்க்கம் செய்து கொண்டிருந்தோம். 

                                           
 
சாப்பாடு என்றால் அதே வாசனையில் சாம்பார், புளிப்பாக காரக்குழம்பு, வெங்காயம் போட்டு ரெண்டு கறி, ஒரு கூட்டு..... வேண்டாமே இந்த சோதனை என்று விவாதித்துக்கொண்டிருந்தபோது சர்வர் கொஞ்சம் காத்திருந்துப் பார்த்து விட்டு தண்ணீர் எடுத்து வைத்து விட்டு நகர்ந்து விட்டார்.

                                            

முடிவெடுக்க முடியாமல் வீட்டில் காத்திருந்த மகனுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு விடுவோம் என்று அலைபேசியில் அழைத்தபோது அவன்தான் ஒரு யோசனை சொன்னான். 

அப்படியே A/C பகுதிக்குப் போகச் சொன்னான். என்ன வித்தியாசம் என்று கேட்டபோது, அங்கு சமையலே தனி என்றான். அந்தப் பகுதியில் முன்பு சாப்பிட்டிருந்தபோதும் இந்த வித்தியாசம் தெரியாது எங்களுக்கு. ஏனென்றால் 'எப்புட்டி அம்மையிக்கி நிப்பட்டியே கதி' என்று எப்போதும் ஒரே மாதிரி ஏதாவது ஆர்டர் செய்து சாப்பிட்டு விடுவதால்!
அங்கு சென்று அமர்ந்து.... 


வெய்ட்...வெய்ட்... உட்காருவது அவ்வளவு எளிதாக இல்லை. நின்றிருந்த டை கட்டிய இளைஞரிடம் பெயர் கொடுத்து விட்டுக் காத்திருந்தோம். 



இதில் ஒரு (இன்னும்) சோதனை. நான்கு பேர்கள் அமரும் இருக்கைகள் காலியானபோது எங்களை விடுத்து நான்கு பேர்களாக இருந்தவர்களை அனுப்பினார் அந்த 'டை'யர்!  "இன்னும் ரெண்டு பேர் தனியாக வந்திருந்தால் கூட அவங்களையும் உங்களையும் இங்க அனுப்பிடுவோம் ஸார்.... உங்களுக்கு இதோ... (அருகிலிருந்த இரட்டை இருக்கைகளைச் சுட்டிக் காட்டி) இங்க காலியாகணும்... பிளீஸ் வெய்ட்" என்றார்.

10 அல்லது 15 நிமிடக் காத்திருத்தலுக்குப் பின் ஒரு வழியாக இடம் கிடைத்து, மகன் சொன்னது போல 'உத்தர் போஜன்' செலெக்ட் செய்து "சாப்பிட ரெண்டு தாலி, பார்சல் ஒரு தாலி"  என்றோம்!

                                                      

எங்கே கழுத்தில் கட்டும் தாலி வடிவில் ஒரு ஸ்வீட் கொண்டுவந்து விடுவாரோ என்ற பயமும் இருந்தது.

"ஸார்! தாலி பார்சல் வராது ஸார்...இங்கேதான் சாப்பிட முடியும்"


அப்படியா என்று உடனே அலைபேசியை எடுத்து மறுபடி மகனுடன் உரையாடி அவனுக்கு 'பாம்பே மீல்ஸ்' பார்சல் சொல்லி விட்டு, நாங்கள் 'தாலி'க்காகக் காத்திருந்தோம்.
 
முதல் சிவப்பு கலரில் ஒரு சூப் வந்தது. அதில் இரண்டு மூன்று பொரித்த பிரட் துண்டுகள். கூடவே சுட்ட அப்பளம் போன்ற ஒன்றின் மீது வெங்காயம் தக்காளி தூவப்பட்டிருந்தது.
                                                                       

                                                      

அதைச் சாப்பிட்டு முடித்ததும் ஒரு தட்டு கொண்டு வந்தார்கள். அதில் இருந்தவை :

                                                            

                                                                 

இரண்டு ரொட்டி, இரண்டு நான், ஒரு கப் பனீர் பட்டர் மசாலா, ஒரு கப் பட்டாணி மசாலா, வெங்காய ரைத்தா (வெள்ளரிக்காயும் கலந்தது), உருளைக்கிழங்கு பனீர் வெங்காயக் கறி, (சாதாரணமாக இது வைப்பதில்லையாம்), காலிஃபிளவர் 65, (அல்லது மஷ்ரூம்) ஃபிரைட் ரைஸ் ஒரு கப் (இது அல்லது பிரியாணி அல்லது புலவ் ஏதாவது ஒன்று தருவார்களாம்) பருப்புக் கடைசல் போல ஒன்று ஒரு கப், வெள்ளை சாதம் ஒரு கப், ஒரு கப்பில் ஒரு ஸ்வீட் துண்டு, தயிர் சாதம் (இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்தது), ஆவக்காய் ஊறுகாய்.
                                                                    

சாப்பிட்டு முடித்ததும் ஐஸ்க்ரீம் ஒரு கப்!

ஓஹோ என்றில்லா விட்டாலும் எப்போதும் சாப்பிடும் மீல்ஸுக்கு பதில் இது ஓகே! நானை உள்ளே அனுப்புவதற்குள் போதும் போதும் என்று ஆகி விடுகிறது!

'தாலி'க்கும் 'பாம்பே மீல்ஸ்'ஸுக்கும் சிறு வித்தியாசம்தான். வெள்ளை சாதம் கிடையாது. ஐஸ்க்ரீம் கிடையாது. அப்பளத்தில் வெங்காயம் தக்காளி கிடையாது.

'தாலி'  210 ரூபாய், பாம்பே மீல்ஸ் 190 ரூபாய்.


  எல்லா ஹோட்டல்களிலும் இப்படித்தானா, சுவை, அளவு, பதார்த்தங்களில் மாறுபாடு இருக்குமா என்று தெரிந்தவர்கள் சொல்லலாம்.



21 கருத்துகள்:

  1. நீங்க சொல்லி இருப்பது சரி. "நான்" இங்கெல்லாம் செய்யத் தெரியலை. வட மாநிலங்களில் சாப்பிடணும். மற்றபடி 210 ரூபாய் என்பது எனக்கு அதிகமாய்த் தெரிகிறது. ஆனால் நாங்கள் ஆர்டர் பண்ணிடுவோம். ஒரு தால், ஒரு சப்ஜி செலக்ட் செய்து கொண்டு, நான் அல்லது தவா ரொட்டி, அல்லது சப்பாத்தி சொல்லுவோம். அரிசி தேவையானால் வாங்கிக்கலாம். முன்னெல்லாம் ப்ளைன் அரிசி இலவசமாகக் கொடுத்தாங்க. இப்போக் கொடுக்கிறதில்லை. அதுக்கப்புறமா லஸ்ஸி சாப்பிட்டுவிட்டு முடிச்சுடுவோம். சப்ஜி எல்லாம் 100 ரூபாய்க்கு மேல் தான். தால் 80 ரூபாயிலிருந்து 100க்குள் இருக்கும். நாலு நான் 100 ரூபாய்க்குள் ஆகும். இரண்டுக்கு மேல் சாப்பிட முடியாது. ஒரு நான் என்றால் நாலு பாதி வரும். அதுவே திணறும். ஆனால் சங்கீதாவில் என்ன சைஸில் நான் தந்தாங்கனு தெரியலை.

    பதிலளிநீக்கு
  2. மசாலா, அப்பளம் தக்காளி, வெங்காயம், கொத்துமல்லியோடு முன்னே இலவசம். இப்போ அதுக்கும் சார்ஜ் பண்ணறாங்க போல! ஸ்டார்ட்டருக்கு இப்போதெல்லாம் மசாலா அப்பளம் தான் கொடுக்கிறாங்க!

    பதிலளிநீக்கு
  3. வரேன் மறுபடி. திரும்ப ஏதானும் தோணும். :)))

    பதிலளிநீக்கு
  4. தக்காளி சூப்பா? மிளகு பொடி தூவிக் கொண்டு ப்ரட் ஸ்டிக்கை நனைத்துச் சாப்பிடக் கொடுப்பாங்க. உங்களூக்கு அதுக்கு பதிலாகப் பொரித்த ப்ரெட் துண்டுகளைக் கலந்திருக்காங்க. வடக்கே ஷதாப்தியில் சூப்புடன் சேர்த்துச் சாப்பிட, ப்ரெட் ஸ்டிக், ப்ரெட் டோஸ்ட், பாவ் எனப்படும் பன், சுருள் பன் போன்றவை வைத்திருப்பாங்க. நாம் தேவையானதைத் தேர்ந்தெடுக்கலாம்.

    பதிலளிநீக்கு

  5. என்னதான் வித்தியாசமாகச் சாப்பிடத் தோன்றினாலும் ரூ.210/டூ மச் இல்லையா. இல்லை என் போன்ற வயசாளிகளுக்கு தோன்றுவது இயல்பா. ?

    பதிலளிநீக்கு
  6. அம்மாடியோ.....சூப், அப்பளம் இரண்டு ரொட்டி, இரண்டு நான், பனீர் பட்டர் மசாலா, பட்டாணி மசாலா, வெங்காய ரைத்தா, உருளைக்கிழங்கு பனீர் வெங்காயக் கறி,காலிஃபிளவர் 65, ஃபிரைட் ரைஸ், பருப்புக் கடைசல், வெள்ளை சாதம், ஸ்வீட் துண்டு, தயிர் சாதம், ஆவக்காய் ஊறுகாய் இது போதாதுன்னு சாப்பிட்டு முடித்ததும் ஐஸ்க்ரீம் வேறயா....? இதெல்லாம் சாப்பிட்டு உங்க பசி அடங்கிடுச்சா..? ஒருவேளை நீங்க டயட்ல இருக்கீங்களோ...?

    பதிலளிநீக்கு
  7. கீதா மேடம், ஜி எம் பி ஸார், மாடிப்படி மாது

    நன்றி கருத்துகளுக்கு. கீதா மேடம், ஜி எம் பி ஸார்... கட்டாயம் காசு அதிகம்தான். இது மட்டுமா அதிகம் வாங்குகிறார்கள்? ம்ம்ம்...

    கீதா மேடம்.. நீங்கள் சொல்வது போல தனித்தனியாக ஆர்டர் செய்ய முடியவில்லை. எல்லாம் அப்படியே ஒரே செட். எந்த சங்கீதாவாக இருந்தால் என்ன! எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கும்! சாதாரண அளவில் உள்ள சப்பாத்தியை மூலை மடக்கி இரண்டாக வெட்டினால் வருவது போல நான்கு துண்டுகள் நான்.

    மாடிப்படி மாது... டயட் எல்லாம் உண்டு. இதைச் சாப்பிட முடியாமல்தான் சாப்பிட்டோம். முதல்முறை என்பதால் எது என்ன என்று அறிகிற ஆர்வம், என்ன சுவையாகைருக்கும் என்று அறிந்து கொள்ளும் ஆர்வம்!

    நான் ஐஸ் க்ரீம் சாப்பிட மாட்டேன். பிடிக்காது!

    பதிலளிநீக்கு
  8. படங்களை பார்த்ததும் பசியைக் கிளப்பிவிட்டது! நன்றி!

    பதிலளிநீக்கு
  9. நுங்கம்பாக்கம் சங்கீதா... எனக்கு மிகவும் பிடித்த உணவகம்....

    பதிலளிநீக்கு
  10. நீங்கள் சொல்லித்தான் ஏஸி சாப்பாட்டு ஹாலுக்கும் வெளியேயுள்ள சாதாரண சாப்பாட்டு ஹாலுக்கும் உள்லா வித்தியாசம் தெரிகிறது. எல்லா ஹோட்டலிலும் இப்படித்தானா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!

    பதிலளிநீக்கு
  11. சென்னையில் மட்டும் இந்த வித்தியாசம் என நினைக்கிறேன். ஏனெனில் கும்பகோணத்தில் இரண்டு, மூன்று ஹோட்டல்களில் ஏ.சி. அறையிலும், ஏ.சி. இல்லாமலும் சாப்பிட்டுப் பார்த்தோம். ஒண்ணும் வித்தியாசம் இல்லை. என்ன அப்பளம் இரண்டாம் முறை கேட்டால் ஏ.சி அறையில் சாப்பிடுபவர்களுக்குக் கிடைக்கிறது. வெளியே சாப்பிட்டால் முறைப்புக் கிடைக்கும். ஏ.சி. அறையில் சாப்பிட்டால் பாயசம் என்னும் பெயரில் ஒரு திரவம் உண்டு. சாப்பிட்டு முடிஞ்சதும் பீடா(சகிக்காது) வாழைப்பழம். அவ்வளவு தான் வித்தியாசம்.

    பதிலளிநீக்கு
  12. இந்தச் சாப்பாடு ஒருத்தரால் சாப்பிடுவது கஷ்டம். ஆனால் பகிர்ந்து கொள்வதை ஹோட்டல்களில் அனுமதிப்பதில்லை. ஆகவே நான் ஏ.சி. அறைக்குப் போனால் மினி மீல்ஸ் ஆர்டர் பண்ணிடுவேன். ஒரு ரொட்டி அல்லது நான் அல்லது பரோட்டா (ஹோட்டலைப் பொறுத்து) ஒரு தால், இரண்டு சப்ஜி, ஒரு பட்டாணி அல்லது கொ.க. கூட்டு, ரசம், தயிர், பாயசம், ஸ்வீட், வாழைப்பழம், (அப்பளம் மினி மீல்ஸுக்கு நோ) சாம்பார் சாதம் அல்லது புளியஞ்சாதம், ஒரு ஃப்ரைட் ரைஸ், தயிர் சாதம் உண்டு. எல்லாம் ஒரு கரண்டி தான் என்பதால் சாப்பிடவும் சுலபம். வயிறும் ஹெவியாகாது. :))))) ஸ்வீட்டை மட்டும் பூதக்கண்ணாடியால் பார்த்துக்கலாம். :))))))

    பதிலளிநீக்கு
  13. ஸ்ரீராம் சார் எனக்கும் சைவம் என்றால் பெரிய குழப்பம், மீல்ஸ் பிடிக்கவே பிடிக்காது. மதியம் என்றால் பரோட்டோ சாப்பிட்டுவிடுவேன், இரவு என்றால் தோசை. ஆனால் அசைவம் என்றால் பிரச்சனையே இல்லை, நண்பர்களோடு சென்றால் விதவிதமாக சாப்பிடலாம், இல்லையா ஒரு பிளேட் பிரியாணி சும்மா பிரிச்சு மேயலாம் :-)

    பதிலளிநீக்கு
  14. எங்கே கழுத்தில் கட்டும் தாலி வடிவில் ஒரு ஸ்வீட் கொண்டுவந்து விடுவாரோ என்ற பயமும் இருந்தது.// ஹாஹஹ்ஹ்

    விலை ரொம்ம்ம்ம்ம்பவே அதிகம்! நாண் வீட்டில் சூப்பராகச் செய்யலாம்! ஸொ ஹோட்டல் நாண் இரண்டாம் பட்சம். அடையாறில் ட்ரீட் என்று ரெஸ்டாரன்ட் ஜெயபாரதம் ஃபர்னிச்சர் கடை அருகில், ஃபர்ஸ்ட் மெயின் ரோட், காந்திநகர். சங்கீதாவை விட பரவாயில்லையோ என்று தோன்றியது. - கீதா

    பதிலளிநீக்கு
  15. @Thulasidharan V Thillaikaththu,

    இந்த "தாலி" "Thali" Hindhi Thali! :) ஒரு பக்கம் தட்டு எனப்பொருள் கொண்டாலும் இன்னொரு பக்கம் விருந்து என்றும் பொருள் கொள்ளலாம். இடத்துக்கு ஏற்றாற்போல் பொருள் கொள்வார்கள். :)))))

    பதிலளிநீக்கு
  16. தாலியை அடகு வைச்சாதான் இங்கே நாலு பேர் தாலி சாப்பிட முடியும் போலிருக்கே )

    பதிலளிநீக்கு
  17. விலை அதிகம் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

    எல்லாமே சிறு சிறு கப்களில்தான் இருக்கும் என்பதால் அளவும் அதிகம் இல்லை.

    ஸ்கூல் பையன்... நான் இணையத்திலிருந்து கிடைத்த படத்தை எடுத்துப் போட்டேன்!

    மனோ சாமிநாதன் மேடம்... எனக்கும் அது சந்தேகமாகவே இருக்கிறது.

    சீனு... சைவமே பிடிக்காதா உங்களுக்கு! :)))

    துளசிதரன் ஜி -கீதா ஜி - நிறைய சீப்பான, சுவையான ஹோட்டல்களும் இருக்கின்றனதான்.

    பகவான்ஜி ! மதுரையில் சாப்பாட்டுக்கு (சைவம்) ஸ்பெஷல் ஹோட்டல் உங்கள் பார்வையில் எது? ஆரியபவன்?






    பதிலளிநீக்கு
  18. " எங்கே கழுத்தில் கட்டும் தாலி வடிவில் ஒரு ஸ்வீட் கொண்டுவந்து விடுவாரோ என்ற பயமும் இருந்தது "

    இயல்பான ஹாஸ்யம் !

    " விலை ரொம்ம்ம்ம்ம்பவே அதிகம்! ...
    தாலியை அடகு வைச்சாதான் இங்கே நாலு பேர் தாலி சாப்பிட முடியும் போலிருக்கே...
    என்னதான் வித்தியாசமாகச் சாப்பிடத் தோன்றினாலும் ரூ.210/டூ மச் இல்லையா... "

    இந்தியா வந்தப்போ டெல்லி ஏர்போர்ட்ல இட்லி.காம் ( உண்மையிலேயே இதான் பேருங்க ! )அப்படின்னு ஒரு கடை ! மேல்நாட்டு மெக்டொனால்டு மாதிரி இட்லியும் தோசையும் விக்கிறாங்க... ஒரு செட் இட்லி ஒரு செட் வடையோட விலை 350 ரூபாய் !

    அதுக்கு இது எவ்வளவோ தேவலாம் நீயாயமாரே .............!

    பதிலளிநீக்கு
  19. நீங்க இன்னும் சரவணபவன் மீல்ஸ் பார்க்கலையா ஸ்ரீராம். அங்க போன வருஷமே 250ரூபா. இப்போ எப்படியோ. நானும் இவரும் போனால் ரவா தோசையும் ,தயிர் சாதமுமாக முடித்துக் கொண்டு வந்துவிடுவோம்.வாழைப் பழம் நன்றாக இருக்கும். எனக்குப் பீடா.:)

    பதிலளிநீக்கு
  20. தலை வாழை விருந்து என்று ச.பவனில் அவ்வப்பொழுது போடுவார்கள்.ஜூஸிலிருந்து பழம் பீடா வரை வெறும் 120 ரூபாயில்.நான்ஏசி என்றால் இன்னும் விலை குறைவு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!