புதன், 5 நவம்பர், 2014

கல்கி, விகடன், துக்ளக் குமுதம், கங்கை அமரன் பொன்னியின் செல்வன் வெட்டி அரட்டை


"நான் உன்னை உன் அம்மாவின் மகள் என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போது... நிச்சயமாக நீ உன் அப்பாவின் மகள்தான்"
 
                                                           

இந்த வரிகள் ஆனந்த விகடன் 15-10-2014 இதழில் வந்துள்ள போகன் சங்கரின் 'காதல் நிற ஓவியங்கள்' கதையில் அவர் எழுதியுள்ள வரிகள். ஒரு குணத்தை எதிர்பார்த்து ஏமாந்து அது இல்லாமல் எதிராக மாறும்போது சொல்லப்படும் வசனம்.
நம் குணத்தை வைத்து,  நாம் அம்மா பையனா,  அப்பா பையனா என்று சொல்ல முடியுமா?

நான் என் அம்மாவின் பையனா, அப்பாவின் பையனா என்று புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு யோசித்துக் கொண்டிருந்தேன்!

===============

                                                                       
                                                              
   
இப்போதெல்லாம் கவியரங்கங்கள் மிக அரிதாகி விட்டன என்று நினைக்கிறேன். காரைக்குடியில் கம்பன் கவியரங்கம் வருடா வருடம் நடக்கும். வாலி கூட கலந்து கொள்வார்என்று ஞாபகம்.

என்னுடைய சிறு வயதில் (சின்னஞ்சிறு வயது!) தஞ்சையில் ஒரு கவியரங்கத்துக்கு அப்பா, சகோதர, சகோதரியுடன் சென்றிருந்தேன். ராமநாதன் செட்டியார் ஹால் என்று நினைவு. 

திரு சொ சோ மீ சுந்தரம் அவர்களும் இன்னொருவரும் கவியரங்கத்தில் பேசிய இரண்டிரண்டு வரிகள் மட்டும் நினைவில் இருக்கிறது. யார் தலைமை, வேறு யார் யார் கலந்து கொண்டார்கள் என்றும் நினைவில்லை. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தில் அப்பா அப்போது செயலாளரோ, பொருளாளரோ..அன்பு வேதாசலம் தலைவர் என்று நினைவு.

ராமாயணம் பற்றிப் பேசிக் கொண்டிருந்த ஒரு கவிஞர் நான்கு வரிகளுக்கு ஒரு முறை ஒரு இரண்டு வரிகளைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். அது அப்போதைய கவியரங்க ஸ்டைல்! சில கவிஞர்கள் ஒவ்வொரு வரியையும் இரண்டிரண்டு முறை வாசித்துப் படுத்துவார்கள்.

இந்தக் கவிஞர் இரண்டு அல்லது நான்கு வரிகள் கவி பாடுவார் பின்னர் 

"அங்கே கோசலைக்குப் பிரசவ வலி கண்டது..."

என்று சொல்லி ஒரு சிறிய இடைவெளி விடுவார். மீண்டும் மீண்டும் அவர் இந்த வரிகளைச் சொல்லிச் சொல்லி நிறுத்த பொறுமையிழந்த கூட்டத்தில் ஓரிருவர் "பிரசவம் ஆச்சா இல்லையாங்க" என்று சத்தமாகக் குரல் கொடுக்கத் தொடங்கி விட்டனர்.

இன்னொரு கவிஞர் (இரண்டு பேர்களில் ஒருவர் சொ சோ மீ சுந்தரம்) இது மாதிரி இடைவெளிகளில் வைத்த "பன்ச்" லைன்ஸ்...

"வெளில வாடி வெறுஞ்செருக்கி... வேகமாக் கேக்குது ஒலிப்பெருக்கி"

(கடைசியில் எழுதி இருக்கும் வரிகள் மட்டும் சமீபத்தில் நினைவு வந்து கடுப்பேற்றியதால் அதையும் எழுதி விட்டேன்)


==============================
====
 
பொன்னியின் செல்வன் கதையில் வரும் புகழ்பெற்ற இரு பாத்திரங்களான நந்தினி, குந்தவை இருவரைப் பற்றியும் கல்கி எழுதும்போது இருவரின் அழகைப் பற்றியுமே வெகு சிறப்பாக எழுதி இருப்பார்.
                                                        
                                        
 
சொல்லப் போனால் வந்தியத்தேவனுக்குமே கூட இருவரில் யார் மிக அழகு என்று மனத்துள் போராட்டமே நடக்கும். ஆனாலும் கதைகளின் இலக்கணப்படி கதாநாயகிக்குத்தான் அதிக அழகு இருக்க வேண்டும், வில்லி பாத்திரத்துக்கு அழகு ஒரு மாற்று குறைவாகத்தான் இருக்கவேண்டும் என்ற விதியின் படி நந்தினியின் அழகை கருநாகத்தின் அழகு, மாய அழகு என்பது போலச் சொல்லியிருப்பார் கல்கி.  குந்தவை தெய்வீக அழகு!
 

                 
 
பிரச்னை இது அல்ல!

நான் சொல்ல வருவது என்னவென்றால், இருவரின் அழகைப் பற்றியும் கதாசிரியர் சொல்லியிருக்கும் அளவுக்கு ஓவியர் மணியம் ஆகட்டும், அவர் புதல்வர் மணியம் செல்வன் ஆகட்டும், இப்போது வேதா ஆகட்டும் நடுவில் வரைந்த இன்னொரு ஓவியர் பெயர் மறந்து விட்டது... வினுவா? அவர்தான் ஆகட்டும், வார்த்தைகளில் சிறப்பித்துச் சொல்லப்பட்ட அந்தப் பேரழகை ஓவியத்தில் கொண்டு வந்தார்களா? 
 

      
 
இது அவரவர் மனதைப் பொறுத்த விஷயமும் கூட. தன்னால் மிகவும் ரசிக்கப் படும் ஒரு படைப்பு என்பதால் இதையும் ரசித்திருக்கலாம். அல்லது தன் மன பிம்பத்தையும் அந்த ஓவியத்தில் கலந்து ரசித்திருக்கலாம்.
 

                                     
 
எனக்கென்னவோ இங்கு வர்ணனை வென்ற அளவு ஓவியம் வெல்லவில்லை என்றே தோன்றுகிறது.

பொன்னியின் செல்வன் பற்றி இன்னொரு செய்தியும் உண்டு.

இப்போது வரும் தொடரில் அவ்வப்போது ஒவ்வொரு கேரக்டரைப் பற்றியும் ஒரு முழு அலசலாய்க் குறிப்புகள் கொடுக்கிறார்கள். பெரிய பழுவேட்டரையர் பற்றி, ஆதித்த கரிகாலன் பற்றி...

அதைத் தவிர வரலாற்றின் சம்பவங்கள் நடந்த அந்த இடங்கள் இப்போது எப்படி இருக்கின்றன, பழுவேட்டரையர் குலத் தோன்றல்கள் பற்றியெல்லாமும் நல்ல வழுவழு பேப்பரில் எழுதுகிறார்கள். 

சுவாரஸ்யமாய்த்தான் இருக்கிறது.
 

==============================
=========

ஊ...ஹூம். குமுதம் மாறவேயில்லை!

மாமா வீட்டுக்குப் போயிருந்தபோது பொழுது போகாத நேரத்தில் அங்கிருந்த பழைய குமுதங்களைப் புரட்டியபோது கிடைத்த தகவல்கள்.

அ. கல்லால் அடிப்போரைம், கண்டாலே  துரத்துவோரையுமே பார்த்திருக்கக் கூடிய தெரு நாய்களுக்காக தினசரி ஒரு வயதான பெண்மணி, தினசரி 40 கிலோ அரிசி போட்டு சோறு சமைத்து, 270 பொட்டலங்கள் போட்டு எடுத்துச் சென்று நாய்களுக்குத் தருகிறாராம்.
 

                                                      
 
அவர் - யக்ஞப்ரபா. நடிகை சௌகார் ஜானகியின் மகள். 
 

                                                   
ஆ. அனுஹாசன் டைவர்ஸ் செய்ததே தெரியாதபோது அதையும் அவர் மறுமணம் செய்திருப்பது பற்றியும் சொல்லியிருக்கிறது!
 

                            
 
இ. பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் அபினவ், தன் தாத்தா ஜெமினி தானே கடைக்குச் சென்று, மீன் பார்த்து வாங்கி வந்து, தானே அரிந்து சமைப்பதைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்.
 
குமுதத்தின் 'அஞ்சு பைசா அம்மு', குண்டு மம்மா',  'சஞ்சீவியின் சந்தேகங்கள்',  முப்பத்தெட்டாம் பக்க மூலை எல்லாம் நினைவிருக்கோ?

==============================
================
 
சோறு வைத்தால் காக்கைகள் பகிர்ந்து உண்ணும் என்று சொல்வார்கள். "காக்காக் கூட்டத்தைப் பாருங்க அதுக்குக் கத்துக் கொடுத்தது யாருங்க" என்று இப்போது கூடப் பாடலாம், அதன் புதிய குணத்துக்கு! புதிய குணம்தானா?


                           
 
இப்போதெல்லாம் காக்கைகள் எதையுமே பகிர்ந்து உண்பதாய்த் தெரியவில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன் மொட்டை மாடியில் அமர்ந்து காக்கைக்கு பிஸ்கட் போட்டுக் கொண்டிருந்தேன். ஒரு காக்கை சில துண்டுகளை வாயில் கவ்வி குப்பைகளுக்கு நடுவே ஒளித்து வைத்து, சிறு அட்டையையும், சத்தைகளையும் ஒவ்வொன்றாய்ப் போட்டு மறைத்து வைத்ததைப் பார்த்து வியந்து போனேன்.
 

                      
 
நான் போட்ட முறுக்கு, சீடைகளை அந்தக் காக்கைகள் கவ்விக் கொண்டு சற்றே மேலே உட்கார்ந்து அங்கிருந்து தவறி கீழே விடுவது போல நழுவவிட்டு உடைபட்டவுடன் சாப்பிடுவதையும் பார்த்தேன். முதலில் தற்செயல் என்று நினைத்தேன். பின்னர் மறுபடி மறுபடி அதையே செய்யவும்தான் தெரிந்தே செய்கின்றன என்று தெரிந்தது.

சிலசமயம் அவற்றுக்காக நான் வைத்திருந்த தண்ணீர்ப் பாத்திரத்தில் நனைத்தும் சாப்பிட்டன.
 
புதிய காக்கைகள் வந்து சாப்பிட முயற்சிக்கையில் அங்கு ஏற்கெனவே இருந்த காக்கைகள் அவைகளைத் துரத்தியடித்தன.

=============================
 

                                                     
 
நாயகன் படத்தில் வரும் 'தென்பாண்டிச் சீமையிலே' சிச்சுவேஷனுக்கு முதலில் 'நிலா அது வானத்து மேல' பாடல் டியூன்தான் மெதுவாக வருவது போலப் போடப் பட்டதாம். உடனடியாக இளையராஜா தென்பாண்டிச் சீமையிலே' மெட்டைப் போட்டுக் காட்ட, அது ஓகே செய்யப் பட்டதும், 'நிலா அது வானத்து மேல' மெட்டை ஃபாஸ்ட் பீட்டாக்கி குத்துப் பாட்டாக்கி விட்டாராம் இளையராஜா.
 
                                                      
                                                         
 
துக்ளக் பேட்டியில் கங்கை அமரன் தகவல்.
 
"ரொம்ப முக்கியம்" ங்கறீங்களா!

==============================
===

16 கருத்துகள்:

  1. எந்தெந்த சமயங்களில் அம்மாபிள்ளை அப்பாபிள்ளை என்று ஊட்டுக்கார அம்மிணியிடம் கேட்டதுண்டோ? பையன் சொன்ன பேச்சுக் கேட்காத தருணங்களில் எல்லாம் அப்பாபிள்ளையாகிவிடுகிற அதிசயம் அல்லது அதிரகசியம் வெளியே வந்துவிழுமே!!

    பதிலளிநீக்கு
  2. மிகவும் ரசித்துப்படிக்கவைத்த கவனிப்புகள் அருமை..!

    பதிலளிநீக்கு
  3. பொன்னியின் செல்வனுக்கு நடுவில் படம் வரைந்த ஓவியர் பத்மவாசன்.

    எனக்கு வினுவின் படங்கள்தான் ரொம்பவும் நன்றாக இருப்பது போலத் தோன்றும்.

    குமுதம் என்றும் குமுதமே!

    தண்ணீரில் நனைத்து சாப்பிட்ட காக்கைகள் வயதானவையோ? பல் போன தாத்தாக்கள் மாதிரி!

    பதிலளிநீக்கு
  4. 'நிலா அது' பாட்டோட ஒரிஜினல் இந்தி மெட்டு மென்மையான சிச்சுவேஷனுக்கு எழுதிப் படமாக்கப்பட்டதால் இவரும் அப்படி நினைத்திருக்கலாம். அப்புறம் அப்பட்டமாகத் தெரிந்துவிடுமே என்று கொஞ்சம் வேகம் சேர்த்து குத்துப்பாட்டாக்கியிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  5. மீன் சாம்பார் வைத்திருப்பாரோ?

    பதிலளிநீக்கு
  6. சுவாரஸ்யமா கலக்கியிருக்கீங்க !

    பொ்செ வின் ஓவியர்களில், என் நண்பர் பத்மவாசனை விட்டுவிட்டீர்கள். ஓவியர் சில்பியன் ஒரே சிஷ்யப்பிள்ளை அவர்.

    ஜெமினி ஐய்யருலா.....

    பதிலளிநீக்கு
  7. காக்கைகளும் மனிதர்களைப் பார்த்து கெட்டு விட்டனவோ...?

    பதிலளிநீக்கு
  8. முதல் படம் மாறிவிட்டதோ?..

    'தி இந்து' தமிழ் தினசரி வாங்குகிறீர்களோ?..

    பதிலளிநீக்கு
  9. யக்ஞப்ரபா பற்றிய செய்தியில்,
    படம் மாறிவிட்டதோ என்று இருந்திருக்க வேண்டும்.


    பதிலளிநீக்கு
  10. அந்தக்காலத்தில்வானொலியில் கம்பன் விழா பட்டி மன்ற நிகழ்ச்சிகளை விரும்பிக் கேட்டிருக்கிறேன்,சா.கணேசன்,எஸ்.ராமகிருஷ்ணன்,அ,ச,ஞானசம்பந்தன்,ராதாகிருஷ்ணன் என ஜாம்பவான்கள் பெச்சே தனொதான்

    பதிலளிநீக்கு
  11. நல்ல அலசல்.

    நீங்கள் அம்மா பிள்ளைதான் என்று முடிவுக்கு வந்து இருப்பீர்கள்.
    பொதுவாய் பெண்பிள்ளை அப்பாசெல்லம், ஆண்பிள்ளை அம்மா செல்லமாக இருப்பார்கள்.
    நான் அப்பா செல்லம்.

    அழகுபற்றிய ஆராய்ச்சி, நல்ல ரசனை.

    யக்ஞபரபா படம் கிடைக்கவில்லையா?
    அனுஹாசன் விஷயம் தெரியாது.
    அண்டங்காக்கை மற்ற காக்காவை
    சாப்பிட விடாது. அண்டங்காக்கை போனபின் தான் மற்றகாக்கா சாப்பிட வேண்டும்.
    நம் முன்னோர்கள் எல்லாவற்றிலும் நல்லதைப் பார்ப்பதால் அது உணவு கிடைத்த மகிழ்ச்சியில் கா,கா என்பதை பார்த்து விட்டு தன் இனத்தை கூப்பிடுவதாய் நினைத்து அவ்வாறு சொல்லி இருக்கிறார்கள்.

    எல்லா விஷயங்களும் அருமை.



    பதிலளிநீக்கு
  12. பகிர்வுகள் அனைத்தும் சுவாரஸ்யம்.

    காக்கைகள் ஒளித்து வைப்பது, நீரில் நனைத்து சாப்பிடுவதெல்லாம் ஆச்சரியம். ஆனால் மற்ற காக்கைகளைத் துரத்துவதை நான் சிறுவயதிலேயே பார்த்திருக்கிறேன். கோமதிம்மா சொல்வதே சரியெனப்படுகிறது.

    பதிலளிநீக்கு
  13. மிகவும் ரசித்துப் படித்தோம்! அத்தனையும் அருமையான பகிர்வுகள்.

    பொன்னியின் செல்வன் படங்களில் குந்தவை கொஞ்சம் பத்மினியின் சாயல் இருப்பது போல் தோன்றும்!

    அனுஹாசன் அவரது கணவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்! வங்கியில் பணிபுரிபவர். அனு அமெச்சூர் ரேடியோ சங்கம் மூலம் பழக்கம். விருப்பம். மனம். மணம்.

    காக்கைகள் தற்போதைய கால கட்டத்திற்கு ஏற்றார் போல் தங்களை அடேப்ட் (adapt) செய்து கொண்டன போலும். எங்கள் தளத்தில் காக்கைகளைப் பற்றிய ஒரு இடுகை போட்டோம். தளம் ஆரம்பித்த புதிதில். அதன் லிங்க் http://thillaiakathuchronicles.blogspot.com/2013/08/crowgangwar.html னேரம் இருந்தால் வாசித்துப் பாருங்கள்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!