Thursday, February 5, 2015

3. ஸ்ரீரங்கப் பயணமும் (குறு) பதிவர் சந்திப்பும் - தொடர்ச்சிகாலை எட்டிலிருந்து ஒன்பதரைக்குள் முகூர்த்தம் என்றால் சாதாரணமாக ஒன்பதேகால் ஆகும்போதுதான் மாங்கல்யதாரணத்துக்கு மிகவும் பரபரப்பாகத் தயாராவார்கள்.

ஆனால் ஆச்சர்யகரமாக இங்கு எட்டரைக்குள் மாங்கல்யதாரணம் முடிந்து விட்டது.  எனவே உடனே அடுத்த நிகழ்ச்சிக்குத் தயாரானோம்.  எனக்கு ஸ்ரீரங்கம் கோவிலும் பார்க்க ஆசைதான்.  ( பாஸ் வேறு மிரட்டி அனுப்பி இருந்தார்கள்)   ஆனால் அடுத்தடுத்த சந்திப்புகளை ஒழுங்காக நிறைவேற்ற வேண்டுமென்றால் கோவில் செல்வது சரிவராது.   இந்தப் பக்கமா, அந்தப் பக்கமா என்று முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நட்புகளின் சந்திப்பின் பக்கம் மனம் சாய்ந்தது!


எல்லோரும் மொத்தமாகக் கிளம்பி, வழியில் நாங்கள் இறங்கிக் கொண்டு அவர்களைக் கோவிலுக்கு அனுப்பினோம்.  இந்தக் களேபரத்தில் கீதா மேடத்துக்குக் கொடுக்க எடுத்து வைத்திருந்த புத்தகத்தை வண்டியிலேயே விட்டு விட்டோம்.  அலைபேசியில் தொடர்புகொண்டு வழி விசாரித்தபடி வீட்டை அடைந்தோம்.

இவர்கள் வீட்டுக்கு என்றில்லை, மற்ற நண்பர்கள் இல்லங்களுக்கும் ஒரு பழம் கூட வாங்காமல் சென்றது இப்போதுதான் உறைக்கிறது!


வீட்டை நேர்த்தியாக வைத்திருந்தார்கள் கீதா மேடம்.  சாம்பசிவம் ஸார் அன்புடன் வரவேற்றார்.  திருமண வீட்டிலிருந்து சென்றதால் அவர்கள் உபசரிப்புகளை ஏற்க முடியாத நிலை.  மோர் போதும் என்ற மற்றவர்களின் குரல்களுக்கு நடுவில் நான் 'எனக்கு காஃபி' என்று அறிவித்து விட்டேன்.  முறுக்கு, ஜிலேபி, அருமையான காபி!


எங்கள் குழுவில் இருந்த உறவினர் ஒருவர் மதுரையில் படித்து வளர்ந்தவர்.  அவரும் கீதா சாம்பசிவம் தம்பதியரும் மதுரையைப் பற்றிப் பே......................சினார்கள்!  மதுரையில் வசித்த இடங்கள்,  சேதுபதி ஸ்கூல்,  அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள், என்று ஒரே மலரும் நினைவுகள்.  இடையில் எங்களுக்கும் கொஞ்சம் வாய்ப்பு கிடைத்து மற்ற விஷயங்களும் கொஞ்சம் பேசினோம்!

சாம்பசிவம் ஸார் வீட்டைச் சுற்றிக் காட்டிவிட்டு மொட்டைமாடியைப் பார்க்க அழைத்துச் சென்றார்.

என்ன ஒரு காட்சி!  காவேரியின் தரிசனம், ஸ்ரீரங்கம் கோவிலின் கோபுர தரிசனங்கள், திருவானைக்காக் கோவில் கோபுர தரிசனம்,  என் எஸ் கே அவர்களின் வீடு...

அவர்கள் வீட்டு மொட்டைமாடியை மூன்றுமுறை வலம் வந்தால் போதும்.  


நடைப்பயிற்சி ஓவர்!  அங்கேயே அமர்ந்து ரெஸ்ட் எடுக்க பார்க்குகளில் போட்டிருப்பது போல அழகிய பெஞ்ச்கள்.  மாலை வேளைகளில் அங்கு அமர்ந்து புத்தகம் படிக்க ரம்யமாக இருக்கும் என்று தோன்றியது! மொட்டை மாடியில் ஃபோட்டோசெல் போட நிறைய இடம் இருக்கிறது. அது அந்தந்தக் குடித்தனக்காரர்களின் விருப்பம். இப்போதே சில செல்கள் கண்ணில் பட்டன.


அங்கே இருக்கும்போதே வைகோ ஸார் கௌதமன் போனில் தொடர்பு கொண்டு எப்போது வருவீர்கள் என்று கேட்டுக் கொண்டார்.  அவரிடம் அப்போதுதான் நானும் வந்திருப்பதை திரு கௌதமன் சொல்ல, அவர் என்னிடமும் பேசி அன்புடன் அவர் இல்லத்துக்கு வரவேற்றார்.

 கீழே உள்ள படம் கீதா மேடம் அவர் பதிவில் இதே கோணத்தில் படம் எடுத்துப் போட்டிருக்கிறார்.

 


மீண்டும் கீழே வந்தும் பேச்சு.  ஒரு மணி நேரம் ஓடியதே தெரியவில்லை.  மதியமே சென்னை கிளம்ப வேண்டுமே... மனமில்லாமல் கிளம்பினோம்.


அருமையான தஞ்சாவூர் ஓவியங்களின் பழைய கலெக்ஷன் வைத்திருக்கிறார்கள்.  இவர்கள் வீட்டில்தான் வெங்கடாசலபதிப் பெருமாளின் முகத்தைப் பார்த்தேன்.  குருவாயூரப்பன் முகம் நினைவுக்கு வருவதுபோல அழகிய முகம்.  புகைப்படம் எடுக்க வேண்டுமென்றால் அந்த குறுகிய இடைவெளியிலிருந்து படத்தை வெளியே எடுக்க வேண்டும்.  அப்புறம் கேட்டுக் கொண்டு எடுக்கலாம் என்று மறந்து விட்டது.
 புத்தகம் கொண்டுவர மறந்ததைச் சொல்லி, 'அப்புறம் உங்கள் கைக்கு அது கிடைத்து விடும்' என்று சொல்லி விடைபெற்றோம்.   

28 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

"வாக்கிங்" போக தேவையே இல்லை போல...

Geetha Sambasivam said...

தஞ்சாவூர் ஓவியங்களின் கலெக்‌ஷன் எல்லாம் இல்லை. :) ஶ்ரீராமப் பட்டாபிஷேஹம் மட்டுமே ஒரிஜினல் தஞ்சை ஓவியம். கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகள் பழமையான ஓவியம்.:) புத்தகம் இன்னும் வரலை! :)

Geetha Sambasivam said...

கோபுரமே என் கண்ணில் படலையே படங்களில்?

Geetha Sambasivam said...

முதல் படத்தில் லேசாத் தெரியுது. ஜூம் பண்ணி எடுத்திருக்கலாமோ?

வை.கோபாலகிருஷ்ணன் said...

உங்களுக்கு மட்டும், கீதா மாமி, ஜாங்கிரி, முறுக்கு, காஃபி எல்லாமே கொடுத்தார்களா !!!!!

பேசிக்கொள்கிறேன், அவர்களை ! :)

நானும், அன்பின் சீனா ஐயா + அவரின் மனைவியை ஓர் நிர்பந்தத்தால் ஒருநாள் இவர்களிடம் அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.

தீர்த்தம் ..... அதாவது DRINKING WATER ..... அதுவும் நானாகக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டு வந்தேனாக்கும்.:)

அன்புடன் VGK

Bagawanjee KA said...

இன்னொரு முறை திருப்திகரமா திருச்சி விஜயம் செய்யணும் ,அப்படித்தானே ஜி :)

Geetha Sambasivam said...

ஹாஹாஹா, வைகோ சார், நீங்க வந்தது ராத்திரி ஒன்பதரைக்கு. காஃபி கூட வேண்டாம்னு சொல்லிட்டீங்க! அதான் ஒண்ணும் கொடுக்க முடியலை. அந்த வருஷம் நவராத்திரி இல்லை. இல்லைனா சுண்டலாவது வைச்சிருந்திருப்பேன். :)

வல்லிசிம்ஹன் said...

கீதா என்னைப் பொறுத்தவரை அன்னபூரணி. தம்பதிகள் அன்புக்கே அர்த்தம் போல வாழ்பவர்கள்.
படங்கள் சூப்பர் ஸ்ரீராம். ஸ்பெஷலா அந்த டெர்ரஸ் நாற்காலிகள். மிக மிக நன்றி.

ஸ்ரீராம். said...

ஒரு டிப்ஸ்.

படங்களின் மீது க்ளிக் செய்தால் படங்கள் பெரிதாக, தெளிவாகத் தெரியும்.

நான் ஜூம் பண்ணி எடுக்காததால் கோபுரங்கள் தூரத்தில்தான் தெரியும்!

ஸ்ரீராம். said...

ஒரு டிப்ஸ்.

படங்களின் மீது க்ளிக் செய்தால் படங்கள் பெரிதாக, தெளிவாகத் தெரியும்.

நான் ஜூம் பண்ணி எடுக்காததால் கோபுரங்கள் தூரத்தில்தான் தெரியும்!

G.M Balasubramaniam said...

எனக்கும்/ நானும் திருச்சியில் சந்திக்க வேண்டிய பதிவர்கள் நிறையவே இருக்கிறார்கள்.

RAMVI said...

அழகியபடங்கள். பதிவு அருமை. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். கீதா மாமிக்கு எத்தனை கோடி புண்ணியம்..

கோமதி அரசு said...

பதிவர் சந்திப்பு விவரங்கள், கீதா அவர்களின் மொட்டைமாடி படங்கள்,அவர்களின் உபசரிப்பு, எல்லாம் அருமை.
கீதா அவர்கள் ஸ்ரீரங்கத்தை தேர்ந்து எடுத்த காரணம் தெரிகிறது.
எத்தனை அற்புதக் காட்சிகள்.

ஶ்ரீராமப் பட்டாபிஷேக படத்தை பகிர்ந்து இருக்கலாம்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...


உங்களுடைய திருச்சி விஸிட் திக் திக் என்று மனசு படபடவென்று அடித்து கொள்ளுமாறு சென்று கொண்டு இருக்கிறது.
திகிலுடன்,

Geetha Sambasivam said...

@கோமதி அரசு, ராமர் பட்டாபிஷேஹப் படத்தை இந்தச் சுட்டியில் பாருங்கள், கொஞ்சம் ரிஃப்லெக்‌ஷன் இருக்கு என்றாலும் படம் தெரியும். நீங்கள் ஏற்கெனவே பார்த்திருக்கலாம். பலமுறை போட்டிருக்கேன்.
http://sivamgss.blogspot.in/2014/04/blog-post_8.html

Thulasidharan V Thillaiakathu said...

ம்ம்ம் அருமையான, சந்தோஷமான சந்திப்பு என்று தெரிகின்றது...படங்கள் அருமை!!!

Thenammai Lakshmanan said...

அட சூப்பர். திருச்சியில் யார் யாரெல்லாம் இருக்கீங்க. நான் ஹைதையிலிருந்து திருச்சி வந்துதான் காரைக்குடி போகணும்.

எனக்கும் உங்களை எல்லாம் பார்க்கணும் போல இருக்கு கீதா மேம் , கோபால் சார்.

ஸ்ரீராம் கேஜிஜி சாரும் வந்தாரா.?

கரந்தை ஜெயக்குமார் said...

மகிழ்ச்சியான சந்திப்பு
இது போன்ற சந்திப்புகள் தொடரட்டும்

தி.தமிழ் இளங்கோ said...

தங்களது ஸ்ரீரங்கம் விஜயம் திருப்தியாய் அமைந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.

‘தளிர்’ சுரேஷ் said...

நாலு நாள் ஊரில் இல்லை! திருச்சி போய் மினி பதிவர் சந்திப்பே நடத்தி இருக்கீங்களே! படங்கள் அழகு!

ADHI VENKAT said...

பதிவர் சந்திப்பு களைகட்டுகிறது... கீதா மாமியின் புது வீட்டுக்கு நான் இன்னும் போகலை...:) நவராத்திரியில் தாம்பூலம் வாங்கிக் கொள்ள சென்றது தான்...:) மாமாவும், மாமியும் அன்புடன் உபசரிப்பார்கள் எப்போதும்.

தேனம்மை மேடம் - நானும் திருவரங்கத்தில் தான் உள்ளேன்.

Angelin said...

கொள்ளை அழகு நீல வானம் ,கோபுரம் .அந்த நாற்காலி ..வீதிகள் அமைதியா இருக்கு without traffic !

Geetha Sambasivam said...

//வீதிகள் அமைதியா இருக்கு without traffic !//

@Angelin, இந்தப் படம் அம்மாமண்டபம் சாலை தான். ஆனால் எப்போ எடுத்தாங்கனு நேரம் சரியாத் தெரியலை. :) ஏனெனில் இது முக்கியச் சாலை என்பதால் எந்நேரமும் போக்குவரத்து அதிகம். அதிலும் எங்கள் குடியிருப்பு வளாகத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் அம்மா மண்டபம் என்பதால் தெருவின் இரு பக்கமும் வரிசையாக வண்டிகள் அணி வகுத்து நிற்கும். சாலையில் பேருந்துகள், ஆட்டோக்கள், கார்கள், சைக்கிள்கள், இருசக்கர வண்டிகள் என ஒன்றை ஒன்று முந்த முயற்சி செய்யும். நடப்பதே சிரமமான காரியம். :))))

Geetha Sambasivam said...

@ஆதி, நீங்க தான் வரதே இல்லையே! :( வெங்கட் மட்டுமாவது வருவார். அவரும் இம்முறையும் போன முறை போல் சத்தமில்லாமல் கிளம்பிட்டார் போல! :))))முன்னர் இருந்ததுக்கு எதிரே தான் இப்போ இருக்கோம். :) நேரம் இருக்கையில் ஒரு முறை வாங்க.

Ranjani Narayanan said...

மொட்டைமாடியும், அந்த நாற்காலிகளும் வா வா என்று அழைக்கின்றன! வருகிறேன்... வருகிறேன்...!
ஸ்ரீராம் எங்கே?

ராமலக்ஷ்மி said...

சந்திப்புகள் தொடரட்டுமாக. படங்கள் ஃபீட்லியில் பிரமாண்டமாகதான் திறந்தன ஆகையால் முதல் மூன்றில் கோபுரத்தை நன்றாகப் பார்த்து விட்டுதான் வருகிறேன். ஆம், கடைசிப் படம் காவேரியை நலம் விசாரித்த எனக்காகப் பகிர்ந்திருந்தார்கள் இதே கோணத்தில், கீதாம்மா!

கவிநயா said...

கீதாம்மா ஊர் மாறின பிறகு அவங்களையும், விட்டையும் இன்னும் பார்க்கலை. கூட்டிப் போனதற்கு மிகவும் நன்றி!

வெங்கட் நாகராஜ் said...

மகிழ்ச்சியான தருணங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி....

இம்முறை கீதாம்மா வீட்டிற்குச் செல்ல முடியவில்லை. அடுத்த முறை பார்க்கலாம்!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!